மயிலம் இளமுருகு
கல்வி ஒன்றைத் தவிர வேறு எதுவும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தாது. முறையான நூலகங்கள் இல்லையென்றால் கல்வியிலும் சரி, அறிவுச் செல்வத்திலும் சரி நாடு பின் தங்கித்தான் இருக்கும். (எஸ்.ஆர்.ரங்கநாதன்)
ஒரு நாட்டின் அறிவுச் செல்வமாக இருப்பது நூலகமாகும். பழங்காலத்திலிருந்தே தன் மக்களுக்கு அறியாமையைப் போக்க பல முயற்சிகளை அரசர்கள் மேற்கொண்டனர். ஆங்கிலேயர் வருகை, காகிதம் கண்டுபிடித்தமை, நூல் உருவாக்கம் பெற்றமை என இவற்றினூடாக நாம் நூலகம் தோன்றிய வளர்ச்சி வரலாற்றினை அறிந்து கொள்ளலாம். ஒரு நாட்டிலிருந்த அரசன் மற்ற நாடுகளுக்கு படையெடுத்து அந்நாடுகளிலுள்ள செல்வ வளங்களைச் சூறையாடிக் கொண்டு சென்றதை நமக்கு கற்பிக்கப்பட்ட, கற்பிக்கும் வரலாறுகள் உணர்த்துகின்றன. பல்வேறு காலங்களில் பல மன்னர்கள் போர் தொடுத்து தங்கம், விலை மதிப்புடைய செல்வங்கள், கோயில்களிலிருந்த செல்வங்களைக் கொள்ளை அடித்துச் சென்றதை நாம் அறிவோம்.

யாழ்ப்பாணம் நூலகம் குறித்து நூல் எழுதியவர்களாக வி.எஸ்.துரைராஜா, நீலவண்ணன், சுந்தர் கணேசன் மற்றும் ஊடகவியலாளர் சி.சோமிதரன் (ஒரு ஆவணப்படம்) போன்றோர் உள்ளனர். இவர்களின் செயல்பாட்டினால் யாழ்ப்பாண நூலகம் குறித்து நாம் பலவற்றை அறிந்துகொள்ள முடிகின்றது.
நூலகத் தோற்றம் குறித்து பார்க்கிறபோது, 1933 ஆம் ஆண்டு கே.எம்.செல்லப்பா என்பவர் ஒரு இலவச தமிழ் நூலகம் அமைக்க வேண்டுகோள் விடுத்தார். இதன் தொடக்கமாக மக்கள் அனைவரும் நூலகம் அமைக்க வேண்டுமென்ற கருத்தினை வழிமொழிந்தனர். 1934 ஆகஸ்ட் 1-ஆம் தேதி யாழ்ப்பாணத்தின் மருத்துவமனைத் தெருவில் ஒரு வாடகைக் கட்டிடத்தில் 844 புத்தகங்களையும் 30 இதழ்களைக் கொண்டு நூலகம் திறக்கப்பட்டது. அருட்தந்தை லாங் யாழ்ப்பாணம் நகரில் ஒரு மத்திய நூலகத்தையும், யாழ்ப்பாணம் பகுதியிலுள்ள நகரங்கள், கிராமங்கள் அனைத்திலும் கிளை நூலகங்களையும் தொடங்குவதற்கு திட்டங்களை வகுத்தார். இவற்றோடு நடமாடும் நூலகங்களை உருவாக்கவும் திட்டமிட்டார்.
யாழ்ப்பாணத்தில் 1953-இல் நிரந்தர கட்டிடம் கட்ட ஆரம்பித்தனர். ஏனெனில் புத்தகங்கள் அதிகமாகின. இடப்பற்றாக்குறை ஏற்பட்டு நூலகம் பல இடத்திற்கு மாற்றப்பட்டது. 1959 அக்டோபர் 11 இல் நூலகம் திறக்கப்பட்டது. 1960 இல், 16000 புத்தகங்களையும் பல அரிய கையெழுத்துப் பிரதி, ஓலைச் சுவடி, இதழ்த் தொகுப்பு என பலவற்றைப் பெற்றிருந்தது நூலகம்.
1980 ஆம் ஆண்டில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்குமிடையே ஏற்பட்ட பதட்டமான சூழலில் இனமோதல் வெடித்தது. இது பேரழிவை உண்டாக்கியது. 1981-ஜுன் 1 இல் சிங்களப் போலிஸ் படைகள் யாழ்ப்பாண நூலகத்திற்கு தீ வைத்தனர். நூலகம் மட்டுமின்றி ஒரு இந்துக்கோவில், தமிழ் தினசரியான ஈழநாடு பத்திரிக்கை அலுவலக இயந்திரங்களும் தாக்கப்பட்டன. அரசாங்கம் இத்தாக்குதல் குறித்து விசாரணை எதையும் செய்யவில்லை. நூலகம் தீக்கிரையான செய்தி கேட்டு மறுநாள் பலர் அதிர்ச்சிக்குள்ளாகினர். குறிப்பாக கல்வியாளர் அருட்தந்தை டேவிட் என்பவர் அதிர்ச்சியில் உயிரிழந்தார். இத்தாக்குதல் குறித்து தினசரி நாளிதழ்கள் செய்தி வெளியிட தயக்கம் காட்டின.
‘மீண்டும் யாழ்ப்பாணம் எரிகின்றது’ என்ற நூலில் நீலவண்ணன் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்:-
‘அன்று இரவு 10 மணி போல நூலகத்திற்குள் நுழைந்த கொடியவர்கள் காவலாளியைத் துரத்தியடித்துவிட்டு நூலகப் பெருங்கதவைக் கொத்தித் திறந்து உள்ளே புகுந்து அட்டூழியங்கள் புரிந்தனர். 97 ஆயிரம் கிடைத்தற்கரிய நூல்கள் மற்றும் ஓலைச் சுவடிகளுக்குப் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தி எரித்து அழித்தனர். நூலகத்தினுள் சாம்பல் குவியல்களே எஞ்சிக் கிடந்தன. அந்தச் சாம்பல் குவியல்களுக்குள்ளே எரியாத நூல்கள் ஏதேனும் எஞ்சிக் கிடக்குமோ என்ற நப்பாசையில் நூலக உதவியாளர்கள் சு.யோ.இமானுவேலும், அ.டொன்பொஸ்கோவும், ச.கந்தையாவும் சாம்பல் குவியல்களைக் கிளறிக் கொண்டிருந்த நிலையைக் காண முடிந்தது. நூலகம் கருகிக் காரை பெயர்ந்து கிடந்தது’.
20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய நூலக அழிப்பாக யாழ்ப்பாண பொது நூலகத்தை நாம் பார்க்க முடிகின்றது. இந்திய அளவிலும் உலக அளவிலும் நிகழும் பண்பாட்டு அத்துமீறல்களுக்கு எதிராகக் குரலெழுப்புவர்கள் இன்னும் அதிகமாக இருந்திருக்கவேண்டும்.
கா.சிவதம்பி அவர்கள் ‘தமிழர்கள் ஒரு அறிவாண்மை மிக்க பாரம்பரியத்தை இழந்துவிட்டனர்’ என்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பேரா.வீ.அரசு அவர்கள் ‘மிக மிக அரிய மற்றும் பழமையான நூல்கள் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் மட்டுமே இருந்தன. அங்கிருந்த பல நூல்களின் படிகள் வேறெங்கும் இல்லாதவை. அந்த நூலகம் தீக்கிரையானதுடன் அவைகளும் நிரந்தரமாக அழிந்துவிட்டன’ என எடுத்துரைக்கிறார்.
இந்நூலகம் எதற்காகத் தாக்கப்பட்டது என்று தேடியபோது பின்வரும் காரணங்கள் கிடைத்தன. அவை,
- நூலகங்கள் ஒரு பண்பாட்டின் அடையாளமாகப் பார்க்கப்பட்டதால் அவை குறிவைத்துத் தாக்கப்பட்டன. இது ஒரு இன மற்றும் மொழிவழிப்பட்ட மக்களின் பண்பாட்டுவழி நினைவை அழிப்பதற்கான முனைப்பாகவே பார்க்கப்படுகின்றது.
- யாழ்ப்பாண நூலகத்தைப் பயன்படுத்திய மக்கள் சுயசிந்தனையுடன், விழிப்புணர்வுடனும் இருந்ததும் காரணமாக அமைந்துள்ளது.
- சிறுபான்மையினரான தமிழர்கள் அரசாங்க வேலைகளிலும் வழக்கறிஞர்களாகவும், ஒரு முக்கியமான பங்காற்ற முடிந்தமை சிங்களவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
- யாழ்ப்பாணப் பொது நூலகம், புகழின் உச்சத்தில் இருந்தபோது சிங்களவர்களின் நூலகம் ஒன்றுகூட இருக்கவில்லை. இவை போன்றவைகளும் யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாகக் காரணமாக இருந்துள்ளன.
- புத்தக எரிப்பு இன்றோ நேற்றோ தொடங்கியதல்ல. புத்தகப் பிறப்பின் கூடவே புத்தக வெறுப்பும் பிறந்தது என்று சொல்லப்படுகிறது. மத சர்வாதிகாரமும் சித்தாந்தங்களும் ஒழுக்க நெறிகளும் புத்தகக் கொலைக்குத் தூண்டுதலாக இருந்திருக்கின்றன என் சச்சிதானந்தம் அவர்களின் கூற்றின் வழி அறிகின்றோம்.
- புத்தக அழித்தொழிப்புக்கு, கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் சீனாவில் கிம் அரச மரபின் காலமளவுக்கான பழைமை உண்டு. கி.மு.411 இல் ஏதென்ஸ் நகரத்தில் அலெக்சாண்ட்ரியா நூலகம் எரிக்கப்பட்டது. கி.மு.108-இல் ஜெருசலேமில் யூத நூலகம் கொளுத்தப்பட்டது.
1920-30களில் அஜைர்பைஜானில் புதிய லத்தீன் எழுத்து வடிவம் ஏற்றுக் கொள்ளப்பட்டபோது குர்ஆனும் மருத்துவ நூல்களும் உள்பட அரபு மொழியில் எழுதப்பட்ட எல்லாப் புத்தகங்களும் சாம்பலாக்கப்பட்டன. கவிஞர்கள், எழுத்தாளர்கள் என பலரது நூல்கள் பல்வேறு காரணங்களுக்காக அழிக்கப்பட்டன. - சிங்கள அரசு செய்த யாழ்ப்பாண நூலக அழிவு குறித்து கூறும்போது ஆ.ரா.வேங்கடாசலபதி அவர்கள் ‘அது ராணுவ ஆக்கிரமிப்புடன் நிகழ்ந்த பண்பாட்டுத் தாக்குதல்’ எனக் குறிப்பிட்டுள்ளார். ஆக ஒரு பகுதி மக்கள் விழிப்புணர்வுடனும், அறிவுக்கூர்மையுடனும் இருந்ததும், இலங்கை அரசிற்கு கோபத்தை வரவழைத்தாக சொல்வதென்பது விந்தைக்குரியது. 1984-ஆம் ஆண்டில் நூலகத்தை மீண்டும் திறப்பதற்கான நிகழ்வில் எதிர்கட்சித் தலைவர் அப்பா பிள்ளை அவர்கள் மக்களை எரிப்பது என்பது கொலையாகும். புத்தகங்களை எரிப்பது என்பது தமிழ்ப் பண்பாட்டைக் கொலை செய்வதாகும் என்று கூறினார்.
- 1985-இல் நூலகத்திற்கு அருகில் இருந்த காவல்நிலையத்தை தமிழ் வன்முறையாளர்கள் தாக்கினர். இதனால் அரசாங்கப்படை வீரர்கள் மீண்டும் கட்டப்பட்டு வந்த நூலகக் கட்டிடத்திற்குள் நுழைந்து குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதன் காரணமாக தமிழக அரசு கொடுத்த 7800 புத்தகங்களும் தீக்கிரையாகின. 2003-இல் புதுப்பிக்கப்பட்ட நூலகம் திறக்கப்பட்டது. ஆனால் அது கட்டிடமாகத்தான் இருந்தது. முழுமையான நூலகமாக இல்லை. யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் நூல் வாசிப்பதில் அக்கறை கொண்டவர்களாக உள்ளனர்.
- புதிய தேவைகளாக சுந்தர் கணேசன் அவர்கள் குறிப்பிட்டுள்ள செய்திகள் கவனத்திற்குரியது. நூலகத்திற்கு வசதிகள் கூடுதலாகத் தேவைப்படுகின்றது. புத்தகச் சேகரிப்பு இன்னும் அதிகளவில் இருக்கவேண்டும். தமிழகம், நிறுவனங்கள், தனியார்கள் என நன்கொடை அளிக்கவேண்டும். பிற நாடுகளிலிருந்தும் புத்தகங்கள் சேகரிப்பது அவசியமாகிறது. நூலகத்தலைவரும், ஆலோசகருமான ஸ்ரீகாந்தலட்சுமி பல்வேறு விதமான செய்திகளைக் கூறியுள்ளார். சர்வதேச திரைப்படங்களைத் திரையிடுவதற்கு நவீன ஒலி, ஒளிக்கருவிகள் கொண்டப் பகுதியை யாழ்ப்பாண நூலகம் விரும்புகிறது என்கிறார். தனி நிறுவனமான தரமணியில் உள்ள ரோஜா முத்தையா நூலகத்தின் சார்பில் 3000 புத்தகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை அங்கு சேர்ந்தது குறித்த பதிவுகள் இல்லை என்று கூறுவது கவனத்திற்குரியதாகும்.
- 2017-ஆம் ஆண்டு ஜுன் 15-ஆம் தேதி நடைபெற்ற பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை நிகழ்வில் கல்வியமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்கள் 37 அறிவிப்புகளை வெளியிட்டமை கல்வி ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதனுள் 37-வது அறிவிப்பாக,
உலக நாடுகளில் உள்ள தமிழ் நூலகங்களுக்கு ஒரு இலட்சம் புத்தகங்கள் கொடையாக வழங்குதல், முதற்கட்டமாக யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கும், மலாயாப் பல்கலைக் கழக நூலகத்திற்கும் ஒரு இலட்சம் நூல்கள் கொடையாக வழங்கப்படும்.
என நூலகத்திற்கு முதன்மை கொடுத்துள்ள விதம் தமிழறிஞர்கள், பொதுமக்களிடையே உத்வேகத்தை அளித்துள்ளதாக கருதப்படுகின்றது. - ஆகஸ்ட் 01-2017 அன்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உலக தமிழ்ச் சங்கம் சார்பில் வி.ஜி.சந்தோசம் விடுத்த கோரிக்கையை ஏற்று யாழ்ப்பாண நூலகத்திற்கு 2000 நூல்களை வி.ஜி.சந்தோசம் அவர்களிடம் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது. இப்படியாக நல்லது நடைபெற்றால் மீண்டும் பழைய நிலைக்கு யாழ்ப்பாண நூலகம் ஓரளவேனும் வரும் என்பதில் சந்தேகமில்லை. காலம்தான் விடை தரும்.