வெ. பிரத்திகா
எதார்த்த வாழ்வில் பெண்கள் படும் துன்பங்களையும் கொடுமைகளையும் படம் பிடித்துக் காட்டுகிறது. ஒவ்வொருவர் வாழ்விலும் அவர்களால் மறுக்கப்பட்ட அதே வேளையில் அவர்களால் மறைக்கப்பட்ட உண்மைகளை இயல்பாக எடுத்து வைக்கிறது, நித்தில் அவர்கள் எழுதிய “ஆற்றுக்கு தீட்டில்லை” எனும் சிறுகதைகள்.

இச்சிறுகதை அழகம்மா தொடங்கி புவனா வரை உள்ள கதாபாத்திரங்களின் வாழ்க்கை சிக்கல்களை எடுத்துக்காட்டுவதாக அமைகிறது. ஆனால், கதாபாத்திரங்களை ஒதுக்கி பயணித்தோமானால், நம்மை சுற்றி பல அழகம்மாவை காணலாம். பெண் மனதின் குமுறல்களை வலிகளை மட்டுமல்லாமல், ஒவ்வொரு சிறுகதையிலும் கடைசியாக அந்தப் பெண் அத்தனை வலிகளையும் மாற்றக் கூடியவள் என்றும், தனக்கான பாதையை அவள் மன உறுதி உருவாக்கும் என்பதையும் சிறு வரிகளிலே முடித்து ஊக்கத்தையும் அளித்துள்ளார்.
இக்காலகட்டத்தில் அப்படி உருவாகி வரும் பெண்கள் அதிகம்தான் ஆனால் அதனுள் அடங்கிப் போகும் பெண்களும் சரிக்கு சமமாக தான் உள்ளனர். பல இடங்களில் பெண்களைச்சுற்றி உள்ள முள்வேலிகள் பெண்களாகவேதான் உள்ளனர். இதை நுணுக்கமாக சிறுகதைகளில் வெளிப்படையாக காட்டியுள்ளார். பல பெண்கள் உழைப்பதே தன் குழந்தைகள் படிப்பிற்காகத்தான்.
இன்றைய சூழலில் இச்சிறுகதைகள் கூறப்பட்ட பெண்கள் உள்ளனரா என்றால், அவர்கள் எல்லோரும் பெயர் மாற்றம் செய்துள்ளனர் எனலாம். ஆனால், அவர்களைப் போன்றோரை உடனடியாக எதிர்பார்த்து விட முடியாது. நிச்சயம் மாற்றம் கொண்டு வரலாம்.
செண்பகக்கா மார்பினில் வாங்கும் அந்த அடி, சிறுகதையை படிக்கும் போது நமக்கும் சேர்த்து வலித்திருக்கும்.
“பாறைகள்”சிறுகதையில் உடைய வேண்டிய நேரங்களில் அந்தப் பாறை பறாங்கல்லாய் ஆனாலும் உடையாமல் போனதுதான் அவ்வளவு வருத்தமாக உள்ளது. அதைத் தாண்டி இயல்பு வாழ்க்கையில் நுழைந்த தருணம் இன்னும் வலி கூடியது.
இதில் அப்பாவின் திணிப்பு அம்மாவை அந்த அளவுக்கு மாற்றக்கூடியது என்பதை ஒரு வரியிலேயே எடுத்துக் கூறியுள்ளார்.
பெண் என்பவளின் மனக்கிளைகள் “கிளைத்தல்” சிறுகதையில் வேர் விட்டு முளைக்கிறது. உளவியல் ரீதியாக பெண் மனதினை அணுகி அவள் வாழ்வியலை யதார்த்தமாக கூறியுள்ளார். ஒரு பெண் தனக்கான அங்கீகாரம் அடைய அதைப்பற்றி விவாதம்கொள்ள அவளுக்கென உரிமை மறுக்கப்பட்டு, ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட சமூகத்தில் அவள் படும் துயரங்களை வாழ்க்கை சிக்கல்களை எளிமையான முறையில் பதிவு செய்துள்ளார். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அப்பா அம்மா இருவரும் மனதில் அதிகமாக நிரப்பப்பட்டிருந்தனர். ஆனால், அப்பா மட்டும் அதிகமாய் அன்னியப்பட்டிருந்தார். காரணம் அம்மாவை அவர் நடத்தும் விதம்.

அப்பா என்று மழலை மனம் கமழ அவர் கைப்பிடித்து வந்த மகள், தன் நிலை அறிந்த பின் அவர் அம்மாவிடம் நடந்து கொள்ளும் மாற்றம் அவளை அந்நியப் பட்டே வைத்திருந்தது. அம்மாவும் அவருக்கு ஏற்றார் போல திட்டமிட்டு அவளை அமைத்திருந்தாள். உறவுகளுக்கு இடையில் பிள்ளை தன்னை இழந்தவளாய் நின்றாள்.
“பயண வழியில்” சில இடங்களில் அந்த வலிகளைக் காணலாம்.“ஒரே சமுத்திரத்துல பிறந்தவங்க” மனிதர்கள் என்று அப்பத்தா அடிக்கடி கூறும்.ஒரு குழந்தை கருவுற்ற கணத்திலிருந்து பிறக்கப் போகும் நொடி வரை தாய் அனுபவிக்கும் வலிகளையும்,“பெண்ணிற்கு தெரியும் உயிர்ப்பின் வலி” இதற்கெல்லாம் காரணமான அந்த ஆண்களின் மீது தன் கர்ப்பப்பையை தூக்கி எறிய வேண்டும் என்று வலியின் உச்சகட்டத்தை “சமுத்திரம்” சிறுகதை எடுத்துரைத்திருக்கிறது.
“மடியின் கனத்தை” அவள் கண்ணீரால் அந்தப் பிள்ளையை ரொம்ப நாளைக்கு அப்புறம் குளிப்பாட்டிக் கொண்டிருந்தால் என்ற கடைசி வரியின் போது நாமும் உணரலாம்.
பொம்மை என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது குழந்தைகளுக்குத் தானே தெரியும் அந்த உலகத்தில் கொஞ்ச காலம் நாமும் மறந்துவிட்டு பார்க்கலாம் என்று கூட சில நேரங்களில் தோன்றும். குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களில் கலப்படமில்லாத அன்பு தெரியும். தன் அம்மா தன்னை கொஞ்சுவது போல தன் பொம்மைகளை கொஞ்சி தீர்ப்பார்கள். குழந்தைகளுக்குத் தர இந்த நிஜ உலகத்திடம் என்ன இருக்கிறது…? என்ற கேள்வியை முன்வைக்கிறார். ஆனால் அச்சிறுகதையிலேயே அந்த பதிலையும் கூறியுள்ளார் அம்மா. தன் பிள்ளையிடம் நான் படிக்கப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டே புத்தகங்கள் மத்தியில் அமர்ந்து கொண்டாள்.
நாம நமக்காகத் தானே இருக்கணும் என்ற இந்த அழுத்தமான பதிவு அதில் வரும் கொண்டைக்கார அம்மா மட்டுமல்ல இன்னும் பலர் தம் எண்ணங்களை தமக்கான சிந்தனையை, கட்டுக்குள் வாழும் வாழ்க்கையை, உடைத்து எறிந்து மாற்றிக் கொள்ள நிச்சயம் இயலும்.
இக்கதைகளைப் படிக்கும் போது நம் அனைவரின் நினைவுக்கும் ஏதோ ஒரு பெண் தம்மை அறியாமல் வந்துவிட்டு செல்வதை நிச்சயமாக உணர்வோம்.
