‘கேரளா – மாற்று உலகம் சாத்தியம்’ என்னும் மூல நூலினை எழுதிய ஆசிரியர் தி. மே. தாமஸ் ஐசக் அவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள வரி விதிப்புக் கல்வி நிறுவனத்தின் சிறப்புக் கௌரவ ஆய்வாளராகப் பணியாற்றியவர். இரண்டு முறை கேரளாவின் நிதி அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர். கம்யூனிச நாடான சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, “வேறொரு மாற்று இல்லை” என்பது தாராளமயவாதிகளின் கருத்தாக இருந்தபோது, “மாற்று உலகம் சாத்தியமே!” என்பது எதிர் முழக்கமாக விளங்கியிருக்கிறது. இந்திய மண்ணான கேரள மாநிலமானது, “மாற்று உலகம் சாத்தியம்” எனும் முழக்கத்தைக் கையிலெடுத்து, உலகமயமாக்கல், மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் ஆகிய யாவற்றையும் கடந்து, சவால்களைச் சந்தித்து, ஒவ்வொரு தனி மனிதனது வாழ்க்கையையும் கருத்திற் கொண்டு, பரவலானதொரு வளர்ச்சியை அந்த நாடு எப்படிக் கொண்டு வந்தது என்பதைக் குறித்து, இந்த நூலின் ஆசிரியர் கணக்கெடுப்புகளின் புள்ளி விவரங்களோடு இணைத்து, படிப்படியாக அந்த மாநிலத்தின் அடுத்தடுத்த நகர்வுகளை இந்த நூலில் பதிய வைத்திருக்கிறார். தமிழுக்கு மொழிபெயர்த்த ஆசிரியர்கள் பிசகு இல்லாமல் கச்சிதமாகத் தங்களது பணியைச் செய்திருக்கிறார்கள்.
இந்த நூலை வாசிப்பதற்கு முன்பு பொதுவாகக் கேரளாவைக் குறித்து மக்களுக்கு இருக்கின்ற அபிப்பிராயங்களான, அந்த மாநிலத்தின் அன்னிய முதலீடு குறித்தும், கட்டுமானங்களைப் பற்றியும், மக்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு இருக்கின்ற வரவேற்புகளின் மீதான கருத்துகளுமென இன்னும் பலவும் இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு நமக்கு வேறானதாக மாறுகின்றன. நமது இந்தியாவில் முதன் முதலாகக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த மாநிலம் கேரளாவாகும். நீண்ட கடற்கரையைக் கொண்ட இவ்விடத்தில் ஆங்கிலேயர்களது ஆட்சிக்கு முன்பே கடல் வாணிபம் கொடிகட்டிப் பறந்திருக்கிறது. அந்நியரது ஆட்சியினாலும், அதன் பிறகான அரசியலாலும், உள்நாட்டுக் கட்டமைப்புகளாலும், ஏற்றத்தாழ்வுகளை வெகுவாகச் சந்தித்து வந்தாலும், இந்த மாநிலம் தனி மனிதனது வருமானத்தையும், வறுமையற்ற வாழ்க்கையையும், கருத்தில் கொண்டு செயல்பட்டுப் பயணித்துக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே, அங்கு ஏற்படுகின்ற சறுக்கல்களாக இயற்கைப் பேரிடர்களையும் சந்தித்து, ஒவ்வொரு முறையும் அதிலிருந்து மீண்டெழுந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.
உணவுக்காகப் பயிரை வளர்க்கப் போராடுபவர்களை அடக்கியாள நினைத்த பிரபுத்துவத்தில் ஆரம்பித்து, ஜாதிப் பிரிவினைகளையும், மக்களது ஏற்றத் தாழ்வுகளையும், மக்களது வளர்ச்சிக்காக வகுத்த திட்டங்களைச் செயல்படுத்துவதில் இருந்த சிக்கல்களையும், இன்னும் பல்வேறு சவால்களையும் களைந்து இம்மாநிலம் தனது முயற்சியில் வெற்றியடையப் படிப்படியாகப் போராட்டங்களை எவ்வாறு முன்னெடுத்தது என்பதைக் குறித்தும் தொடர்ச்சியான விளக்கங்கள் தெளிவாக இடம் பெற்றிருக்கின்றன. தலைவர்கள் உருவான வரலாறுகளை விவரிப்பதோடு, இம்மாநிலத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சி நிலை கொண்டதைப் பற்றிய அடுத்தடுத்த நிகழ்வுகளையும் இந்த நூலின் ஆசிரியர் ஆதாரங்களுடன் இடம் பெறச் செய்திருக்கிறார். இடதுசாரி அரசு ஆட்சிக்கு வந்து செயல்படுத்துகின்ற திட்டங்கள் யாவும், அதன் ஆட்சி மாற்றத்தின்போது கலைந்து விடாமல் இருப்பதற்காக, இந்த மாநிலம் அடிப்படை மக்களிடமிருந்து தனது திட்டங்களை எவ்வாறு துவங்குகிறது என்பதைப் பற்றியும் இந்த நூல் பேசுகிறது.
அதிகமான மக்கள் தொகையைக் கட்டுக்குள் கொண்டு வந்து எண்ணிக்கையில் குறைத்து, தனிநபரது வருமானத்தை எப்படியாக அவர்கள் அதிகரிக்கச் செய்தார்கள் என்பதையும், வளைகுடா நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்ற இளைஞர்களால் எவ்வாறு அந்த மாநிலத்தின் முதலீடு அதிகரித்தது என்பதையும் குறிப்பிட்டிருப்பதோடு, “கேரள மாடல்” என்னும் தலைப்பில் அடங்கியுள்ள பெருவாரியான செயல்களைப் பற்றியும், “அதிகாரப் பரவலாக்கல்” என்னும் சொற்றொடருக்குப் பின்னால் உள்ள, அடிமட்டத்திலிருந்து மக்களது தேவைகளைப் புரிந்து கொண்டு அதனை நிவர்த்தி செய்யும்படி இயங்குகின்ற மக்கள் திட்ட இயக்கத்தைப் பற்றியும், இந்த நூல் மிக விளக்கமான கருத்தினை அளித்திருக்கிறது. இந்த மாநிலம் தனது மாவட்டங்களையோ வட்டங்களையோ மையப் புள்ளியாகக் கொள்ளாமல், அடிப்படை அலகான கிராமத்தைக் கருத்தில் கொண்டு அக்கறையான திட்டங்களை வகுத்து ஜனநாயகத்திற்கு வலுவூட்டும்படிக் கேரளா அரசு முயற்சி செய்திருக்கிறது. அடிப்படைத் தேவைகளான உணவு உற்பத்தி, மருத்துவம், கல்வி, சாலை மேம்பாடு, நவீனமயமாக்கல், மனித ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்துதல், சுற்றுச்சூழல் கட்டுப்பாடு என இன்னும் பலவற்றையும் குறித்த கேரள மாநிலத்தின் முயற்சியை, எளிய மக்களும் அறிந்து கொள்ளும்படி இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
நீர் மேலாண்மையைப் பொறுத்தவரை தடுப்பணையைக் கட்டி உபரி நீரை எடுத்துச் செல்வதில் நவீனமயமாக்கல், ஏரிகளைத் தூர்வாரி அதன் கொள்ளளவுகளை அதிகப்படுத்துதல், நெற்பயிர் நிலங்களைச் சுற்றியுள்ள வரப்புகளை வலுப்படுத்துதல் போன்ற திட்டங்களை அறிவித்துக் கேரள அரசு செயல்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் கனமழையால் ஏற்படுகின்ற பெரு வெள்ளத்தாலும், புயலால் ஏற்படுகின்ற கடல் சீற்றத்தாலும், நிலப்பரப்பு நீரில் மூழ்குவதும், நிலச்சரிவு ஏற்படுவதும், இயல்பாக இருந்து உயிரிழப்புகளோடு சீரழிவை எதிர்கொள்வதும் அவ்வப்பொழுது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பொதுவாக நிலப்பரப்பு என்றாலே அது கடல் மட்டத்திற்கு மேலானது என்பது பொதுவான கருத்தாக இருக்க, மிகவும் அரிதாக உலகின் சில இடங்களில் மட்டுமே காண முடிகிற கடல் மட்டத்திற்குக் கீழான நிலப் பரப்பாகக் குட்டநாடு என்னும் ஊர் கேரளாவில் இருக்கிறது. வெள்ளச் சமவெளியான இவ்விடத்திற்கு நான்கு பெரும் ஆறுகள் நீரை வழங்குகின்றன. கடுமையான மழைப்பொழிவின்பொழுது இந்த ஆறுகளிலிருந்து வழிதோடுகின்ற நீரானது குட்டநாடு நீர்ப் பிடிப்புப் பகுதியை மொத்தமாக மூழ்கச் செய்து விடுகிறது என்கிற செய்தி இந்த நூலில் இருக்கிறது. அந்தச் சமயத்தில் ஐம்பதாயிரம் குடும்பங்களை இப்பகுதியிலிருந்து வெளியேற்றி, நிவாரண முகாம்களில் தற்காலிகமாகத் தங்க வைத்து, பிறகு அவர்களது வீடுகளைச் சுத்தம் செய்து, மறு குடி அமர்த்துகின்ற பொறுப்பை நிவாரணத் திட்டங்களே ஏற்றுக் கொள்கின்றன. இதேபோன்று கலிபோர்னியா மாகாணத்தில் கடல் மட்டத்திற்குக் கீழான நிலப்பரப்பு டெத் வேலி (death valley) என்று அழைக்கப்பட்டுக் காட்சிப் பகுதியாக மட்டுமே இருக்கிறதேயன்றி, மக்கள் அங்கு வசிப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அரசைச் சார்ந்திடாத பொதுத்துறை நிதி நிறுவனமான, “கேரளக் கட்டுமான முதலீட்டு நிதி வாரியம்” என்ற நிறுவனத்தைக் கேரள அரசாங்கம் தனது சட்ட ரீதியான கார்ப்பரேட் குழுமமாக மாற்றி, அரசாங்கம் அறிவித்த பல்வேறு திட்டங்களுக்கு நிதி திரட்ட முடிவு செய்து, மோட்டார் வாகனங்கள் மற்றும் பெட்ரோல் மீதான வரிகள் போன்றவற்றை இந்த நிறுவனத்திற்குச் செலுத்தும்படிச் செய்திருக்கிறது. இதிலிருந்து பல்வேறு திட்டங்களுக்குக் கடனாகப் பெறுகின்ற தொகையின் அளவானது கையிருப்பில் இருக்கின்ற நிதியை விடக் கூடுதலாக செல்லாதவாறு தனக்குத் தானே திட்டங்களை வகுத்துக் கொண்டு சிறப்பாகப் பணியாற்றி வந்திருக்கிறது. தற்பொழுது தங்களுக்குத் தேவைப்படுகின்ற கூடுதல் நிதிக்குப் பாரம்பரிய முறைப்படி பாண்டு பத்திரங்கள், நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுதல், ரிசர்வ் வங்கி மற்றும் செபி அனுமதிக்கின்ற வருவாய்ப் பத்திரங்கள், நிலப் பத்திரங்கள் போன்ற நவீன நிதி திரட்டும் முறைகளையும் பயன்படுத்துகின்றது. பெருவாரியான நிதிகளைக் கொண்டு, வேளாண்மை, மின்சாரம், மீன்வளம், தொழிற்பேட்டைகள், பொழுதுபோக்கு மையங்கள், வாழ்வியல் நகரங்கள், இவை யாவற்றிற்கும் அப்பாற்பட்டுக் காடுகளை வளர்த்தலென இன்னும் பல நல்ல திட்டங்களுக்குக் கடனுதவி செய்து மீண்டும் நிதியைச் சேகரித்துக் கொள்வதற்கிடையே ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் இந்த நிறுவனம் இலக்காகி இருக்கிறது.
கேரளாவில் தனியார் முதலீடுகள் குறைவாகவே இருப்பதற்குக் காரணமாக, இங்குள்ள தொழிலாளர்களின் போர்க் குணமும் முற்போக்கு அரசியலும் தடையாக இருப்பதாகச் சொல்லப்படுவது, கம்யூனிச எதிர்ப்பு இயக்கங்களின் கட்டுக் கதையேயன்றி வேறல்ல என்பதும் இந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தொழிற்சங்கங்கள் தோன்றிய தொடக்க காலத்தில் அவர்களை அடக்க ஆலைகள் வன்முறைகளைக் கையாண்டபோது, போர்க் குணமிக்க உத்திகள் அவசியமாக இருந்தன. ஆனால் இயக்கம் நன்கு வளர்ந்து காலூன்றிய பிறகு அதற்கான தேவை இருக்கவில்லை என்பதும், இடதுசாரிகள் ஆட்சிக்கு வரும்பொழுதெல்லாம், முதலீடுகளுக்கு ஆபத்தான மண்டலமாகக் கேரளா சித்தரிக்கப்படுவதும் திட்டமிட்ட பிரச்சாரமாக நிலவி வருவதாக இந்த நூலின் ஆசிரியர் குறிப்பிடுகிறார். கேரளாவில் தொழிலாளர்கள் உரிமையையும் சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளையும் தளர்த்தவே இயலாது என்றாலும், தொழில் நடத்துவதற்கு ஏதுவான நிலையின் தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்கு முன்னேறுவதைத் தனது இலக்காகக் கொண்டு அதற்கான சரியான திட்டங்களையும் தீட்டி இம்மாநிலம் செயல்படுத்தி வருகிறது. இப்படியாகப் பல்வேறு சவால்களைக் கடந்தே தங்களைப் பூலோக சொர்க்கமாக இன்றளவும் கேரளா தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
பொதுவாக மொழிபெயர்ப்பு நூல்கள் அதன் மூல நூல்கள் உருவான இடத்தைச் சார்ந்த தகவல்களை வேறு இடத்திற்கு பரவச் செய்து அவ்விடத்தில் வாழ்பவர்களைக் குறித்த ஒரு புரிதலை வெளிப்படுத்துகின்றன. ஒருவருக்கொருவர் இணக்கமில்லாமல் தமிழகமும் கேரளாவும் தங்களுக்குள் பிரித்துக் கொள்வதில் இன்றளவும் பிரச்சனை தீராத பெரியாறு அணைக் குறித்து, இருவருக்குமிடையே இதுபோன்ற நேர்மையானத் தகவல்களை பரிமாறிக் கொண்டோமெனில் சரியான புரிதல் ஏற்படலாம். உணவுப் பொருள்களுக்காகத் தமிழகத்தையும் சார்ந்து இருக்கின்ற கேரள மாநிலம், தங்களைக் கடந்து வருகின்ற நீரின் போக்கைத் தனது அண்டை மாநிலத்திற்காகவும் திறந்து விட வழி ஏற்படலாம். வரிக்கு வரி தகவல்கள் கொட்டிக் கிடக்கின்ற இந்த நூலினை வாசிக்கும் பொழுது, முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் அவர்களது பார்வையில் ஒரு சமூகத்தின் வெற்றியையும் தோல்வியையும் அவர்களது அனுபவங்களாகப் பதிய வைத்தால், அது அடுத்ததாகப் பொறுப்பிற்கு வருபவர்களுக்கு இதற்கு முந்தைய தவறுகளைக் களைந்து, வெற்றிக்கான வழிகளைக் கண்டடைந்து, முன்னேற்றப் பாதையை நோக்கி, எளிய முறையில் விரைந்து பயணிக்க திட்டங்களைத் தீட்ட அடிப்படையாக அமையலாம். அதற்கான முன்னோடி நூலாக இந்தப் புத்தகத்தை நாம் எடுத்துக் கொள்ளலாம்.l