இக்கட்டுரைத்தொகுப்பு நூலில் 19 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. பக்க விரிவஞ்சி, முக்கியத் தலைப்புகளின் கீழ் எழுதப்பட்ட கட்டுரைகள் மட்டும் கீழே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
கடலுக்கு அடியில் நகரம் எனும் கட்டுரையானது, ஐரோப்பாவிலுள்ள நெதர்லாந்து நாட்டின் 26 சதவீத நிலப்பகுதி கடல் மட்டத்திற்கும் கீழுள்ளது. அங்கே கடல் மட்டமானது ஒரு மீட்டர் உயரும்போது, அந்நாட்டின் 59 சதவீத நிலப்பகுதி கடல் மட்டத்திற்குக்கீழே சென்று விடும். அதுபோன்ற நிலப்பகுதிதான் கேரள மாநிலத்திலுள்ள பத்தினம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம் மாவட்டப்பகுதிகளை உள்ளடக்கிய குட்டநாடு ஆகும்.
குட்டநாட்டிள்ளதுதான் வெம்ப நாடு ஏரி. 2000 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்த ஏரியின் 10 சதவீத நிலப்பரப்பு கடல் மட்டத்திற்குக் கீழேயும்; 20 சதவீத நிலப்பரப்பு கடல் மட்டத்திற்கு மேலேயும் இருக்கின்றது. 1865 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் ஆட்சிக்காலத்தில், தடுப்பணைகள், கரைகள் கட்டப்பட்டு, இந்த ஏரியின் பெரும்பகுதி விவசாய நிலங்களாக மாற்றப்பட்டதையும், இன்றைய காலத்தில் அப்பகுதி பிரபலமான சுற்றுலாத்தளமாக மாறியிருப்பதையும் கட்டுரை விவரிக்கிறது.
மிதிவண்டிப்பயணமும் வாழ்க்கைப்பயணமும் எனும் கட்டுரை, மிதிவண்டிப்பயணத்தில் மேடு பள்ளங்கள் இருப்பதுபோல, வாழ்க்கை என்பதும் மேடு பள்ளங்கள் நிறைந்தது என்கிறது. வாழ்க்கையில் பலரும் வெற்றி பெறாமல் போவதற்கு ஒரு சில உந்துதலும், ஆதரவும் கிடைக்காமல் போவதுதான் முக்கியக் காரணம் எனவும், அதனால், பெரிய வெற்றிக்காக வாழ்க்கையில் காத்திராமல் அன்றாட வாழ்வில் நமக்குக் கிடைக்கும் சிறியசிறிய வெற்றிகளைக் கொண்டாடக் கற்றுக்கொள்ளவும் கூறுகிறது. எண்களின் வகைகள் எனும் கட்டுரையில், இயற்கையாக இருந்த எண்கள் இயல் எண்கள்(Natural Numbers) எனலாம். இயல் எண்களுடன் மற்றோர் இயல் எண்ணைக்கூட்டினாலும், பெருக்கினாலும் கிடைப்பது ஓர் இயல் எண்தான். அதேபோல் இரண்டு முழு எண்களின் விகிதமாக (P/Q) எழுதக்கூடிய எண்கள் விகிதமுறு எண்கள் (Rational numbers) எனப்படும். 4000 ஆண்டுகளுக்கு முன்பாக முக்கோணத்தின் மூன்றாம் பக்கத்தைக் கண்டுபிடிப்பது என்ற சூத்திரத்தை பிதாகரஸ் கண்டறிந்ததையும், பகு எண்கள், பகா எண்கள், எதிர்ம எண்கள் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது.
உயிர் எழுத்தின் அறிவியல் என்னும் கட்டுரை, உயிருள்ள பொருட்கள் என்ற வகையில், விலங்குகளும் தாவரங்களும் வருகின்றன. உடலைவிட்டு உயிர் பிரிந்துவிட்டால், உடல் மக்கி மண்ணாகி விடுகிறது. அதுபோல் உயிர் எழுத்து இல்லையென்றால் எந்த ஒரு மொழியும் தனித்து நிற்க இயலாது. அதனால்தான் இதற்கு உயிர் எழுத்து எனப்பெயராகும். உயிர் எழுத்துகள் இல்லாமல் மெய்யெழுத்துகளைக்கொண்டு வார்த்தைகளை உருவாக்குவது மிகவும் கடினம். அதனால்தான் உயிர் எழுத்தும், உயிர்மெய் எழுத்தும் இல்லாத வாக்கியங்களை உருவாக்க முடியாது. தமிழ் போன்ற மொழிகளில் எழுத்தை த்தனியாகப்படித்தாலும் ஒரு வார்த்தையில் படித்தாலும் அதே எழுத்தைத்தான் திரும்பப்படிக்கிறோம். ஏனென்றால் உயிர் எழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து ஆகியவை தமிழில் தெளிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், ஆங்கிலத்தில் உயிர் எழுத்து இருந்தாலும் உயிர் எழுத்தின் ஓசை முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால்தான் ஒரே எழுத்தை வேறுவேறு வார்த்தைகளில் எழுதும்போது அதன் ஓசை மாறுபடுகிறது என்கிறது. மனித குலத்தின் அடுத்த பயணம் எங்கே? என்கிற கட்டுரையில், நாடோடியாக வாழ்ந்த மனிதன் விவசாயம் செய்யும்போது விலங்குகளைப்பழக்கிப் போக்குவரத்துக்குப் பயன்படுத்திக்கொண்டான். அப்போது வேகமாகப் பயணம் செய்யக் குதிரை பயன்படுத்தப்பட்டது. அதன்பின் மிதிவண்டியும், அடுத்துத் தொடர் வண்டியும் பயன்பாட்டிற்கு வந்தது. 19 நூற்றாண்டில் புதைபடிவ எரிபொருள் கண்டு பிடிக்கப்பட்டதற்குப்பிறகு பெட்ரோல், டீசல் என்ஜின்கள் தயாரிக்கப்பட்டன.
இதன்காரணமாகக் கார், பேருந்து, விமானம் உருவாக்கப்பட்டன. வேகமான விமானங்களும், ஏவுகணைகளும் தயாரிக்கப்பட்டன. ஏவுகணைகளைக்கொண்டு நாடுகளைத்தாக்கும் போர்த்தந்திரம் உருவானது. உலகப்போர் முடிவடைந்ததற்குப்பிறகு ஏவுகணையின் நீட்சியாக விண்ணுக்கு ஏவு வாகனங்கள் தயாரிக்கப்பட்டு, அதில், 1969 ஆம் ஆண்டு மனிதன் நிலவிற்குப் பயணம்செய்து காலடி களைப் பதித்தது பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் பற்றிய கட்டுரையானது, கி.மு 476 இல் பிறந்ததாகக் கணிக்கப்படும் ஆர்யபட்டா, இந்திய வானியல் அறிஞர்களின் முன்னோடியாவார். இவர் புவியானது கோள வடிவத்தில் இருக்கிறதென்றும், அது தன்னைத்தானே சுற்றுகிறது என்ற தகவலையும், கிரகணங்கள் ஏன் உருவாகின்றன என்பதற்கும் சரியான விளக்கம் கொடுத்தவர் ஆவார். இது மட்டுமின்றி, வட்டத்தின் பரப்பளவைக் கண்டுபிடிக்கும் சூத்திரத்தில் ‘பை’ எண்ணுக்கு நான்கு இலக்கம் வரை துல்லியமாகக் கண்டடைந்தவர். விஞ்ஞானி யு.ஆர். ராவ் தலைமையில் 30 மாதக் கடுமையான உழைப்பிற்குப்பிறகு 1.59 மீட்டர் அகலம்; 1.19 மீட்டர் உயரம் கொண்ட அரைக் கோள வடிவில் 26 தட்டையான முகங்களுடன், 358 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள் தயாராகி, அதற்கு ஆர்யபட்டா என்று பெயரிடப்பட்டது.
உள்நாட்டிலே தயாரான இச்செயற்கைக்கோளானது 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 தேதி ரஷ்யாவிற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கே விண்ணில் செலுத்தப்பட்டது பற்றிப் பதிவு செய்கிறது. உலக வானியல் வாரம் என்னும் கட்டுரை, இயற்கையாகச்சூரியனைச் சுற்றிவரும் பூமி, சந்திரன், போன்றவற்றைக் கோள் என்று அழைக்கிறோம். அதேபோல், நமக்குச் சேவை செய்ய ஒரு கருவியை விண்வெளியில் ஒரு குறிப்பிட்ட சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தினால் அதனைச் செயற்கைக்கோள் என்கிறோம். இந்த செயற்கைக்கோள்களின் மூலம், இயற்கைச்சீற்றங்கள், மீன்வளப்பகுதி, விலங்குகளின் நடமாட்டம், காடுகள் அழிப்பு, போன்றவற்றினைக் கண்டறிய முடியும். பல்வேறு நாடுகளுக்கிடையே விண்வெளியை எப்படிப் புரிந்துகொள்வது என்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாகி 1967 அக்டோபர் 10 தேதி அமலுக்கு வந்தது. அந்த நாளையே உலக வானியல் வாரமாகக் கொண்டாடப்பட்டு வருவது பற்றிக் கூறுகிறது.
முதல் விண்வெளித் தொலைநோக்கி என்கிற கட்டுரை, பூமியிலிருந்து 100 கி.மீ. வரை வியாபித்திருக்கும் புவியின் வளி மண்டலம் பிரபஞ்சத்திலிருந்து வரும் பல மின்காந்த அலைகளைச் சிதறடிக்கச்செய்கிறது. அதனால் புவியின் மேற்பரப்பில் நிறுவப்பட்டிருக்கும் தொலைநோக்கிக்கு முழுமையான விவரங்கள் கிடைப்பதில்லை. பிரபஞ்சத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளத் தொலைநோக்கியை விண்ணில் அமைக்கவேண்டியது அவசியம். ஏனெனில், பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கிறது ; பிரபஞ்சத்தில் கரும்பொருள் இருக்கிறது; புவியைப்போலப் புறக்கோள்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றன என்பனவற்றைக் கண்டறிய தொலைநோக்கிகளே உதவி புரிந்தன எனவும், பால்வெளி மண்டலம் எப்படி
உருவாகிறது என்பதனையும் தொலைநோக்கி உதவியுடன்தான் கண்டறிய முடிந்தது என்கிறது. ஒவ்வொன்றும் மற்றொன்றைச் சார்ந்தது என்கிற கட்டுரையில், பூமியில் ஒரு கோடிக்கும் அதிகமான உயிரினங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 16 லட்சம் உயிரினங்கள் மட்டுமே வகைப்படுத்தப்பட்டுள்ளன. மற்றவை பற்றிய தரவுகள் தொகுக்கப்படவில்லை.
பெரும்பாலான உயிரினங்கள் அவற்றைக் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே அழிந்துவிடுகின்றன. பல்லுயிர் இழப்பு என்பது ஓர் உலகளாவிய சவாலாக வளர்ந்து வருகிறது. வாழ்விட அழிவு, சுற்றுச்சூழல் மாசுபாடு, இயற்கை வளங்களை அதிகமாகச்சுரண்டுதல், காலநிலை மாற்றம் போன்ற நடவடிக்கைகள் பல்லுயிர் இழப்புக்குக் காரணமாகின்றன. புவியில் உள்ள உயிரினங்கள் ஒன்றையொன்று சார்ந்தவை என உணர்ந்து, உயிரியல் பன்முகத்தன்மைக்கு முக்கியத்துவமளிப்பது அவசியம் என்கிறது.
இருபுறமும் கூர் தீட்டிய கத்தி என்னும் கட்டுரை, இரண்டு அணுக்கள் ஒன்றிணைந்து பெரிய அணு உருவாகும்போது அந்த இணைவின் காரணமாக எண்ணற்ற ஆற்றல் வெளியிடப்படுகிறது. சூரியனில் இரண்டு ஹைட்ரஜன் இணைந்து ஹீலியம் அணுக்களாக மாறும்பொழுது ஆற்றல் உருவாகிறது. இதேபோல் ஓர் அணு இரண்டாகப் பிரியும்பொழுது அதிலிருந்தும் ஆற்றல் வெளிப்படுகிறது. அதை அணுக்கருப் பிளவு என்கிறோம். அணுசக்தி மூலம் மின்சாரத்தயாரிப்பு மட்டுமல்லாமல் புற்றுநோய்ச் சிகிச்சைக்கான கதிர்வீச்சுக்கு மட்டுமல்லாது பல்வேறு பயன்பாட்டிற்கும் வித்திடுகிறது. அணுசக்தியால் சில சவால்களையும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது. அதாவது, அணுக்கழிவுகளை அகற்றுவது; அணு உலைகளைப் பாதுகாப்பது; போர்க் காலங்களில் அணுசக்தித் தொழில் நுட்பப்பயன்பாடு கவலையளிக்கக்கூடியதாக இருப்பதையும் விவரிக்கிறது.
உயிரி எரிபொருள் என்கிற கட்டுரை, நாள் கணக்கில் புதையுண்டு உருவாகும் புதைபடிவ எரிபொருள்களுக்குப்பதிலாக, உயிரிப்பொருட்களான புல், மரம், பயிர் வகைகள், விவசாயக்கழிவுகளிலிருந்து உருவாக்கப்படும் எரிபொருட்கள்தாம் உயிரி எரிபொருட்கள் எனப்படுகின்றன. உயிரி எரிபொருள்கள் பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வைக்குறைக்கின்றன. அதுமட்டுமல்ல பெட்ரோலைவிட தூய்மையானவை. உயிரி எரிபொருட்களைப் பயன்படுத்துவதன்மூலம், நமது பசுமைப்பொருளாதாரம் குறைந்த கார்பன் செறிவான சூழலுக்கு மாறலாம் என்கிறது.
அதிர்வலைகள் என்னும் கட்டுரையில், ஒலியின் வேகம் மணிக்குத் தோராயமாக 1200 கி.மீ. இதைவிட அதிகமாகப் பயணம் செய்யும் பொருட்களைச்சுற்றி அதிர்வலைகள் உருவாக்கப்படுகின்றன. ஒரு வெடி விபத்து நடக்கும்பொழுது வெடித்த பொருட்களிலிருந்து ஆற்றல் உருவாகிறது. அந்த ஆற்றல் சுற்றியிருக்கும் காற்றை அதிவேகத்தில் தள்ள முயற்சிக்கிறது. ஒலியைவிடப் பலமடங்கு வேகத்தில் காற்று நகரும்போது சுற்றி நிற்கும் மனிதர்கள், கட்டிடங்களைத் தாக்குகிறது. அதிர்வலைகள் எப்படி உருவாகின்றன அவற்றை எப்படி கையாள்வது என்பது நவீனத் தொழில் நுட்பத்தின் ஆராய்ச்சியாகும். அதிர்ச்சி வைத்தியம் சிலருக்குப் பயன்படுவதுபோல், அதிர்வலைகளும் நவீனத் தொழில் நுட்பத்தில் பல இடங்களில் பயன்பாட்டிற்கு வந்துள்ளதென விவரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, காற்றின் ஊடே என்னும் தலைப்பிலான கட்டுரை, மிகக்குறைந்த பரப்பளவில் காற்றை எதிர்கொள்ளும்போது அந்த அளவுக்கு வேகமாகச்செல்லமுடியும் எனவும், அதிகப் பரப்பளவுடன் காற்றை எதிர்கொள்ளும்போது குறைந்த வேகத்தில்தான் செல்லமுடியும் என்கிறது. இதுதவிர, டிஜிட்டல் இந்தியா ;தொழில் நுட்பத்தின் தந்தை விக்ரம் சாரபாய்; அப்துல் கலாம் பற்றியும், இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. l