பேரா. கோபாலகிருஷ்ண காந்தி –
மகாத்மா காந்தியின் பேரன்,
மே.வங்க மேனாள் ஆளுநர்
இந்திய மக்களின் சிறப்புப் பண்பியல்புகள் என்னென்ன? மதநல்லிணக்கம் என்பது நமது சிறப்பான பண்புகளில் ஒன்றா? அல்லது மதவெறி தான் நமது இதயங்களின் அடியாழத்தில் வேர்விட்டு நிற்கும் ஒன்றா? அல்லது அனைவரிடத்தும் அன்பு செலுத்தி சமூக ஒற்றுமை பேணிப்பாதுகாக்கின்ற வாழ்க்கைமுறைதான் நம்முடையதா? அதுவுமில்லையென்றால் அனைவரிடமும் துவேஷத்தை வெளிப்படுத்துவது தான் நமது பாரம்பரியமா? இந்தியா என்பது அமைதி குடியிருக்கும் இல்லமா? இல்லை கலவரம் அரங்கேற்றப்படும் மேடையா? என்றெல்லாம் பலநேரங்களிலும் வியப்பு மேலிட என்னை நானே கேட்பதுண்டு?
புத்தர், மகாவீரர், திருவள்ளுவர், கபீர், குருநானக், மகாத்மா காந்தி முதலானவர்கள் இந்தியாவின் இதயத்தை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்களா? இல்லையா?
இந்த மகா புருஷர்கள் யாவரும் ஏதுமற்ற வெறுமையிலிருந்து தோன்றியவர்களா? இல்லவேயில்லை. நாட்டின் இதயத்துடிப்பிலிருந்தும் பெரும்பகுதி மக்களின் உணர்வுகளிலிருந்தும் மிகஉயர்ந்த இடத்தை அடைந்தவர்கள் தான் அவர்கள். இந்நாட்டின் இதயத்துடிப்பையும் மக்களின் எண்ணங்களையும் பிரதிபலிக்கச் செய்தவர்கள் அவர்கள். மதவெறிக்கு இரையாகி, ஒரு தனிநபரோ ஒரு குழுவோ திட்டமிட்டு தூண்டுவதன் மூலம் நடக்கின்ற காட்டுமிராண்டித்தனமான கலவரங்கள், சமூகத்தை பாதிக்கும் பெருநோய்களாகும்.
மக்களிடமிருந்து ஒற்றுமையோடு உயரும் மனிதநேயக்குரல் அந்நோயைக் குணப்படுத்தும். இந்து மதவெறி என்றோ இஸ்லாமிய மதவெறி என்றோ வேறுபாடுகள் ஏதுமில்லை. அதுபோலவே சீக்கிய மதத்துவேஷம் என்றோ கிறிஸ்தவ மதத்துவேஷம் என்றோ ஏதுமில்லை. கலவரம் என்றால் கலவரம் என்று மட்டுமே அதற்குப் பொருள். அது சிந்தனையிலும் பேச்சிலும் செயலிலும் கூட இருக்கிறது. இது சாதாரண மண்ணல்ல; மகாத்மா காந்தியின் மண். மிகவும் அசாதாரணமான வழிகளில் சாமானிய மக்களை உருவாக்கிய பெருமைக்குரிய மண். அம்மக்கள் எப்போதும் ஒற்றுமையுடனும் நீதியுணர்வுடனும் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழத் தகுந்த சூழ்நிலையை உருவாக்க அர்பணிப்பு உணர்வுடனும் விழிப்புடனும் நாம் செயலாற்றுவோம். எனது நண்பர் ஜி.ராமகிருஷ்ணனின் இந்நூல் அனைவரிடமும் சென்று சேரவேண்டும்.
எஸ்.ராமகிருஷ்ணன் – எழுத்தாளர்
காந்தி குறித்த ஆழ்ந்த புரிதலுடன் மதவாத சக்திகளுக்கு எதிராக காந்தியை உயர்த்தி பிடிக்கும் இடதுசாரி குரலின் அடையாளமாக இந்த நூலைக் காண்கிறேன். சமகால பிரச்சினைகள் குறிப்பாக மதவாத சக்திகள் ஏற்படுத்தும் நெருக்கடிகளுக்கு காந்திய வழியில் தீர்வு காண முயலுகிறார் ஜி.ராமகிருஷ்ணன். அது பாராட்டுக்கு உரியது.
பேரா. பா.இரவிக்குமார்
ஜி.ராமகிருஷ்ணனின் மகாத்மா மண்ணில் மதவெறி அண்மையில் வந்த நூல்களுள் குறிப்பிடத்தக்கது. ஆளும் வர்க்கத்தை இந்த அளவு துணிச்சலாகச் சாடிய நூல் என்று வேறு எந்த நூலையும் என்னால் நினைவு கூற முடியவில்லை. கடந்த நூறு வருடங்களாக ஆர்.எஸ்.எஸ்.நாட்டிற்கு எதிராக இந்துத்துவ வாதம் என்ற பெயரில் என்னென்ன செயல்களைச் செய்து வருகிறது என்பதை வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் மிகத் துல்லியமாக விவரித்துள்ளார் ராமகிருஷ்ணன்.
இந்துத்துவா வேறு ; இந்து மதக் கருத்தாக்கம் வேறு என்பதை மிக எளிய முறையில், எளிய வாசகனும் புரிந்து கொள்ளும் வகையில் விவரித்துள்ளதைப் பாராட்ட வேண்டும்.
எஸ். ராமச்சந்திரன் –
தமுஎகச மேனாள் பொருளாளர்
ஆர்.எஸ்.எஸ். வகுப்புவாதிகளின் வஞ்சக, நுட்பமான திட்டமிடல் மற்றும் செயல்பாடுகளை வெளியிடும் நாட்களை குறிப்பது நம்மை அதிர்ச்சி அளிக்க வைக்கிறது. பிரிட்டிஷ் பயன்படுத்திய தேசத் துரோகச் சட்டத்தை நீக்க வேண்டும் என விடுதலைப் போராட்டக் காலத்தில் காந்திஜியும், நேருவும் போராடினார்கள். ஆனால் 70 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் 124 ஏ தேசத்துரோகச் சட்டம் நீக்கப்படவில்லை. அது காங்கிரஸ் கட்சியின் வரலாற்று முரண். அதே சட்டத்தை தற்போது பா.ஜ.க. அரசு சமூக அறிவுஜீவிகள், பத்திரிக்கையாளர்கள் ஆகியோருக்கு எதிராகப் பயன்படுத்தி வருகிறது.
இந்நூல் முழுவதும் இதுபோன்ற வரலாற்றுத் தகவல்கள் விரவிக்கிடக்கின்றன.
ஆர்.எஸ்.எஸ். சிவில் சமூகத்திலும், பண்பாட்டுத் தளத்திலும் எவ்வாறு ஊடுருவி இருக்கின்றன. அதை எதிர்கொள்வதற்கும், மதச்சார்பற்ற இந்தியாவை கட்டுவதற்கும் மகாத்மா காந்தியடிகளும், இடதுசாரி இயக்கங்களும், சமூக சீர்திருத்தவாதிகளும் எவ்வாறெல்லாம் பங்களிப்பைச் செய்திருக்கின்றன என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் எடுத்துச் சொல்கிறார் நூலாசிரியர். மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் குறிப்பாக இடதுசாரிச் செயல்பாட்டாளர்களின் கையில் இருக்க வேண்டிய கருத்தாயுதம். அனைவரும் வாசிக்க வேண்டிய, மதசார்பற்ற ஜனநாயக அமைப்புகளிடம் பெருவாரியாக கொண்டு செல்ல வேண்டிய கருத்துப் பெட்டகம் தோழர் ஜி.ஆரின், “மகாத்மா மண்ணில் மத வெறி”.
ஆயிஷா இரா.நடராஜன் – எழுத்தாளர்
இந்த நூல் ஒரு தொடராக நக்கீரன் இதழில் வெளிவந்தது. கடந்த ஆட்சியில் சங்பரிவார் உள்ளிட்ட அமைப்புகள் இங்கு வந்து நம்முடைய தமிழகத்தில் காலூன்றி விட்டன. இந்தச் சூழலில் தான் இந்த தொடர் வெளிவந்தது. டெல்லியில் இருக்கும் அரசை நாக்பூரில் இருந்து கொண்டு ஆர்எஸ்எஸ் தான் இயக்குகிறது என்பதற்கான அடிப்படை ஆதாரங்களை மிக அழுத்தமாக இந்த புத்தகம் வெளியிடுகிறது.
தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை பேணவும் மதசார்பற்ற ஜனநாயக சக்திகளை ஆதரவாக திரட்டவும் இந்த புத்தகம் பெரிய அளவில் பயன்படும். மகாத்மா முதல் ஐன்ஸ்டீன் வரை பலரை மேற்கோள்காட்டி வாசிப்பு தான் நமது பண்பாடு என்பதை ஜி ஆர் இந்த புத்தகத்தில் நிறுவுகிறார்.
பீட்டர் அல்போன்ஸ் –
மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர்
வரலாற்றை மக்கள் மறந்துகொண்டே இருப்பார்கள், வரலாற்று ஆசிரியர்களின் கடமை அவர்களுக்கு வரலாற்றை மீண்டும் மீண்டும் நினைவூட்டிக்கொண்டே இருக்கவேண்டும் என்று எமர்சன் கூறுவார். எத்தனை புத்தகங்கள் வந்தாலும் அவற்றின் பணிகள் தீர்ந்துவிடுவதில்லை. திரு ஜி.ஆர். அவர்களுக்கு இப்படி ஒரு பக்கம் இருக்கிறதென்று எனக்குத் தெரியாது. மகாத்மா மண்ணில் மதவெறி என்னும் அவர் எழுதிய புத்தகத்தில் 25 கட்டுரைகள் உள்ளன.
பிராமணியத்தைப்பற்றி, தோழர் பி.ஆரைப்பற்றி, பி.ஆருக்கும் பெரியாருக்கும் நடந்த உரையாடலைப்பற்றி இந்துத்வாவைப்பற்றி, சனாதனத்தைப் பற்றி, இன்னும் அநேக விஷயங்களைப்பற்றி தோழர் ஜி. ஆர் அவர்கள் இந்த நூலில் எழுதி உள்ளார். படிக்கத் தடையற்ற வரிகள், நிறைய வரலாற்றுத் தரவுகள், என்னைப் போன்ற பேச்சாளர்களுக்கு சரியான உசாத்துணை நூலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக நாடே தனது கட்டுக்கோப்பை தற்போது இழந்துவிட்டது என்று திரு. அமர்த்தியா சென் அவர்கள் தற்போதைய இந்தியாவைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அங்கேதான் இந்தப் புத்தகத்தின் தேவை உணரப்படுகிறது.
நக்கீரன் கோபால் – பத்திரிகையாளர்
1925-ல் தோன்றிய ஆர்.எஸ்.எஸ்., எப்படி எல்லாம் ரத்தத்தைச் குடித்துக்கொண்டே வளர்ந்தது என்பதையும் அவர் விவரிக்க தவறவில்லை. சாதிக்கு ஒரு நீதி போதிக்கும் மனு நீதி சட்டமாக்கவேண்டும் என்று குரல் கொடுத்தது ஆர்.எஸ்.எஸ். அப்படி ஆக்கினால் என்ன ஆகும்?
மனிதம் தூக்கிலே தொங்கியிருக்கும். மனித நாகரிகம் புதைக்குழிக்குப் போயிருக்கும். மனு நீதி என்பது மோசமான கீழ்த்தரமான வக்கிரமான சிந்தனைகளின் சீர்கெட்ட தொகுப்பு நீதி என்ற பெயரால் அநீதியைப் பரப்பும் வைரஸ் நூல் அது. அதை உயர்த்திப்பிடிக்கும் சங்பரிவார் கும்பல்களை ஜி.ஆரின் இந்த நூல், அடையாளம் காட்டுகிறது.
விடுதலைப் பெறுவதற்கு முன்பிருந்தே, இந்தியாவிற்குள் இந்துத்துவா அமைப்புகள் எப்படி எல்லாம் காலூன்றின. எந்த வகையிலெல்லாம் மதத் துவேச நெருப்பை மூட்டின. அதனால் எத்தனை எத்தனைக் கலவரங்கள் இங்கே வெடித்தன என்பதை எல்லாம் விவரித்து, இதில் மதவாதத்தின் ஆபத்தை அப்பட்டமாக விவரித்திருக்கிறார்.
ச.தமிழ்ச்செல்வன் – எழுத்தாளர்
140 பக்கமே உள்ள ஒரு சிறிய நூலுக்குள் எண்ணற்ற நூல்களிலிருந்து எடுத்தாளப்பட்ட மேற்கோள்களும் ஆதாரங்களும் கொண்டு ஆர்.எஸ்.எஸ்ஸின் கோர முகம் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது.ஒரு நூற்றாண்டைக் கடக்க இருக்கும் இந்த பாசிச அமைப்பின் வரலாற்றை இந்திய தேசத்தின் வரலாற்றோடு இணைத்துத் தோழர் ஜி.ஆர்.எளிய மொழியில் வாசகர்கள் முன் விரித்து வைக்கிறார்.
வகுப்புவாதத்தை இருமுனைகளில் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.ஒன்றைக் கருத்தியல் தளத்திலும் இன்னொன்றைக் களத்திலும்.ஆர்.எஸ்.எஸ்., பாஜக போன்ற அமைப்புகள் குறித்து மக்களிடம் அச்சம் இல்லாதிருக்கிறது.எல்லா அமைப்புகளையும் போல இவையும் சில அமைப்புகள் என்று மக்களை நம்ப வைப்பதில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.மதப்பகைமையையும் மக்களைக் கொல்லுவதைத் தன் நிகழ்ச்சிநிரலில் ஒன்றாகவும் வைத்துள்ள ஓர் அமைப்பு ஆர்.எஸ்.,எஸ். என்பதை மக்களிடம் எடுத்துச்செல்ல வலுவான உண்மைகளை இநூல் நமக்கு வழங்கியுள்ளது.
ஆர். பத்ரி – சிபிஐ(எம்) மாநிலக்குழு
இந்தியாவின் அடித்தளம் மதச்சார்பின்மையே.மதச்சார்பின்மை தத்துவத்தை தனது வாழ்நாளெல்லாம் உயர்த்தி பிடித்தவர் அண்ணல் காந்தி. அண்ணலை கொன்ற அந்த மதவெறி துப்பாக்கியில்
குண்டுகள் இன்னமும் மிச்சமிருக்கிறது. அது இந்தியாவின் ஆன்மாவை குறிபார்த்துக் கொண்டிருக்கிறது. அண்ணலின் சித்தாந்தத்தின் துணை கொண்டு இந்தியாவை, அதன் பன்மைத்துவத்தை பாதுகாப்போம் என உரத்து முழங்குகிறது மகாத்மாவின் மண்ணில் மதவெறி எனும் இந்த கருத்தாயுதம். ஆழமான மொழியில் அபூர்வமான தகவல்களோடும் உணர்வு பூர்வமான உண்மைகளோடும் வெளியாகியிருக்கும் இந்நூலை அனைவரும் வாசிப்பது அவசியம். நூலாசிரியர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் நக்கீரன் பதிப்பகத்திற்கும் தோழமை வாழ்த்துக்கள்..
எல்லை சிவக்குமார் –
புதுச்சேரி மாநில கலை இலக்கியப் பெருமன்றம்
தோழர் ஜி. ஆர் அவர்களின் மகாத்மா மண்ணில் மதவெறி என்ற நூல் நாடு முழுவதும் மதசார்பின்மை க்காக ஜனநாயகத்திற்காக தேச ஒற்றுமைக்காக களத்தில் முன் நின்று போராடுபவர்களுக்கு வழிக்காட்டியாக அமைகின்ற நூல். 21 கட்டுரைகளை க் கொண்டுள்ள இந்த நூல் இன்றைக்கு நமது தேசத்தின் மதசார்பின்மை கொள்கை யை சிதைத்து மதவாதத்தை வேருன்ற துடிக்கின்ற இந்துத்துவா என்ற கருத்தியலின் தோற்றம் அதனை முன்னெடுத்த சவர்க்கார் விடுதலைப் போராட்டத்தில் ஈடுப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு சிறை கொடுமைகளுக்கு அஞ்சி மன்னிப்பு கடிதம் எழதி கொடுத்து விட்டு ஆங்கிலேயர்களின் விசுவாசியாக மாறியது.
ஆர். எஸ். எஸ் அமைப்பின் தோற்றம் அரசியலில் ஆர் எஸ் எஸ் சித்தாந்த ஊடுருவல் மனுவாத சித்தாந்தம் அரசியலிலும் ஆட்சி அமைப்பிலும் ஊடுருவ செய்தது அரசியலில் மதவாதத்தை இணைத்து மதவாத சிந்தனைகளை முன்எடுத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது ஆட்சி அதிகாரத்தின் மூலம் அது கட்டமைக்க முயலும் இந்து ராஷ்டிரம் அதற்கான பொருளாதார வளங்களை உருவாக்க கார்ப்பரேட் ஆதரவு நிலை உருவாக்கம் என இன்றைய அரசியல் நிலைமைகளை மிகவும் எளிதாக அனைவருக்கும் தெளிவாக உணர்ந்து கொள்ளும் வகையில் இந்த நூலினை எழுதியுள்ளார். இந்த நூலில் இடம் பெற்றுள்ள இந்துத்துவமும் இந்து மதமும் ஓன்றல்ல என்ற கட்டுரையும் அரசியலிருந்து மதம் விலகி நிற்க வேண்டும் என்ற கட்டுரையும் மிகவும் முக்கியமானது.
அவை குறிப்பாக பெண்கள் மத்தியில் உழைக்கும் மக்கள் மத்தியில் மீண்டும் மீண்டும் முன்னெடுத்து செல்லப்பட வேண்டும். இந்த நூல் மதவாத இருளை அகற்றிட வெளிச்சம் காட்டுகிற ஒரு அற்புத நூல். விடியாத இரவு என்று எதுவும் இல்லை. ஒளி பரவும் போது இருள் அகலும் என்று தோழர் ஜி. ஆர் குறிப்பிடுவது போல மதவாத இருள்அகற்ற இந்த நூல் ஒளிக்காட்டுகிறது. அனைவரும் வாசிக்க வேண்டிய அரிய நூல் இது. எல்லை. சிவக்குமார் தலைவர் புதுச்சேரி மாநில கலை இலக்கியப் பெருமன்றம்.