புதினங்கள், கவிதை நூல்களில் இல்லாத ஓர் இயல்பும், கட்டமைப்பும் கட்டுரை நூல்களுக்கு உண்டு. “உள்ளே…” இடம் பெறும் கட்டுரைத் தலைப்புகளைப் பார்த்தே நூலின் நோக்கையும் பயனையும் தெளிவாகவே எடைபோட்டு விடலாம். “வெளிக்காற்று” என்ற தலைப்பே ஈர்த்து அருகே இழுத்துப்போடுகிறது. ஆசிரியர்கள் மீதோ, மாணவர்கள் மீதோ “வெளிக்காற்று” பட்டுவிடாமல் பாதுகாப்பதுதானே பொதுவாக பள்ளிக்கூடங்களும் பாடத் திட்டங்களும், புதிய கல்விக்கொள்கைகளும்! வியப்பாகத்தான் இருக்கிறது, வெளிக்காற்றை வரவேற்க வாசலையும் சாளரங்களையும் திறந்துவைக்கும் தெம்பும் திராணியும் கொண்ட இந்தப் பள்ளிக்கூடம்.
சமயபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளிக்கூடம் எனக்குப் புதிதானது அல்ல. 16 ஆண்டுகாலப் பழக்கம்; இல்லை- உணர்வின் உள்ளீடான நெருக்கம். 2008 அக்டோபரில் ஒரு மழைநாளில் இங்கே பேசவந்தேன். உடனடியாக வாசிக்கத்தக்க மொழி உடல்மொழிதான். இந்தப் பள்ளியின் “உடல்மொழியை” உள்வாங்கியபடி மேடையில் அறிவித்தேன். “இதுதான் பள்ளிக்கூடமென்றால், இவர்கள்தான் ஆசிரியர்கள் என்றால் நான் மீண்டும் ஒருமுறை மாணவனாகி படிக்கத் தயாராக இருக்கிறேன்” என்று. அப்போது நான் புதுதில்லியில் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் துணைத் தேர்தல் ஆணையராகப் பணியாற்றி வந்தேன். காஷ்மீர் தேர்தலுக்கான அறிவிப்பிற்கிடையே நான் செய்த பயணம் அது. எனது அந்த அறிவிப்பு மிகையாகச் சொன்ன ஒப்பனைச் சொல் அல்ல. வேண்டுமென்றால் “கண்டவுடன் காதல்” என்று கவித்துவமாகச் சொல்லலாம்.
ஒருவகையில் நான் இந்தப் பள்ளிக்கூடத்தின் மூலமாகவே தமிழ்ச் சமூகத்தோடு உரையாடி வந்திருக்கிறேன். எனது ‘சிறகுக்குள் வானம்’, ‘குன்றென நிமிர்ந்து நில்’, ‘இரண்டாம் சுற்று’ போன்ற நூல்கள் வடிவம் பெற்றது இந்த வளாகத்தில்தான். ஆதலால் “வெளிக்காற்று” என்ற இந்த நூலுக்கு நான் அணிந்துரை எழுதுவதில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி. “உள்ளே…” அப்படி என்ன இருக்கிறது? “மொழியின்றி அமையாது…” என்ற கட்டுரையை முதல் தலைப்பாக்க எவ்வளவு யோசித்திருப்பார்கள்! “நீரின்றி அமையாது உலகு” என்ற குறள் வரி மின்னல்கீற்றாய் எனக்குள். “தாய்மொழி” என்பதை 360 டிகிரி கோணத்தில் அதன் முழுப்பரிமாணத்தில் அணுகும் இந்தக் கட்டுரை ஒருவகையில் வெளிக்காற்றை உள்ளே கொண்டுவரும் பொருத்தமான சாளரமாக அமைந்துள்ளது. “தாய்மொழி என்பது வார்த்தைகள் அல்ல. எழுத்துகள் மட்டுமே அல்ல; அ, ஆ, இ, ஈ என்ற நெடுங்கணக்கும் அல்ல. மாறாக அதுதான் எனது டி.என்.ஏ. மாதிரி. என் உண்மையான ஜாதகம் அதுதான்” என்று தாய்மொழி பற்றிய மதிப்பீட்டைத் தொடங்கும் இந்த உரையாடல், 1965இல் தமிழ்நாட்டில் நடைபெற்ற மொழிப்போராட்டம் எப்படி ஆங்கிலத்தைக் காப்பாற்றியது; அதன் மூலம் ஆங்கில மொழியறிவு பரவலாகித் தகவல் தொழில்நுட்பத்தில் நாம் முன்னிலை பெற எப்படிக் காரணமாக அமைந்தது என்பதை விளக்குகிறது. இப்போது தாய்மொழிக்கல்வியைக் காப்பாற்றியே ஆகவேண்டிய சூழலில் இருக்கிறோம் என்பதைச் சிறந்த பொருளியல் புரிதலோடு உலகப்பார்வையில் உற்றுநோக்குகிறது. தாய்மொழியில் திறனை வளர்ப்பதின் மூலமே ஒரு சமூகத்தின் மனிதவளத்தை மேம்படுத்தி பொருளாதாரத்தில் உயர்வடைய முடியும் என்று முத்தாய்ப்பாக முடிகிறது இந்தக் கட்டுரை.
தமிழ்நாடு மட்டுமல்லாது இந்திய அளவில் உள்ள முக்கியமான தலைவர்கள் அனைவரைப் பற்றியும் ஏதேனும் சில குறிப்புகளை இக்கட்டுரைகளின் தொடர்ச்சியில் ஏதேனும் ஓர் இடத்தில் காணலாம். எத்தகைய முறையில் ஒரு தலைவரை அறிமுகப்படுத்து கிறோம் என்பதும் முக்கியமானது. எடுத்துக்காட்டாக, அண்ணல் அம்பேத்கரைச் சுட்டும்போது, இந்திய அரசியல் சாசனத்தில் அவரின் பங்களிப்பு குறித்து அனைவரும் கூறுவர். அதை எவ்விடத்தில் வேண்டுமானாலும் ஒருவர் தெரிந்து கொள்ளலாம். ஆனால் அவர் தனது 54ஆம் வயதில் வயலினும் ஓவியமும் கற்றுக்கொண்டார் என்பது முக்கியமானது. இது கற்கை குறித்து வேறொரு பார்வையை வழங்குகிறது. வரலாற்றில் நடைபெற்ற நீண்ட போராட்டங்களின் தொடர்ச்சியைப் பல்வேறு வகைகளில் நினைவுகூர்ந்து வருகிறோம். குறிப்பாக டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி பெண்கள் திருமண உதவித்திட்டம், மகப்பேறு நலத்திட்டம் என்ற பெயர் வெறுமனே பெயர்களை மட்டும் சுமந்து நிற்கவில்லை. நீண்ட வரலாற்றையும் சுமந்து நிற்பதாகும். இதை இளம்தலைமுறைக்குக் கடத்துவது அவசியம். அதற்கான செயல்பாடாகவும் இந்நூல் அமைந்துள்ளது. சமூகத்தைப் புரிந்துகொள்ளுதல் என்பது வெறுமனே தற்கால நிலைமைகளை மட்டும் புரிந்துகொள்வதல்ல, வரலாற்றுப் போக்கில் தற்போதைய நிலைமையை நாம் எவ்வாறு வந்தடைந்தோம் என்று புரிந்துகொள்ளுதலாகும். அதேவேளையில் இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு தமிழ்நாட்டை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நிகழ்ந்துள்ள மாற்றங்கள் என்பவை வெளிப்படையானவை, அதற்கு இங்கு வளர்ந்த இயங்கங்களின் செயல்பாடுகள் காரணமாகும். அவற்றை அறிதலும் கற்றல் செயல்பாட்டின் ஒருபகுதிதான்.
“இன்றைய காந்தி” கட்டுரையில், காந்தியை ரயிலிலிருந்து வெளியேற்றிய நிகழ்வை எடுத்துரைக்கையில், சக மனிதர்மீது நடத்தப்படும் அவமானம், துவேஷம் என்பவற்றிற்கு எதிராக அன்பு என்பதைக் காந்தி கையில் எடுப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. இது இன்றைய சூழலில் நாம் அனைவரும் கற்க வேண்டிய முக்கியமான பாடம். வெறுப்பிற்கு எதிராக அன்பு என்பதை முன்நிறுத்துதல் காலத்தின் தேவையாக உள்ளது. வெறுப்பு என்பது இடையில் முளைத்தது, அன்பு என்பது ஆழமாக நமது வேர்களில் வேர்விட்டிருப்பது. வெறுப்புணர்வு இல்லாத பொறுப்புணர்வே நிகழ்கால உலகின் மிகமுக்கியமான தேவையாகத் தோன்றுகிறது.
இன்றைய சமூகத்தில் ஊடகங்கள் நம்மை எத்தகைய முறையில் வழிநடத்துகின்றன, எவற்றின்மீது கவனத்தைக் கோருகின்றன, எவற்றைப் புறம்தள்ள முயலுகின்றன என்பதைப் புரிந்து கொள்ளும்வகையில், “ஊடகங்களின் குறுக்குவெட்டு” கட்டுரை அமைந்துள்ளது. இதில் தற்கால சமூக வலைத்தளங்களின் ‘அல்காரிதம்’ எத்தகைய முறையில் செயல்படுகிறது என்பதைக் குறித்தும் பேசப்பட்டுள்ளது. இத்தகைய அல்காரிதமே- அதாவது கணினி தொழில்நுட்ப வழிமுறையே சமூக இயங்குமுறையை, பொதுவிவாதவெளிகளின் உள்ளடக்கத்தை உருவாக்குபவையாகவும் கட்டுப்படுத்துபவையாகயும் உள்ளன. இளம் தலைமுறையினர் இதனை அறிதல் தேவையாகிறது. அதன்மூலமே, தான் வைத்திருக்கும் ஒரு கருத்து – தனது சுயஅறிவிலிருந்து உருவானதா? அல்லது தன்மீது திணிக்கப்பட்ட- உள்நோக்கம் கொண்ட கருத்தா? என்பதை அறியலாம். “பயணம் எனும் பள்ளி” என்ற கட்டுரை, தற்கால வாழ்வில் பயணத்தின்வழி கற்றலை முதன்மைப்படுத்துகிறது. “வந்தது கொண்டு வாராதது உணர்தல்” கட்டுரை இயற்கையை முதன்மைப் படுத்துகிறது. இயற்கை நாமறியாமலே நமக்கு விஷயங்களைக் கற்றுத் தருகிறது. அதுவும், நாம் கற்கிறோம் என்ற உணர்வு இல்லாமலே இயற்கையின் பல்வேறு விசயங்களைக் கற்கிறோம் என்கிறது. “இந்திய மக்களாகிய நாம்…” கட்டுரையில் காணப்படும் சுதந்திரம் குறித்த விவாதம் முக்கியமான ஒன்று. அதாவது எது சுதந்திரம் என்பதற்கு பதிலாக சொல்லப்படும் விசயம், அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய ஒன்றாகும். எந்தெந்தக் காரியங்கள் செய்யக்கூடாது என்பதை அறிந்துகொள்வதில் சுதந்திரம் தொடங்குகிறது. குறிப்பாக, நமது சக மனிதர்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தும் செயல்களைச் செய்யாமல் விலகி இருப்பதில் நமக்கான சுதந்திரம் என்பது அமைந்துள்ளது என்கிறது இக்கட்டுரை. இதுவே இந்தியாவின் தற்காலத்தில் பெரும் சிக்கலை உருவாக்கி உள்ளது. நமது சக மனிதரை நாம் எவ்வாறு பார்க்கிறோம், எவ்வாறு நடத்து கிறோம் என்பதை மறந்து அல்லது மறக்கடிக்கப்பட்டு, மற்றவர்களை ஆட்டி வைக்கும் பொம்மைகளாக ஒரு பெரும்கூட்டம் செயல்பட்டு வருகிறது. அதேபோல் நவீன கால வரலாற்றில் முக்கியமான அரசியல் தலைவர்கள் பேசிய கருத்துகளை வைத்துக்கொண்டு, அவர்களைப் பற்றிய பிம்பங்களை உண்டாக்கிக்கொள்ளக் கூடாது. மாறாக அவர்களின் செயல்பாடுகளையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்கிறது “வைக்கம் போராட்டச்சுவடுகள்” கட்டுரை. ஏனெனில் தற்காலத்தில் தலைவர்கள் பேசும் கருத்துகளைத் திரித்தும் சூழல்களில் இருந்து பிரித்தும் – பரப்பும் போக்கு காணப்படுகிறது.
நாம் இன்றைய தலைமுறையினரிடம் இன்னும் அதிகமாகக் கோடிட்டுக் காட்டவேண்டிய விசயம் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளாகும். ஒருவர் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ வந்து படிப்பதாலேயே மற்றொருவருக்குச் சமமாக உள்ளார் என்று நினைக்கின்றனர். உண்மையில் அவ்வாறு இல்லை. முதல் தலைமுறையைச் சேர்ந்த ஒருவரும் – இரண்டு, மூன்று தலைமுறைகள் படித்த வீட்டில் இருந்து வரும் ஒருவரும் அடிப்படையில் சமமானவர்கள் இல்லை. இருவருக்கும் பொருளாதார அடிப்படையில், கருத்துகளை அணுகும்முறைசார்ந்தும் பொருண்மைகளை உள்வாங்குவதில், பெறுதலில் பெரும் இடைவெளிகள் உள்ளன. இவற்றைத் துல்லியமாக எடுத்துரைத்துள்ளது “அறிந்ததிலிருந்து அறியாததை நோக்கி…” என்ற கட்டுரை. தற்போது படித்த இளைஞர்களிடையே காணப்படும் மற்றொரு விவாதம் – இடஒதுக்கீடு என்பது தேவையில்லை என்பதாகும். அவர்கள் சமூகத்தில் நிலவும் பல்வேறு விசயங்களைக் கூரிய நோக்கில் பார்க்கத் தவறுவதாக நினைக்கிறேன். இதனை மாற்றும்போக்கிலும் சரியாக வழிநடத்தும் போக்கிலும் இந்நூலில் உள்ள பல கட்டுரைகள் அமைந்துள்ளன. அடிப்படையில் மனித சமூகங்கள் ஒன்றை ஒன்று சார்ந்துதான் வாழ்ந்துவந்துள்ளன; இப்போதும் அதுதான் உண்மை. மனித குலத்தின் பெரும் அறிவுகளை ஒவ்வொரு சமூகமும் மற்றொரு சமூகத்திற்கு வழங்குகிறது. அறிவுவளங்களைச் சமூகங்கள் பரிமாறிக் கொள்கின்றன; அவற்றின்வழி பயனும் அடைகின்றன. ஒவ்வொரு சமூகமும் தனது ஆழமான பண்பாட்டு வேர்களையும் அறிவு மரபுகளையும் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்குக் கடத்தி வருகிறது. அவற்றில் சமூகத்திற்குத் தேவையானவை நீடிக்கின்றன, தேவையற்றவை மறைகின்றன. அந்தவகையில் தமிழர்களின் மரபும் தொன்மையான தோற்றச் சிறப்பும், தொடர்ச்சியான புதுப்பித்துக் கொள்ளுவதால் நவீனமாக இயங்கும் இயல்பும் கொண்டது. அதன் பண்பாட்டு வேர்கள் ஆழமானவை; பட்டறிவால் பட்டை தீட்டப்பட்டவை. இதன் நேர்மறையான விளைவுகளை, தாக்கத்தை, புரிதல்களை நமது நிகழ்காலச் செயல்பாடுகளில், முன்னுரிமை தரும் கோட்பாடுகளின் பரிணாம அழகில் கண்டறியமுடிகிறது. இளம் தலைமுறையினரின் செயல்பாடுகளில் அவர்களை அறிந்தோ, அறியாமலோ அவை வெளிப்படுகின்றன.
நிலத்திற்கும் மனிதர்களுக்கும் இடையே ஒரு பிணைப்பு காணப்படுவதைப்போன்று அந்நிலத்தின்மூலம் உருவாக்கப்படும் உணவிற்கும் நிலத்தில் உலாவும் மனிதனின் உடலுக்கும் இடையேயும் ஓர் பிணைப்பு உள்ளது. அந்தப் பிணைப்பு பண்பாட்டின் அடிப்படையில் அமைந்த ஒன்றாகும். இவற்றிற்கிடையிலான உறவுகளில் எத்தகைய முறையில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட்டுள்ளன என்பதை “வயிற்றுக்குச் சோறிடல்…” கட்டுரையில் எடுத்துரைக்கப்படுகிறது. உணவு குறித்து ஒரு நீண்ட விவாதப் போக்கை தமிழ் இலக்கிய வரலாற்று வெளியில் காணலாம். அத்தகைய தன்மையில் இன்றும் உணவு குறித்த விவாதம் தொடர்ந்து நடத்துவது இன்றியாமையாததாகிறது. “வாசிப்பு எனும் தொடர் ஓட்டம்” கட்டுரையில், தரவுகளைத் தேடுதல் குறித்துப் பேசப்பட்டுள்ளது. நாம் ஒரு தரவைத் தேடிப்போனால், அது வேறோரு தரவை நமக்குக் காட்டும். அதைப் பார்த்தால், அதுவரை நாம் அறிந்திராத இன்னொரு புதிய தரவு நமக்குக் கிடைக்கும். நூல்களின் உலகம் அப்படியாகப் புதிய வெளிகளுக்கும் புதிய தரவுகளுக்கும் நம்மை இழுத்துச் செல்லும். ஒன்றைத் தொட்டால் அது மற்றொன்று, அதைத் தொட்டால் மூன்றாவது என்று வேறு வேறு உண்மைகளை நம் கவனத்திற்குக் கொண்டு வரும். இதனை நான் என்னுடைய ஒவ்வோர் ஆய்விலும் ஒவ்வொரு நூலிலும் எதிர்கொள்கிறேன். அதேபோல்தான் சங்க இலக்கியம் எனும் சுரங்கமும் ஒன்றைத் தேடிப்போனால் மற்றொன்றைக் காண்பிக்கும், அது வேறொன்றிற்கு வழிநடத்தும். இவற்றைத் தொடர்ந்து நமது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வதற்குத் தொடர் வாசிப்பு மட்டுமே ஒரே ஒரு மருந்து. தொடர்ந்து வாசித்து வந்தால், எதனை எவற்றுடன் தொடர்பு படுத்திப் புரிந்துகொள்ளலாம் என்பதைப் பற்றிய தெளிவு உண்டாகும்.
இளம் வயதில் கற்கும் விழுமியங்களை, தங்களது வாழ்நாள் முழுவதும் மனிதர்கள் ஏந்தி நடக்கின்றனர். அதன்வழியே தமது செயல்பாடுகளை அமைத்துக் கொள்கின்றனர். விழுமியங்களைக் கட்டமைப்பதில் பள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதேபோல் குழந்தை வளர்ப்பு என்பதிலும் தனிக்குடும்பம் உருவாகிய பின்னர் பெரும் சிக்கலை எதிர்கொள்கிறது சமூகம். அத்தகைய சூழலில் பள்ளிகள் முக்கியமான ஒரு பொறுப்பைக் கொண்டவையாக மாறுகின்றன. இத்துடன் பள்ளி ஆசிரியர்கள் பல மாணவர்களுக்கு ‘முன்மாதிரியாக’ மாறுகின்றனர். ஆசிரியர்களின் செயல்பாடுகளின்வழி தங்களுடைய கனவுகளை வளர்க்கின்றனர். அதன் வெளிப்பாடாகவே பிற்காலத்தில் தமது ஆசிரியர்களை நினைவில் கொள்கின்றனர்.
இளம் தலைமுறையினரின் கற்றல் திறன் நம்மை வியப்பில் ஆழ்த்தும். சின்னச் சின்ன உண்மைகளை, புரிதல் வேண்டும் களங்களை நாம் அவர்களுக்கு அறிமுகம் செய்து சற்று விளக்குவதே போதுமானது ஆகும். அதில் உள்ள பல நுணுக்கமான விசயங்களை நமக்கு அவர்கள் கற்றுத் தரும் அளவிற்கு அதில் தேர்ச்சி மிக்கவர்களாக மாறிவிடுவார்கள். எடுத்துக்காட்டாக, கணினியின் அடிப்படையை மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தாலே போதும் அதில் உள்ள மற்ற நுணுக்கங்களை எல்லாம் அவர்களே கற்றுக்கொள்வார்கள் என்பதை “கணினியை நிறுவுதல்” கட்டுரை விவரிக்கிறது. நம் வாழ்வில் எல்லாரிடமும் இருந்து ஏதோ ஒன்றைக் கற்றுக்கொள்கிறோம். நாம் கற்றுக்கொள்வதற்கு அனைவரிடமும் ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை “வாத்தியார்களும் பேராசிரியர்களும்” கட்டுரை குறிப்பிடுகிறது. “முற்றும் என்பது இல்லை” கட்டுரையில் காமராசர் குறித்துப் பேசும் பகுதி முக்கியமானது. இத்தனை கட்டுரைகளும் படிப்பவர்களின் சிந்தனை வெளியைப் பல்வேறு முனைகளுக்கு விரித்துக் காட்டும் என்பதில் சந்தேகமில்லை. இதில் உள்ள கட்டுரைகள் நேரடியாகக் கல்வி சார்ந்த பல்வேறு பொருண்மைகளை விவாதிக்கும் அதேவேளையில் கல்வியில் வேண்டிய மாற்றங்களை எடுத்துரைக்கவும் இந்நூல் தவறவில்லை. “வேண்டுவதும் வேண்டாததும்” கட்டுரையில், கல்விப் பிரச்சனைகளைப் பொது வெளிகளில் முன்வைத்து விவாதித்து, தீர்வுகளுக்காக நடைமுறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடிய ஓர் அமைப்பு தேவை என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறான ஓர் அமைப்பின் மூலம் உலகத்தரம் வாய்ந்த விவாதங்களை எழுப்பும் ஆற்றல்மிக்க உரையாடல்கள் நிகழ்த்தப்படவேண்டும். அந்த உரையாடல்களில் மிகச்சிறந்தவற்றைத் தொகுத்து நூலாகக்கொண்டு வரும் முயற்சியை அந்த அமைப்பு முன்னெடுக்கவேண்டும்” என்ற கோரிக்கையையும் இந்த நூல் முன்வைத்துள்ளது. இத்தகைய குரல் முக்கியமான ஒன்றாகும். அதேபோல் சமூகவியல், தத்துவவியல், இலக்கியம், அரசியல் அறிவியல் உள்ளிட்ட சமூக அறிவியல் பாடங்கள்மீதான கவனமின்மையும் அவற்றைக் கண்டுகொள்ளாத போக்கும் சமூகத்திலும் பெற்றோர் மத்தியிலும் நிலவுவதை “ஒவ்வொரு கனவுக்கும் ஒரு பாதை” என்ற கட்டுரை எடுத்துரைக்கிறது. சமூக அறிவியல்களே மனிதப் பண்பாட்டைக் கற்கும் கருவிகளாக உள்ளன. பண்பாட்டை அறியாமல் மற்றவற்றை மட்டும் அறிந்து கொள்வதில் வேர்களை விட்டு, விழுதுகளை மட்டும் அறியும் போக்காகும்.
ஆசிரியர்கள் ஒரு நாடக நடிகரைப்போல மாறவேண்டும் என்று “வகுப்பறை அசைவுகள்” கட்டுரை குறிப்பிடுகிறது. பெரும்பாலான ஆசிரியர்கள் உண்மையில் ஓர் நாடக நடிகரைப் போலத்தான் தங்களுடைய பாடங்களை நடத்துகின்றனர். அதனாலேயே மாணவர்கள் நினைவில் நீங்கா இடம் பிடிக்கின்றனர். வகுப்பறையில்தான் பல கலைகளும் கலைஞர்களும் உருவாகின்றனர். அத்தகைய சூழல் எவ்வாறு உருவாகிறது என்றால் சுதந்திரமான சிந்தனையால் உருவாகிறது என்கிறது “கலை வெளிப்படும் வகுப்பறை” என்ற கட்டுரை. சுதந்திரமான மனநிலையில் இருந்து கற்பனையும் படைப்பாக்கமும் பரந்து விரிவதற்கான சூழல் உருவாகும். ஆசிரியர்கள் மட்டுமல்லாது பெற்றோர்கள் குறித்தும் இதில் பேசப்பட்டுள்ளது. குறிப்பாக, பெற்றோர்கள் பதின்பருவத்தில் தமது குழந்தைகளுக்கு எழும் கேள்விகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதைக் குறித்தும் பேசப்பட்டுள்ளது. இத்துடன் பள்ளிப் பாடநூல்களை மட்டுமல்லாது, மற்ற நூல்களைப் படிக்கும் சூழலை உருவாக்க வேண்டிய தேவை உள்ளதெனவும் அவற்றை வளர்த்தெடுக்கப் பெற்றோர்கள் முன்வரவேண்டுமெனவும் சில கட்டுரைகள் எடுத்துரைக்கின்றன. அவையே சிந்தனை வளர்வதற்கு அச்சாணிகளாக அமைகின்றன. இதில் உள்ள கட்டுரைகளின் வரிசை முறையில் உள்ள இணக்கமான தன்மையை உருவாக்க ஒரு படைப்புக் குணம் வேண்டும். இந்த நூலின் தொகுப்பாசிரியர்களான தோழர்
ச. தமிழ்ச்செல்வனும் ஆ. பரிமளாதேவியும், எழுத்தாக்கம் கொடுத்த கமலாலயனும் பாராட்டிற்குரியவர்கள். இந்த மூவர் அணிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். எஸ்.ஆர்.வி. பள்ளி தலைமைச் செயல் அலுவலர் எனது அன்பு இளவல் துளசிதாசனை வாழ்த்தி மகிழ்கிறேன். இப்படிப்பட்ட உரைகளை நிகழ்த்த இந்தியாவின் மகத்தான ஆளுமைகள், எழுத்தாளர்களைப் பள்ளிக்கு அழைப்பதிலும், இதுபோன்ற எண்ணற்ற மாற்றுக்கல்வி/இணைக்கல்வி முயற்சிகளை முன்னெடுப்பதிலும் அளவில்லா ஆர்வமும் உற்சாகமும் காட்டுகின்ற இப்பள்ளியின் இயக்குநர்களை, அவர்களின் திறந்த மனதைப் பாராட்டியே தீர வேண்டும்.
31 தலைப்புகளில் கிட்டத்தட்ட 1000 பக்கங்களுக்கு அமைந்த இந்த வெளிக்காற்று, தமிழ்ச் சமூகப் பண்பாட்டுச் சூழலின் ஒட்டுமொத்தத் தன்மையையும் கவர்ந்த காற்றாக அமைந்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் நிலவும் பன்மைத்தன்மை, கட்டுரையாளர்களிடையே நிலவும் பன்மைத்தன்மை, கட்டுரைப் பொருள்களிடையே நிலவும் பன்மைத்தன்மை – இவையே நாம் இன்றைய இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டியவை. பேராசிரியர்கள் – ஆய்வாளர்கள், அரசு அதிகாரிகள், பெரும் ஊடகவியலாளர்கள், மருத்துவர்கள், தமிழ்நாடு நன்கு அறிந்த இலக்கியவாதிகள் - கவிஞர்கள், நாடகத் துறையிலும் திரைத்துறையிலும் முத்திரை பதித்த நடிகர்கள், இசைக்கலைஞர் எனச் சமூகத்தின் பன்முகத்தன்மையையும் இதில் காணலாம். அதேபோல் இதில் பெண்களின் பங்கும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. இதில் உள்ள கட்டுரைகளும் பேசும் களம் என்பது பரந்து விரிந்தது. மொழி, சுயவிடுதலை, கனவு, சிந்தனை, வகுப்பறை, உரையாடல், கணினி, திறன், வாசிப்பு, நூல், வரலாறு, போராட்டம், பயணம், இயற்கை, ஊடகம், வரிகள் - வருவாய்கள், இயக்கம், எழுத்து, குழந்தைவளர்ப்பு என இன்னும் பல தளங்களில் உள்ள முக்கியமானவற்றைப் பேசுபொருளாகக் கொண்டுள்ளன இக்கட்டுரைகள். கட்டுரையாசிரியர்கள், தங்களது வாழ்வின் அனுபவங்களையும் மேற்கொண்ட பயணங்களையும் இதில் பகிர்ந்துள்ளனர். இந்நூலை வெளியிடும் எஸ்.ஆர்.வி. தமிழ்ப்பதிப்பகத்திற்கும் வாழ்த்துகள், பாரட்டுகள். இந்த நூலை வாசித்து முடித்ததும் எனக்குள் தோன்றியது- “இது வாடிக்கையான இன்னொரு நூல்” அல்ல என்ற உணர்வுதான். எல்லார்க்கும் பெய்யும் மழையாய், இந்த நூல் பரவலாகத் தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களை, ஆசிரியர்களை, பெற்றோர்களை, பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களைச் சென்றடைய வேண்டும். காலத்தின் தேவையாக உருப்பெறும் ஒவ்வொன்றையும் தக்க தருணத்தில் தாங்கித் தனதாக்கிக் கொண்டாடும் தமிழ்ச்சமூகம் இந்த நூலை உச்சிமுகர்ந்து வரவேற்கவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. “அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்” (புறநானூறு: 183) என்பது ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் அன்றே அறிவித்த முதல் கல்விக்கொள்கை. l