இத்தொகுப்பு, கொஞ்சம் வித்தியாசமானது. விருதுநகர் மாவட்ட நிர்வாகம், தம் கரிசல் நில எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து வழங்கியிருப்பது மாவட்டத்துக்குப் பெருமை சேர்ப்பதாகும். சிறுகதைகளைத் தொகுத்து வழங்கியிருப்பவர்கள், தோழர் ச. தமிழ்ச்செல்வன், தோழர் ம. மணிமாறன் ஆகியோர். கு. அழகிரிசாமி முதல், கி. ராஜநாராயணன் ஈறாக, மொத்தம் 43 எழுத்தாளர்களின் சிறந்த 60 சிறுகதைகளைத் தொகுத்து வழங்கியிருப்பது மிகவும் சிறப்பு. ஏறக்குறையப் பெரும்பாலானோர் விருதுபெற்ற எழுத்தாளர்கள்தாம். பெரும்பாலானோர், இப்போதும் புகழ் வெளிச்சத்தில் இருப்பவர்கள். சிலரின் பெயரை இந்தத் தொகுப்பில்தான் காணமுடிகிறது. பாரதிதேவி, சூரங்குடி அ. முத்தானந்தம், ஜி. காசிராஜன், எஸ். காமராஜ், பாட்டக்குளம் துர்க்கையாண்டி, அன்னக்கொடி போன்றோர் எழுத்துகள் மைய நீரோட்டத்துடன் கலவாதவை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், அவர்கள் கதைகள் அனைத்துமே முத்திரைக் கதைகள்தாம்.
இந்தக் கதைகளில் அளவில் மிகச் சிறிய கதை, நரன் எழுதிய ’இரண்டாம் உலகப்போர் நாளில் எல்லா நாடுகளிலும் நிகழ்ந்த மிகச் சிறிய கதை’ தான். இரண்டாம் உலகப்போரின் நாட்களில், மனிதர்கள் உணவுக்கும் உடைக்கும் எவ்வளவு சிரமப்பட்டார்கள் என்பதை, ‘நிர்வாணமாக நிற்கும் மூத்தவன், தனது அப்பாவின் சாவு நாட்களை எதிர்பார்த்தபடியிருந்தான். தனக்கு அப்பாவின் உடை கிடைக்குமென்பதைத்தவிர வேறு காரணமில்லை” என்ற வரிகள் மிகவும் எதார்த்தமாகச் சொல்லி நம் மனதை நெகிழச் செய்யத் தவறவில்லை. கதை சிறியதுதான் என்றாலும் கனமும் வலியும் பெரியது. இங்கு தொகுக்கப்பட்ட அனைத்துக் கதைகளுமே, பல்வேறுபட்ட வாழ்க்கைச் சூழலின் தரவுகளிலிருந்து உருவானவை. இவை அனைத்துமே வலிகள் நிறைந்தவை என்பதைவிட வாழ்க்கை நிறைந்தவை என்று சொல்லலாம். கு. அழகிரிசாமி, கி.ரா., பா. செயப்பிரகாசம், மேலாண்மை பொன்னுசாமி, பூமணி, சோ. தர்மன், சமயவேல், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற நன்கு அறியப்பட்டவர்களின் படைப்புகள் குறித்துத் தமிழ் இலக்கிய உலகம் அதிகம் பேசிவிட்டது. அதிகம் பேசப்படாதார்களின் கதைகளைக் குறித்து இங்கே பேசலாம். சூரங்குடி அ. முத்தானந்தம் 8 சிறுகதைத் தொகுப்புகள் வெளியிட்டிருந்தாலும் அதிகம் வெளியில் தெரியாதவர். அவரின் ‘வாய்தா மாடுகள்’ இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. வாய்தாவுக்கு மாடு வாங்கும் பழக்கம் இக்கதையைப் படித்தால்தான் புரிகிறது. விதைத்த வெள்ளாமையை வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்ப்பதற்குள் ஒரு விவசாயி படும் அத்தனை பாடுகளும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இங்கு சம்சாரிகளிடையே நிலவும் ஏழைபாழைத்தனங்கள் எளியவர்களை முதலாளிகள் எவ்வாறு சுரண்டுகிறார்கள் போன்ற விஷயங்கள் இங்கு நுணுக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
ஜி. காசிராஜன் எழுதிய ‘புதிர் மூடிய ஒருவன்’ சிறுகதை, ஓர் அப்பாவி கூலிக்காரனின் கையறுநிலைக் கதை. ஒரு வலியவனின் பிடியில் அந்த அப்பாவி ஊருக்குத் தெரியாமல் தன் மனைவியையே தாரை வார்த்துத் தரும் நிலை; குழந்தைகள் வரிசையாகப் பிறக்கின்றன. யாருடைய குழந்தைகள் என்றே தெரியாத நிலை. இது எல்லாக் கிராமங்களிலும் நடக்கும் ஒன்றுதான் என்றாலும் அந்த அப்பாவி, தாம்பத்யத்தில் தோல்வியடைந்துவிட்டான் , அவனுக்கு வேறொருவன் மூலம் குழந்தை பிறக்கிறது, அதையும் இவன் வாய்மூடி மௌனமாக ஏற்றுக்கொள்கிறான், தனக்கு விரைவில் ஒரு சாவு வரமாட்டேங்குதே என்னும் ஏக்கத்தில் இருக்கிறான், இப்படிப் போகும் கதை இத் தொகுப்பில் இடம்பெற்றது ஆச்சரியமளிக்கிறது. வட்டாரவழக்கில் சொல்லப்படும் கதையில் இவ்வளவு எழுத்துப்பிழைகள் நேர்ந்திருக்க வேண்டாம். அடுத்து எஸ். காமராஜின் ‘மருளாடியின் மேலிறங்கியவர்கள்’ சிறுகதை. சச்சி என்கிற சரஸ்வதி ஓர் ஏழை தலித். அவளுடைய ஏறக்குறைய இருபது ஆண்டுகால வாழ்க்கையை ஐந்து பக்கங்களில் சொல்வதானால் ஒரு திரைப்படத்திற்குத் திரைக்கதைச் சுருக்கம் எழுதுதுவது போலத்தான் இருக்கும். இக்கதையிலும் நிறைய எழுத்துப்பிழைகள். பணக்காரர்களால் இவள் கெடுக்கப்பட்டு, கர்ப்பமுற்று, கர்ப்பம் கலைத்து இப்படியே போகும் வாழ்க்கை, கடைசியில் இவளை ஒரு விபச்சாரியாக்கி விடுகிறது, இவற்றைச் சச்சி விருப்பமுடனே ஏற்றுக்கொள்கிறாள்; கடைசியில் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வந்து விழுகிறாள்; செவ்வாய், வெள்ளிக்கு நெற்றி நிறைய விபூதி பூசிக்கொண்டு குறி சொல்பவளாகிறாள். இவள் வாழ்க்கை, வாழ்க்கையாக இல்லாமல் சம்பவங்களாகச் சொல்லப்பட்டுள்ளது ஒரு குறைதான்.
அடுத்து, அதிகம் அறியப்படாத பாட்டக்குளம் துர்க்கையாண்டியின் ‘கருத்த போர்வை’. பொட்டியம்மாள், காளியப்பன் இருவரின் இரவில் முயங்கித் திளைத்த காதல் நினைவுகளை வரிகளெங்கும் அள்ளித் தெளித்துப் பரவசமடையச் செய்யும் கதை. கொஞ்சம் மாறுபட்ட கிராமியத்தனமான விவரணைகள்; அவர்கள் இருவரும் சுற்றியிருந்த போர்வை எப்படி ஏலத்தில் வாங்கப்பட்டது போன்ற செய்திகள்; ஏலம் என்னும் ஒரு விஷயமே எப்படி நம் வாழ்வியலிலிருந்து மறைந்து போனது என்பதை நினைவு படுத்துகிறது. ஏழைகளின் வாழ்வு துயரமாகத்தான் முடியவேண்டுமா என்று நினைக்கத் தோன்றுகிறது. கிடைக்குச் செல்லும் ஆண்கள் பாம்பு கடித்து இறந்துபோகும் நிகழ்வுகள் கதை நிகழும் அந்த நாட்களில் சாதாரண நிகழ்வுகளாகத்தான் இருந்திருக்கின்றன என்பதை நினைக்கையில் மனதில் ரணத்தை ஏற்படுத்துகிறது.
அடுத்து ராஜேஷ் ராதாகிருஷ்ணன் எழுதிய ‘என்னாளுங்க?’ சிறுகதை. தலைப்பிலேயே, இது சாதி தொடர்பான கதை என்பது தெரிகிறது. சென்னைக்கு முதல் முறையாகப் பயணிக்கும் ஒரு கிராமத்து இளைஞனின் மனம் இப்படி நினைக்கிறது: பக்கத்து இருக்கை ஆசாமி … விடும் குறட்டையைப் பார்த்தால் காலனியாயிருப்பானோ;…இந்த இம்சைக்குத்தான் எங்க ஊர்ப் பேருந்துகளில் பக்கத்திலிருக்கும் காலனிகளுக்கு நிறுத்தமே இல்லை…அப்படி ஏறும் பட்சத்தில் சீட்களில் அனுமதியில்லை. வெகு யதார்த்தமாகக் கதை சொல்லல் நிகழ்கிறது. கிராமத்தில் இந்த இளைஞன் வீட்டில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த தடியன் என்பவரின் மகன்தான்(சின்ன தடியன்) இவன் இண்டர்வ்யூவுக்கு வந்த அலுவலக மேனேஜர் என்பதையும், எப்படியும் வேலை வாங்கித் தருவதாகவும் சின்னத் தடியன் சொன்னதை அப்பாவிடம் பெருமையாக ஃபோனில் சொன்னபோது, அப்பா கோபமாக, ‘அந்தத் தாயோளிகிட்ட நீ கைகட்டி வேலை பாக்கப் போறியாக்கும்? ஒரு மசுறும் தேவையில்லை.. வேற வேல கெடச்சாப் பாரு…இல்லன்னா நாய் கணக்கா ஊருக்கு வந்து நாலு ஆடு வாங்கி மேச்சுக் கஞ்சியக் குடிச்சுட்டுக் காலத்த ஓட்டு’ என்கிறார். தனக்குக் கீழ் கைகட்டி இருந்தவன் நகரத்தில் பெரிய அதிகாரியாக இருக்கிறான் என்னும் நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ளத் தயங்கும் பழைய தலைமுறை, அந்தப் பழைமை வாசத்திலேயே வளர்ந்து நிற்கும் புதிய தலைமுறை என்று வெகு நேர்த்தியாகச் சொல்லப்பட்ட கதை. இன்னும், சி.அன்னக்கொடி எழுதிய ‘முச்சந்தி’, பா.சரவணகாந்த் எழுதிய ‘சுடலையாண்டி’, மதிக்கண்ணன் எழுதிய ‘மற்றொருவன்’ கதையும் கரிசல் வாழ்வியலைப் பேசும் கதைகளாகும். நிலன் எழுதிய ‘உயிர்க்கவசம்’ சிறுகதை கொரோனா காலத்தில் நிகழ்ந்த, மருத்துவம் சார்ந்த கதையாகும். கொரோனா நாட்களில் மருத்துவப் பணியிலிருந்த செவிலியர்களின் அன்றாட வாழ்க்கை எவ்வளவு துயரம் மிகுந்ததாகக் கழிந்தது என்னும் நிகழ்வுகளைச் சொல்லும் இக்கதை மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் மிகச் சிறந்த கதையாகும். இச்சிறுகதைத் தொகுப்பு அரசு வெளியீடாக வந்திருப்பது மாவட்ட நிர்வாகத்தின் தம் நிலவியல் சார்ந்த எழுத்தாளர்களைக் கௌரவிப்பதாக இருக்கிறது.
இதற்கான அக்கறையுடன் முன்னெடுப்புச் செய்த முனைவர் வீ.ப. ஜெயசீலன் இ.ஆ.ப., விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களைப் பெரிதும் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறது தமிழ் இலக்கிய உலகம். மாவட்ட அளவிலான எழுத்தாளர்களைக் கண்டுபிடித்து அவர்களுடைய சிறுகதைகளைத் தேர்வு செய்து எடிட் செய்து மிகச் சிறந்த கட்டமைப்புடன் இந்த நூல் உருவாக்கத்திற்குப் பங்களித்த தோழர் ச. தமிழ்ச்செல்வன், தோழர் ம. மணிமாறன் ஆகியோரும் பாராட்டுக்குரியவர்கள்.l