சங்க இலக்கியங்களை வாசிக்க விரும்புவோர் தொடக்க நூலாகக் குறுந்தொகையை எடுத்துக் கொள்ளலாம். அத்தகைய சிறப்புப் பெற்ற குறுந்தொகை எனும் பொன்னை எடுத்து இன்னும் அழகான கவிதையாகச் செதுக்கி அழகு அணிகலனாக சமூகத்தின் முன் படைத்துள்ளார் தமிழ்க்காரி. அவர் எழுதியுள்ள பூக்கள் பூக்கும் தருணம் எனும் நூல் சங்க இலக்கியங்களில் குறுந்தொகையின் அகச் சித்திரமாகும்.
அக வாழ்வின் பின்னல்…
தமிழ்க்காரியின் எளிய நடை, நுவல் பொருளுக்கு நுட்பமும், தட்பமும் சேர்ப்பதாக அமைகிறது. குறுந்தொகைப் பாடல்கள் ஆண் உரையாசிரியர்களை மட்டுமே இதுவரை கண்ட நிலையில் தமிழ்க்காரியால் புத்தம் புதுப் பரிணாமம் பெறுகிறது என்கிற தமிழச்சி தங்கபாண்டியன் முன்னுரை உவப்பானதாகும். பொருள் சேர்க்கும் வாழ்வினைப் புறவாழ்வாகவும், காதல் வாழ்வினை அகவாழ்வாகவும் எனச் சித்தரிக்கிற மரபு நம்முடையது.
அகத்திணை பற்றி எழுதப்பட்ட குறுந் தொகையின் 30 பாடல்களைச் சமகாலக் கவிதை மொழியில் எழுதியுள்ளார். சங்க இலக்கியங்களுக்குப் பல உரைகள் எழுதப்பட்டுள்ளன. இன்னும் பல தொடர்ந்து எழுதப்பட்டுக் கொண்டே இருக்கிற அரிய சுரங்கமாகவும் திகழ்ந்து வருகிறது. ஆனால், இந்நூல் சங்க இலக்கியத்தின் அகச் சித்திரத்தை ஆழமாக உள் வாங்குவதற்கு எளிய கவிதைச் சித்திரமாக இருப்பது சிறப்புக்குரியதாகும்.
இன்னும் நூலில் பாடலுக்குரிய சொற்களுக்கான பொருள் விளக்கமும் பாடல்களின் விளக்கமும் இதைச் சமகாலக் கவிதையாக முன்வைப்பதுடன் மொழி, பண்பாடு, வாழ்வியல், சூழலியல், உவமைகள், உவமானங்கள், உணர்வுகள் என இக்கவிதைகளில் உள்ளார்ந்த அம்சங்களை பிரதிபலிக்கிறது.இசை, இயற்கை, வாழ்ந்த சக உயிரினங்கள் என அக வாழ்வின் வாழ்நிலை என்பதின் ஒவ்வொரு கண்ணியையும் புற உலகுடன் இணைத்துப் பின்னப்பட்டுள்ளது.
அழகும் உணர்வும்…
“வானத்து எழும் சுவர் நல்இசை வீழப் பெய்த புலத்துப் பூத்த முல்லை” எனும் குறுந்தொகைப் பாடலை எளிய கவிதையில் “மழை அணைத்த நிலமங்கை பெற்ற மலராத மலராகப் பூத்திடக் காத்து நிற்கும் பச்சை நிற அரும்பு முல்லைச் செடியில்…’’ எனும் பதடி வைகலாரின் பாடல்களில் கவித்துவ அழகியல் வெளிப்படுகிறது.
எந்த ஓர் உணர்ச்சியும் எல்லாப் பாலுக்கும் உரியதானதாகும். அன்பும், அறனும், ஏன், வெட்கம் உள்ளிட்ட அனைத்து உணர்வு நிலைகளும் ஆண், பெண் என அனைவருக்கும் பொதுவானவையே ஆகும். அத்தகைய உணர்வைப் பிரதிபலிக்கும் ஒரு பாடல். அக வாழ்வின் தொல் கபிலர் பாடிய காதலோடு மடல் ஏறுதல் எனும் சங்கச் செய்தியையும் எடுத்துரைக்கின்றது. தான் விரும்பும் பெண்ணுடன் இணைவதற்குத் தடை வந்தால் (பெறுகதில்) மடல் ஏறி அடைவேன் என்கிறார். அதில் அப்பாடலின் கடைசி வரிகளில் “அந்தப் பொழுதில் அந்த நொடியில் வெட்கப்படுவேன் கொஞ்சமாக நான்” என்று நிறைவுறும்.
இன்னும்கூட ஓர் உதாரணம். உன் கண் மாலையும் புலம்பும் இன்றுபோல் தோழி அவர் சென்ற நாட்டே என்கிற மாமலாடன் எழுதிய பாடலில் பிரிவின் வலி இருவருக்கும் ஒன்றானால் என்னை வந்து சேர அவனுக்குத் தோன்றும் என்கிற காதல் உணர்வுகள் அனைவருக்கும் பொதுவானவை. இதில் பாகுபாடுகள் இல்லை என்பதை எடுத்தியம்பும் இலக்கியமாகக் குறுந்தொகை இருக்கிறது. இதில் குறிப்பிடும் உவமைகள் சாலச் சிறந்தவை. இருவரும் உணர்வுபூர்வமாகப் பிணைந்து ஒருவராவதை அழகாக விளம்புகிறது.
காதலும் சாதியும்…
பெண் தன் துணையை தேர்ந்தெடுக்கும் உரிமையை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்க காலத்தில் பெண்கள் கொண்டிருந்தமையை நோக்க முடிகிறது. தனக்கு இணையானவனைத் தேர்வு செய்யும் ஆழ்ந்த அறிவும், உறுதியும் பெண் அன்றே கொண்டிருந்தாள். ஏன்? ஆதிமனிதன் அறிவுத் தெளிவுற்ற காலத்திலிருந்தே மனிதனோடு காதல் பயணிக்கத் தொடங்கியது. அதே சமயம், இருமனம் இணைந்தாலும் திருமணம் நிகழ்வதில்லை. பெரும் முயற்சி, எதிர்ப்புகள், போராட்டங்கள் என அனைத்தும் கடந்த பின்புதான் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம் என்ற நிலையும் இருந்துள்ளது.அந்நிலையில் காதலனுடன் தன் மகள் சென்றதை அறிந்த தாய் கூறும் வார்த்தைகள் எத்தனை நெகிழ்வானவை. எனை மறந்து சென்றாலும், அவள் சென்ற பாலை வழியில் வெயில் வீசாது இருக்கட்டும். மரங்கள் நிழல் நிலைக்கட்டும்.குளிர்ந்த நீர் வான் மழையாகக் கொட்டட்டும் என வாழ்த்துகிறாள் என்கிறது கயமனார் எழுதிய குறுந்தொகை. ஆனால், காதலுக்குக் காலம் காலமாய் ஏற்றத்தாழ்வுகள், சாதி, மதம், இனம் ஆகியவை எதிர்வினையாகவே இருந்து வருகின்றன. இதுவே, அவர்களுக்குப் போர்க் குணத்தை வழங்கியுள்ளது.
இன்றைய சூழலில், சாதியச் சமூகம் காதலர்களைக் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்கிறது. பேரன்புடன் பெற்ற குழந்தைகளைச் சாதியின் பேரால் கொல்லும் கொடூரம் இங்கே தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே வருகிறது. இதனை, கொலையில் உதித்த தெய்வங்கள் எனும் தமிழ்ச் சமூகத்தின் ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியனின் அவர்களின் எழுத்து ஆவணங்கள் முக்கியமானவை. இன்றைய தமிழ்ச் சமூகத்தில் ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து நிகழ்வது வெட்கித் தலைகுனியக் கூடிய செயலாகும். காதல் வாழ்வினை அகத்திணை மரபாகக் கொண்டாடிய தமிழ்ச் சமூகத்தில் இத்தகைய அவமானகரமான நிகழ்வுகள் மனித சிந்தனையில் ஏற்றப்பட்ட வேற்றுமையின் பாற்பட்டவையாகும். இதனைப் பூக்கள் பூக்கும் தருணம் முன் வைக்கும் குறுந்தொகைப் பாடல்களின் மூலமாக அறிய முடிகிறது.
நிலமும் உயிரினங்களும்…
சங்க காலத்து மனிதர்கள், நிலங்களை அவற்றின் தன்மைக்கேற்ப வகை பிரித்து, அதனதன் குணங்களை அறிந்துகொண்டு, தனது வாழ்நிலையை அமைத்துக் கொண்டான். பாலை நிலத்து வழியே செல்லும் யானை தன் கொம்புகளால் மரங்கள், பாறைகள் ஆகியவற்றைக் குத்தி விளையாடும் இயல்பு உண்டு. இதனால் கடினமான பாலை நிலத்தின் பாறைகளால் யானையின் கொம்புகள் முறிந்து விடும் என்கிறார் வெள்ளிவீதியார். இப்படி யானைகளின் வழித்தடத்தையும், அதன் உயிரியல் தன்மையையும் சுட்டிக்காட்டுகிறது சங்க இலக்கியம். இன்று யானைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. சூழலியல் நெருக்கடி யானையையும் விட்டு வைக்கவில்லை. ஆனால், சமகாலத்தில் யானையின் வழித்தடத்தை மறித்து ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள் போடுகின்ற ஆட்டமானது இயற்கைக்கு மட்டுமல்ல, மனித குலத்திற்கே பேரழிவைத் தரும்.
காதலைப் பற்றி மட்டுமல்ல, அக வாழ்வின் நுட்பத்தையும், புற வாழ்வின் சூழலையும் ஆழமாக உய்த்து உணர தமிழ்க்காரியின் பூக்கள் பூக்கும் தருணம் வாசிக்க வேண்டிய நூலாகும். இந்நூல் சங்க காலத்தின் அகவாழ்வு பற்றிய சமூகவியல் கருத்துகளின் களஞ்சியமாகத் திகழ்கிறது. l