ஒரு புனைவைப் படித்து முடித்த பின்னும் நீண்ட நாட்களுக்கு நம் சிந்தனையிலேயே இருக்கிறது என்றால் அதன் கரு சமூகத்தின் மீதான நம்பிக்கை, நெருக்கம், அதனின் கதை மாந்தர்கள் கடத்தும் செய்தி, எனப் பல விசயங்கள் இருக்கும். ஒரு வாசகனாக அப்படியான மனநிலையை உருவாக்கியதுதான் திரு. சுரேஷ்குமார இந்திரஜித் எழுத்தில் வந்துள்ள “அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்”. 169 பக்கங்கள் கொண்ட ஒரு சிறு நாவல்.. நமக்கு முந்தைய தலைமுறை செய்திட்ட ஓர் ஆகப்பெரும் சமூக நீதி காக்கும் பணியான “ஆலய நுழைவுப் போராட்டம்.” சாதியப் படி நிலைகளில் கீழே உள்ளவர்கள் கோயிலுக்குள் நுழைந்து கடவுளைப் பார்க்க, தரிசிக்க முடியாத ஓர் அவல நிலை இருந்தது. அது எப்படி மாற்றப்பட்டது, அதற்காக நடைபெற்ற ஆலய நுழைவுப் போராட்டங்கள், அதைத் தலைமையேற்று நடத்தியவர்கள், பின்னணி என அதுவே ஒரு பெரும் சரித்திரம். அத்தகைய மகத்தான போராட்டங்களை மையமாக கொண்டு தான் இந்தப் புனைவு வந்துள்ளது.
பொதுவாகப் புனைவை வாசிக்கும்போது அது நம்மைப் புனைவின் காலத்துக்கே இட்டுச் செல்லும். அதுதான் அந்த எழுத்தின் வெற்றி..அதில் இது முழு வெற்றி பெற்றுள்ளது. சமூக நீதி- சாதிய ஒடுக்குமுறை- அதற்கு எதிரான கிளர்ச்சி, அதனின் ஊடாக ஒரு புதுமைக்காதல், சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட மக்களுக்கான கலகக் குரல் –பழமைவாதிகளின் வறட்டுப் பிடிவாதம், புதுமையை விரும்புவோர் செய்யும் மனிதநேயச் செயல்கள், என கதை முழுவதும் இதைச் சொல்லுகிறது. இந்த நாவலில் வரும் பெரும்பாலான கதை மாந்தர்கள் நேர்மையானவர்களாக, நற்சிந்தனை கொண்டவர்களாக, சமூக மாற்றத்திற்காக உழைப்பவர்களாக உலா வருகின்றனர். நம் சமூகத்தில் நடந்த ஒரு போராட்டத்தை மையமாகக் கொண்டு அனைத்துத் தரப்பு வாசகனுக்கும் பிடிக்கும் வண்ணம் எழுதி ஈர்த்துள்ளார் நூலாசிரியர். எந்தச் சம்பவத்தையும் மிகையாகவோ, குறைவாகவோ எழுதவில்லை. சம காலத்தில் நடந்தவை என்பதால் பல முக்கியமான ஆவணங்கள், ஆதாரங்களையும் இணைத்துள்ளார்.
இந்தக் குறு நாவலின் முக்கியக் கதா பாத்திரங்களான, பத்திரிகையாளர் அம்பிகா, அவருடைய குடும்பம், ஆசாரமான அக்ரஹாரத்து வாழ்க்கை முறை, எவ்வாறு புதுமைப் பெண்ணாக மிளிர்ந்து நிற்கிறார் என்பது நேர்த்தியாகவும், கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்படும் சங்கரலிங்க நாடார், அவரின் குடும்பம், எட்வர்ட் ஜென்னர் எனும் ஆங்கிலேய அதிகாரி, அவரின் முற்போக்குச் சிந்தனை, என கதாபாத்திரங்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்கும். காரல் மார்க்ஸ், மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் எனப் பலர் புனைவுக்குள் மேற்கோள்களாகவும், இருவர் இயல்பாகவும் கதை ஒட்டத்திலேயே வருகிறார்கள். எல்லாம் இணைந்து ஒரு நறுமணக் கதம்ப மாலையாக மணக்கிறது. வாசிப்பில் ஒரு புதிய சுகானுபவத்தை நிச்சயம் தரும் படைப்பு. l