ஐராவதம் மகாதேவன் – சிந்துவெளி ஆய்வாளர்

இடப்பெயர்களின் ஆய்வு என்ற துறையில் கணினி மூலம் ஆய்வுகளை நடத்தி உலகப் புகழ் பெற்றவர் பாலகிருஷ்ணன். இந்த ஆய்வுகளின் தொடர்ச்சியாக சிந்துவெளியிலும் ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளிலும் இன்றுவரை திராவிட இடப்பெயர்கள் தொடர்ந்து நிலைபெற்றுள்ளன என்ற உண்மையை அறிவியல் பூர்வமாகவும் வெளிப்படையான ஆதாரங்களின் அடிப்படையிலும் இவர் இந்த நூலில் நிறுவியுள்ளார்.
சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கொற்கை, வஞ்சி, தொண்டி போன்ற நகரங்களின் பெயர்கள் கூட சிந்துவெளியிலும் அதற்கும் அப்பால் ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளிலும் இன்றுவரை நிலைத்துள்ளன என்ற செய்தி முற்றிலும் புதியது, எவரும் கேள்விப்படாதது.
கூகுள் போன்ற கணினி மயமாக்கப்பட்ட தரவுகளிலிருந்தும், பன்னாட்டு புவியியல் வரைபடங்களிலிருந்தும் அரும்பாடுபட்டு செய்திகளைச் சேகரித்து அட்ச-தீர்க்க ரேகைகள் உள்ளிட்ட துல்லியமான தகவல்களை அட்டவணைப்படுத்தி இந்த நூலில் இவர் தந்துள்ளார்.
நூலாசிரியர் திராவிட மொழியியலையும், சிந்துவெளிப் புவியியலையும் பிணைத்து ஒரு புதிய கருதுகோளைப் படைத்துள்ளார். அதன் மூலம் சிந்து நகர மக்கள் திராவிட மொழிகளையே பேசியிருக்க வேண்டும் என்ற வரலாற்று உண்மையை அறிவியல் அடிப்படையில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் மீண்டும் நிறுவியுள்ளார்.
நூலின் அணிந்துரையிலிருந்து
பெருமாள் முருகன் – எழுத்தாளர்

சிந்துவெளி பற்றித் தொடரும் ஆய்வை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நூல் இது. ஏற்கெனவே வெளிப்பட்ட உண்மைகளை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டிய சூழல் இன்று நிலவுகிறது. ஏதேனும் இண்டு இடுக்கு கிடைத்தால் அதற்குள் நுழைந்து தன்வயமாக்கிக் கொள்ளும் தார்மீகமற்ற அரசியல் காலம் இது. ஆகவே விழிப்புடனும் தொடர்ந்து இயங்க வேண்டியிருக்கிறது. அவ்வகையில் சிந்துவெளி பற்றி ஏற்கெனவே விளக்கப்பட்ட சான்றுகளை இந்நூல் உறுதிப்படுத்துகிறது. புதிய சான்றுகளை முன்வைக்கிறது. புதிய கோணங்களைக் காட்டுகிறது. தர்க்க வலுவோடு இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. ஆய்வு நூலை உற்சாகமாக வாசிக்க முடியும் என்பதற்கு இந்நூல் சான்றாகிறது.
பக்தவத்சல பாரதி – எழுத்தாளர்

சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம். சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே எனும் கருதுகோளை முன்வைத்துப் புதிய அணுகுமுறைகளில் ஆராயும் நூலிது. திராவிட மொழியியலை சிந்துவெளிப் புவியியலின் ஊடாக ஆராயும் கோட்பாட்டை இந்நூல் முன் வைக்கிறது.
சிந்துவெளியில் திராவிடச் சான்றுகளையும், சங்க இலக்கியங்களில் சிந்துவெளியின் தொடர்ச்சியையும் காட்டும் ஆய்வு முறையை இதுவரை யாரும் முன்னெடுத்ததில்லை. அதனைப் பல்வேறு களங்களால் ஆய்வு செய்கிறார் நூலாசிரியர் ஆர்.பாலகிருஷ்ணன்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், வடமேற்கு இந்தியா, சங்க இலக்கியம் ஆகிய ஐந்து புள்ளிகளுக்கும் ஊடாக உள்ள திராவிடவியலை இடப்பெயராய்வு, தொன்மவியல் ஆய்வு, திசைகள் பற்றிய ஆய்வு, மலை, குடியிருப்புகளின் பெயராய்வு சிந்துவெளி நகர வடிவமைப்பு முதலான பல்வேறு கூறுகளைக் கொண்டு ஆராய்ந்து சிந்துவெளியின் அடித்தளம் திராவிடமே என நிரூபித்துக் காட்டுகிறார் ஆர்.பாலகிருஷ்ணன். இடப்பெயர்கள் ஆய்வில் கணினி அறிவியல் பயன்படுத்தப்பட்டிருப்பது இதன் அறிவியல் தன்மையைக் காட்டுகிறது. இந்நூல் திராவிடவியல் ஆய்வுகளில் ஒரு புதிய மைல் கல். இதுவரை யாரும் முன்னெடுக்காத ஆய்வு முறை. ஒவ்வொரு தமிழனும் வாசிக்க வேண்டிய நூல்
K. அமர்நாத் ராமகிருஷ்ணா
தொல்லியல் கண்காணிப்பாளர்

இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை ஆலயத் திட்டம் (தென் மண்டலம்) சென்னை
‘சிந்துவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ என்னும் நூல் திரு. R. பாலகிருஷ்ணன் IAS அவர்களிடமிருந்து முதன்முதலில் பெற்ற நிகழ்வு என்பது ஒரு மகிழ்ச்சிகரமான மற்றும் மிக்க சுவாரசியமான நிகழ்வாகும். இந்த நூலின் முதல் பதிப்பு மே மாதம் 2016ஆம் ஆண்டில் வெளியானது அப்பொழுது கீழடி கண்டுபிடிப்பின் செய்தி சரியாக ஊடகங்களின் வழியாக வெளி உலகிற்கு சென்று அடையாத நிலை. அச்சமயம் 2016 மே 30 அன்று ‘Times of India’ என்னும் நாளிதழில் ‘Harappan-like site surfaces in Tamil Nadu near Madurai’ என்ற தலைப்பில் இந்தியா முழுவதும் முதல் முறையாக கீழடியின் செய்தி அச்சிட்டு வெளியானது. அந்த செய்தியை அறிந்த திரு. R. பாலகிருஷ்ணன் அவர்கள் ஜூன் 5ஆம் தேதி அதிகாலை 8 மணிக்கே, மதுரைக்கு அருகிலுள்ள கீழடி அகழாய்வு தளத்திற்கு வந்து சேர்ந்தார். அதற்கு சரியாக ஒரு மாதம் முன்பாக தான் இந்த ‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ என்ற நூல் வெளியாகி இருந்தது.
அந்த நூலில் கீழடி குறித்து செய்திகள் இடம் பெறவில்லை என்பது நிதர்சனம் அதோடு மட்டுமல்லாமல் சிந்துவெளிப் பண்பாட்டின் தொல் எச்சங்களின் அடிப்படையிலுள்ள நிலவியல் கூறுகள் எவ்வாறு இருந்தன என்றும், மேலும் சங்க இலக்கியங்கள் கூறுகின்ற செய்திகள் எவ்வாறு அந்த தொல் ஆதாரங்களுடன் தொடர்புகொண்டு இருந்தன என்பதை மிகத் தெளிவாக எளிய நடையில் அவருக்குரிய ஆய்வின் பார்வையில் இந்த நூலை சிறந்த முறையில் படைத்திருந்தார். அந்த நூலில் தன்னுடைய ஆய்வு செய்திகளை எங்களுடன் முழுமையாக பகிர்ந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் கீழடி கண்டுபிடிப்பின் செயலை வெகுவாக பாராட்டி வியந்தார். அன்றைய தினம் அவர் கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு மேல் எங்களுடைய அகழாய்வு தளத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுடன் கலந்துரையாடி அங்கு கிடைத்த தரவுகளை முழுமையாக அறிந்து வியந்தார்.
அன்றுதான் எனக்கு இந்த ‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ என்ற நூலை தொல்லியல் குழுவின் தலைமை ஏற்றதற்காக அன்பு பரிசாக அளித்து சிறப்பு செய்தார். இந்த நெகிழ்வான தருணம் இருவருடைய வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வாக அமைந்தது. கீழடி தொல்பானைகளை அவர் கண்டு மகிழ்ந்த செயலைப் பார்த்த எங்களுடைய தொல்லியல் குழுவினர் அனைவரும் வியந்து மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், கீழடியின் கண்டுபிடிப்பு அவரின் உணர்வுபூர்வமான மகிழ்ச்சியின் உச்சத்தை உணர்த்தியது என்பதை முழுமையாக நாங்கள் உணர்ந்தோம். அவர், கீழடி ஆய்வுதளத்தில் சிந்து சமவெளிக்கானதொப்புள் கொடி உறவை கண்டுபிடித்து விட்டோம் என்று மகிழ்ந்து பாராட்டினார். அத்தகைய சிறப்பு வாய்ந்த மனிதரின் கனவு நூலாக இந்த நூல் விளங்குகிறது. அந்த நூல் இன்னும் பல பதிப்புகளை பெற வேண்டும் என்று மனதார வாழ்த்தி நன்றி கூறுகிறேன்.
சுந்தர் கணேசன்
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ சிந்துவெளிப் பண்பாடானது திராவிட அடித்தளத்தினைக் கொண்டது என்பதை வலியுறுத்துவது ‘திராவிடக் கருதுகோள்’. சிந்துவெளி ஆய்வுகளை மேற்கொண்ட உள்நாட்டு, வெளிநாட்டு ஆய்வாளர்கள் தொடர்ச்சியாகத் திராவிடக் கருதுகோளை வலியுறுத்தி வந்தனர். குறிப்பாக ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்போலா முதலியோர் இதில் பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்தனர். இதன்வரிசையில் முக்கியமானதொரு நூல் ஆர். பாலகிருஷ்ணன் எழுதிய ‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ என்பதாகும்.
இந்நூல் சிந்துவெளி ஆய்வுகளில் திராவிடக் கருதுகோளிற்கு மறுக்கமுடியாத சான்றாதாரங்களை முன்வைக்கிறது. இடப்பெயராய்வு என்னும் துறையை அடிப்படையாகக் கொண்டு சிந்துவெளியிலும் ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளிலும் இன்றுவரை திராவிடப் பெயர்கள் தொடர்ந்து நிலைபெற்றுள்ளன என்ற உண்மையை அறிவியல் பூர்வமாகவும் வெளிப்படையான ஆதாரங்களின் அடிப்படையிலும் திராவிடக் கருதுகோளை நிறுவியுள்ளார் இந்நூலாசிரியர் ஆர். பாலகிருஷ்ணன்.
கொற்கை, வஞ்சி, தொண்டி என்ற பண்டைய தமிழ் நகரங்களின் பெயர்கள் சிந்துவெளியிலும் அதற்கு அப்பாலும்கூட இன்றுவரை காணப்படுவதற்கான புதிருக்கு அறிவியல்ரீதியில் இந்நூலில் விளக்கம் தரப்பட்டுள்ளது. சிந்துவெளி மக்கள் இடம்பெயர்ந்து தெற்கே புதிய நகரங்களை அமைத்தபோது முன்னர் சிந்துவெளியில் வழங்கிய பழைய இடப்பெயர்களையே அவற்றுக்கும் இட்டனர். இதுபோன்ற பழமை வாய்ந்த பெயர்கள் மக்கள் தங்களது மீள்நினைவில் சுமந்துவந்தனர் என்பதைப் பல்துறை ஆய்வுகளின்வழி எடுத்துரைத்துள்ளார்.
சிந்துவெளி நகரங்களின் வடிவமைப்பில் இருமைப்பாகுபாடு காணப்படுவதைத் தொல்லியல் ஆய்வாளர்கள் சுட்டியுள்ளனர். சிந்துவெளிப் பகுதிகளில் மேற்குத்திசையில் உயர்ந்த மேடை அமைத்து அதில் அகநகரும், கிழக்குத்திசையில் சற்றே தாழ்வான இடத்தில் புறநகரும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மேல்-மேற்கு, கீழ்-கிழக்கு என்பது திராவிட மொழியின் அடிப்படையில் அமைந்தது என்பதைப் பண்டைய தமிழ் இலக்கியங்களின்மூலம் திராவிட மொழிக்குடும்பத்தின் வேர்ச்சொற்கள் மூலமும் இந்நூல் நிறுவுகிறது. திராவிட மொழிகளின் அமைப்பில் மேல் என்பது மேற்காகவும் கீழ் என்பது கிழக்காகவும் கட்டமைப்புப் பெற்றதன் அடிப்படையில் நகரமைப்பின் வடிவமைப்புக் காணப்படுவது எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இது சிந்துவெளி நகரமைப்பில் இதுவரை கண்டிராத புதிய ஒளியினைக் கொடுத்தது. இன்னும் குறிப்பாக இந்தோ-ஆரிய மொழிகளில் இத்தகைய திசை சார்ந்த வேர்ச்சொற்கள் இல்லாததையும் கவனப்படுத்தி, திராவிடக் கருதுகோளின் சான்றினை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆர். பாலகிருஷ்ணன் உருவாக்கிய திசை, உயரம், பொருட்புலம், சமூகக்கூறு அட்டவணை (Direction, Elevation, Material and Social Matrix – DEMS Matrix) என்பது சிந்துவெளிப் பண்பாடு பற்றி புதிய புரிதல்களை உருவாக்க கூடியது. தொல்லியல் ஆய்வுகள்மூலம் கிடைத்த சிந்துவெளி தடயங்களை ஒத்த, திராவிட மொழிகளில் காணப்படும் சொற்களையும் இந்தோ-ஆரிய மொழிகளில் காணப்படும் சொற்களையும் ஒப்பிட்டுக் காட்டி திராவிட மொழிகளுடன் சிந்துவெளியானது திசை -உயரம்-பொருட்புலம்-சமூகக்கூறுகள் சார்ந்து நெருக்கமாக இருப்பது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
திராவிடர்கள் அடிப்படையில் ‘மலைநில மனிதர்கள்’ என்று கமில் சுவலபில் குறிப்பிடுகிறார். இதன் நீட்சியாக மலைசார்ந்த குடியிருப்புகளின் இடப்பெயர்களை இந்நூலில் ஆராய்ந்துள்ளார். சங்க இலக்கியத்தில் காணப்படும் மலைசார்ந்த இடப்பெயர்களும் சிந்துவெளியில் காணப்படும் மலைசார்ந்த இடப்பெயர்களும் ஒத்தத்தன்மையில் இருப்பதைச் சான்றாதாரங்களுடன் எடுத்துரைக்கின்றார். இதனுடன் ‘கோட்டை’ குடியிருப்புகளின் இடப்பெயர்கள் குறித்து துல்லியமான தரவுகளைக் கொடுக்கின்றார்.
இந்நூல் பன்னாட்டுப் புவியியல் வரைபடங்களிலிருந்து செய்திகளைச் சேகரித்து, அட்ச-தீர்க்க ரேகைகள் உள்ளிட்ட துல்லியமான தகவல்களையும் இணைத்து அட்டவணைப்படுத்திக் கொடுத்துள்ளது, இதன் வெளிப்படையான நம்பகத்தன்மையினை எவரும் கணினிமூலம் சரிபார்த்துக்கொள்ள முடியும்.
‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ என்னும் இந்நூல், 2012ஆம் ஆண்டு ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் இயங்கும் சிந்துவெளி ஆய்வு மைய ஆய்விதழில் வெளியான ஆங்கிலக் கட்டுரையினை அடிப்படையாகக் கொண்டது. 2012ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் இந்நூல் எடுத்துரைத்துள்ள முக்கியமான சான்றாதாரங்களை எவரும் மறுக்கவில்லை.
இந்த ஆய்வைப் பார்த்த ஐராவதம் மகாதேவன், ‘இன்னமும் ஏன் திராவிடக் கருதுகோள் என்றே சொல்ல வேண்டும். அதுதான் தெள்ளத்தெளிவாக இந்நூலின்மூலம் விளக்கப்பட்டு விட்டதே’ என்று கூறினார்.
சிந்துவெளி ஆய்வுகளுக்கு திராவிட அடித்தளத்தினைத் திறம்பட நிறுவியதோடு மட்டுமல்லாமல் சிந்துவெளிப் பண்பாடு வீழ்ச்சிக்குப் பிறகு என்ன நிகழ்ந்தது என்பதற்கும் இந்நூல் சான்றளிக்கிறது.
தமிழில் வெளிவந்த இந்நூலானது தொடர்ந்து பல பதிப்புகளைக் கண்டது. பாரதி புத்தகாலயத்துடன் இணைந்து இந்நூலினை வெளிக்கொண்டு வந்ததில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் மகிழ்ச்சி அடைகிறது.

டாக்டர் சங்கர சரவணன், இணை இயக்குநர், தமிழ்நாடு பாடநூல் கழகம்
சிந்துவெளி ஆய்வு குறித்த முதன்மையான நூலாகவும் முதல் தரமான நூலாகவும் இது உள்ளது. சிந்துவெளிப்புதிரை இடப்பெயராய்வுகள் எவ்வாறு விடுவிக்கமுடியும் என்பதற்கு கட்டியம் கூறும் நூல். சிந்துவெளி – திராவிட தொடர்பு குறித்து மேலோட்டமாக பேசித்திரியும் பலர் ஆழ்ந்து படிக்கவேண்டிய நூல்.இந்த நூலுக்கான வெகு அழுத்தமான முத்திரையாக நான் கருதுவது மூத்த சிந்துவெளி ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் ஆர். பாலகிருஷ்ணன் அவர்களின் ஆய்வு நெறியை ஆதரித்து, இனியும் சிந்துவெளி – திராவிடத் தொடர்பை கருதுகோள் (Hypothesis) நிலையில் வைத்திருக்கத் தேவையில்லை;ஆய்வு முடிவாகவே அறிவித்துவிடலாம் என்று எழுதி இருப்பதைத்தான்.
பாலகிருஷ்ணன் சார் எழுதி, சிந்துவெளி ஆய்வில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள ‘Journey of a Civilization; Indus to Vaigai’ என்ற நூலுக்கு இந்த நூலே அடிப்படை. பாலா சார் குறிப்பிடும் ‘கொற்கை- வஞ்சி- தொண்டி வளாகம்’ ‘KVT Complex’ இப்போது பள்ளிப்பாடநூல்கள் வாயிலாக லட்சக்கணக்கான மாணவர்களைச் சென்று சேர்ந்திருப்பது மகிழ்ச்சி.
ஆயிஷா இரா. நடராசன் – எழுத்தாளர்

‘சிந்து வெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ என்கிற இந்த நூலை வாசித்து விட்டு நான் பிரமித்துப் போனேன். இது ஒரு தேர்ந்த தொல்லியல் அறிஞரின் விஞ்ஞானபூர்வ பதிவு ஆகும். பலவகை ஆறு இடங்களுக்கு மோசடிகளுக்கு இந்த நூல் முற்றுப்புள்ளி வைக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க தொல்லியல் அறிஞர் ரிச்சர்டு கோல்ட் போல ‘நாங்கள் வெற்றுக் கோட்பாட்டில் இருந்து அல்ல… உண்மையில் இருந்து பேசுகிறோம்’ என்று இந்த நூல் ஆணித்தரமாக தன் கருத்துகளை முன்வைக்கிறது. சிந்து சமவெளி நாகரிகத்தின் மொழி இந்தோ ஐரோப்பிய மொழி அல்ல.. அது தமிழ் மொழி தான் என்பதற்கான ஆதாரங்கள் இந்த நூலிலே அடுக்கப்படுகின்றன. தென் திராவிடம், தென் நடு திராவிடம், நடுத்திராவிடம், வட திராவிடம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய 73 மொழிகளின் சாயல்கள் எப்படி எல்லாம் சிந்துவெளி நாகரிகத்தின் உடைய மொழிப் பயன்பாட்டிலே இருந்திருக்கிறது என்பதை இதைவிட துல்லியமாக யாராலும் கூற முடியாது.
சீனாவின் வெண்கல கல்வெட்டு ஆய்வாளர் சிங் குவான் போலவும் இத்தாலியின் பிலேவியோ பியாண்டோ போலவும் வரலாற்றில் இடம் பெறத் தக்க மாமனிதர் நம்முடைய பாலகிருஷ்ணன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த நூலை உடனடியாக பிற மொழிகளில் மொழிபெயர்ப்பதோடு நம் பள்ளி கல்லூரிகளிலும் பாடமாக வைக்க வேண்டும்.
இளம்பிறை – எழுத்தாளர்

அறிவார்ந்த தலைவனின் ஆற்றல் மிக்க பங்களிப்பு.
கடல் கோள்களும் புலப்பெயர்வுகளும் மக்கள் வாழ்வின் மரபுத் தொடர்ச்சிகளாக தன் அடிமடியில் ஒளித்து வைத்திருக்கும் மனிதகுல வரலாற்றின் வாழ்வியல் தடயங்களை வாஞ்சையுடன் தேடித் தந்திருக்கிறது. “சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்” என்னும் இந்நூல்.
தொலைந்தவர்களும் தொலைத்தவர்களும் பிரிந்தவர்களும் தங்களது உள்ளுணர்வைத் தடயங்களை காலத்திடம் வழங்கிச் சென்றிருக்கும் கரிசனத்தை தொண்டி, வஞ்சி, கொற்கை, கோட்டைப் போன்ற ஊர்ப் பெயர்களுடனும், இலக்கியச் சான்றுகளுடனும் ஒத்திருக்கும் உண்மைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
வாழும் இடம் என்பது வெறும் ‘நிலம்’ அல்ல. அது வாழ்வியல் மற்றும் சமூக உளவியல் சார்ந்த பல அக, புறப் பரிமாணங்களை உள்ளடக்கிய பன்முகத்தனம் என்ற நூலாசிரியரின் வரையறைப்படி தொல்குடி மக்களின் வாழ்வியல் தடங்களை அவர்கள் வாழ்ந்து சென்ற வழிகள் தேடி தேடிப் பார்க்கும் முன்னெடுப்பாக இருக்கின்றன இந்நூல் பேசும் உண்மைகள் ஒவ்வொன்றும்.
“மேல்-மேற்கு, கீழ்-கிழக்கு” என வடிவமைக்கப்பட்ட நாகரிக நகர அமைப்புகள் தமிழ்தொன்மத்தின் பங்களிப்புடன் ஒத்துப்போகும் சாத்தியக்கூறுகளின்மீது புத்தொளிப் பாய்ச்சி அறியத்தரும் இந்த ஆய்வு நூலை ஒரு புதினத்தைப்போல் உற்சாகமாகப் படிக்க முடிந்தது என்னால்.
உள்ளரன் மற்றும் பொது வசதிகளுடன் கூடிய அகழ்வாராய்ச்சி நகரமைப்பை ஆய்வாளர் ராவ், “அறிவார்ந்த தலைவனின்” பங்களிப்பாக பாராட்டிப் புகழும் கூற்றானது, கெட்டிதட்டிப்போன வரலாற்று ஆய்வு மொழிநடை தவிர்த்து, இயல்பான இலக்கிய மொழி நடையில், தமிழ் தொன்மத்தின் புதிய சாளரங்களை திறந்திருக்கும் ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. அவர்களின் ‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அத்தளமும்’ அறிவார்ந்த தலைவனின் ஆற்றல் மிக்கப் பங்களிப்பாகவே நம்மை பெருமிதங் கொள்ளச் செய்கிறது.
பிரபஞ்சன் – எழுத்தாளர்

சிந்துவெளியிலும், ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளிலும் இன்றுவரைக் காணக் கிடைக்கும் திராவிடப் பண்பாட்டைப்பற்றிய ஆய்வே இந்த நூல். வட இந்திய மாநிலங்களிலும், வடமேற்குப் பிரதேசங்களிலும் திராவிடப் பண்பாடு நிலைபெற்றிருக்கும் விதத்தை ஆராய்கிறார் ஆய்வாளர் பாலகிருஷ்ணன். அவருடைய முக்கியமான தரவு, இடப்பெயர் ஆய்வு முடிவாகும். மனிதர் வாழும் இடப்பெயர்கள் மிகவும் தொன்மையானவை. நாகரிகம் தோன்றும் முன்னமே இடப்பெயர்கள் தோன்றிவிட்டன. மொழியாக்கத்தின் தொடக்கநிலையே இடங்களுக்குப் பெயர் சூட்டல்தான். மனிதகுலம், இடப்பெயர்வுக்கு உள்ளாகும்போது, மனிதர்கள் தங்கள் ஊர், இடம், குளம் போன்றவைகளைச் சுமந்துகொண்டே புலம்பெயர்கிறார்கள். சிந்துவெளி மக்கள், (இன்றைய பாகிஸ்தான், வடமேற்கு, ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களில் இருந்து) குடிபெயர்ந்தபோது, தாங்கள் பெயர்ந்த இடங்களின் பெயர்களைப் புகுந்த இடங்களில் வைத்துக்கொண்டார்கள். ஆசிரியரின் ஆய்வின் அடிப்படை இது.
தமிழ்நாட்டில் உள்ள ஆமூர், ஆரணி, கள்ளூர், காலூர், கொற்கை, மானூர், கண்டிகை போன்ற இடப்பெயர்வுகள், தற்போது பாகிஸ்தான் எனப்படும் பழைய சிந்துவெளி நிலப் பகுதியில் புழக்கத்தில் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள ஆலூர், ஆசூர், படூர், குந்தா, நாகல், செஞ்சி போன்ற இடப்பெயர்கள் தற்போது ஆப்கானிஸ்தானிலும் பயிலப்படுகின்றன. இந்தப் பகுதியில் பிராகுயி என்கிற திராவிட மொழி இன்னும் பேசப்படுகிறது. சங்க இலக்கியத்தில் பேசப்படும் கொற்கை, வஞ்சி, தொண்டி, மதிரை போன்ற பெயர்கள் வடமேற்கில் இன்னும் இருக்கின்றன.
சிந்துவெளி நாகரிகம், ஒரு திராவிட நாகரிகம் என்ற கருதுகோளின் அடிப்படையில் – புலம் பெயர்ந்த சிந்துவெளியினர் தங்களது ஊர்ப் பெயர்களான மீள் நிறைவாகக் கொண்டுவந்து, தங்களது புதிய தாயகத்தில் (தென் இந்தியாவில்) பயன்படு்த்தியதும் சங்க இலக்கியத்தில் ஆவணப்பதிவு செய்யப்பட்டது.
திசைகள் பற்றிய சொல்லாக்கத்தில், திராவிட மொழிகள் மேல் – மேற்கு; கீழ் – கிழக்கு என்ற புவி மைய அணுகுமுறையைக் கையாள்கின்றன. இந்தக் கருத்தியலின் தொடக்க வேர்களைத் தொல்பழங்காலத் திராவிடர்களின் வாழ்விடங்களாகக் கருதப்படும் வடமேற்குப் புலங்களின் (பாகிஸ்தான் மற்றும் ஆப்கன், ஈரான்) காண முடிகிறது. கோட்டைகள் மேற்கிலும், மக்கள் வாழ் இடங்கள் பள்ளமான, குறைந்த மேட்டு நிலங்களில் அமைந்திருப்பது திராவிடர்க்கும் வடமேற்கு மக்களுக்கும் பொது. மேடான இடப்பகுதி அரண்மனைக்கு அல்லது தலைவன் இருக்கும் இடத்துக்கு. இந்த இருமைப் பண்பு, திராவிடர்கள் – வடமேற்கு மக்களை இணைக்கிறது. கோட்டைப் பகுதி எனப்படும் மேல் நகரம், குடி இருப்புப் பகுதி எனப்படும் கீழ் நகரம் என இருவகை வடிவமைப்பு, சிந்துவெளிப் பண்பாடு. தமிழகக் கோட்டை, மக்கள் ஊர் அங்ஙனமாகவே இருக்கிறது. இவைகள் எதேச்சையாக அமைந்தவை அல்ல. இவைகள் ஆசிரியர் பாலகிருஷ்ணன் கண்டு உணர்ந்த ஆவணங்கள்.
எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் “எமதுள்ளம் சுடர்விடுக” தொடரில் வெளிவந்த கட்டுரையிலிருந்து… நன்றி: தமிழ் இந்து
ச.தமிழ்ச்செல்வன் – எழுத்தாளர்

சிந்து வெளிப்புதிர் என்று ஆய்வுலகில் நீடித்து வரும் புதிரை விடுவிக்கும் ஆழமான பணியில் ஆய்வறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்களுக்குப் பின்னும் அவருடைய ஆய்வின் தொடர்ச்சியாகவும் திரு ஆர்.பால கிருஷ்ணன் ஈடுபட்டு வருகிறார். அவர் பின்னர் வெளியிட்ட “ஒரு பண்பாட்டின் பயணம்- சிந்து முதல் வைகை வரை” என்கிற பெரு நூலின் முன்னோட்டமாக வந்த நூலே “சிந்து வெளி நாகரிகத்தின் திராவிட அடித்தளம்” ஆப்கனிலிருந்து பாகிஸ்தான், குஜராத் வரையிலான பழைய சிந்து வெளியில் அமைந்துள்ள ஊர்ப்பெயர்கள் பலவும் தமிழ்ப்பெயர்களாக இருப்பதை நூலின் முதற்பகுதி ஆய்கிறது. பிற்பகுதி ஹரப்பா நிலவியல் அமைப்பையும் மேல்-கீழ் என அமைந்த பாகுபாட்டையும் அங்கு தொடங்கி தமிழகம் வரை தொடரும் சேவல் சண்டை பற்றியும் விவாதிக்கிறது. திராவிட மொழிக்குடும்பத்தாரின் வாழ்வியலுக்கும் பண்பாட்டுக்கும் நெருக்கமானதாக இருப்பதை நிறுவும் திசையில் பயணிக்கும் இந்நூல் தமிழர்கள் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய நூல்