ஆயிஷா இரா.நடராசன்

- பெரியா(ர்)தாத்தா – அருண், மேரி
பெரியார் தாத்தா, நியூட்டன், எடிசன், ரைட் சகோதரர்கள் என்று புதிய கூட்டணி நம் தமிழ் சிறார்களுக்கு சொல்லும் அறிவியல் கதை. வண்ண வண்ண வழ வழ பக்கங்கள். - சிறார் நாடோடிக் கதைகள் – உதய சங்கர்
வாசிப்பதற்கும் குழந்தைகளுக்கு சொல்வதற்கும் சுவாரசியமான ஐந்து நாடோடிக் கதைகள்… எலியும் பூனையும் எதிரி ஆன கதை மகா சிறப்பு. - வெள்ளி மயிலிறகு – டாக்டர் சிரி
தெலுங்கானாவைச் சேர்ந்த டாக்டர் சிரி-யின் அற்புத சிறார் கதைகளை திரட்டி தமிழுக்கு தந்திருக்கிறார் ஏ.ஆர்.பாலசுப்பிரமணியம். மொத்தம் 20 கதைகள் உள்ளன. வெங்கடேசனின் ஓவியங்கள் அற்புதம். இக்கதைகளில் பல அம்புலிமாமாவில் வந்தவை. - வாய்மொழிக் கதைகள் – I – பாரதி பாலன்
பாரதிபாலன் எனும் தமிழ் ஆளுமையின் சிறப்பான பங்களிப்பு. முதல் தொகுதியில் 56 கதைகள் உள்ளன. நமக்கு ஏற்கெனவே தெரிந்த பல கதைகளை கிராமத்து மக்கள் சொல்லும் விதம் வேறுபடுகிறது – பல ஆச்சரியங்கள். - வாய்மொழிக் கதைகள் – II – பாரதி பாலன்
தோழர் பாரதிபாலன் பங்களிப்பாக இரண்டாம் தொகுதியில் 26 கதைகள். இவை சற்றே நீண்ட கதைகள் வேலை தேடித்தந்த பூனை, பல நாள் திருடன், அன்ன மகத்துவக்கதை… இவை என்ன கவர்ந்த கதைகள். - கடலுக்கு அடியில் மர்மம் – சரிதா ஜோ
பெர்முடா முக்கோணம் பற்றிய அந்தப் பகுதியை வாசித்து அசந்து போனேன். கதை வடிவில் கடலின் அறிவியல் உண்மைகளை குழந்தை மொழியில் பேசும் ஈரோட்டு கதை சொல்லியின் சிறப்பான பங்களிப்பு. - கிளியும் அதன் தாத்தாவும்? – சுப்பாராவ்
மைதிலி மொழியில் கிராமத்து மக்கள் நடுவே உலவும் அற்புதமான 16 சிறார் கதைகளை தோழர் சுப்பாராவ் தமிழுக்கு தந்திருக்கிறார். ராஜகுருவின் தாடி கதையை வாசித்து விழுந்து விழுந்து சிரித்தேன். யானைப் பாகனும் நாய்களும், மால்புவா போன்ற கதைகளை படித்து நிறைய சிந்தித்தேன். - மந்திரக்கோட் – பூங்கொடி பாலமுருகன்
சிறார் திரைப்பட உலகம் தனி. இந்த நூலை ஜாப்பனீஸ், மலையாளம், இந்தி, கொரிய மொழி, இரானிய மொழி என 13 சிறார் படங்கள் பற்றி விரிவாக பேசுகிறது. வெறும் கதை சொல்லியாக மட்டுமின்றி, குழந்தை உலகின் பிற வடிவங்களையும் தொடும் பூங்கொடி வியக்க வைக்கிறார். - கண்ணப்பன் கேட்ட கேள்வி – புதுச்சேரி அன்பழகன்
இது நூலாசிரியரின் மூன்றாவது புத்தகம். பள்ளி வகுப்பறையின் உயிர்ப்பான பொழுதுகளில் பலவகை தேடல்களை மாணவர்கள் ஆசிரியருக்குள் விதைக்கிறார்கள். ஆசிரியரும் மாணவரும் சேர்ந்தே விடை தேடுகிறார்கள். - விடுதலை வேள்வியில் வீர மங்கைகள் – எஸ்.ஜி.ரமேஷ்பாபு
வேலுநாச்சியார் முதல் சுந்தர ஆத்தா வரை 39 விடுதலை போராட்ட வீர மகளிரை இந்த நூலில் தோழர் ரமேஷ்பாபு அறிமுகம் செய்திருக்கிறார். கல்பனா தாத்தா, அம்மா ஜான் போன்றவர்களின் கதைகள் நெஞ்சை தொடுகின்றன. தமிழகத்தில் எழுந்த வீராங்கனைகள் கட்டுரையை பாடமாக வைக்க பரிந்துரைப்பேன். - தமிழகக் கோட்டைகள் – விட்டல்ராவ்
மன்னர் காலம் தொட்டே, தமிழகத்தில் பல கோட்டைகள் உண்டு. சிறிது பெரிதுமாக 500 இருக்கலாம் அதில் அங்கிலேயர் காலத்து – சிறப்பு கோட்டைகளை விட்டல்ராவ் கதைபோல சொல்லிச் செல்கிறார். வரலாறு – பயணமாக – கள ஆய்வாக எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த நூல் ஒரு உதாரணம். - கிளிமரம் – உதயசங்கர்
மலையாள எழுத்தாளர் கிரேஸியின் சிறார் கதைகளை தமிழுக்கு தந்திருக்கிறார் உதயசங்கர். இந்தத் தொகுப்பில் உள்ள ஆசீர்வதிக்கப்பட்ட பூனை கதையை நான் பல குழந்தைகளுக்கு அறிமுகம் செய்தேன். அக்கரை பச்சை கதையும் அருமை. - ஜப்பான் நாட்டு குழந்தைகளுக்கு பிடித்த கதைகள்I – தமிழில் சூ.ம.ஜெயசீலன்
இந்தத் தொகுப்பில் மொத்தம் 20 கதைகள் உள்ளன. ஜப்பான் நாட்டின் இந்த கதை ஒவ்வொன்றும் அழகு. ஜெல்லி மீனுக்கு ஏன் எலும்பு இல்லை. சிலந்தி நெசவாளர், பிசுபிசுப்பான தேவதாரு போன்ற கதைகள் தமிழுக்கே புதிது. - ஜப்பான் நாட்டு குழந்தைகளுக்கு பிடித்த கதைகள் II – தமிழில் சூ.ம.ஜெயசீலன்
புளோரன்ஸ் சகேட் ஜப்பானிய மொழியில் தொகுத்த கதைகளின் இரண்டாம் பாகம் இத்தொகுப்பில் 16 கதைகள் உள்ளன. ஏன் சிவப்பு குட்டிச்சாத்தான் அழுதது!, கதை சிகரம் தேவதை கொக்கு, மீனவரும் ஆமையும் போன்ற கதைகள் பாடம். - மகிழினி IFS – ஈரோடு சர்மிளா
சத்தியமங்கலம் காட்டுப் பகுதியின் கடம்பூர் பயணம்தான் இந்த நூலின் அடிநாதம். மிக சிறப்பான சம்பவ அடுக்குகள். மலைவாழ் மக்களோடு வாழ்ந்து அனுபவம் பெற்ற உணர்வு இதை வாசிக்கும் ஒவ்வொரு மழலைக்கும் பிறக்கும். - என்ன சொன்னது லூசியானா? –
மதிவதனி, செல்வ ஸ்ரீராம்
சுட்டிகளான செல்வஸ்ரீராமும், மதிவதினியும் சேர்ந்து சொன்ன எட்டு கதைகள் இந்த குட்டிப் புத்தகத்தில் உள்ளன. ஐந்து கதைகளை மதிவதினியும் மூன்று கதைகளை செல்வஸ்ரீராமும் சொல்லி உள்ளனர். எல்லாமே கற்கண்டு. - மாயத் தொப்பி – வா.மு.கோமு
வா.மு.கோமுவின் அழகான யதார்த்தமான சிறார் கதை விதவிதமான வண்ணம் பெறும் மந்திர தொப்பி, சந்திரனை தைரியசாலி ஆக்கும் விநோத நட்புக்கதை. இந்த நூலின் மொழியாடல் தனிச்சிறப்பு. - தன்வியின் பிறந்தநாள் – யூமா வாசுகி
இந்த நூலில் யூமா வாசுகியின் பத்து கதைகள் உள்ளன. தன்வி, ஜெய், குணா எனும் குணசுந்தரி போன்ற அழகான சிறுவர் உலகின் வழியே ஒரு சொர்க்கபுரியை படைத்து அசத்தி இருக்கிறார் யூமா. பெயர் வைக்கப்படாத அந்த குட்டி நாய் என்ன அழகு?! - கிழவியும் பூனையும் – தமிழில் : சுப்பாராவ்
ஆர்மீனியா எனும் குட்டிதேசத்தில் இருந்து நம் நண்பர் சுப்பாராவ் 14 குழந்தைகளுக்கான அற்புத கதைகளை தமிழுக்கு கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு கதையும் மகா அமிர்தம். கி.சொக்கலிங்கத்தின் ஓவியங்கள் அழகு. - புள்ளினங்காள் – வெ.கிருபாநந்தினி
குருவிக்கு குருவி என்று எப்படி பெயர் வந்தது. ஒவ்வொரு பறவைக்கும் விலங்கியல் பெயர் ஒன்று உண்டல்லவா. அந்தப்பெயர் எப்படி வந்தது. என்று இந்த நூல் விவரிக்கிறது. பறவை இயல் அறிஞர்கள் பலரை இந்த நூல் அறிமுகம் செய்கிறது. - சிறார்களுக்கான புறநானூற்றுக் கதைகள் – சுகுமாரன்
சிறார்களுக்கான நம் சங்க இலக்கிய புதையல் இந்த நூல். சுகுமாரன் சார் அற்புதமான வரலாற்று கதையாளர். வீரம் மட்டுமல்ல ராஜதந்திரம், நீதி, விவேகம், மக்கள் மீதான அக்கறை, மண்பற்று என பலவற்றை இந்த 25 கதைகள் விதைக்கின்றன. - டாமிக் குட்டி – ச.முத்துக்குமாரி
குட்டிக் குட்டிக் கதைகள் ஆசிரியை முத்துக்குமாரி குழந்தைகள் மொழியை லாவகமாக உள்வாங்கியவர் கதைகளில் வரும் ஏழைக் குழந்தைகள் இவரது எழுத்து மந்திரத்தால் தங்களது இருட்டு வீட்டை கூட மாளிகை ஆக்கும் அதிசயம் நடக்கிறது. - பறக்கும் யானைகள் – பிரசாந்த் வே
பிரசாந்த் வே-வின் காடர் ஏற்கெனவே வாசித்திருக்கிறேன். இந்த கதைகள் எனக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. காட்டில் இருந்த விலங்குகள் எல்லாம் சேர்ந்து காட்டை இழுத்து பூட்டி விட்டன. இனி மனிதர்களால் நுழைய முடியாது. அப்புறம்…?! வாசித்துப் பாருங்களேன். புதையல்! இந்த நூல். - எஸ்டோனிய தேவதை கதைகள் –
தமிழில்: கி.ரமேஷ்
தோழர் ரமேஷ் எழுத்து வெறி கொண்டவர். சோவியத் தந்த ஆம்பர் கடல் பொக்கிஷத்தின் முதல் தொகுதி இது. 13 கதைகள் உள்ளன. மிகப் பிரபலமான அந்த காளான்களின் அரசன் இருக்கிறதா என்று பார்த்தேன். ஐந்தாவது கதை! சிறகுக்கால் இளவரசி நான் படித்து படித்து வியந்த கதை. குழந்தைகளை தேவதைகளாக்கும் புத்தகம். - கிளியோடு பறந்த ரோகினி – சரிதா ஜோ
இந்த நூலில் உள்ள 5 கதைகளும் ஒவ்வொரு ரகம். அழகு. கிளியின் ஒருநாள் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் ரோஹினிபோல் நம் பாடபுத்தகங்கள் இக்குழந்தைகளுக்கு வாழ்வனுபவம் தர வேண்டும் என்று தோன்றுகிறது. சிறப்பான முயற்சி. - என் பெயர் ஙு – வே.சங்கர்
புத்தகத் திருவிழா ஓர் அறிமுகம் எனும் நுலின் மூலம் எனக்கு அறிமுகம் ஆனவர் சங்கர். இந்த அற்புத கதை எறும்புகளின் சமூக வாழ்க்கையில் அவை எதிர்கொள்ளும் அன்றாட சவால்களை மிக சிறப்பாக குழந்தைகளுக்கு படைக்கிறது தலைப்பில் என்ன ஒரு வித்தியாசம்?! - பிலிப்பைன்ஸ் நாட்டு குழந்தைகளுக்கு பிடித்த கதைகள் – தமிழில் : சூ.ம.ஜெயசீலன்
13 கதைகள்…. அழகிய பிலிப்பைன்ஸ் குழந்தைகள் உலகை நம்முன் விவரிப்பதை சிலிர்த்தபடி வாசித்தேன். துறவியும் இரண்டு புழுக்களும் என்னை கவர்ந்த மிக சிறப்பான கதை. சூ.ம. ஜெயசீலனின் அசராத பயணம் அதிசயிக்க வைக்கிறது. - நீலமலைப் பயணம் – ஞா.கலையரசி
கலையரசி அவர்களின் முதல் நாவலில் வந்த அதே சிறார்கள் இந்த நாவலிலும் வருவது முதல் இன்ப அதிர்ச்சி. பிறகு மாநில முதல்வர் அவர்களுக்கு தரும் பணி. நீலகிரி மலையால் அழிந்து போனதாக கருதப்படும் ஒரு தாவரத்தை கண்டறிதல்! அப்புறமென்ன செம சாகச கதை… வங்கிப் பணி செய்த நூலாசிரியர், ஒரு தேர்ந்த தாவர இயலாளராய் கதை சொல்லியாய் மிளிர்கிறார். - நீலக் கழுகு – துரை ஆனந்த் குமார்
நூலாசிரியர் தற்போது அபுதாபியில் வசிக்கிறார். அபிதா எனும் துப்பறிவு பெண் சிங்கத்தை இந்த நாவல் அறிமுகம் செய்கிறது. ஒரு பள்ளியை திட்டமிட்டு பழிவாங்க நினைக்கும் சமூக விரோதியை துப்பறிந்து பிடிக்கும் அபிதாவைப் போன்ற குழந்தைகளை கண்டறிந்து அத்திறனை வளர்த்தெடுக்க நம் கல்வி முன் வர வேண்டும். - காயாவனம் – வா.மு.கோமு
நண்பர் வா.மு.கோமுவின் அடுத்த சிறார் நாவல். அந்த வனத்தின் மருத்துவர் நரி. கரடியின் வயிற்றுப்போக்கை நிறுத்தி வெற்றி காண்கிறது. அதற்கு மாற்றாக மல்லேரி ஆடு சாப்பிட வேண்டும் என்கிறது நரி. அய்யோ அதன்பிறகு கரடிபடும்பாடு. முடிவு அதைவிட சுவாரசியம். - காகம் ஏன் கருப்பானது? – தமிழில்: சுகுமாரன்
உலக சிறார் நாடோடி கதைகளை தமிழ் குழந்தைகள் வாசிக்க தந்திருக்கிறார் சுகுமாரன் சார். கொரியா, ஜெர்மனி, நார்வே, மெக்சிகோ, ரஷ்யா, வியட்நாம் என்று பல ஊர்களின் கதைகள். வெள்ளைப் பூனையின் அட்டகாசம், வடக்கு திசை காற்று போன்ற கதைகள் மிகவும் புதிய ரகம். சூப்பர் தொகுப்பு. - ஐந்தாறு வகுப்பறைகளும் நாலைந்து காக்கைகளும் – சந்தானமூர்த்தி சிதம்பரம்
ஒரு திரைப்பட இயக்குனர் இலக்கிய தளத்திலும் தொடர்ந்து இயங்குவது மகிழ்ச்சி தருகிறது. இந்த நூலில் எட்டுக் கட்டுரைகள் உள்ளன. “ஒரு பல் தாத்தா ஒரு முடி பாட்டி” சிறப்பான கதையாடல். பசியோடு இருக்கும் குழந்தைகளின் கால்கள் – ஒவ்வொரு ஆசிரியரும் அவசியம் வாசிக்க வேண்டிய பதிவு. கதை போல நகரும் இந்த கட்டுரைகளை குழந்தைகள் எளிதில் உள் வாங்க முடியும். - பழங் கதையும் பழங் கணக்கும் – அ.சத்யமாணிக்கம் / அறிவியல் பலகை
இருபது விரிவான புதிர் கணக்குகள். எல்லாமே மகாசிறப்பு. புத்தகத்தை கையில் எடுத்தால் கணக்கு போடாமல் கீழே வைக்க முடியாது. பறித்தவனுக்கு ஒரு மடங்கு. பார்த்தவனுக்கு இரண்டு மடங்கு போல ஒரு கணக்கை கதையாக முன் வைக்க நம் கணித ஆசிரியர்கள் கற்க வேண்டும். - கால்களில் ஒரு காடு – உதயசங்கர்
அப்பாவின் தந்திரம் முதல் விளையாட்டுத் தோழன் வரை பதினோறு அற்புதமான கற்கண்டு கதைகள் இந்த புத்தகத்தில் உள்ளன. புத்தகம் பேசுது என்ன ஒரு கதை?! விதைகளின் பயணம் ஒரு அறிவியல் புதையல் வாசனின் ஓவியங்கள் பளிச். - தாவர உலகம் – முனைவர் அ.லோகமாதேவி அறிவியல் பலகை
சொர்க்க மரம் தொடங்கி ஜின்கோ மரம் வரை 30 மரங்களை இந்த நூல் மாணவர்களுக்கு அறிமுகம் செய்கிறது. எளிய நடை அசர வைக்கும் விநோத தகவல்கள். உருளைத் தக்காளி பற்றியும், குங்குமப்பூ பற்றியும் வாசித்த போது அசந்து போனேன். அந்த சொர்க்க மரம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது தெரியுமா?!
