ஆங்கிலத்தில் வெளிவரும் வாழ்க்கை வரலாற்று நூல்கள் போன்று சமகால ஆளுமைகள் குறித்த முழுமையான வாழ்க்கை வரலாறுகள் தமிழில் எழுதப்படுவதில்லை. அதுபோலவே, ஒரு நூற்றாண்டு காலம் தமிழ்ச் சமூகத்தில் ஆளுமை மிக்க தலைவராக விளங்கியவராக இருந்தாலும், தந்தை பெரியாரின் முழுமையான வாழ்க்கை வரலாறு இன்னும் வெளிவரவில்லை. ஒரு தத்துவக் கோட்பாடு அல்லது அரசியல் கோட்பாட்டு அடிப்படையில் ஒரு தலைவரையோ, ஒரு நிகழ்வையோ தொகுத்து எழுதக் கூடிய ஒரு வழக்கம் தமிழில் பெருமளவு இல்லை. அத்தகைய நூல்களை ஆங்கிலத்தில் ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும், தமிழில் அத்தகைய நூல்கள் இல்லையே என்று மனம் ஏங்கும். இத்தகைய ஓர் அறிவுச் சூழல் நிலவுகின்ற தமிழ்ப்பரப்பில், 2022-இல் வெளிவந்த கார்த்திக் ராம் மனோகரன் எழுதிய, “பெரியார் – நாத்திக அரசியல் பற்றிய ஒரு ஆய்வு” என்ற ஆங்கில நூல் அந்தப் போதாமையைப் போக்குவதாக அமைந்தது.
பெரியார் இராமசாமியின் கருத்துகளையும், வாழ்நாள் முழுவதுமான போராட்டங்களையும் பற்றி, தத்துவார்த்தப் புரிதலுடன் கூடிய மிகச் சிறப்பான நூலை ஆங்கிலத்தில் கார்த்திக் எழுதி இருக்கிறார். பரவலான கவனத்தைப் பெற்றுள்ள இந்த ஆங்கில நூல் பற்றிய ஒரு சிறிய அறிமுகமே இக்கட்டுரை.
நூற்று முப்பத்து மூன்று பக்கங்கள் கொண்ட இந்நூல், ஐந்து இயல்களாக அமைந்திருக்கிறது. சிறிய நூல் என்றாலும் தந்தை பெரியாரின் நாத்திக அரசியல் பற்றிய சிறப்பானதோர் அறிமுகத்தை வழங்குகிறது இந்நூல்.
முதல் இயல் : பெரியார் ஈவேரா – ‘முழுமையான பகுத்தறிவுவாதியாக ஓர் எதிர்த் தத்துவவியலாளர்’ ( The Complete Rationalist as Anti-Philosopher). ‘1879ஆம் ஆண்டு பிறந்து 1973-ஆம் ஆண்டு மறைந்த தந்தை பெரியார் அவர்கள், நவீன தமிழ்நாட்டின் மிகவும் பிரச்சினைக்குரிய நபராக வாழ்ந்தார்’ என்று கார்த்திக் கூறுகிறார். பிரச்சினைகளைப் பெரியார் தேடி உருவாக்கவில்லை. சமூகத்தில் எரிகின்ற பிரச்சினைகளுக்கு அவர் முகம் கொடுத்தார். சமூக இழிவுகளை, சமூகத்தில் இருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வுகளை, பிரிவுகளை, ஆண்-பெண் வேற்றுமைகளை, சாதியக் கொடுமைகளை எதிர்த்து வினையாற்றும்போது அவை பிரச்சினைக்குரியவையாக மாறிவிடுகின்றன. தீர்க்கப்பட வேண்டிய கட்டத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. காங்கிரசின் சென்னை மாகாணத் தலைவராக இருந்து, பிறகு நீதிக்கட்சியை உருமாற்றி, திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்த பெரியார் தன் வாழ்நாள் முழுதும் மக்கள் மத்தியில் பகுத்தறிவு, சமதர்மம், சம உரிமை, விடுதலை குறித்து பேசிவந்திருக்கிறார்.
பௌத்தச் சிந்தனைகள், பகுத்தறிவு, தமிழர் நலம் குறித்த சிந்தனைகள் தமிழ்ப்பரப்பில் பெரியாருக்கு முன்பே முன்னெடுக்கப்பட்டன. அவருக்கு முன்பே பல தலைவர்கள் இது குறித்துப் பேசி இருக்கிறார்கள். பெரியார், ஏன் மற்ற தலைவர்களை விடப் புகழ் பெற்றவராக, மக்கள் மனதில் நிறைந்தவராக இருந்தார்? பெரியார் பேசிய விஷயங்கள், அவற்றை அவர் சொன்ன முறை இவை இரண்டும்தாம் அவரை மக்களிடையே கொண்டு சேர்த்தது. வெறும் பார்ப்பனிய மதத்தை மட்டும் அவர் எதிர்த்துக் குரல் எழுப்பவில்லை. ஆனால், பார்ப்பனர் அல்லாத மற்ற சாதியினர், தலித் மக்கள் உள்ளிட்ட அனைத்து ஜாதியினரும் படிக்க வேண்டும்; அரசியல் உரிமையைப் பெற வேண்டும் என கிராம, நகர முச்சந்திகளில் மேடை போட்டு அமர்ந்து மக்களிடையே நேரடியாகப் பேசினார். அவர் பேசிய மொழியைக் கொச்சையான தமிழ் என்று சொன்னார்கள். அதாவது மக்களுக்குப் புரியக்கூடிய பேச்சுவழக்கில் அவர் பேசினார். அதனால், அவரால் மிகப் பெருமளவு மக்களைச் சென்றடைய முடிந்தது. நேரடியாக விஷயங்களை மக்களுடைய கவனத்திற்குக் கொண்டு செல்வதற்காக அவருக்குக் கைவந்த உரையாடல் பாணியில் அவர் மக்களிடம் நேரடியாகப் பேசினார். அது மிகவும் சக்தி வாய்ந்த பேச்சாக இருந்தது. பேசுவதோடு அவர் நின்றுவிடவில்லை. தான் நடத்தி வந்த பத்திரிகைகளில் அவர் தொடர்ந்து எழுதி வந்தார். அதுமட்டுமில்லாமல் அவர், எங்கெங்கு, எந்தெந்தக் கூட்டங்களில் சென்று பேசுகிறாரோ, அவை அனைத்தும் பதிவு செய்யப்பட்டு அடுத்த நாளோ, அதற்கு அடுத்து வரும் இதழிலோ அச்சிலே வரும் மக்கள் படிப்பதற்கு; தொடர்ந்து விவாதிப்பதற்கு. அவருடைய உரைகள் பதிப்பிக்கப்பட்டு, மலிவுவிலையில் விநியோகமாயின. இவ்வாறு, பெரியார் பரந்துபட்ட மக்களிடையே அங்கீகாரம் பெற்றதற்கான காரணங்களை விளக்குகிறார் கார்த்திக்.
இரண்டாவது இயல்: – ‘நாத்திக அரசியல்’ (Political Atheism) (Marxism, Anarchism, Periyarism). நாத்திக அரசியல் என்பது, மத அரசியலுக்கு விடப்படும் சவால். மதத்திற்கும் அரசுக்கும் இடையிலான ஒற்றுமைப்பிணைப்பை அது கவனப்படுத்துகிறது. மதம், அரசு இரண்டையும் நாத்திக அரசியல் எதிர்க்கிறது. மதத்தைப்போல மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தைத் தன்னிடம் குவித்து வைத்திருக்கக் கூடிய அரசு எப்படி பலவித தந்திரப் புதிர்களைக் கொண்டு இயங்குகிறது என்பதை நாத்திக அரசியல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அப்புதிர்களை, மர்மங்களைக் கட்டவிழ்த்து மக்களுக்குப் புரியவைப்பதை தன்னுடைய கடமையாக நாத்திக அரசியல் கொண்டிருக்கிறது. அது ஓர் எதிர்மறை நடவடிக்கை. தெய்வத்தையும், அரசையும் எதிர்த்து வேலை செய்யும் அது, தனி மனிதனின் இறையாண்மையையும், அவனுடன் பிண்ணிப் பிணைந்த தனிமனித உரிமைகளையும் வலியுறுத்துகிறது.
மதத்திற்கு எதிரான விமர்சனங்களோடு மட்டும் தன்னைச் சுருக்கிக்கொண்ட ஒரு தாராளவாத நாத்திகவாதி அல்லர் பெரியார் என்கிறார் கார்த்திக். அவரது நாத்திக அரசியல் கடவுள் மீதும், அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியது. மத, அரசியல் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தது. மதத்துக்கும், அரசுக்கும் இடையிலான உறவைத் தோலுரித்துக் காட்டியது.
தேசம், மொழி, மதம், சாதி ஆகியவற்றின் விதிகளுக்குள் அடிமைப்பட்டுக் கிடக்கும் மனித சமுதாயம், இழிநிலையைத்தான் சென்றடையும் என்று பெரியார் வாதிட்டார். பகுத்தறிவும், நாத்திகமும் முடிந்த முடிவுகள் அல்ல. அவை இருக்கக்கூடிய அதிகார அமைப்புகளைக் கேள்வி கேட்பதற்கான வழிமுறைகள் ஆகும். இந்த நிலைப்பாடு, பெரியாருடைய நாத்திகத்தை வெறும் அரசியலாக, அதாவது கடவுளையும் கடவுள் நம்பிக்கையையும் மறுக்கக்கூடிய வெற்று அரசியலாகக் குறுக்கிப் பார்த்து விடக்கூடாது என்பதை வலியுறுத்துகிறது. ஒடுக்கப்பட்ட நிலையில் மக்கள் வாழ்வதை நியாயப்படுத்தும் சமூக, அரசியல், பொருளாதார, ஒழுக்கவியல், தத்துவ அமைப்புகளைக் களைவதற்கான ஒரு வழிதான் பெரியாருடைய நாத்திகம்.
மூன்றாவது இயல்: ‘ராமசாமியும், ராமாயணமும்’ (Ramasamy and the Ramayana) (Periyar’s Approach to Hinduism)
மதத்தின் பெயரால் ஆதிக்கத்தைச் செலுத்தப் புராணங்களைப் பார்ப்பனர்கள் பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டை ராமாயணம் குறித்த விமர்சனங்களின் மூலம் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பெரியார் வைத்து வந்தார். ஜெர்மன் தத்துவவியலாளர் நீட்சே குறிப்பிட்டதைப்போல, அனைத்து விதமான மதிப்பீடுகளையும் மறுவரையறை செய்ய வேண்டும் என்று பெரியார் கூறினார். இதிகாசங்களையும் புராணங்களையும் சாத்திரங்களையும் அறிஞர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும். பகுத்தறிவுக்கு எதிரானவையாக, எந்தவிதத்திலும் பயனற்றவையாக அவை இருக்கின்றன என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நான்காவது இயல்: ‘மதமாற்றம் மூலம் விடுதலையா?’ (Emanicipation through Conversion?) (Periyar, Islam and Buddhism).
நாத்திகமும் பகுத்தறிவுவாதமும் பெரியாருடைய வாழ்நாள் முழுவதும் பேசிக்கொண்டிருந்த விஷயங்களாக இருந்தபோதிலும் சில நேரங்களில் தாழ்த்தப்பட்ட மக்களை, ஒடுக்கப்பட்ட மக்களை வேறு மதங்களுக்கு மாறுங்கள் என்று கூட அவர் கேட்டுக்கொண்டார். வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு சூழல்களில் அவர் இஸ்லாம் மதத்தையும், பௌத்த மதத்தையும் மதம் மாறுவதற்கு ஏற்ற மதங்களாகக் குறிப்பிட்டிருக்கிறார். இப்படிப் பல தருணங்களில் அவர் மதமாற்றம் குறித்துப் பேசி இருந்தாலும், அடிப்படையில் பெரியார் மதம் இல்லாத ஒரு சமூகத்தை, மனிதநேயக் கட்டமைப்பை வலியுறுத்தி வந்திருக்கிறார். மக்கள் கடவுளுக்கோ, அரசுக்கோ கடப்பாடு உடையவர்கள் இல்லை. மக்களே கடவுள்களை உருவாக்கினர்; மக்களே அரசுகளை உருவாக்கினர். அதனால், மக்களே அவற்றைப் புறந்தள்ள முடியும். திரும்பத் திரும்ப, ஒரு விஷயத்தை மக்களிடம் வலியுறுத்தினார். அதாவது, மக்கள் மனிதாபிமானத்தின் மீதும், மனித சமூகத்தின் மீதும் பற்றுக் கொண்டவர்களாக இருக்க வேண்டுமே ஒழிய, கடவுள் மீது பற்று உடையவர்களாக, மதத்தின் மீது பற்று உடையவர்களாக, சாதியின் மீது பற்று உடையவர்களாக, மொழியின் மீது பற்று உடையவர்களாக, தேசத்தின் மீது பற்று உடையவர்களாக இருக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார். பெரியாருடைய நாத்திக அரசியல் என்பது கடவுள், அரசு இல்லாமல் மக்கள் வாழ முடியும்; வாழ விரும்பவேண்டும். இதுவே பெரியாரின் விடுதலை குறித்த கருத்தின் மையம்.
ஐந்தாவது இறுதி இயல்: ‘நமது காலத்துக்கு பெரியார்’ (Periyar for our Times).. பெரியார், தீவிரமான விடுதலையை கோரியவராக இருந்தார். மதத்தை விமர்சனம் செய்வதற்கான சுதந்திரம், மதம் இல்லாமல் வாழ்வதற்கான சுதந்திரம், சாதியற்ற சமூகத்தை நோக்கிப் போவதற்கான சுதந்திரம், பாலியல் சுதந்திரம், மாற்று அரசியலைக் கனவு காண்பதற்கான சுதந்திரம் என்று மிகத் தீவிரமான சுதந்திரங்களைப் பெரியார் கோரினார். பகுத்தறிவுவாதிகள் கடவுள், மதம், சாதி, மொழி, தேசம் இவற்றின் எதன்மீதும் பற்று கொண்டிருக்கக் கூடாது என்று அவர் அறிவுறுத்தினார்.
உலகு தழுவிய மனிதநேயத்தை பகுத்தறிவாதிகள் தூக்கிப்பிடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். பெரியாருடைய அரசியல் நாத்திகம், மதச்சார்பின்மைக்கு பிறகான அரசியலையும் (Post-Secularism), மத அடையாள அரசியலையும், புதிய நாத்திகத்தையும் மறுதலிக்கிறது. கடவுள் மறுப்பை மட்டுமே தமது ஒரே கொள்கையாகப் பெரியார் கொண்டிருக்கவில்லை. குன்றக்குடி அடிகளாரிடம் அவர் நடத்திய உரையாடலிலிருந்து இதை நாம் புரிந்துகொள்ளலாம். ‘கடவுளோடு எனக்கு எந்த சண்டை சச்சரவும் கிடையாது. மதத்தால் உருவாக்கப்படும் கடவுள், எப்பொழுதுமே அநீதியான அரசியல் மற்றும் அநீதியான சமூக அமைப்புகளுக்குத் துணை போகக்கூடியதாக இருக்கிறது என்று பெரியார் குறிப்பிடுகிறார். இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற மிக முக்கியமான ஒரு நூல் என்று இந்த நூலைச் சொல்ல வேண்டும். பெரியாருடைய வாழ்க்கையிலிருந்து பல சம்பவங்களைக் கோடிட்டுக் காட்டிச்சென்றாலும், குறிப்பாக, அவருடைய நாத்திக அரசியலுடைய பல்வேறு கூறுகளை, உலகளாவிய சிந்தனையாளர்களின் கருத்துகளுடன் ஒப்பிட்டு, அவருடைய நாத்திக அரசியல் எப்படி வளர்ந்து, அது எப்படி இன்றைய கால கட்டத்திற்குத் தேவையான ஒன்றாக இருக்கிறது, அதை மேன்மேலும் வளர்த்தெடுக்க வேண்டிய நெருக்கடியான வரலாற்றுக் கட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம் என்பதைச் சுட்டிக்காட்ட உதவுகிறது, “பெரியாரின் நாத்திக அரசியல்” என்ற இந்த நூல் (இந்நூல் அறிமுகத்தின் விரிவான கட்டுரையை bookday.com –இல் பார்க்கலாம்).