பல்கலைக்கழக மானியக் குழு நெறிமுறைகள் என்கிற பெயரில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி 6 ஆம் தேதி வெளியிடப்பட்ட அந்த ஆவணம் 30 நாட்களுக்குள் தேவைப்பட்டால் எதிர்ப்பைத் தெரிவிக்கலாம் என்கிற அறிவிப்போடு முன்வந்துள்ளது.
ஒன்றிய பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு. இந்தியாவில் கல்வியின் தீவிரத்தைக் குறைத்து அதை நீர்த்துப் போக வைப்பதற்குச் சதி செய்து வருகிறது என்பது பெரும்பாலான கல்வியாளர்கள் குற்றச்சாட்டாகும். ஏற்கெனவே புதிய கல்விக் கொள்கை என்கிற பெயரில் 3,5,8-ஆம் எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வுகளும். பட்டப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வும் அறிமுகமாகி நாட்டை வர்த்தக நுழைவுத் தேர்வுக் கலாச்சாரத்திற்குள் தள்ளிவிட்டது.
லட்சக்கணக்கான ரூபாய்களைச் செலவழித்தால்தான் இனி ஒருவர் நுழைவுத் தேர்வுப் பயிற்சி பெற்று அந்த நுழைவுத் தேர்வுகளை எதிர்கொண்டு கல்லூரிகளுக்குச் செல்ல முடியும்.. இந்திய மக்கள்தொகை 140 கோடி என்றால் அதில் 36% பேர் இளைஞர்கள். கோடிக்கணக்கான இளைஞர்களைக் கொண்ட நம்முடைய நாட்டில் எளிய முறையில் பல்கலைக்கழகம் சென்று தரமான முறையில் கல்வியை முடித்துப் பட்டம் பெறுவதை மேலும் எளிமையாக்க வேண்டும் என்பதே உலக நடைமுறை. ஏற்கெனவே கல்வியைப் பொறுத்தவரையில் மாநில அரசுகளின் உரிமைகள் முற்றிலும் பறிக்கப்பட்டு விட்டன. கல்வி இப்போது பொதுப் பட்டியலில் உள்ளது. இதற்கு ஒத்திசைவுப் பட்டியல் என்று பெயர். எதைக் கொண்டு வருவதாக இருந்தாலும் மாநில அரசோடு கலந்தாலோசித்து அதன் ஒத்திசைவு பெற்று வெளியிட வேண்டும் என்பதுதான் அதற்கு அர்த்தம்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள யூஜிசியினுடைய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனும் அறிக்கை, கல்வியை எளிய மனிதர்கள் பெற முடியாத அளவிற்குச் சிக்கலானதாக்கக் கூடிய சதித் திட்டங்களை உள்ளடக்கியதாக உள்ளது. 2020 ஆம் ஆண்டு வரைவு அறிக்கையாக வெளியிடப்பட்டுக் கடும் எதிர்ப்புக்கு உள்ளான அம்சங்களுடன் மேலும் பல கொடுமையான விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நேரடியாக மத்திய- அரசு மாநில கவர்னர்கள் மூலம் நிரப்பிக்கொள்ளும். இனி மாநில அரசுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் தொடர்பு எதுவும் இல்லை. இந்தத் துணை வேந்தர்கள் மத்திய அரசினுடைய வைஸ்ராய் அந்தஸ்தோடு பணிபுரிவார்கள். இது முற்றிலும் மாநிலங்களின் உரிமையை மீறுகின்ற ஜனநாயகப் படுகொலை. அதுமட்டுமல்ல, கல்லூரியில் சேரும் ஒரு மாணவர் முதலாம் ஆண்டின் அனைத்துத் தாள்களிலும் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே இரண்டாமாண்டுக்கு அனுப்பப்படுவார் இல்லையேல் ஒன்று, முதலாம் ஆண்டிலேயே இருந்து விடவேண்டும் அல்லது கல்லூரியிலிருந்து வெளியேறி விடவேண்டும் என்று ஒவ்வோர் ஆண்டுக்கும் இந்தப் பரிந்துரை தடைக்கல்லைத் தன்னகத்தே கொண்டுள்ளது. மூன்றாண்டுகள் முடித்த பிறகும் ஒரு மாணவர் 7.5 மதிப்பெண் தரநிலை பெற்றால் மட்டுமே நான்காம் ஆண்டுக்குத் தகுதி பெற்றுப் பட்டம் பெற முடியும். இது மிகவும் கொடூரமான அணுகுண்டைவிட ஆபத்தான சட்டம் ஆகும் 100க்கு 75% பெற முடிந்த அந்தத் தரமான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் யார் என்பது நமக்கு ஏற்கெனவே தெரியும். சாதாரண மனிதர்கள், பட்டப் படிப்பை முடித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து அல்லது வேலைவாய்ப்புத் தேர்வாணையங்கள் நடத்துகின்ற டிஎன்பிஎஸ்சி போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்று, அரசு வேலைகளுக்குச் செல்ல வேண்டும் என்கிற கனவுகளை இந்தக் கொடூரமான யூஜிசியின் அறிக்கை தகர்த்து எறிகிறது.
இந்த வரைவு அறிக்கை பேராசிரியர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கிறது. பணி மேம்பாடு பெறுவதற்குக் கல்லூரி ஆசிரியர்கள் பூர்த்தி செய்ய முடியாத ஒன்பது செயல்பாடுகளை இது பட்டியலிட்டுள்ளது. இணைய வழிக்கும் தனியார் துறைக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து ஆசிரியர் பணியிடங்களை ஒழித்துக்கட்டுவதாக இந்த ஆணை அமைந்துள்ளது. இது தனியார் நிறுவனங்களில் இருந்து நிதி ஆதாரங்களைப் பெற்று ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு கட்டாயப்படுத்துகிறது. கல்லூரிகளில் நடத்துவதற்குக் கட்டிடங்கள் எதற்கு என்று கேட்டு இணைய வழிப் பாடத் திட்டத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாக இந்தியக் கல்லூரிகளை, கல்லூரிக் கல்வியை மாற்ற இது சதி செய்கிறது.
யூஜிசியின் இந்த அறிக்கை மூலம்
ஆர்.எஸ்.எஸ்.தன்னுடைய நெடுநாள் கனவான மனுஸ்மிருதிக் கல்வியை நிலைநாட்டுவதற்கான சந்தர்ப்பத்தைப் பெற்றுள்ளது. இதனை நாம் முறியடிக்க வேண்டும். இதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். யூஜிசி எத்தகைய முன் நிபந்தனையும் இன்றி உடனடியாக இந்த அறிக்கையைத் திரும்பப்பெற வேண்டும் என்பதே அனைவரது வேண்டுகோளும் ஆகும்.
– ஆசிரியர் குழு