ஏதென்சு நகரத்தில் முதலில் வந்தவை பள்ளிகள் அல்ல. நூலகங்களே. அந்தக் காலத்தில் கிரேக்கத்தில் மாபெரும் பேச்சாளர்கள் இருந்தார்கள். பெரிய கூட்டத்தைக் கூட்டி அவர்கள் அறிவார்த்தமான, ஆழமான உரைகளை நிகழ்த்துவார்கள். அந்த உரைகள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. தங்கள் நகரில் நிகழ்த்தப்படும் உரைகளைத் தொகுத்து எழுத்தில் பதிவு செய்து பாதுகாக்கத்தான் உரை-பெட்டகம் என்ற பெயரில் நூலகம் வந்தது. பிறகு அந்தந்த உரை- பெட்டகத்தை மையக் கட்டிடமாக வைத்து அடுத்த சந்ததிகளுக்கான கல்விக்கூடங்கள் வந்தன. அந்த மாபெரும் சிந்தனை உரைகளை மையமிட்டே பாடங்கள் நடத்தப்பட்டன. இது வரலாறு.
கல்விக்கூடங்களில் நூலகம் என்பதும் நூலகத்திலேயே பள்ளிக்கூடம் என்பதும் அந்தக் கால அலெக்சாந்திரியா முதல் நமது நாளந்தா வரை இருப்பினும் நவீனகாலப் பள்ளிக்கூடக் கல்விமுறையில் ஓர் அறை தனியே ஒதுக்கப்பட்டு ஒரு நூலகம் அமைக்கப்பட்டது 1800ல்தான். மிக வினோதமாக அது செயல்பட்டது. ‘லைப்ரரி வாகன்’ என்று ஓர் ஊர்திதான் முதலில் அறிமுகமானது. அது இத்தாலியின் புளாரன்ஸ் நகரில் தோன்றியது. லைப்ரரி வாகனங்கள் பல நகரங்களில் அறிமுகம் ஆனாலும் அன்று அச்சிடப்பட்ட புத்தகம் என்பதே மிக அபூர்வம் என்பதால் விரிவாக்கம் மெல்லத்தான் நடந்தது.
1806ல் சென்னையில் எல்விஸ் பிரவுன் என்பவர் மாகாண கலெக்டராக இருந்தபோது செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஒரு பள்ளி இருந்தது. 1780களிலேயே டேனிஷ் மிஷன்வாதிகள் தரங்கம்பாடியில் நூலகம் திறந்துவிட்டாலும் பள்ளிக்கூடத்தில் நூலகம் என்பது இந்தியாவிலேயே செயின்ட் ஜார்ஜ் கோட்டை மாடியில்தான் இருந்தது என்று ஒரு குறிப்பு உண்டு.
1876ல் அமெரிக்க லைப்ரரி குழுமத்தை மெல்வில் டூவே தொடங்குகிறார். இன்றும் கடைப்பிடிக்கப்படும் நூலக டூவே புத்தக அடுக்கும் முறை அவர் கொடுத்ததுதான். பலரும் நினைப்பதைப்போல டூவே-நூலக முறையை அறிமுகம் செய்தவர் ஜான் டூவே அல்ல- அது மெல்வில் டூவே (ஜான் டூவி என்றே பள்ளிகள்கூட இருந்தாலும் டூவி என்பதை ஆங்கிலேயர்கள் டூவே என்றே சொல்கிறார்கள். பள்ளிக்கல்விச் சீர்திருத்தக் கமிட்டி பிரிட்டனில் பள்ளி நூலகங்களைக் கட்டாயமாக்கியது. கிருத்துவ மிஷினரி பள்ளிகளில் வாசிப்பு என்பதே பைபிள் வாசிப்புதான். தர்காவில் நடந்த மதரஸாக்களில் புனித குரானும் வாசிக்கப்பட, காந்தியடிகளின் வாழ்க்கைக் கல்வி அல்லது நயி தாலிம் (Naitalim) என்று அழைக்கப்பட்ட அடிப்படை ஆதாரக் கல்வியில் பொதுப் புத்தக வாசிப்பும் சேர்க்கப்பட்டது. ஓர் இசுலாமியக் குழந்தை பைபிள் வாசிக்கலாம். ஓர் இந்துக் குழந்தை விரும்பினால் குரானின் மொழிபெயர்ப்பைக் கையில் எடுக்கலாம். அந்தக் கல்வித் திட்டத்தில் காந்தி திருக்குறள் வாசிப்பதையும் இணைத்தது எத்தனை சிறப்பு.
இன்று உலக அளவில் பள்ளி நூலகம்
உலகில் இன்றைய கல்விச் சூழலில் பள்ளி நூலகத் துறையின் தந்தை என்று யாரும் இல்லை. பள்ளி நூலகத்துறையின் தாய் என்று ஒரு மாமேதை போற்றப்படுகிறார். அவர்தான் குரூப்ஸ்கயா. சோவியத் நாட்டின் மாபெரும் தலைவர் லெனின் அவர்களின் இணையர் அவர், சோவியத் ரஷ்யாவில் 1924ல் உலகிலேயே முதன்முதலில் அனைத்து ஊர்களிலும் பள்ளி, அனைத்துப் பள்ளிகளிலும் நூலகம் என்று வீதி வீதியாக நூலக முனை (Liberary corner) திறந்தவர் குரூப்ஸ்கயா.
இன்று பின்லாந்தில் ஒவ்வொரு வகுப்பறையும் ஒரு நூலகமாகச் செயல்படுகிறது. ஆஸ்திரேலியாவில் அனைத்துப் பள்ளி நூலகங்களுமே இணைய வாசிப்பு அரங்கங்களாக மாற்றப்பட்டுள்ளன. பள்ளி நூலக மையம் என நியூசிலாந்தில் நூலக மாணவர் வருகை மட்டுமே அவரது வருகைப் பதிவேடு பதிவாகும் இடமாக உள்ளது. கனடாவில் பள்ளி நூலகங்களுக்காகவே தனியாக செய்தித்தாட்கள் நடத்தப்படுகின்றன. 1999ல் யுனெஸ்கோ பள்ளி நூலக அறிக்கை (UNESCO SCHOOL LIBRARY MANIFESTO) என்கிற ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி தாங்கள் கல்வி கற்கும் பள்ளிகளில் நூலகம் இருக்க வேண்டும் என்பது கற்போரான குழந்தைகள் உரிமைகளில் ஒன்றாக இணைக்கப்பட்டது. ஓர் அறிவா ஆற்றல் சமூகத்தைக் கட்டமைக்க தகவல் பரவலாக்கத்தை அடுத்த சந்ததிக்குக் கடத்திட நூலகம் ஒவ்வொரு பள்ளியிலும் அவரவர் வயது அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும் என்று அது அறைகூவல் விடுத்தது.
வகுப்பறை நிர்ப்பந்தக் கல்வியால் மேம்பட முடியாத குழந்தைகள் – நூலகத்திற்கு வந்து சுதந்திரமான கற்றல் நடவடிக்கையில் இறங்கலாம் என்றும் நூலகம் கற்றல் வெளியை, வகைப்பாட்டை விரிவாக்க உதவும் என்றும் அந்த யுனெஸ்கோ அறிக்கை உலகைக் கோரியது. உலக அளவில் இன்று பள்ளி நூலகங்களில் புத்தகங்கள், கல்விசார்ந்த திரைப்படங்கள், சஞ்சிகைகள், ஆசிரியர்களுக்கான குறிப்புதவி நூல்கள்- கற்றல் கற்பித்தல் உபகரணங்களான வரைபடம் முதல் பூகோள உருண்டை, வரைபட இயல் கணிதக் கருவிகள்- கற்றலுக்கான மாதிரிகள் என ஒரு பொக்கிஷமாகக் குவித்துப் பேணிக்காக்கப்படுகின்றன. பள்ளி நூலகங்களில் தேர்வு தொடர்பான முந்தைய ஆவணங்கள் – கேள்வித்தாட்கள் – விடைக் குறிப்புகளும் உண்டு.
தமிழ்நாடு பள்ளிக் கல்வியும் நூலகங்களும்
தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் நூலகங்கள் உள்ளன. சென்ற கலைஞர் அரசு வகுப்பறையில் புத்தகப் புதையல் திட்டத்தை அறிமுகம் செய்து தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பாக குழந்தைகள் வாசிக்கவென்றே நூல்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 2022ல் வாரம்தோறும் நூலக- பாடவேளை இருக்க வேண்டும் என்று தற்போதைய பள்ளிக் கல்வித்துறை ஓர் ஆணை வெளியிட்டு அமல்படுத்தியது.
அப்படித் தொடங்கப்பட்டதுதான் பள்ளி மாணவர் வாசிப்பு இயக்கம். அதன் கட்டளைகள் பின் வருவன ஆகும்.
ஒவ்வொரு வாரமும் நூலகப் பாட வேளையில் மாணவர்களைப் பள்ளி நூலகத்திற்கு அழைத்துச் சென்று அவரவர் விரும்பும் நூலை வாசிக்க அனுமதிக்க வேண்டும்.
மாணவர்கள் ஒரு புத்தகத்தை வீட்டிற்கும் எடுத்துச் சென்று வாசிக்க உதவிட வேண்டும். அடுத்த வாரம் வேறு புத்தகம் தரப்பட வேண்டும். நூலகப் பாட வேளையில், தான் வாசித்த புத்தகத்தைப் பற்றி மாணவர்கள் கலந்துரையாட ஆசிரியர் அனுமதிக்க வேண்டும். ஒரு மாணவர், தான் வாசித்த நூல் குறித்து ஓவியம் தீட்டலாம், சுவரொட்டி தயாரிக்கலாம், புத்தக மதிப்புரை எழுதலாம், நூல் அறிமுகம் செய்யலாம்.
தான் வாசித்த நூலின் மேற்கோள்களை வரிசைப்படுத்தி எழுதி நூலகத்தை அலங்கரிக்கலாம். இவற்றைப் போட்டிகளாகப் பள்ளியில் நடத்தலாம். சிறு புத்தகங்களைப் பரிசாகத் தரலாம்.
போட்டிகளை வட்டார, மாவட்ட அளவிலும் மாதா மாதம் நடத்தி வாசிப்பை மேம்படுத்த வேண்டும்.
பள்ளிதோறும் வாசிப்பு முகாம் நடத்தலாம். ஆண்டுதோறும் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தை வாசகர்-எழுத்தாளர் சந்திப்பும் நடத்த வேண்டும்.இவற்றில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. நமக்குத் தெரிந்து உலகிலேயே இத்தனை ஆழமாகத் திட்டமிடப்பட்ட பள்ளி நூலகத்திட்டம் எதுவும் இல்லை. நாம் பாராட்டி வரவேற்கத்தகுந்த அற்புதத் திட்டம் இது. வாசிப்பைப் பட்டிதொட்டிதோறும் கொண்டு செல்ல இதுவே சிறப்பான வழி.
பள்ளி நூலகங்களைப் பலப்படுத்துவோம்
செய்தித்தாள் வாசிப்பைக் குழந்தைகளிடம் எடுத்துச் செல்ல வேண்டும். வாசித்ததைத் திறந்த மனதோடு விவாதிக்க அனுமதித்தல்.
சாரணர் முகாம்கள்போல பள்ளிதோறும் நூலக வாசிப்பு முகாம்கள் நடத்தி சான்றிதழ் தரலாம்.
தமிழகத்தின் அண்ணா நூற்றாண்டு நூலகம், கன்னிமாரா நூலகம், மதுரை சரஸ்வதி மகால், கலைஞர் நூற்றாண்டு நூலகம் என வரலாற்றுச் சிறப்பு மிக்க நூலகங்களுக்கு பள்ளி மாணவர்களைச் சுற்றுலாப் பயணங்களாக அழைத்துச் செல்ல வேண்டும்.
மாவட்டம்தோறும் நடக்கும் புத்தகக் காட்சிகளுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று அவர்களே தங்கள் பள்ளி நூலகத்திற்கான புத்தகங்களைத் தேர்வு செய்ய அனுமதிக்கலாம். இது வாசிப்பு ஆர்வத்தைக் கூட்டும்.
வகுப்பிற்கும் வயதிற்கும் ஏற்றார்போலப் புத்தக வங்கிகளைப் பள்ளிகளில் ஏற்படுத்துதல் சிறப்பு. இதற்கு ஊர்ப் பெரியவர்கள் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் உதவலாம்.
நூலாசிரியர்கள் விருது பெற்ற எழுத்தாளர் வாசகர் சந்திப்பைப் பள்ளி நூலகங்கள் நடத்தலாம். வகுப்பறை வாசகர் வட்டம் அமைத்து, தரமான புத்தக உரையாடலை நிகழ்த்தலாம். எல்லாவற்றிற்கும் மேலாக மாணவர் கற்பனை வளத்தை, படைப்பாக்கத்தை ஊக்குவித்து ஒவ்வொரு பள்ளி நூலகமும் ஓர் ஆண்டு மலரை வெளியிட்டு, குழந்தைப் படைப்பாளிகளை உருவாக்கலாம்.
பள்ளி வாசிப்பே வாகை சூடும் வாசிப்பு
தனது பள்ளிப் பருவத்தில் வாசித்த ஒரே ஒரு புத்தகம் தன் வாழ்வையே மாற்றியதாக அறிவித்தவர் பலர்.
தன் பள்ளிப் பருவத்திலேயே ஹெகலை வாசித்தவர்தான் கார்ல் மார்க்ஸ்.
கார்லைலின் ‘புவி அமைப்பு’ எனும் நூலைப் பள்ளி நூலகத்தில் எடுத்து வாசித்ததால் புரட்டிப் போடப்பட்ட மாமேதை சார்லஸ் டார்வின்.
தன் ஆசிரியர் பள்ளி நூலகத்தில் இருந்து எடுத்துக் கொடுத்த இமானுவேல் காண்ட் எழுதிய ‘தி கிரிட்டிக் ஆஃப் பியூர் ரீசன்’ நூல்தான் ஐன்ஸ்டீனை மேதைமை நோக்கி செலுத்தியது.
தனது தலைமை ஆசிரியர் அறையில் தான் கண்டெடுத்த கலீலியோ எழுதிய – ‘டூ வேர்ல்டு சிஸ்டம்ஸ்’ நூல் தனது சிந்தனைப் போக்கையே மாற்றியதாக அறிவித்தார் ஐசக் நியூட்டன்.
தன் எட்டு வயதில் தன் தந்தையின் புத்தக அலமாரியில் இருந்து எடுத்த ஹெர்மன் ஹோல்ட் எழுதிய ‘தி சென்ஷேஷன் ஆஃப் டோன்’ புத்தகத்தால் இயற்பியல் பக்கம் போனார் நோபல் அறிஞர் சர்.சி.வி.ராமன், மைக்கேல் மதுசூதன் தத் எழுதிய ‘மேக்நாத்வதம்’ எனும் காவியத்தைப் பள்ளி நூலகத்தில் இருந்து எடுத்து வாசித்ததால் பத்து வயதில் தன்னைக் கண்டடைந்த மாமேதை அறிவியல் அறிஞர் மேக்நாத் சாஹா.
தன் வீட்டு உணவுச் சாலையில் பரிமாறும் சிறுவன் சாப்பிட வந்த கல்லூரி அண்ணாக்களிடமிருந்து கிடைத்த எஸ்.எஸ்.லோனி எழுதிய ‘அட்வான்ஸ்டு ட்ரிக்னாமெட்ரி’ எனும் ஒரே ஒரு புத்தகம்தான் ஒரு சீனிவாச ராமானுஜனைக் கணிதமேதை ஆக்கியது.
அறிவியல் மேதைகள் மட்டுமல்ல… இந்தியத் தத்துவ ஞானத்தை, தான் படித்த பள்ளி நூலகத்திலேயே ஒரு வாரம் பிடிவாதமாகத் தங்கி வாசித்ததன் மூலமே வார்த்தெடுக்கப்பட்டவர்தான் வீரத்துறவி விவேகானந்தர்.
படுத்து உறங்கிட ஒருவருக்கே இடம் இருந்த ஓலைக்குடிசை வாழ்விலும் அதிகாலை ஒரு மணிவரை தந்தையை உறங்கச் சொல்லியும் அவர் எழுந்த பிறகேதான் உறங்க முடியும் எனும் நிலையிலும் பள்ளி நூலகம் தந்த புத்தகங்களோடு வீதி ஓர விளக்கின் கீழ் தஞ்சம் புகுந்தவர்தான் சட்டமேதை என உலகே இன்றும் வியக்கும் அண்ணல் அம்பேத்கர்.
பள்ளி நூலகங்களைப் பலப்படுத்தினால் ஒரு தேசத்தையே பலப்படுத்த முடியும். பள்ளித் தலமனைத்தும் வாசிப்பை விதைப்போம். அறிவுப் போரொளி வீசும் சந்ததிகளைப் படைப்போம். l