ஜெர்மன், பிராங்போர்ட் நகரில் நடைபெறும் சர்வதேச புத்தகத்திருவிழாவிற்கு ஒரு குழுவை அனுப்பி இங்கும் அதுபோல் நடத்த ஆலேசனை செய்துவரும் தமிழக அரசின் முயற்சியை பாராட்டுகிறோம். அதே நேரத்தில் சென்னையில் புத்தகப் பூங்கா திட்டம் குறித்து மார்ச் மாதம் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை வழங்கி சிறப்பித்தபோது தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டார்.
தமிழின் எல்லா நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கச் செய்யும் பிரமாண்ட புத்தகச் சந்தையே புத்தகப் பூங்காவாகும். தமிழக உழவர் சந்தை தந்த கலைஞரின் கனவுத் திட்டம் அது. அன்று சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் அவர்களின் உரை, மிகுந்த நம்பிக்கை தருவதாக அமைந்தது. தீரமிகு எழுத்தாளர்கள், கனல் தெறிக்கும் பேச்சாளர்கள், களம் கண்ட போராளிகள், ஆய்வு அறிஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் இவர்களோடு சிறந்த தமிழ் நூல்களின் பதிப்பாளர்கள் என யாவரையும் தனது அணி, தங்கள் ஆட்சியின் ஒரு பகுதி என்று அவர் போற்றியதை மறக்க முடியாது.
புத்தகப் பூங்கா என்பது நிரந்தர புத்தகத் திருவிழா போன்றது. உலகிலேயே ஆறு பெரிய நகரங்களில் மட்டுமே அது இருக்கிறது. அவற்றில் ஜப்பானில் டோக்கியோ நகரில் இருப்பது நான்கு கிலோ மீட்டர் நீண்ட பிரமாண்டம். அடுத்தது இஸ்ரேலில் உள்ளது. ஆனால் நமக்கு பிரமாண்டங்களை விட பயன்பாடு மிகவும் முக்கியம். இன்று தமிழகத்தில் புத்தக விற்பனையின் நிலை என்ன? இலக்கியம், அறிவியல், ஆய்வு என்று வெளிவரும் நூல்களில் பெரும்பாலும் இன்னமும் கூட நூலக ஆர்டர்களை நம்பியே உள்ளன என்பது அல்லவா உண்மை.
ஒரு ஊரிலாவது நல்ல புத்தக விற்பனை நிலையங்கள் உண்டா? அப்படி இருப்பவை எல்லாம் பாடப்புத்தகம் முதல் போட்டித் தேர்வு புத்தக மையங்களாகவே உள்ளன. ஏன் இந்த நிலை? காரணம் தமிழக அளவில் நாவல், சிறுகதை, கவிதை, அரசியல், சமூகம், களஆய்வு, அறிவியல் என எந்த புத்தக விற்பனையும் லாபகரமாக இல்லாததால் யாருமே அப்படியான கடை நடத்த முன்வருவதில்லை. எனவே மாவட்டம் தோறும் ஒரு இடத்தை தேர்வு செய்து, அரசே சேவை நோக்கில் வாசிப்பை சமூகத்தில் விதைக்க புத்தப் பூங்காக்களை உருவாக்கலாம் என்பதே தமிழ் ஆர்வலர்களின் மேலான எதிர்பார்ப்பு.
உலகம் முழுவதும் பல அரசுகள் புத்தக வெளியீட்டிற்கும் விற்பனைக்கும் உதவி செய்து நோய் தொற்று காலத்திற்கு பிறகு பதிப்பாளர்களை உதவிக்கரம் நீட்டி உயர்த்தி வருவதைப் பார்க்கிறோம். நம் தமிழர்களின் தற்போதைய ஆட்சி செய்யாவிட்டால் வேறு யாருமே செய்யமாட்டார்கள். தமிழ் வளர்ச்சியும், தமிழ் இலக்கியத்தின் மீதான சமரசமற்ற ஈடுபாடும், புத்தகங்கள் மீதான இயல்பான பாசாங்கற்ற காதலும் கொண்ட நமது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மாவட்டம் தோறும் – சேவை மனப்பான்மையோடு அரசே நடத்தும் புத்தகப் பூங்காக்களை உருவாக்கி மாபெரும் எழுச்சியை;
வாசிப்புப் புரட்சியை தமிழகத்தில் விதைக்க உலகிற்கே வழிகாட்ட முடியும். அரசு அதற்கான முயற்சிகளை விரைந்து எடுக்க வேண்டும், அதற்கான திட்டமிடல் குழுவையும், ஆலோசனைக் குழுவையும் உடனே அமைக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் எதிர்பார்ப்புமாகும்.