அன்பின் நண்பர்களே. ‛மஞ்சள் புரவிக்கு முத்தமிட்டவன்’ என்ற சிறுகதைத் தொகுப்பின் தலைப்பே கொஞ்சம் வித்தியாசமானதுதான். எனக்கு ஒரே ஆச்சரியம். எப்படி ஆசிரியர் மீனா சுந்தருக்கு இப்படி ஒரு தலைப்பு வைக்க வேண்டும் என்ற ஓர் எண்ணம் உதித்தது என. எப்படி மஞ்சள் புரவி, முத்தம் என்றெல்லாம் எண்ணம் தறிகெட்டு மனதில் ஓடியது.
ஆசிரியர், முனைவர். பேரா. மீனா சுந்தர், நான் பணியாற்றிய அருள்மிகு பழனியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரியின், தமிழ்த்துறைப் பேராசிரியர். தமிழாசிரியர் என்றாலே தமிழில் புகுந்து விளையாடுவார்கள். அதுதான் இப்படியா என வியந்தேன். மீனா சுந்தரின் ஒவ்வொரு புத்தகமும், கொஞ்சம் வித்தியாசமான தலைப்புகளைச் சுமந்தே வருகின்றன. இதற்கு முன் அவர் எழுதிய சிறுகதைத் தொகுப்பின் பெயர்: ‛புலன் கடவுள்’. என்ன பொருள்? அதற்கு முன்,உள்ள புத்தகம்: ‛குரூரத்தின் வாசனை’. எப்படி இது? அதே போலவே அதனூடே ஊடாடிவரும் கதைகளும், கதைமாந்தர்களும் நம் நெஞ்சைத் தொட்டு விடுவார்கள், அவர்களை நாம் மறக்கவே முடியாது. ஒவ்வொரு கதையும்.அவ்வளவு உயிரோட்டமாகவே உள்ளது. நான் இந்தப் புத்தகத்தை முன் பக்க அட்டையிலிருந்து கடைசிப் பக்கம் ஆசிரியர் குறிப்பு வரை, முழுமையாகப் படித்தேன்.
புத்தகத்துள் நுழையுமுன்பே, அவரது “நுழைவாசலில் அசையும் சிறகு, என்ற என்னுரை, நம்மைப் புத்தகத்துள் நுழைய கைகூப்பி அழைக்கிறது. உள்ளே நுழைந்தால், அவரைப்பற்றியும், அவரது கதைகள் பற்றியும் விரிகின்றன தகவல்கள்.
‛மஞ்சள் புரவிக்கு முத்தமிட்டவன்’ சிறுகதைத் தொகுப்பில் 16 கதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு காப்பியம் என்றால் மிகையாகாது. இதில் பல கதைகள், சிறுகதைப் போட்டியில் பரிசும், விருதும் வென்றவை என்பதை அறியும்போது மனசுக்கு மிகுந்த மகிழ்வும், பெருமையும் ஏற்படுகிறது.
முதல் கதை : எவ்வழி அறியோம்? இது ஓர் அறிவியல் புனைகதை.
பேரா.மஞ்சுநாத்தின், ‛உலகின் உயிர் சேமிப்புக் கிடங்கு’ பற்றிப் பேசுகிறது. படிக்கும்போதே, இது சாத்தியமா? எதிர்காலத்தில் அறிவியல் என்னென்ன சித்துவிளையாட்டுகளைச் செய்யப்போகிறதோ என்ற எண்ணத்திலேயே மிதந்தேன். உயிரைச் சேமிப்பதா? சாத்தியமா என அறிவியல் படித்த என் மனம். பல வினாக்களை எழுப்பியது.. உயிர் சேமிப்பை, பொதுவெளியில் நிரூபிக்க பேரா.மஞ்சுநாத், ஓர் ஆட்டிற்கு, உயிர் போக்கி, மீண்டும் கொண்டு வருதல், அதன் விவரணைகள் எல்லாம் இயல்பாய் படுஅற்புதம். ஓர் அறிவியலாளராகவே மாறி தமிழாசிரியர் முனைவர் மீனா சுந்தர், மாறி இதனை எழுதியிருக்கிறார். ஆடு மீண்டும் உயிர்பெற்றதும், துள்ளி எழுந்து “மே” என்று கத்தியதும், நாமும் அதனுடன் கூடவே துள்ளி விழுந்தோம். பிரமாதம் மீனா சுந்தர் அவர்களே. பொதுவெளி நிரூபணத்துக்குப் பின், பேரா.மஞ்சுநாத், உயிர் சேமிக்க என்று விண்ணப்பங்கள் மலையாய்க் குவிதல், அதிலும் பணத்திலும், அதிகாரத்திலும், புழங்குபவர்கள், வயதானவர்கள், வரி ஏய்ப்புச் செய்த அரசியல்வாதிகள், ஊழல் பெருச்சாளிகள், அதிகாரத் துஷ்பிரயோகிகள் போன்றவர்களின் விண்ணப்பங்களே அதிகம். சாமான்ய மக்களுக்கு இதில் அவ்வளவாக விருப்பம் இல்லை. அடுத்தவர்களை ஏமாற்றியவர்களே, உயிர் சேமிப்பில் அக்கறை காட்டியவர்கள்.
பேரா. மஞ்சுநாத், நாடு முழுவதும், மொத்தம் 100 பேருக்கே முன்னுரிமை என அறிவித்தல், பலர் பல்வேறு வகையில் மஞ்சுநாத்தை அணுகி, குறிப்பிட்ட தொகையைவிடவும் கூடுதலாகத் தருவதாகப் பேரம். சிலர் அவரை மிரட்டுதல். எப்படியோ நூறு பேரைத் தேர்ந்து எடுத்தார். ஒருவர்கூட சாதாரண, சாமானியர் இல்லை. எல்லாரும் குற்றப்பட்டியலில் உள்ளவர்கள். மக்கள் மத்தியில் விமர்சனம், மஞ்சுநாத் பணத்திற்கு விலையானார் என.
குறிப்பிட்ட நாள் வந்தது. பட்டியலில் உள்ள 100 பேரும் பதைபதைப்புடன் வந்தனர். உறவுகளிடம், நான் மீண்டும் திரும்பி வந்துவிடுவேன், குறிப்பிட்ட நாளில்,‛’ என்று சொல்லி உள்ளே போனார்கள். மஞ்சுநாத் அவர்களின் உயிரை ஒவ்வொன்றாகப் பத்திரப்படுத்தினார். உடலை வேறு இடத்தில். அதன் பின்னர் 3 ஆண்டுகள் கழிந்தன. மஞ்சுநாத்தின் மனதுள், கேள்வி, ‛இந்த அயோக்கியர்களை மீண்டும் கொண்டு வரவா?’. இம்முறை தோல்வி என்றாலும் பரவாயில்லை எனத் தீர்மானமாக முடிவு எடுக்கிறார். நடு இரவில் உயிர்கள் இருக்கும் அறைக்கு அருகில் சென்று திரும்புகிறார். ‛உயிர் சேமிப்புக் கிடங்கு’படாரென வெடித்துச் சிதறுகிறது. கெட்டவர்களை அழிக்க இப்படியொரு யுக்தி? அரசியல் கலந்த ரஜனி படம் பார்ப்பதுபோல கொஞ்சம் த்ரில்லிங். ஆனால் ஒவ்வொரு விளக்கமும், வாசிப்பாளரை அடுத்து என்ன நடக்கும் என்ற உந்துதலில் படிக்க பிடித்துத் தள்ளுகிறது. ஒருக்கால் இப்படி நிஜமாகவே உயிர் சேமிப்புக் கிடங்கு வந்துவிட்டால் என அச்சம் நெஞ்சுக்குள் எட்டிப்பார்க்கிறது. சிறப்பு மீனாசுந்தர் அவர்களே.
இரண்டாவது கதை, ‛மஞ்சள் புரவிக்கு முத்தமிட்டவன்‛ தான், புத்தகத் தலைப்பின் கதை. துவங்கும்போதே துள்ளலுடன் கட்டியம் கூறி உள்ளே அழைத்துச் செல்லுகிறது. அவரது பணிபுரியும் ஊரான (எனது ஊரும்தான்), பழநியைப் பற்றி, அதன் சாராம்சம் பற்றிய கதை. கதையாசிரியர் மீனா சுந்தரின் கைகளின் லாவகத்தில் வார்த்தைகள் விளையாடுகின்றன; வசமாகுகின்றன. என்னே அற்புதமான சொல் வல்லமை. வார்த்தைளைக் கோர்க்கும் சித்துவிளையாட்டின் மன்னர் மீனா சுந்தர். கதையின் முதல் இரண்டு பத்திகள், அவரின் வார்த்தை சொல் வித்தமைக்குச் சான்றாக நம்மை வார்த்தைகளின் வலையில் சிக்க வைத்துக் கட்டிப்போடுகின்றது. ஒரு சின்ன உதாரணமாய் ஒரு வரி. இதோ ‛நொடிக்குள் பள்ளத்தில் குழுமிவிடும் நீரைப்போல, அவ்விடத்தில் மடமடவென மக்கள் கூடி நின்றார்கள்.’
பழனியில் ஏழைபாழைகளோடு, ரொம்ப காலமாய்த் தங்கி இருந்த ஒரு பெரியவரை அழைத்துச் செல்ல ஒரு நாசகாரக் குடும்பக் கூட்டம். வருகிறது என்னும்போதே, இதிலுள்ள சிக்கல்/சிலந்திவலை போன்ற புதிர் புலப்படுகிறது. நைச்சியம் பேசிய தம்பி வைரவனுடன் வந்த குடும்பம், பழனியில் வாழும், அப்பாவி மக்களிடையே கெஞ்சிக் கூத்தாடி, பெரியவர் முத்துசாமியை அழைத்துக்கொண்டு ஊருக்குப் பறக்கிறது வாகனம், பெரியவர் முத்துசாமி பேச முடியாமல், விருப்பமின்றி, அந்த ஏமாற்றுக்காரர்களுடன் போகிறார்.
போகும் வழியில், முத்துசாமி, வைரவன் கதையை விவரிக்கிறார் ஆசிரியர். கதை பின்னோக்கிப் பாய்கிறது. Flash Backகில் முத்துசாமியை, அப்பாவின் மனைவியை, சித்தியைப் பெண்ணாண்டான் என்று பொய்ப்பட்டம் கட்டி, ஊரைவிட்டுத் துரத்துகிறார்கள் வைரவனும், அவன் தாய் ராக்கம்மாளும். ஊரைவிட்டு ஓடிய முத்துசாமி, முடிவில் பழனி வந்து அங்கு அடிவார மக்களோடு ஐக்கியமாகிறார். பழனியின் தெருக்களை, அருகில் உள்ள ஊர்களை எல்லாம் ஆசிரியர் காட்டுகிறார்.முத்துசாமிக்கு முதுமை, தளர்ச்சி, வாய் பேசாமை வந்துவிடுகிறது. இந்தச் சமயத்தில்தான், முத்துசாமி பெயரில் இருக்கும் கோடிக்கணக்கான சொத்தை அபகரிக்க, வைரவன் அங்கு வருகிறான். அண்ணன் மேல் அன்புள்ளதாக வேடமிட்டு, அழைத்துச் செல்கிறான். அவரின் கைரேகையை சொத்துப் பத்திரத்தில் பதித்த பின், அவரை இரவோடு இரவாகப் பழனிக்குக் கொண்டு வந்து இடும்பன் கோவில் வாசலில் போட்டுவிட்டுத் தெரியாமல் ஓடுகிறான் வைரவன்.
போகும் வழியில் ஓட்டுநரின் தூக்கk் கலக்கத்தால், ‛ஆயிரம் கண்ணுடையாள் என்ற மஞ்சள் வண்ண வண்டி’ கடகடவெனப் பள்ளத்தில் உருண்டு நொறுங்கியது. மஞ்சள் புரவி ஒன்று துள்ளிக்குதித்து, வைரவனை முத்தமிட நெருங்கியதாய் அவன் உணர்ந்தான். துப்பறியும் கதைபோல துடிப்புடன் போகிறது மஞ்சள் புரவிக்கதை ஆசிரியரின் சிந்தையில் உருவான சொற்கள் கதைக்கு மெருகூட்டி உயிரூட்டுகின்றன.
மூன்றாவது கதையான நீராம்பல், மகிழ்ச்சி நிரம்பிய ஒரு வீட்டில் அங்கப்பன் என்ற பையன் எப்படி, திருநங்கை அங்கம்மாள் ஆனான். அவர் எப்படி அந்த ஊருக்கே உணவூட்டும் அன்னபூரணி ஆவதும், புயல் மழையில் தப்பித்து ஓடும் மக்கள் அங்கம்மாளை மறந்துவிடுவதும் பின்னர் அவள் அந்த மழையிடையே தப்பித்து,வந்து அந்த ஊர் மக்களோடும், குழந்தைகளோடும் வாழ்வதாக காட்டுகிறார். சுவாரசியமாகக் கதைமாந்தர்கள் நம்மிடையே உலவி மனசுக்குள் ஒட்டுகின்றனர்.
அடுத்த கதை அல்லிக்குளம், செம! முடிவில் கண்களிலிருந்து நீர் உருளாமல் படிக்க முடியவில்லை. சாதியப் பழக்க வழக்கங்கள், தாழ்த்தப்பட்ட அடித்தட்டு மனிதர்கள் என்று சொல்லாமலேயே ஊடாடி வரும் கதை. கிராமத்தில் இரு சமூகத்தினரிடையே நண்பர்களாக இருக்கும் விசுவலிங்கம், ஆத்மநாதம் பிள்ளை இருவரிடையே நிலவும் அன்பும் மரியாதையும், அணுக்கமும், நம்மை காந்தமாய் ஈர்க்கின்றன.
இருவரின் உரையாடலில், அஞ்சலையின் சாவில்தான் கதை ஓட்டமெடுக்கத் துவங்குகிறது. பின்னர் விசுவலிங்கம் எல்லாவற்றையும், அவருக்கும், அஞ்சலைக்கும் ஏற்பட்ட தாய் உறவுமுறை பற்றி விவரணைக் குறிப்புகளின் பின்னூட்டமாக விரிவதே கதைக்களம். அற்புத வருணனைகள். ஆசிரியருக்கு ஒரு பலத்த பாராட்டு மழைதான். அல்லிக்குளம்தான், கதையின் மையக் கதாநாயகர். அவரைச் சுற்றியே கதை இயங்குகிறது. அதன் சித்தரிப்பு அலாதி. அதில் குளிப்பவர்களின் சாதியைச் சொல்லாமல் சொல்லும் கருத்துக் கருவூலங்கள் பிரமாதம். விசுவலிங்கம் பரம்பரைப் பணக்காரர், கோடீஸ்வரர். அவர் நிலத்தின் வேலையாள் கந்தப்பன்-அஞ்சலை தம்பதி. அவருக்குச் சூட்டு உடம்பு; மூல நோய். அவதிப்படும்போது, அல்லிக்குளத்து நத்தை கொண்டு, அதனைச் சரிசெய்ய வைக்கிறார் கந்தப்பன், மனைவி மூலம், நோய் குணமாகிறது. விசுவலிங்கத்திற்கு; அஞ்சலை தாயாகிறார். மனதுள் வைத்து பூசிக்கிறார் தாயாக.
விசுவலிங்கத்தின் ஆழ்மனதுள், சாதியக் கட்டுமானம் உடைபடுதலை, மிக மிகப் பிரமாதமாகக் கொண்டு செல்கிறார் ஆசிரியர் மீனா சுந்தர். கீழத் தெருவுக்கே செல்லாத மக்கள்; அங்கு விசுவலிங்கம் ஆளுயர ரோஜா மாலையுடன், நண்பரால் ஆத்மநாதம் பிள்ளையும், செவ்வந்தி மாலையுடன். கதை அஞ்சலையின் சாவில் தொடங்கி, அவர் இடுகாடு நோக்கிய, பயணத்தில் முடிகிறது. விசுவலிங்கம் அல்லிக்குளத்தில் மூழ்கி எழுகிறார் அன்னை அஞ்சலைக்காக, ஆத்மநாதம் பிள்ளை, விசுவலிங்கம் நோக்கிக் கைகூப்புவதுடன் கதை நிறைவுறுகிறது. இந்தக் கதையை மாநிலப் போட்டிக்கு அனுப்பலாம். சிறப்பான கருத்துச் செறிவு. கதைமாந்தர்கள் நான்கு பேர் மட்டுமே.இவர்கள் நம்மைக் கையைப்பிடித்தே அழைத்துச் செல்கின்றனர் அவர்களோடு. நாமும் அவர்களை நேரில் சந்திக்கிறோம். உணர்கிறோம். வாழ்த்துகள் மீனா சார். எப்படி இருப்பினும் கதைக்கரு நீங்கள் உணர்ந்ததாகவே இருக்க வேண்டும் என்பது கணிப்பு. மீதம் உள்ள அனைத்துக்கதைகளும், மீட்சி, அன்னலட்சுமி, அந்தணம், நிரம்பாத இடைவெளிகள், நீர்ப்பிம்பம், அநித்யம், வெந்து தணியாக் கடன், சாபத்திடல், ஆவர்த்தனம், துயிலாட்டம் என ஒவ்வொன்றிலும் தனி முத்திரை பதிக்கிறார் ஆசிரியர். நானே எல்லாவற்றையும் சொல்லக்கூடாதல்லவா? உங்களின் பார்வைக்கே அவை.
‛நிரம்பாத இடைவெளிகள்’ என்ற 8வது கதை படுClassic. இதுவும்கூட சாதியப் பின்னணியில் பின்னப்பட்டதே. ஆனால் முடிவில்தான் அது புலப்படுகிறது. ‛நீ கலெக்டரே ஆனாலும், கீழ்ச் சாதி என்றால் தூரத்தான் தள்ளுவோம்’ என்ற நிதர்சமான சமூகச் சிந்தனை., இந்தச் சமூகத்தில் நிலவுவதைத் தெளிவாகவே நிலைநிறுத்துகிறது.
மீனா சுந்தர் இவற்றில் மேலோங்கி நிற்கிறார். விரைவில் அவர் தமிழகம் முழுவதும் பரவலாக அறிப்படும் எழுத்தாளராக விசுவரூபம் எடுப்பார் என மஞ்சள் புரவிக்கு முத்தமிட்டவன் கதைத் தொகுப்பு தெரிவிக்கிறது. குறு ஓடையில் ஓடும் தெளிநீராய் இது புலப்படுகிறது.
“கையின் வலிமையைவிடச் சிந்தனையின் வலிமை அதிகம்.” -கிரீஸ். l