ச.சுப்பாராவ்
பெரிய இழப்பு, மிக நெருக்கமானவரின் மரணம் இதையெல்லாம் எப்படி எதிர்கொள்வது? மதுப்பிரியர்கள் குடித்துக் குடித்து மறக்கிறார்கள். புத்தகப் பிரியர்கள் படித்துப் படித்து மறக்கிறார்கள். நினா சான்கோவிச்சும், அவளது அக்கா ஆனியும் சிறுவயதிலிருந்து புத்தகங்களைப் போட்டி போட்டுக் கொண்டு வாசித்துக் கொண்டே வளர்ந்தவர்கள். ஆனி புற்றுநோய்க்கு ஆளாகி ஓரிரு வருடம் மிகவும் துன்பப்பட்டு இறந்து போகிறாள். நினாவிற்கு எப்போதும் அக்காவின் நினைவு. எந்தப் புத்தகத்தைப் பார்த்தாலும் அக்கா இதைப் படிக்காமல் இப்படி அநியாயமாகப் போய்விட்டாளே.. என்ற துக்கம்.
நினாவிற்கு 46 வது பிறந்த நாள் வருகிறது. அன்று முழுக்க அக்கா ஆனியின் நினைவாகவே இருக்கிறாள். அக்காவின் நினைவாக ஏதாவது செய்ய வேண்டுமே என்று யோசிக்கிறாள். அக்காவின் நினைவாக தினமும் ஒரு புத்தகத்தை வாசிப்பது, அது பற்றி ஒரு விமர்சனம் எழுதுவது என்று முடிவு செய்கிறாள். அந்த அனுபவத்தை Tolstoy and the Purple Chair என்று அழகான ஒரு புத்தகமாகவும் எழுதுகிறாள். ஒரு புத்தகப் புழுவிற்கு மற்றொரு புத்தகப் புழு செய்யும் அஞ்சலி எப்படி இருக்கும்? இந்தப் புத்தகம் மாதிரிதான் இருக்கும்.

நினா இதைச் சொல்லும் போது, குடும்பத்தினரும், நண்பர்களும் இதெல்லாம் தினம் ஒரு புத்தகமா? சரி, எத்தனை நாளைக்குன்னு பாப்போம் என்பது மாதிரி தான் எதிர்கொள்கிறார்கள். ஆனால் நினா வீட்டில் இருக்கும் பழங்கால சிம்மாசனம் போன்ற வயலெட் நிற மெத்தை போட்ட பெரிய நாற்காலியில் உட்கார்ந்து வாசித்து வாசித்து நினைத்ததைச் சாதிக்கிறாள். அந்தக் கதைதான் இந்தப் புத்தகம். அன்றாடம் தான் வாசிக்கும் புத்தகம் பற்றி எழுத ஒரு இணைய தளத்தை ஆரம்பிக்கிறாள். பக்கத்து நூலகம் சென்று வாசிப்பதற்கான புத்தகங்களை எடுத்து வர ஏற்பாடு செய்து கொள்கிறாள்.
புத்தகத்தின் தலைப்பு தன்னை ஈர்க்கக் கூடியதாக இருக்க வேண்டும். ஏற்கனவே படித்த புத்தகத்தை திரும்பவும் படிக்கக் கூடாது. இதுவரை படிக்காத புத்தகமாகத் தான் இருக்க வேண்டும். ஏற்கனவே படித்த படைப்பாளியின் பிற படைப்புகள் என்றால் ஓகே என்று தனது வாசிப்புத் தவத்திற்கு விதிமுறைகளை உருவாக்கிக் கொள்கிறாள். எல்லாத் தலைப்புகளிலும் பாரதி புத்தகாலயம் 16 பக்கங்களுக்கு அற்புதமாக புத்தகங்கள் போட்டார்களே, அது மாதிரி ஒன்றை தினமும் படித்துக் கணக்குக் காட்ட நினைக்கவில்லை நினா. புத்தகத்தின் அளவிற்கும் ஒரு விதியை உருவாக்கிக் கொண்டாள். ஒரு அங்குல தடிமன் உள்ள புத்தகமாக இருக்க வேண்டும். ஒரு அங்குல தடிமனில், வழக்கமான பத்து அல்லது பதினாரு அங்குல உயரம் உள்ள புத்தகம் என்றால், அது சுமார் 250 – 300 பக்கப் புத்தகமாக இருக்கும்.
நினாவின் வாசிப்பு வேகம் மணிக்கு சுமார் 70 பக்கங்கள். எனவே வாசிப்பு நான்கு மணி நேரத்தில் முடிந்து விடும் என்றெல்லாம் திட்டம் போடுகிறாள். புத்தக விமர்சனத்திற்கு அரை மணி நேரம் என்று ஒதுக்குகிறாள். வாசிப்பு அவள் திட்டமிட்ட நேரத்தில் முடிகிறது. விமர்சனம்தான் அரை மணி நேரத்தில் முடிய மாட்டேன் என்கிறது. புத்தகம் ஏற்படுத்திய தாக்கத்தைப் பொறுத்து, சமயங்களில் விமர்சனம் எழுத ஐந்து மணி நேரம் கூட ஆகிறது. சராசரியாக இரண்டு மணி நேரங்கள் விமர்சனம் எழுதுவதில் கழிகிறது.
நிறைய வாசிப்பவர் என்றால் அவர் வீட்டு வேலை எதுவும் செய்யமாட்டார் என்று நினைப்பது உலகம் முழுமைக்கும் உள்ள பொதுப்புத்தி போலும். ஆனால் நல்ல திட்டமிடலோடு தமது அன்றாடக் கடமைகளை, வேலைகளைச் செய்பவர்களால் மட்டுமே திட்டமிட்டு நிறைய வாசிக்கவும் முடியும் என்பது என் சொந்த அனுபவம். நினாவின் அனுபவமும் அதைத்தான் உறுதி செய்கிறது. நடுத்தர வயதினளான நினாவிற்கு இரண்டு பெரிய மகன்கள், இரு சிறிய மகன்கள். இது போக மூத்த தாரத்தின் மகள் வேறு ஒருத்தி இருக்கிறாள். வீட்டின் சமையல்காரி, சுத்தம் செய்பவள், பாத்திரம் தேய்ப்பவள், டிரைவர், ஆயா, கணவனுக்குக் காதலி எல்லாம் நினாதான். காலையில் சமையல் வேலை. பையன்களை பள்ளிக்குக் கொண்டு விடுவது. மாலையில் அழைத்து வருவது. மீண்டும் இரவு உணவு. நடுவில் துணி துவைப்பது, அயர்ன் செய்வது. வீடு பெருக்குவது. மாப்பிங். இத்தனை வேலைகளுக்கும் நடுவில் நான்கு மணி நேர வாசிப்பு. இந்த ஓராண்டுத் திட்டம் ஆரம்பித்த உடன் பாத்திரம் தேய்க்கும் பணியை பெரிய பையன்கள் இருவருக்கும் ஒதுக்குகிறாள்.
ஒவ்வொருவனுக்கும் இரண்டு நாள் வேலை. இரண்டு நாள் ஓய்வு. உணவுகளை மேஜையில் வைப்பது, பரிமாறுவது, பின்னர் மேஜையை சுத்தம் செய்வது ஆகிய வேலைகள் கடைசி இரண்டு மகன்களுக்கு. வார இறுதிகளில் அத்தனை வேலைகளும் நினாவிற்கு. மூத்த தாரத்தின் மகளுக்கு காதல் தோல்வி. அவள் வேலைக்குப் போய் விட்டு வருவதோடு சரி. மற்ற நேரங்களில் தன் அறையை விட்டு வெளியே வரமாட்டாள். நினா சனி ஞாயிறுகளில் மர்மக் கதைகள், திரில்லர்கள் தான் படிப்பாள். அவற்றைப் படிப்பது அத்தனை சிரமமிருக்காது. விமர்சனம் எழுதுவதும் எளிது.
வார இறுதியில் கூடுதல் வீட்டு வேலைகளை இவ்விதமாகச் சமாளித்தாள். எல்லாமே திட்டமிட்டபடி நடந்தன. கணவனுக்குக் காதலி என்பதில் மட்டும்தான் சற்று சிரமம். இரவு நெடுநேரம் வாசித்து முடித்து, கையோடு விமர்சனத்தையும் எழுதிவிட்டுப் படுக்க வந்தால், கணவன் அசந்து தூங்கிக் கொண்டிருப்பான். எழுப்புவதற்கு மனம் வராது. கடைசியில் இவனை மட்டும்தான் நாம் சரியாக கண்டு கொள்ளவில்லையோ என்ற சங்கடத்துடன் தூங்கச் செல்வாள். 366ஆம் நாளை இரண்டாவது முதலிரவாகக் கொண்டாடி இருப்பாள் என்று நினைக்கிறேன். இந்தப் புத்தகத்தின் அடுத்த பாகம் வந்தால் தெரியும்!
இப்படியாக, ஐந்தாறு வருடங்களில் படிக்க வேண்டிய புத்தகங்களை ஒரே வருடத்தில் படித்து முடித்த நினாவின் அனுவங்களைப் படிக்கப் படிக்க அத்தனை சுவையாக இருக்கிறது. நினாவின் விமர்சனங்களைத் தொடர்ந்து படிக்கும் வாசகர்கள், அவள் அடுத்தடுத்து படிக்க வேண்டிய புத்தகங்கள் பற்றி ஆலோசனை சொல்கிறார்கள். நம் ஊர் அரவிந்த் அடிகாவின் வொயிட் டைகர் கூட அப்படித்தான் கலிஃபோர்னியாவிலிருந்து ஒரு வாசகர் ஆற்றுப்படுத்தியதை வைத்து நினா படிக்கிறார். சிறு வயதிலிருந்தே நினாவிடம் ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது. யார் என்ன புத்தகம் பரிசாகக் கொடுத்தாலும், ‘நன்றி, புத்தகம் நன்றாக இருக்கிறது, எனக்குப் பிடித்திருக்கிறது’ என்று ஒற்றை வரியில் சொல்வதில்லை.
நீங்கள் ஒரு நண்பரைப் புறக்கணித்தால் அந்த நண்பர் கோபம் கொள்ள மாட்டார். ஆனால், அவர் ஒரு புத்தகத்தை ரசித்துப் படித்துவிட்டு, சரி, இதை நம்ம தோஸ்துக்கு வாங்கித் தருவோம் என்று ஆசையாக அதை நமக்கு வாங்கித் தரும் போது அதைப் புறக்கணித்தால், கண்டிப்பாக அதை அவரால் தாங்கிக் கொள்ள முடியாது என்பது நினாவிற்குத் தெரியும். எனவே, நண்பர்கள் வாங்கித் தரும் புத்தகங்களுக்கு முன்னுரிமை தந்து படித்து, அவர்களுக்கு அது பற்றி மிக நீண்ட கடிதம் எழுதும் வழக்கம் அவருக்கு சிறு வயது முதலே உண்டு. இப்போது, அந்தப் பழக்கம் நன்றாக உதவியது. நண்பர்கள் மூலம் நிறைய புதுப் புத்தகங்கள் கிடைத்தன.

இந்தப் புத்தகத்தில் நினா தான் படித்த 365 புத்தகங்கள் பற்றியும் எழுதவில்லை. (பட்டியலை தனி இணைப்பாகத் தந்துள்ளார். கிப்ளிங், ஆல்பர்ட்டோ மொராவியோ, ஜோஸ் சரமாகோ, காம்யூ, டால்ஸ்டாய், ஆல்டாஸ் ஹக்ஸ்லி, செல்மா லாகர்லாஃப், ஸ்காட் ஃபிட்ஜெரால்ட், ஜி.கே.செஸ்டர்டன், டோனி மாரிஸன், அகதா கிறிஸ்டி, காஸுவோ இஷிகாரோ, பிரடெரிக் டக்லஸ், ஹெமிங்வே, ஜான் அப்டைக், சால் பெல்லோ, டிக் பிரான்சிஸ், ஜேம்ஸ் பாட்டர்சன், கான்ராட், சினுவா ஆச்சிபி, முரகாமி, என நான் அறிந்தவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான். கல்லாதது உலகளவு என்பதை மீண்டும் எனக்கு நினைவூட்டுகிறது நினாவின் பட்டியல்.) தான் வாசிக்கும் போது புத்தகங்கள், வாசிப்பு பற்றி தனக்குத் தோன்றியவற்றை, ஒரு குறிப்பிட்ட நாளின் சோர்வை ஒரு புத்தகம் சரி செய்ததை, இழந்த உற்சாகத்தை, சக்தியை அன்றைய வாசிப்பு மீட்டுத் தந்ததை எழுதிக் கொண்டே செல்கிறார்.
வார்த்தைகளே வாழ்வின் சாட்சி. நடப்பவற்றையெல்லாம் பதிவு செய்து, அவற்றை மெய்யாக்கிக் காட்டுபவை அவைதாம். வார்த்தைகளே கதைகளை உருவாக்குகின்றன. கதைகள் மாற்றுகின்றன என்பதை அறிகிறாள். நினாவும், ஆனியும் சிறுமிகளாக இருக்கும் போது, அவர்களது தந்தை அடிக்கடி, “வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தேடாதீர்கள், வாழ்க்கையே மகிழ்ச்சியானதுதான்,” என்று சொல்வாராம். நினாவின் தினசரி வாசிப்பு அது உண்மைதான் என்பதை அன்றாடம் உணர்த்துகிறது.
காதலுக்குக் கண்ணில்லை. அது புத்தகக் காதலுக்கும் பொருந்தும் என்று உணர்கிறாள் நினா. நடுவில் உடல்நலக் குறைவு ஏதேனும் வந்து வாசிப்புக்குத் தடங்கல் வந்து விடுமோ என்று நினா பயந்து கொண்டே இருக்கிறாள். ஆனால் நல்லவேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. என் வாசிப்பு எனக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தந்தது என்கிறாள் நினா. இதுவரை வாசிப்பு என்பது மனதிற்கு மட்டும்தான் என்று நினைத்து வந்த எனக்கு மகிழ்ச்சியைத் தந்த வரிகள் இவை!.
நினா தனது வாசிப்பில் தனது மனம் கவர்ந்த வாசகங்களை பல இடங்களில் மேற்கோள் காட்டி அவற்றோடு தானும், தனது சகோதரியும் எப்படி ஒத்துப் போனோம் என்பதைச் சொல்லிச் செல்கிறார். இப்புத்தகத்தில் நினா வாசிப்பைப் பற்றி எழுதியவற்றை நினாவின் மேற்கோள்கள் என இணையத்தில் தேடிப் படிக்கலாம். ஒவ்வொரு நல்ல புத்தகம் படிக்கும் போதும் அது பற்றிப் பகிர்ந்து கொள்ள அக்கா இல்லையே என்ற துக்கம் மனதில் பொங்கும்.
அவள் இருந்திருந்தால், இப்படியான ஓராண்டு வாசிப்புத் திட்டம் சாத்தியமாகி இருக்காதே என்றும் தோன்றும். வாசிப்பு அக்கா குறித்த நினைவுகளின் வழியே துக்கத்தைக் கிளறியும் விடும். அந்தத் துக்கத்தை அதே வாசிப்பு ஆற்றியும் விடும். துன்பக் கடலைத் தாண்ட தோணியாவது கீதம் மட்டும்தானா என்ன, பட்டுக்கோட்டையாரே? வாசிப்பை மறந்து விட்டீரே!
நினாவின் மேற்கோள்களில் எனக்குப் பிடித்தது இரண்டு. ஒன்று ஹென்றி மில்லர் சொன்னது.
புத்தகங்கள் பணத்தைப் போன்றவை. அவை தொடர்ச்சியாக சுழற்சியில், புழக்கத்தில் இருக்க வேண்டும். கொடுத்து வாங்கி பரிவர்த்தனை செய்யப்பட வேண்டும். முக்கியமாக புத்தகங்கள். பணம் போலன்றி, பரிவர்த்தனையால் அவற்றின் மதிப்பு மேலும் கூடும். இந்த மேற்கோள் பிடித்திருக்கிறது என்றாலும், என்னால் நடைமுறைப்படுத்த முடியாது. என் புத்தகங்களை எப்படி என்னால் கொடுத்து, வாங்க முடியும்? அவை நான் பார்த்துப் பார்த்துச் சேர்த்த சொத்து அல்லவா?
இரண்டாவது, ஓடுவது பற்றிப் பேசும் போது நான் எது குறித்துப் பேசுகிறேன்? என்ற புத்தகத்தில் முரகாமி சொன்னது.
“உங்கள் நேரத்தை, சக்தியை முன்னுரிமை தந்து செலவிடுவது பற்றி நீங்கள் திட்டமிடவேண்டும். ஒரு குறிப்பிட்ட வயதிற்குள் அவ்வாறு நீங்கள் திட்டமிடாவிட்டால், உங்கள் வாழ்வில் ஒரு குறிக்கோள் இருக்காது. அது தடுமாற்றம் நிறைந்ததாக ஆகிவிடும்.” இதைச் சொல்லும் போது, நல்லவேளையாக நான் வாசிப்பிற்கு முன்னுரிமை தந்தேன் என்கிறாள் நினா.
நானும்தான். நீங்கள்?
