‘நீர் அளவே ஆகுமாம் நீராம்பல்.. தான் கற்ற
நூலளவே ஆகுமாம் அறிவு!’
– அவ்வையார்.
நம்முடைய வாழ்க்கைமுறை மாறிவிட்டது.. நூலகங்களுக்குச் செல்வதற்கோ அல்லது குழந்தைகளை அழைத்துச் செல்வதற்கோ நமக்கு நேரமில்லை.. பெரிய பெரிய நூலகங்கள் தமிழகத்தில் உருவாகி வாசிப்பின் கொடி எங்கு பார்த்தாலும் பறக்கிறது அண்ணா நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் என்று புதிய பரிமாணங்களை நூலகத் துறை எடுத்து வருகிறது.. ஆனால் இவையெல்லாம் நகரங்களில் உள்ளன இந்த இடத்தை நோக்கி வரும் மனிதர்கள், அவர்களின் குழந்தைகள் என்று பார்க்கிற பொழுது ஒப்பீட்டளவில் எண்ணிக்கை மிக மிகக் குறைவு..
ஆய்வு மாணவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாரித்துக் கொண்டிருப்பவர்கள் என்பவர்கள் போக மீதியைப் பார்த்தால் வருபவர்களின் எண்ணிக்கை அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளைப் பொறுத்தே அமைகிறது.. வாசிக்கும் பழக்கத்தை ஒரு சந்ததிக்கு ஏற்படுத்தாமல் விட்டு விடுவதற்கான சூழ்நிலைகள்தாம் தற்போது நிலவுகின்றன.. பள்ளிக் கூடத்தில் இருக்கும் நூலகங்கள்.. நாம் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டாலும் ஓர் எல்லைக்குமேல் பயன்படுத்த முடியாத அளவிற்கு நமது தேர்வு முறையும் பாட முறையும் மாணவர்களின் பெரும்பாலான நேரத்தை எடுத்துக் கொண்டு விடுகிறது..
மாணவர்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள அவர்களுக்கு வீடுகளிலேயே சொந்தமாக நூலகங்கள் அமைத்துக் கொடுப்பது இந்த அனைத்து வகைச் சிக்கல்களின் தீர்வாக நம்மால் முன்வைக்க முடியும்.. நூலகங்களில் இருந்து எடுத்து வரப்படும் புத்தகங்கள் மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகின்ற நிலையில் அவற்றைத் திருப்பி எடுத்துக் கொண்டு போய்க் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தமும் குழந்தைகளுக்கு உண்டு.. குழந்தைகளின் வாசிப்பு என்பது தன் சொந்தப் புத்தகத்தில் ஆங்காங்கே எழுதிக் கிறுக்கி வைக்கின்ற பாணியில் இருக்கும். அதிலுள்ள படங்களைப் பார்த்துப் பிரதி எடுக்கின்ற விருப்பத்தோடும் இருக்கும்.. ஒவ்வொரு பக்கத்திலும் தன் பெயரை எழுதி வைப்பதில் குழந்தைகளுக்கு ஆர்வமும் ஆசையும் இருக்கும்.. இதற்கெல்லாம் பொதுநூலகப் புத்தகங்களில் வாய்ப்பில்லை
ஒவ்வொரு வீட்டிலும் ஆயிரக்கணக்கான ரூபாய்களைச் செலவழித்து இன்றைக்குப் பள்ளிக் குழந்தைகளுக்குத் திறன்பேசிகளை வாங்கி தருகிறார்கள்.. அல்லது மேலும் சில ஆயிரங்கள் செலவு செய்து அவர்களுக்கு வீடியோ கேம்ஸ் வரவழைத்து ஓர் அறையை நிரப்புகிறார்கள்.. இப்படியெல்லாம் செலவு மேல் செலவு செய்ய முடிந்தவர்களுக்குப் புத்தகம் வாங்கப் பணமில்லை என்கிற சாக்குப்போக்கு எளிதில் வந்துவிடுகிறது.. வெட்டிச் செலவு என்று சொல்லி சிலர் இந்த விஷயத்தைப் புறம் தள்ளுவதையும் பார்க்கிறோம்.
ஒரு புத்தகக் கண்காட்சிக்குத் தன் குழந்தைகளை அழைத்துச் சென்று அவர்களை விட்டே புத்தகங்களைத் தேர்வு செய்து ஒரு சிறு நூலகத்தைத் தன்னுடைய வீட்டிலேயே அவர்களுக்கு அமைத்துக் கொடுப்பதுதான் தலைசிறந்த எதிர்காலத்திற்கான ஓர் அற்புத விதை என்பதை நாம் உணர வேண்டும்… திறன்பேசிகளினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து நாம் சொல்ல வேண்டியதில்லை.. சைபர் க்ரைம் என்பது இன்றைக்குப் பிறந்த குழந்தைகளைக் கூடப் பாதித்துக்கொண்டிருக்கிறது.. வீடியோ கேம் என்கிற ஒரு மிக ஆபத்தான பயணத்தில் தன் வாழ்க்கையில் வன்முறையை வளர்த்துக் கொள்கின்ற ஆபத்துகளே அதிகம்.
ஏற்கனவே இத்தனை 100 ….500 க்குப் புத்தகம் வாங்கிக் கொடுத்து விட்டேன் திரும்ப திரும்ப வாங்கச் சொல்வதா என்று அலுத்துக் கொள்ளும் குரல்களும் உண்டு.. புத்தகம் என்பது மாதந்தோறும், ஆண்டுதோறும் புதிது புதிதாய் வெளிவந்து கொண்டிருக்கும் விஷயம். எனவே நாம் திறன்பேசிகளை அப்டேட் செய்வது போல வீட்டில் உள்ள குழந்தைகளின் நூலகங்களையும் அப்டேட் செய்ய வேண்டும்.. பாடப் புத்தகத்திற்கு வெளியே ஒரு குழந்தை வாசிப்பை எங்கனம் வளர்த்துக்கொள்கிறது ஆர்வத்தோடு அந்த வாசிப்பின் காரணமாகத் தேடல்களில் ஈடுபட்டு எந்த அளவிற்கு அறிவை விரிவாக்கிக் கொள்கிறது என்பதை வைத்து தான் ஒரு குழந்தையின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது.
வீட்டில் உள்ள ஒவ்வொருவரின் பிறந்த நாளுக்கும் புத்தகங்கள் வாங்கி வைப்பது… தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ்.., புத்தாண்டு என்று வருகின்ற ஒவ்வொரு பண்டிகைக்கும் புத்தகங்களுக்குச் செலவழித்து வாங்கி நூலகத்தில் புதிதாக இணைப்பது.. உலகெங்கிலும் இருந்து இன்று வெளிவந்து கொண்டிருக்கும் குழந்தைகளுக்கான இலக்கிய இதழ்கள் அறிவியல் இதழ்களை வீட்டுக்கு வரவழைத்து நூலகத்தில் இணைப்பது.. தினந்தோறும் அந்தக் குழந்தைகள் வாசிப்பதற்காகவே அன்றாடத் தினசரிகளை 1 அல்லது 2 ஆவது வீட்டிற்கு வாங்குவது என்று நூலகச் செயல்பாட்டை பெரியவர்களும் சேர்ந்து விரிவுபடுத்த முடியும்..
இன்று ஆன்லைன் எனப்படுகின்ற இணையவழியே உணவை ஆர்டர் செய்து வாங்கி உண்பது என்பது குழந்தைகளிடையே தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கிறது.. ஓர் ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுக்கவும் ஒரு பிரியாணி வாங்கிக் கொடுக்கவும் பெலூடா.. ஷவர்மா.. ஜிகர்தண்டா என்று நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் செலவு செய்யப் பெற்றோர்கள் தயாராக உள்ளனர்.. அந்தப் பணத்தில் பாதியைச் செலவு செய்தால்கூட நூற்றுக்கணக்கான புத்தகங்களை வீட்டில் வாங்கி நிரப்பிவிட முடியும்.. போட்டித் தேர்வுகளுக்குப் பிற்காலத்தில் தேவைப்படும் மனநிலையை உருவாக்கவும் அறிவியல் பூர்வச் சிந்தனைகளை வளர்க்கவும் மனிதநேயம் பண்பாடு என்று ஒருவருடைய ஆளுமையை வளர்த்தெடுக்கவும் புத்தகங்கள் என்பவை மந்திர சக்தி போலச் செயல்படக்கூடியவை என்பதை உணர்ந்து.. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு நூலகத்தை வீட்டிலேயே அமைத்துக் கொடுக்கச் சென்னைப் புத்தகக் கண்காட்சியை பயன்படுத்துவோம்.
– ஆசிரியர் குழு l
