இந்தச் சிறுகதைத் தொகுப்பு சிறந்த சிறுகதைகளின் வாசிப்பு அனுபவமாகவே அமைந்தது எனக்கு. கதை சொல்லும் மரபு தொன்றுதொட்டு இருந்து வந்த வழக்கம் என்பதைத் தொல்காப்பியர், “பொருள் மரபில்லாப் பொய்ம்மொழியானும் பொருளோடு புணர்ந்த நகைமொழியானும்”என்று உரைக்கிறார். அரைமணி முதல் இரண்டு மணிநேரத்துக்குள் படித்து முடிக்கக்கூடியது சிறுகதை என்பார் எட்கார் ஆலன்போ. சுருங்கச் சொல்லுதலும், சுருக்கெனச் சொல்லுதலும் இதன் உத்திகளாகும்.
கதையின் கருப்பொருள் எளிமையானதாய் இருக்க வேண்டும். சிறுகதை மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாய் அமைதல் வேண்டும். சமுதாயத் தேவையை நிறைவு செய்யும் பாங்கிலும் அமைதல் வேண்டும்.
ஆசிரியர் இதுவரை கவிதை, கட்டுரை, புதினம், குறும்புதினத் தொகுப்புகளை வெளியிட்டுள்ள தகவல் மகிழ்ச்சி தருகிறது. இவருடைய முன்னுரையே வாசிப்பதற்கு அற்புதமாக இருந்தது. தான் கற்ற பாடங்களையும், பெற்ற அனுபவங்களையும் கதைகளாக வடிப்பதாகக் கூறுகிறார். நிகழ்காலத்தில் நின்று கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் ஊஞ்சலாடுபவை என்னுடைய கதைகள் என்று பெருமையாகக் கூறுகிறார். இத்தொகுப்பிலுள்ள பல கதைகளை இதழ்களில் வாசித்து மூத்த படைப்பாளிகள், கு. சின்னப்ப பாரதி, பா. செயப்பிரகாசம், ச.தமிழ்ச்செல்வன், நாஞ்சில் நாடன் போன்றோர் பாராட்டிக் கருத்துரை அளித்ததாகக் கூறியிருக்கிறார்.
இருபத்தியோரு சிறுகதைகளின் தொகுப்பாக அமைந்திருக்கும் இந்த நூலின் சில கதைகளை வாசித்து அவற்றைப் பற்றிய என்னுடைய கருத்துகளை வாசகர்கள் முன்னிலையில் எடுத்துச் சொல்ல முயற்சிக்கிறேன். முதல் கதை, “குரல்” என்கிற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. படித்து முடித்தபோது மனம் கனத்துப்போனது. வயதானவர்களுடைய மனநிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது. எத்தனையோ மெய்யப்பன்கள் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நேர்மையாக வாழ்வதால் அவர்களுக்குக் கிடைக்கும் பட்டப்பெயர், பைத்தியக்காரன் என்பது மட்டுமே. நண்பர்களின் குரலுக்கு ஏங்கும் கதாபாத்திரமான மெய்யப்பன் மனதில் நிறைந்து போகிறார்.
அடுத்த கதை, “ சமத்துவர்” என்ற தலைப்பில் எழுதப்பட்டிருக்கிறது. சமத்துவத்தை நிலைநாட்டக் குரல் கொடுத்த மகான் ராமானுஜரின் சிலையைக் கண்டு தரிசனம் செய்ய வாரங்கல் நோக்கிப் பயணம் செய்யும் இரண்டு நண்பர்கள், வழியில் இலட்சக்கணக்கான மக்கள் பங்குகொள்ளும் பழங்குடித் திருவிழாவை நண்பரின் அறிவுரைப்படி பார்வையிட்டு விட்டுச் செல்ல முடிவு செய்கிறார்கள். அற்புதமான அனுபவமாக அமைகிறது அந்தத் திருவிழாக் காட்சிகள். காகதீய அரசர் ருத்ரபிரதாபன் கட்டிய கோயில், அங்கிருக்கும் சிற்பங்களின் சிறப்புகள், பழங்குடி மக்கள் வழிபடும் தெய்வங்களான சம்மக்கா, சரளக்கா, ஜம்பண்ணா பற்றிக் காலம்
காலமாக நிலவிவரும் நாட்டுப்புறக் கதை ஆகியவை நமக்குக் கிடைக்கும் அற்புதமான தகவல்கள். இறுதியில் சமத்துவத்தை நிலைநாட்டப் போராடிய மகானின் சிலையை அருகில் சென்றும் காணாமல் அவர்கள் திரும்புவதற்கான காரணம், நல்ல முரணாக அமைந்து நச்சென்ற கருத்தைத் தருகிறது. சமத்துவம் பற்றிய புதிய கண்ணோட்டமாகக் கதையின் முடிவு அமைந்தது.
அடுத்ததாக வாக்குக்கடன் கதை. இரயில் பயணத்தில் கிடைக்கும் புதிய நண்பர்களை முதலில் அருவருப்போடு பார்க்கும் மனிதர்கள், அவர்களைப் பற்றிய அபிப்பிராயத்தை எப்படி மாற்றிக் கொள்கிறார்கள் என்பதை ஆசிரியரின் இயல்பான நடையில் படிக்கும்போது மனதிற்கு இதமாக இருக்கிறது. பீகார் மாநிலவாசிகளான புதிய நண்பர்கள், இராமேஸ்வரம் பயணம் செய்வதற்குப் பின்னால் இருந்த காரணத்தைத் தெரிந்து கொள்ளும்போது புன்னகைக்காமல் இருக்க முடிவதில்லை.
அடுத்ததாக நடைத்திறப்புகள். நடைப்பயிற்சி செல்லும் முதியவரின் மனதில் ஓடும் சிந்தனைகள் அழகாக வெளிப்பட்டுள்ளன. வர்ணனைகள் மிகவும் அழகு. கணவன், மனைவி உறவின் அந்நியோந்நியம் அழகு. காலையில் நடைப்பயிற்சி செய்யும் சக மனிதர்களின் விந்தையான செயல்களை அப்பட்டமாக விவரித்த விதம் அழகு. இறுதியில் மாதுளைச் செடி பூவைப் பற்றிய வர்ணனை மனதில் அப்படியே நிற்கிறது. இறுதியில் தன்னுடைய உடல்நலனைப் பற்றிய கவலையுடன் முடிகிறது. மனித மனதை உளவியல் ரீதியாக அலசும் சிறப்பான கதையாக அமைந்திருந்தது இந்தக் கதை.
அடுத்த கதையான கையடக்க பூதம், கைப்பேசியின் நிறை, குறைகளை விவரிக்கும் கதையாக அமைந்திருந்தது. முதலில் கையடக்க பூதமாக விளங்கிய கைப்பேசியின் வாயிலாகப் பெற்ற பலன்களை அடுக்கிக்கொண்டே செல்லும் ஆசிரியர், பிற்பகுதியில் அலைபாயும் மனதை மேலும் அலைக்கழித்து நிம்மதியைக் குலைக்கும் சாதனமாக அதே கையடக்க பூதம் மாறுவதைத் தோலுரித்துக் காட்டுகிறார். அறிவியல் கண்டுபிடிப்புகளைக் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தாமல் நாம் அவற்றின் அடிமைகளாக மாறும்போது நம் அனைவருக்கும் இதே கதிதான் என்கிற படிப்பினை கிட்டுகிறது.
அடுத்து வருகிறது மாம்பழத்து வண்டு கதை. அம்மா, மகனின் பாசத்தைப் பேசும் கதை. தந்தையில்லாமல் தாயால் வளர்க்கப்படும் மகனின் திருமணத்தில் தொடங்குகிறது பிரச்சினை. அம்மா பார்த்துப் பார்த்துச் செய்துவைக்கும் திருமணம் தோல்வியில் முடியும்போது இரண்டு பேருமே மனம் தளர்ந்துபோகிறார்கள். ஒரு வண்டு வந்த மாம்பழத்தை
வைத்துக்கொண்டு வாழ்க்கையின் தத்துவத்தை எடுத்து வைக்கும் தாய்ப்பாசம் மனதைத் தொடுகிறது. இந்தக் கதையின் ஊடே வந்த பல சொல்லாடல்கள் என்னுடைய மனதைக் கவர்ந்தன. பெண்ணைப் பற்றி வர்ணிக்கும் போது அந்தப் பெண்ணின் தலை, குனிந்து தொங்கிய வாழைப்பூவுமில்லை; அண்ணாந்த சூரியகாந்தியும் இல்லை; ஒசிந்த முல்லைமொட்டு போல இயல்பாக நிமிர்ந்த தலை என்று ஆசிரியர் தந்த வர்ணனை மிகவும் அழகு. பொருத்தமான உவமைகள்.
அடுத்ததாக சொல்லுளி என்கிற கதை. கதையின் தலைப்பு என்னை ஈர்த்ததனால் அதை வாசிக்க ஆரம்பித்தேன். கல்லூரி வாழ்க்கை பற்றியது. மாணவனுக்கும், ஆசிரியருக்குமான உறவு பற்றிப் பேசுகிறது. எப்போதுமே மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மிகவும் உயர்ந்த இடத்தைக் கொடுத்து, சிம்மாசனத்தில் அமர வைக்கிறார்கள். அதுவும் படித்து முடித்து நல்ல வேலையில் அமரும்போது தற்செயலாக ஆசிரியரைச் சந்திக்க நேர்ந்தால், அவனுடைய மனதில் பொங்கும் சந்தோஷமே தனி. அதே போலத்தான் ஆசிரியருக்கும். தன்னுடைய மாணவன் முன்னுக்கு வந்துவிட்டான் என்று உணரும்போது பேருவகை கொள்கிறார் ஆசிரியர். இந்த அழகான உறவின் மகத்துவத்தைப் பேசிய கதையும் அற்புதம். அடுத்து மனப்பிசைவு கதை. மனப்பிசைவு என்கிற சொல்லுக்கேற்றபடி ஒருவிதமான உளவியல் ரீதியான கதை என்று சொல்லலாம்.
கடந்த காலத்தில் செய்த தவறு, ஒரு மனிதனை மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யும்போது என்ன ஆகிறது என்று அலசியிருக்கிறார் ஆசிரியர். சண்முகம் ஸார் கதாபாத்திரம் நம்முடைய பரிதாபத்தைச் சம்பாதித்துக் கொள்கிறது. மனசாட்சியுள்ள எந்த மனிதனுக்கும் ஏற்படும் அனுபவம்தான் சண்முகத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அவர் செய்த தவறு மிகவும் பெரியது. தனக்கே தெரியாமல் நூற்றுக்கணக்கான உயிர்களை அல்லவா பலி வாங்கியிருக்கிறார் சண்முகம்! தன்னுடைய வாழ்க்கையில் நேரும் இழப்புகளை ஒவ்வொன்றாக அவர் எதிர்கொள்ளும் போது வருந்துகிறார். தன்னுடைய தவறுதான் இந்த இழப்புகளுக்குக் காரணம் என்கிற குற்ற உணர்வு அவரை வாட்டியெடுக்கிறது.
இதிலிருந்து தப்பிக்க அவர் எடுக்கும் முடிவு சற்றே கோழைத்தனமானதாகத் தோன்றினாலும் அதைத் தவிர வேறு எதுவும் அவருக்குப் புலப்படாமல் போவது இயல்பாகவே தெரிகிறது. மனித மனத்தின் விந்தையான வெளிப்பாடு இந்தக் கதையில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.
அடுத்து நான் தேர்ந்தெடுத்தது அம்மத்தா பவன் கதை. மணிமேகலை, அம்மத்தாவாக மாறிய கதை. அவளுடைய மகனை ஆபுத்திரன் என்று கதை சொல்பவர் அழைக்கும்போது வாசகரின் மனம் நிச்சயமாக நெகிழ்ந்து போகிறது. சாதாரணக் கருவாக இருந்தாலும் கதை சொல்லிய விதமும், கதையில் ஒளிந்திருந்த உட்கருத்தும் மனதில் நச்சென்று பதிந்தன. நட்சத்திரத்தில் இருந்து உதிர்ந்த பொன் துகள்களாக வெந்த பருப்பு, மூன்று மணி வெயில் போல மிதமான சூட்டில் வந்து விழுந்த ஆம்லெட் போன்ற சொல்லாடல்கள் கதையின் நடையை அழகாக்கின. உணவு விற்பதை வியாபாரமாகக் கருதாமல் ஒரு சேவையாகக் கருதி அன்போடு பரிமாறும் அம்மத்தா போன்ற மனிதர்களின் எண்ணிக்கை இந்த உலகத்தில் கம்மிதான். மதுரை நகரத்தின் புட்டுத்தோப்பு, ஆரப்பாளையம், கோச்சடை, பெத்தானியாபுரம், தத்தனேரி ஆகிய இடங்கள் நமக்கு மதுரையைச் சுற்றிக் காட்டின.
மொத்தமும் என்கிற சிறுகதை, விளையாட்டு ஆசிரியராகப் பணிபுரியும் ஒருவனின் தினசரி வாழ்க்கை பற்றியது. புடுபுடு புயல் என்று தன்னுடைய இருசக்கர வாகனத்தை அவன் அழைப்பதில் இருந்து அவனுடைய வண்டி எப்போதும் வேகமாகச் செலுத்தப்படும் என்பது புரிகிறது. எப்போதும் வண்டியை விரட்டுவது அவனுடைய வழக்கம். அதற்கான காரணங்களை அவன் கற்பித்தாலும் தவறு, தவறுதானே? அவனுடைய ஒருநாள் காலைப் பயணத்தில் வழியில் சந்திக்கும் ஆட்டோவின் பின்னால் எழுதப்பட்டுள்ள வாசகம் அவனுடைய கவனத்தை ஈர்க்கிறது. அந்த வாசகம் அவனை எப்படி பாதித்தது, அவனுடைய மனநிலையை மாற்றியதா என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
உதிர்தலும், தளிர்த்தலும் கதை, வாழ்க்கை முழுவதும் மனைவியை மதிக்காமல் வாழ்ந்த கணவன், முதுமையில் மனைவியில்லாத வாழ்க்கை உணர்த்தும் கசப்பான உண்மையை எப்படி எடுத்துக் கொள்கிறான் என்று காட்டுகிறது. இளமையில் செய்யும் தவறுகள் முதுமையில் பூதாகரமாக உறுத்துகின்றன. ஹார்மோனி கதை பெண்களின் பிரச்சினையை உரக்கப் பேசுகிறது. மாமியார், மருமகள் உறவை இந்தக் கதை பேச ஆரம்பிக்கும்போது வேறுவிதமாகப் போகுமோ என்று நினைத்தேன். ஆனால், ஆசிரியரின் மாறுபட்ட அணுகுமுறை கதையை அழகாக்கிவிட்டது. நல்லதொரு கண்ணோட்டம். மொத்தத்தில், தேர்ந்தெடுத்த நல்முத்துகளால் கோர்க்கப்பட்ட அழகான முத்து மாலை. l
