என் சிறு வயதில் எங்கள் ஊரில் தீன் மளிகை, தாஜ் ஸ்டோர் என்றெல்லாம் கடைகள் இருந்தது நினைவில் உள்ளது. ஆனால் இப்போது சுற்றுமுற்றும் பார்த்தால் இஸ்லாமியர்கள் நடத்தும் நிறுவனங்களின் பெயர்கள் பெரும்பாலும் சென்னை மொபைல்ஸ், தமிழ்நாடு ஹார்ட்வேர்ஸ், புரஃபஷனல் கூரியர் என்பது போன்ற பொதுப் பெயர்களாக மாறியுள்ளன. இந்த மாற்றம் பொதுச் சமூகத்தின் மீது இஸ்லாமியர்கள் கொண்டுள்ள அச்சத்தின் வெளிப்பாடு என்றே கொள்ள வேண்டும். இந்த மாற்றத்திற்காகப் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த அனைவரும் கூச்சம் அடையவும், அவ்வச்சத்தைப் போக்கும் வண்ணம் இசைவாக நடக்கவும் வேண்டியது முக்கியம். அந்தக் கடமையை அழகாகச் செய்யும் நூலே இந்த ‘அல்லா வடிவமைத்த அழகிய சமூகம்’ எனும் நூல். நூலாசிரியர் பழ. கருப்பையா அவர்கள். கிழக்குப் பதிப்பக வெளியீடு. விலை ரூ. 200/-
இஸ்லாம் எனும் இனிய மார்க்கத்தைப் பற்றிய கற்பிதங்களும், புனைவுகளும் பெருகிவிட்ட காலகட்டத்தில் அம்மதம் பற்றிய அடிப்படை உண்மைகளை எளிமையாக அறிமுகம் செய்கிறது இந்நூல். நூலின் முதல் பகுதியில் இஸ்லாமியரது ஐந்து கடமைகள் எவையெவை, பலதார மணத்தை நபிகள் முன்மொழிந்த சூழல் என்ன, ஈகையை இஸ்லாமியருக்கு முக்கியக் கடமையாக்கியிருக்கும் பாங்கு எனப் பல விஷயங்கள் அழகாக எடுத்துரைக்கப்படுகின்றன. இவையெல்லாம் வெளியிலிருந்து படிக்கும் பெரும்பாலானோருக்குப்புதிய செய்திகளாக இருக்கும்.
இங்கிலாந்தில் ஜான் மன்னரின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியின் விளைவாக ஏற்பட்ட மாக்னா கார்ட்டா ஒப்பந்தம் நீதித் துறையை, அரசனிடமிருந்து பிரித்தது என்றால் அதற்கும் 500 ஆண்டுகள் முன்னர், ஏழாம் நூற்றாண்டில் பிறந்த மதமான இஸ்லாம் அரசாளும் கலிபாவின் அதிகாரத்தை முறைப்படுத்தி, நீதியை எப்படி நிலைநாட்டியிருக்கிறது என்று விளக்கியிருக்கிறார். உமர் கலிபாவாக இருந்து ஆண்ட காலத்தில் அவரது வழக்கு ஒன்றே நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டதை எடுத்துக்காட்டாக வைத்து, இஸ்லாம் எந்த அளவுக்கு நீதியை முன்னிறுத்துகிறது என்று புரிய வைக்கிறார்.
ஆனாலும் அம்மதத்தின் அடிப்படையில் அமைந்த பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஏன் நீதி நிலைநிறுத்தப்படுவதில்லை என்ற கேள்விக்கு ஆள்பவர்கள் மதத்தால் இஸ்லாமியர்களே தவிர இறையச்சம் உடையவர்களாக இல்லாமல் இருப்பதுதான் காரணம் என்று விடையையும் கண்டு சொல்கிறார்.
மற்ற எல்லாச் செய்திகளையும் விட வக்ஃபு என்றால் என்ன என்பதைப் பற்றிய விரிவான அறிமுகம் மிக அவசியமான ஒன்று. எந்த அரசு ஆண்டாலும், தனி நபர்களின் கைவசம் இருப்பது போக மீதமிருக்கும் மண்ணெல்லாம் அரசுக்கு உரியது என்பதே சட்டம். ஆனாலும் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் அம்மாநில அரசுக்கு அடுத்தபடியான சொத்துகள் இருப்பது வக்ஃபு வாரியங்களிடம்தாம் என்பது ஒரு காலத்தில் அச்சமூகம் எவ்வளவுக்குத் தருமத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது. ஆனாலும் அந்தச் சொத்தெல்லாம் கனவில் கண்ட தனம் போல எங்கோ இருக்க, இந்திய இஸ்லாமியர்களின் ஏழ்மை மட்டும் தீராமல் இருப்பதன் பின்னணி என்ன என்பதைப் பற்றி அச்சமூகம் சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டியதின் அவசியத்தையும் அடிக்கோடிடுகிறார்.
மும்பையில் உள்ள அம்பானியின் மாளிகையும், ஹைதராபாத்தில் பல மென்பொருள் நிறுவனங்களும், வேறு நகரங்களில் சிலபல நட்சத்திர விடுதிகளும் அமைந்திருப்பது எல்லாமே வக்ஃபு வாரியத்துக்கு உரிய நிலங்கள் என்பது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது. எனில் நபிகள் வகுத்தளித்தபடி இஸ்லாமியச் செல்வந்தர்களால் மூன்றில் ஒரு பங்கு சொத்தாகத் தருமத்திற்கு என அளிக்கப்பட்ட சொத்துகள் எல்லாம் ஓட்டைப் பானையில் இறைத்து ஊற்றப்பட்ட நீர் போல வீணாகிக் கொண்டிருப்பது கண்கூடு.
நேருவின் காலத்தில் உருவாக்கப்பட்ட வஃக்பு வாரியத்தில் 70 ஆண்டுகளாக இஸ்லாமியர்கள் மட்டுமே பதவியிலிருந்தபோதும், இந்த சிக்கல்கள் சீர் செய்யப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது. வக்ஃபு வாரியத்தைச் சிதைக்கும் மோடி அரசின் முயற்சிக்கு எதிராகப் போராட வேண்டிய அதே நேரத்தில் உள்ளிருக்கும் ஓட்டைகளையும் அடைத்தேயாக வேண்டும் என சுட்டிக் காட்டுகிறார்.
நெல்லை மாவட்டம் பொட்டல்புதூர் எனும் ஊரில் உள்ள இஸ்லாமியர்கள் பாரதியைத் தங்கள் கூட்டம் ஒன்றில் பேச அழைத்திருந்தனர். அப்போதுதான் அவர் அல்லா அல்லா அல்லா என்ற பாடலை அரங்கேற்றினார். அப்பாடலைப் பாடிவிட்டு, தனது உரையை ஆரம்பித்த பாரதி இஸ்லாம் மார்க்கத்தை மண்ணில் நிலைநாட்டிய நபிகளாரின் வாழ்வைப் பற்றிய ஓர் ஆங்கில நூலைப் படித்ததாகவும், அதில் கண்ட பல செய்திகளால் ஈர்க்கப்பட்டதாகவும் தன் உரையைத் துவங்குகிறார்.
நபிகள் நாயகம் தனது புதிய மார்க்கத்தை முன்வைத்த போது முதன் முதலில் அதனை ஏற்றுக் கொண்டவர்கள் அவரது மருமகன் அலியும், துணைவியான கதீஜா அம்மையாரும்தான்.
// ஒருவன் தான் நேரே கடவுளைப் பார்த்ததாகவும் அதனின்றும் தெய்வங்கள் தன்னிடத்தில் விளங்குவதாகவும் வெளியூராரிடம் சொல்லி, அவர்களை நம்பும்படி செய்தல் எளிது. இரவு பகல் கூடவே யிருந்து, நீ நோய் வேதனை பொறுக்கமாட்டாமல் அழுவதையும் இன்னும் உன்னுடைய பலஹீனங்கள், அதைர்யங்கள், அச்சங்கள், அநீதிகள், குரூரங்கள், பொறாமைகள், அதர்மங்கள், குறைகள் எல்லாவற்றையும் ஸஹிப்போராகிய உன் சுற்றத்தாரும், அத்யந்த நண்பர்களும், பக்கத்து வீட்டாரும் உன்னைக் கடவுளின் அருளும் அம்சமும் அடைந்த மஹானென்று நம்பவேண்டுமானால், நீ உண்மையிலேயே தெய்வத்தைக் கண்டால்தான் முடியும். மற்றபடி ஏமாற்றலினாலும், வேஷங்களாலும், நடிப்புகளாலும் இவர்களை நம்பும்படி செய்தல் சாத்தியமில்லை. இதுபற்றியே,இங்கிலீஷில் “எந்த மனிதனும், தன் சொந்த ஊரில்”தீர்க்கதரிசியாக மாட்டான்” என்றொரு வசனம் சொல்லுகிறார்கள்.
முஹம்மது நபியை முதல் முதல் அலியும், அதைக் காட்டிலும் ஆச்சர்யந் தோன்றும்படி, கதீஜாபீவியும் கடவுளின் முக்கிய பக்தனென்றும், தெய்வ அருள் பெற்றவரென்றும் பூமண்டலத்தில் கடவுளுடைய பிரதிநிதியாக அவதரித்தமஹானென்றும் அங்கீகாரம் செய்து கொண்டதைக் கவனிக்குமிடத்தே, அவர் நிகரில்லாத ஞானியென்பதும் பக்தகுல சிரோமணியென்பதும் மிகத் தெளிவாக விளங்குகின்றன.//
இப்படி வியந்து போற்றுவதோடு இந்து மதம் முன் வைக்கும் பிரம்மம் என்ற கருத்து எப்படி இஸ்லாமியர்களின் அல்லாவுக்கு அளிக்கும் விளக்கம் பொருந்துகிறது என்பதையும் தனது கட்டுரைகளில் சிலாகிக்கிறார் பாரதி.
அதே நேரத்தில் தனது ரயில்வே ஸ்தானம் என்ற சிறுகதையிலும் சரி, அதில் ஏற்பட்டிருந்த ஒரு பிழையைச் சுட்டிக்காட்டிய இஸ்லாமிய நண்பரிடத்துச் செய்யும் விவாதத்தைப் பதிவாக்கிய ’முகமதிய பெண்களின் நிலை’ எனும் கட்டுரையிலும் சரி, அச்சமூகம் தற்காலச் சூழலுக்கு ஏற்றபடி பெண்களுக்கு நியாயம் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தவும் தயங்கவில்லை.
அதே போன்ற நட்புச் சுட்டலை நூலாசிரியரும் தயங்காது செய்திருக்கிறார்.
குடிமையியல் உரிமையாகிய முத்தலாக்கைக் குற்றவியல் சட்டத்திற்குள் கொண்டு சென்று நிறுத்துவது எத்தகைய கயமையான செயல் என்பதை வலுவாக முன் வைக்கும் அதே நேரத்தில் பாரதி சொன்னது போல் இஸ்லாமியப் பெண்களின் சமூகப் பாதுகாப்பைப் பற்றிய அச்சத்தையும் அலட்சியம் செய்யலாகாது என்கிறார்.
ஷாபானு வழக்கின் தன்மையை விவரித்து, அநாதரவாக நின்ற அப்பெண்ணிற்குத் தருமத்தைப் பாலிக்கும் நிலையிலிருந்த வக்ஃபு அமைப்பு உதவிக்கரம் நீட்டியிருந்தால் அவர் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியிருக்க வேண்டிய தேவையே இருந்திருக்காதே என்ற தன் ஆதங்கத்தைப் பதிவு செய்கிறார். ஆக, முத்தலாக் மூலம் வாழ்விழக்கும் பெண்ணுக்குக் கிடைக்கும் மகர் தொகை அவளது வாழ்க்கைக்கும், குழந்தைகளின் நலனுக்கும் போதுமானதாக இல்லாத பட்சத்தில், அக்குடும்பத்தைப் பராமரிக்கும் பொறுப்பை வக்ஃபு வாரியம் எடுத்துக் கொள்ளட்டும் என்பது நூலாசிரியரின் வாதம். அதாவது பிரிந்து செல்லும் கணவன், மனைவிக்குப் பராமரிப்புத் தொகை தர முடியாத அளவுக்கு ஏழ்மையிலிருந்தால், அப்பெண்ணுக்கான வாழ்வாதாரத்தை அச்சமூகத்தின் பொதுச் சொத்தான வக்ஃபு வாரியத்திலிருந்து வழங்க வேண்டும் என்பது அவரது எண்ணம்.
ஒருவேளை ஷாபானு வழக்கைப் போல வசதியிருந்தும், உதவ மனமில்லாதவனாக இருந்தால் அக்கணவனை தட்டிக் கேட்பது யார், அப்படியான கேள்வியைச் சட்டத்தின் கையில் அல்லாது ஒரு குறுங்குழுவின் கையில் தந்தால் அது சரியான தீர்வாக இருக்குமா என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.
விவாகம், விவாகரத்து ஆகிய தனிநபர் சார்ந்த நிகழ்வுகளால் ஒரு குடும்பம் சிதையுமானால், அதிலிருந்து வெளியேறத் துடிக்கும் நபரே அதற்குப் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும் என்பதால் பராமரிப்புத் தொகை தருவதை முறைப்படுத்தலாம். அல்லது பெண்கள் தம் சொந்தக்காலில் நிற்கும்படியான படிப்பு, பொருளாதாரப் பின்புலம் போன்றவற்றை வலியுறுத்தலாம். இரண்டும் இல்லாமல், யாரோ இருவர் மணந்து, பின் பிரிந்தால், அக்குடும்பத்தின் பொறுப்பைத் தரும நிறுவனம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது எனக்குச் சரியான தீர்வாகத் தெரியவில்லை.
எல்லா மதங்களுமே தங்களின் உருவாக்கத்தின் போது கோர்த்த விதிகளை, ஆசாரங்களை, சடங்குகளை மாற்றத்திற்கு அப்பாற்பட்டவையாகவே குறிப்பிடுவது வழக்கம்தான். ஆனால் காலமும் சூழலும் மாறும் போது, அதற்கேற்ப நமது சிந்தனைகளும் மாறுவதும், அம்மாறுதல்கள் வாழ்வின் சகல அம்சங்களிலும் பிரதிபலிப்பதும் தவிர்க்க முடியாதவை.
கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களுக்குள் நுழைய ஹிஜாப் அணிந்த பெண்களுக்குத் தடை விதித்தபோது அல்லாஹூ அக்பர் என்று முழங்கிய மாணவியின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது போலவே ஈரானில் தன் ஹிஜாபைக் கழற்றிக் குச்சியில் சுற்றி, கொடியாக அசைத்த பெண்ணின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்தே ஆக வேண்டும்.
ஆனால் சிறுபான்மையினராக இருக்கும் ஒரு சமூகத்தில் இது போன்ற மாற்றங்கள் உள்ளிருந்துதான் முன்மொழியப்பட வேண்டுமே தவிர, வெளியிலிருந்து திணிக்கப்படக் கூடாது என்பதும் மிகவும் முக்கியம். அல்லது மாற்றங்களைக் கொண்டு வர வேண்டுமெனில் அதனை பாரதி போலவோ, அல்லது இந்நூலாசிரியர் பழ. கருப்பையாவைப் போலவோ அச்சமூகத்தின் மீதான அக்கறையில் ஆலோசனைகளாக முன்வைக்கப்பட வேண்டுமே தவிர, அத்துமீறித் திணித்தல் ஆகாது. இவையெல்லாம் நூலிலிருந்து நான் சற்றே முரண்படும் இடங்கள். ஆனால் வக்ஃபு வாரியத்தில் இந்துக்கள் உறுப்பினராக வேண்டும் என்பது, ஹிஜாப் அணிந்து கல்வி நிலையங்களுக்கு வரக்கூடாது என்பது, முத்தலாக் சொல்வதைக் குற்றச் செயலாக்குவது என்பது போன்ற அராஜகத் திணிப்புகள் எதிர்க்கப்பட வேண்டியவை என்பதில் நூலாசிரியரின் கருத்தில் 200% உடன்படுகிறேன். நானோ, இந்நூலாசிரியரோ முன் வைக்கும் எல்லா ஆலோசனைகளையும் ஏற்கவும் தள்ளவும் இஸ்லாமிய நண்பர்களுக்கு உரிமையுண்டு. ஆனால் இப்படியான ஆக்கபூர்வமான உரையாடல்களை நட்புணர்வோடு முன்னெடுப்பதுதான் இந்த அச்சம் மிகுந்த காலத்தில் நாம் அனைவரும் செய்ய வேண்டியது என நம்புகிறேன். அந்த வகையில் இந்த நூலை நல்லதொரு முன்னோடியாகக் கொண்டு, பலரும் இப்பொருண்மையில் உரையாடலை நிகழ்த்துவோமாக. நூலை நாகூர் ஆண்டவரையும், தன் குலதெய்வத்தையும் ஒன்றெனக் கருதிய தனது தாயாருக்குக் காணிக்கையாக்கியிருக்கிறார் கருப்பையா. அம்மாதரசியின் நற்பண்பை நம் தலைமுறைகள் கைவிடாதிருக்கும் வரை இம்மண்ணில் மதங்களைக் கடந்த சமூகம் மாண்புடன் வாழும் என்பதில் ஐயமில்லை. l