ச.தமிழ்ச்செல்வன்
விகடன் இணைய இதழில் கவிஞர் நந்தலாலா எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பு நூல்தான் “ஊறும் வரலாறு”.திருச்சி மாநகரத்தையும் அதைச்சுற்றியும் உள்ள பகுதிகளின் அடையாளங்களாகத் திகழும் பல ஆளுமைகள்,சில நினைவில்லங்கள்,சில நிகழ்வுகள் என விரிகிற இக்கட்டுரைகள் திருச்சியை மிகச்சிறப்பாக அறிமுகப்படுத்துவதோடு தமிழக அரசியல் பண்பாட்டு வரலாற்றின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தையும் நமக்குத் தருகின்றன.வாசகரோடு நேரடியாகப் பேசும் ஒரு மொழிநடை இக்கட்டுரைகளை மேலும் சுவைமிக்கவையாக மாற்றுகின்றன.

“தமிழகத்தின் பண்பாட்டுத் தலைநகரம் மதுரை” என்று நம் மனதில் ஆழப்படிந்திருக்கும் படிமத்தை இக்கட்டுரைகள் உண்மையாகவே அசைத்துவிட்டன. வரலாற்றுரீதியாகவும் புவியியல்ரீதியாகவும் தமிழ்நாட்டின் தலைநகராக இருக்கத் தகுதியான நகரம் திருச்சிதானே என்கிற நினைப்பை நோக்கி நந்தலாலா நம்மை நகர்த்திவிடுகிறார்.
ஸ்தல புராணங்களை எழுத்தாளர்களைப்போல ‘இந்தக் கோவில் இன்ன நூற்றாண்டில் இன்ன மன்னரால் எழுப்பப்பட்டது, இத்தனை நாயன்மார்களால் பாடல் பெற்ற ஸ்தலம்’ என்கிற தகவல்களை அடுக்கிச் செல்லும் கட்டுரைகள் அல்ல இவை.நந்தலாலா நாடறிந்த ஒரு பண்பாட்டு அரசியல் முன்னோடி.கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்தின் தெருக்களில் முற்போக்குப் பண்பாட்டு விதைகளைத் தூவுகின்ற பெரும் பேச்சாளர்.அந்தப் பண்பாட்டுக்கடமையின் தொடர்ச்சியாகவே இந்தக் கட்டுரைகளும் துலங்குகின்றன.
சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி ஆன கதையைச் சொல்லும் முதல் கட்டுரையை அவர் துவக்கும்போதே ‘நவீன தமிழ்நாட்டின் வரலாற்றில் வேறு பெருநகரங்களுக்கு இல்லாத ஒரு பெருமை திருச்சிக்கு உண்டு. ஆம்.. எந்த மதச்சண்டையும் சாதிக் கலவரமும் நடக்காத தமிழகத்தின் ஒரே பெருநகரம் திருச்சிதான் என்கிற பெருமைதான் அது.” என்று ஒரு பண்பாட்டு அரசியல் குறிப்போடு ஆரம்பிக்கிறார்.
தமிழ்நாட்டில் கட்டப்பட்ட முதல் பள்ளிவாசலான கல்லுப்பள்ளி பற்றியும் ஹஜ்ரத் நத்ஹர் வலி தர்கா என்கிற தர்காவையும் பற்றி அறிமுகம் செய்யும் கட்டுரையின் மையப் புள்ளியாக அமைந்திருப்பது “மன்னர்களின் வாள் வலிமையால் இஸ்லாம் இங்கு நிலைநாட்டப்பட்டது என்கிற கருத்து தவறானது. மன்னர்களின் படையெடுப்புக்கு முன்பே வணிகர்கள் மூலமாக அமைதியான வழியில் இஸ்லாம் தென்னகத்துக்கு வந்து சேர்ந்துவிட்டது. அதன் சாட்சியாக கி.பி.7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட திருச்சியின் கல்லுப்பள்ளி திகழ்கிறது” என்று கவிஞர் நந்தலாலா முன்னெடுக்கும் வரலாற்றுக் கோணம் இன்றைய அர்சியல் சூழலில் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது?அக்கட்டுரையில் பொருத்தமான இடத்தில் நேருவின் வாசகங்களை வைத்துத் தன் வாதத்துக்கு வலுச்சேர்க்கிறர். ‘நேரு தன் டிஸ்கவரி ஆப் இந்தியா’ புத்தகத்தில், ஒரு அரசியல் சக்தியாக இஸ்லாம் பாரதத்துக்குள் வருவதற்கு சில நூற்றாண்டுகள் முன்பே, இஸ்லாம் ஒரு மார்க்கமாக தென்னிந்தியாவை அடைந்துவிட்டது என்கிறார் என்று நந்தலாலா குறித்து வைக்கிறார்.
வீரமாமுனிவருக்கும் திருச்சிக்குமான உறவை விரித்துச் சொல்லும் கட்டுரை பல அரிய தகவல்களைக் கொண்டுள்ளது…வீரமாமுனிவர் தமிழுக்குத் தந்த தேம்பாவணி எனும் காப்பியம் எழுதப்பட்ட கதையை நந்தலாலா சுவைபட விளக்குவதோடு ‘சதுரகராதி’யை வீரமாமுனிவர் எழுதிய விதம் குறித்தும் விளக்கியுள்ளது முக்கியம்.
புகழ்பெற்ற ஓவியர் ஆதிமூலம் பிறந்ததும் திருச்சியில்தான் என்று ஆரம்பிக்கும் ஓவியர் ஆதிமூலம் பற்றிய கட்டுரை “கோடுகளின் மூலமும் வண்ணங்களின் ஆதியும்” என்கிற கட்டுரையை வாசித்தபோது மறைந்த கலை விமர்சகர் தேனுகாவே உயிர்பெற்று வந்து எழுதிவிட்டாரோ என்று தோன்றியது. அத்தனை நுணுக்கமான கட்டுரை அது.
சோழன் கரிகாலன் பற்றிய கட்டுரையும் கல்லணை பற்றிய கட்டுரையும் பொருத்தமுடன் அடுத்தடுத்து வைக்கப்பட்டுள்ளன. காலனிய காலத்தின் பொறியாளர்களால் இடிக்க முடியாத வலுவுடன் நிமிர்ந்து நின்ற கல்லணையின் ரகசியத்தைக் கண்டு உலகுக்குச் சொன்ன ஆர்தர் காட்டன் பற்றி நந்தலாலா எழுதியுள்ள பகுதிகள் ஒரு பொறியாளருக்குண்டான ஞானத்துடன் விவரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடுமையான உழைப்பையும் ஆய்வையும் செலுத்தாமல் இவற்றை எழுதியிருக்க முடியாது.
காந்திஜி அடுத்தடுத்துத் திருச்சிக்கு வருகை தந்த தருணங்களை வரலாற்றுக்குறிப்புகளோடு விளக்கும் பகுதியை காந்திஜி திருச்சிக்கு வந்த நாட்களில் ஒரு நாளை ‘காந்தி நாளாக’ திருச்சி மாநகரம் ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும் என்கிற கோரிக்கையுடன் முடிக்கிறார். இன்றைய சூழலில் இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கோரிக்கை என்று படுகிறது.

திருச்சியில் வாழ்ந்து திருச்சிக்குப் பெருமை சேர்த்த சில ஆளுமைகளைப்பற்றி நந்தலாலா எழுதியுள்ள 15 கட்டுரைகள் காய்தல் உவத்தலின்றி அந்த ஆளுமைகளின் அரசியல் மற்றும்,கொள்கைச் சார்புகளைத் தாண்டி அவரவர் துறையில் அவற்றுக்கேயான மானுட அறத்துடன் அவர்கள் வாழ்ந்ததைப் பேசுகின்றன.
எழுத்தாளர் குமுதினி குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரை என் உள்ளம் கவர்ந்த கட்டுரையாக உயரத்தில் நிற்கிறது. நான் தேடிக்கொண்டிருக்கும் எழுத்தாளர் கொனஷ்டை பற்றிய குறிப்பும் புகைப்படமும் அதில் கிடைத்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி எனக்கு. அந்தக் காலத்தில் இப்படி ஒரு வாழ்வை வாழ முடிந்த குமுதினி மனதில் உயர்ந்து நிற்கிறார்.
வைதீகத் தடைகளை உடைத்த மாபெரும் தலைவராக டி.எஸ்.எஸ்.ராஜனும் நாடகத்துக்கு இடையே பெரியாரைப் பேச வைத்த நடிகவேளின் கம்பீரமும் ராஜம் கிருஷ்ணனின் கதையைச் சொல்ல வந்த கட்டுரையை மணலூர் மணியம்மாவின் கதை சொல்லும் கட்டுரையாக மாற்றிய பாங்கும் தியாகராஜ பாகவதர் ஏழ்மையில் வாடியதாகச் சொல்வது பொதுப்புத்தியின் புனைவு என்று இரண்டு வார்த்தைகளில் நந்தலாலா கடந்து செல்லும் லாவகம் என மிரட்டுகின்றன இக்கட்டுரைகள்.
ஆளுமைகளை அடுத்து நம்மை ஈர்ப்பவை திருச்சிக்கு ரயில் வந்த கதையும் மொழிப்போராட்டத்துக்குத் திருச்சி தலைமை ஏற்ற வரலாறும் 75 ஆண்டுகளாக இசையோடு வாழும் கிளாரினெட் கலைஞர் ஏகேசி நடராஜனின் சந்திப்பும் திருச்சியில் அமைந்த அகில இந்திய வானொலியும் வானொலி மாத இதழும் எனப் பல.
எல்லாவற்றுக்கும் மேலாக மிக முக்கியமன கட்டுரையாக அமைந்திருப்பது “துறவியின் திராவிட மாளிகை.” இது ஒரு கட்டிடத்தின் கதையாக அல்லாமல் தமிழ்நாட்டின் திசை வழியைத் தீர்மானித்த “பெரியார் நாட்கள்” பற்றிய வரலாற்று பதிவாகவே அமைந்து விட்டது.
ஸ்ரீரங்கம் ரங்கராஜனாகிய எழுத்தாளர் சுஜாதாவைப் பற்றிய 34 ஆவது கட்டுரையுடன் நூல் நிறைவடைகிறது. இன்னும் 30 கட்டுரைகள் எழுத முடியும் என்று முன்னுரையில் நந்தலாலா குறிப்பிட்டுள்ளார். அவற்றை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். பண்பாட்டு அரசியலை முன்னெடுக்கும் த.மு.எ.க.ச.வின் தலைவர்களில் ஒருவரான அவருடைய எழுத்துப்பயணம் தொடர வாழ்த்துகிறேன்.