ஈரோட்டில் டிசம்பர் 21- இல் ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2023 ஆம் ஆண்டிற்கான கலை இலக்கிய விருதுகளை வழங்கி கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் பெருமைப்படுத்தியுள்ளது.
விழாவின் தொடக்கமாகக் கல்லூரியின் முகப்பில் விருதாளர்களுக்கு ரோஜா மலர்களாலான மாலைகள் அணிவிக்கப்பட்டுப் பறை இசை முழங்க, பார்வையாளர்கள் முன்னிலையில் விழா நடைபெறும் திருவள்ளுவர் அரங்கம் வரை அழைத்துச் செல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, திருமதி ஜெயந்தஸ்ரீ தலைமையில், வீணை குரலிசை நிகழ்ச்சியுடன் நிகழ்வைத் தொடங்கி வைத்தனர். விருதளிப்பு விழாவிற்குத் தமுஎகச அமைபின் மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமை வகித்தார். ஈரோடு மாவட்டச் செயலாளர் இ. கலைக்கோவன் வரவேற்றார். அவரின் வரவேற்புரையில், “நல்ல புத்தகங்களைப் படிக்க விரும்பும் வாசகர்களுக்கு,அவை எவை,அவற்றை எங்கே,எப்படி வாங்குவது போன்ற விவரங்களையெல்லாம் தெரிவித்து அவர்களை ஆற்றுப்படுத்தும் அமைப்புதான் த மு எ க ச” என்று பெருமித்த்துடன் குறிப்பிட்டார். சங்க காலத்துப் பாடல்களின் மரபில்.பாணர்களுக்குப் பரிசில் வழங்கக் கூடிய வள்ளல்கள் எங்கெல்லாம் இருக்கிறார்கள்,அவர்களைப் போய்ப்பார்ப்பதற்கான வழிவகைகள் எவை என்று எற்கெனவே பரிசில்கள் பெற்று வந்த முன்னோடிப் புலவர்கள் புதியவர்களை ஆற்றுப்படுத்துவர். அந்த மரபைத் த மு எ க சங்கம் புத்தகங்களை அறிமுகம் செய்வதன் மூலம் தொடர்கிறது என்று ஒர் ஒப்பீட்டுடன் அவர் அனைவரையும் வரவேற்றுப் பெசியது அனைவரையும் கவர்ந்தது.
எழுத்தாளரும்,மாற்றுச் சிந்தனைகளைத் தனது ஆய்வு நூல்கள் வாயிலாக விதைத்துக் கொண்டிருப்பவருமான ஜமாலன் அவர்கள் கருத்துரையாற்றினார். முற்போக்கு இலக்கிய இயக்கத்திற்கு வாழ்நாள் பங்களிப்புச் செய்த ஆளுமைக்கான அமரர் கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருதிற்கு எழுத்தாளர் ராஜ் கௌதமன் தேர்வு செய்யப்பட்டிருந்தார். சமீபத்தில் மறைந்த அவர், இறப்பதற்கு முன்பே இவ்விருது அறிவிக்கப்பட்டு அவரிடம் நேரில் வழங்கப்பட்டிருந்தது. ராஜ்கௌதமன் பற்றிய காணொளி விழாவில் திரையிடப்பட்டது. சுமார் 45 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்தப்படம் திரையிடப்படும் போதே பகல் உணவுக்கான நேரம் தாண்டியிருந்த்து. ஆனால்,மறைந்த ஒரு பண்பாட்டுப்போராளியின் நினைவுகளுக்கு அஞ்சலி செய்யும் விதத்தில் அரங்கு நிறைந்திருந்த அந்தக் கூட்டத்திலிருந்து யாருமே எழுந்து போகவில்லை!
2023-ஆம் ஆண்டுக்கான கலை-இலக்கிய விருதுகள் வரிசையில், தொன்மை சார் நூலான ‘சிலப்பதிகாரமும் கண்ணகி வழிபாடும்’ என்ற நூலிற்குக் கேரள ஆய்வாளர் ப.ஜெயகிருஷ்ணனுக்குத் தோழர் கே.முத்தையா நினைவு விருது வழங்கப்பட்டது.
‘பற்சக்கரம்’ நாவலுக்காக எஸ்.தேவி, கே.பி.பாலச்சந்தர் விருது பெற்றார். விளிம்பு நிலை மக்கள் குறித்த படைப்பான ‘ஊருக்கு ஒரு குடி’ ஆசிரியர் ஜூலியஸ், சு.சமுத்திரம் நினைவு விருது பெற்றார். கலை இலக்கிய விமர்சன நூலான ‘ஈழத்தமிழரின் புலம் பெயர் இலக்கியம்’என்ற அல் புனைவு நூலினை எழுதிய முனைவர் இரா.செங்கொடிக்கு, இரா.நாகசுந்தரம் நினைவு விருது வழங்கப்பட்டது. ச.ப்ரியாவின் ‘அனலிக்கா’ கவிதைத் தொகுப்பிற்கு வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன்-செல்லம்மாள் (ப.ஜெகநாதன்) நினைவு விருது வழங்கப்பட்டது. ‘பசி கொண்ட இரவு’ சிறுகதைத் தொகுப்பிற்கு அகிலா சேதுராமன் நினைவு விருதினைக் கி.அமுதா செல்வி பெற்றார்.
மொழி பெயர்ப்பு நூலான ‘பாலைச்சுனை’க்கு சுனில் லால் மஞ்சாலும்மூடு வ.சுப. மாணிக்கனார் நினைவு விருது பெற்றார்.அந்நூலை எழுதிய மலையாள எழுத்தளர் தீபேஷ் கரிம்புங்கரை உடனிருந்தார். அவர்களோடு, அந்த நூலின் நாயகர் எனக் கருதத்தக்க அமானுல்லா நேரில் வந்து தன் நினைவுகளைக் கண்ணீர் ததும்பப் பகிர்ந்து கொண்ட போது,அரங்கமே அமைதியில் உறைந்து போனது.
குழந்தை இலக்கிய நூலான ‘இதிரா’ ஆசிரியர் ஸ்ரீஜோதி விஜேந்திரன் இராஜபாளையம் மணிமேகலை மன்றம் (கொ.மா.கோதண்டம்) விருது பெற்றார். மொழி வளர்ச்சிக்கு உதவும் நூல் வரிசையில் தேன்மொழி எழுதிய ‘இலக்கிய மீளாய்வு’க்குக்கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருது பெற்றது.
‘ஹோம்’ குறும்படத்திற்கு மீனாட்சி சுந்தர் – பா. இராமச்சந்திரன் நினைவு விருது வழங்கப்பட்டது. ‘பெரும்பாக்கம்’ ஆவணப் படத்திற்கு சஞ்சய் ரித்வான் என்.பி.நல்லசிவம் – ரத்தினம் நினைவு விருது பெற்றார்.
அமரர் மு.சி.கருப்பையா பாரதி- ஆனந்த சரஸ்வதி நினைவு நாட்டுப்புறக் கலைச்சுடர் விருதினை பானு ராஜரெத்தினம் பெற்றார். மக்கள் பாடகர் திருவுடையான் நினைவு இசைச்சுடர் விருதினைக் கிடாக்குழி மாரியம்மாள் பெற்றார். அவருடைய புகழ் பெற்ற பாடலான ‘கண்டா வரச் சொல்லுங்க…’வைக் கம்பீரமான இனிய குரலில் அவர் பாடிய போது கரவொலியினால் அரங்கு அதிர்ந்தது.
முனைவர் த.பரசுராமன் நினைவு நாடகச்சுடர் விருது எம்.எஸ்.காந்தி மேரிக்கு வழங்கப்பட்டது.மேலாண்மை பொன்னுசாமி நினைவு பெண் படைப்பாளுமை விருது நாவல், சிறுகதை,கவிதைப் படைப்பாளி அ.வெண்ணிலாவுக்கு வழங்கப் பட்டது.
தொடர்ந்து விருதாளர்கள் ஏற்புரையாற்றினர். அப்பொழுது விருதாளர்கள் உணர்ச்சிப் பெருக்குடனும், எழுச்சியுடனும், நெகிழ்வுடனும் உணர்வுப்பூர்வமாக உரை நிகழ்த்தியதால் அரங்கத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தினர். தாம் அனுபவித்த வலியையும் வேதனையையும் பேசுவதோடு மட்டுமல்லாமல் சமூகத்தில் கேட்க நாதியற்ற மக்களின் பெருங்குரலாகவும் அவர்களின் படைப்பு வந்திருப்பதைச் சொன்னபோது அரங்கம் அதிரும்படி கரவொலி ஒலித்தது.
‘பெரும்பாக்கம்’ குறும்படம் சென்னை நகர உழைப்பாளி மக்கள் வஞ்சிக்கப்பட்ட வரலாற்றைப் பறை சாற்றிய ஒரு படைப்பு..
‘ஊருக்கு ஒரு குடி’ நூல் கிராமங்களில் நிலவும் சாதியக் கட்டமைப்புகளை அம்பலப்படுத்துகிறது. அதை எழுதிய எழுத்தாளர் ஜுலியஸ் சாதியக் கொடுமைகளை வெளிப்படுத்தியதோடு நில்லாமல் சென்னைக்கு அருகில் தொண்டு நிறுவனம் ஒன்றை உருவாக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக்குக் கல்வி வழங்கி வருவதாகத் தெரிவித்தார். அவர் உரையாற்றி வெகு நேரம் ஆனபிறகும் எல்லார் மனங்களிலும் அவரது குரல் ஒலித்துக் கொண்டிருந்தது என்றால் மிகையாகாது. சுனில் லால் மஞ்சாலும்மூடு மொழி பெயர்த்த ‘பாலைச்சுனை’ வயிற்றுப் பிழைப்பிற்காக அரபு நாடுகளுக்குச் செல்வோர் படும் இன்னல்களைப் பட்டியலிட்டது. விழாவில் ஒளிபரப்பப்பட்ட எழுத்தாளர் ராஜ் கௌதமன் குறித்த குறும்படம் அவருக்குப் புகழஞ்சலி செலுத்துவதாக அமைந்தது. விருதாளர்கள் விருது பெறும் பொழுது அவர்களைப் பற்றிய ஒரு நிமிடக் காணொளி, விருது பெறுபவர்களை மேலும் ஊக்கப்படுத்தி உற்சாகமூட்டும் விதமாக அமைந்திருந்தது. அதனை ஈரோடு மாவட்டத் தோழர்களின் கூட்டுழைப்பாலும் முயற்சியாலும் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
பொதுச் செயலாளர் தோழர் ஆதவன்தீட்சண்யா அவர்களின் சீரிய ஒருங்கிணைப்போடு நடந்த விருது வழங்கும் விழா நிகழ்வுகளுக்கு ஈரோடு மாவட்ட தமுஎகச சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. மாவட்டப் பொறுப்பாளர் அ.கரீம், மண்டலப் பொறுப்பாளர் அ. இலட்சுமி காந்தன் ஆகியோரது வழிகாட்டலிலும் ஒருங்கிணைப்பிலும் ஈரோடு மாவட்டக்குழுவின் திட்டமிடலும் அயரா உழைப்பும் இதைச் சாத்தியப்படுத்தியுள்ளது.
தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, மதுரை, செங்கல்பட்டு, நாமக்கல் என பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தோழர்கள் வந்திருந்தனர்.
16 விருதுகளில் 11 விருதுகளைப் பெண் கலை இலக்கிய ஆளுமைகள் பெற்றுள்ளனர். இது ஒரு வரலாற்று நிகழ்வு என்றுதான் சொல்ல வேண்டும். பெரும்பாலும் மேடைகளில் ஆண்களின் வருகை அதிகமாக இருக்கும் ஆனால் இந்த நிகழ்வில் பெண்களின் கூட்டம் மேலோங்கியி ருந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் முன் வைக்கும் ’தனித்துவம் நமது உரிமை, பன்மைத்துவம் நமது வலிமை’ என்ற கூற்றிற்கு இவ்விருதுகள் வலிமை சேர்த்திருக்கின்றன என்று உறுதியாகச் சொல்ல முடியும். இந்த எண்ணிக்கை தற்செயலானதுதான் என்றாலும் பெண்கள் களமேறிச் சமராடுகிறார்கள் என்பதைக் கொண்டாட்டத்துடன் கவனம் கொள்வோம்.
உரையாளர்கள் அனைவருமே மிகுந்த பொறுப்புணர்வுடன் அறிமுக உரை நிகழ்த்தினர். விருதாளர்களின் ஏற்புரை, நாம் தேர்வு செய்ததற்கான நியாயத்தை வலுப்படுத்துவதாய் இருந்தது. தமுஎகச மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா நிறைவுரையாற்றினார். இந்நிகழ்வில், அ.லட்சுமி காந்தன், அ.கரீம், சி.சரிதா ஜோ, ஈரோடு சர்மிளா ஆகியோர் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனர். நிகழ்வின் நிறைவாக மாவட்டத் தலைவர் மு.சங்கரன் நன்றி கூறினார். l