கடந்த 48 ஆண்டுகளாகச் சென்னை எனும் மாநகரில் ஏற்பட்டுக் கொண்டுவருகிற மாற்றங்கள், வளர்ச்சிகள், பிரச்னைகள், முன்னேற்றங்கள் யாவும் இந்த ஆண்டுப் புத்தகக்காட்சியிலும் பிரதிபலித்தன. ஏராளமான புதிய புதிய நூல்கள், புதிய புத்தகங்கள், மிகமிகப் புத்தம் புதிய பல இளம் எழுத்தாளர்கள், வானத்துக்குக்கீழே, மனித சமூகம் இன்று எதிர்கொள்கிற அனைத்து வகையான பிரச்னைகளையும் கருப்பொருளாகக் கொண்ட, எல்லா வடிவங்களிலும் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்கள் இலட்சக்கணக்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அரங்குகளின் வடிவமைப்பில் பல இனிய, ஆச்சரியப்படத்தக்க மாற்றங்கள்… அந்த வகையில் சால்ட் பதிப்பக வடிவமைப்பு பளிச்சென்று கவனம் ஈர்த்தது. பாப்லோ நெரூதாவின் மேற்கோள் ‘சொற்கள்’ பற்றியதாக அழகும், அர்த்தமும் பொதிந்திருந்தது. தொட்டிகளில் செடிகள்… பசுமை, அழகான, நேர்த்தியான காட்சிப்படுத்தலில் கவனத்தைக் கவர்ந்த ‘சால்ட்’ அரங்கில் புத்தகங்களின் மேலட்டைகளின் வடிவமைப்புகளில் படங்கள் எழிலுடன் மிளிர்ந்தன. பாரதி புத்தகாலயம், புக்ஸ்ஃபார் சில்ட்ரன், ஹெர் ஸ்டோரீஸ், தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பாட நூல்கழகம், கல்வித்துறை போன்ற அரசுத்துறை அரங்குகள், மணற்கேணி, தமிழ்திசை இந்து, NCBH, சிந்தன் புக்ஸ், அகநி உள்பட வேறு பல அரங்குகள் மிக எழிலுடன் வடிவமைக்கப்பட்டிருந்தன. இந்த அரங்குகள் தவிர, பொதுவாகவே ஒட்டுமொத்த அரங்கமைப்பு, பெருமளவுக்குப் பாராட்டத்தக்க விதத்தில் இருந்தது. தொடர்புடைய பதிப்பாளர்கள், வடிவமைப்பாளர்கள், பபாசி நிர்வாகிகள்-அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
‘புதிய புத்தகம் பேசுது’ –இந்த இதழ், 48-ஆவது புத்தகக் கண்காட்சியையொட்டி வெளியாகியுள்ள பல புதிய புத்தகங்களில் எமது கவனத்திற்கு வந்தவற்றுள் பலவற்றை வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறது. இவற்றுள் ஒரு சில, கடந்த சிலஆண்டுகளுக்குள் வந்தவை. மறுபதிப்புகள், அச்சுகள் கண்டவை.
ஒன்று நிச்சயம்: தமிழ்ப் பதிப்பாளர்கள், படைப்பாளிகள், வாசகர்களின் பார்வைகள், அழகுணர்ச்சி, வெளிப்பாட்டுத்திறன், சொல்முறை, கருத்தியல்கள், கண்ணோட்டங்கள் போன்ற பல அம்சங்களிலும் அதிகபட்ச வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கின்றன
என்பதே அது!
இந்த வீச்சு பன்மடங்காகட்டும். வாழ்த்துகள்!
1. தடம் பதித்த தமிழ்ப் பதிப்புகள்
ராமச்சந்திர வைத்தியநாத் | பாரதி புத்தகாலயம் | விலை:120 | பக்:136
புத்தகங்கள் பதிப்பு வரலாறு பற்றிய அறிமுகம் மூல நூல்களைத் தேடிப்படிக்க வேண்டும் என்கிற உணர்வைத் தோற்றுவிக்கிறது. வெகுசன வாசிப்பிற்கான புத்தகங்களைப் பற்றி எழுதும்போது அவற்றின் வெற்றிக்கான காரணங்களை அலசுவதோடு நின்றுவிடாமல் தன்னுடைய விமர்சனக் கருத்துகளையும் வைத்தியநாத் பதிவு செய்துள்ளார். தவிர, எடுத்துக் கொண்ட விஷயம் கனமாக இருந்தாலும் சுவாரஸ்யமாக ஆங்காங்கே நகைச்சுவை ததும்பும் வரிகளின் மூலம் வாசகருக்குக் கடத்தும் வித்தை, கைவரப் பெற்றவராகவும் உள்ளார். அதிகப் பதிப்புகளின் மூலம் விற்பனையாகி, அதிக வாசகர்களால் படிக்கப்பட்ட புத்தகங்களைப் பற்றிய மதிப்பீடுகளைக் கொண்டுள்ள இந்நூல் இவ்வகையில் பிறந்த முதல் நூல், முன்னோடி நூல் என்றே கூறமுடியும். – ப.சரவணன், ஆய்வாளர்
2. நான் ஏன் ஆசிரியர் ஆனேன்
தா.கமலா | பாரதி புத்தகாலயம் | விலை: 90 | பக்:78
பெண்கள் கல்வி கற்பது என்பது மிகப்பெரிய போராட்டம்.. எத்தகைய காரணமும் சொல்லாமல் பள்ளிக்கூடத்தில் இருந்து வெளியேறிய மாணவிகளை நேரில் சென்று குடும்பத்தாரோடு பேசி எப்படியோ கல்வியில் மீண்டும் இணைத்துப் பல சாதனைகள் படைத்த ஆசிரியை கமலா அவர்களை நான் பல ஆண்டுகளாக அறிவேன். குறிப்பாக இந்தப் புத்தகம் அற்புதமான அனுபவங்களின் திரட்டு. ஒவ்வோர் ஆசிரியரும், மாணவரும், கல்வியாளரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய, பகிர வேண்டிய புத்தகம். ஓர் ஆசிரியராகத் தான் சந்தித்த போராட்டங்கள், தனக்கு நிகழ்ந்த அனுபவங்களை இப்படிப்பட்ட நல்லாசிரியர்கள் நூலாக எழுத வேண்டும் என்பது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். அந்த வரிசையில் ஆசிரியை என்கிற பெருமையோடு ஒரு பெண் ஆசிரியராக கமலா அவர்கள் எதிர்கொண்ட போராட்டங்களை மட்டுமல்ல, அவருடைய சிறந்த தருணங்களையும் இந்த நூல் சிறப்பாக முன்வைக்கிறது. – ஆயிஷா இரா நடராசன்.
3. அர்த்தமுள்ள வாதங்கள்
கு.செந்தமிழ்ச்செல்வன் | பாரதி புத்தகாலயம் | விலை: 60 | பக்: 56
அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்து, நான்காம் தொழிற்புரட்சிக் காலத்தில் பயணிக்கிறோம். செயற்கை நுண்ணறிவும் வேகமாக நம்மை ஆள வந்துவிட்டது. ஆனாலும்… தர்க்கரீதியாக, அறிவியல்பூர்வமாகச் சிந்திப்பதை மக்கள் இன்னும் நடைமுறைப்படுத்தாததால் அறியாமையும் மூடநம்பிக்கைகளும் மக்களை ஆட்டிப்படைக்கின்றன.. அறிவியல் சிந்தனையற்ற, கேள்விகளற்ற போக்குகள்தாம் நமக்குத் தடையாக இருப்பவை. மக்களின் வாழ்க்கையை, உலகின் சூழலைத் தீர்மானிக்கிற இவற்றைப் பற்றிப் பேச வைக்கவும் தொடர்ந்து விவாதிக்க வைக்கவும், இந்தப் புத்தகம் அழைக்கிறது. அர்த்தமுள்ள வாதங்கள் – தொடங்கட்டும்… தொடரட்டும்…!
4. உலகின் கதையினூடே ஓர் உறவின் கதை
புலவர் மு.பாலசுப்பிரமணியன் | ஸ்ரீ பப்ளிகேஷன்ஸ் | விலை: 140 | பக்: 115
நேருவின் குடும்பம்; உலக வரலாற்றில் இதுவரை வேறு எந்த நாட்டிலும், வேறு எந்தக் குடும்பமும் இந்தனை தலைமுறைகள் பொதுவாழ்வில் நிலைத்து இருந்து சேவை செய்வதாக எனக்குத் தெரியவில்லை. கென்னடி குடும்பத்தில் சிலர் வந்தனர். இருவர் கொலையுண்டனர். பின் யாரும். பொது வெளியில் தோன்றவில்லை. இங்கிலாந்தில் ராண்ட் டால்ப் சர்ச்சில், அவரது மகன் வின்ஸ்டன் சர்ச்சில் வந்தனர். தொடர்ச்சி இல்லை. மோதிலால் குடும்பமே சுதந்திரப் போரில் குதித்தது. மோதிலாலின் மனைவி தடையை மீறி, தடியடிபட்டார். ஜவகர்லால் நேரு பல்லாண்டு சிறைப்பட்டார். விடுதலைப் போராட்ட வேள்வியில் ஓர் உறுப்பினர் பாக்கியின்றி அனைவரும் தம் வாழ்வை அர்ப்பணித்தனர். நாடாளும் பொறுப்பில் மெழுகுவர்த்தியாய் உருகி மறைந்தார் நேரு. மகள் இந்திரா என்ணற்ற தோட்டாக்களால் துளைக்கப்பட்டார். பேரன் ராஜீவ் ரத்தச்சகதியாய் உடல் சிதைந்தார். கொள்ளுப்பேரன் ராகுல் அஞ்சாத சிங்கமாய்த் தெற்கு வடக்காக, கிழக்கு மேற்காக இந்தியப்பரப்பு முழுவதும் வலம் வருகிறார். நாட்டின் இதயத் துடிப்பறிந்து, மாற்றங்களை ஏற்று அழிவுசக்திகளின் தூக்கத்தைக் கெடுத்து வருகிறார். இந்தக் குடும்ப உறவின் கதையை உலகின் கதையினூடே இழைத்துத் தந்திருக்கிறார் புலவர் மு.பாலசுப்ரமணியன்.
5. தேநீரில் மிதக்கும் கணிதம் – இனிக்கும் கணிதக் கட்டுரைகள்
விழியன் & சரண்யா | புக்ஸ் ஃபார் சில்ட்ரன் | விலை:110 | பக்:103
தேநீரில் கணிதமா என ஆச்சரியத்துடன் உள்ளே நுழைந்தால் உங்களுக்கு நிச்சயம் தேநீர் கொடுக்கும் அதே கதகதப்பு கிடைக்கும். கணிதம் எங்கும் உள்ளது. தேநீரிலும் அவ்வளவு உள்ளது. கணிதப் பார்வையையும் இந்தப் புத்தகம் இளஞ்சூட்டில் உங்களுக்குக் கொடுக்கும்.
6. கடலும் கிழவனும் – நோபல் பரிசு பெற்ற நாவல்
எர்னெஸ்ட் ஹெமிங்வே | பாரதி புத்தகாலயம் | விலை:80 | பக்:96
இயற்கையோடு மனிதன் நடத்தும் போராட்டத்தை எத்தனை தடவை சொன்னாலும் அலுப்பாவதே இல்லை. ஒற்றைக் கிழவனின் பெரும் போராட்டம் வாழ்வா சாவா… சாகாவரம் பெற்ற மூலப் படைப்புகளில் ஒன்று இது. – ஆயிஷா இரா.நடராசன்
எர்னெஸ்ட் ஹெமிங்வே: ஆசிரியர் குறிப்பு: ஓர் அமெரிக்க எழுத்தாளர். ஏழு நாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுதிகள், இரு அ-புனைவு நூல்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இந்தக் ‘கடலும் கிழவனும்’ நாவலுக்காக 1953-இல் புலிட்சர் விருதும், 1954-இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசும் பெற்றவர்.
7. சந்தாலி
சக்தி சூர்யா | பாரதி புத்தகாலயம் | விலை:310 | பக்:304
‘நர வேட்டை’ – சக்தி சூர்யாவின் முதல் நாவல். மிக வரவேற்புப் பெற்று, குறுகிய காலத்துக்குள் 2-ம் பதிப்புக் கண்டது. இப்போது ‘சந்தாலி’. பண மதிப்பிழப்பு, கொரோனா என்னும் இரண்டு பேரழிவுகளை, புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் வலியோடு இணைத்துச் சொல்லப்படும் கதை இது. நாவலின் பின்னணியில் சந்தாலி என்னும் பழங்குடி இனத்தின் பூர்வ கதை அழகான காதலுடன் மையச் சரடாக இணைத்து நெய்யப்பட்டுள்ளது.
8. கூண்டிலேற்ற முடியாத குற்றவாளிகள்
முனைவர் மு.முருகேசன் | பாரதி புத்தகாலயம் | விலை:240 | பக்:239
பேராசிரியர் மு. முருகேசன், இந்நூலின் வழியாக ஒட்டுமொத்தப் பார்வையிழந்த மாற்றுத்திறனாளர்களின் பாடுகளை, வலியோடும் வேதனையோடும் சீற்றத்தோடும் சொல்லியிருக்கிறார். “நீங்கள் எங்களைக் கடுகளவும் புரிந்து கொள்ளவில்லை” என்பதுதான் இந்நூல் முழுவதிலும் அவர் நம்மிடம் நேருக்கு நேராகச் சொல்ல வரும் செய்தி. பார்வை மாற்றுத்திறனாளர்களைக் குறைத்து மதிப்பிட்ட அனுபவம் எனக்கும் நேர்ந்துள்ளது. எனவே, இந்நூல் விரல் நீட்டும் கூண்டிலேற்ற முடியாத குற்றவாளிகளில் நானும் ஒருவன்தான் என்பதை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. – பேரா. நா. மணி
9. சமரம்
தபோ விஜயகோஷ் – தமிழில்: ரவிச்சந்திரன் அரவிந்தன் | பாரதி புத்தகாலயம் | விலை: 260 | பக்: 264
மேற்கு வங்கத்தில் 1960களில் துவங்கி 70 வரை மார்க்சிஸ்ட் கட்சி சந்தித்த கொடிய அடக்குமுறைகள், அரச பயங்கரவாதம், ஆளும் வர்க்கத்தின் மூர்க்கமான தாக்குதல்கள், இவற்றைக் கட்சியும் கட்சி ஊழியர்களும் சந்தித்த வரலாற்றைப் பின்புலமாகக் கொண்ட உணர்ச்சிகரமான நாவல். நாவல் விறுவிறுப்பாக ஒரு துப்பறியும் நாவல் போலப் பயணிக்கிறது. குடும்பப் பாசங்களும் பயங்களும் காதல் கதைகளின் குறுக்கீடுகளும் நிறைந்த முழுமையான நாவல். ஓரிடத்தில்கூடப் பிரச்சாரமாகவோ, துருத்தலாகவோ கலை நயம் குறைந்துபோயோ ஏதும் இல்லாமல், இடதுசாரி அரசியலே தெரியாத ஒருவர் படித்தாலும்கூட அவரையும் ஈர்க்கும்படியாக நாவல் எழுதப்பட்டிருக்கிறது. கதை சொல்லல் முறையே மிகுந்த சுவையாகவும் பொருத்தமாகவும் அமைந்து நம்மை அப்படியே உள்ளே இழுத்துச்செல்கிறது. லட்சக்கணக்கான எளிய மக்கள் செங்கொடிகளோடு பங்கேற்கும், தமால் ராய்க்கான வீரவணக்க ஊர்வலத்தோடு நாவல் நிறைவு பெறுகிறது. ரவிச்சந்திரன் அரவிந்தன், மொழிபெயர்ப்பு என்கிற வாசனையே இல்லாத அளவுக்கு அசல் தமிழ் நாவலைப்போலவே மொழிபெயர்த்துள்ளார். – ச.தமிழ்ச்செல்வன்
10. அதன் பின்னர் அவர்கள் துயில்கொண்டார்கள் தக்ஷிலா ஸ்வர்ணமாலி, தமிழில்: எம். ரிஷான்ஷெரீப் | பூபாளம் புத்தகப்பண்ணை |விலை: 230 | பக்: 232
உண்மைக்கதாபாத்திரங்களைக் கொண்டு தக்ஷிலா எழுதியிருக்கும் இந்தச் சமூக, அரசியல் பனுவல் இன்றைய அரசியல் மாற்றங்களின் இலக்கிய சாட்சியாக இருக்கிறது. இப்பிரதியின் ஒவ்வொன்றும், ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் அரசியல் படிமக்குறியீடுகளாக உருவாக்கப்பட்டிருப்பது தக்ஷிலாவின் மாற்றிலக்கிய வடிவ முயற்சிகளுக்குச் சான்றாகும். ரிஷானின் மொழி பெயர்ப்புக்கான இந்தத் தேர்வும் சமகாலத்தின் அரசியல் மாற்றத்தை இலக்கியப்புலத்திலிருந்து கருத்தில் கொண்டதாகவும் இருக்கிறது. அதன்பின்னர் அவர்கள் துயில் கொண்டார்கள் என்று தொடங்கும் இக்கதை அதே வாக்கியத்தோடே முற்றுப் பெறுகிறது. இடையில் நடப்பது இயந்திரங்களைவிடவும் அதிக வேறுபாடுகள்இல்லாத, பெண்களும், ஆண்களும் களைத்துப்போய்த் தரையில் விழுந்தார்கள் எனும் வாழ்தலின் துயர யதார்த்தம். – எம்.கே.எம்.ஷகீப்.
11. வெண்ணிற இரவுகள்
ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி | நூல்வனம் | விலை:220 | பக்:102
தஸ்தயேவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் 1848ல் வெளியானது.இந்தக் கதையின் நாயகனுக்குப் பெயர் கிடையாது.காரணம் அது நீங்களாகவோ நானாகவோ இருக்கக் கூடும். காதலிப்பவனுக்குப் பெயர் எதற்காக? ஆனால் காதலிக்கப்படும் பெண்ணிற்குப் பெயர் நிச்சயம் வேண்டும்.காதலியின் பெயரை உச்சரிக்கும்போது அது ஒளிரத்துவங்கிவிடும். கதையின் வழியே நாஸ்தென்காவை நாமும் காதலிக்கத்துவங்கிவிடுகிறோம்.
12. சே குவேரா ஒரு போராளியின் வாழ்க்கை ( பாகம் -1 & 2 )
ஜான் லீ ஆண்டர்சன் – தமிழில்: ஜெ.தீபலட்சுமி | பாரதி புத்தகாலயம் | விலை: 1400 | பக்: 1294 (இரண்டு பாகங்களும் சேர்த்து)
தான் வாழும் காலத்திலேயே பெரும் வரலாற்று நாயகருக்குரிய புகழை அடைந்தவர் சே குவேரா. மரணத்துக்குப் பின்பு உலகப்புகழ் பெற்ற மாவீரராகத் திகழ்கிறார். புரட்சிகரப் போராளி, இராணுவ வல்லுனர், சமூகத் தத்துவவியலாளர், பொருளாதார அறிஞர், மருத்துவர், ஃபிடல் காஸ்ட்ரோவின் உற்ற நண்பரும் ஆலோசகரும் ஆவார். சே குவேரா கண்ட கனவு மகத்தானது. – லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தையும், பின்பு உலகின் வளரும் நாடுகள் அனைத்தையும் ஆயுதப் புரட்சியின் மூலம் ஒருங்கிணைத்து என்றென்றைக்குமாக வறுமை, அநீதி, மக்களைப் பல நூற்றாண்டுகளாய்ச் சுரண்டி இரத்தம் சிந்த வைத்த அற்பத் தேசியவாதங்கள் ஆகியவற்றை ஒழித்துக் கட்டுவதே அந்தக் கனவு. இந்த மாபெரும் லட்சிய வேட்கையினால் உந்தப்பட்டுத் தன் வாழ்க்கையைச் செலுத்திய சே அதற்கான விலையாக இறுதியில் தன் உயிரை ஈந்தார். சே குவேரா: ஒரு போராளியின் வாழ்க்கை ஹவானா, அல்ஜியர்ஸ் ஆகிய புரட்சித் தலைநகரங்களுக்கு இடையே ஊடாடுவதோடு பொலிவியா, காங்கோவின் போர்க்களங்களிலும் பயணிக்கிறது. மாஸ்கோ, வாஷிங்டன் நகரங்களின் அதிகார பீடங்கள் குறித்து மட்டுமல்லாது மியாமி, மெக்சிகோ, கவுதமாலாவில் வசித்த அரசியல் அகதிகளின் கதைகளையும் சொல்லும் இந்நூல் புரட்சி, பன்னாட்டு அரச தந்திரங்கள், ரகசியச் செயல்பாடுகள் குறித்த சுவாரசியமான தொகுப்பாகும். உலகையே ஆட்டுவித்த இரு பெரும் சக்திகளான அமெரிக்கா, சோவியத் யூனியனுக்கு இடையிலான பலப்பரீட்சையையும் அவை தோற்றுவித்த சிற்சிறு போர்கள் குறித்தும் பேசும் இந்நூல் பரந்து விரிந்த பன்னாட்டுப் பார்வையைக் கொண்டிருக்கிறது. நூலாசிரியர் ஜான் லீ ஆண்டர்சனுக்குக் கியூபாவின் அரசு ஆவணங்களைத் தடையில்லாமல் ஆய்வு செய்யும் உரிமையும், சே வின் மனைவி அலெய்டாவின் முழு ஒத்துழைப்பும் கிடைத்திருக்கிறது.
13. மூன்றாவது கதவு
சே.பிருந்தா – ஹெர்ஸ்டோரீஸ் விலை:124 | பக்:180
மழை பற்றிய பகிர்தல்கள்- தொகுப்பின் மூலம் தமிழ் எழுத்துலகிற்கு அறிமுகமான சே.பிருந்தா, அடுத்து இரு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டவர். கட்டுரை இலக்கியம், சிறுகதைகள், குறுநாவல் என்று தன் படைப்புலகை வண்ணங்கள் நிறைந்த விரிந்து பரந்ததாக விரிவாக்கிக் கொண்டு வருகிறார். கடல் குறுநாவல், கதவு திறந்ததும் கடல், அப்புறமென்பது எப்போதுமில்லை, வாழ்க்கை வாழ்வதற்கே என பிருந்தாவின் படைப்புகள் தொடர்கின்றன. இப்போது மூன்றாவது கதவு சிறுகதைத் தொகுப்பின் மூலம் புனைவுலகில் கால் பதித்திருக்கிற பிருந்தா, தன் எல்லா எழுத்துகளிலும் யாரும் இதுவரை பேசாத, அல்லது மிக மிக அரிதாகப் பேசியிருக்கிற, போதிய அளவுக்கு அழுத்தம் தந்திராத பொருள்களையே பேசியிருக்கிறார். இக்கதைகளில் மறைந்த முன்னோடி எழுத்தாளர் ஆதவனின் தாக்கம் தென்படுவதை வாசிக்கும்போது உணர முடியும். பதின்மூன்று கதைகள் இதில் உள்ளன.காதல், கடிதம், கீறல்கள், குரல்கள், ஆண்மை, ஆற்றாமை- இந்தக் கதைகள் வாசிக்கும்போதே மனதைப் பிசைபவை. ‘சில தினங்களை, சிலரின் வார்த்தைகளை என்றென்றைக்குமாக உள்ளங்கைகளுக்குள் பொதிந்து வைத்துக் கொள்வேன்’ என்று என்னுரையில் பிருந்தா சொல்லியிருக்கிறார். நாம் இந்தத் தொகுப்பை வாசிக்கும்போது, கதைகளின் ஊடே மின்வெட்டுகள் போல வெளிப்பட்டுச் சிதறும் வார்த்தைகளை நம் உள்ளங்கைகளுக்குள் மட்டுமின்றி உள்ளத்திலும் பொதிந்து வைத்துக் கொள்ளலாம்.
14. ஆகிதம்- நவமகன்- சிறுகதைகள்
கருப்புப் பிரதிகள் – ப. 184, விலை ரூ.250.
இக்கதைகளை எழுதியிருக்கும் நவரட்னம் கேதீஸ்வரன், யாழ் வேலணையில் பிறந்தவர். நார்வேயில் வசிப்பவர். தன் இருபதாவது வயதிலிருந்தே ‘நவமகன்’ எனும் புனைபெயரில் கவிதைகள், சிறு கதைகள் எழுதி வருகிறார். அகதி வாழ்வின் திகைப்பான பக்கங்களை இவரது முதலாவது நாவலான ‘போக்காளி’ நாவல் வெளிக்காட்டியிருந்தது. ‘ஆகிதம்’ இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு. மேற்குலக மனவெளிகளுக்குள் நுழைய முடியாத யாழ்ப்பாண மனிதர்களின் மன இருப்பின் போராட்டங்களைச் சொல்லும் அதே வேளையில், அதன் விருப்பங்கள் அனைத்திலும் அனாயசமாக நுழைந்து அய்க்கியமாகிக் கொண்டிருக்கும் அடுத்த தலைமுறை இருப்பையும் ஒருங்கே கொண்டிருக்கும் இக்கதைகள் ஈழத்துப் புலம் பெயர் சமூகங்களின் இனத்தை, அதன் வாழ்வை உலகம் புரிந்து கொள்ளும் பலகணியாக இக்கதைகளைப் புரிந்து கொள்ள முடியும்- நீலகண்டன்
15. ‘அருந்ததியர்களாகிய நாங்கள்..!’
ம.மதிவண்ணன்
பிரதிநிதித்துவ ஜனநாயக அரசியல்களால் கண்டு கொள்ளப்படாமலும், புறக்கணிக்கப்பட்ட நிலையிலுமிருந்த அருந்ததியர்களின் உரிமைக்குரலை, நீண்ட நெடிய பெருமூச்சை, உள் ஒதுக்கீட்டுக் கோரிக்கையின் நியாயங்களை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட நீதியாளர் ஜனார்த்தனம் குழுவின் முன், ஒரு வாக்குமூலம் போன்று சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையே இச்சிறு நூலாக வடிவம் பெற்றுள்ளது. கல்வி, வேலை வாய்ப்புகளில், பிரதிநிதித்துவ அதிகார அரசியலில் அருந்ததியர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.இந்த உண்மையை ஆதாரங்களின் துணையுடன் நிறுவுகிறார் மதிவண்ணன். அவருடைய ‘உள்ஒதுக்கீடு, சில பார்வைகள்’ நூலும் இந்தப் பிரசுரமும் அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக அறிவுத்தளத்தில் ஒரு பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியவை. இக்குறுநூலிலுள்ள அட்டவணை துலக்கமாக்க் காட்டுவதைப் போல, “அருந்ததியர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது ஏமாற்றமளிப்பதாய் இருக்கிறது. உள் ஒதுக்கீடு முறை நடைமுறைக்கு வந்ததற்குப் பிறகும் அந்நிலை மாற்றமின்றித் தொடர்கிறது என்பது கெடுவாய்ப்புதான். அந்நிலையை மாற்றுவதற்கான முயற்சிகளில் இந்நூல் ஒரு ‘விழி திறப்பான்’ (Eye opener) ஆக இருக்க ‘வேண்டும் என விரும்புகிறேன்’ என்கிறார் நூலாசிரியர் மதிவண்ணன். அவரின் நம்பிக்கை நிறைவேறட்டும்!.
16. துறையாடல் – வறீதையா கான்ஸ்தந்தீன்
கடல்வெளி | விலை: 1100 | பக்: 976
கடலோடிகளுக்காக ஒலிக்கும் காத்திரமான குரல், கடலோடி சமூகத்தின் வாழ்வியல் பிரச்னைகளை, எதிர்காலக் கனவுகளை, அரசியல் அதிகாரத்தில் அச்சமூகம் கொண்டிருக்கும் இடைவெளியை அக்கறையோடும் ஆதங்கத்தோடும் அறிவியல் மற்றும் வரலாற்று ரீதியாகப் பதிவு செய்துவரும் ஓய்வறியாக் களப்போராளி, பேராசிரியர், எழுத்தாளர், பதிப்பாளர், செயற்பாட்டாளர், பேச்சாளர் எனப் பன்முகம் கொண்டவர். கடல், கடல்வளம், கடற்கரைப் பாதுகாப்பு, கடல்சார் மக்கள் பண்பாடு, கடல்சார் மரபறிவு, அரசியல், பொருளாதாரம், உரிமைகள், கல்வி, தொழில் வாய்ப்புகள், பேரிடர்க் காலச் சிக்கல்கள், தீர்வுகள் குறித்து ஆய்விலும் எழுத்திலும் கால் நூற்றாண்டுக்கு மேலாகத் தீவிரமாய் இயங்கிவருகிறார். கடல்வளச் சுரண்டலுக்கு எதிராக அயராது குரல் எழுப்பி வருபவர். தமிழகக் கடற்கரையின், கடல்சார் மக்களின் வாழ்வியலின் அறியப்படாத முகத்தை உலகுக்கு அறிமுகப்படுத்துவதோடு, அம்மக்களின் விடியலுக்காக எழுத்தாயுதம் ஏந்தும் பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தீன், மக்கள் நம்பிக்கையில் ருசியேற்றும் உப்பு. பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தீன் ஒவ்வொரு கடற்கரையிலும் கால் நனைக்கும்போதும் ‘தான் ஒரு பிரம்மாண்டத்தின் ஒரு பகுதி’ எனப் பூரிப்புடன் பதிவு செய்கின்றார் (முன்னோர்களின் கால்களைத் தழுவிய நீர்- கடலம்மா பேசுறங் கண்ணு). அவரது வாழ்நாள் கனவுப் படைப்பாக மலர்ந்துள்ள துறையாடல்-ஐ ஒரு காவியப் பயணமாய்ப் பார்க்கின்றேன்.துறையாடல் பல அழகான, உணர்வுபூர்வமான சின்னச் சின்னப் பயணங்களின் தொகை நூல். கடந்த இரண்டு பதிற்றாண்டுக் காலமாக வறீதையா தமிழகக் கடற்கரை நெடுக மேற்கொண்ட பயணங்கள் இவை. பல்வேறுபட்ட வளர்ச்சி அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் தமிழகத்தின் கடற்கரைகளில் நிகழ்த்தப் பெற்ற இவ்வாய்வுகள் மூன்று பிரிவுகளாகப் பகுக்கப்பெற்றுள்ளன – சந்திப்புகள், நேர்காணல்கள், விவாதங்கள். அனுபவங்கள் உணர்வோடு இரண்டறக் கலந்து, சொல்லுக்குள் புகுந்து வரிகளாகும் முன்பே அவர் மனதில் அப்பயணங்கள் தொடங்கிவிடுகின்றன. ஆன்மாவில் உருவாகும் கரு, உணர்வாய்ப் பிரவாகமெடுத்து, அதன் சுழற்சியில் கால- இட-அரசியல் எதார்த்தங்களை உள்வாங்கி, வலியுடன் பிரசவிக்கும் கட்டம் வரை அவருடைய ஒவ்வொரு பயணமும் நெடியது. ஒவ்வொரு கடற்கரைச் சூழலும், அங்கு வறீதையா எதிர்கொள்ளும் பாத்திரங்களின் பகிர்வுகளும், அந்த அனுபவங்களை முன்வைத்து அவர் காத்திரமாய்ப் பதிவிடும் கருத்துகளும் அரிஸ்டாட்டில் குறிப்பிடும் மகத்தான துன்பியல் நாடகத்தின் அம்சங்கள் அனைத்தும் உள்ளடங்கிய நாடகமாய் நம் கண்முன் விரிகின்றன. – ஃபாத்திமா பாபு
17. ‘ஆசிரிய வாழ்வினிது!’ – கலகல வகுப்பறை
சிவா – விலை: 70 | பக்: 64
அரசு உதவிபெறும் பள்ளியாசிரியர். ஆசிரியர்கள் கலந்துரையாடவும், கலைகளின் வழியே குழந்தைகள் விரும்புவதாகக் கல்வியை ஆக்கவும் செயல்படும் மூன்றாவது களமான கலகல வகுப்பறை என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான சிவா, ஆசிரிய வாழ்வினிது என்கிறார். குழந்தைகளோடு கலந்துரையாடும் வரம் பெற்றவர்கள் ஆசிரியர்கள். அதுவே அவர்களை உயிர்ப்போடும் வைக்கிறது. வகுப்பறைக்கு வெளியேயும் நீளும் சில உரையாடல்களின் தொகுப்பே இந்நூல். சிவாவின் சிந்தனைத் தெறிப்புகள் சில:
‘கலங்கும் கண்களையும், மனதையும் கவனிக்க நேரம் வாய்ப்பதில்லை என்றாலும் இயல்பாய் அமைந்துவிடுகின்றன சில பொழுதுகள்.’ “சாப்பிட வழியற்ற குழந்தைகளிடம் தூக்க முடியாத அளவு புத்தகங்களைக் கொடுத்துப் படி படி என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில், படிப்பு சாப்பாடு தரலாம். இன்று படிக்க யார் சாப்பாடு தருவார்கள்?’’ “குழந்தைகளின் குரல்களைக் கேட்கும் காதுகளைப் பள்ளிகளெங்கும் நிறைக்க வேண்டும்.”
18. பேசும் சதைப் பிண்டம் -டால்டன் ட்ரம்போ
தமிழில். மா. சிந்தனா | சிந்தன் புக்ஸ் | விலை: 250 | பக்:232
உலகப் போர்க்்களத்தில் சதைப் பிண்டமாக விடப்பட்டவன் போருக்கு எதிராக அவனே கண்டுபிடித்த ஒரு பரிமாற்ற மொழியில் பேசுகிறான். கால்கள் இல்லாத போதிலும் சோர்ந்து விடும் வரை ஓடி, ஓசையே இல்லாதபோதிலும் தொண்டை வற்றும் வரையிலும் கத்தி, மீண்டும் அந்தக் கருவறையின் அமைதியில், தனிமையில், இருட்சியில் கொடூரமான நிசப்தத்தில் வீழ்ந்தான். அநேகமாக ஜானியின் துப்பாக்கி மக்களின் துப்பாக்கி என்பதே 2-ஆம் உலகப்போர் எனும் முற்றிலும் வேறுபட்ட விவகாரம் நடப்பதற்கு முன்பாக எழுதப்பட்ட கடைசி அமெரிக்கப் புதினமாக இருக்கலாம்.
19. முகாமி – சிறுகதைகள்
அய். தமிழ்மணி | பாரதி புத்தகாலயம் | விலை: 175 | பக்: 160
Ôதொடுக்கப்படும் விளைவுகளில் நாம் மிகச் சாதாரணமாகக் கடந்து விடுகிற அல்லது பெரிய பாதிப்பாக எடுத்துக் கொள்ளப்படாத நிகழ்வுகளின் கூர்மை ஏற்படுத்துகிற காயம்., பெரும்புண்களுக்கும் ஆறாத வடுக்களுக்கும் புரையோடல்களுக்கும் காரணியாக இருக்கிறது. அவற்றையே என் கதைகளாகவும், தேவையான தகவல் தேடல்களோடும் புனைந்திருக்கின்றேன். நிகழனுபவங்களால் ஒரு படைப்பாளி சமூகத்தால் உருவாக்கப்படுகிறான். அவன் எதைப் படைக்கிறான் என்பதைப் பொறுத்து அவன் யாரென்று சமூகம் தீர்மானித்துக் கொள்கிறது.’
20. செந்நிலம்
ஜெயராணி | வெளியீடு: சால்ட் | விலை: 300 | பக்: 200
‘‘காலங்காலமாகக் கட்டமைக்கப்பட்ட கள்ளத்தனத்தின் மீது கல்லெறியும் சிறு எத்தனிப்பு! உங்கள் மண்டையை அது உடைக்குமானால் அதற்கு நான் பொறுப்பல்ல.’’ என்ற பிரகடனத்துடன் பத்திரிகையாளரும் எழுத்துப் போராளியுமான ஜெயராணி தன் முதல் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டிருக்கிறார். காத்திரமான கதைகள். வலியையும் குற்றவுணர்வையும் உண்டாக்கும் கணைகள் நிரம்பிய அம்பறாத் தூணி.
21. தாழ்திறக்கும் தருணங்கள்
பாவெல் சூரியன் | வெளியீடு: போதிவனம் | விலை: 260 | பக்: 196.
வெளிச்சத்தையும் புகழையும் நாடாத எளிய மனிதர்கள், ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று எத்தகைய அங்கீகாரத்திற்கும் ஏங்காமல், தான் வாழும் சமூகத்திற்குத் தன் காலத்தில் ஏதாவது கொடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதோடு, வரும் தலைமுறைக்குத் தூண்டுகோலாக அமைவதாகவும் உள்ளது, ஒன்பது நேர்காணல்கள், மூன்று அஞ்சலிக் குறிப்புகள் கொண்ட இந்தத் தொகுப்பு.
22. அம்மாயி கும்பிட்ட சாமி
பாரி கபிலன் | கவின் வெளியீடு | விலை: 130 | பக்: 112.
அண்மைக்கால அரசியலும், தீண்டாமை எதிர்ப்புணர்வும் மூட நம்பிக்கைகளைச் சாடுதலும் கவிதையில் ஆங்காங்கே வந்து போகின்றன. சங்கப் பாடல்களைப் போல் இயற்கையே இவரது கவிதைகளின் கருப்பொருள். இயற்கையை ரசிப்பதுபோல் இவரது கவிதைகளையும் ரசிக்கலாம்.
23. கற்கள் நட்சத்திரங்கள் – (பதின்பருவகாலம்)
ரித்திகா | ஹெர் ஸ்டோரிஸ் | விலை: 80 | பக்: 80
எஸ்கலேட்டரில் ஏறி இறங்கியது முதல் இமய மலைக்கு ட்ரெக்கிங் சென்றது வரையிலான தன் வாழ்க்கைப் பயணத்தைச் சுவாரசியமான நடையில், எளிமையாக, பதின்பருவத்துக்கே உரிய துறுதுறுப்புடன் இந்நூலில் சொல்கிறார் ரித்திகா. வாழ்க்கை தங்களை அடித்த கற்களையே சேகரித்து, நட்சத்திரங்களை எட்டும் படிக்கட்டுகளாகக் கட்டியிருக்கிறார்.
24. கலை ஆளுமைகளின் காலடித் தடங்கள்
கே.வி.ஷைலஜா | வம்சி புக்ஸ் | விலை:40 | பக்: 32
மக்களைச் சிரிக்கவைத்து, யோசிக்கவைத்து, ஆதிக்க சக்தியை எதிர்த்து, உழைக்கும் மக்கள் பக்கம் நின்ற சாப்ளின், வாழ்நாள் முழுக்க இசை என்ற ஒற்றை வார்த்தையில் வாழ்ந்து சாதித்து, இடி, மின்னல், அதீத மழை என்றொரு நாளில் மெளனமாய்ச் செத்துப்போன பீத்தோவன், தன் ஓவியங்கள் இப்போது எப்படியெல்லாம் ரசிகர்களால் ஆராதிக்கப்படுகிறதென்று தெரியாமலேயே, அதற்காக ஏங்கி இறந்த வின்சென்ட் வான்கா, உலகின் மிகப் பெரிய விருதான நோபல் விருதின் பெயருக்குச் சொந்தக்காரரான ஆல்ஃப்ரட் நோபல் என எல்லாரையும், எல்லாவற்றையும் ரசித்த ஐரோப்பிய பயணம் மறக்க முடியாதது. என்கிறார் எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர், கே.வி.ஷைலஜா.
25. ஓர் உல்லாசப் பயணம்
வண்ணதாசன் | வானம் பதிப்பகம் | விலை: 40 | பக்: 24.
இந்தக் கதைகளைச் சிறார்களும் வாசிக்க முடியும். அவர்களே அனுபவித்துத் தெரிந்து கொள்ளவும் முடியும். பெரியவர்கள் வாசித்துச் சிறார்களுக்கு வாய்மாழியாகச் சொல்வதன் மூலம் சிறார்களின் நுண்ணுணர்வுகளைக் கூர்மைப்படுத்த முடியும். அத்துடன் தமிழிலக்கியத்தை, எழுத்தாளுமைகளை அறிமுகப்படுத்தவும் முடியும்.
26. கைகளிலேந்திய சிறுநதி
மு.முருகேஷ் | நிவேதிதா பதிப்பகம் | விலை: 150 | பக்: 160
நான் ஒருவன் மட்டுமே எழுத்தாளன் எனும் கர்வத்தோடு எழுதிக் கொண்டிருப்பதில் என்ன பெருமையிருக்கிறது? சக எழுத்தாள நண்பர்களோடு சேர்ந்தியங்குவதும், ஒருவரோடு ஒருவர் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதும்தானே ஒரு படைப்பின் ஜீவனை நெருக்கமாக உள்வாங்கிக் கொள்ள உதவும்.
27. நிச்சயிக்கப்பட்ட பெண்
ஆன்டன் செகாவ் | (தமிழில்) எம்.கோபாலகிருஷ்ணன் | நூல் வனம் | விலை: 50 | பக்: 48
ருஷ்ய மத்திய தரவர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருத்தியின் கதை இது. அன்றைய சமூக வழக்கம், பெண்களின் நிலை, தனி மனித சுதந்திரம் ஆகியவற்றைக் குறித்த மறுபரிசீலனையை வலியுறுத்துகிறது. செகாவ் எழுதிய கடைசிக்கதையும் இதுவே.
28. சொக்கரா
பிறைமதி குப்புசாமி | திராவிடியன் ஸ்டாக் | விலை: 130 | பக்: 111
வாழ்க்கை என்னும் சங்கிலி, சம்பவங்கள் என்னும் கண்ணிகளால் கோர்க்கப்பட்டது. சம்பவங்களால் நிறைந்ததுதானே வாழ்க்கை. அவை இன்பம், துன்பம், உயர்வு, தாழ்வு, வறுமை, வளமை, நட்பு, உறவு, சமூகம் எனப் பல்வேறு முகங்களைக் கொண்டவை. அவ்விதமாக, வெவ்வேறு தன்மைகளைக் கொண்ட வாழ்வின் சுவாரஸ்யம் அல்லது வெறுமை, துயரம் அல்லது மகிழ்ச்சி போன்றவை மிகவும் முக்கியமானவை. அவற்றைக் காண்பதும் கவனிப்பதும் கணிப்பதும் அவதானிப்பதும் உணர்வதும் ஓர் எழுத்தாளனின் அடிப்படையாகிறது. அவையே படைப்பு மனத்தில் கருக்கொண்டு படைப்பாக வெளிப்படுகின்றன. பிறைமதி குப்புசாமியின் படைப்புகள் எப்போதும் எளிய மக்களின் வாழ்வியலைப் பேசுபவை.
29. சொல்ல முடிந்த வார்த்தைகள்
கே.வி.ஷைலஜா | வம்சி புக்ஸ் | விலை: 30 | பக்: 24
எல்லாக் காலகட்டங்களிலும் குழந்தைகளோ பெரிய பிள்ளைகளோ அப்படியேதான் இருக்கிறார்கள். தம்மேல் விழும் மழைத்துளிக்காய் உருகிக் கரைகிறார்கள். ஆனால் நாம்தான் இன்றைய காலகட்டக் குழந்தைகள் சரியில்லையென்றும், எந்த நேசத்தையும் அவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாதென்றும் சொல்கிறோம். அப்படியெல்லாம் இல்லை, நிலவு எப்போதும் அழகாய்த்தானிருக்கிறது. தண்ணென்றுதானிருக்கிறது.
30. படுசுடர் தண்டாக் காதல்
அ. வெண்ணிலா | அகநி வெளியீடு | விலை: 100 | பக்: 64
பெளர்ணமி இரவின் அடர் ஒளியில் ஒளியிழந்துபோகும் நட்சத்திரங்கள் பேசக்கூடும், நாம் பேசிக் கொள்ளாத கணங்களின் ஒளிமறைவு பிரதேசங்களைப் பற்றி.
31. என் நிலத்துடன் பேசும் மழை
குமரன் விஜி | வேரல் பதிப்பகம் | ரூ.200/-
ஒரு நொடிக்கு முன் பார்த்த பூ இப்போது இல்லை. ஒவ்வொரு நொடியும் பார்த்த பொருளும், பார்த்த பார்வையும் இயங்கியபடி இருக்கின்றன. ஒரு நிழலில் பெண்ணைக் கண்டு, அதன் ஒரு நாளின் இயக்கத்தைச் சொல்கிறார். கவிதை இப்படி முடிகிறது:
சமையல் முடித்துக்
கிளம்பும் நிழல்
பேருந்து பிடித்து அமர்ந்தால்
ஆலையில் போய்க் குனிகிறது
நிமிர முடியவில்லை. – எழுத்தாளர் நீதிமணியின் – முகநூல் பதிவிலிருந்து..
32. மாரத்தான் மனிதர்கள்
வெ. நீலகண்டன் | விகடன் பிரசுரம் | விலை: 250 | பக்: 223
‘‘இந்த மாரத்தான் மனிதர்கள் தொகுப்பு 31 மனிதர்களை நமக்குக் காட்டுகிறது. மகத்தான மனிதர்கள் என்பதுதான் நான் இந்தத் தொகுப்புக்கு வைத்திருக்கிற பெயர். எனக்கு அந்த 31 மனிதர்களுடன் இருக்கத் தோன்றுகிறது. அவர்கள் செயல்களின் சங்கிலியில் ஏதாவது ஓர் அடுத்த கண்ணியாக என்னைக் கோர்த்துக் கொள்ள முடியாதா என்று இருக்கிறது. எல்லாரும் கை நீட்டினால் தொடுகிற தூரத்தில்தான் இருக்கிறார்கள். இவ்வளவு பேரைப் பேசவைக்கும் வெ.நீலகண்டன், ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் ஒரு வரி அல்லது இரண்டு வரிகள் மட்டும் எழுதுகிறார். அந்த வரிகள் அவருடையவை அல்லாமல், வாசிக்கிற நாம் சொல்ல நினைக்கும் நம்முடைய வரிகளாக ஒலிக்கின்றன.’’ – வண்ணதாசன்
33. பச்சை ஆமை
விஜய ராவணன் | சால்ட் | விலை: 150 | பக்: 96
உலக வரைபடத்தில் சீனாவின் நீல விளிம்பையொட்டிய உத்தேசமான ஒரு புள்ளியில் வாழும் டாங்கா எனும் மீனவப் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆ கீயையும் இனவரைவியல் கூறுகளின் ஊடாக அவனுடைய வாழ்வையும் நேர்த்தியான மொழிநடையில் வரைந்து காட்டும் புனைவாக்கம் இது. கதையின் இயங்குநிலத்தையும் மாந்தர்களையும் சற்றே திரித்து இந்தியப்படுத்தினாலுமே கூட அதன் ஈரத்தை அப்படியே ஏற்று உள்வாங்க முடியும் என்ற விதத்தில், இக்குறும்புதினத்தின் மையச்சரடு எத்தனை வலிமையானது என்று வரையறுக்க முடியும். நூறாண்டுகள் கடந்து வாழும் பச்சை ஆமையொன்று படிமமாக இக்கதையில் ஆளப்பட்டிருக்கிறது. அதுதான் கதையின் தலைப்பு எனும்பட்சத்தில் அது காரணப்பெயராகவும் தோன்றச் சாத்தியங்கள் உண்டு.
34. அசோக மித்திரனின் 18-வது அட்சக்கோடு: ஓர் கலை தரிசனம்
எல்.ஜோதிகுமார் |சவுத் விஷன் புக்ஸ்| விலை:150 |பக்:146
தமிழின் நவீன இலக்கியத்தின் தோற்றுவாய் என்று கூறப்பட்டு வந்துள்ள அசோகமித்திரனின் முக்கியமான எழுத்துகளில், பெரிதும் சிலாகிக்கப்பட்ட 18வது அட்சக்கோடு குறித்த ஒரு மறுவாசிப்பு. ஜெயமோகனின் ரப்பர் நாவலின் இலக்கிய உச்சங்கள் யாவை? இவற்றுக்குப் பின்னால் மறைந்து இயங்கும் அரசியல் யாது? கூடவே, பேராசிரியர் சிவத்தம்பி குறித்த நினைவுகளும், இலங்கை தேசிய இயக்கம் சார்ந்த சில கதைகளும் உள்ளடங்கலாக…
35. ஊர்க்காவலன்
துர்க்கையாண்டி ஐ.பி.எஸ். | மின்னம்பலம் பதிப்பகம் | விலை: 400 | பக்: 384
‘‘என் வாழ்வில் அறம் ஒன்றுதான் என்னைக் கைப்பிடித்து வழி நடத்தியது. என் தாய், தந்தை எனக்குக் கூறிய, நீ பெறுகிற பொருள் அறம் சார்ந்ததாக இருக்க வேண்டும். நீ பெறுகிற இன்பம் அறம் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்ற அறிவுரையைக் கடைசிவரை தவறாமல் கடைப்பிடித்துக் காப்பாற்றியிருக்கிறேன் என்பதற்கான ஆவணமே இந்த நூல்.’’
– துக்கையாண்டி ஐ.பி.எஸ்.
எந்தவொரு பிரச்சனை என்றாலும் நான் நம்பிக்கையுடன் அவரிடம் ஒப்படைக்கும் அளவுக்கு எனது நம்பிக்கையைப் பெற்றிருந்தார். மாநிலக் குற்றப்பிரிவுப் புலனாய்வுத் துறையில் சிக்கல்கள் நிறைந்த பல வழக்குகளைப் புலனாய்வு செய்து மாநிலத்துக்குப் பெருமை சேர்த்தார். அவரது புலனாய்வுகள் பாராட்டுக்குரியவை.
– வால்டர் தேவாரம்.
36. நீஸெவின் வேர்க்கனி
மயிலன் ஜி சின்னப்பன் | சால்ட் வெளியீடு | விலை: 175 | பக்: 120
சோழ மண்டலக் கடற்கரையை நோக்கிய பனிஷ் படையெடுப்புச் சரித்திரத்தின் ஊடுபுனைவாக எழுதப்பட்டிருக்கும் நாவல் இது.பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தைக் கதைக்காலமாகக் கொண்டு, இரு பானிஷியக் கோமகன்களுக்கிடையிலான நட்பும் அலைவும் தீர்வும் இப்படைப்பில் பேசப்படுகின்றன. சாகசத்தாலும் காதலாலும் துயரங்களாலும் நிறைந்த கிழக்கத்தியப் பயணத்தில், இரு தனிமனிதர்களாக அவர்கள் இழந்தவையும் பெற்றவையும் மெல்லிய குற்றவுணர்வினூடே பதிவு செய்யப்பட்டுள்ளன.
37. குற்றமும் அநீதியும்
வி. சுதர்ஷன், தமிழில். ஈசன் | காலச்சுவடு பதிப்பகம், | விலை: 290 | பக்: 246
நேர்மையும் துணிச்சலும் கொண்ட ஓர் அதிகாரி காவல்துறையில் எத்தகைய அனுபவங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் ஆளாகக்கூடும்? அவற்றை எப்படி அவர் எதிர்கொள்வார்? உத்தரப் பிரதேசத்தில் பிறந்து தமிழகக் காவல் அதிகாரியாகப் பொறுப்பேற்ற அனூப் ஜெய்ஸ்வால் நேர்மை, மனிதாபிமானம், துணிச்சல், கடின உழைப்பு ஆகியவற்றுக்குப் பேர்போனவர். தான் பணியாற்றிய விதத்தினால் மக்களாலும் சகாக்களாலும் மகத்தான நாயகனாகப் போற்றப்படுகிறார். சட்டம் அளித்துள்ள அதிகார வரம்பிற்குள் பல்வேறு சாதனைகள் புரிந்த அவர் பல்வேறு சோதனைகளையும் எதிர்கொண்டிருக்கிறார். 2022இல் வெளியான குற்றமும் அநீதியும் நூல் அவரது சோதனைகளைப் பற்றிப் பேசுகிறது. சோதனைகளை எப்படி அவர் வாய்ப்புகளாகப் பயன்படுத்திக் கொண்டு அரிய பணிகளைச் செய்தார் என்பதைச் சொல்கிறது..
38. சூரிய திசைப் பயணம்
ஜெயமோகன் | விஷ்ணுபுரம் பதிப்பகம் | விலை: 170 | பக்:128
ஜெயமோகன் தன் நண்பர்களுடன் வடகிழக்கு மாநிலங்களில் 2015ல் நிகழ்த்திய பதினாறுநாள் பயணத்தின் பதிவு இது. அன்றன்று எழுதப்பட்டு அன்றே வெளியானவை. ஆகவே ஓர் உடனடித்தன்மை இந்தக் குறிப்புகளுக்கு உண்டு. சிறிய விஷயங்கள் பதிவாகின்றன. அவற்றினூடாக வடகிழக்கின் பண்பாடும் அரசியலும் விரிகிறது. ஒட்டுமொத்தமாக வடகிழக்கு மாநிலங்களைப் பார்க்கும் பயணம் என்பதனால் ஒரு பறவைநோக்கில் அந்த நிலத்தை இந்நூல் ஆராய்கிறது.
39. ஜனநாயகமும் சனாதனமும்
நிகழ் அய்க்கண் | உயிர் எழுத்து பதிப்பகம் | விலை: 210 | பக்: 208.
ஒரு நாட்டினது முன்னேற்றத்தின் அளவுகோல் என்பது, அந்த நாட்டின் பெண்களினுடைய வாழ்நிலை எப்படியிருக்கிறது என்பதைப் பொறுத்தே அமைகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது கல்வியும் சுகாதாரமும் பெண்களுக்குத் தடையின்றிக் கிடைக்க உறுதிசெய்திட வேண்டும்.
40. மார்க்ஸ் எங்கெல்ஸ்:
பன்மொழிப் புலமை (கட்டுரைகள்) | எஸ்.வி.ராஜதுரை | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் | விலை ரூ.220/-
படிப்பையும் எழுத்தையும் உயிர்மூச்சாகக் கொண்டு பிணி, மூப்பைப் பொருள்படுத்தாமல் எஸ்.வி.ராஜதுரை எழுதிய மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் பன்மொழிப் புலமை, பாசிச எதிர்ப்புப் போரில் ஸ்டாலின் வகித்த தலைமைப் பாத்திரம், இராபர்ட் ட்ரெஸ்ஸெல், எமிலி ஜோலா ஆகியோரின் பாட்டாளி வர்க்க நாவல்கள். ஆஃப்ரோ-அமெரிக்க எழுத்தாளர் ஜேம்ஸ் பால்ட்வினின் இனவெறி எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்புக் குரல் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
41. இரண்டு பூனைக்குட்டிகள்
ஃபாங் யிகுன் | தமிழில்: ரமணி | வானம் பதிப்பகம் | விலை ரூ.50/-
இரண்டு பூனைக்குட்டிகள், வெவ்வேறு வழிகளில் செல்கின்றன. திரும்பி வரும்பொது அந்தப் பூனைக்குட்டிகளின் இயல்புகள் எப்படி இருக்கின்றன என்பதை விளக்கும் எளிமையான புனைவுக் கதை இது. 14 வயது எழுத்தாளர் ரமணி அழகாக மொழிபெயர்த்திருக்கிறார். இந்தக் கதை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
42. சிறுவர்கள்
ஆன்டன் செகாவ் | தமிழில்: எம்.கோபாலகிருஷ்ணன் | வானம் பதிப்பம் | விலை ரூ.50/-
இன்றைய தலைமுறை இளையோரிடம் உலக இலக்கியத்தை அறிமுகப்படுத்தி அவர்களது வாசிப்புப் பழக்கத்தை வளப்படுத்தும் நோக்கில் மாமேதைகளின் மிக முக்கியமான கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுகிறது வானம் பதிப்பகம். அந்த மகத்தான நூல் வரிசைகளில் ஆன்டன் செகாவின் ‘சிறுவர்கள்’ கதையும் ஒன்று.
43. கடலோடு இசைத்தல்
சக்தி ஜோதி | வம்சி பதிப்பகம் | விலை ரூ.90/-
இவரது முதல் தொகுப்பின் பெரும்பாலான கவிதைகள் சங்கப் பாடல்களின் சாரம் மிகுந்தவை. குறிப்பாகக் குறுந்தொகை,- முதல் தொகுப்பின் முன்னுரையில், பிரபஞ்சன், சக்தி ஜோதியின் ஜனனபூமி சங்கப் பிரதேசம் என்று கூறுவது பொருட்படுத்தக் கூடியது. அந்தத் தொகுப்பின் பிரதேசங்களில் காலூன்றி நின்று காதலும் காதல் சார்ந்த வெளிகளிலும் பெண்மை சார்ந்த தளங்களிலும் கிளைவிரித்துப் படர்கின்றன இந்தத் தொகுப்பின் கவிதைகள். சக்தி ஜோதி கவிதைகளில் நான் காணும் சிறப்பு, வன்மம் இல்லாத விடுதலைத் தேடல். –நாஞ்சில் நாடன்
44. நிலம் புகும் சொற்கள்
சக்திஜோதி | வம்சி பதிப்பகம் | விலை ரூ.80/-
இக்கவிதைகள் முழுக்க அகம்சார்ந்த கவிதைகள். ஒரு மேம்போக்கான அர்த்தத்தில் இவை காதல் கவிதைகள் எனும் பொருள் பெறக்கூடும். எனினும் அத்தளத்தினும் ஆழமானவை இக்கவிதைகள். பெண் – ஆண் உறவில் உளவாகும் அகம், அது சார்ந்த நுணுக்கங்கள் கூடிய கூற்றுகளால் வடிவமைக்கப்பட்டவை இவை. சக்தி மிக எளிமையான மிக இயல்பான சொற்களையே கொண்டு தன் கவிதைகளை அமைத்திருக்கிறார். அச்சொற்களுக்குக் கனமும் நுட்பமும் ஆழமும் கூடிவரக்காரணம் என்ன? வாழ்க்கையின் ஒரு முக்கிய அசைவை, சிதறல் இல்லாமல் உண்மைபோல யதார்த்த அழகோடு வடிவமைக்கும் அவரது செய்நேர்த்தியே ஆகும். அத்தோடு காதல், நட்பு என்பவை எல்லாம் மனிதர் எல்லாரும் ஏதோ ஒரு பருவத்தில் ருசித்த சுவைகளே. அந்த ருசியைச் சரியான சொற்களால், பொருத்தப்பாட்டோடு கவித்வம் தழைய ஒருவர் சொல்லும்போது உலகம் காது விரியக் கேட்கிறது. இது எளிதல்ல. – பிரபஞ்சன்
45. சங்கத் தமிழ்ச் சொற்கள்
பகுதி-1 கட்டுரை | பி.பாலசுப்பிரமணியன் | தேநீர் பதிப்பகம் |விலை ரூ.120/-
பேராசிரியர் பி.பாலசுப்பிரமணியன் அவர்கள், தமிழ் இலக்கியங்களில் ஆழங்காற்பட்டவர். தொடர்ந்து காத்திரமான பல ஆய்வுரைகளைப் பல்வேறு இலக்கியக் கருத்தரங்குகளில் நிகழ்த்தி வருபவர். அவர் சமீபத்தில் சொல்வயல் என்ற இணைய இதழில் சங்க இலக்கியங்களில் பயின்று வரும் சொற்களைப் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார். அந்தக் கட்டுரைகள் முதல் பகுதியாக நூல் வடிவில் தேநீர் பதிப்பகம் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளன. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது நம் தொல்காப்பியத்தின் முடிவு. எந்தச் சொல். என்ன பொருளில். எங்கெங்கு, எப்படிப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது என்று ஆராயும் ஒரு முயற்சி இது. அந்த அடிப்படையில் அகவுநர், அசுணம், ஆசிரியர், கங்கை, பிசிர், யாஅம் ஆகிய ஆறு சொற்களை எடுத்துக்கொண்டு, சொல்லாய்வுகளில் ஈடுபட்டிருக்கிறார் பாலசுப்பிரமணியன். சங்க இலக்கியங்களில், எந்தெந்தப் பொருளில், எத்தனை பாடல்களில் இந்தச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் விவரிக்கிறார். பல உரையாசிரியர்கள். தொ. பரமசிவன், ராஜ் கௌதமன் போன்ற பல ஆய்வாளர்களின் நூல்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி, அவற்றுடன் உடன்பட்டும், வேறுபட்டும் ஆசிரியர் விவரிக்கும் கருத்துகள் மிகவும் ஆழமும், அகலமும் வாய்ந்தவை. சுவையும், பயனும் நிறைந்த இந்தச் சிறிய ஆய்வு நூல், இன்னும் பல ஆய்வுநூல்களுக்கான விதைகளைத் தாங்கியிருக்கும் களஞ்சியம். சொல்வயல் இதழில் விளைந்த சொல்லாய்வுக் கதிர்களை, இளம் ஆய்வாளர் முனைவர் வே. கார்த்திக் அவர்களுக்குச் சமர்ப்பித்திருப்பதில், பாலசுப்பிரமணியத்தின் பரந்த மனம் புலப்படுகிறது. ஆசிரியரின் வேட்டுவம் தொடரட்டும்!
46. மாடவீடு – ஓவியரின் கதை
அந்தோன் செகவ் | வளர்பிறை பதிப்பகம் | விலை ரூ.80/-
அந்தோன் செகவ் 29, சனவரி 1860 இல், செயின்ட் அந்தோணி பெரிய (17 ஜனவரி பழைய பாணி) விருந்து நாள் அன்று தெற்கு ரஷ்யாவின் ஆழாவ் (கிஷ்ஷீஸ்) கடல் துறைமுகமான டாகன்ராக்கில் பிறந்தார். இவருடன் சேர்த்து மொத்தம் ஆறு சகோதரர்கள். இவர் மூன்றாவது நபர் ஆவார். இவரது தந்தையின் பெயர் பவெல் எகொரோவிச் செகவ் என்பதாகும். இவருடைய தந்தை ஒரு பண்ணையடிமையாவார். அவரது மனைவி உக்ரேனிய நாட்டைச் சார்ந்தவர். அவரது விஸ்ஹோவட்கா கிராமமானது கொபிலியகி அருகேயுள்ள போல்டவா பகுதியில் உள்ள தற்போதைய உக்ரைன் நாட்டில் அமைந்துள்ளது. ஒரு மளிகைக் கடை நடத்தி வந்தார். இவர் திருச்சபைப் பாடகர் குழுவின் இயக்குநராகவும். பக்தியுள்ள கட்டுப்பாடான கிறிஸ்துவராகவும், உடல் குறைபாடுடையவராகவும் காணப்பட்டார். பவெல் செகவ், சில வரலாற்றாசிரியர்களால் தனது மகனின் பல ஓவியங்களில் காணப்படும் பாவனை மூலமாகப் பார்க்கப்பட்டார். செகாவின் தாயான, எவ்ஜெனிய மொரோசாவா சிறந்த கதைசொல்லி. அவர் தம்முடைய குழந்தைகளுக்கு தாம் தம் துணி வியாபாரியான தந்தையுடன் ரஷ்யா முழுக்கப் பயணித்த பல்வேறு பயண அனுபவங்களைக் கதைகளாக எடுத்துக் கூறுவார்.
47. மீச்சிறு இருள்
கார்த்திக் பிரகாசம் | தேநீர் பதிப்பகம் | சிறுகதை | விலை ரூ.160/-
கடலோடு கலந்து கடலாகவே மாறிவிட்ட உப்பைப் போலத்தான் வாழ்வில் துயரமும் அப்பிக் கிடக்கிறது. தொடர்ந்து கண்ணுறும் இத்தகைய துயரங்களினால் ஒரு கட்டத்தில் வனம் தவறிய காட்டு யானையைப் போல் நேர்க்கோட்டு வாழ்விலிருந்து விலகிக்கொள்ள முற்பட்டுக் கூடவே சுயத்திலிருந்து தப்பித்து ஆசுவாசம் தேட முயல்கிறது மனம். அதன் மூலம் அடியாழத்தில் தங்கிக் கிடக்கும் குற்றவுணர்விலிருந்து விடுபடுவதற்கான தேடலையும் துவங்கி வைக்கிறது. அத்தகைய தேடலில் புதைந்து கிடந்த மனிதர்களின் துயரங்களைக் கதையாக்கிப் பார்க்க முயன்றிருக்கிறேன். அது சரி, துயரத்தை ஏன் கதையாக்க வேண்டும்? சக மனிதர்களின் ஆறுதல் வார்த்தைகள் மேற்பூச்சுக்குப் பயன்படுகிறதே தவிர ஆழ்மனதின் அந்தரங்கத்தை அவை ஒருபோதும் நெருங்குவதில்லை. கதைகளோ ஆழ்மனதின் ஸ்திரத்தை அசைத்துப் பார்க்கும் வல்லமை கொண்டவை. துயரத்தின் பற்றுதலில் அடிமையாகிக் கிடப்பவனுக்கு அத்துயரமே அவநம்பிக்கைகளை வேரறுத்து அறத்தையும், வாழ்தலின் மீதான புத்தொளியையும் பாய்ச்சிடும் மாய ஜால வித்தையைத் திறம்படச் செய்து முடிக்கின்றன கதைகள். – கார்த்திக் பிரகாசம்
48. கடலைக் களவாடுபவள்
சுஜாதா செல்வராஜ் | தேநீர் பதிப்பகம் | விலை ரூ.120/-
“ஆதிப்பொதுவுடைமைச் சமூகம் தாய்வழிச் சமூகமாக இருந்திருக்கிறது. இங்கு பெண்கள் கட்டுப்பாடு அற்றவர்களாகத் தமக்கான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து இனக்குழுச் சமூகத்தில் பெண்கள் படைப்பாளிகளாகவும் கலைஞர்களாகவும் அடையாளப்பட்டிருக்கின்றனர் என்பதற்குச் சங்கப் பாடல்கள் தகுந்த சான்றுகளாக அமைகின்றன. பெரும் கால இடைவெளிக்குப் பின் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கும் பெண் படைப்பாளிகள் வரிசையில் தன் இரண்டாவது கவிதைத் தொகுப்போடு வந்துள்ளார் கவிஞர் சுஜாதா செல்வராஜ். கவிதைகளை வாசிப்பதும் எழுதுவதும் கவிதைகளோடு இருப்பதும் கவிதையாக வாழ்வதும் கவிஞர் சுஜாதா அவர்களுக்குப் பிடிபட்டிருக்கிறது என்பதை அவரது இந்தக் கவிதைத் தொகுப்பின் வழி அறிந்து கொள்கிறேன். காதல், பசலை, காமம், கூடல், மனம், மௌனம், அன்பு, வேட்கை, யாசகம், பெண்ணின் இருப்பு, வானம், அந்தி, குழந்தைமை, கனவு, கடல், இரவு, பயணம், நினைவு, நிலவு, தத்துவம், அழகியல், மரபு மீறல், உறவு, நம்பிக்கை, வாழ்வின் மீதான எதார்த்தம் உள்ளிட்டவை கவிதைகளில் பேசுபொருள்களாக இருக்கின்றன. இவரது கூர்மையான பார்வையும் மொழியும் காத்திரமாக இருக்கிறது.” – முனவைர் பி. பாலசுப்பிரமணியன்
49. காலங்களைக் கடந்து வருபவன்
சுஜாதா செல்வராஜ் | புதுஎழுத்து பதிப்பகம் | விலை: 90/-
அசாதாரண நிகழ்வுகளையும் சாதாரண நிகழ்வுகளாக மாற்றிச் செல்கின்றன. “காலங்களைக் கடந்து வருபவன்” அதுவே வலியை மகிழ்ச்சியை அதிகப்படுத்தியும் தருகின்றன. ஆக, “நாமொரு தாயாகவோ, தகப்பனாகவோ அல்லது குழந்தை மனத்துடனோ கண்களைத் திறந்து பார்த்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் மேலும் என்ன பிரதிப்படுத்துவது? அன்றாடங்கள் அதன் போக்கில் முட்டித் திரியும் ஒரு வழமையான நாளிலோ, ஒரு மழைக்கிழமையிலோ அல்லது ஒரு கோடையின் நெஞ்சத்திலோ நின்று இந்தக் கவிதைகளை நாம் நெருங்கப்போகும் முன், நண்பர்களே, எறும்புகளும் பசியாறட்டுமெனப் பிரார்த்திப்போம், கொஞ்சம் கருணையுடன்.”
50. மக்களிசை மேதை எம்.பி.சீனிசவான்
மு. இக்பால் அகமது | பரிசல் பதிப்பகம் | விலை ரூ.350/-
“இசை என்பது தனிமனிதனின் இன்பத்திற்கு உரியது. தனிமனிதனின் உணர்வுக்கு உரியது. தனிமனிதனின் ஓய்வுக்கு உரியது என்ற பார்வையை உடைத்து, சமூகத்தின் எழுச்சிக்குரியது. சமூக முன்னேற்றத்துக்குரியது என்று சொன்னவர் எம்.பி.சீனிவாசன். இசையின் எல்லையை அவர் விரிவுபடுத்தினார்.
– கவிஞர் தமிழன்பன்
“மனிதக் குரலுக்கு ஈடு இணை எதுவுமே இல்லை” என எனது குரு எம்.பி.சீனிவாசன் அழுத்தமாகக் கூறுவார். எந்த இசையையும் உணர்வுகளையும் பாடலின் கருத்தையும் பாவத்தின் மூலம் மனிதக் குரலால் மட்டுமேதான் கொண்டு வரமுடியும். இசைக் கருவியில் அந்த மெலடி வரலாம். நாம் கேட்கலாம். ஓரளவுக்கு உணர்வுகளைக் கொண்டு வரலாம். ஆனால் இசைக் கருவியால் “உச்சரிக்க” முடியாது. அதை மனிதக் குரலால் மட்டுமேதான் வெளிக் கொண்டுவர முடியும்.” – டி.ராமச்சந்திரன் (MYG)
“அவர் இசையமைப்பாளர் பணியைச் செய்தாலும், சேர்ந்திசைப் பணி, திரைப்பட இசையமைப்பாளர் சங்கப் பணி உள்ளிட்ட எந்த வேலையைச் செய்தாலும் அவற்றைத் தனது நேர்மை, திறமை, அப்பணிப்புணர்வு ஆகியவற்றால் வெற்றிகரமாக்கினார். திரைப்பட இசையமைப்பாளர் சங்கமாகட்டும். சம்மேளனத்துடன் இணைக்கப்பட்ட பிற அமைப்புகள் ஆகட்டும், இப்போது அவற்றின் உறுப்பினர்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகள். நலன்களுக்கும் காரணமாக இருந்தவர் எம்.பி.சீனிவாசன்தான்.” – எஸ் ஜானகி
51. சூரியக் குடும்பம்
பா. ஸ்ரீகுமார் | சுட்டி மீடியா | விலை ரூ.120/-
“உண்மையில் சூரியன் உதிப்பதும் இல்லை, மறைவதும் இல்லை. பூமி சுற்றுவதால், சூரியன் காலையில் உதித்து மாலையில் மறைவதாக உணர்கிறோம். நாம் விண்வெளியில் இருந்தால் பலமுறை சூரிய உதயத்தைப் பார்க்கலாம் (சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ளவர்கள் பல சூரிய உதயங்களைப் பார்க்கின்றனர்). ஒரு குறிப்பிட்ட உயரம் தாண்டிச் சென்றால் எப்போதும் சூரியனைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்!” -என்று நமக்குச் சூரியக் குடும்பத்தின் அற்புதங்களை, அறிவியல் உண்மைகளை அழகு தமிழில் நூலாகத் தொகுத்துத் தந்திருக்கிறார் பா.ஸ்ரீகுமார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அறிவியல் பலகை – போன்ற அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர். கவிஞர்
52. அசோகர் ஒரு தத்துவலியலாளர் – அரசரின் சொல்லோவியம்
பேட்ரிக் ஆலிவெல் | தமிழில்: சீனிவாச ராமாநுஜம் | எதிர் வெளியீடு | விலை: 750
அரசர்கள் தார்மிகத் தத்துவம் கொண்டிருப்பதில் தனித்துவமானவராக இருக்கிறார் அசோகர். பரந்துவிரிந்திருந்த அவரது பேரரசு முழுக்கப் பாறைகளிலும் தூண்களிலும் அவர் உருவாக்கியிருந்த கல்வெட்டுகள் மூலம், வரும் தலைமுறையினருக்குத் தன் வார்த்தைகளைக் கடத்துவதில் பண்டைய அரசர்களுள் தனித்துவமான ஒருவராக இருக்கிறார். ஓர் ஆட்சியாளராக, அசோகர் அவரது சொந்தப் பற்றுறுதியைப் பிடிவாதமாகக் கொண்டு, அதன் அடிப்படையில் அவரது பேரரசுக்குள் காணப்பட்ட பலதரப்பட்ட மதங்களை ஒற்றைத்தன்மையில் அல்லது தட்டையாக மாற்றாமல் அவற்றின் பன்மைத்துவத்தைத் தக்கவைக்கவும் வளர்த்தெடுக்கவும் முயன்றார். பலவிதமான மதக் குமுகங்களில் உள்ள கற்றறிந்தவர்களுக்கு இடையே ‘உடன்படிக்கை, இசைவுத்தன்மை, பரஸ்பர மரியாதை போன்றவற்றை ஊக்குவிக்க’ அசோகர் முயன்றதாக ஆலிவெல் எழுதுகிறார். அசோகரின் அரசு செயல்பட்ட விதத்தை, அதாவது நிர்வாகப் படிநிலையில் பல்வேறு நிலைகளில் இருந்தவர்களுக்கு எப்படி வேறான பொறுப்புகள் அளிக்கப்பட்டன என்பதை ஆலிவெல் இந்நூலில் சிறப்பாக விவரிக்கிறார். ஓர் ஆட்சியாளர் இலக்கியத்தன்மையோடு எழுதுவது மிக அபூர்வமானது என்றால், ஓர் அறிஞர் இலக்கியத்தன்மையோடு எழுதுவதும் அவ்வளவு சுலபமாகக் காணக்கூடியதல்ல. ஆய்வின் கறார்த்தன்மை, தீர்மானங்களுக்கு வரும் நுட்பம். நேர்த்தியான எழுத்து என்றெல்லாம் கொண்டிருப்பதால் வாழ்க்கை வரலாறுகள் எழுதுவதற்கு இந்நூல் புதிய தரநிலையை முன்வைக்கிறது எனலாம். – ராமச்சந்திர குஹா
53. அது ஒரு பிறைக்காலம்
ஜமீலா ராசிக் | வெளியீடு: ஹெர் ஸ்டோரீஸ் | விலை: 300 | பக்: 206
வெறுப்புணர்வுக்கு எதிராக மாற்றுச் சிந்தனையை விதைக்கும் அப்துல் ராஸிக் என் உற்ற தோழன். அவரது மனைவி ஜமீலா ராஸிக்கின் முக நூல் பதிவுகளை நான் படித்திருக்கிறேன். இவருக்கு நல்லா எழுத வருகிறதே என்று நினைப்பேன். ராஸிக் என்னிடம் ஜமீலா எழுதிய “அது ஒரு பிறைக்காலம்” என்ற புத்தகத்தை கொடுத்துப் படிக்கச் சொன்னவுடன் எனக்குப் பெரிய வியப்பேற்படவில்லை. ஜமீலா புத்தகம் போடத் தகுதியானவர்தான் என்பது எனது கருத்து. புத்தகத்தை முழுவதும் படித்தவுடன் எனக்கு ஒரே வியப்பு. இவ்வளவு விஷயங்களை அவர் இவ்வளவு நாள் உள்ளடக்கி வைத்திருக்கிறாரா என்று ஒன்று. இன்னொன்று இவ்வளவு யதார்த்தமாக ஹாஸ்யத்துடன் கூடிய நடையில் எழுதியிருப்பது. மூன்றாவது, தான் பார்த்ததை, அனுபவித்ததை உள்வாங்கி அதைப் புறநிலை யதார்த்தத்துடன் எழுதிய பாங்கு. எவை ஒன்றும் கைதேர்ந்த எழுத்தாளர்களுக்குக் கூட அமைவது கடினம். இவை எல்லாவற்றையும் விட எனக்குச் சாதாரண முஸ்லிம் மக்களது வாழ்க்கை முறைகள் பற்றி ஒன்றுமே தெரியாது.
அரசியல் ரீதியாகக் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும், வன்முறைகளையும் கடுமையாகச் சாடியவன் நான். ஆனால், அவர்களது கலாச்சார நடைமுறைகள் எதுவும் தெரியாமலே இருந்தது. ஏரல் ஊரின் முஸ்லிம் மக்களின் அவர்களது மதம் சார்ந்த அதே நேரத்தில் தமிழ் மண்ணுக்கே உரிய எல்லா கலவைகளோடும் வாழ்ந்த அவர்களது வாழ்க்கையை இவ்வளவு நேர்த்தியாக யாரும் வெளிக் கொணரமுடியாது. ரம்ஜான் நோன்புப் பழக்கவழக்கங்களில் ஆரம்பித்து இறுதிச் சடங்குகள் வரை முஸ்லிம் மக்களின் அந்யோன்யமான சமூகக் கட்டுக்கோப்புகளையும், அவர்களது கெட்டியான உறவுகளையும் தன்னுடைய குடும்பம், ஏரல் தெருக்களில் வாழ்ந்த மற்ற குடும்பங்கள் வாயிலாக மிகப்பிரமாதமாகக் கொண்டுவந்திருக்கிறார் ஜமீலா. ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வோர் அனுபவம்.
ஒவ்வோர் அனுபவமும் முஸ்லிம் சமூகத்தின் வெவ்வேறு போக்குகள். எப்படிச் சில பழக்கவழக்கங்கள் காலத்தின் மாற்றத்தால் மறைந்தன என்பதை மிகச் சுவையுடன் ஜமீலா விவரித்திருக்கிறார். ஒவ்வொரு கட்டுரையையும் நான் அனுபவித்துப் படித்தேன். இப்படி வாசகர் படிப்பதுதான் எழுத்தாளரின் வெற்றி. “இந்த நாற்பது வருடங்களில் நம் வாழ்க்கை முறையெல்லாம் எப்படியோ மாறிவிட்டது. ஒவ்வொன்றாய் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது நாம் அவற்றை அதிகமாக உணர்வதில்லை.ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப்பின் பார்க்கும் போது ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து மாறியது போலத் தோன்றுகிறது. “இம்மி அரிசி துணயானும் வைகலும் நம்மில் இயைவ கொடுத்துண்மின்.” “அண்டை வீட்டான் பசித்திருக்கும் போது வயிறார உண்பவன் இறை நம்பிக்கையாளன் அல்லன்” இப்படி எண்ணற்ற மேற்கோள்களை நாம் கூறமுடியும். அவை நம்மைப் பிரமிக்கவைக்கின்றன. இன்னும் இந்தப் புத்தகத்தைப் பற்றி எனக்கு நிறைய எழுத இருக்கிறது. அதற்கு நேரம் எடுக்கும் என்பதால் சுருக்கமாக முடித்துவிட்டேன்.
இந்த புத்தகம் ஒவ்வொரு சாதாரண இந்துவின் கையிலும் இருக்க வேண்டும். கடந்த பத்தாண்டுகளாக முஸ்லிம் மக்களின் மீது வெறுப்புணர்வைத் தொடர்ந்து விதைக்கும் இந்துத்துவா வெறியாளர்களுக்கு பதில் மாற்றுச் சிந்தனையை ஜமீலாவின் “அது ஒரு பிறைக்காலம்” தரும் என்பதில் ஐயமில்லை. அதைபோலவே, இந்த புத்தகம் ஒவ்வொரு முற்போக்குச் சிந்தனையுள்ளவர்களும் படிப்பது அவசியம். அரசியல் ரீதியாக இந்துத்துவாக் கருத்துகளுக்கு எதிராகப் போராடுவது என்பது தனி. அது மட்டுமே அவற்றை தனிமைப்படுத்தாது. ஒவ்வோர் இந்து, சாதாரண முஸ்லிம் மக்களின் இந்தியத் தன்மையை கொண்டு செல்ல வேண்டிய கடமை முற்போக்காளர்களுக்கு இருக்கிறது. ஜமீலா அவர்களின் அது ஒரு பிறைக் காலம் கண்டிப்பாக அதற்கு உதவும் என்று நம்புகிறேன்.
– கே.பாஸ்கர்
54. நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் மணிமேகலை பாகம் ஒன்று, பாகம் இரண்டு
அ.மார்க்ஸ் |
மணிமேகலையும் சிலம்பும் முழுக்க முழுக்கத் தமிழ்க்காப்பியங்கள். இரண்டிலும் பெண்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர். அதிலும் மணிமேகலையின் பங்கு ஆக அற்புதமான ஒன்று. இன்று உலகளவில் ஏற்றுகொள்ளப்பட்ட ஒன்றாக அது திகழ்கிறது. அது ஒரு பவுத்த காப்பியம். பௌத்தமும் அதை உலகிற்கு ஈந்த புத்தனும் இந்திய மண்ணில் பிறந்த வரலாற்றைச் சொல்வதாகத்தான் மணிமேகலை மகா காப்பியம் தமிழில் முன்வைக்கப் பட்டுள்ளது.
55. ‘மரித்தோர் பாடல்கள்’ காசாவில் கொல்லப்பட்டவர்களின் இறுதி வார்த்தைகள்
அ.சி.விஜிதரன் | சிந்தன் புக்ஸ் | விலை: 270 | பக்:
“பலஸ்தீனம் இன்றும் பற்றியெரியும் நெருப்பாகவே உள்ளது. காஸா பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. உலகத்தின் கண்களுக்கு அந்த நெருப்பு வெளிச்சமாகத் தெரியாதபடி மூடப்பட்டுள்ளது. இது வெறும் காஸா அல்லது பலஸ்தீனம் சந்திக்கும் பிரச்சனையல்ல. ஒடுக்கப்படும் மக்கள் சந்திக்கும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் இதுவே நிலை. உலகத்தில் ஆதிக்கச் சக்திகளால் ஒடுக்கப்படும் மக்களைப் பட்டியலிட வேண்டுமென்றால், உலகிலுள்ள எல்லா மக்களையும் பட்டியலில் சேர்க்க வேண்டும். ஒடுக்குமுறைக்கு எல்லைக் கோடுகள் இல்லை. அதன் இராட்சதக் கரங்கள் எல்லாவற்றையும் அழித்துவிட்டு உட்செல்கின்றன. அங்கு “ஆக்கிரமிப்பு இஸ்ரேல்-பலஸ்தீனப் பிரச்சனை” என்றால், இங்கு “பார்ப்பனிய இந்தியா-காஷ்மீர் பிரச்சனை”. இப்படி எடுத்துக்காட்டுகள் ஆயிரமாயிரம். நிலத்திற்கு நிலம் ஒடுக்குமுறையின் வடிவம் மாறலாம் ஆனால் ஒடுக்குமுறை ஒன்றே. ஆதிக்கச் சக்திகளின் கரங்கள் எல்லைகள் தாண்டுவதைக் காட்டிலும், ஒடுக்குமுறையைச் சந்திக்கும், அதற்கு எதிராகப் போராடும் மக்கள் அனைவரும் சாதி, மதம், மொழி, இனம், நாடு ஆகிய எல்லைகளைக் தாண்டி, தங்களது கைகளை கோர்த்துக் கொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்டோரின் ஒற்றுமையே விடுதலைக்கான பெரும் பாதை. அந்தப் பாதை உலகம் முழுவதும் செல்ல வேண்டும். இந்த அடிப்படையில் எழுத்தாளர் அ.சி. விஜிதரன் தொகுத்து மொழியாக்கம் செய்த ‘மரித்தோர் பாடல்கள்’ என்ற நூலை சிந்தன் புக்ஸ் காஸா மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக வெளியிடுகின்றது.
56. எங்கள் ஊரில் எங்கள் வாழ்க்கை பண்பாட்டு ஆளுமைகளின் கிராம நினைவுகள்
தொகுப்பாசிரியர் பக்தவத்சல பாரதி | அடையாளம் பதிப்பகம் | விலை: 960 | பக்: 888
எங்கள் ஊரில் எங்கள் வாழ்க்கை – தமிழ்க் கிராம வாழ்க்கையின் ஆழத்தையும் அழகியலையும் வெளிப்படுத்தும் ஒரு முதன்மையான ஆவணம்.இயற்கையின் உயிர்ப்பும் சமூக உறவுகளும் நிறைந்தது கிராம வாழ்க்கை. அதன் அமைதியான சூழலும் மரபுகளால் இணைந்த சமூக உணர்வும் நல்வாழ்வின் அர்த்தத்தை நமக்கு உணர்த்துகின்றன.தாயின் கருவறையில் பத்து மாதங்கள் இருந்த நம் முன்னோர்கள், மீதம் இருந்த வாழ்நாளை ஊர் எனும் வாழ்வறையில் வாழ்ந்தனர். தமிழ் நிலத்தில் ஐந்திணை ஊர்களும் கிராமங்களும் தமிழ்ப் பண்பாட்டு உயிரிகளாக இன்றும் இயங்குகின்றன.அவை தமிழ்ச் சமூகத்தில் உருவாக்கிய வாழ்வியல் மரபு தனித்துவமானது.மானிடவியலாளர் பக்தவத்சலபாரதி தொகுத்திருக்கும் இந்த நூலில் தமிழகம், ஈழம், அயலகம் வழியாகப் புகழ்பெற்ற 54 பண்பாட்டு ஆளுமைகள் தங்களுடைய கிராம நினைவுகளை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். அவற்றில் சமூக வாழ்க்கை, சாதிக்கட்டுமானம், உறவுமுறை, குடும்பம், வாழ்வாதாரம், சடங்கு, வழிபாடு, உணவு, கலைகள், போர், புலப்பெயர்வு எனத் தமிழர்களின் கிராமிய வாழ்வு அங்குலம் அங்குலமாக விரிவடைந்து நமக்குச் சிலிர்ப்பைத் தருகிறது. ஏன், நம்மை வியப்பிலும் ஆழ்த்துகிறது.இதன் மூலம் தமிழர் வாழ்வின் தொன்மை, தொடர்ச்சி, மாற்றம் ஆகியவற்றை நாம் தெரிந்துகொள்ள உதவுகிறது இந்த நூல்.
57. இன்னும் எத்தனை காலத்திற்கு நிலவைக் கூண்டிலேயே அடைத்து வைக்கமுடியும்? இந்திய அரசியல் கைதிகளின் குரல்கள்
சுசித்ரா விஜயன், பிரான்சஸ்கா ரெச்சியா | தமிழில்: இ. பா. சிந்தன் | அடையாளம் பதிப்பகம் | விலை: 960 | பக்: 888
விமர்சனக்குரலை முன்வைப்போரை எல்லாம் சிறையில் அடைத்துத்தள்ளும் இன்றைய இருண்டகால இந்தியாவின் உண்மை நிலையை வலுவாகப் பேசும் மிகமுக்கியமான ஆவணம் இந்நூல்.”
– அல்பா ஷா. எழுத்தாளர்
“இன்றைய இந்திய ஆட்சியாளர்களின் தன்மையைப் புரிந்துகொள்ள விரும்புபவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது. இதுவரை எங்கேயும் நாம் கேட்டிராத அரசியல் கைதிகளின் குரல்களை எல்லாம் கொண்டுவந்து சேர்த்து, அவர்களுடைய நிலையை மையப்படுத்தி இந்நூல் விரிவாகப் பேசுகிறது. அதன்மூலம், அரசை விமர்சிப்பவர்களைக் குற்றவாளிகளாக்கி இந்த மோடி அரசு, சிறைக்குள்ளும் எப்படியாக அடைத்துவைக்கிறது என்பதையும் இந்நூல் நமக்குத் தெளிவாக விளக்குகிறது.”
– கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலா
“இந்தியாவின் அன்பும் அறிவுமிக்க மிகச்சிறந்த மனிதர்கள் சிலரின் கனவுகளைப் பார்த்தே அஞ்சி, உயரமான சிறைச் சுவர்களுக்கு அப்பால் அவர்களை அடைத்துவைத்திருக்கிறது இந்திய அரசு. அதுகுறித்துத் தைரியமாகவும் இன்றைய தேவையாகவும் ஓர் ஆவணமாக எழுதப்பட்டு நம் கைகளில் சேர்க்கப்பட்டிருக்கிறது இந்நூல், ஆன்மாவை உலுக்கியெடுக்கும் அநீதிகள் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும்போதும், கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கும் இலட்சியவாதிகளின் வலிமிகுந்த பயணத்திற்கான சாட்சியாக இருக்கிறது இந்நூல்.”
– ஹர்ஷ் மந்தர், எழுத்தாளர், மனித உரிமை, அமைதிக்கான செயல்பாட்டாளர். l
