ச.சுப்பாராவ்
என் சிறுவயதில், ‘நான் ஓடிக்கொண்டே இருப்பேன்…’ என்றொரு சிவாஜி பாடல் மிகவும் பிரபலமாக இருந்தது. அது போல் நான் வாசித்துக் கொண்டே இருப்பேன்… என்று சொல்லும் புத்தகக் காதலி ஆனி போகலின் I did rather be reading சமீபத்தில் நான் படித்து ரசித்த அழகான புத்தகம். ஆனியின் ‘அடுத்து நான் என்ன வாசிக்கலாம்?’ என்ற வலைப்பூ மிகவும் பிரபலமானது. அந்த வலைப்பூவிலும், வேறு பல இதழ்களிலும் வாசிப்பு குறித்து அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த சின்ன புத்தகம்.

மொத்தமே 92 பக்கங்கள்தான். ஆனால் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு புத்தகக் காதலன் அல்லது காதலி, வாசிப்புக் காதலன் அல்லது காதலி தெரிந்து கொள்ள நிறைய இருக்கின்றன. அப்படிப் படிக்கும் போதே எங்கோ கண்காணாத தேசத்தில் நம்மை மாதிரியே ஒரு பெண் இருக்கிறாளே என்று அந்த வாசகர்கள் புன்னகையோடு வாசிப்பைத் தொடர்வதற்கும் ஏராளமான வரிகள் இருக்கின்றன.
நீங்கள் உங்கள் வாழ்வில் என்றேனும் “புக்க மூடி வெச்சுட்டு தூங்கு” என்று பெரியவர்கள் அதட்டிய பின் போர்வையைப் போர்த்திக் கொண்டு உள்ளே டார்ச் அல்லது மொபைல் வெளிச்சத்தில் இன்னும் கொஞ்சம் நேரம் படித்ததுண்டா? ஆம் எனில் இந்த புத்தகத்தை ஆனி உங்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார் என்று பெருமைப்பட்டுக் கொண்டு, மேலே தொடருங்கள். புத்தகங்கள், அவற்றை சேகரித்தல், வாசித்தல், அலமாரியில் அடுக்குதல், பிறருக்கு பரிந்துரைத்தல் என்று எல்லாவற்றைப் பற்றியும் ஓரிரு பக்கங்களுக்கு சின்னச் சின்ன அத்தியாயங்கள்.
புத்தகம் முழுவதுமே புத்தகப் புழுக்கள் பற்றியதுதான் என்றாலும் கூட, புத்தகப் புழுக்களின் பிரச்சனைகள் என்று தனியாக ஒரு அத்தியாயம். ஒவ்வொரு புத்தகப் புழுவிற்கும் அந்த அத்தியாயத்தில் தன் முகம் அப்பட்டமாகத் தெரியும் விதமாக வேடிக்கையும் கேலியும் கிண்டலுமாக புத்தகப் புழுக்களின் அன்றாட வாழ்வின் வாசிப்புக் கணங்களைப் பதிவு செய்துள்ள ஒரு அத்தியாயம் இது.
வாசிப்பு குறித்து தொடர்ச்சியாக பல புத்தகங்களைப் படித்து வருபவன் என்றாலும் கூட, இந்தப் புத்தகத்தில் ஆனி சொல்லும் ஒரு ஆதாரமான விஷயம் என்னை நிறைய நேரம் யோசிக்க வைத்தது. இப்படி நாம் நினைத்ததே இல்லையே என்று எண்ண வைத்தது. நாம் இது நாள் வரை கலை என்பது வாழ்வின் பிரதிபலிப்பு என்றுதான் படித்திருக்கிறோம். ஆழமாக நம்புகிறோம். அப்படித்தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனி ஒரு அத்தியாயத்தில் வாழ்வு கலையின் பிரதிபலிப்பு என்கிறார். அந்த அத்தியாயத்திற்குத் தலைப்பே Life Imitates Art என்று தான் வைத்திருக்கிறார்.
மிக நுட்பமான பார்வையுடன் அதை அற்புதமாக விளக்குகிறார். கலை என்பது ஆனியைப் பொறுத்தவரை – ஆனி போன்ற புத்தகப் புழுக்களைப் பொறுத்தவரை – இலக்கிய வாசிப்பு மட்டுமே என்பதால், அது பற்றியே விவரிக்கிறார். நாம் வாழ்வில் இதுவரை சந்தித்திராத புதிய சூழல்களை எதிர்கொள்ள புத்தகங்கள் ஒரு பாதுகாப்பான வெளியை நமக்கு உருவாக்கித் தருகின்றன என்கிறார் அவர். புத்தகங்களை வாசிக்கும் போது, நாம் இதுவரை சந்தித்திராத, புதிய, சிக்கலான, ஆபத்தான சூழல்களில் எல்லாம் வாழ்ந்து சமாளிக்க பழகிக் கொள்கிறோம். அவற்றின் மூலம் நாம் புதிய இடங்களை, புதிய மனிதர்களை, அதிலும் தீயவர்களை, கொடியவர்களை எல்லாம் சந்தித்து, நம்மை தயார் செய்து கொள்கிறோம்.
அச்சத்தை, வெற்றியை, இழப்பை, துக்கத்தை, என்றும் இடையூறு செய்து கொண்டே இருக்கும் உறவுகளை, சக ஊழியர்களை, நண்பர்களை, எல்லாம் சமாளிக்க இந்த புத்தக வாசிப்பின் மூலம் கற்கிறோம். நிஜ வாழ்வில் அவை நமக்கு ஏற்படும் போது அவை நமக்குப் புதிதாகவே இருப்பதில்லை. அவற்றை சந்திப்பதற்கான துணிச்சலும், உறுதியும் நம்மிடம் ஏற்கெனவே இருக்கிறது.
யதார்த்த வாழ்வின் இன்ப துன்பங்களை தனது வாசிப்பின் வழியே previewவாகப் பார்ப்பது நல்ல வாசகனுக்கு மட்டுமே சாத்தியப்படுகிறது. அவனது வாழ்வு எல்லா சந்தர்ப்பங்களிலும் அவன் ஏற்கெனவே வாசித்த இலக்கியங்களின் பிரதிபலிப்பாகத் தான் இருக்கிறது. அவன் தன் வாழ்வை மிக எளிதாக எதிர்கொள்கிறான் என்கிறார். என் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நிரூபிக்கப்பட்ட உண்மை இது. எனது வாழ்வு இன்றுவரை நான் ஏதோ ஒரு புத்தகத்தில், என்றோ படித்ததை நினைவு படுத்திக்கொண்டே தான் இருக்கிறது. நான் நிறைய புத்தகங்களை நன்றாகவே வாசித்திருக்கிறேன். அதன் பயனாக நன்றாகவே வாழ்கிறேன் என்கிறார் ஆனி. யானும் அவ்வண்ணமே கோரும் ச.சுப்பாராவ் என்று நானும் அதை ஆமோதித்தவாறு வாசிப்பைத் தொடர்ந்தேன்.
வளர்ந்த பிறகு வாழ்வை எதிர்கொள்வது எப்படி என்பதை அறிந்த பிறகு நாம் வளர ஆரம்பிப்பதில்லை. வளர வளரத்தான் அதைக் கற்கிறோம். அல்லது அதைக் கற்காமலேயே துன்புறுகிறோம். அது போலத் தான் வாசிப்பை முழுமையாகக் கற்ற பின், வாசிக்க ஆரம்பிப்பதில்லை. வாசிக்க, வாசிக்கத்தான் வாசிப்பதற்கே கற்கிறோம். அதே போலத்தான் ஒரு வயது வரை நமக்கான புத்தகங்கள் பிறரால் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டு நமக்குத் தரப்படுகின்றன.
வாசிப்பு என்பது பெரியவர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பொழுதுபோக்காக, சாகசமாக இருக்கிறது. வேறு எந்தப் பொழுபோக்கிற்கும் இந்த மரியாதை கிடையாது. வீட்டுப் பெரியவர்களோ, பள்ளி ஆசிரியரோ இதைப் படி, இதைப் படி என்று எதையோ நமக்கு அறிமுகம் செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் நமக்கான புத்தகத்தை தேர்ந்தெடுக்கும் உரிமையும், வயதும் நமக்கு வருகிறது. அந்தக் கட்டத்தில் வாசிப்பையே தேர்வு செய்யாது ஒதுக்கும் உரிமையும் கூட இருக்கிறது. அப்படி இன்றி புத்தகத்தைத் தேர்வு செய்து படிக்க ஆரம்பிப்பவர்கள் பாக்கியசாலிகளாகிறார்கள். அவர்களுக்கு வாசிப்பு ஒரு பொழுதுபோக்கல்ல. அது வாழ்க்கை முறையாக மாறுகிறது.
அந்த வாழ்க்கை முறைதான் எத்தனை மகிழ்ச்சியானது? சுவாரஸ்யமானது? இந்தப் புத்தகப் புழுக்களுக்குத்தான் எத்தனை சோதனைகள்? தடங்கல்கள்? அவஸ்தைகள்? உங்களுக்கு ரொம்ம்ம்ம்ம்ப…. ரொம்ம்ம்ம்ம்ப… பிடித்த ஒரு புத்தகம் இருக்கும். உங்கள் காதலன் அல்லது காதலி அல்லது உயிர் ஸ்நேகிதன், உயிர் ஸ்நேகிதி அதை படித்திருக்க மாட்டார்கள். பார்க்கும் போதெல்லாம், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அந்தப் புத்தகத்தின் மகிமையை, அது உங்களுக்குத் தந்த மகிழ்ச்சியை, அவர் அதைப் படிக்க வேண்டியதன் அவசியத்தைச் சொல்லிக் கொண்டே இருப்பீர்கள். ஏதோ ஒரு சுபயோக சுபதினத்தில் அவரும் மனம் வைத்து அந்தப் புத்தகத்தை படிக்க வாங்கிச் செல்வார்.
ஒரு வாரமோ, இரண்டு வாரமோ, அதைப் பற்றி அவர் என்ன சொல்லப் போகிறார் என்று ஆவலாய்க் காத்திருப்பீர்கள். அவர் ஒரு நாள் அதை உங்களிடம் ஒன்றும் சொல்லாமல் திருப்பித் தருவார். “எப்படி இருந்துச்சு?” “ஓகே.. பரவாயில்ல” ஒரு புத்தகத்திற்காக காதலனை/ காதலியைக் கொலை செய்யவா முடியும்? ஆனால் செய்தாலும் அது தப்பில்லை என்றும் தோன்றும். உங்களுக்குப் பிடித்தமான மூன்று புத்தகங்களைச் சொல்லுங்கள் என்பார்கள். எவ்வளவு யோசித்தாலும் உங்களால் அந்தப் பட்டியலை மூன்றுக்குச் சுருக்க முடியாது. எவ்வளவு முயன்றாலும் ஒரு பதினேழாவது வரும். அடுத்து நீங்கள் வாசிப்பதற்காக உங்களது to be read அலமாரியில், உங்கள் டேப்லட்டில், கைப்பேசியில், கணினியில் 8,972 புத்தகங்கள் இருக்கும். ஆனால், அதிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுப்பது அத்தனை சிரமமாக இருக்கும். அத்தனை சுலபமாக அடுத்த புத்தகத்தை தேர்ந்தெடுத்து விட முடியாது.
உங்கள் புத்தக அலமாரியைப் பெருமை பொங்கப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். இது வரையான புத்தகச் சேகரிப்பிற்கான செலவை மனக்கணக்காகப் போடுவீர்கள். அது ஒரு ஏழை ஆப்பிரிக்க நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமானதாக இருக்கும். மனக்கணக்கு என்பதால் குடும்பத்தினருக்குத் தொகை தெரியப்போவதில்லை என்று சமாதானமடைவீர்கள். ஒரு திடீர் ஞானோதயம் வந்த ஒரு நாளில், தேவையற்ற புத்தகங்களை எல்லாம் கழித்துக் கட்டிவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்வீர்கள். ஒவ்வொன்றாய் எடுப்பீர்கள். அந்த புத்தகங்கள் உங்களுக்கு உண்மையாகவே மகிழ்ச்சி தந்ததா என்று யோசிப்பீர்கள். அது நிச்சயமாக மகிழ்ச்சி தந்ததாகத்தான் இருக்கும். கடைசியில் எந்தவொரு புத்தகத்தையும் கழித்துக் கட்ட முடியாது போகும். வாசிக்கும் நேரம் தான் வீணாகி இருக்கும்.
புத்தகப் புழுக்களுக்கு அவர்களது சேகரிப்பில் இருக்கும் புத்தகங்கள் மட்டுமன்றி, இனி வாங்கப் போகும் புத்தகங்களும் இன்பத் தொல்லை தருவனவாகவே இருக்கின்றன. கடனட்டை மூலம் பணம் செலுத்திய பிறகு மின் புத்தகம் டவுன்லோடு ஆகாமல் சதி செய்யும். ஒரு நீண்ட விமானப் பயணத்தில், வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகம் மிக சுவாரஸ்யமான கட்டத்தில் இருக்கும் போது, கிண்டிலில் சார்ஜ் மொத்தமாக இறங்கிவிடும். நீங்கள் பணம் கட்டி ஆர்டர் செய்த புத்தகம் உங்கள் கைக்கு வந்து சேர தாமதமாகும். இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற அறிவிப்போடு, ஒரு கல்யாண மஹாலில் புத்தகங்களை குவியல் குவியலாகப் போட்டு விற்பார்கள். இரண்டை எளிதில் தேர்வு செய்து விடுவீர்கள். இலவசமாய்க் கிடைக்கப் போகும் அந்த மூன்றாவது புத்தகத்திற்கு, சரியாக ஒன்றுமே அமையாது.
நாள் முழுக்க அந்தக் குவியலைக் கிண்டிக் கொண்டே இருப்பீர்கள். புத்தகப் புழுவாக இருப்பதுதான் எத்தனை சிரமம் என்று சிணுங்குகிறார் ஆனி. அந்த சிணுங்கல் எனக்கு மிகவும் பிடித்துப் போகிறது.
புத்தக அலமாரிகளைப் பராமரிப்பது பற்றியும் மிக அழகாக, எழுதியிருக்கிறார். புத்தக அலமாரியில் அப்படியே புத்தகங்களை வரிசை வரிசையாகத் திணித்து வைக்காதீர்கள். அலமாரியில் மூன்றில் ஒரு பங்கு இடத்திற்கு புத்தகங்கள், மூன்றில் ஒரு பங்கு இடத்தில் கலைப் பொருட்கள், மூன்றில் ஒரு பங்கு வெற்றிடம் என்று வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார். நானும்கூட ஒரு காலத்தில் அப்படி வைத்திருந்தவன்தான். ஆனால், புத்தகங்கள் சேரும் வேகத்தில், கிடைக்கும் இடத்தில் எல்லாம் திணித்து வைப்பதைத் தவிர வேறு வழி இல்லையே.. நம்மிடமிருந்து ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை ஆட்டையைப் போடும் குறிக்கோளோடு வரும் நண்பர்களை அந்த புத்தகத்தை எளிதில் எடுத்து விடமுடியாதபடி செய்ய ஒரு நல்ல யோசனை தருகிறார் ஆனி.
புத்தகங்களை அவற்றின் அட்டையின் நிறத்தின் அடிப்படையில் அடுக்குங்கள் என்கிறார். உங்கள் புத்தக அலமாரி ஒரு வானவில்லாக இருக்கும். எந்த வரிசை முறையும் இல்லாததால் குறிப்பிட்ட ஒரு புத்தகத்தை சட்டென்று எவராலும், எடுத்து விடவும் முடியாது என்கிறார். 01.01.2025 அன்று நான் இதை அமலாக்கப் போகிறேன். (புத்திசாலி வாசகர்கள் இந்தத் தேதியின் முக்கியத்துவத்தை யூகித்திருப்பீர்கள்!) ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் அத்தனை படைப்புகளும், ஒரு குறிப்பிட்ட விருதை வாங்கிய அத்தனை புத்தகங்களும் என்பது போல் ஏதாவது ஒன்றின் அடிப்படையில் ஒரு சேகரத்தை உங்களுக்காக ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்கிறார் ஆனி. அது போலவே, பிடிக்காத புத்தகங்களை இரக்கமே இல்லாமல் அலமாரியை விட்டு நீக்குங்கள்.

நண்பர்களுக்கு, நூலகங்களுக்குக் கொடுத்து விடுங்கள் என்கிறார். புத்தகச் சேகரிப்பிற்கு ஆனி வில்லியம் போரிஸ் என்ற அறிஞர் தந்த அறிவுரையைத் தான் பின்பற்றுகிறாராம். “எதற்குப் பயன்படும் என்று தெரியாத பொருளை ஒருபோதும் வாங்காதீர்கள். மிக அழகாக இருக்கிறது என்பதற்காக ஒரு பொருளை வாங்காதீர்கள்,” என்றாராம் அவர். அழகான வடிவமைப்பு உள்ள புத்தகங்களின் இலக்கியத் தரம் மிகவும் குறைவாகவே இருப்பது எனது அனுபவம் என்கிறார் அவர். அதே போல, எந்த ஒரு செவ்வியல் நூலாக இருந்தாலும் அதன் சுருக்கப்பட்ட வடிவை வாங்காதீர்கள் என்கிறார். உண்மைதான்.
நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் இறைச்சித் தொழிற்சாலைகளில் பணிசெய்யும் வெளிநாட்டுத் தொழிலாளிகளின் துயராந்த கதையை, அவர்கள் எழுச்சி பெறுவதை ரத்தமும், சதையுமாகச் சொன்ன ஒரு நாவலை மொழிபெயர்த்தேன். சுமார் 350 பக்கங்கள் இருக்கும். அது வெளியான சில நாட்களில் ஒரு முன்னணி பதிப்பகத்திற்குச் சென்ற போது அங்கிருந்த தோழர் எனது மொழிபெயர்ப்பு நூல் பற்றி விசாரித்து விட்டு, “நாங்க அத ரொம்ப முன்னாடியே தமிழ்ல கொண்டு வந்துட்டோம்,“ என்று அந்தப் புத்தகத்தை எடுத்துக் காட்டினார். 50 – 60 பக்கங்களுக்குச் சுருக்கப்பட்ட மொழிபெயர்ப்பு. கடையில் நின்றவாறே படித்து முடித்து விட்டு, சம்பிரதாயம் கருதி, நன்றாக இருப்பதாகச் சொல்லி விட்டு வந்தேன். அறிவியல் வளர்ச்சியில் யானையை நாய்க்குட்டி சைசில் உருவாக்கி, உலவ விட்டால் நன்றாகவா இருக்கும்?
புத்தகத்தில் போகிற போக்கில் ஆனி ஒரு நல்ல ஆலோசனை சொல்கிறார். என் சேகரத்தில் உள்ளவற்றை என் மரணத்திற்கு முன் படித்து முடிப்பது சாத்தியமே இல்லை. கூடுமானவரை வேகமாகப் படித்து முடிக்க வேண்டும். அவ்வளவுதான். எனவே, நான் புத்தகத்தில் அந்தப் படைப்பிற்கு வெளியே உள்ள பக்கங்களைப் படிப்பதில் எனது நேரத்தை வீணடிக்க மாட்டேன். முன்னுரை, அறிமுகம், படைப்பாளி, பதிப்பாளர், பிழை திருத்தியவர், தட்டச்சியவர், அம்மா, அப்பா, மாமனார், மாமியார், மனைவி, குழந்தை, மச்சினன், மச்சினி என்று வரிசையாக நன்றி சொல்வதெல்லாம் எனக்குத் தேவையில்லை என்கிறார்.
புத்தகப் புழுக்களின் பெரிய பிரச்சனையான வாசிப்பதற்கான நேரமின்மை பற்றியும் அழகாக ஒரு விஷயத்தைச் சொல்கிறார். எல்லிங்டன் பிரபு என்பவர் “எனக்குத் தேவை நேரமல்ல. காலக் கெடுதான்”, என்று சொன்னாராம். இதைப் படிக்க நேரமில்லை என்று நினைப்பதை விட, இதை இத்தனாம் தேதிக்குள் படித்து முடித்துவிட வேண்டும் என்று நினைப்பது உதவும் என்கிறார்.
நான் படிக்கும் புத்தகத்திற்குக் காலக்கெடு வைக்க ஆரம்பித்து விட்டேன்.