க.சரவணன்
புத்தகங்களை வாசிப்பது என்பது கொண்டாட்டமாகத் திகழவேண்டும். புத்தகங்களை குழந்தைகளின் கைகளில் திணிக்கக் கூடாது. குழந்தைகள் புத்தகங்களை தாமாக எடுத்துப் படிக்க வேண்டும். அந்தவகையில் பாரதி புத்தகாலயத்தின் புக் ஃபார் சில்ட்ரன் பதிப்பகம் தொடர்ந்து வண்ணவடிவில் கண்ணைக் கவரும் புத்தகங்களை வெளியிட்டு வருகிறது.
இன்று கற்பித்தல் என்பது நிலைவாரியாக மாறியுள்ளது. குழந்தை எந்த வகுப்பில் வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால், அக்குழந்தை எந்த வகுப்பின் அடைதல் திறன் பெற்றுள்ளது என்பதை அறிந்து அந்த நிலைக்கு ஏற்ப அவருக்கு கற்பித்தலைத் தொடர்வதே இன்றைய கற்பித்தல் முறை. அந்தவகையில் நிலைவாரியான புத்தகங்களைத் தொடர்ந்து பாரதி புத்தகாலயம் வெளியிட்டு வருகின்றது. 1-18 வயது குழந்தைகளுக்கான புத்தகங்கள் பாரதி புத்தகாலயத்தில் உள்ளன.

மதுரை புத்தகத் திருவிழாவில் பாரதி புத்தகாலயம் புக் பார் சில்ரன் பதிப்பகம் சார்பாக கடந்த முன்று வருடங்களாக குழந்தைகளைக் கொண்டு புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. மேலும், அப்புத்தகங்களை குழந்தைகளே அறிமுகப்படுத்தவும் செய்கின்றனர்.
அந்த வகையில் இந்த முறை பாரதி புத்தகாலயம் சார்பாக 25 புத்தகங்கள் குழந்தைகளால் அறிமுகப்படுத்தப்பட்டன. பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த குழந்தைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சிறார் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் திரு உதயசங்கர் அறிமுக உரையில் குழந்தைகளுக்கான வாசிப்பு இயக்கத்தை சிறார் எழுத்தாளர் சங்கம் முன்னெடுத்துச் செல்லும் விதமாக பாரதி புத்தகாலயத்துடன் இணைந்து தொடர்ந்து எல்லா புத்தகத்திருவிழாவிலும் குழந்தைகளைக் கொண்டு புத்தகங்கள் வெளியிட உள்ளோம். குழந்தைகளுக்கான புத்தகங்களை குழந்தைகள் வெளியிடுவதே சிறந்தது. அவர்களே புத்தகங்களை அறிமுகம் செய்வது அதைவிடச் சிறந்தது என்றார்.
முன்னிலை வகித்த மொழிப்பெயர்பாளர் சுப்பாராவ் அவர்கள் தனது இரண்டு மொழிபெயர்ப்பு சிறார் கதை தொகுப்புகள் வெளியிடுவதை பெருமையாக நினைக்கிறேன். எனக்கு பேச வராது. ஆனால், குழந்தைகள் எந்த பயமும் தயக்கமும் இன்றி புத்தகங்களை வெளியிட்டு பேசுவது ஆச்சரியத்தை அளிக்கிறது. எனது புத்தகத்தை அறிமுகம் செய்துவைத்த குழந்தைகளுக்கு வாழ்த்துகள் என்றார்.
தலைமையுரை ஆற்றிய சிறார் எழுத்தாளர் க.சரவணன், “வாசிப்பு நேசிப்பாக இருக்க வேண்டும்.
பாடபுத்தகங்களைத் திணிப்பது போன்று திணிக்க கூடாது. ’படி’ ’படி’ என அழுத்தம் கொடுப்பது போன்று கதை புத்தகங்களை கைகளில் கொடுத்து படி படி என கட்டாயப்படுத்தக் கூடாது. இப்படி செய்தால் ஒருபோதும் கதை புத்தங்களை குழந்தைகள் வாசிக்க மாட்டார்கள். குழந்தைகளை வாசிப்பதற்கு தயார் படுத்த வேண்டும். அதற்கு புத்தகங்களில் உள்ள கதைகளை அறிமுகப்படுத்த வேண்டும். கதைகளைக் குழந்தைகளுக்கு பிடித்த விதம் கதைகளைச் சொல்ல வேண்டும். அவர்கள் கதைகளைக் கேட்க ஏங்க வேண்டும். அவர்களுக்கு மெல்ல மெல்ல இந்தக் கதைகள் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன என்று அறிமுகப்படுத்த வேண்டும். பின் , அவன் நிலைக்கு ஏற்ற புத்தகங்களை வாசிக்க பழக்க வேண்டும். நாமும் இணைந்து வாசிக்க வேண்டும். அவன் நிலைக்கு ஏற்ற புத்தகங்களைக் காட்சிப்படுத்த வேண்டும். அவனே எடுத்துப் படிக்கும் சூழலை உருவாக்க வேண்டும். அதன்பின், பொதுநூலகங்களை அறிமுகப்படுத்தி வாசிப்பை சுவாசமாக்க வேண்டும்.” என்றார்.
கிளியக்கா மலையாள மொழிப்பெயர்ப்பு புத்தகத்தை அறிமுகம் செய்த முத்துலெட்சுமி, “இந்த புத்தகத்தில் இடம் பெற்ற கதைகளில் பிடித்தது கிளியக்கா கதை. ஒரு மரம் இருந்துச்சாம். அந்த மரம் காய்ந்து, பூ பூக்காம இருந்துச்சாம். அது அழுதுகிட்டே இருந்துச்சாம். அப்ப ஒரு கிளி கூட்டம் அந்த பக்கம் போச்சுதாம். அதில் ஒரு கிளி மரத்திடம் அழாதே நான் வசிக்கிறேன் என்று அங்கு தங்கியதாம். அப்புறம் அந்த மரத்தின் கிளைகள் பச்சையான இலையுடன் இருந்துச்சாம். பூ பூத்துச்சாம், காய் காய்த்து கனியா மாறுச்சாம். எல்லா பறவைகளும் வந்துச்சாம். கிளி கூட்டம் திரும்ப ஊருக்கு போனாதாம். இந்த கிளிக்கு மரத்தை விட்டு போக மனசே இல்லையாம். அப்புறம் என்ன ஆச்சு என்பதை புத்தகம் வாங்கி படியுங்க” என்றாள்.
கலகல வகுப்பறை சிவா எழுதிய ‘மெல்ல மலரும் ஆசிரியர்’ புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்த சூர்யா, “இது எங்க சார் எழுதிய புத்தகம். அதில் அவரது கற்பித்தல் முறை குறித்து பேசியுள்ளார். வாங்கி படியுங்க. நிறைய விசயங்களைப் புரிந்து கொள்வீர்கள். என்றான்.
யாஷ்மின் பாத்திமா, வெங்கடேஷ் , நல்ல முத்து போன்றோர் உதயசங்கர் எழுதிய பல புத்தகங்களைப் பெற்றுக் கொண்டு அறிமுகம் செய்து வைத்தனர்.
குழந்தை எழுத்தாளர் நீதிமணி காய்கறி, பலூன் போன்ற பாடல்களை ஆடி,பாடி அறிமுகம் செய்து குழந்தைகளை உற்சாகமூட்டினார்.
குழந்தைகளின் மொழிகளில் கதைகளைக் கேட்பது வியப்பாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. குழந்தைகள் புத்தகங்களை விரும்பி படிப்பார்கள் என்பதற்கு சாட்சிகளாக இக்குழந்தைகள் திகழ்ந்தார்கள். தொடர்ந்து குழந்தைகளிடம் புத்தகங்கள் குறித்து உரையாடுவதும், குழந்தைகளுக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்துவதின் தொடர்ச்சியாக இக்குழந்தைகள் வாசிப்பை சுவாசிப்பாக்கி கொண்டுள்ளனர். இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆசிரியர்களும் பாராட்டுக்குரியவர்கள் ஆவர்.
எழுத்தாளர் கலகலவகுப்பறை சிவா அவர்கள் நன்றியுரை கூற விழா இனிதே முடிந்தது. பாரதிபுத்தகலாயத்தின் சார்பாக நாகராஜன் தோழர் குழந்தைகளுக்கு உணவளித்து, புத்தகங்களையும் பரிசளித்தார். மனநிறைவான இவ்விழா எல்லா புத்தகத்திருவிழாக்களிலும் திகழவேண்டும். அனைத்து பதிப்பகங்களும் ஒருங்கிணைந்து இதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பது அவா.
