நேர்காணல்: டேவிடே தாகியா, சிறார் எழுத்தாளர், இத்தாலி | சந்திப்பு: ஆயிஷா இரா.நடராசன்
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற உலகப் புத்தகக் காட்சியில் உலகச் சிறப்பு விருந்தினர் அந்தஸ்து பலோக்னா சிறார் சர்வதேசப் புத்தக கண்காட்சி என்னும் இத்தாலிய அமைப்புக்கு வழங்கப்பட்டது. இந்த அமைப்பின் தீவிரப் பங்களிப்பாளர் பலோக்னா ஃபயர் என்கிற வெளியீட்டுக் குழுமத்தின் திட்ட இயக்குனர், இத்தாலிய மொழிச் சிறார் எழுத்தாளர். டேவிடே தாகியா என்கிற உலகளாவிய ஆளுமையைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரோடான நமது உரையாடல்-சந்திப்பு ஆயிஷா இரா நடராசன். சந்திப்பில் உதவி க. நாகராஜன்.
பலோக்னா என்னும் இத்தாலிய சர்வதேச சிறார் புத்தகத் திருவிழாவைப் பற்றிச் சொல்ல முடியுமா?
ஒவ்வோர் ஆண்டும் நான்கு நாட்கள் எங்களுடைய சர்வதேச சிறார் புத்தகத் திருவிழாவான பலோக்னா சில்ரன்ஸ் புக் ஃபேர்..BCBF நடந்து வருகிறது. வரும் மார்ச் 31 – ஏப்ரல் 3ஆம் தேதி வரையில் இந்த ஆண்டு நடைபெறும். சென்ற ஆண்டு நடந்த நிகழ்வில் பிரம்மாண்டமான இந்த வளாகத்தில் 1523 அரங்கங்கள் அமைக்கப்பட்டு இருந்தன உலகெங்கிலும் இருந்து 30000 பேர் வருகை புரிந்தனர். நாங்கள் சென்ற ஆண்டு 385 முக்கிய நிகழ்வுகளை அங்கு சிறார் இலக்கியம் சார்ந்து நிகழ்த்தி இருக்கிறோம்.
பலோக்னா குழந்தைகள் புத்தகக் கண்காட்சி என்பதுதான் உலகிலேயே குழந்தைகளின் புத்தகங்களுக்கான முன்னணி்த் தொழில் முறை கண்காட்சி ஆகும் இது தொடங்கப்பட்ட ஆண்டு 1963. எப்படிப்பட்ட நிலையிலும் இந்த மார்ச் 31 – ஏப்ரல் 3 என்கிற தேதியை நாங்கள் மாற்றிக் கொள்வதில்லை. இத்தனை ஆண்டுகளில் ஒரு முறைகூட அது மாறியதில்லை. கோவிட் நோய்த் தொற்றுக்் காலத்தில்கூட இதே நாட்களில், ஆனால், நாங்கள் ஆன்லைனில் அந்தப் புத்தகக் காட்சியை நடத்தினோம்.
பலோக்னா ராகாசி விருதுகள், ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் விருதுகள் அங்கேதானே அறிவிக்கப்படுகின்றன?
ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் விருது உலக அளவில் பிரசித்தி பெற்ற சிறார் இலக்கிய விருதாகும் 1956-ஆம் ஆண்டு சர்வதேச சிறார் புத்தகத் திருவிழா தொடங்குவதற்கு முன்பேலிருந்தே நாங்கள் அதைத் தொடர்ந்து வழங்கி வருகின்றோம். சிறார் இலக்கியத்துக்கான நோபல் பரிசு என்று அது அழைக்கப்படுகிறது. இளம் வாசிப்பாளர்களுக்கான சர்வதேச அமைப்பு என்கிற ஓர் அமைப்பு இந்த விருதைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. உலகிற்கு தேவதைக் கதைகளை வழங்கிய ஒரு மாபெரும் எழுத்தாளருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அவரது நியாபக இணைப்புக் கோரும் விதமாகவும் இந்த விருதுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இரண்டாம் உலக யுத்தத்தின் கொடுமையான சூழலில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு வாசிப்பு உலகத்தை, புலத்தை அறிமுகப்படுத்தும் நோக்கத்தோடு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டு இன்று வரையில் பாகுபாடு அற்ற உலகத்தின் குழந்தைகள் சமூகத்தை உருவாக்குவது என்ற நோக்கத்திற்காக எழுதப்படும் சிறார் இலக்கியத்திற்கு இந்த லிட்டில் நோபல் பிரைஸ் வழங்கப்படுகிறது. நாங்கள் நடத்தும் புத்தகப் பறவை அதாவது புக் பேர்ட் ஏனும் இதழின் சார்பாக இந்த விருதைத் தற்போது வழங்கி வருகிறோம். டென்மார்க் நாட்டின் மகாராணி மார்கரெட், 2022 வரை இந்த விருதின் முக்கியமான பங்களிப்பாளராக இருந்தார். அந்த ஆண்டில் இந்த விருதை நாங்கள் இரண்டாகப் பிரித்து விட்டோம். எழுத்தாளர்கள் மட்டுமின்றி, குழந்தைகள் புத்தகங்களுக்கான ஓவியம் தீட்டுபவர்களுக்கும் விருதுகள் இப்போது அறிவிக்கப்படுகின்றன. ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் விருது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
நாங்கள் வழங்கும் அடுத்த மிக முக்கிய விருது தான் பலோக்னா ராகாசி விருதுகள். நான்கு பிரிவுகளில் இந்த விருதுகள் ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படுகின்றன. ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் விருதுக்கு வழங்கப்படும் அதே தொகை இந்த விருதுக்கும் பொருந்தும். புனை கதை, புனைகதை அல்லாத கட்டுரைகள்; மேற்கத்திய நாடு அல்லாத மூன்றாம் உலக நாட்டு சிறார் படைப்புகள்; ஒரு படைப்பாளியின் முதல் புத்தகம் ஆகிய நான்கு தனித்தனித் துறைகளின் கீழே இந்த விருது வழங்கப்படுகிறது. இதைத் தவிர நாங்கள் ஸ்வீடிஷ் குழந்தைகள் எழுத்தாளர் ஆஸ்டிரிகிறேன் அவர்களைக் கௌரவிப்பதற்காக ஸ்வீடன் அரசாங்கத்தால் நிறுவப்பட்ட சிறார் இலக்கிய விருதையும் வழங்குகின்ற பொறுப்பை ஏற்று இருக்கிறோம். இந்த விருது சிறார் இலக்கியத்திலேயே வழங்கப்படும் உயர்ந்தபட்சப் பண முடிப்பைக் கொண்டது. 10 மில்லியன் ஸ்வீடிஷ் பணம் வழங்கப்படுகிறது.
நீங்கள் நடத்தும் இந்த சிறார் சர்வதேசப் புத்தகக் காட்சியில் எத்தனை நாடுகள் பங்கேற்கின்றன. அதன் சிறப்புகள் என்ன?
நாங்கள் நடத்தும் சர்வதேசக் குழந்தைகளுக்கான புத்தகக் காட்சி என்பது குழந்தைகளுக்கானது அல்ல. குழந்தைகளுக்காக எழுதுகின்ற எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள், ஓவியர்களுக்கான புத்தகக் காட்சி ஆகும். இதில் சென்ற ஆண்டு மட்டும் 70 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். நாங்கள் எழுத்தாளர்களையும் ஓவியர்களையும் ஒருவருடன் ஒருவர் உறவாட, உரையாட வைத்து அங்கேயே புதிய நூல்கள் உருவாவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கிறோம். எங்கள் புத்தகக் காட்சியின் பிரம்மாண்டம் என்பது உலகத்தின் 70 நாடுகளின் ஓவியர்கள் ஒன்றிணைந்து தங்களின் சிறந்த படைப்பை அங்கேயே காட்சிப்படுத்தி வரைந்து காட்டும் ஓவியா சுவர் என்கிற திட்டத்தின்மூலம் உலகிற்கு முன்வைக்கப்படுகிறது.
உங்களுடைய அமைப்பு சீனத்தில் நடைபெறும் ஷாங்காய் குழந்தைகள் புத்தகத் திருவிழாவையும் முன்னின்று நடத்துகிறது அல்லவா..? அதுகுறித்துக் கூறுங்கள்.
சீனத்தில் ஷாங்காய் குழந்தைகளுக்கான புத்தகத் திருவிழா உலகத்தில் மிகப் பெரியது ஆகும். ஷாங்காய் சர்வதேச சிறார் புத்தகக் கண்காட்சி என்பது ஷாங்காய் நகரின் வர்ல்ட் எக்ஸ்போ எக்ஸிபிஷன் அண்ட் கன்வென்ஷன் சென்டர் எனும் பிரம்மாண்டக் கட்டிடத்தில் நடைபெறும். கடந்த 11 ஆண்டுகளாக இந்தக் காட்சியை நாங்கள் முன் நின்று நடத்தி வருகின்றோம். உலக அளவிலான சிறார் இலக்கிய ஆய்வாளர்களையும் உள்ளடக்கியதாக அது நடைபெறுகிறது. ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தில் 15,16,17,18 ஆகிய நான்கு நாட்கள் இதற்காக ஒதுக்கப்படுகின்றன. சீனாவின் மிகப்பெரிய குழந்தைகள் இலக்கிய விருதான சென் போச்சி கலாச்சார விருது இந்தப் புத்தகத் திருவிழாவில்தான் வழங்கப்படுகிறது இதைத் தவிர சிறார் இலக்கியப் பூங்கா விருது என்கிற ஒரு விருதையும் வழங்கி வருகின்றோம் இவை அனைத்துமே சர்வதேசக் குழந்தைகள் விருதுகள் ஆகும். ஷாங்காய் புத்தகத் திருவிழாவின் சிறப்பம்சம் கடைசி இரண்டு நாட்கள் அங்கே நாங்கள் குழந்தைகளையும் அனுமதிக்கிறோம் என்பதுதான். லட்சக்கணக்கான குழந்தைகள் தங்கள் வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். தங்களுடைய எழுத்தாளர்களை, ஓவியர்களை நேரடியாக அவர்கள் சந்திக்கிறார்கள்
சீனத்தில் சிறார் புத்தக வாசிப்பு எப்படி இருக்கிறது?
வெளிப்படையாகச் சொல்வதாக இருந்தால் உலக சிறார் இலக்கிய வாசிப்பின் சாம்பியன் இன்று சீனாதான். உலகிலேயே மிக அதிகமான சிறார் இலக்கிய நூல்கள் வெளியிடப்படுவது சீனாவின் பின்- என் மற்றும் மாண்டரின் என்கிற மொழியில்தான். அங்கே கண்டிப்பாகப் பெற்றோர்கள் ஒரு வயது, இரண்டு வயதுக் குழந்தைகளோடு உட்கார்ந்து ஆரம்பம் முதலே அச்சடிக்கப்பட்ட புத்தகங்களைக் கையில் வைத்துக் கொண்டு சத்தமாக வாசித்துக் காட்டுகிறார்கள். பிறகு குழந்தைகள் தாமே வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்கின்றன. ஏறத்தாழ ஒவ்வொரு சாலை முனையிலும் நூலகங்கள் அமைத்துத் தரப்பட்டுள்ளன. இதைத் தவிர வீடுகள்தோறும் சீனர்கள் எதை வைத்து இருக்கிறார்களோ இல்லையோ, நூற்றுக்கணக்கான புத்தகங்களை வைத்து இருக்கிறார்கள்.
இரண்டு மொழிகளை அவர்கள் தற்போது முக்கியத்துவத்தோடு கருதி ஏற்றுக்கொண்டுள்ளார்கள். தங்கள் நாட்டின் சீன மொழியையும் சர்வதேச அளவில் வர்த்தக மொழியாகத் திகழும் ஆங்கிலத்தையும். இந்த இரண்டு மொழிகளில் புத்தகங்கள் ஏராளமாக அச்சிடப்படுகின்றன. காமிக் புத்தகங்கள், கிராபிக் நாவல்கள், அறிவியல் புனைகதைகள், வரலாற்று நாவல்கள், உலக அளவிலான பிரம்மாண்ட மனிதர்கள் பற்றிய புத்தகங்கள் என்று இத்தாலிய மொழியில் இருக்கிறதோ இல்லையோ, நாங்கள், சீன மொழியிலும் புத்தகத்தைப் பதிப்பித்து விற்பனை செய்தால் மட்டுமே சிறார் இலக்கிய வர்த்தகத்தில் நிலைக்க முடியும் என்கிற கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம்.
அவர்கள் பள்ளியினுடைய கல்வி முறையிலும் பாடக் கற்பிப்பு முறையிலும் ஓர் ஆண்டிற்குக் குறைந்தபட்சம் இத்தனை புத்தகங்கள் படித்து இருக்க வேண்டும் என்பதை ஒரு பகுதியாக இணைக்கிறார்கள். பாடப் புத்தகத்தைப் படித்துத் தேர்வுகளில் நீங்கள் தேர்ச்சி பெற்றாலும் நீங்கள் இன்னும் உங்களுக்குத் தரப்பட்ட தலைப்புகளின் கீழ் புத்தகங்களை வாசித்து முடிக்கவில்லை என்றால் அதை முடிக்காமல் உங்களுக்குத் தேர்ச்சி வழங்கப்படுவதில்லை. அந்த அளவுக்குப் பள்ளிக் கூடங்களுக்குள் வாசிப்பை அவர்கள் கட்டாயமாக ஓர் அங்கமாக்கி இருக்கிறார்கள்.
சீனர்கள் அச்சிட்ட புத்தகங்களைத்தான் அதிகம் விரும்புகிறார்கள். அங்கேயே தயாரிக்கப்படும் ஏராளமான மின்னணு சாதனங்கள் உலகெங்கும் விற்கப்பட்டாலும் தங்கள் நாட்டில் பிரமாண்ட நூலகங்களைத்தான் அவர்கள் தேடிச் செல்கிறார்கள். இவை அனைத்தையுமே நீங்கள் ஷாங்காய் புத்தகக் கண்காட்சிக்கு வந்தால் கண்டிப்பாக உணர்ந்து ஆச்சரியப்பட முடியும்.
எங்கள் சென்னை சர்வதேசப் புத்தகக் காட்சி பற்றி உங்கள் கருத்து என்ன?
உலகின் மிகத் தொன்மையான மொழியான தமிழ் மொழி சார்ந்த ஒரு பிடிவாதமான புத்தக உலகக் காட்சியான இது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது என்பது ஆச்சரியம் தருகிறது. நாங்கள் மிகவும் விரும்பி இங்கு வந்து இருக்கிறோம். 64 நாடுகள் என்பது பெரிய சாதனை. எங்கள் புத்தகத் திருவிழாவுக்கு இங்கிருந்து பிரதிநிதிகள் வந்திருந்ததையும் நான் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். புதிய புத்தகம் பேசுகிறது இதழின் வாசகர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள். l