‘உயிரின் உயிர்’ என்னும் பெயரில் ஒரு கவிதைத் தொகுப்பு ப.உ. தென்றல் அவர்கள் எழுதியது சமீபத்தில் வாசிக்கக் கிடைத்தது. இவர் கவிஞர் பேரா. பழமலய் அவர்களின் மகள் ஆவார். பேரா. பழமலய் அவர்களே கவிதைகளைத் தொகுத்திருக்கிறார்கள். மொத்தம் எண்பத்து ஐந்து கவிதைகள் அடங்கிய தொகுப்பு. இத் தொகுப்பிலுள்ள ஓவியங்களை் தென்றல் அவர்களின் புதல்வர் பா.தெ. சித்தார்த்தன் அவர்களே வழங்கியிருக்கிறார். இத்தொகுப்பின் கட்டமைப்பு மிகவும் நேர்த்தியாக அமைந்துள்ளது.
இத்தொகுப்பின் ஒரு சிறப்பம்சமாகச் சில விஷயங்களைச் சொல்லியே ஆகவேண்டும்;
1.கவிஞர் தென்றலின் வாழ்க்கைக் குறிப்பு, 2.ஓவியங்களை வழங்கியுள்ள ஓவியரின் வாழ்க்கைக் குறிப்பு, 3.இந்நூலைத் தொகுத்தவரின் வாழ்க்கைக் குறிப்பு என்னும் இம்மூன்றும் நம் தமிழ்க்கவிதைத் தொகுதிகளில் காணக் கிடைக்காத ஒன்று. இந்த அமைப்பு பேராசிரியர் பழமலையின் செய்நேர்த்தி என்றே கருத இடமுண்டு. ஒரு நூலில் இவை அனைத்தும் இடம்பெற வேண்டும் என்று அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். கவிதைகளைத் தமிழுக்கு வழங்கியதற்காக தென்றலுக்கு வாழ்த்துகள்.
இவரின் கவிதைகள் முழுவதற்கும் அடிநாதமாய் விளங்குவது வள்ளலார் சிந்தனைகள் என்றால் அது மிகைச் சொல் அல்ல. ‘சனங்களின் கதை’ என்ற பேரா. பழமலய் அவர்களின் கவிதைத் தொகுப்பு, தன்னுடன் வாழ்ந்த உறவுகளை, மனிதர்களை விவரணைப் படங்களாக அறிமுகம் செய்தது தமிழுக்குப் புதிது; அடுத்து ‘குரோட்டன்சுகளோடு கொஞ்ச நேரம்’ தொகுப்பு தாவரங்களையும் உயிரினங்களையும் விவரணப் படுத்தியது; தன் அப்பாவின் இந்தத் தொழில் நுட்பத்தைத் தென்றல் லாவகமாகக் கையாண்டு, தனக்கேயுரிய பெண்மை, தாய்மை என்னும் அலகுகளின் அடியொற்றித் தனது வாழ்வனுபவங்களைக் கவிதையாகியிருக்கிறார். அதுவும் சிறப்பாக இவர் எழுத்துகளில் இவரின் கவிதை முகம் வெளிப்பாடாகியிருக்கிறது. இவர் கவிதைகள் அனைத்துமே அனைத்து உயிரினங்களின் மீதான இவருக்குள்ள பேரன்பின் வெளிப்பாடாகவே நிலை கொள்ளுகின்றன. இரண்டுநாட்களாக வானம் மழை மேகங்களுடன் இருப்பதால், எப்படியும் மழை வந்துவிடும், செடிகளுக்குத் தண்ணீரை மழையே ஊற்றிவிடும் என்னும் நம்பிக்கையிலிருக்கும் மனது, மழை வராததால், தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டு படுக்கச் சென்றாலும், ‘எவ்வளவு சொல்லியும்/ கேட்காமல்/இரவோடு இரவாய்/ செடிகளுக்கு நீரை ஊற்றிக்கொண்டிருக்கிறது/மனது என்ற வரிகள் ஒரு தாய்மைக்கான அன்பின் வெளிப்பாடாகக் காணமுடிகிறது.
இன்னும் ஓர் எளிமையான ‘என்னுடன்’ என்னும் கவிதை வாசகர்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தக்கூடும். ஒரு பெண் தன்னை வலிமையாக உணரும் தருணங்கள் மூன்று ; தன் பெற்றோரின் அரவணைப்பில் இருக்கும்போது, மனதுக்குப் பிடித்த கணவருடன் இருக்கும்போது, அடுத்து, தனது பிள்ளைகள், தான் விரும்பிய உயரங்களைத் தொடும்போது. ஆனால், இந்தக் கவிதை இப்படிப் பேசுகிறது: ‘அக்கம்பக்க வீடுகளில்-/காய்த்த காய்களையும்,/கனிகளையும்/கொடுத்துவிட்டுத்/திரும்பும்போது-/வலிமை மிக்கவளாய்/ உணருகிறேன். என்னுடன் மரங்கள் இருக்கையில்’–இந்த வரிகளில் கவிஞர் வாசகனுக்கு கம்பீரமாகத் தெரிவார். இந்த வரிகள், தன் உறவுகளுக்கு மதிப்பளிக்காமலில்லை, அந்த உறவுகளோடும், இந்த மரங்கள் இருக்கையில் தனது வலிமை இன்னும் அதிகமாகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்ப் பெண்கவிஞர்களின் கவிதைகளில் இது ஒரு வித்தியாசமான குரலாகப் படுகிறது.
இப்படிப்பட்ட ஒரு மனநிலை ஏற்படுவதற்குத் தனது குடும்பச் சூழல் ஒரு பெண்ணுக்கு மிகவும் இன்றியமையாதது. இவரைப்போலவே, இவரது மாமனாரும், ‘மாம்பாக்கம் ஏரியைச் சுத்திப்/ பனைமரமா வளந்து நிக்கணும்மா/அதான் என் ஆசை/ மரங்களை நேசிப்பவர்கள்/மனிதர்களை நேசிப்பார்கள்/(மாமா) அடிக்கடி சொல்வார்/ பெய்யும் மழை/இவர்களைப் போன்றவர்களுக்காகவும் சற்றுக் கூடுதலாய்ப்/பெய்துவிட்டுச் செல்கிறது/ – என்ற இந்த வரிகள் இந்த உலகு செழிக்க வேண்டும் என்னும் கவிஞரின் பேராசையின் விளைவு அல்லாமல் வேறென்ன? நீண்ட நாட்களுக்குப் பின் சிறுசிறு தளிர்விட்டு, தன் பிழைப்பை உறுதி செய்த அந்தச் செடி, கவிஞருக்கு, ‘புத்தனாய்ப் பொறுமை காக்கவும்/ போதித்துவிட்டு’ –என்னும் வரிகளில், செடிகள் மனிதர்களுக்குப் பொறுமையைப் போதிக்கும் என்னும் பேருண்மையை எளிய சம்பவம் மூலம் கவிதையாக்கியிருப்பது சிறப்பு.
மனநிறைவு என்பது/அன்பைக் கொடுத்தலில்/ கிடைப்பது’ என்னும் வரிகள் உண்மையை அறியாதவர்கள் சொல்வதுதான் புண்ணியம் என்பது; மாறாக மனநிறைவே மனித விடுதலையை நோக்கி நகர்த்துகிறது, அது அன்பைக் கொடுத்தலில் கிடைக்கிறது என்னும் ஓர் ஒளிச் சிதறலை நம் மனதுக்குள் போட்டுவிட்டுச் செல்கிறது. மனிதன் மனநிறைவைத் தேடவேண்டும், அது செடிகளையும், பறவைகளையும் பராமரிப்பதில்தான் கிடைக்கிறது என்னும் ஒரு பேருண்மையைச் சொல்கையில், மனம் கவிதையாகிறது.
வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்போருக்கும், மரம் செடிகொடிகள் வளர்ப்போருக்கும் இவற்றைப் பராமரிக்க ஆளில்லாமல் விட்டுவிட்டு ஊருக்குச் செல்வதென்பது சற்றுச் சிரமம்தான், அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் அனுசரணையாக இல்லாதபோது. இப்படித்தான் கவிஞருக்கும் நேர்ந்துவிடுகிறது. ‘ஊருக்குச் செல்லும்போது-/ அக்கம்பக்கத்தாரிடம்-/ நீர் ஊற்றச் சொல்கிறேன்,/ தொல்லை தருகிறோமோ? என்றும்/ அச்சப்படுகிறேன்/ இவ்வளவு செய்தும்/ வேளைகளில்/ தனி ஒருத்தியாய்/ அல்லல் படும்போது, / எரிச்சலில்/ இதெல்லாம் உனக்குத் தேவையா?/என்ற கேள்வியும்/ மனதில் வந்து/ இடறுகிறது’. மேலே உள்ள வரிகளில், ‘தனி ஒருத்தியாய்’ என்னும் வரி, குடும்பத்தில், தான் ஒருவரே இதெல்லாம் மெனக்கிட்டுச் செய்ய நேர்கிறதே என்னும் ஆதங்கமும் இல்லாமல் இல்லை. வீட்டிலுள்ள அனைவருக்கும் செடிகொடிகளை வளர்ப்பதில் தன்னையொத்த மனநிலை இருக்க வேண்டும் என்னும் சிறு ஆதங்கம் தலைகாட்டாமல் இல்லை. இருப்பினும் தொடரும் செடி வளர்ப்பும் பராமரிப்பும் கவிஞருக்கு, இயற்கையை, சக உயிரிகளை நேசிக்கும் மனங்களால்தான் இது சாத்தியம். அது கவிஞருக்கு உண்டு.
செடிகள் நாள்தோறும் சில விஷயங்களை மனிதர்களுக்குக் கற்றுக் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன. கவிஞருக்கு ‘செடிகளும்/ கற்றுக்கொடுக்கின்றன/ பிழைக்கும் என்று/ நட்டவை/ ஏமாற்றத்தைத் தந்தும்/ பிழைக்காது என்று/ எண்ணியவை/ நம்பிக்கையைத் தந்தும்’ என்னும் வரிகள், செடிகள் வாழ்வைக் கற்றுக்கொடுப்பனவாக இருப்பதைப் பார்க்கலாம்.
செய்த தவறுகளுக்குச் சக மனிதரிடம் மன்னிப்புக் கேட்கத் தோன்றாத இந்த அவசர வாழ்வில், ஒருநாள் தண்ணீர் ஊற்றாமல் விட்டதற்காக மன்னிப்புக் கேட்கும் கவிஞரின் மனசை என்னவென்று சொல்வது? ‘ மன்னிப்புக் கேட்கிறேன்/ செடிகளிடம்/ வேலைப்பளுவால்/ இன்று ஊற்றமுடியாத நீரை/ நாளை ஊற்றுகிறேன் என்று’. இதுபோன்ற அன்பால் நிறைந்த வரிகளை இவர் கவிதைகளில் நிறையக் கூற முடியும். விரும்பி வளர்க்கும் செடிகொடிகளின் இலை, தழைகளைக் கூட்டி அள்ளிக் கொட்டும்போது அவற்றைக் குப்பை என்று கவிஞரால் கூறமுடியவில்லை. இன்னும், மழைக்காலங்களில் தழைத்து நிற்கும் செடிகளைக் கழித்து விடுகையில் ‘மொட்டுகளற்ற கிளைகளைத் தேடுகின்றன கைகள்’; ‘அப்பாடா! பிழைச்சுக்கிச்சு/ துளிர் விட்ட செடியைப் பார்த்து – சாதித்த மகிழ்ச்சியில் வீட்டிற்குள் நுழைகிறேன் நம்பிக்கை என்னும் துளிர் கொண்டு’; ‘மகனின் வருகையால்/ என்னோடு சேர்ந்து /அகம் மகிழ்கின்றன/ செடிகள்’; ‘வலிக்காமல்/ பூக்களைப்/ பறித்ததை/ உறுதி செய்கிறது/ செடி – / பால் வடிக்காமல்…’; ‘அருகில் மகன்/ இல்லாத குறைக்கு/ ஆறுதலாய்ச் செடிகள்/ எனக்கு’/; இப்படி ஏராளமான வரிகளை இந்தத் தொகுப்பில் காணலாம்.
இப்படிப்பட்ட ஒரு பேரன்பரை நாடி செடிகள் வந்து சேருவதில் வியப்பில்லை. ஒரு கவிதை இப்படிப் பேசுகிறது: ‘சிரிக்கும் பூக்கள்/ மயக்கும் இலைகள்/சலனப்படுத்தும்/ செடி வகைகள்/ கிறங்கடிக்கின்றன;/ மேலும் / கிளர்ச்சியூட்டுகின்றன./ உன் தோட்டத்தில்/ நான் இல்லாமலா? என்று/ சொல்லிச் சொல்லி’ செடிக்கும் மனிதருக்கும் உள்ள ஒட்டுறவை இப்படியும் சொல்ல முடியுமா?
கடைசியாக, ஒரு பேருண்மையைச் சொல்லும் ஒரு கவிதையை முழுதாகப் பார்க்கலாம்: கவிதையின் தலைப்பு ‘இரகம்’ : ‘பெரிய பெரிய பூவிற்கும்/ வண்ணம் காட்டும் அழகிற்கும்,/ ஆசைப்பட்டு/ அழகு பார்த்து,/ அதிக விலையில்,/ நான் வாங்கி வைத்த/ வீரிய ஒட்டு ரகங்கள்-/ தாக்குப் பிடிப்பதில்லை/ நோய்த் தாக்குதலுக்கு/ நாட்டுச் செடிகளைப் போல/ வருடங்கள் சிலவற்றில்,/ இருப்பை முடித்து/ வெற்றிடத்தை உண்டாக்கும்./ காற்றில் அசைந்து நிற்கும்/ பூச்சூடிய செடிகளோ/ என்னைப் பார்த்துச்/ சொல்வதாய்த் தோன்றும்: மண்ணுக்கு ஏற்றவையே/ மடியாதவை. ஒரு ஒப்புதல் வாக்குமூலம்போல ஒரு கவிதை: மனிதர்களை விட,/ மரங்களை அதிகம்/ நேசிக்கிறேன்/ அவை-/ போலிகளாய் இல்லாததால்,
இக்கவிதைத் தொகுதி முழுக்க நேசச் சொற்களால் நிறைந்திருக்கின்றன. செடிகொடிகளின் பல்வேறு பரிமாணங்களோடு, கவிஞருக்கு வாழ்த்துகள்! l
