நிகழ் அய்க்கண்
இந்நூலில் பதினேழு தலைப்பிலான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இந்நூலுக்கு அணிந்துரையை தோழர் ஜி.இராமகிருஷ்ணனும், வாழ்த்துரைகளை தோழர்கள் க.கனகராஜும், ச.தமிழ்ச்செல்வனும் வழங்கியுள்ளனர். பக்கவிரிவு அஞ்சி, அக்கட்டுரைகளில் சிலவற்றினை மட்டும் நூல்அறிமுகப்பகுதியில் காணலாம்.

வ.உ.சிதம்பரனாரும் தொழிற்சங்க இயக்கமும் பற்றி நூலாசிரியர் கூறும்போது, 1905 வங்கப்பிரிவினையையொட்டி, மக்களிடையே ஆங்கிலேயருக்கு எதிரான எழுச்சி ஏற்பட்டது. அச்சமயம் சுதேசிஇயக்கம் உருவாகி அந்நியப்பொருட்கள் புறக்கணிப்பு போராட்டம் நாடுமுழுக்க பரவலாகியது. ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் தொழில் நிறுவனங்களை துவங்க முடிவெடுக்கப்பட்டு, அதனடிப்படையில் 1906ல், வ.உ.சி ‘சுதேசி ஸ்டீம் நேவிகெஷன் லிமிடெட்’ எனும் பெயரில் பதிவுசெய்து, இரண்டு கப்பல்களை வாங்கி இலங்கைக்குச் சரக்குகளையும், பயணிகளையும் அனுப்பினார்.
1908 பிப்ரவரி 8ல், இவரும், சுப்பிரமணியசிவாவும் சேர்ந்து ‘கோரல் மில்’ தொழிலாளர்களின் கூலிஉயர்வு, வாரவிடுமுறை, பண்டிகைக்கால விடுமுறைக்காக அந்நிர்வாகத்திற்கெதிராகப் போராடினர். இப்போராட்டமானது, வெறும் பொருளாதாரத்திற்கான போராட்டம் மட்டுமின்றி, அரசியல்போராட்டமாகவும் இருந்தது. போராட்டம் தீவிரமடைந்ததையொட்டி, 1908 மார்ச் 8ல் கோரல் நிர்வாகம் தொழிலாளர் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வுகண்டது.
தொழிலாளர் போராட்டங்களையும், விடுதலைப்போராட்டங்களையும் ஒடுக்க நினைத்த ஆட்சியாளர்கள் வ.உ.சி யையும், சிவாவையும் கைதுசெய்து அவர்கள்மீது ராஜதுரோக வழக்கினைப் பதிவுசெய்து சிறையிலடைத்தனர். போராட்டம் மேலும் வலுவடைந்த நிலையில், 1912ல், தூத்துக்குடி நகரத்திற்குள் வ.உ.சி நுழையக்கூடாது எனவும், வழக்கறிஞர் தொழிலை நடத்தக்கூடாது என்கிற உத்தரவின் பெயரில், விடுதலையானார். 1913-1920 வரை வ.உ.சி. சென்னையில் தங்கி மளிகைக்கடை ஒன்றினை நடத்திக்கொண்டே, திரு.வி.க, சிங்காரவேலர், சர்க்கரைச்செட்டியாருடன் சேர்ந்து தொழிற்சங்கப்பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
1920ல் சென்னையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், தொழிலாளர்களின் ஊதியம், வேலை நேரம், சங்கஉரிமைகள் குறித்தப் பிரச்சினைகளை முன்வைத்து, தீர்மானம் கொண்டுவரக் காரணமானார். 1919ல் பி அண்ட் சி மில்லில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. அதனையும் முன்னின்று மேற்கூறிய நால்வரே நடத்தினர்.
1927ல் சேலம் காங்கிரஸ் மாநாட்டிற்கும், 1933ல் காந்தியார் காரைக்குடிக்கு வந்தபோதும் வ.உ.சியே தலைமை தாங்கினார். அதன்பின்னர் 1920-1924 கோயம்புத்தூரிலும், 1924-1932 கோவில்பட்டியிலும், 1932-1936 தூத்துக்குடியிலிருந்தும் தொழிற்சங்கப்பணியாற்றி வந்தார். ‘தாமிரபரணி நமது இறையாண்மை நமது உரிமை’ எனும் தலைப்பிலான கட்டுரையில், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் 120 கி.மீ தூரம் பாய்ந்தோடும் தாமிரவருணி ஆறானது, 86,000 ஏக்கர் விளை நிலங்களை உயிர்பித்து, 70 லட்சம் மக்களின் தாகம் தணிக்கிறது. அப்பேற்பட்ட நீரானது, விற்பனைச்சரக்காக மாறி கார்ப்பரேட்டுகளின் லாபநோக்கிற்களாகி வருவதை கவலையுடன் பகிர்கிறார். தாமிரவருணி வடிநிலப்பகுதியில், தண்ணீர் தேவையோ 2748.02 மில்லியன் கனமீட்டர். ஆனால் கிடைப்பதோ 2120 மில்லியன் கனமீட்டர். 628 மில்லியன் கனமீட்டர் பற்றாக்குறையை வைத்துக்கொண்டு குளிர்பானக் கம்பெனிகளுக்கு தண்ணீரை வழங்குவது மக்களுக்கு விரோதமானது என்கிறார்.
‘பொதுமுடக்கமும் வாழ்விழந்த தொழிலாளர்களும்’ எனும் கட்டுரையில், கொரோனா இரண்டாவது அலை எவ்வாறு சுனாமியைப்போல தாக்கிக்கொண்டிருக்கிறதெனவும் இதனால், சென்னையில் 20-30 சதவீத சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டிருப்பது; 1500 ஆலைகள் பாதிக்கப்பட்டிருப்பது; 30 சதவீத தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதினையும் விவரிக்கிறார். இப்படியான சூழலில், மூலப்பொருட்களின் விலைஉயர்வும் சேர்ந்துகொண்டு முறைசாராத் தொழிலாளர்களை சரமாரியாக வதைப்பதையும் எடுத்துரைக்கிறார். இந்தியத்தொழிலாளர் சந்தையில், 91 சதவீத முறைசாரத் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கென ‘ஒழுங்கமைக்கப்படாத தொழிலாளர் சமூகப்பாதுகாப்புச்சட்டம்’ இன்னமும் செயல்படுத்தப்படாமல், கடும் சுரண்டலுக்குள்ளாகிவரும் அவலத்தினை பதிவுசெய்கிறார்.
‘தோழர் நல்லசிவன்; பின்பற்றத்தக்க வாழ்க்கை’யெனும் கட்டுரையில், 1922 பிப்ரவரி 22ல் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள பிரம்மதேசத்தில் பிறந்த நல்லசிவன், 1940ல் தனது சொந்த ஊரில், தேசிய வாலிபர் சங்கத்தினை ஆரம்பித்து, அரசியல் வாழ்வினைத் துவக்கினார். அப்போது, நெல்லை சதி வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையிலிருந்த தோழர் மீனாட்சிநாதன், தோழர் நல்லசிவனை, பாபநாசம் பஞ்சாலைத் தொழிலாளர் சங்கப்பணிகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டார். 1943ல் பாஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக தோழர் பி. இராமமூர்த்தியும், துணைச்செயலாளராக தோழர் நல்லசிவனும் பொறுப்பேற்றுச் செயல்பட்டுவந்தனர்.
1946ல் நடந்த தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில் இவர்களினது தொழிற்சங்கம் வெற்றிபெற்றது. இதனையொட்டி, நிர்வாகத்தின் அடக்குமுறையும், நிர்வாகத்திற்கு ஆதரவான யூனியனின் தாக்குதலும் தீவிரமானது. தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்க நினைத்த போலிசார், துப்பாக்கிச்சூட்டின் மூலம் நான்கு தொழிலாளர்களின் உயிர்களைப் பறித்தனர். போலிசாரின், பொய்யான குற்றச்சாட்டின் பேரில் நல்லசிவன் கைதுசெய்யப்பட்டு சிறைக்குச்செல்கிறார். 10 மாத சிறைத்தண்டனைக்குப்பிறகு விடுதலையாகிறார். 1948ல் கட்சி தடை செய்யப்படுகிறது. 1949ல் நெல்லை சதிவழக்கில் மீண்டும் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுகிறார்.
கட்சிக்கான தடை நீங்கிய பிறகு, 1954ல் மாவட்ட ஊராட்சிமன்றத்திற்கும், 1978ல் சட்ட மேலவைக்கும், 1989ல் மாநிலங்களவைக்கும் உறுப்பினராகி சேவையாற்றினார்.. அதுபோல, கட்சியில் 1957ல் மாகாண கவுன்சிலுக்கும், 1964ல் மாநிலக்குழுவுக்கும், 1968ல் மாநிலச்செயற்குழுவிற்கும் உறுப்பினரானார். அதன்பின்னர், 1978ல் சி.ஐ.டி.யூ மாநில இணைச்செயலாளராகி, பின்னர் 1981 முதல் 1994 வரை கட்சியின் மாநிலச்செயலாளராகவும் இருந்துவந்ததைக் குறிப்பிடுகிறார். ‘கர்த்தர் கம்யூனிஸ்டாக மாறிய தருணம்’ எனும் கட்டுரையில், 1948 தூத்துக்குடி மாவட்டம் பண்ணையூருக்கு, ஆர்.எஸ். ஜேக்கப், பள்ளிவாத்தியாராகச் சென்றார்.
அப்பள்ளியில், சாதிவேற்றுமையோடு வாழ்ந்து பழக்கப்பட்ட பத்துக்கும் குறைவான மாணவர்களைச் சமத்துவத்தோடு அமரச்செய்து, இருவாசல் முறையை ஒழித்து, சுற்றுப்புற ஊர்களைச்சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களை தன் பள்ளிக்கூடத்தில் சேர்த்து, அவர்களின் படிப்புக்குத் தடையாக இருந்த அவ்வூர் பண்ணையாரை எதிர்த்து, அவரது கொலைமுயற்சிக்குத் தப்பி, ஊரையே அடிமைத்தனத்தால் தன் கட்டுக்குள் வைத்திருந்த பண்ணையாரின் சுரண்டலை அம்பலப்படுத்திய வாத்தியாரின் பள்ளிக்கூட அனுபவம் அளப்பரியது.
இவர், பொது உடைமைச் சித்தாந்தத்தின் மீது கொண்டிருந்த ஈடுபாட்டால், அன்றைக்கு இயங்கிவந்த தோழர்களுடன் அறிமுகங்கள் இல்லாமலேயே நட்பு பேணியிருக்கிறார். அப்போது, நடந்த ஒரு ரெயில் கவிழ்ப்புச் சம்பவத்தில் (நெல்லை சதி வழக்கு), 200 கம்யூனிஸ்ட் தோழர்கள் கைதுசெய்யப்பட்டு, அவர்களில் வாத்தியார் ஜேக்கப் உட்பட 97 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இவருக்கு டைரி எழுதும் பழக்கமுண்டு, அந்த டைரியில், அன்றாடம் தான் செய்துவந்த சேவைகளையும், உதவிகளையும் பதிவுசெய்து வைத்திருந்தார். அவ்வாறாக, எழுதிவைத்திருந்த அந்த நான்கு டைரிகளையும் வழக்குக்காக கைப்பற்றிய, போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துவிட்டனர்.
நீதிபதி அவற்றினைப்படித்துவிட்டு, ஜேக்கப் வாத்தியாரின் நற்செயல்களை அடிப்படையாக வைத்து விடுதலை செய்ததை விவரிக்கிறார்,ஜார்ஜ் டிமிட்ரோ; கம்யூனிஸ்ட் அகிலமும் பாசிசமும் எனும் தலைப்பிலான கட்டுரையில், பல்கேரியாவில் பிறந்த டிமிட்ரோவ், தனது 20 வயதில் பல்கேரியத் தொழிலாளர் சமூக ஜனநாயகக்கட்சியில் சேர்ந்து, பல்வேறு பொறுப்புக்களை வகித்துள்ளார்.. 1921ல் நடந்த அகிலத்தின் மூன்றாவது மாநாட்டில் கலந்துகொண்டு, அகிலத்தின் கெளரவத் தலைவரானார்.
1935ல் நடந்த அகிலத்தின் 7 வது மாநாட்டில் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டு, ஐக்கியமுன்னணித் தந்திரம் எனும் கோட்பாட்டை முன்வைத்தார். முதல்அகிலமானது, (1864-1876) மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவரின் அபார பனியின் மூலம், சித்தாந்த ரீதியாகவும், ஸ்தாபன ரீதியாகவும் நவீனத் தொழிலாளர் இயக்கத்திற்கு அடித்தளமிட்டது. இரண்டாவது அகிலமானது,(1889 – 1914) ஒரு மார்க்சிஸ்ட் அமைப்பாகவே துவங்கியது. ஆனால் ஏகாதிபத்தியம் வளர்ச்சியடைந்ததன் மூலம், அகிலத்தின் தலைமையானது சந்தர்ப்பவாதத்திற்கும், ஊழலுக்கும் இரையானது. மூன்றாவது அகிலம் (1919-1943) புரட்சிகர மார்க்சிய சித்தாந்ததை தொழிலாளி வர்க்க இயக்கத்தில் நிலை நிறுத்தியது.

பாசிசத்தினை எதிர்கொள்ளும் விதமாக தொழிலாளர் வர்க்கம் எப்படிச்செயல்பட்டு முறியடிக்க வேண்டுமெனவும், பாசிசத்தின் தன்மைகள் பற்றியும் டிமிட்ரோவ் கூறும்போது, முதலாளித்துவ பொது நெருக்கடி அதிகரித்து வருகையில், அதற்கு எதிரான, புரட்சியைத் தவிர்ப்பதற்காக முதலாளித்துவம் பாசிசத்தில் புகலிடம் தேடுகிறது எனவும், நிதி மூலதனத்தின் கடைக்கோடி பிற்போக்கும், கடைக்கோடி இனவெறியும், கடைக்கோடி ஏகாதிபத்தியத்தன்மையும் கொண்ட பகுதிகளின், பகிரங்கமான, பயங்கரவாத, சர்வாதிகார முறையே பாசிசம் என்கிறார். ‘விடுதலைப்போராட்டமும் கம்யூனிஸ்ட்களும்’ எனும் கட்டுரையில், இந்தியச்சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு நிலைமைகளை ஆராய்ந்து, இந்திய மக்களின் வாழ்வியல் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கான வழிகளைக் காணமுயன்ற முதல் கம்யூனிஸ்ட் காரல்மார்க்ஸ்தான்.
1850களில் இந்திய நிலைமைபற்றி, அவர் கூறும்போது, ஆங்கிலேயர்கள் உள்நாட்டு பாரம்பரிய தொழிலை அழிப்பது; கிராமங்களின் பொருளாதார வாழ்க்கையை குலைத்து, வேளாண்மையில் நெருக்கடியை ஏற்படுத்தியது; இரக்கமில்லாத வரிவசூலை மேற்கொண்டது; கிழக்கிந்தியக் கம்பெனிமூலம் இந்தியவளங்கள் கொள்ளைபோனது; என்பதாக இருந்தது மட்டுமின்றி, முதலாளித்துவத்தைக் கட்டமைக்க, இரயில்வே மற்றும் சாலைப்போக்குவரத்து வசதிகளை நலன்கருதியே ஏற்படுத்தியது என்கிறார்.
1920 அக்டோபர் 17 ல், தாஷ்கண்டில்’ எம்.என்.ராய் உள்ளிட்ட ஏழு பேர்களுடன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி’ உருவாக்கப்படுகிறது. அச்சந்திப்பில், ’இந்திய நிலைமைகளுக்கு உகந்த’ ஒரு கட்சித்திட்டத்தை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டது. கட்சி உருவானதிலிருந்தே ‘பூரண சுதந்திரம்’ என்ற முழக்கத்தை எழுப்பி வந்தது. கம்யூனிஸ அகிலத்தின் உதவியோடு, எம்.என்.ராய் இந்தியாவின் பல கம்யூனிஸ்ட் குழுக்களையும் தொடர்புகொண்டதுடன், 1922-23 ல் பெர்லினிலிருந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடாக‘ இந்திய விடுதலையின் முன்னணிப்படை’ என்கிற இதழையும் கொண்டுவந்தார்.
மாஸ்கோவிலுள்ள ‘கீழைநாடுகளின் உழைப்பாளிகளுக்கான பல்கலைக்கழகத்தில்’ மார்க்சியம் பயின்று இந்திய நாட்டிற்குள் திரும்பியவர்கள் சிலரை பிரிட்டிஷ் அரசு கைதுசெய்து அவர்களின் மீது ‘பெஷாவர் சதிவழக்கினை’ புனைந்தது. இதோடு நில்லாமல், கம்யூனிஸ்ட் இயக்கம் வேகமாக பரவியதினை கட்டுப்படுத்தும் நோக்கில் 1924ல் ’கான்பூர் சதி வழக்கினையும்’ தொடுத்தனர். 1925ல் நாட்டில் இயங்கிவந்த பல குழுக்களையும் ஒன்றாக இணைத்து கான்பூரில் டிசம்பர் 26-28 தேதிகளில் நடந்த கட்சியின் மாநாட்டில் கட்சியின் அமைப்புச்சட்டமும், கட்சியின் குறிக்கோளும் நிறைவேற்றப்பட்டன.
1920ல் தொடங்கிய ஏ.ஐ.டி.யு.சி, 1926ல் மூன்று லட்சம் உறுப்பினர்களுடன், 200 தொழிற்சங்க அமைப்புக்கள் உருவாகியிருந்தன. இக்காலத்தில் கம்யூனிஸ்டுகள் சட்டபூர்வமாக செயல்படுவது தடைசெய்யப்பட்டிருந்தது. அதன்பின்னர், கம்யூனிஸ்ட் கட்சியானது, பாட்டாளி வர்க்கப்புரட்சித்தன்மையை பாதுகாத்துக்கொண்டே தொழிலாளர்கள்- விவசாயிகள் கட்சி என்ற அமைப்பை உருவாக்கிச்செயல்பட்டனர். இக்கட்சியானது நாடுமுழுக்க மக்களைத் திரட்டி, போராட்டங்களையும், வேலைநிறுத்தங்களையும் தொடர்ந்து நடத்திவந்தது.
கம்யூனிஸ்டுகளை ஒடுக்குவதன் மூலம் எதிர்ப்பினைச் சமாளிக்க எண்ணிய, பிரிட்டிஷாரால் எடுக்கப்பட்ட மற்றுமொரு நடவடிக்கைதான் ‘மீரட் சதி வழக்கு’. தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள் மத்தியில் கம்யூனிஸ்ட்டுகள் ஆற்றிய ஏகாதிபத்திய எதிர்ப்பரசியல் பணிக்கு அளிக்கப்பட்ட புகழ்மாலையாக மீரட் சதி வழக்கு விசாரணை அமைந்திருந்தது. குற்றவாளிக்கூண்டில் நின்றவர்கள் நீதிமன்றத்தை கட்சியின் செயல்திட்டத்தினைப் பரப்பும் மேடையாகப் பயன்படுத்தினர்.
1933 டிசம்பரில் கட்சியின் அகில இந்திய மாநாடு கல்கத்தாவில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நாடுமுழுக்க கட்சியைக் கட்டும் பணி தொடங்கியது. இதற்கிடையே 1934ல் கட்சி தடைசெய்யப்பட்டது. கம்யூனிஸ்ட் அகிலத்தின் 7 வது காங்கிரஸ் அறிக்கையின் படி, 1934ல் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி துவக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியினது எகாதிபத்திய எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு இந்தமேடையை பயன்படுத்திக்கொண்டது..
1939ல், இரண்டாம் உலகப்போர் மூண்டது. கட்சியானது மக்களைத்திரட்டி, பேரணி ஒன்றினை நடத்தி யுத்தத்திற்கு எதிராக அறைகூவல் விடுத்தது. யுத்தத்திற்குப்பிறகு வளர்ந்துவந்த வெகுஜன இயக்கங்களைத்தொடர்ந்து 1946ல் கட்சியானது ‘இறுதித்தாக்குதல்’ எனும் தீர்மானத்தை நிறைவேற்றி, நாடுமுழுக்க பல்வேறு போராட்டங்களை நடத்தி விடுதலைப்போராட்டத்திற்கு முக்கிய பங்காற்றியிருக்கின்றது.
