ஒரு சொல்லானது அது வெளிப்படுகின்ற இடம் பொருள் ஏவலுக்கு ஏற்ப மதிப்பினைப் பெறுகிறது. ஆசிரியர் கலாநிதி ஜீவகுமாரன் அவர்களது நூலான, “உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல” என்னும் தலைப்பானது கலீல் ஜிப்ரானது கவிதையில் இடம்பெற்றிருக்கும் இதே வரியை அடிப்படையாகக் கொண்டது. அவரது காலத்தில் இந்தக் கருத்து மக்களிடம் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது தெரியாது. இன்றைய மக்களும் இதனை எப்படி உள்வாங்கிக்கொள்ளப் போகிறோம் என்பதும் கேள்விக்குறிதான்.
தான் பெற்ற பிள்ளைகள் வளர்ந்த பிறகு பெற்றோர் மீது அன்பு செலுத்துவதில்லை என்கிற நிலையில் இந்தத் தலைப்பு காயத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அவர்கள் வளரும் நிலையில் இதனை நாம் சரியாகப் புரிந்து கொண்டு கையாண்டால், குழந்தைகள் சுதந்திரமாக வளர்ந்து நல்ல குடிமக்களாகத் திகழ்வார்கள் என்பது திண்ணம். இலங்கையைச் சேர்ந்த இந்த நூலின் ஆசிரியர் கிட்டத்தட்ட முப்பத்து எட்டு ஆண்டுகளாக டென்மார்க்கில் வாழ்ந்து வருகிறார். குழந்தைகளைப் பராமரிப்பதற்கான கல்வியை மூன்று ஆண்டுகள் பயின்று, அதே துறையில் பணியாற்றி வருபவர். நாட்டுக்கு நாடு சட்ட திட்டங்கள் மாறும்பொழுது, குழந்தைகளைப் பாதுகாக்கும் பொருட்டு டென்மார்க்கில் உள்ள சட்டத்தை வேறு நாட்டுக் கலாச்சாரத்தைக் கொண்ட மக்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைக் குறித்த தகவல்கள் இடம் பெற்றிருப்பதோடு, குழந்தைகளைச் சுதந்திரமானவர்களாகவும், அதே நேரத்தில் ஒழுக்கமானவர்களாகவும் எப்படி வளர்ப்பது என்பதைச் சார்ந்த கருத்துகள் அடங்கியதாக இந்தப் புத்தகம் இருக்கிறது. இந்த நூலில் உள்ள பன்னிரெண்டு அத்தியாயங்களும் ஒவ்வொரு கருவை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றன. ஆங்காங்கே மகாபாரதக் கதைகளை அடிப்படை வடிவமாகக்கொண்டு, தான் புனைந்த ஒரு சில கதைகளையும் ஆசிரியர் கட்டுரைகளில் இணைத்திருக்கிறார். நூல் முழுவதும் விரவியிருக்கும் இலங்கைத் தமிழின் இனிமை, கூடுதல் அணி சேர்க்கிறது. போகிற போக்கில் ஆங்காங்கே இடம்பெற்றிருக்கும் ஆசிரியரது பொன்மொழிகள் மகுடத்தைச் சூடிக் கொள்கின்றன. பெற்றோரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் யாவரும், வரலாற்றில் எவ்வாறு இடம் பெற்றிருக்கிறார்கள் என்பதையும், அன்பாக அரவணைக்கப்பட்டவர்கள் எதிர்காலத்தில் வியக்கும்படியாக எப்படி வாழ்கிறார்கள் என்பதையும், நிகழ்காலக் கதைகளிலிருந்தும், பழங்காலக் காவியங்களிலிருந்தும் எடுத்துக்காட்டோடு டாக்டர் கலாநிதி இயம்பியிருக்கிறார். அவர் வாழும் நாட்டின் கலாச்சாரத்திற்கு ஏற்ப, குழந்தை முதல் பருவ வயதை அடையும் நிலை வரை தன் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான இலக்கணத்தைப் பல்வேறு நூல்களிலிருந்து அறிந்த ஞானமாகவும், தன்னுடைய அனுபவமாகவும் இந்தப் புத்தகத்தில் ஆசிரியர் இடம் பெறச் செய்திருக்கிறார். நூலின் அட்டைப்படமாக விடியல் பொழுதில் தனது நண்பனை அமர்த்திக்கொண்டு குரங்குப் பெடலில் மிதிவண்டியை ஓட்டும் சிறுவனது ஓவியம் பொருத்தமாக அமைந்திருக்கிறது.
அன்னியரது ஆட்சியில் நமது நாடு இருந்தபொழுது, மக்கள் ஜனநாயகமாக வாழ வேண்டும் என்பதற்காகவே சுதந்திரத்தை நோக்கிப் போராடியிருக்கிறோம். இன்றைய குடும்பங்களில் உள்ள குழந்தைகளிடம் நாம் ஜனநாயகமாக நடந்து கொள்கிறோமா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. உலக நாடுகள் யாவற்றிற்கும் பொருந்தும்படியாக, பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்கின்ற முறைகளை மூன்று பிரிவுகளாக ஆசிரியர் பிரித்திருக்கிறார். அவை முறையே சர்வாதிகாரமான வளர்ப்பு முறை, ஜனநாயக வளர்ப்பு முறை, கூடுதலான சுதந்திரத்தோடு வளர்க்கின்ற முறை என்பதாக இருக்கிறது. இதனை வெவ்வேறு தலைப்புகளில் விளக்கமளித்திருந்தாலும், தலைப்பே பிள்ளைகளின் வளர்ப்பு குறித்து விவரமாகப் பேசி விடுகிறது. ஜனநாயக முறைப்படி உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து, பேச்சுக்குச் செவிமடுப்பவர்களது பிள்ளைகளே தன்னம்பிக்கையுடன் வளர்ந்து சக மனிதர்கள் மீது மதிப்பும் நம்பிக்கையும் உள்ள மனிதர்களாக வாழ்வார்கள் என்று ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். மற்ற இரு முறைகளும் இதில் அடிபட்டுப் போகின்றன.
அதே சமயத்தில் குழந்தைகளுக்குச் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறோம் என்றால் அது பெரியவர்களுக்கும் உரியது என்பதை மனதில் கொள்வதற்கும், பெற்றவர்களே பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும் என்பதை முன்னிலைப்படுத்தியும், தீங்கு என்று கருதுகின்ற ஒன்றைப் பிள்ளைகள் விரும்பாத வண்ணம் தடை விதிக்கிறோமென்றால் அதில் உறுதியாக நிற்பது அவசியம் என்பதையும், தவறு செய்யாத குழந்தையைப் பெற்றோர்கள் தண்டித்துவிட்டால் அவர்களிடம் மன்னிப்புக் கேட்கத் தயங்கக் கூடாது என்பது போன்ற கருத்துகளையும், பிள்ளைகளுக்கும் மன்னிப்புக் கேட்கும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்பதையும் ஜனநாயகத்துடன் கூடிய கட்டுப்பாடுகளாகக் கடைப்பிடிக்க வேண்டியவற்றை ஆசிரியர் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். அழுது பிடிவாதம் செய்தால் கிடைத்து விடும் என்கிற நம்பிக்கையையும் குழந்தைகளுக்கு விதைக்கக் கூடாது என்பதும், கடுமையாகத் திட்டி அவர்களைத் திருத்த வேண்டுமென்று எண்ணுவதும் நன்மை பயக்காது என்பதாக, கலாநிதி அவர்களது அனுபவமும் கற்ற கல்வியும் அறிவிக்கிறது. குழந்தைகளைத் திசை மாற்றுவதற்காக ஏதோ ஒரு பொருளைக் கையில் கொடுத்துக் கவனத்தைத் திருப்புவது கூட லஞ்சம் என்பதாக இந்த நூலின் ஆசிரியர் குறிப்பிடுகிறார். இந்தியப் பெற்றோர்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் இடையேயுள்ள அன்பு அளவிட முடியாதது. இங்கு சிறுபான்மையினராகப் பெற்றோரால் துன்பப்படுகின்ற பிள்ளைகளை அரசாங்கம் வீடு புகுந்து கண்காணிப்பதில்லை. பள்ளி ஆசிரியர்களுக்கும் பிள்ளைகள் மீது வீட்டில் நடக்கும் வன்முறைகளுக்கும் எந்தவித சம்பந்தமும் சட்டப்படி வகுக்கப்படவில்லை. இந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெற்றோராக இருந்தாலும், மது அருந்துபவர்களாக இருந்தாலும், பரம்பரைச் சொத்தின் மீது பேராசை கொண்டு இரண்டாம் திருமணத்தின் மூலம் பெற்றோராக நியமிக்கப்பட்டவராக இருந்தாலும் அவர்கள் மூலமாகப் பிள்ளைகள் துன்பப்பட்டால், அவர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்கு ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கக்கூடியதான கடுமையான சட்டங்கள் இந்தியத் திருநாட்டில் இல்லை.
பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பதற்கு உரிமையில்லை என்கிற சட்டமும் சமீபத்திலேயே நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் அயலகங்களில் பெற்றோர்களுக்கே அத்தகைய உரிமையில்லை என்பதைப் பல ஆண்டுகளுக்கு முன்பே அமல்படுத்தி விட்டார்கள். இந்த நூலின் ஆசிரியர் வாழும் நாடான டென்மார்க்கில் அத்தகைய சட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் குறித்து விளக்கமளித்திருக்கிறார். அந்நாட்டில் பெற்றோர்களின் அரவணைப்பில்லாத பிள்ளைகளை அரசாங்கம் தத்தெடுத்துக் கொள்ளும் நிலையில், பேரப்பிள்ளைகளைக் காண முடியாத சோகம் வயதானவர்களுக்குத் தொற்றிக் கொள்கிறது. இந்த நூலில் இடம் பெற்றிருப்பவையாக, “நாம் எவ்வாறு வளர்க்கப்பட்டோமோ அவ்வாறே நமது குழந்தைகளையும் வளர்க்க வேண்டுமென்று நினைக்கிறோம். நமது நிராசைகளை அவர்களின் மீது திணிக்க விரும்புகிறோம். நமது குழந்தைகளை நாமாகவே எண்ணாமல் நாம் வேறு, அவர்கள் வேறு என்பதைப் பிரித்தறிய வேண்டும். பிள்ளைகள் தனித்தன்மைமிக்கவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பெற்றோர்களது சாதகமற்ற நடவடிக்கைகள், அவர்கள் வாயிலிருந்து வருகின்ற கடுமையான சொற்கள் அணுகுண்டைப்போலப் பிள்ளைகளைத் தாக்குகின்றன. ஹிட்லரை அவரது பெற்றோர் வளர்த்த விதமே கொடூரமான ஆட்சியாளராக அவரை உருவாக்கியது. கோபமான தந்தைக்கும் அழுகை மிகுந்த அன்னைக்கும் நடுவே வளர்கின்ற பிள்ளைகள் உணர்வுரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுப் பாதுகாப்பற்ற தன்மையை உணர்வார்கள். அவர்களது அன்பும் அரவணைப்புமே பிள்ளைகளை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்கிறது. போட்டியும் பொறாமையும் மிகுந்திருக்கும் உலகில் பெற்றோர்களது ஆலோசனையும் ஆறுதலும் பிள்ளைகளுக்குத் தேவை” என்பன போன்ற கருத்துகள் மிகவும் பயனுள்ளவையாக அமைந்து மாற்றங்களை ஏற்படுத்துபவையாக உள்ளன.
“பிள்ளைகளை அவர்களது நட்பு வட்டத்திலிருந்து பிரித்துத் தனிமைப்படுத்த நினைப்பதும் அவர்களைத் தன்னம்பிக்கை அற்றவர்களாக வளரச் செய்து விடும். குழந்தைகளுக்குக் கொடுக்கின்ற ஊக்கமும் அங்கீகாரமும் கிரியாவூக்கிகளாகச் செயல்பட்டு, அவர்களது திறமைகளை வளரச் செய்து முன்னேற்றப் பாதையை நோக்கிப் பயணிக்க வைக்கின்றன” என்பது போன்ற கருத்துகளும் ஆழ்ந்து பேசப்பட்டிருக்கின்றன. சொந்த நாடு விட்டு வேறு நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் பெற்றோர்களது பிள்ளைகள் அங்கு பெரும்பான்மையினராக வாழுகின்ற சமுதாயக் கலாச்சாரத்தோடு கலந்து பழகும்பொழுது, இயல்பிலேயே அவர்கள் ஒன்றிப்போவதையும், தனது தாய்நாட்டுக் கலாச்சாரத்தைப் பெற்றோர்கள் வற்புறுத்தும்பொழுது, பிள்ளைகள் குழம்பிப்போவதையும் குறிப்பிட்டிருப்பதோடு, வயது வந்த பிள்ளைகள் தமக்கு விருப்பமானவர்களுடன் திருமணத்திற்கு முன்பே இணைந்து வாழ்வதை அயலகப் பெற்றோர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதையும், மண்ணின் கலாச்சாரத்தை மதிக்கின்ற புலம்பெயர்ந்தவர்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பதையும் இந்த நூல் இறுதியாகப் பேசியிருக்கிறது.
அன்பு செலுத்துவதற்கு உரிமை இருக்கின்ற பெற்றோருக்குத் தண்டனை கொடுப்பதற்கு அனுமதியில்லை என்பதை விளக்கமாகச் சொல்லி ஒவ்வொரு பெற்றோரது மனதிலும், “உங்கள் குழந்தைகள், உங்கள் குழந்தைகள் அல்லர்” என்கிற எண்ணத்தை ஆழமாக விதைக்கும்படி இந்தப் புத்தகம் அமைந்திருக்கிறது.
குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டுமென்பது பெற்றோர்களுக்கு இயல்பிலேயே அமைந்திருக்கும் ஞானமாக இருந்தாலும், மாறி வருகின்ற சமுதாயச் சூழலுக்கேற்ப அவர்கள் வெளியே சந்திக்கின்ற பிரச்சனைகளை எதிர்நோக்கும் விதமாக, குடும்ப அமைப்பானது குழந்தைகளுக்கு எப்படியெல்லாம் உறுதுணையாக இருக்க வேண்டுமென்பதையும் உணரும்படியாக இந்த நூல் விளக்கமளித்திருக்கிறது. கூட்டுக் குடும்பங்களில் அல்லாமல் தனித்து வாழும் இளம் பெற்றோர்களுக்கு ஏற்ற நூலாக திருமதி கலாநிதி ஜீவகுமாரன் அவர்களது இந்தப் படைப்பை எடுத்துக்கொள்ளலாம். lஒரு சொல்லானது அது வெளிப்படுகின்ற இடம் பொருள் ஏவலுக்கு ஏற்ப மதிப்பினைப் பெறுகிறது. ஆசிரியர் கலாநிதி ஜீவகுமாரன் அவர்களது நூலான, “உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல” என்னும் தலைப்பானது கலீல் ஜிப்ரானது கவிதையில் இடம்பெற்றிருக்கும் இதே வரியை அடிப்படையாகக் கொண்டது. அவரது காலத்தில் இந்தக் கருத்து மக்களிடம் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது தெரியாது. இன்றைய மக்களும் இதனை எப்படி உள்வாங்கிக்கொள்ளப் போகிறோம் என்பதும் கேள்விக்குறிதான்.
தான் பெற்ற பிள்ளைகள் வளர்ந்த பிறகு பெற்றோர் மீது அன்பு செலுத்துவதில்லை என்கிற நிலையில் இந்தத் தலைப்பு காயத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அவர்கள் வளரும் நிலையில் இதனை நாம் சரியாகப் புரிந்து கொண்டு கையாண்டால், குழந்தைகள் சுதந்திரமாக வளர்ந்து நல்ல குடிமக்களாகத் திகழ்வார்கள் என்பது திண்ணம். இலங்கையைச் சேர்ந்த இந்த நூலின் ஆசிரியர் கிட்டத்தட்ட முப்பத்து எட்டு ஆண்டுகளாக டென்மார்க்கில் வாழ்ந்து வருகிறார். குழந்தைகளைப் பராமரிப்பதற்கான கல்வியை மூன்று ஆண்டுகள் பயின்று, அதே துறையில் பணியாற்றி வருபவர். நாட்டுக்கு நாடு சட்ட திட்டங்கள் மாறும்பொழுது, குழந்தைகளைப் பாதுகாக்கும் பொருட்டு டென்மார்க்கில் உள்ள சட்டத்தை வேறு நாட்டுக் கலாச்சாரத்தைக் கொண்ட மக்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைக் குறித்த தகவல்கள் இடம் பெற்றிருப்பதோடு, குழந்தைகளைச் சுதந்திரமானவர்களாகவும், அதே நேரத்தில் ஒழுக்கமானவர்களாகவும் எப்படி வளர்ப்பது என்பதைச் சார்ந்த கருத்துகள் அடங்கியதாக இந்தப் புத்தகம் இருக்கிறது. இந்த நூலில் உள்ள பன்னிரெண்டு அத்தியாயங்களும் ஒவ்வொரு கருவை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றன. ஆங்காங்கே மகாபாரதக் கதைகளை அடிப்படை வடிவமாகக்கொண்டு, தான் புனைந்த ஒரு சில கதைகளையும் ஆசிரியர் கட்டுரைகளில் இணைத்திருக்கிறார். நூல் முழுவதும் விரவியிருக்கும் இலங்கைத் தமிழின் இனிமை, கூடுதல் அணி சேர்க்கிறது. போகிற போக்கில் ஆங்காங்கே இடம்பெற்றிருக்கும் ஆசிரியரது பொன்மொழிகள் மகுடத்தைச் சூடிக் கொள்கின்றன. பெற்றோரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் யாவரும், வரலாற்றில் எவ்வாறு இடம் பெற்றிருக்கிறார்கள் என்பதையும், அன்பாக அரவணைக்கப்பட்டவர்கள் எதிர்காலத்தில் வியக்கும்படியாக எப்படி வாழ்கிறார்கள் என்பதையும், நிகழ்காலக் கதைகளிலிருந்தும், பழங்காலக் காவியங்களிலிருந்தும் எடுத்துக்காட்டோடு டாக்டர் கலாநிதி இயம்பியிருக்கிறார். அவர் வாழும் நாட்டின் கலாச்சாரத்திற்கு ஏற்ப, குழந்தை முதல் பருவ வயதை அடையும் நிலை வரை தன் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான இலக்கணத்தைப் பல்வேறு நூல்களிலிருந்து அறிந்த ஞானமாகவும், தன்னுடைய அனுபவமாகவும் இந்தப் புத்தகத்தில் ஆசிரியர் இடம் பெறச் செய்திருக்கிறார். நூலின் அட்டைப்படமாக விடியல் பொழுதில் தனது நண்பனை அமர்த்திக்கொண்டு குரங்குப் பெடலில் மிதிவண்டியை ஓட்டும் சிறுவனது ஓவியம் பொருத்தமாக அமைந்திருக்கிறது.
அன்னியரது ஆட்சியில் நமது நாடு இருந்தபொழுது, மக்கள் ஜனநாயகமாக வாழ வேண்டும் என்பதற்காகவே சுதந்திரத்தை நோக்கிப் போராடியிருக்கிறோம். இன்றைய குடும்பங்களில் உள்ள குழந்தைகளிடம் நாம் ஜனநாயகமாக நடந்து கொள்கிறோமா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. உலக நாடுகள் யாவற்றிற்கும் பொருந்தும்படியாக, பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்கின்ற முறைகளை மூன்று பிரிவுகளாக ஆசிரியர் பிரித்திருக்கிறார். அவை முறையே சர்வாதிகாரமான வளர்ப்பு முறை, ஜனநாயக வளர்ப்பு முறை, கூடுதலான சுதந்திரத்தோடு வளர்க்கின்ற முறை என்பதாக இருக்கிறது. இதனை வெவ்வேறு தலைப்புகளில் விளக்கமளித்திருந்தாலும், தலைப்பே பிள்ளைகளின் வளர்ப்பு குறித்து விவரமாகப் பேசி விடுகிறது. ஜனநாயக முறைப்படி உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து, பேச்சுக்குச் செவிமடுப்பவர்களது பிள்ளைகளே தன்னம்பிக்கையுடன் வளர்ந்து சக மனிதர்கள் மீது மதிப்பும் நம்பிக்கையும் உள்ள மனிதர்களாக வாழ்வார்கள் என்று ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். மற்ற இரு முறைகளும் இதில் அடிபட்டுப் போகின்றன.
அதே சமயத்தில் குழந்தைகளுக்குச் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறோம் என்றால் அது பெரியவர்களுக்கும் உரியது என்பதை மனதில் கொள்வதற்கும், பெற்றவர்களே பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும் என்பதை முன்னிலைப்படுத்தியும், தீங்கு என்று கருதுகின்ற ஒன்றைப் பிள்ளைகள் விரும்பாத வண்ணம் தடை விதிக்கிறோமென்றால் அதில் உறுதியாக நிற்பது அவசியம் என்பதையும், தவறு செய்யாத குழந்தையைப் பெற்றோர்கள் தண்டித்துவிட்டால் அவர்களிடம் மன்னிப்புக் கேட்கத் தயங்கக் கூடாது என்பது போன்ற கருத்துகளையும், பிள்ளைகளுக்கும் மன்னிப்புக் கேட்கும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்பதையும் ஜனநாயகத்துடன் கூடிய கட்டுப்பாடுகளாகக் கடைப்பிடிக்க வேண்டியவற்றை ஆசிரியர் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். அழுது பிடிவாதம் செய்தால் கிடைத்து விடும் என்கிற நம்பிக்கையையும் குழந்தைகளுக்கு விதைக்கக் கூடாது என்பதும், கடுமையாகத் திட்டி அவர்களைத் திருத்த வேண்டுமென்று எண்ணுவதும் நன்மை பயக்காது என்பதாக, கலாநிதி அவர்களது அனுபவமும் கற்ற கல்வியும் அறிவிக்கிறது. குழந்தைகளைத் திசை மாற்றுவதற்காக ஏதோ ஒரு பொருளைக் கையில் கொடுத்துக் கவனத்தைத் திருப்புவது கூட லஞ்சம் என்பதாக இந்த நூலின் ஆசிரியர் குறிப்பிடுகிறார். இந்தியப் பெற்றோர்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் இடையேயுள்ள அன்பு அளவிட முடியாதது. இங்கு சிறுபான்மையினராகப் பெற்றோரால் துன்பப்படுகின்ற பிள்ளைகளை அரசாங்கம் வீடு புகுந்து கண்காணிப்பதில்லை. பள்ளி ஆசிரியர்களுக்கும் பிள்ளைகள் மீது வீட்டில் நடக்கும் வன்முறைகளுக்கும் எந்தவித சம்பந்தமும் சட்டப்படி வகுக்கப்படவில்லை. இந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெற்றோராக இருந்தாலும், மது அருந்துபவர்களாக இருந்தாலும், பரம்பரைச் சொத்தின் மீது பேராசை கொண்டு இரண்டாம் திருமணத்தின் மூலம் பெற்றோராக நியமிக்கப்பட்டவராக இருந்தாலும் அவர்கள் மூலமாகப் பிள்ளைகள் துன்பப்பட்டால், அவர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்கு ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கக்கூடியதான கடுமையான சட்டங்கள் இந்தியத் திருநாட்டில் இல்லை.
பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பதற்கு உரிமையில்லை என்கிற சட்டமும் சமீபத்திலேயே நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் அயலகங்களில் பெற்றோர்களுக்கே அத்தகைய உரிமையில்லை என்பதைப் பல ஆண்டுகளுக்கு முன்பே அமல்படுத்தி விட்டார்கள். இந்த நூலின் ஆசிரியர் வாழும் நாடான டென்மார்க்கில் அத்தகைய சட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் குறித்து விளக்கமளித்திருக்கிறார். அந்நாட்டில் பெற்றோர்களின் அரவணைப்பில்லாத பிள்ளைகளை அரசாங்கம் தத்தெடுத்துக் கொள்ளும் நிலையில், பேரப்பிள்ளைகளைக் காண முடியாத சோகம் வயதானவர்களுக்குத் தொற்றிக் கொள்கிறது. இந்த நூலில் இடம் பெற்றிருப்பவையாக, “நாம் எவ்வாறு வளர்க்கப்பட்டோமோ அவ்வாறே நமது குழந்தைகளையும் வளர்க்க வேண்டுமென்று நினைக்கிறோம். நமது நிராசைகளை அவர்களின் மீது திணிக்க விரும்புகிறோம். நமது குழந்தைகளை நாமாகவே எண்ணாமல் நாம் வேறு, அவர்கள் வேறு என்பதைப் பிரித்தறிய வேண்டும். பிள்ளைகள் தனித்தன்மைமிக்கவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பெற்றோர்களது சாதகமற்ற நடவடிக்கைகள், அவர்கள் வாயிலிருந்து வருகின்ற கடுமையான சொற்கள் அணுகுண்டைப்போலப் பிள்ளைகளைத் தாக்குகின்றன. ஹிட்லரை அவரது பெற்றோர் வளர்த்த விதமே கொடூரமான ஆட்சியாளராக அவரை உருவாக்கியது. கோபமான தந்தைக்கும் அழுகை மிகுந்த அன்னைக்கும் நடுவே வளர்கின்ற பிள்ளைகள் உணர்வுரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுப் பாதுகாப்பற்ற தன்மையை உணர்வார்கள். அவர்களது அன்பும் அரவணைப்புமே பிள்ளைகளை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்கிறது. போட்டியும் பொறாமையும் மிகுந்திருக்கும் உலகில் பெற்றோர்களது ஆலோசனையும் ஆறுதலும் பிள்ளைகளுக்குத் தேவை” என்பன போன்ற கருத்துகள் மிகவும் பயனுள்ளவையாக அமைந்து மாற்றங்களை ஏற்படுத்துபவையாக உள்ளன.
“பிள்ளைகளை அவர்களது நட்பு வட்டத்திலிருந்து பிரித்துத் தனிமைப்படுத்த நினைப்பதும் அவர்களைத் தன்னம்பிக்கை அற்றவர்களாக வளரச் செய்து விடும். குழந்தைகளுக்குக் கொடுக்கின்ற ஊக்கமும் அங்கீகாரமும் கிரியாவூக்கிகளாகச் செயல்பட்டு, அவர்களது திறமைகளை வளரச் செய்து முன்னேற்றப் பாதையை நோக்கிப் பயணிக்க வைக்கின்றன” என்பது போன்ற கருத்துகளும் ஆழ்ந்து பேசப்பட்டிருக்கின்றன. சொந்த நாடு விட்டு வேறு நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் பெற்றோர்களது பிள்ளைகள் அங்கு பெரும்பான்மையினராக வாழுகின்ற சமுதாயக் கலாச்சாரத்தோடு கலந்து பழகும்பொழுது, இயல்பிலேயே அவர்கள் ஒன்றிப்போவதையும், தனது தாய்நாட்டுக் கலாச்சாரத்தைப் பெற்றோர்கள் வற்புறுத்தும்பொழுது, பிள்ளைகள் குழம்பிப்போவதையும் குறிப்பிட்டிருப்பதோடு, வயது வந்த பிள்ளைகள் தமக்கு விருப்பமானவர்களுடன் திருமணத்திற்கு முன்பே இணைந்து வாழ்வதை அயலகப் பெற்றோர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதையும், மண்ணின் கலாச்சாரத்தை மதிக்கின்ற புலம்பெயர்ந்தவர்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பதையும் இந்த நூல் இறுதியாகப் பேசியிருக்கிறது.
அன்பு செலுத்துவதற்கு உரிமை இருக்கின்ற பெற்றோருக்குத் தண்டனை கொடுப்பதற்கு அனுமதியில்லை என்பதை விளக்கமாகச் சொல்லி ஒவ்வொரு பெற்றோரது மனதிலும், “உங்கள் குழந்தைகள், உங்கள் குழந்தைகள் அல்லர்” என்கிற எண்ணத்தை ஆழமாக விதைக்கும்படி இந்தப் புத்தகம் அமைந்திருக்கிறது.
குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டுமென்பது பெற்றோர்களுக்கு இயல்பிலேயே அமைந்திருக்கும் ஞானமாக இருந்தாலும், மாறி வருகின்ற சமுதாயச் சூழலுக்கேற்ப அவர்கள் வெளியே சந்திக்கின்ற பிரச்சனைகளை எதிர்நோக்கும் விதமாக, குடும்ப அமைப்பானது குழந்தைகளுக்கு எப்படியெல்லாம் உறுதுணையாக இருக்க வேண்டுமென்பதையும் உணரும்படியாக இந்த நூல் விளக்கமளித்திருக்கிறது. கூட்டுக் குடும்பங்களில் அல்லாமல் தனித்து வாழும் இளம் பெற்றோர்களுக்கு ஏற்ற நூலாக திருமதி கலாநிதி ஜீவகுமாரன் அவர்களது இந்தப் படைப்பை எடுத்துக்கொள்ளலாம். l