இத்துடன் வாழ்வு முடிந்து போகாதோ என மனவுளைச்சலின் உச்சத்தில் உடைந்துபோகிறீர்கள். இந்தத் தருணத்தில், யாருக்குத்தான் துன்ப துயரங்கள் இல்லை என உங்களின் இன்னொரு மனம் ஆற்றுப்படுத்துவதைச் சில நேரங்களில் அவதானிக்கலாம். இல்லை, இல்லை. இதற்கெல்லாம் நீயேதான் காரணம் என எப்போவாவது மூன்றாவதாக ஒரு குரல் ஒலிக்கலாம். இந்த மூன்று குரலும் ஒரே நேரத்தில் ஒலிக்காது. அப்படியே ஒலித்தாலும் கணத்துக்கு கணம் மூவரும் நேருக்கு நேராகச் சமர் செய்யும் சுபாவமெல்லாம் யாருக்கும் வாய்க்காது. அப்படியான உள இயல்பைப் பெற்றவள்தான் இந்தக் கதையின் நாயகி. சுவிஸ் நாட்டில் தஞ்சமடைந்த ஓர் இலங்கைத் தமிழ் அகதியின் – பெண் அகதியின் சுயசரிதையே இந்த நாவல். கதை சொல்லும் முறை மட்டுமே புனைவு.
பாமா அம்மாவின் கருக்கு நாவலைப் போல, ஒரு பெண் எதிர்கொள்ளும் அவலங்களைச் சொல்லும் துன்பியல் நாவல் இது. சாதியின் கொடுங்கனவை, சாதி ஆணவத்தின் குரூரத்தைக் ‘கருக்கு’ ஆவணப்படுத்தியதென்றால், திக்கற்ற ஓர் அனாதைச் சிறுமியின் பாடுகளால் மனதைக் கனக்கச் செய்கிறாள் இந்தத் ‘தாயைத்தின்னி’.
இன, மத, மொழிப் பாகுபாடுகளால் ஒடுக்கப்படும் மக்கள் கூட்டம் விளிம்பில் கிடந்து அல்லலுற, அதிலுமிருக்கும் பெண்கள் இன்னும் இன்னும் ஓரத்துக்குத் தள்ளப்பட்டுக் கொண்டேயிருப்பதை நாம் அறிவோம். அந்தக் கூட்டத்திலும் ஓர் அனாதை இருந்து, அந்த அனாதை ஒரு பெண்ணாக இருந்தால்..? நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறதல்லவா..!
அதனால்தான் தன்னுடைய அனுபவங்களை ‘வதை முகாமில்’ இருந்ததாகக் குறிப்பிடுகிறார் நூலாசிரியர் தில்லை. கைக் குழந்தையைத் துணியில் சுற்றிக் கோயில் வாசலில் வைத்துவிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள் ஒரு தாய். தந்தையையும் திடீரெனக் காணவில்லை. திருமணம் முடித்துக் கொள்ளாமல் வித்தேட்டியாக வாழும் சித்தியின் கரங்களில் சிக்கிக்கொள்ளும் பெயரே அற்றவள் – தாயைத் தின்றவளுக்கு பெயர் ஒரு பொருட்டா என்ன? – ஒவ்வொரு நாளும் அனுபவித்த சித்திரவதைக் குறிப்புகளே இந்த சுயசரிதை.
இலங்கை கிராமமொன்றின் வதைமுகாமில் நையப்புடைக்கப்படும்போது அவள் தாயைத்தின்னி. அந்தக் காராக்கிருகத்திலிருந்து விடுதலை பெற்று இலங்கை நகரமொன்றில் விடுதிச் சிறையில் சிக்கிக்கொள்ளும்போது அவள் தில்லை. ஐரோப்பிய தேசமொன்றில் முற்போக்கு முகமூடிகளின் நட்புக் கரங்களில் சிக்கிக்கொள்ளும்போது அவள் லிலித். ரங்குப் பெட்டிக் குறிப்புகளை மூவருமே வாசிக்கின்றனர், மல்லுக்கு நின்று தத்துவ விசாரணை நடத்துகின்றனர்.
ஒரு மரம், கிணறு, நாய்-வதைமுகாமில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வலி நிவாரணிகளாக இந்த மூன்றும் நாவல் முழுவதும் அவளை வழிநடத்துவது, நிர்க்கதிக்குள்ளாக்கப்படும் பெண்கள் எதையாவதைப் பற்றிக்கொண்டு வாழ்ந்துவிடத் துணிவதைக் காட்டுகிறது. ஆண்களின் அடிமைகள் என்ற அளவுகோல் எப்போதும் பொருந்தும் என்றாலும், பெண்களும், சில சமயம் முற்போக்குச் சிந்தனை கொண்ட பெண்களுமேகூட பெண்களுக்கு எதிராகவே இருந்ததைத் தாயைத்தின்னியின் அனுபவங்களை எழுதி, ஊக்கால் இணைக்கப்பட்ட தாள்களில் பதியப்பட்டு ரங்குப் பெட்டியில் வைத்திருக்கிறாள்.
அதை எடுத்து அவ்வப்போது அவளே வாசிப்பதுவே நாவலாக வளர்ந்துள்ளது. அவளின் முதல் உதிரப் போக்கைக் கண்டு மனமிரங்கும் ராட்சசியான ஹாஸ்டல் வார்டனின் ஆதுரமான அணைப்பின் மூலம், அன்பின் ஆதி ஊற்று இன்னும் தூர்ந்து போகவில்லை என்பதையும் தாயைத்தின்னி எழுதி வைக்கத் தவறவில்லை. அவயங்களை மறைக்க அணியும் சிறு ஆடைகூடக் கிடைக்காத சிறுமியைக் கொண்ட ஒரு சமூகம், அதற்காக என்றுமே வெட்கப்பட்டதில்லை. மாறாக, பெண்களையும் பெண்களின் அந்தரங்க உறுப்புகளையும் வசைச் சொற்களாகப் பயன்படுத்துவதற்கும் அந்தச் சமூகம் கூசியதே இல்லை. தான் வதை முகாமில் சந்திக்க நேர்ந்த அந்தக் கூச்சநாச்சமற்ற துயரங்களை நாகரிகம் கருதி ஒளித்து மறைத்து எழுதாமல், அப்படியே பதிவு செய்திருக்கிறார். தாயைத்தின்னி எப்படி அனாதையானாள் என்பதைப் பூடகமாக உணர்த்த ஒரு சிறுகதையை வனைந்து, அதை இந்த நாவலில் முதல் அத்தியாயமாக இணைத்திருக்கிறார் என்றே நான் கருதுகிறேன். ‘சின்னச் சிவன்’ என்ற அந்த அழகிய சிறுகதையின் இடையீடு நாவல் முழுவதும் எட்டிப் பார்த்துக்கொண்டே இருக்கிறது, தாயைத்தின்னியின் துயரங்களுக்குப் பின்னுள்ள கதையை, நாட்காட்டியின் தாள்களைக் கிழிக்கும்போது குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன்பு அதே தினத்தில் நிகழ்ந்தவற்றை நினைவுபடுத்துவதுபோல…
கதையின் முடிவை வாசகர்களின் யூகத்துக்கு விடும் இலக்கிய வழமைக்கு மாற்றாக, கதையின் தொடக்கத்தை நம்முடைய கற்பனைக்கு விட்டுவிடுகிறார் நூலாசிரியர். தாயைத்தின்னியின் தாய் ஓடிப் போனவள் என்ற முன்கதை, சிறுகதை வடிவில் இணைக்கப்பட்டிருந்தாலும், பின்பு நல்ல ஆண்மகனுக்கு வாக்கப்பட்டு இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்த நிலையில் அவள் ஏன் தற்கொலை செய்து கொண்டாள்? தாயைத்தின்னியின் வதைமுகாம் அனுபவங்களும் அந்தக் கிராமத்தின் பண்பாட்டுச்் சூழல்களும் அதற்கான விடையை நம்மை யூகிக்க வைத்து விடுகின்றன. ‘காக்காமார்தான் உண்ட… கேட்குதா’ என்ற வரியில் தொடங்கி, அந்தப் பகுதிகளிலிருந்த பிற சமூகங்களின் பண்பாட்டுக்கூறுகளும் அதனையொட்டிப் பெண்கள் மத்தியில் நிலவிய உளவியல்கூறுகளும் அப்பட்டமாகத் தாயைத்தின்னியின் ரங்குப் பெட்டி ரகசியங்களில் பொதிந்து கிடக்கின்றன.
வசைச் சொற்களை மட்டுமல்ல, தாயைத்தின்னியின் சின்னஞ்சிறிய வாழ்வில் வந்து போனவர்களின் இயற்பெயர்களைக்கூடக் குறிப்பிடாமல், பாதகத்தி, கண்பெரட்டி, கோழிக்கள்ளன் எனக் கிராமங்களில் வழங்கும் பட்டப்பெயர்களையே குறிப்பிட்டு அந்த மண்ணை நமக்கு நெருக்கமாகக் காட்டியிருக்கிறார். ஈழம் என்றவுடன் போரும் அதன் துயரங்களும்தாமே நம் நினைவுக்கு வரும். தில்லையின் துயரங்கள் போர் வதைமுகாமால் அல்ல.
எனில் போர் பற்றிப் பேசாத இலங்கைத் தமிழரின் எழுத்தா இது? சமூகத்தின் துயரம் என்பது அதன் தனிமனிதரின் துயரமும்தானே… அதைப் பற்றிப் பேசுவதும் சமூகத்தின் துயரத்தைப் பற்றிப் பேசுவதுதான் என்கிறார் நூலாசிரியர். பூமியின் ஆதாரம் கடல்தான், எனினும் ஆறு, ஏரி, குளம், குட்டைகளாலும்தானே பூமி உயிர்ப்பாக இருக்கிறது.
தாயைத்தின்னி தீர்ப்பெழுதி வைத்த ரங்குப் பெட்டி ரகசியங்களின் சாரம், கட்டுப்பாடுகள் மட்டுமல்ல, அன்பும் அரவணைப்பும்கூட பெண்களுக்கு சிறைகள்தாம், வதைகள்தாம் என்பதே. l