சமகாலத்தில் சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு பிரதிகள் விவாதிக்கப்பட்டு வருகின்ற சூழலில், அதோடு தொடர்புடைய பழங்குடி மக்களின் வாழ்வியல் குறித்த பதிவுகளும் கவனிக்கப்படுகின்றன. சூழல் அறம் மீறிய வளர்ச்சி மற்றும் காலநிலை மாற்றத்தால் கிராமப்புற, நகர்ப்புற மக்களைவிட பழங்குடி மக்கள் பல்வேறு வாழ்வியல் சிக்கல்களைச் சந்திக்கிறார்கள். பழங்குடிகளின் வாழ்க்கைச் சூழலை, அவர்களது வாழிடங்களை இதர குடிகளின் முன்னேற்றத்திற்காக அழிப்பதன் மூலம் பெருமளவு சிதைக்கிறார்கள். விஞ்ஞான முறை, வன உருவாக்கம், பாசனத் திட்டங்கள், பெரிய அளவிலான தொழில்துறை தலையீடுகள் போன்றவற்றின் மூலம் சொந்த மண்ணிலிருந்து பழங்குடி மக்கள் விரட்டியடிக்கப்படுகிறார்கள்.
காடுகளில் வாழ்ந்து வந்த பழங்குடி மக்களை முதலில் விரட்டியது காலனித்துவ ஆட்சியாகும். இந்த ஆட்சி இந்தியாவை ஆதிக்கம் செய்த போது முதலில் ஆக்கிரமித்தது காடுகளைத்தான். காடுகளின் மிகுதியான வளம், உள்ளூர் மக்களின் காடுகள் குறித்த அறிவு ஆகியவற்றை அறியாமல் அவர்கள் காடுகளை வெறும் வணிகப் பொருளாக மட்டுமே பார்த்தனர். காடுகள் வர்த்தகரீதியாகச் சுரண்டப்பட்டன. காலனித்துவ நிர்வாகம் காடுகளிலிருந்து கிடைத்த வருமானத்தை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான பல வழிமுறைகளைக் கண்டடைந்தது. அடுத்தடுத்த சட்டங்கள் மூலம் பழங்குடியினரின் உரிமைகள் பறிக்கப்பட்டு பெரிய அளவில் காடுகள் வணிக நோக்கங்களுக்காக மிக வேகமாக அழிக்கப்பட்டன. இது சார்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்களும் பழங்குடியினர் இயக்கங்களும் வாதிடுகின்றன.
அந்த வகையில், பழங்குடி மக்கள் உரிமைகளையும் அவர்களின் வாழ்வியல் சிக்கல்களையும் சமீப காலங்களில் வெளிவந்த சூழலியல் நாவல்கள் முன்வைக்கின்றன. குறிப்பாக, கானகன், காடோடி, சோளகர் தொட்டி போன்ற பழங்குடி மக்களின் வாழ்வியலை சித்திரிக்கிற நாவல்களின் வரிசையில் எழுத்தாளர் பிரசாந்த் வே எழுதிய ஆனைமலை நாவல் 2024ஆம் ஆண்டு பரவலாக கவனம் பெற்றது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மலைத்தொடர்களில் வனத்துறை உருவாக்கப்படுவதற்கு முன்பிருந்தே இக்காடுகளைப் பூர்வீகமாகக்கொண்டு காடர், முதுவர், மலை மலசர், மலசர், இரவாளர், புலையர் ஆகிய ஆறு வகையான பழங்குடிகள் வசித்து வருகின்றனர். இப்பழங்குடிகள் தேக்குமர வேட்டைகளுக்காகவும், தேயிலைத் தோட்டங்களுக்காகவும், அணைகள் கட்டுமானங்களுக்காகவும் தங்களது பூர்வீக நிலங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து சொந்த மண்ணிலே கூலிகளாக வாழ்ந்து வருகின்றனர். ஆனைமலையால் இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் என்று 1976ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட போதும், அதற்குப் பின்னர் 2008ஆம் ஆண்டில் விரிவுபடுத்தப்பட்ட ஆனைமலை புலிகள் காப்பகம் என்று அறிவிக்கப்பட்டபோதும் இந்தப் பழங்குடி மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் அவர்கள் ஆனைமலையின் வளங்களை சுரண்டுகிற, வேட்டைத் தொழிலில் ஈடுபடுகிற குற்றவாளிகள் என்கிற நிலைக்குத் தள்ளியது. ஆனைமலைப் பழங்குடிகளின் பாரம்பரிய வன உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிற சூழலில், சமூக பொருளாதாரரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையில் குறைந்த எண்ணிக்கையில் ஆனைமலைப் பகுதியில் வாழ்ந்து வரும் மலை மலசர்களின் வாழ்வியல் குறித்தும், அம்மக்கள் எதிர்கொள்கிற சவால்கள் குறித்தும் இந்நாவல் விவரிக்கிறது. இந்நூலாசிரியரே ‘இளன்’என்கிற கதாபாத்திரம் மூலம் நாவல் முழுக்கப் பயணிக்கிறார்.
வனக்காப்பாளராக இருக்கிற இளன் ஆனைமலைக் காட்டின் வளத்தையும், அவ்வளங்கள் சுரண்டப்படுவதையும், அதோடு மலை மலசர்களின் வாழ்வியல் சிக்கல்களையும் நுணுக்கமாக எடுத்துக்காட்டியுள்ளார். இந்நாவலில் மலை மலசர்களின் வாழ்வியல் சார்ந்த போராட்டங்களைச் சுட்டிக்காட்டுவதோடு மட்டுமல்லாமல், அம்மக்களின் தொன்மம், சடங்குகள், நம்பிக்கைகள், காடு சார்ந்த அறிவு, இவர்கள் பின்பற்றும் சூழல் அறம், கொண்டாட்டங்கள், வழிபாடு என எல்லாவற்றையும் ஆய்ந்து அலசுகிறது. நாவலின் தொடக்கத்தில் “மனுசங்களும் விலங்குகளும் ஒன்னா வாழுறது சாத்தியமே இல்ல. காடுன்னா அது விலங்குக வாழுறதுக்கு மட்டும்தான். மனிதர்கள் இல்லாத காட்டுலதான், புலிகள் நல்லா இருக்கும். அதற்கு நம்மளால ஆன முயற்சிகளத் தொடர்ந்து முன்னெடுக்கணும். அதற்கு இப்போ ஆனைமலை வனவிலங்கு சரணாலயத்தப் புலிகள் காப்பகமா மாத்தியிருக்கிறது
நமக்குக் கெடைச்ச நல்ல வாய்ப்பு” என்று விவாதிக்கிறபோக்கு இறுதியில் ஆனைமலை டாப்சிலிப் பகுதியினைச் சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காகப் பல்வேறு வசதிகளைச் செய்து கொடுத்த நிர்வாகம் அம்மண்ணிலேயே காலம் காலமாக வாழ்ந்து வந்த பூர்வ குடிகளை ஆனைமலை புலிகள் காப்பகம் என்கிற பெயரில் அவர்களை விரட்டியடிக்கும் நிகழ்வு நாவலில் பல கேள்விகளையும் முரண்பாட்டினையும் வெளிப்படுத்துகிறது. உலாந்தி (இளவேனில் காலம்), ஆழியாறு (முதுவேனில் காலம்), வேங்கைப்பதி (கார்காலம்) என்று மூன்று பகுதிகளாக இந்நாவல் அமைந்துள்ளது.
மலை மலசர்கள் வாழ்கின்ற பதியினை ‘வேங்கைப்பதி’ என்றும் அம்மக்கள் வேங்கைப் பதியினர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மக்களுடைய வழக்குச் சொல்லாடல்களும், பாரம்பரிய மரபும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வழக்குச் சொல்லாக சாளை, படுகாட்ல, கண்ணேனி, மடாலு, சணாம், அணாவு, பெருவை, ஓங்கிலிகள், முட்டுச்சாளை, தடுதலப்பணம், சல்லைக் கட்டு, அலை போன்ற சொல்லாடல்கள் நாவலில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இச்சொற்களில் குறிப்பாக, மலை மலசர்கள் இருவாச்சியை ஓங்கிலிகள் என்று அழைக்கின்றனர். மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் தனியாகத் தங்குவதற்காக அமைக்கப்படும் குடிசையை முட்டுச்சாளை என்றும், இறந்தவர்களுக்குப் பாடை கட்டுதலை சல்லைக் கட்டு என்றும், பெண் கொடுக்கச் சம்மதித்தவுடன் ஆண் வீட்டாரால் பெண் வீட்டார்க்குக் கொடுக்கப்படும் சிறு தொகையைத் தடுதலப்பணம் என்றும் ஆசிரியர் விளக்கமளிக்கிறார்.
மலை மலசர்களின் காடு சார்ந்த அறிவும் அவர்களுடைய சூழல் அறமும் கவனிக்கத்தக்கது. காட்டுத் தீ பரவும்போது புற்களை மண்ணோடு மண்ணா்க சிதைத்து விட்டால் தீயின் பரவல் தடைப்படும் எனப் புற்களை மிதித்தபடி செல்கின்றனர். அட்டை கடித்தால் கூவன் கிழங்கைத் தேடி எடுத்து பாறையின் மீது வைத்து அரைத்துக் காலில் பூசிக்கொள்கிறார்கள். மேலும் மூங்கில் நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை பூப் பூக்கும். மூங்கில் அரிசியைக் கொடுத்த பிறகு காய்ந்து போகும். இதை அறிந்த அம்மக்கள் அதனை வெட்டி விடுவார்கள். அது மழைக்கு மீண்டும் தழைக்கும். தழைக்கும்போது மூங்கில் குருத்துகள் யானைகளுக்கு உணவாக அமையும். ஆனால், மூங்கில் வெட்டத் தடை செய்யப்பட்ட போது இச்சுழற்சி தடைப்படுவதால் யானைகள் உணவு இல்லாமல் ஊருக்குள் வருவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது என்பதை நாவலின் வழியாக அறிய முடிகிறது.
இப்பழங்குடிகளின் நம்பிக்கையும் சடங்குகளும் குறிப்பிடத்தக்கவை. மலை மலசர்கள் அவர்களின் எல்லையைக் கடக்கும் போது வனதேவதையை வழிபட்டுச் செல்கிறார்கள். மரம், காடு, சூரியன் இவையே இவர்களின் வழிபாட்டுத் தெய்வங்களாக இருக்கின்றன. காகம் கூடு கட்டும் இடத்தை வைத்தே அந்த ஆண்டின் வளமையைக் கணிக்கிறார்கள். காகம் நுனிக்கிளையில் கூடு கட்டினால் வறட்சி நிலவும் என்றும், மரத்தின் உட்புறத்தில் கட்டினால் பருவமழை கொட்டித் தீர்க்கும் என்றும் நம்புகின்றனர்.
நானூறு வருடப் பழைமையான கன்னிமாரா தேக்குமரத்தைச் சுற்றி வந்து விளக்கு வைத்து வேண்டினால் விரும்பிய கணவர் அமைவார் என்று நம்பினர். மேலும், தேக்குமரத்தில் செம்பூத்து இருந்தால் தீங்கு நடக்கும் என்றும், தீங்கு வராமல் இருக்க மூன்று எருக்கம் இலையைக் கிள்ளி எடுத்து அதில் மூன்று கற்களை வைத்து தாண்டிச் சென்றால் தீங்கு அங்கேயே நின்றுவிடும் என்கிற வழக்கம் அம்மக்களிடத்தில் காணப்பட்டது. இறந்த உடலை மண்ணில் புதைக்காமல் பாறையில் வைத்து அதன் மீது செடி, கொடி, கல், கட்டை ஆகியவற்றை வைத்து விலங்குகள் தீண்டாத அளவிற்குப் புதர்போல் ஆக்கும் வழக்கமே அம்மக்களிடத்தில் இருந்தது. பின்பு வனத்துறை மற்றும் என்.ஜி. ஓக்களின் திட்டத்தால் மண்ணில் புதைக்கும் வழக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இவர்களுடைய பாரம்பரிய மரபும் அறிவும் முறியடிக்கப்படுவதை நாவலில் காண முடிகிறது. ஆசைகள் இல்லாத மனிதர்களாக வாழக்கூடிய வேங்கைப் பதியினர் உணவு கிடைக்கும் இடத்தை நோக்கி நகர்ந்து தம் இருப்பிடத்தை அமைத்துக்கொள்கிறார்கள். கோடைக் காலத்தில் தண்ணீர் இருக்கும் இடம் நோக்கி நகர்கிறார்கள். கிழங்கும் ஓடை நீரும் இவர்களுக்கு கிடைத்தால் போதுமானது என்று நினைப்பவர்களை வனத்துறையும் என்.ஜி.ஓக்களும் இவர்களின் வாழிடத்தைவிட்டு விரட்டியதோடு இவர்களின் வாழ்வியல் முறைமைகளையும் மாற்றியமைத்தன. இந்நாவலில் வேங்கைப் பதியினரின் கொண்டாட்டங்களும் துக்கங்களும் நாட்டுப்புற பாடல்களின் மூலம் வெளிப்படுகின்றன.
“கையப் பிடியாதடா/கை வளையல் சேதமாகும் சோ…ஓ/மடியில விழுகாதடா/பொடவைதான் கசங்கிடும் சோ…ஓ”/“சாந்துமொரு திண்ணையில/ என் கூடப் பொறந்த சந்திரரும்/திண்ணையிலே/இன்னிக்கு சாந்து தூக்க உறவுக்கு/என்கூட பொறந்த சந்திரரே”/“ராரி ராரி ராரி – எங்கண்ணுமே/ கானகத்துக் கிளியொறங்கு/நா வீட்டுத்தே அஞ்சொரொம்பு/ எங்கம்மிணிக்குக்/ கானகத்தோ மயிலொறங்கு” போன்ற காதல், தாலாட்டு, ஒப்பாரி ஆகிய பாடல்களை ஆசிரியர் பதிவு செய்துள்ளார். பிரிட்டிஷ்காரர்கள் பார்வையில் ஆனைமலை வளம் கொழிக்கும் காடுகளாகவும், பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் புதையலாகவுமே தெரிந்தது. மரங்கள் அனைத்தும் பலகைகளாகவும் விறகுகளாகவும் காட்சியளித்தன. பழங்குடிகள் கூலிகளாகவும், யானைகள் சுமை தூக்கும் அடிமைகளாகவுமே பார்க்கப்பட்டனர்.
பெருமளவு வெட்டப்பட்ட தேக்குமரங்கள் ‘இண்டியன் ஓக்’ என்றழைக்கப்படுகின்றன. பதினெட்டாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சி காரணமாக ‘ஓக்’ மரங்களுக்குத் தட்டுப்பாடு நிலவியது. இங்கிலாந்தில் இருந்த வலிமையான ஓக் மரங்கள் முற்றிலும் வெட்டப்பட்ட நிலையில் கப்பல் கட்டுதல், தொழிற்சாலை, புதிய ரயில் பாதை அமைத்தல் போன்ற தேவைகளுக்காக வலுவான மரங்கள் தேவைப்பட்டன. அப்போது, ஆங்கிலேயக் காலனி ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவின் ஒரு பகுதியான ஆனைமலையில் பெருமனவில் ஓக் மரங்களைப் போன்ற வலிமையான தேக்கு மரங்கள் இருப்பதை அறிந்து அவற்றைப் பெருமளவில் வெட்டிச் சாய்த்தனர். மரங்கள் வெட்டப்பட்டதால் மழைப் பொழிவு குறைந்து காட்டுவிலங்குகள் குடிநீருக்காக மனிதர்களின் குடியிருப்புகளை நோக்கி வந்தன. காடுகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து ஆங்கிலேய அரசு 1855இல் காடுகளுக்கெனத் தனித்துறையை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆனைமலைத் தொடரில் அழிந்த வனப்பகுதியை மீட்டெடுக்கும் நோக்கில், மறுசீரமைப்புப் பணிக்காக 1915ஆம் ஆண்டு டாப்சிலிப் பகுதிக்கு வனத்துறை அதிகாரியாக வந்த ஹியூகோ வுட்டின் வருகை முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ஆனைமலைக் காடுகள் பரவலாக அழிக்கப்பட்டிருப்பதை உணர்ந்த வுட், இக்காட்டினை மீண்டும் உயிர்ப்பிக்க எண்ணினார். இவர் ‘காப்பிங்’ முறையை (தேக்குமரத்தை அடியோடு வெட்டாமல், ஓர் அடிவிட்டு வெட்டும் முறை) அறிமுகம் செய்து தேக்குமரங்களை வளர்த்ததோடு, காடர் இன மக்களுக்கும் பல்வேறு நல உதவிகளைச் செய்து அம்மக்களின் நம்பிக்கைக்குரியவராக ஹியூகோ வுட் விளங்கினார்.
அதிகாரமே வளர்ச்சியாக இருக்கிற உண்மை ஆனைமலை நாவலில் புலப்படுகிறது. இன்று காடுகளைப் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படும் ஆதார வளங்களில் ஒன்றாகத்தான் பார்க்கிறார்களே தவிர அவற்றைக் கலாச்சார, சமூக அடையாளங்களாகப் பார்ப்பதில்லை.
இது சார்ந்து பல சுற்றுச்சூழல் இயக்கங்களும் பழங்குடியினர் இயக்கங்களும் வன வளங்களின் மீதான பழங்குடியினரின் உரிமைகளை மீட்கப் போராடுகின்றன. அந்த வகையில், ஆனைமலை நாவலும், அதிகாரம், வளர்ச்சி என்கிற பெயரில் தன் வாழ்வாதாரத்தை இழந்து இடம்பெயரும் மலை மலசர்களின் வாழ்வியல் குறித்துப் பேசுவதில் இந்நாவல் முக்கியத்துவம் பெறுகிறது. l
