காக்கிக் கால்சட்டை போட்டவர்களின் பிடியில் நாடு இப்போது இருக்கிறது. ஒடுக்குமுறை நிலவும் நாட்டில் அது குறித்து எதிர்ப்புணர்வு கொள்ளாத ஒரு பெரும் கூட்டம் வாழ்ந்து கொண்டிருப்பது இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் நிகழாத ஒன்றல்ல. இன்றிருப்பது போன்றதொரு சூழல், ஒரு நூற்றாண்டுக்கு முன்பும் தமிழகத்தில் நிலவியது. பாரதியின் சொற்களில் சொல்வதென்றால் அன்றைய சென்னை மாகாணம் தூங்குமூஞ்சி மாகாணமாக இருந்தது. அந்தச் சமூக வரலாற்றுச்சூழலில் ஒரு மின்னல் கீற்றுப்போலத் தெறித்துப் பரந்துபட்ட மக்களின் எதிர்ப்புணர்வைத் திருநெல்வேலி- தூத்துக்குடி எழுச்சி வெளிப்படுத்தியது.
கி.பி. 1908ஆம் ஆண்டு நடந்தது திருநெல்வேலி எழுச்சி. ஆங்கிலேயரின் வார்த்தைகளில் ‘கலகம்’. இந்த மாபெரும் மக்கள் எழுச்சியை நம் கண் முன்னே படம் பிடித்துக் காட்டுகிறது, 2024ஆம் ஆண்டு தமிழ் மொழிக்கான சாகித்திய அகாடமி விருது பெற்றுள்ள, பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் எழுதிய ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908 என்ற அபுனைவு நூல். கால்சட்டை அணிந்த பள்ளிப்பருவத்திலேயே சலபதி, வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாற்றை எழுதத் துணிகிறார். 1987இல் வ.உ.சி.யும் திருநெல்வேலி எழுச்சியும் என்ற 96 பக்கங்கள் கொண்ட சிறு நூலை எழுதுகிறார். புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியர் கே.என்.பணிக்கர் வழிகாட்டுதலில் தமிழ் அச்சுக்கலை வரலாறு பற்றிய முனைவர் பட்ட ஆய்வுக்குப் பிறகு, கூர்ந்த தேடுதலும், சீரான ஆய்வு நெறியும் கொண்ட ஓர் ஆய்வாளராக வளர்கிறார் சலபதி.
40 ஆண்டுக் காலம் சென்னை, தில்லி, லண்டன், சிகாகோ எனப் பல ஊர்களில் உள்ள ஆவணக் காப்பகங்களிலும், கள ஆய்விலும் வ.உ.சி. பற்றிய ஏராளமான ஆவணங்களைக் கண்டடைகிறார் அவர். வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாறை எழுதிவிட வேண்டும் என்ற வேட்கையில் தன் தேடலைத் தொடங்கிய சலபதி இதுவரை தமிழில், ‘வ.உ.சி. கடிதங்கள்’(1984), ‘வ.உ.சி.யின் சிவஞானபோத உரை’(1999), ‘வ.உ.சி: திலக மகரிஷி’(2010) ஆகியவற்றைப் பதிப்பித்தும், ‘வ.உ.சி.யும், திருநெல்வேலி எழுச்சியும்(1987), ‘வ.உ.சி.யும் பாரதியும்’(1994), வ.உ.சி.யும், காந்தியும் 347 ரூபாய் 12 அணா’(2021), இப்பொழுது சாகித்திய அகடமி விருது பெற்றுள்ள ‘திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சியும் 1908’(2022) ஆகிய நூல்களை எழுதித் தந்துள்ளார்.
வ.உ.சி.யின் முன் முயற்சியில், பிரிட்டிஷ் கப்பல் போக்குவரத்து மேலாதிக்கத்தை எதிர்த்துத் தொடங்கப்பட்ட சுதேசி நேவிகேஷன் கம்பெனி லிமிடெட் கப்பல் கம்பெனியின் கதையை ‘சுதேசி ஸ்டீம்’ என்ற தலைப்பிலான ஆங்கில நூல் வடிவில் 2023 ஆம் ஆண்டு வெளியிட்டார். அது இந்திய அண்மை வரலாறு எழுதுதல் களத்தில் ஒரு மிக முக்கிய வரவாகும்.
இந்த நூல், ‘கலகம் பிறந்தது’, ‘எழுச்சி’, ‘எழுச்சிக்குப் பிறகு’, ‘திருநெல்வேலி, சென்னை, கல்கத்தா, லண்டன்’, ‘திமிர்வரி’, ‘வ.உ.சி.யின் நிலைப்பாடு’, ‘நியாயம் பிறந்தததா?’ என எட்டு இயல்களாக(அத்தியாயங்களாக) விரித்து எழுதப்பட்டுள்ளது. ஓர் இளைஞனாக சலபதி எழுதிப் பார்த்த திருநெல்வேலி எழுச்சி பற்றிய சிறு நூலின் மீதான பார்வை காலப்போக்கில் செழுமை பெற்று வளர்ந்துள்ளது. வரலாறு என்பது கதை விடுவது; வரலாறு என்பது அரசர்களின் பெருமை சிறுமைகளை எழுதுவது என்பன போன்ற கண்ணோட்டங்கள் இருபதாம் நூற்றாண்டில் கேள்விக்குள்ளாகிவிட்டன 1961இல் ஃபிரான்ட்ஸ் ஃபேனன் எழுதிய ‘பூமியின் நசுக்கப்பட்டவர்கள்’ என்ற நூல் உலகின் பார்வையை உலுக்கி மாற்றிய ஒரு நூல். மேலும் வரலாற்றாய்வாளர்கள் இ.பி.தாம்சன், எரிக் ஹாப்ஸ்வாம், ஜார்ஜ் ருடே, ரணஜித் குஹா போன்றோரின் எழுத்துகள் புதிய வாயில்களைத் தனக்குத் திறந்து விட்டதாக சலபதி முன்னுரையில் குறிப்பிடுகிறார். வ.உ.சி. என்ற ஒரு தனி மனிதரின் தலைமையில் தூத்துக்குடி திருநெல்வேலி மக்கள் நெஞ்சுரம் பெற்றனர் என்பது உலகத்தார் பரவலாகக் கொண்டிருக்கும் கருத்து. வ.உ.சி.யின் தோளோடு தோளாகக் களத்தில் நின்று பெயர் சொல்லும், பெயரறியாப் பல மக்களின் காலனியாதிக்க எதிர்ப்புப் பங்களிப்பைத் தன் நூலில் பதிவு செய்துள்ளார் சலபதி.
1987இல் வெளியான நூலின் தலைப்பு ‘வ.உ.சி.யும், திருநெல்வேலி எழுச்சியும்’ என்று இருக்கிறது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது சலபதி எழுதியுள்ள ஆய்வு நூலின் தலைப்பு ‘திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் – 1908’. வரலாறு குறித்த அவருடைய பார்வையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைத் தலைப்பின் மாற்றமும் சுட்டுகிறது. சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயர் ஆகியோரின் கனல் மூட்டும் பேச்சுகள் சுதேசிப் போராட்டக் களத்தில் வ.உ.சிக்குக் கூடுதல் பலம் சேர்த்தன. இம்மூவரும் அரங்கங்களிலும், கோயில் தெருமுனைகளிலும், தாமிரபரணி ஆற்றங்கரையிலும், தூத்துக்குடிக் கடற்கரையிலும் அழகு தமிழில் பேசிப் பொதுமக்களை அரசியல்படுத்தினர். வழக்குரைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மீனவர்கள், வணிகர்கள், நெசவாளர்கள், முன்னாள் போலீஸ்காரர்கள் எனச் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் சுதேசிய அணியில் திரண்டனர். எல்லாவற்றிற்கும் மேலாகக் குதிரை வண்டிக்காரர்கள், கசாப்புக் கடைக்காரர்கள், ஆலைத் தொழிலாளர்கள், தூய்மைத் தொழிலாளர், நாவிதர், சிறு கடைக்காரர்கள் எனச் சமூகப் பொருளாதாரத்தின் கீழ் மட்டத்தில் இருந்தவர்களும் பிரிட்டிஷ் கொடுங்கோன்மைக்கு எதிராகக் களத்தில் முன் வரிசையில் நின்றனர். 1908 மார்ச் எட்டாம் தேதி நடந்த திருநெல்வேலி எழுச்சிக்கு முழுமுதற் காரணம் வ. உ. சிதம்பரனாரும், சுப்ரமணிய சிவாவும்தான் எனக் குறிப்பிட்டுக் குற்றம் சாட்டி, பிணையிட்டு, ஒருதலையாக வழக்கு நடத்தி, ஒரு தலைப்பட்சமாகத் தீர்ப்பை வழங்கிக் கொடுஞ்சிறையில் அடைத்தனர் பிரிட்டிஷார். ஆனால், தலைவர்கள் இல்லாத மக்கள் சமூகம் தன்னிச்சையாகத் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதே திருநெல்வேலி எழுச்சி.
பிரிட்டிஷ் அரசு ஆவணங்கள், ரகசியப் போலீசாரின் மந்தண அறிக்கைகள், சுதேசமித்திரன், இந்தியா, மெட்ராஸ் மெயில், திலகரின் மராட்டா, அரவிந்தரின் வந்தே மாதரம் ஆகிய இதழ்களை ஆய்வு செய்து இந்நூலை எழுதியுள்ளார் சலபதி. காலனியாதிக்கத்தின் கொடும் பிடியில் அகப்பட்டிருந்த மக்கள் ஒரு கட்டத்தில் தங்கள் தலைவர்களின் கட்டுப்பாடுகளை மீறித் திமிறி எழும் உணர்வைப் பெறுகிறார்கள் என ஃபிரான்ட்ஸ் ஃபேனன் எழுதுகிறார். காலனியாதிக்க அடிமைநாடுகளில் அரசியல் கட்சிகளோ, தலைவர்களோ ஆயுதப் புரட்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றாலும் முன்தயாரிப்பில் ஈடுபடவில்லை என்றாலும் காலனியாதிக்க அரசின் கொடுங்கோன்மை நடவடிக்கைகள் மக்களைக் கிளர்ந்தெழ வைக்கின்றன. அத்தருணத்தில் மக்களை மேலும் அடக்க தலைவர்களைக் காலனி அரசு கைது செய்யும் என எழுதியுள்ளார் ஃபிரான்ட்ஸ் ஃபேனன். 120 ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலி தூத்துக்குடியில் நடந்த சம்பவங்களை ஃபேனனின் எழுத்துகள் பின்னணியில் சலபதி எழுதியிருக்கிறார்.
ஒட்டப்பிடாரம் என்ற சிற்றூரில் தந்தையைப் போலவே இரண்டாம் நிலை வழக்குரைஞராக உள்ளூர் கோர்ட்டில் தொழில் தொடங்கிய வ.உ.சி., 1900 ஆம் ஆண்டு தூத்துக்குடிக்கு வருகிறார். அதற்கு முன், அவரது முதல் மனைவி வள்ளியம்மாள் இறந்துவிட மீனாட்சியம்மாளை மணமுடிக்கிறார். தூத்துக்குடியில் தமிழ்ச்சங்கம், சைவ சபைப் பணிகள் என்றிருந்த வ.உ.சி. யின் பொதுவாழ்வு 1905க்கு பிறகு பெரிய மாற்றம் பெறுகிறது. அப்போது கடல் போக்குவரத்து வணிகத்தில் பிரிட்டிஷ் டீம் நேவிகேஷன் கம்பெனி ஏகபோகமாகக் கோலோச்சிக் கொண்டிருந்தது. ஆங்கிலேயனின் கப்பலுக்குக் கப்பம் கட்டி மாளவில்லை எனத் தூத்துக்குடி வணிகர்கள் கொழும்புவுக்கும், தூத்துக்குடிக்கும் இடையே வாடகைக்குக் கப்பல் விட முயற்சிப்பதாகச் செய்திகள் அடிபடத் தொடங்குகின்றன. அந்தச் செய்திகளில் தொடக்கம் முதலே வ.உ.சி.யின் பெயரும் இழையோடுகிறது.
வ.உ.சி.யின் கடும் முயற்சியால் 1906ஆம் ஆண்டு சுதேசி நேவிகேஷன் கம்பெனி லிமிடெட் இந்தியரின் பொருள் முதலீட்டால் உருப்பெற்றுச் சிறப்பாக நடைபெறுகிறது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் ஜும்லாக்களைத் துணிவுடன் எதிர் கொண்டு கப்பல் கம்பெனியை நடத்திக் காட்டினார் வ.உ.சி. 1907 ஆம் ஆண்டு டிசம்பரில் சூரத் நகரில் நிகழ்ந்த காங்கிரஸ் மாநாட்டில் சுப்பிரமணிய பாரதி, சர்க்கரை செட்டியார் எனப்பலருடன் பாலகங்காதர திலகரின் தலைமையிலான தீவிரவாதப் பிரிவுக்குத் தமிழகத் தலைமை ஏற்றார். வ.உ.சி.யுடன் அத்தருணத்தில் திருவனந்தபுரத்திலிருந்து துறவிக்கோலத்தில் வந்த தேசியவாதி சுப்பிரமணிய சிவா வ.உ.சி அணி சேர்கிறார். தொழிலாளர் போராட்டங்களையும் வ.உ.சி. வழி நடத்துகிறார். 1908 பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை நடைபெற்ற, தூத்துக்குடியில் கோரல் பஞ்சாலைத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தை வ.உ.சி. வழி நடத்தினார். சப் கலெக்டர் ஆஷுடன் பேச்சு வார்த்தை நடத்தித் தொழிலாளர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்க வைத்தார் வ.உ.சி. வேலைநிறுத்தம் வெற்றி பெற்றது.
பிரிட்டிஷார் மன உளைச்சலுக்கு ஆளாகினர். மன உளைச்சலின் மையப்புள்ளி வ.உ.சி. வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததைத்தொடர்ந்து சுதேசித்தலைவர்கள் திலகர் தலைமையிலான தீவிரவாதக் காங்கிரஸ் பிரிவின் தலைவரான விபின் சந்திர பாலின் விடுதலையை மார்ச் 9ஆம் தேதி கொண்டாட மக்களுக்கு அழைப்பு விடுத்தனர். பிரிட்டிஷ் அரசு அனுமதி மறுத்தது. தடையை மீறி, பால் விடுதலையைக் கொண்டாடினர். மார்ச் 12ஆம் தேதி வ.உ.சி. உட்பட 3 தலைவர்களைக் கைது செய்து சிறையிலடைத்தது அரசு. ஃபிரான்ட்ஸ் ஃபேனன் கருத்துக்கு மாறாகத் தலைவர்கள் கைது மக்களிடம் கிளர்ச்சியை உருவாக்கியது. மார்ச் 13ஆம் தேதி தாமிரபரணிக் கரையிலிருந்த வீரராகவபுரம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில், வணிகர்கள் கடைகளை அடைக்க மக்கள் திரள் ஒன்று உருவானது. ஆங்கிலேய அதிகாரச் சின்னங்களான நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்களை நோக்கிச் சென்றது மக்கள் கூட்டம். வழியில் சுதேசிப் போராட்டக்காரர்களும், நெல்லை இந்துக் கல்லூரி மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்தனர். பிரிட்டிஷ் அதிகாரிகளையோ, ஐரோப்பியர்களையோ குறி வைக்காமல் கட்டடங்களையும் மண்ணெண்ணெய்க் கிடங்குகளையும் தீ வைத்து எரித்தது மக்கள் கூட்டம். கடுங்காவல் படையைக் கொண்டு, துப்பாக்கிச் சூடு நடத்தி நூற்றுக்கணக்கானவர்களைக் கைது செய்து எழுச்சியை அடக்கியது பிரிட்டிஷ் அரசு. தண்டக்காவல் படையைக் கொண்டு வந்து நிறுத்தி, திமிர்வரி போட்டு மக்களின் எழுச்சியை ஒடுக்கியது.
‘சிப்பாயைக் கண்டஞ்சுவார், ஊர்ச்சேவகன் வருதல் கண்டு மனம் பதைப்பார். துப்பாக்கி கொண்டொருவன் வெகு தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார். அப்பால் எவனோ செல்வான். அவன் ஆடையைக் கண்டு பயந்தெழுந்து நிற்பார், எப்போதும் கைகட்டுவார், இவர் யாரிடத்தும் பூனைகள் போல் ஏங்கி நடப்பார்’ என்று பாரதி வர்ணித்த மக்களின் மனநிலை இருந்த ஒரு காலச்சூழல் ‘நாளும் வெளியில் வண்டியில் செல்கையில் வந்தே மாதரம் அண்டி அடிப்பதா என அலறினர் ஐரோப்பியர்’ என்று வ.உ.சி. வர்ணிப்பது போல மாறிவிட்டது.
சாகித்ய அகாடமி விருது பெற்றமைக்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேராசிரியர் சலபதியை அழைத்து வாழ்த்தினார். அப்போது, 1908 எழுச்சிக்குத் தூத்துக்குடி திருநெல்வேலி நகரங்களில் இதுவரை நினைவுச்சின்னம் இல்லை என்ற தனது ஆதங்கத்தைச் சலபதி வெளிப்படுத்தியதைச் செய்தித்தாள்களில் பார்த்தேன். வ.உ.சி. யும் அவரைச் சார்ந்தவரும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புக்கனலை மூட்டிய வரலாற்றை, மக்கள் மனங்களில் ஆழமாகப் பதிவு செய்ய, நினைவில் நிறுத்த, வாழ வைக்க சலபதியின் நூல்கள் அடிப்படையாக நிற்கின்றன, நிற்கும் என்பது என் உறுதியான எண்ணம். l
