பெரும்பாலான தமிழ் இலக்கியப் படைப்பாளிகளிடம் எப்போதும் ஒர் அரசியல் எதிர்ப்பு மனநிலை நிலவி வருவதை நுட்பமான வாசகர்களால் எளிதில் இனங்காண முடியும். இலக்கியம் என்னும் அசுணப்பறவை, ‘அரசியல்’ அபசுரத்தைக் கேட்க நேர்ந்தால் அந்தக் கணத்திலேயே அது துடிதுடித்து இறந்து விடும் என்ற கருத்தை அன்றைய முன்னோடிப் படைப்பாளிகளில் இருந்து இன்றைய நவீன எழுத்தாளர்கள் வரை விடாமல் சொல்லிக்கொண்டிருப்பதை நாம் வாசித்துக் கொண்டேதான் இருக்கிறோம். உலகம் முழுவதிலும் இந்தப் போக்குதான் இருப்பதாக அவர்கள் அடித்துக் கூறுவதுண்டு. ஆனால், இவர்கள் சொல்லும் அதே எழுத்தாளர்கள் தமது எழுத்துகளில் ‘பக்கா’ அரசியல் கருத்துகளை முன் வைத்திருக்கிறார்கள். வெறும் எழுத்து – பேச்சில் மட்டுமன்றி களத்திலேயே இறங்கி அவர்களில் பலர் செயல்பட்டு வந்திருப்பதை நாம் எடுத்துக் கூறியவுடன் இகழ்ச்சியாகச் சிரித்துக் கொண்டு ‘உலக இலக்கியம் பத்தியெல்லாம் உஙளுக்கு என்னய்யா தெரியும்?’ என்ற தொனியில் நக்கல் செய்வதையும் பார்த்துக் கொண்டேதான் வருகிறோம். ழீன் பால் சார்த்தர் பற்றி அத்தகைய ‘அரசியல் விரோதிகள்’ அடிக்கடி சொல்வதுண்டு. இந்தக் கருத்தைச் சொன்னவரும் சார்த்தர்தான் என்பதால் இங்கே அதை மேற்கோள் காட்ட விரும்புகிறேன் : “நவீன இலக்கியம் உயிர்த்திருக்க வேண்டுமானால், அது அழகியலையும் மொழி விளையாட்டையும் புறக்கணித்து விட்டுச் சமுக அரசியல் பொறுப்புடனிருக்க வேண்டும்…”
அந்த வகையில், நம் அண்டை வீட்டிலிருந்தும், அயல் வீட்டிலிருந்தும் நமக்குக் கிடைக்கும் சில படைப்புகளை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம் : ஓர் இளம்பெண். பெயர் பிருந்தா. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர். படிப்பை முடித்து விட்டு நாடகக்கலையைக் கற்றுக்கொண்டு மேடைகளில் நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டுமென விரும்பி, இலண்டன் செல்கிறார். ஆனால், அவருடைய தந்தை, தனது பெண் பொருளாதார ரீதியில் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்று வலியுறுத்துபவர். எனவே, நீ ஏதாவது ஒரு வேலையைத் தேடிக்கொள். பகுதி நேரமாக வேண்டுமானால் நாடகப் பயிற்சி பெற்றுகொண்டு நடிக்கலாம் என்று நிபந்தனை விதிக்கிறார். சரியென்று அந்தப்பெண் விமான நிலையத்தில் பணியொன்றை ஏற்கிறார். மாலை நேரப் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து நாடகக் கலையைப் பயில்கிறார். ஆனால், வெகு விரைவில் அவருடைய ஆர்வங்கள் திசை மாறுகின்றன. மூன்றே வருடங்களில் ஏர் இந்தியா அலுவலகப் பணியைத் துறந்து விட்டுக் கல்கத்தாவுக்குத் திரும்பி விடுகிறார். அங்கே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து தொழிற்சங்கங்களில் பணியாற்றத் துடிக்கிறார். அப்போது அவசர நிலைக் காலம். இந்தியா பூராவிலும் கட்சி கடுமையான அடக்கு முறையைச் சந்தித்துக் கொண்டிருந்த சூழல். அவரோ ஒர் உயர் குடும்பத்துப் பெண். இலண்டனில் விமான நிலையப் பணியைத் துறந்து விட்டுக் கட்சியில் வந்து சேருகிறேன் என்று நிற்கிறார். அவ்வளவு எளிதில் அவரைக் கட்சியில் சேர்ப்பதற்குத் தலைவர்கள் சம்மதிக்கவில்லை. பல நேர்காணல்கள், விசாரணைகளுக்குப் பின், அவருக்குக் கட்சியின் பரீட்சார்த்த உறுப்பினர் தகுதி கிடைக்கிறது. ஜோதிபாசுவும், பி.சுந்தரய்யாவும் அவரைப் பற்றிய ஒரு கணிப்புக்குப் பின், பல்வேறு பணிகளில் ஈடுபடுத்துகிறார்கள். விரைவிலேயே டெல்லிக்குப் போகுமாறு கட்சி அவரைப் பணிக்கிறது.
டெல்லியில், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடுவே சிஐடியூ தொழிற்சங்கப் பணிகளில் அவர் ஈடுபடுகிறார். போலீசாரால் கைது செய்யப்படும் சூழல் இருந்ததால், அவருக்குப் புனைபெயர் சூட்டப்படுகிறது. ‘ரீட்டா’ வாகிறார். 1975-ஆம் ஆண்டிலிருந்து, 1985-ஆம் ஆண்டு வரையிலான பத்தாண்டுக் காலம், அவருக்குப் பல்வேறு அனுபவங்களைத் தருகிறது. டெல்லிக்குப் போன ஆறே மாதங்களில் திருமணமாகிறது. காதல் மணம். கணவர் ப்ரகாஷ்காரத் கட்சியின் அகில இந்திய மாணவர் அமைப்பின் அன்றைய தலைவர்.
‘ரீட்டாவின் கல்வி’ என்ற தலைப்பில் தன் வரலாற்று நூலை எழுதியிருக்கும் பிருந்தா காரத் தனது வாழ்க்கையின் மிக முக்கியமான காலம் என்று மேற்கண்ட பத்தாண்டுகளைக் குறிப்பிடுகிறார். ஒரு விறுவிறுப்பான நாவலின் ஒரு காட்சியைப்போல் இந்த நூல் தொடங்குகிறது. எமர்ஜென்சி நாள்களில் ஒர் இரவு. வடக்கு தில்லியின் கமலா நகர்ப்பகுதியில் உள்ள ஒரு சிறிய அறை. விட்டு விட்டு மங்கலாக எரியும் ஒர் எண்னெய் விளக்கு வெளிச்சத்தில் பிர்லா பருத்தி ஆலைத் தொழிலாளர்கள் 13 பேர் சந்திக்கிறார்கள். ரீட்டாவாகப் பெயர் மாற்றப்படப் போகும் பிருந்தா ஒருவர் மட்டுமே அங்கிருந்த ஒரே பெண். அடுத்து வந்த பத்தாண்டுக் காலத்தில், பல்லாயிரக் கணக்கான ஆலைப்பாட்டாளிகளிடமிருந்து அவர் கற்ற கல்வியின் கதையை நாம் வாசிக்கும் போது நெஞ்சம் விம்முகிறது. சுனீத் சோப்ராவை, பிரகாஷ் காரத்தை, ‘பண்டிட் க்வீன்’ என்ற நாவலில் கொள்ளைக்காரியான பூலான்தேவியின் கதையை எழுதிய மாலா சென்னை, ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தை, ஏ.கே.கோபாலனை இன்னும் ஏராளமான தலைவர்களைப் பற்றிய ஏராளமான நுட்பமான பதிவுகளைப் பிருந்தா காரத் இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார். தலைவர்களைப் பற்றி மட்டும் எழுதி விட்டு. சாதாரணமான பல ஆலைத்தொழிலாளர்கள், ஆயிரக்கணக்கான பெண் உழைப்பாளிகள், கட்சி, தொழிற்சங்க ஊழியர்கள் என எளிய மனிதர்களைப் பற்றிக் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை. சொல்லப்போனால், அத்தகைய சாதாரண மனிதர்களே ரீட்டாவுக்குக் கல்வி கற்பித்தவர்கள் என்று பெருமிதம் பொங்கச் சொல்லிக்கொண்டே போகிறார். இலண்டனில் நடந்த வியட்நாம் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனுபவமே மார்க்சிய இயக்கங்களை, இலக்கியங்களைப் பற்றி வாசிக்கவும், இந்தியாவுக்குத் திரும்பி வந்து தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபடவும் தன்னைத் தூண்டியவை என்கிறார் பிருந்தா.
“அந்தக் கொந்தளிப்பான காலகட்டத்தில், எல்லாமே எனக்குப் புதிதாக இருந்தது. நான் என் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள முயன்று கொண்டிருந்த போது கருத்தியல் சார்ந்த என்னுடைய சிந்தனைகள் ஒரு கம்யூனிஸ்ட் தொழிலாளியைப்போல இருக்க வேண்டியிருந்தது. ”ஒரு கட்சித்தலைவர், இளம் பெண் தோழர்களின் வளர்ச்சியில் தனிப்பட்ட கவனம் செலுத்துவது என்றைக்கும் உதவும்“ என்று பி.சுந்தரய்யா சொன்னார். பி.எஸ்.சின் அந்த வார்த்தைகள், பல பத்தாண்டுகளுக்குப் பிறகும் உண்மையாக ஒலிக்கின்றன. மற்றவர்களுக்கு என்ன தேவை என்பதைப் புரிந்து கொள்ளும் திறனும், ஒரு பெண் செயற்பாட்டாளருக்குச் சமூக ரீதியாகவும் உள் கட்டமைப்பு ரீதியாகவும் என்ன மாதிரியான ஆதரவு தேவை என்பதையும் உணர்ந்த ஒரு முன்னணிச் செயலாளர் இருந்தால், இளம்பெண்களுக்குச் சமூகத்திலும், கட்சிக்குள்ளும் இருக்கும் ஆணாதிக்கப் போக்குகளை எதிர்கொள்வது எளிதாக இருக்கும்…”
இன்னோர் இடத்தில் பிருந்தா குறிப்பிடுவதைப் பாருங்கள் : ” சமூக வாழ்க்கையில் பழக்கப்படாத ஓர் உலகத்தில், தனியாக ஓர் இளம்பெண் பயணிப்பது எளிதல்ல. வீரமும், தைரியமும் மிக்க பல இளம்பெண்கள் தங்களின் பெற்றோர், உடன்பிறந்தோரின் தொடர் எதிர்ப்பை எதிர்கொண்டு இடதுசாரி இயக்கத்தில் சேர்ந்ததை நான் பார்த்திருக்கிறேன். சமீபத்தில் நான் பங்கேற்ற ஓர் இளைஞர் மாநாட்டில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், அவருடைய தந்தையின் அனுமதியில்லாமல் அந்த மாநாட்டில் தான் கலந்து கொண்டதால் அவருடைய தந்தை தன்னைத் திட்டி அனுப்பிய குறுஞ்செய்தியை என்னிடம் காண்பித்தார். அவர் கண்களில் கண்ணீர். தனியாக இருக்கும் இளம்பெண்கள் எந்தத் துறையிலிருந்தாலும் குடும்பத்தின் ஆதரவில்லாமல் இருப்பதென்பது அவர்கள் கடக்க வேண்டிய பெரிய தடையாக இருக்கிறது…” இந்தப் புத்தகம் நெடுக இத்தகைய அனுபவரீதியான உண்மைகளைத் தொடர்ந்து படித்துக் கொண்டே வந்த போது, அரசியல் கல்வியை ஓர் இளம்பெண்ணுக்குப் புத்தகங்கள் ஊட்டினாலும், அதன் முழுப்பரிமாணங்களையும் அவர் உணர்ந்து கற்றுத்தேற வேண்டுமானால், அவர் சமூக இயக்கங்களில் ஈடுபட்டுக் களமாடினால்தான் சாத்தியப்படும் என்பது தெளிவாகிறது. இந்த அரிய அனுபவப் பிழிவுகளின் வீரியமும், விரிவும், அழகும் தமிழில் அப்படியே வந்திருக்கின்றன என்பது ஒரு சிறப்பு. காரணம், அபிநவ் சூர்யா. சித்தார்த் ஆகிய இருவரின் செறிவான, எளிய மொழிநடையில் அமைந்த நீரோட்டம் போன்ற மொழிபெயர்ப்பே.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணனும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவனும் இணைந்து வெளியிட்ட நூல்: சே குவேரா – ஒரு போராளியின் வாழ்க்கை’. ஜான் லீ ஆண்டர்சன் எழுதிய இந்த அரிய ஆய்வு நூலைத் தமிழில் தந்திருப்பவர் ஜெ.தீபலட்சுமி. ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை, ‘குத்தமா சொல்லல,குணமாவே சொல்றோம்’, ‘ஆண்கள் நலம்’ ஆகிய மூன்று நூல்களின் ஆசிரியரான தீபலட்சுமி, மார்க்சியம், அம்பேத்கரியம், பெரியாரியக் கருத்தியல் ஈடுபாடு மிக்கவர். நூலாசிரியரான ஆண்டர்சன், ஓர் அமெரிக்கப் பத்திரிகையாளர். போர்ச்செய்திகளை நேரில் சென்று அவதானித்து ‘தி நியூயார்க்கர்’ இதழில் தொடர்ந்து எழுதி வருபவர். வாழ்க்கை வரலாற்று நூல்கள், புலனாய்வு எழுத்துகளின் ஆசிரியர். கியூபாவின் அரசு அனுமதியும், சே வின் மனைவி அலெய்டாவின் முழு ஒத்துழைப்பும் ஆண்டர்சனுக்குக் கிடைத்திருந்ததால், ஹவானா, அல்ஜியர்ஸ் ஆகிய புரட்சித் தலைநகரங்களுக்கு இடையே இந்த நூல் ஊடாடுகிறது. பொலிவியா, காங்கோ, மாஸ்கோ, வாஷிங்டன் நகரங்களில் அதிகார பீடங்கள் குறித்துப் பேசுகிறது. மியாமி, மெக்சிகோ, கவுதமாலா ஆகிய இடங்களில் வசித்த அரசியல் அகதிகளுடைய கதைகளைக் கூறுகிறது. சே வின் தனிப்பட்ட நாட்குறிப்புகள் உட்பட, இதுவரை வெளிவராத பல ஆவணங்கள் நூலாசிரியரின் பார்வைக்கும், ஆய்வுக்கும் கிடைத்திருக்கின்றன. இந்த ஆய்வின் மூலம்,சே வின் எலும்புகள் புதைக்கப்பட்ட இடம் கண்டு பிடிக்கப்பட்டது. 28 ஆண்டுகால மர்மம் உடைபட்டிருக்கிறது.
சே வின் வாழ்வில் அலெய்டா இணைந்த நிகழ்வு பற்றி இதில் வரும் பகுதியைப் பாருங்கள் : “அது நிச்சயம் ‘கண்டதும் காதல்’ இல்லை ! கியூபாவிலேயே அதிகம் பேசப்பட்ட பிரபலங்களில் ஒருவராகவும், வரலாறு காணாத கொரில்லாப் படைத் தலைவராகவும் சே இருந்த போதும் அலெய்டா மார்ச் அவரை நெருங்கிக் கண்ட போது அவர் கண்களில் உடனே காதல் பற்றிக் கொள்ளவில்லை. சே வைக் குறித்த அலெய்டாவின் முதல் பார்வை, “அவர் வயதானவராகவும், மிகவும் ஒல்லியாகவும், ‘அழுக்கா’கவும் (!) இருந்தார் “ என்பதே!” இந்த நூலின் 623 பக்கங்களிலும் நாம் சந்திக்கும் விவரணைகள், பதிவுகள், படப்பிடிப்புகள், சித்தரிப்புகள் அனைத்தும் நமக்குச் சே என்ற புரட்சியாளரை மட்டும் அறிமுகம் செய்யவில்லை. மாறாக, சே என்னும் ஓர் அழகிய காதலரை,
படிப்பாளியை,போராளியை,மனிதாபிமானியை, மருத்துவரை, சாகசக்காரரை – இன்னபிற பண்புகள் நிறைந்த ஒரு மாமனிதனை நமது நெஞ்சங்களில் குடியமர்த்துகின்றன.
கடந்த 2023 – ஆம் ஆண்டுக்கான த மு எ க சங்கத்தின் விருது பெற்ற நூலான ‘பாலைச்சுனை’ – அமானுல்லாவின் ஞாபகங்கள்’ நமது அண்டை வீடான மலையாள நாட்டிலிருந்து தமிழுக்கு வந்திருக்கும் நினைவுப் பொக்கிஷம். தீபேஷ் கரிம்புங்கரை எழுதிய இந்தப் புத்தகத்தைத் தமிழில் தந்திருப்பவர், சுனில் லால் மஞ்சாலும்மூடு. டிசம்பர் 21 அன்று ஈரோட்டில் விருது வழங்கும் விழாவில் நூலாசிரியர். மொழிபெயர்ப்பாளர், நூலின் கதாநாயகரான அமானுல்லா ஆகிய மூன்று ஆளுமைகளையும் நேரில் காணும் ஓர் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இது அமானுல்லா என்ற ஒரு மனிதரின் சுயசரிதை மட்டுமல்ல. கடல் கடந்து வெளிநாடுகளில் வாழ்வதற்காகப் புலம் பெயர்ந்த அப்பாவி மக்களின் கதையும் கூட. பாலைவனம்,புழுதிப்புயல், அமானுல்லா, ஜோசப் இப்படி மனிதர்களும், மண்ணும், இயற்கையும், வணிகமும்,சுரண்டலும், மனித நேயமும் எல்லாமும் கலந்த ஒரு கண்ணீர்க் காவியம். ஒரு காலத்தில் மலையாளிகளுக்குக் கனவு காணக் கற்றுக் கொடுத்த ஒரு நாட்டின் கதை இது. புலம் பெயர்ந்த வாழ்க்கையின் பல்வேறு விதமான உரசல்களுடன் சக மனிதர்களின் மீதான இரக்கமும் அக்கறையும் கொண்ட இன்னோர் உலகமும் இந்த நாவலில் வெளிப்படுகிறது. இது நாவலா, சிறுகதைகளின் தொகுதியா, பயணக்கட்டுரையா என்னவென்று சொல்லுவது என்று தெரியவில்லை என்கிறார் இந்த நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள எழுத்தாளர், தமுஎகச வின் மாநில நிர்வாகிகளில் ஒருவரான அ.கரீம்.
அதே போல், நமது இன்னோர் அண்டை வீடான மேற்கு வங்கத்தின் போராட்டங்களில் ஒன்றை ஒர் அற்புத நாவலாக எழுதியிருக்கிறார் தபோ விஜயகோஷ். அதைத் தமிழில் தந்திருப்பவர் ரவிச்சந்திரன் அரவிந்தன். கலாபூர்வமான அரசியல் நாவல் இது என்று இதன் சிறப்புகளைப் பற்றி உணர்ச்சி மயமான அணிந்துரையில் பாராட்டியிருகிறார் ச.தமிழ்ச்செல்வன். “மேற்கு வங்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி 1960-களில் தொடங்கி, 1970 வரையில் சந்தித்த கொடிய அடக்குமுறைகள்.
அரச பயங்கரவாதம், ஆளும் வர்க்கத்தின் மூர்க்கமான தாக்குதல்கள், இவற்றை எல்லாம் கட்சியும், கட்சி ஊழியர்களும் சந்தித்த வரலாற்றைப் பின்புலமாகக் கொண்ட உணர்ச்சிகரமான நாவல்…” என்கிறார் அவர். மேலும் ஒரு முக்கியமான குறிப்பையும் தருகிறார். அது, கட்டுரையின் தொடக்கத்தில் நாம் விவாதித்த ஒரு விஷயத்துக்கும் பொருத்தமாக இருக்கும். “இது நூறு சதம் சி பி எம் நாவல். என்றாலும் ஓரிடத்தில் கூட பிரச்சாரமாகவோ, துருத்தலாகவோ, கலை நயம் குறைந்து போயோ ஏதுமில்லாமல், இடதுசாரி அரசியலே தெரியாத ஒருவர் படித்தாலும் கூட அவரையும் ஈர்க்கும்படியாக நாவல் எழுதப்பட்டிருக்கிறது. கதை சொல்லல் முறையே மிகுந்த சுவையாகவும், பொருத்தமாகவும் அமைந்து நம்மை அப்படியே உள்ளே இழுத்துச் செல்கிறது.”
ஆம்; அரசியல் கலையைக் கற்றுத்தருவதில் நாவலும், சிறுகதையும், கவிதையும், இசையும், சினிமாவும் உட்பட எல்லாக் கலை வடிவங்களும் நமக்குக் கை கொடுப்பவைதாம்! சமூகக் களம் வேறொரு மொழியில் அரசியலை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. எல்லாம் மொழிபெயர்ப்புகள் செய்யும் மாயம்தான் ! l