விளிம்பு நிலை மீனவர்களின் சமூக மாற்றத்திற்காகத் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்ற திரு ரா.பி.சகேஷ் சந்தியாவால் எழுதப்பட்ட “சொந்த நிலத்தில் அகதிகளாகும் மீனவர்கள்” என்ற இந்தக் கட்டுரைத் தொகுப்பு சமகாலத்தில் அனைத்து விதமான நிலப்பரப்பிலும் பேசப்பட வேண்டிய மிக முக்கியமான நூலாகும். சொந்த நிலத்தில் அகதிகளாகும் மீனவர்கள், தடுப்புச் சுவரால் தடுக்கப்படும் மீன்வளம், வெப்பமயமாதலால் பாதிக்கப்படும் பவளத்திட்டுகள், கடல் மட்ட உயர்வும் கரையை இழந்த மீனவர்களும், ஆக்சிஜன் இல்லாத கடல், காற்றாலைப் பூங்காவும் இடம்பெயரும் மீனவர்களும், வளர்ச்சித் திட்டங்களால் இடம்பெயரும் மீனவர்கள், சூழல் காக்க சூளுரைப்போம் போன்ற தலைப்புகளிலுள்ள ஒன்பது அத்தியாயங்களில் கடல் சார்ந்த வாழ்வியலைத் தமதாக்கிக்கொண்ட மீனவர்கள் தங்கள் அன்றாடப் பொருளீட்டும் முயற்சியில் எதிர்கொள்ளும் அதி தீவிரமான அச்சுறுத்தல்களையும் கடல் வளம் எப்படி முதலாளித்துவச் சிந்தனை கொண்ட அரசின் உதவியுடன் வணிகப் பெரு முதலாளிகளால் சூறையாடப்படுகிறது என்பதனையும் மிகச் சரியான புரிதலோடும் தரவுகளோடும் அறிவியல் பூர்வமாக இந்தத் தொகுப்பில் எடுத்துரைத்துள்ளார்.
புவி வெப்பமயம், கடல் நீர்மட்டம் உயர்வு, புயல், சூறாவளி, வெள்ளம், பெருமழை, நிலச்சரிவு, வெப்ப அலை இவை எல்லாம் மனிதனின் இயற்கையை வெற்றி கொள்ள வேண்டும் என்ற நுகர்வு வெறியின் பின்விளைவுகள் என்பதைப் பல்வேறு தரவுகளின் அடிப்படையில் அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் நுணுக்கமாக விவரிக்கிறார். கனமழையும் மழை இல்லாத வறட்சியும் இயற்கைப் பேரிடர் என்பதைவிட மனிதத் தலையீட்டால் ஏற்பட்டவை என்பதை நாம் உணர மறுக்கின்றோம். உலகில் ஏற்படும் அனைத்துப் பருவநிலை மாற்றங்களுக்கும் மிக முக்கியக் காரணிகளாக அமைபவை கடலில் ஏற்படும் மாற்றமும், கடல் வளம் மனித தலையீட்டால் பாதிப்புக்குள்ளாவதும் தான். இதன் காரணமாகவே கடலில் ஏற்பட்ட பருவநிலை மாற்றத்திற்கும் வயநாடு நிலச்சரிவுக்கும் நேரடித் தொடர்பு உண்டு என்பதை அறிவியல் கண்ணோட்டத்துடன் வாசகர்களைப் புரிந்துகொள்ளவைக்கப் பெரு முயற்சியினைச் செய்துள்ளார் இந்நூலின் ஆசிரியர். முதலாளித்துவத்திற்கு லாபம் மட்டுமே குறிக்கோளாக உள்ளது. எனவே நுகர்வோரின் நுகர்வுக் கலாச்சாரத்தை நவீனப்படுத்தி நுகர்வு வெறியினைப் பல்வேறு வகைப்பட்ட நயமான விளம்பரங்களின் மூலம் தூண்டுகிறது. முதலாளித்துவம் முன்னெடுக்கும் நுகர்வுக் கலாச்சாரம் ஆடம்பரங்களையே அடிப்படை வாழ்வியல் என்பதனைப் பிரபலங்களின் மூலம் போதித்து நுகர்வோர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் மூளைச்சலவை செய்கிறது. இயற்கைக்கு விரோதமான வாழ்க்கையை வாழ அனைத்து வகையான பொருளாதார நிலை கொண்ட மக்களையும் பழக்கப்படுத்தி அதையே நாகரிக வளர்ச்சி என்று நம்ப வைக்கும் முயற்சியை முதலாளித்துவம் மிகக் கச்சிதமாகச் செய்கின்றது. பெரு முதலாளிகளின் கொள்ளை இலாபத்திற்காக இயற்கை வளங்கள் தயவு தாட்சண்யம் இன்றிச் சுரண்டப்படுவதற்கு அரசே அனுமதிக்கிறது. அதனை மக்களுக்கான வளர்ச்சித் திட்டம் என்றும் கூறுகிறது. பல்வேறு நில அமைப்புகளில் உள்ள இயற்கை வளங்களைச் சுரண்டிக்கொண்டிருந்த பெரு வணிக நிறுவனங்கள் இப்போது கடல் சார்ந்த தொழில்களைக் கட்டமைக்கும் திட்டங்களை வகுக்கிறார்கள்.
உலக அளவில் பெரும் வணிக நிறுவனங்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியாக இருப்பது தொழிற்சாலைக் கழிவுகளை மேலாண்மை செய்வதுதான். நிலத்தில் கழிவுகளைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் மிகப்பெரும் பொருட்செலவு வைக்கும் வேலை என்பதால் அக்கழிவுகளை ஆழ்கடலில் கொட்டுவதற்கு வசதியாக கடலோரத்தில் தொழிற்சாலைகளை அமைக்கிறார்கள் என்று இந்நூலில் குறிப்பிடப்பட்டதிலிருந்து பெரு வணிக நிறுவனங்கள் ஏன் கடலை நோக்கிப் படையெடுக்கின்றன என்ற பெரும் சந்தேக முடிச்சு அவிழ்கின்றது. கூடங்குளம் அணு உலைப் பூங்காவும் அதற்காகக் கடலில் கற்களைக் கொட்டிக் கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவர்களாலும் ஏற்படும் பருவநிலைப் பாதிப்புகளால் மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழப்பதோடு மட்டுமல்லாமல் கடற்கரையிலிருந்து இடம்பெயரும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே உற்பத்தியில் உள்ள இரண்டு அணு உலைகளில் இருந்து வெப்பநீரை வெளியேற்றுவதற்கு வசதியாக கடலுக்குள் இரண்டு இடங்களில் தடுப்புச்் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூடங்குளம் அணு உலைப் பூங்காவுக்காக இடிந்தகரையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவர் காற்றின் திசையையும் கடல் நீரோட்டத்தையும் மாற்றிவிட்டது. கடற்கரை மணல் சமநிலையில் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. காற்றின் திசை மற்றும் கடலின் அலையின் வேகத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. மேலும் கடற்கரையில் மண்ணரிப்பு ஏற்பட்டு இன்னும் சில ஆண்டுகளில் இடிந்த கரை மீனவக் கிராமமே அழியும் நிலையில் உள்ளது. கடலின் நீரோட்டம், அலைகளின் வேகம் போன்ற இயற்பியல் நிகழ்வுகளால் கடலின் அடியில் உள்ள மணல் கரையில் சேர்க்கப்படுவதும் மீண்டும் கரையிலிருந்து அரிக்கப்படுவதும் இயற்கையான நிகழ்வு. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் புதிதாக மணல்திட்டுகள் எந்தக் கடற்கரையோரக் கிராமங்களிலும் உருவாகவில்லை. கடற்கரை மணல் இல்லாத கடல் உயிரில்லாத உடலுக்குச் சமம் என்பதனை வாசிக்கும்போது மனம் பதைபதைக்கிறது. கடற்கரையோர இயற்கைச் சூழலைப் பாதிப்புக்கு உள்ளாக்குவது மனித குலத்துக்குப் பேராபத்தை உண்டாக்கும் என்பதை நாம் அறியாமல் இருக்கின்றோம் என்பதனை இந்த ஒன்பது கட்டுரைகளின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.
உலகின் மற்ற பெருங்கடல்களைவிட இந்தியப் பெருங்கடல் பெருமளவு வெப்பமடையும் ஆபத்து உள்ளது. இதன் காரணமாகக் கடல் மட்டம் ஒன்றரை அடியில் இருந்து மூன்று அடி வரை அதிகரிக்கும் என்று 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டுக் குழுவின் ஆறாவது மதிப்பீட்டுக் குழு அறிக்கை சொல்கிறது. இந்திய பெருங்கடல் வெப்பமடைந்தால் வெப்ப அலை போன்ற நிகழ்வுகள் இந்தியாவில் அதிகரிக்கும். கடல்மட்ட உயர்வு காரணமாக 2040ஆம் ஆண்டுகளில் தூத்துக்குடியில் உள்ள பல்வேறு பகுதிகள் கடலில் மூழ்கும் என்று ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வறிக்கையின்படி அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா, தீவுத்திடல் அசோகச் சக்கர நினைவுச் சின்னம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் துறைமுகம் முதலான பகுதிகள் கடல்மட்ட உயர்வால், கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது என்பதனை வாசிக்கும் போது பீடபூமிப் பகுதியில் வசிக்கும் நமக்கும் பெரும்பயம் தொற்றிக் கொள்கிறது. வழக்கமாக இந்தியப் பெருங்கடலில் ஆண்டுக்கு 20 நாட்கள் வெப்ப அலைகள் காணப்படும் ஆனால் 2050க்குள் ஆண்டுக்கு 200 முதல் 250 நாட்கள் வரை வெப்ப அலைகள் நீடிக்கலாம் என்றும் 2050க்குப் பிறகு இந்தியப் பெருங்கடலானது நிரந்தரமான வெப்ப அலை கொண்டதாகவே இருக்கும் என்றும் ஓர் ஆய்வுக் கட்டுரை கூறுவதாக இந்நூலில் கூறப்படுகிறது. கடல் காற்றைத் தூய்மையான ஆற்றல் வளமாகக் கருதி ஐரோப்பிய நாடுகள் கடலோரக் காற்றாலைத் தொழிலை முன்னெடுத்தனர். இங்கிலாந்து இதற்கு முன்னோடி. தமிழகத்தில் கடல் பகுதியில் காற்றாலைப் பூங்கா அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. காற்றாலைகள் அமைக்க ஆழமற்ற கடல் பகுதிகளாக இருந்தால், பாறைகள் அதிகம் காணப்படும் கடல் பகுதியாக இருந்தால் செலவு குறைவாகும் என்பதால் மன்னர் வளைகுடாக் கடல் பகுதியைத் தேர்வு செய்துள்ளார்கள். மன்னார் வளைகுடாக் கடல் பகுதியில் முதல் கடலில் மிதக்கும் பூங்காவை அமைக்க டென்மார்க் அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அது பேராபத்தை உருவாக்கும் என்கிறார் கட்டுரையாளர்.
கடலில் அமைக்கப்படும் காற்றாலைகளில் பெரிய பிளேடுகள் இருக்கும். அவை காற்றின் திசை வேகத்தைப் பொறுத்து வேகமாகச் சுற்றும். இதனால் மீனவர்கள் அதன் அருகில் செல்ல முடியாது. கடலில் காற்றாலைகளைச் சுற்றி அமைக்கப்படும் கடலில் மிதக்கும் மின் நிலையம் பெருமளவில் இடத்தை ஆக்கிரமிக்கும். அதிலிருந்து வெளியேறும் உப்பு நீர் கடலை மாசுபடுத்தும். மேலும் மின் நிலையம் அருகில் ஹைட்ரஜன் மீட்பு அலை ஒன்றும் அமைக்க வேண்டும். இவை கடல் பரப்பைப் பெருமளவில் ஆக்கிரமிப்புச் செய்யும் என்பதைக் காட்டிலும் கடல் வளத்தைப் பெருமளவு சீரழிக்கும். கடல் நஞ்சாக மாறும் அவல நிலை சூழலில் சிக்கலை ஏற்படுத்தும் என்ற கருத்தை வலியுறுத்திக் கூறும் இப்புத்தகம் பெரும் தரவுகளுடன் வெளிவந்துள்ளது. இதைப் பரவலாக மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க வேண்டும். இந்தத் தொகுப்பில் உள்ள ஒன்பது கட்டுரைகளையும் படித்து, தமிழக கடற்கரை எதிர்நோக்கி இருக்கும் ஆபத்தினை அனைத்து வகை நிலப்பரப்பு மக்களும் உணர்ந்து உரிய முறையில் எதிர்வினையாற்ற வேண்டும். l
