நேர்காணல்:’வ.உ.சி தொண்டர்’ ஜோல்னா ஜவஹர்
சந்திப்பு: ஆ. அறிவழகன்
பதிப்பக உதவியாளர், MIDS
அண்மையில் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இணைந்து எட்டயபுரத்தில் நடத்திய பாரதி விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களால் ‘வ.உ.சி. தொண்டர்’ என்ற விருது வழங்கப்பட்ட ‘ஜோல்னா’ ஜவஹர் அவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே வ.உ.சி. பற்றிய ஒரு எழுச்சியை உருவாக்கியவர். காரைக்குடி பள்ளியொன்றில் கணித ஆசிரியராகப் பணியாற்றும் இவர் கலை இலக்கிய ஆர்வத்தால் வானொலி, தொலைக்காட்சி, குறும்படம், திரைப்படங்களில் நடித்துக்கொண்டும், பல்வேறு இதழ்களில் எழுதிக்கொண்டுமிருப்பவர். மாணவர்கள் தங்கள் பெயரோடு இவர் பெயரையும் சேர்த்துக்கொள்ளும் அளவுக்கு அவர்கள்மேல் அக்கறைகொண்டுள்ளவர் – ஆசிரியர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாய் விளங்குகிற ஆசிரியர் இவர். வ.உ.சி. நினைவு நாளான நவம்பர் 18ஆம் தேதியை தமிழ்நாடு அரசு தியாகத் திருநாளாகக் கொண்டாடுகிற இந்தத் தருணத்தில் – குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிற இந்த நவம்பர் திங்களில் ‘வ.உ.சி. தொண்டர்’ திரு. ஜோல்னா ஜவஹர் அவர்களை ‘புத்தகம் பேசுது’ நேர்காணல் வழி அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம்.
தங்களைப் பற்றியும், தங்கள் குடும்பம் பற்றியும் ஒரு சிறு அறிமுகம்…
பொதுவா நான் என்னைப் பற்றி சொல்லும்போது என்னுடைய ஊரை சொல்லித்தான் ஆரம்பிப்பேன். என் ஊரைப் பற்றிச் சொல்லும்போது கர்வம் ஓங்கி வளரும். ஏனென்றால் கர்வம் வரவழைக்கக்கூடிய ஒரு ஊரில் பிறந்தவன். ஆங்கில அரசை நடுங்கச் செய்த – அச்சத்தை உண்டாக்கிய ஐயா வ.உ.சி. பிறந்த ஓட்டப்பிடாரத்தில் பிறந்தவன் என்ற கர்வம் எனக்கு எப்போதும் உண்டு. தற்போது காரைக்குடியில் எல்.எஃப்.ஆர்.சி. என்கிற பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். என்னுடைய மனைவி மங்களேஸ்வரி ஒரு நடுநிலைப் பள்ளியின் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இரண்டு பெண் குழந்தைச் செல்வங்கள், அட்சயா, அதிசயா. நாங்கள் நான்குபேர் இணைந்த ஓர் உலகம். அந்த உலகத்தில்தான் நான் வாழ்ந்து வருகிறேன்.
‘ஜவஹர்’ எப்படி ‘ஜோல்னா’ ஜவஹர் ஆனார்?
மகாத்மா தென் ஆப்பிரிக்காவில் ரயில் நிலையத்தில் பிரிட்டோரியா போற வழியில் ரயில் பெட்டியில் இருந்து உதைத்து கீழே தள்ளி விடப்பட்டார். எந்த இடத்தில் விழுந்தாரோ அந்த இடத்திலிருந்தே தன்னுடைய போராட்டத்தை ஆரம்பித்தார். விழுந்த இடத்திலேயே எழுவது… அதே போல ஆபிரகாம் லிங்கன் பதவியேற்க வரும்பொழுது எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருத்தர், அவரை அவமானப்படுத்த நினைத்து, ‘மிஸ்டர் லிங்கன், என் கால்ல போட்டிருக்கிற செருப்பு உங்க அப்பா செய்து கொடுத்தது’ என்றார். ‘அப்படியா? மகிழ்ச்சி. நான் பதவியேற்கும் நேரத்துல என் அப்பாவை நினைவுபடுத்தியமைக்கு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். மிஸ்டர் மெம்பர் ஒருவேளை உங்களது செருப்பு மீண்டும் பழுதடைஞ்சா கொண்டு வாங்க; நான் அதை சரி பண்ணித் தருகிறேன்’ என்று அவமானப்படுத்தப்பட்ட இடத்திலிருந்து எழுந்து நின்றார். இந்த செய்திகளையெல்லாம் நான் படிச்சதினால அந்த உணர்வு என்னுள்ளும் எழுந்தது.
இதை ஏன் சொல்ல வர்றேன்னா நான் கல்லூரி காலத்திலிருந்தே ஜோல்னா பை போட்டிருப்பேன். இதை யாருமே கிண்டலுக்கான ஒரு பையாக நினைச்சதில்ல. ஆனா நான் வேலை பார்க்க வரும்போது ஒரு ஆசிரியர் என்னை ‘யோவ் ஜோல்னா இங்க வாய்யா’ அப்படின்னுதான் கூப்பிடுவாரு. அவரு கூப்பிட்டதுனால நான் தரம் குறைஞ்சிடல… இதை என் மாணவர்கள் கேட்டா இதை ஒரு பட்டப்பெயரா, கிண்டல் பண்றதுக்கான பேரா எடுத்துக்கிடுவாங்க… அது நல்லா இருக்காதே அப்படிங்கிறதுக்காக, நானே என் பெயரோடு சேர்த்துக்கொண்டேன். அவர் என்னை என்ன கிண்டல் பண்றது, நாமே அதை அடையாளப்படுத்திக்கலாம்னு முடிவுபண்ணி பத்திரிகைகள்ல எழுதும்போது ‘ஜோல்னா ஜவஹர்’ என்ற பெயரில் எழுதினேன். அவரு என்னைக் கிண்டல் பண்ண நினைத்துச் சொன்னதை நானே வைத்துக்கொண்டதால் காலப்போக்கில் அது ஒரு பேசுபொருளாக மாறிவிட்டது ஒட்டி இருக்கும் இந்த ஜோல்னா பை, இது தான் ஜவஹர் ‘ஜோல்னா’ ஜவஹர் ஆன கதை.
ஒரு கணித ஆசிரியராக இருந்துகொண்டு தமிழ், வ.உ.சி. மீதான பற்றுதல் எப்படி ஏற்பட்டது?
நான் பொதுவா மாணவர்களிடம், ‘‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ எண்ணுங்கிறது கணிதம், எழுத்துங்கிறது தமிழ். நமக்கிருக்கிற இரண்டு கண்கள்ல ஒன்று தமிழ், ஒன்று கணிதம்” என்பேன். தமிழனா இருந்துட்டு தமிழ்ல பற்றில்லாம இருந்தாத்தான் ஏதோ பிரச்சனைன்னு அர்த்தம்.
என்னிக்கு நான் பள்ளியில சேர்ந்தேனோ அதாவது 1990லிருந்து எனக்குன்னு சில விதிமுறைகளை வைச்சிருக்கேன்… கரும்பலகைகிட்ட போகும்போது நான் செருப்புபோட்டு போகமாட்டேன்; அதே போல முழுக்கை சட்டை போட்டு முழுமையாக அனைத்து பட்டன்களையும் கைகளிலும் பட்டன்களைப் போடாம நான் வகுப்புக்குள்ள நுழையமாட்டேன்; இத்தனை ஆண்டு காலமாக நான் வகுப்பில் என் நாற்காலியில உட்கார்ந்ததில்ல… ஏன்னா நான் ஆசிரியர்ங்கற நினைப்பு மாணவர்களுக்கு வர்றதவிட அவர்களில் நான் ஒருவன் அப்படிங்கற நினைப்புத்தான் அவர்களுக்கு வரணுங்கிறதால… அதுமாதிரியே மாணவர்களும் என்னை அவர்களுக்குள் ஒருவனா கருதி ஐயம் கேட்பதிலும், அவர்கள் கருத்தை பகிர்ந்துகொள்வதிலும் எந்தத் தயக்கமும் காட்டியதில்ல.
கண்ணதாசன் சொன்ன, ‘பயிலும் பள்ளி கோயில், படிக்கும் பாடம் வேதம்’ அப்படிங்கறத நான் மனசுல நினைச்சுக்குவேன்… இந்த மரியாதையை நாம குடுக்கும்போதுதான் மாணவர்களுக்கும் வகுப்பறை மேல ஒரு மரியாதையும் பாடத்தின் மேல ஒரு அக்கறையும் வரும்னு நான் நினைக்கிறேன்… மாணவர்கள் அப்படி இருக்காங்களோ இல்லையோ நான் அப்படி நினைச்சுத்தான் எனக்கு நானே ஒரு கட்டுப்பாடை விதிச்சு இன்றுவரை அதை செய்துகிட்டு வர்றேன்… அதே மாதிரி என் ஜோல்னா பையிலயும், சட்டைப் பையிலயும் வ.உ.சி. அல்லது பாரதி படம் இருக்குங்கிறது எல்லா மாணவர்களுக்குமே தெரியும்.
வானொலி, தொலைக்காட்சி, அரட்டை அரங்கம் – மாணவர்களை அழைத்துச் சென்ற அனுபவம் பற்றி…
1990ல ஆண்டாவூரணிங்கற ஊர்ல உள்ள ஒரு பள்ளியிலதான் நான் முதன்முதலாக தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியரா வேலைக்குச் சேர்ந்தேன். என்னுடைய மாணவர்களை வானொலி நிகழ்ச்சியில கலந்துக்க வைக்கணும்னு அதுக்காக நிறைய எழுதுனேன்… புத்தர், ஏசு, காந்தி, சர்.சி.வி. ராமன், எடிசன் இப்படி நிறைய தலைப்புகள்ல வானொலியில அரைமணி நேரம் நிகழ்ச்சி நடத்துற மாதிரி எழுதினேன். அப்போ மதுரை வானொலியில நாற்றங்கால் என்கிற ஒரு கதம்ப நிகழ்ச்சி ஒலிபரப்பாகும். பாட்டு, கவிதை, கதை, நாடகம்னு மாணவர்கள் கலந்துக்கற நிகழ்ச்சி அது. இந்த நிகழ்ச்சியில மாணவர்களை பங்கெடுக்க பயிற்சி கொடுத்து கலந்துக்கவைத்தேன். ஏன்னா… ஏற்கெனவே நான் ‘ஆடிசன்’ என்கிற குரல் தேர்வுல வெற்றிபெற்று திருநெல்வேலி வானொலி நிலையக் கலைஞரா இருந்தேன். வானொலி நாடக விழாவில் தொடர்ந்து நான் நடித்துக் கொண்டிருந்தேன்.
மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதிய ‘திமலா’ என்கிற நாடகத்தில் 4 பாத்திரங்களில் நான் நடித்திருந்தேன். ‘ஜோல்னா ஜவஹர்’ நான்கு வேடங்களில் நடித்த ’திமலா’ நாடகம் என்று செய்தித்தாள்களில் விமரிசையாக அப்போது செய்தி வந்தது.
மாணவர்களையும் தொலைக்காட்சி நாடகங்களில் நடிக்க வைக்கணும்னு விரும்பி உள்ளே நுழைச்சேன். பட்டிமன்ற பேச்சாளர்களாக, தன்னம்பிக்கைப் பேச்சாளர்களாக அவர்களை உருவாக்கினேன்… ஒரு நாடகத்துல என்னுடைய மாணவர்கள் 10 பேரை நடிக்கவைத்தேன். நாடகம் நடந்தது கன்னியாகுமரி ஒட்டிய முட்டம் போன்ற பகுதிகளில். கன்னியாகுமரியில ஒரு அறை எடுத்து தங்கி காலையிலேயே ஒப்பனை செய்து மாணவர்களை அந்த இடங்களுக்கெல்லாம் அழைத்துப் போய் வருவேன்… அதில் மாணவர்களுக்கு பெரிய நடிகர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் போல ஏற்பட்டது. என்னை இயக்கிய இயக்குநரே இந்த மாணவர்களை வைத்து நாடகம் எடுத்தார். ‘மன்னிக்கத் தெரியாதவன்’ அப்படிங்கற இந்த நாடகம் தமிழன் தொலைக்காட்சியில் நான்கு வாரம் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டது. இந்த அனுபவத்தை அந்த மாணவர்கள் வாழ்க்கையில மறக்கவே மாட்டாங்க.
மாணவர்களை போட்டிக்கு அனுப்பணும்னா ஒருத்தர், ரெண்டுபேரை அனுப்பமாட்டேன்… ஒரு பத்து பேரை அனுப்பறது… பத்து பேருக்கும் பத்துவிதமாக தயார் பண்ணிக் குடுப்பேன்… அவர்கள் பரிசும் வாங்கிட்டு வந்துடுவாங்க… இதிலே என் மாணவன் ராகவேந்திரன் என்ன பண்ணுவான்… பத்துபேருக்கும் நான் எழுதிக் கொடுத்ததை அவன் வாங்கிவச்சுக்கிடுவான். இப்போ பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு இயக்குநராக இருக்கிற அவனுக்கு அப்போ நான் எழுதிக்கொடுத்தது இப்பவும் பயன்படுறதா சொல்லும்போது எனக்கு மகிழ்ச்சி என்பதோடு மட்டுமல்லாமல் அவனுடைய ஆவணப்படுத்துதலை கண்டு நான் வியந்தேன்.
இதே போல வெளிநாட்டில் வேலை பார்க்கும் என் மாணவன் தர்மராஜ் ஒரு நாள் அலைபேசியில் என்னிடம் பேசும்போது அழுதுவிட்டான்… “என்னடா… நான் ஏதாவது தப்பா பேசிட்டேனா” என்றேன். “இல்ல சார்… நான் இங்க பொறியாளரா தேர்வானபோது எனக்கு ஒரு சான்றிதழ் கூடுதல் பலமா இருந்துச்சு… அது என்ன சான்றிதழ்னா மாநில அளவில பேச்சுப்போட்டியில நான் பரிசு வாங்கியிருந்ததுதான்… அதைவச்சுத்தான் இந்த வேலை கிடைத்தது… நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ஒரு அரைப்பக்க வசனத்தை பேசமுடியாம திணறியபோது எனக்கு ஊக்கம் கொடுத்து, ‘டேய் உன்னைய மாநில அளவுல பேச்சுப்போட்டில பரிசு வாங்கவைக்கிறேன் சொல்லி அதை செஞ்சு காட்டினீங்க… அதுதான் இப்போ எனக்கு இந்த வேலைக்கு உதவியா இருந்துச்சு சார்; அதை நினைச்சுத்தான் அழுதேன்’ என்றான்.
அதே போல விஜயகாந்த் என்கிற மாணவன் விகடன் மாணவ நிருபரானான்… மைக்கேல் பவுல் என்கிற மாணவன் அரட்டை அரங்கத்தில் பேசி எல்லாருடைய கவனத்தையும் பெற்றான். சூ.ம. ஜெயசீலன் என்கிற என் மாணவன் இப்பவரைக்கும் 25 நூல்களுக்கும் மேல் எழுதி வெளியிட்டுள்ளான். அவனை என்னுடைய பிள்ளை என்று சொல்வதில் எனக்கு ஒரு பெருமை, கர்வம்… ஆசிரியரா எனக்கு அந்த கர்வம் வரத்தானே செய்யும். இப்போது ‘அலெக்ஸ்-ன் வொண்டர் லாண்ட்’ என்ற நிகழ்ச்சி மூலம் பல நாடுகளிலும் நிகழ்ச்சிகள் நடத்தி கலக்கி வருகிற அலெக்ஸாண்டர் பாபுவை முதன்முதலில் வானொலியில் நடிக்கவைத்தவன் நான்தான் என்பதை நினைத்தும் அவனது வளர்ச்சியை நினைத்தும் மகிழ்ச்சியடைகிறேன்.
பேச்சுப் போட்டின்னு மட்டுமில்ல… நாடகப் போட்டி, நடனப் போட்டி, வினாடி வினா போட்டி இப்படி எல்லாவற்றுக்கும் மாணவர்களை அழைத்துப்போவேன். எப்பவுமே அரசு அறிவிப்பு போட்டி நாளை மறுநாள் நடக்கப்போகிறதென்றால் இன்றுதான் எங்களுக்குத் தகவல் வரும்… இரண்டொரு நாளில் மாணவர்களைத் தயார் செய்ய வேண்டும். அப்படியொரு சுவையான அனுபவம்… நாடகப் போட்டி ஒன்று இராமநாதபுரத்தில… பள்ளி நிர்வாகம் ஒரு நாள் முன் மாணவர்களை அழைத்துச் சென்று அந்தப் போட்டியில கலந்துக்க சொன்னாங்க… மாணவர்களிடம் கேட்டேன், அவர்களும் ‘சிறப்பா செஞ்சிடலாம் சார்…’ என்றார்கள். அன்றே நாடகத்தை தயார் செய்து மறுநாள் காலையில் போட்டிக்குப் போகும்போதே கடைசி இருக்கைகளில் மாணவர்களை வைத்துக்கொண்டு ஒவ்வொரு காட்சியையும் விளக்கி அவர்களுக்கு பேருந்திலேயே பயிற்சி கொடுத்தேன்.
இராமநாதபுரத்துல இறங்கி ஒப்பனையெல்லாம் முடிச்சு நாடகம் நடக்கற இடத்துக்குப் போன மாணவர்களில் ஒருவன் திரும்பி என்னிடம் வந்து, “சார்… எல்லாரும் நடிக்கிறாங்க… எங்கள நடிக்கமுடியாதுன்னு சொல்றாங்க சார்…” என்றான். “ஏன்டா?” என்றேன். “நாடகத்தில் ஆங்கிலம் அல்லது இந்தியில தான் பேசி நடிக்கணுமாம்… தமிழ்ல நடிக்கக்கூடாதாம்” என்றான். எனக்கு உடனே ஒரு யோசனை உதயமாயிற்று. “டேய் நான் சொல்றபடி செய்ங்க” என்று சொல்லி ஒரு துண்டுச் சீட்டுல “நாங்கள் தமிழ் நாடகப் போட்டி என்றுதான் வந்தோம். உடனடியாக நீங்கள் சொல்கிற மொழிகளில் தயார் செய்யமுடியாது… எங்கள் மாணவர்கள் சர்வதேச மொழியில் நடிப்பார்கள்… மௌனம்… நீங்க எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்… மாணவர்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள்…” அப்படின்னு எழுதி அந்த மாணவனிடம் கொடுத்து, வாசிக்கச் சொன்னதை நடிக்கச் சொன்னேன். மாணவர்களும் மௌனமாகவே அந்த நாடகத்தை நடித்துக் காட்டினார்கள்.
அந்த நாடகம் முதல் பரிசு பெற்றது மாணவர்களை மட்டுமல்ல; என்னுடன் வேலைபார்க்கும் ஆசிரியர்களைக் கொண்டும் நிகழ்ச்சி தயார்செய்து கதம்ப மாலைங்கற பேரில அரைமணி நேர நிகழ்ச்சியாக மதுரை வானொலியில நடத்தினேன். முப்பதாண்டுகளுக்கு முன்பு சிலப்பதிகாரத்தில் உள்ள வழக்குரை காதையை மட்டும் எடுத்து சந்தக்கவிதை நாடகமா எழுதி அதை மதுரை வானொலியில நடிச்சோம். இதிலே நிறைய ஆசிரியர்களும் மாணவர்களும் நடித்திருந்தார்கள். மாணவர்கள் வானொலி நிலையத்திற்குள் வந்து வானொலியில் எப்படி நிகழ்ச்சிகளை தயாரிக்கிறார்கள், ஒலிவாங்கியில் பேசுவது எப்படி என்றெல்லாம் தெரிந்து கொள்வதில் அவர்கள் மகிழ்வதைப் பார்ப்பதில் எனக்கொரு மகிழ்ச்சி. என்னோடு பணியாற்றிய ஆசிரியர் ஒருவர் பெயரைச் சொல்றது தப்பில்லன்னு நினைக்கிறேன்… மகாராஜாங்கற ஆசிரியர் அவரை அரட்டை அரங்கத்தில பேசவைக்கக் கூட்டிப்போனேன்.
நாட்டு நலப் பணித்திட்டத்தில் மாணவர்களை ஈடுபடுத்திய அனுபவம் ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள்
நான் ஒரு பத்தாண்டுகளாக நாட்டு நலப் பணித்திட்டத்தில் திட்ட அலுவலராக இருந்தேன். ஒரு பத்து நாட்கள் காலாண்டு அல்லது அரையாண்டு விடுமுறைநாட்களில் பள்ளியை விட்டு வேறொரு கிராமத்தில் சென்று அக்கிராமத்தை தத்தெடுத்து அங்கு மாணவர்களை வைத்து கிராமத்துக்கு வேண்டிய பணிகளைச் செய்வோம். அப்படி ஒரு கிராமத்திற்கு மாணவர்களை அழைத்துச் சென்றேன். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் எனது மாணவர்களை நாட்டு நலப்பணிக்கு அழைத்துச் செல்வேன். அதில் நிறைய சுவாரஸ்யமான அனுபவங்கள் எங்கள் அனைவருக்கும் கிடைத்தது.
அப்படி அழைத்துச் சென்றவர்களில் இருவர் ஆசிரியராகவும், ஒருவன் ராணுவத்தில், இன்னும் இருவர் வேறிரு துறைகளிலும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.
மாணவர்கள் ‘மாமா’ என உங்களை செல்லமாக அழைப்பது, ‘ஜவஹர்’ என தங்கள் பெயருக்கு முன்பின் மாணவர்கள் சேர்த்து எழுதுவது பற்றிச் சொல்லுங்களேன்…
நான் வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து பார்க்கிற அல்லது அனுபவித்து வருகிற ஒரு நிகழ்வு… கவிஞர் வாலி ஒரு கவிதை எழுதியிருப்பார், “மரங்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டன… இந்த மனிதர்கள் நம்மை வைத்து எத்தனை சிலுவைகள் செய்கிறார்கள்… ஆனால் அவர்களுக்குள் ஒரு ஏசுவைச் செய்ய முடியவில்லையே” என்று. இதைக் குறிப்பிடுவதற்குக் காரணம், தம் ஆசிரியர் பெயரை தனதாக்கிக்கொண்ட அம்பேத்கர், கல்கி போன்றவர்களைத்தான் எடுத்துக்காட்டாய் சொல்கிறோமே தவிர அதற்கடுத்து மாணவர்களே இல்லையா என்றால் என்னைப் பொறுத்தவரை நிறைய இருக்கிறார்கள், நமக்குத் தெரியவில்லை. என்னுடைய முதல் மாணவன் பழனிநாதன்.
அவன் ‘ஜவஹர் பழனிநாதன்’ என்றுதான் எழுதுவான். எனக்கு கடிதம் எழுதும்போதும் அப்படித்தான் எழுதுவான். அவனை என் மூத்த பிள்ளை என்றுதான் சொல்லணும் பிரபாகரன் என்கிற ஒரு மாணவன் கையெழுத்துப் போடும்போது ‘ஜவஹர்கரன்’ என்றுதான் போடுவான்… பாலசுப்பிரமணியன் என்றொரு மாணவன் அவனுடைய மின்னஞ்சல் முகவரயில ‘ஜவஹர் பாலா’ என்று வைத்துக்கொண்டான்.
வெங்கடகிருஷ்ணன் என்றொரு மாணவன் ‘ஜவஹர் வெங்கடகிருஷ்ணன்’ என்று வைத்துக்கொண்டான். இன்னொரு மாணவன் மணிகண்டன். அவனுடைய அண்ணன் வந்து என்னிடம் சொன்னார். “சார் உங்க பேரைச் சேர்த்து ‘ஜவஹர் மணிகண்டன்’ அப்படின்னு வீட்ல எழுதிப்போட்ருக்கான் சார்…” என்றார். நான் அவனிடம் அப்படில்லாம் பேரைச் சேர்த்து எழுதக்கூடாது என்றேன். “பீமாராவ் என்கிற மனிதர் அவர் ஆசிரியரிடம் அனுமதி பெற்றா தனது பெயரை அம்பேத்கர்னு மாத்திக்கிட்டார்?’ என்ற அவனது பதில் என்னை பேசவிடாமல் செய்தது. அப்படி ஒரு பிள்ளை, ஆனால் பாவம் இப்படிப்பட்ட அருமையான பிள்ளையை கொரோனா கொண்டுபோய்விட்டது… அது எனக்கு மிகப் பெரிய வேதனை.
இப்படி நிறைய மாணவர்கள்… என்னிடம் படிக்கும் வரை “சார்… சார்” என்கிற மாணவர்கள் படித்து முடித்தபிறகு என்னை ’மாமா’ என்றும் என் மனைவியை ‘அத்தை’ அல்லது ‘அம்மா’ என்று அழைத்து எங்கள் வீட்டுப் பிள்ளைகளாகவே மாறிவிடுவார்கள். இப்படி என் மாணவர்கள் எல்லோருமே எனக்கு உறவாகவே ஆகிக் கொண்டிருக்கிறார்கள்…
உங்கள் ஆசிரியருக்காக நீங்கள் புத்தகம் வெளியிட்ட அனுபவம்…
இந்தக் கேள்விக்கு பதில் சொல்லும் இந்த நேரத்தில் நான் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துக்கு நன்றி சொல்லணும். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தி வருகிறது. அந்த ஆண்டு அறிவித்த போட்டியின் தலைப்பு என்னன்னா ‘என்னைச் செதுக்கிய மாணவர்கள்’ இந்தத் தலைப்பில் நான் எழுதிய கட்டுரை மாவட்டத்திலும் முதலாவதாக வந்தது… மாநிலத்திலும் முதலாவதாக வந்தது. ‘கல்விச் சுரங்கம்’ என்கிற இதழில் நான் தொடர்ச்சியாக ‘சிற்பியைச் செதுக்கும் சிற்பங்கள்’ என்ற தலைப்பில் என்னுடைய மாணவர்களைப் பற்றி எழுதினேன். இதை நூலாக பாரதி புத்தகாலயம் வெளியிட்டது. அந்த நூல் வெளியீட்டில் என்னுடைய நண்பர் ஒருவர், “ஜவஹர்… முகஸ்துதிக்காக நான் சொல்லல… எனக்குத் தெரிந்து ஒரு எழுத்தாளர் தம்முடைய ஆசிரியரைப் பற்றி ‘என் ஆசான்’ (இளசை அருணா) என்றும், தம்முடைய மாணவர்களைப் பற்றி ‘சிற்பியை செதுக்கும் சிற்பங்கள்’ என்றும் நூல் எழுதியது நீங்கள் ஒருவராகத்தான் இருக்கும்” என்றார். என் ஆசிரியரைப் பற்றி நான் எழுதியது ‘என் ஆசான்’ என்ற நூல்.
சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் நீங்கள், இதைப் பற்றி…
நான் பணியாற்றும் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சி எல்லாவற்றுக்கும் நான் தான் நிகழ்ச்சி வர்ணனை செய்வேன்… ஒரு நிகழ்ச்சியின் போது மறைந்த முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணன் அவர்கள் வந்திருந்தார். இரண்டு முறை அவர் எங்கள் பள்ளி நிகழ்வுக்கு வந்திருக்கார். ஒரு முறை என் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பைப் பார்த்து, எங்கள் பள்ளி நிர்வாகியிடம், “ஃபாதர், இவரை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்” என்றார். இன்னொரு முறை அவர், “நான் ஜவஹர் சார் வர்ணனையிலே மயங்கிட்டேன். இவரை ‘வர்ணனைப் பெட்டகம்’ அப்படிங்கற விருது கொடுத்து வாழ்த்துகிறேன்” என்றார்.
அதே போல அய்யா சுதர்சன நாச்சியப்பன் ஒரு நிகழ்வுக்கு வந்தபோது மேடையிலேயே, “எனக்கு ஜவஹர் சாரைப் பார்த்தாலே பயமா இருக்கு… எனக்கு எதிரா தேர்தல்ல நின்னா அவரு ஜெயிச்சுருவாருன்னு நினைக்கிறேன்” அப்படின்னு அவர் வாயால என்னை நகைச்சுவையாப் புகழ்ந்தது எனக்குக் கிடைத்த பேறு. ஒரு நிகழ்ச்சிக்கு வந்த மாவட்ட கவுன்சிலர் அம்மா அவர்கள் எங்கள் பள்ளி நிர்வாகியிடம், “சார், நீங்க அழைச்சதுக்காக மட்டும் வரல… ஜவஹர் சாரோட பேச்சையும் வர்ணனையும் கேட்பதற்காகவே இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்” என்றார். உடனே எங்கள் பள்ளி நிர்வாகியும் பெருந்தன்மையாக, “உண்மைதான் அம்மா… சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பதுமட்டும்தான் நான்… அவர்களைக் கவனிப்பது, செயலால் அவர்களை வசியப்படுத்துவது எல்லாமே ஜவஹருடையதுதான்…” என்றார்.
பல்வேறு விடுதலை வீரர்கள் இருக்கையில் வ.உ.சி. தொண்டராக மாறியது ஏன்?
ஏற்கெனவே நான் சொன்ன மாதிரி வ.உ.சி. பிறந்த ஓட்டப்பிடாரத்தில் பிறந்தவன் நான். வ.உ.சி. சுயசரிதையில் நகரச் சிறப்பைப் பற்றி சொல்லும்போது,
‘…உலக நாயகி உவந்து வடக்கும்
சிலசிறு தேவர்கள் சிறந்து கிழக்கும்
குணமே புரியும் கணேசன் தெற்கும்
திருமால் உடனே சிவபிரான் மேற்கும்…’ என்று ஊர் அடையாளம் சொல்லியிருப்பாரு. அந்த வழியில் சொல்வதாக இருந்தால், எங்க ஊர் வடக்கே உலகம்மன் கோயில், கிழக்கே சின்னச் சின்ன தேவர் கோவில்கள், தெற்கே விநாயகர், மேற்கே திருமாலும் சிவபெருமானும் நடுவுல வ.உ.சி. இதுதான் என்னைப் பொறுத்தவரையில். ஏனென்றால் நான் எங்கள் வீட்டை விட்டு வெளியே வந்தேன் என்றால் நேராகப் பார்ப்பது வ..உசி. சிலையைத்தான்.
வ.உ.சி. சிலை முதலில் தெருவைப் பார்த்தால் எங்க வீட்டைத்தான் பார்க்க வேண்டும். நான் வீட்டை விட்டு வெளியே வந்தால் முதலில் அவரைப் பார்த்த பின்புதான் வீதிக்கே வர முடியும். அவரை நான் பார்த்துக் கொண்டேதான் இருப்பேன். இதுதான் அவர் எனக்குள்ளே நுழைந்தது.அதுபோக நான் பேச்சுப் போட்டிக்காக ஒன்பதாம் வகுப்பில் பேசுன முதல் பேச்சு வ.உ.சி. பற்றித்தான். அதுவும் வ.உ.சி. வீட்டில் பேசினேன்.
கல்லூரிக்கு வந்த பிறகு நான், என்னுடைய நண்பர்கள் காமாட்சி நாதன், பழனிநாதன், சிற்றம்பலம் ஆகியோர் சேர்ந்து வ.உ.சி. இலக்கிய மன்றம் ஆரம்பித்தோம். அதில் நான்தான் தலைவராக இருந்தேன்.
கல்லூரில படிக்கிற காலத்துல தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு எல்லாம் நான் புத்தாடை எடுத்ததில்ல… செப்டம்பர் 5, ஆகஸ்டு 15, ஜனவரி 26க்குத்தான் புத்தாடை எடுத்திருக்கிறேன். இன்னொன்னு… இதை நான் பெருமைக்காகச் சொல்லல… நிறைய ஊர்ல ஏதாவது விழா வந்தாதான் அங்க இருக்கிற சிலைகளை குளிப்பாட்டுவாங்க அல்லது புதிதாக வண்ணம் பூசுவாங்க… ஆனா நான்,
நண்பர்கள் பழனி, காமாட்சி மூணு பேருமா சேர்ந்து எப்பெல்லாம் வ.உ.சி. சிலை அழுக்கா இருக்குதுன்னு படுதோ அப்பல்லாம் சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றிக் குளிப்பாட்டுவோம்… அதுவும் சாதாரணமா இல்ல… திண்டு மேல ஏறி நின்னு கண்ணிடுக்கு, நாசியிடுக்குகளில்கூட அழுக்கில்லாம சுத்தம் செய்து குளிப்பாட்டுவோம்… ஒருநாள் முழுக்க வெயிலில் காயவிடுவோம்… அதுக்கப்புறம் எண்ணெய் பூசி பளபளப்பாக்குவோம்… கருங்கல் சிலை பளபளன்னு மின்னும்…
சுதந்திர தினம், குடியரசு தினத்துக்கு முந்தைய நாளும் நானும் என் நண்பர்களும் தூங்க மாட்டோம்… வ.உ.சி. வீட்டிலிருந்து வ.உ.சி. சிலை வரைக்கும் தெருவைச் சுத்தம் செய்வோம்… சவுக்குக் கம்புகளைக் கட்டி பக்கத்தில இருக்கிற வாழைத் தோப்புல சின்ன சின்ன வாழைக் கன்றுகளை எடுத்துவந்து தோரணங்கள் கட்டி, சிலைக்கு எதிரே கோலமிட்டு அந்தத் தெருவையே ஜெகஜோதியா மாத்திடுவோம்… அந்தத் தெருவாசிகள் காலையில எழுந்து பார்த்து ஆச்சரியப்படுவார்கள்… அன்று கொடியேற்ற துப்புரவுத் தொழிலாளரையோ அல்லது ஒரு வயதான தியாகியையோ கூப்பிட்டு கொடியேற்றச் சொல்லுவோம். இப்படித்தான் வ.உ.சி. என்னை முழுவதுமாக ஆக்கிரமித்தார்.
1988 களிலிருந்து எங்கள் வ.உ.சி. இலக்கிய மன்றம் சார்பாக வ.உ.சி. பிறந்த நாளை முழுநாள் விழாவாகக் கொண்டாட ஆரம்பித்தோம். இந்த நேரத்திலதான் எங்கள் ஆசிரியர் இளசை அருணா அவர்கள் எங்களை இனங்கண்டு எங்களை வழிநடத்த ஆரம்பித்தார். அப்பதான் வ.உ.சி. சிலைக்கு நிழற்குடை ஏற்படுத்த சில அரசியல் கட்சிகள்கூட உண்ணாவிரதம் போன்ற போராட்டம் நடத்தினாங்க. ஆனா யாருமே நிழற்குடை அமைக்கல… எங்கள் ஆசிரியர் வழிகாட்டுதலில் இலக்கிய மன்றம் சார்பாக தமிழ்நாடு முழுக்க நிழற்குடை அமைக்க நிதி கேட்டோம். ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் கூட சிலபேர் நிதி கொடுத்திருக்காங்க. அப்படிச் சேர்த்த நிதியிலதான் நாங்க நிழற்குடை அமைத்தோம். இப்பவும் வ.உ.சி. சிலைக்கு இருக்கிற நிழற்குடை நாங்க அமைச்சதுதான்.
நான் கல்லூரியில படிக்கும்போது ‘வ.உ.சி. வளர்த்த தமிழ்’ என்கிற ஒரு ஆய்வுக் கட்டுரைப் போட்டி நடத்தினார் நாடறிந்த இலக்கியச் செம்மல் பேராசிரியர் ப. வளன்அரசு அவர்கள். அதற்காக நான் 90 பக்கத்துல ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதினேன். வ.உ.சி. எழுதிய மெய்யறம், மெய்யறிவு போன்றவற்றை வ.உ.சி. இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த நூலகத்திலிருந்து எடுத்துப் படித்தேன். அப்படிப் படித்ததன் விளைவால் வ.உ.சி. பன்முகத்தன்மைகொண்ட ஒரு மிகப் பெரிய ஆளுமையாக என்னுள் விசுவரூபம் எடுத்து நின்றார்.
தமிழக அளவில் வ.உ.சி. 150 பேச்சுப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளீர்கள். இவற்றில் சில மாவட்டங்களில் ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துகொள்ளுங்களேன்.
வ.உ.சி. 150 போட்டியை தொடங்கியது கிருஷ்ணகிரியிலதான். என்னுடைய ஆசிரியர் இளசை அருணா அவர்கள் அந்த நேரத்தில் கிருஷ்ணகிரியில் இருந்தார்கள். அதனால் அங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பது என் அவா. அதற்கு என்னுடைய மாணவன் ராகவேந்திரன் அவனுக்குத் தெரிந்த நண்பர்கள் மூலமாகவும், ஸ்ரீராம் குழுமத்தில் மண்டல உதவி பொது மேலாளர்களில் ஒருவராக இருக்கும் என் மாணவன் சரவணன் மூலமாகவும் இந்த மாவட்டத்தில் முதல் போட்டியை நல்லவிதமாக நடத்த வாய்ப்பமைந்தது.
ஒவ்வொரு மாவட்டத்தில் போட்டி நடத்துவதும் எனக்கு நல்ல அனுபவமாகவும், படிப்பினையாகவும் இருந்தது. இதுல தேனிமாவட்டம் என்னை ரொம்பவும் சுத்தலில் விட்ட மாவட்டம். தேனி எப்படி ஒவ்வொரு மலராகப் போய் சுற்றி சுற்றி வருமோ அப்படியான அனுபவம்தான் இங்கு எனக்கு கிடைத்தது. இங்கு எனக்கு தாகூரின் கவிதை வரிகள் ஞாபகம் வருகின்றன. “நான் ஆறு, மலை, அருவிகளைப் பார்க்க பல ஊர்களுக்குப் பயணித்தேன்… செலவழித்தேன்… ஆனால் என் வீட்டிற்கு அருகேயுள்ள புல்லின் மீதுள்ள பனித்துளியைப் பார்க்க மறந்துவிட்டேன். அந்தப் பனித்துளி நம்மைச் சுற்றியுள்ள முழு உலகையும் காட்டுவதை கண்டு அதிசயித்தேன்” என்பதுதான் அந்த வரிகள். தேனி மாவட்டத்தில் அப்படித்தான் பலபேரைக் கேட்டு போட்டி நடத்த இடம் கிடைக்காமலிருந்தது. அப்புறம் என்னுடைய அருகிருந்த நண்பர் மூலமாகத்தான் கிடைத்தது. போட்டி நடத்துவதற்கு இடம் கிடைப்பதற்குப் பட்ட பாடு… அப்பா… அது பெரிய அனுபவம். சில நேரங்களில் விரக்தியின் எல்லைக்கே போய்விடுவேன்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தோழர் ரெங்கையா முருகன் அவர்கள் உதவியால் அருணாசலா பள்ளி கிடைத்தது. நிர்வாகியிடம் “ஐயா, சனிக்கிழமை போட்டி நடத்துகிறோம்… மாணவர்களுக்கு தேவைப்படுகிற கழிப்பறைகளையும் பயன்படுத்துவோம்” என்றேன். அதற்கு அப்பள்ளி நிர்வாகி, “சார்… சனிக்கிழமை இது முழுக்க முழுக்க உங்கள் பள்ளி… நீங்கள் எப்படி வேண்டுமோ அப்படி பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்றார். இதை அவர் சொல்லவில்லை… அவர் வாயில் நின்று வ.உ.சி. சொல்வதாக நான் நினைத்து மகிழ்ந்தேன்.
விழுப்புரம் மாவட்டத்தில வ.உ.சி. போட்டியை நடத்த இடம் கேட்டேன். விழுப்புரம் அருட்சகோதரிகள் நடத்துகிற கல்லுரியில் இடம் கொடுத்தார்கள். அங்கு மிகப் பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார்கள். நான் கல்லூரிக்கு நுழைந்தபோது நுழைவாயிலிலிருந்தே கரும்பலகையில் ‘வ.உ.சி. இலக்கிய வானம் நடத்தும் போட்டி’ என்று எழுதி வைத்திருந்தார்கள். பேராசிரியர்களும் என்னை அழைத்துப் போனார்கள். அரங்கத்திற்கு கல்லூரியில் உள்ள எல்லா பேராசிரியர்கள் வந்திருந்தார்கள். முறையாக வரவேற்பு நடனமெல்லாம் வைத்து, குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள். பாரம்பரிய முறையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்தார்கள். “இப்படி ஒரு ஏற்பாட்டை எனக்காக நீங்கள் செய்யவில்லை… வ.உ.சி. உங்களைச் செய்ய வைத்திருக்கிறார்” என்று மிகவும் மனம் நெகிழ்ந்து அவர்களிடம் சொன்னேன்.
இதே போல திருவாரூரிலும், சென்னையிலும், புதுவையிலும் மிகப் பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார்கள். எனக்கு முன் பின் தெரியாதவர்கள் எல்லாம் இப்படி பிரமாண்டமாக செய்திருந்தார்கள். இது எல்லாமே வ.உ.சி.க்கு கிடைத்த வெற்றிதான். போட்டி நடத்துவதற்கு இடம் கிடைத்தாலும் போட்டி நடத்தும்போது ஏற்படுகிற நடைமுறைச் சிக்கல்கள் பெரிய அனுபவம். என்னன்னா நான் இருக்கிற மாவட்டத்தைத் தவிர வேறு மாவட்டங்களில் யாரையும் எனக்குத் தெரியாது. போட்டிக்கான இடமாக ஒரு பள்ளியோ அல்லது கல்லூரியோ அந்த மாவட்டத்தில் கிடைக்கணும்… அங்குள்ள மாணவர்களுக்குத் தெரியப்படுத்தணும்… சிறப்பு அழைப்பாளர்கள், நடுவர்களை அழைக்கணும்… இப்படி பலவும் எனக்குச் சவாலாக இருந்தது.
ஈரோடு, திருப்பூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை இது போன்ற மாவட்டங்கள் எல்லாவற்றிலும் 20-25 ஆண்டுகளுக்கு முன் என்னிடம் பயின்ற மாணவர்கள் இருந்தார்கள். அவர்களை வைத்து ஏற்பாடு செய்தேன். எனக்கு அறிமுகம் இல்லாத வட மாவட்டங்களில் இது எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. யாராவது நண்பர்கள் மூலமாக அம்மாவட்டத்தில் பணியாற்றும் ஒரு ஆசிரியர் அலைபேசி எண்ணைக் கொடுப்பாங்க. அவரிடம் நான் பேசுவேன். “எங்கள் பள்ளியில் அப்படி நடத்த முடியாது”, “கொரோனா தொற்றுகாலம் நடத்த முடியாது”, “இல்லசார் எங்கள் கல்லூரியில் வாய்ப்பில்லை” என்பது போல சொல்லுவார்கள். அப்படிச் சொல்பவர்களிடமே வேறு யாரையாவது அறிமுகப்படுத்தச் சொல்வேன்.
கொடி ஒரு சின்ன குச்சி கிடைத்தால் அதைப் பற்றிக் கொண்டு படருமே அப்படி யாராவது ஒருவருடைய அலைபேசி எண் கிடைத்தால் அவர் மூலமாக அடுத்த, அடுத்த நபர்களின் எண்ணை வாங்கி போட்டி நடத்த இடம் பிடிச்சேன். உதாரணத்துக்குச் சொல்லணும்னா வேலூர் மாவட்டத்தில் எந்தப் பள்ளி, கல்லூரியும் கிடைக்கல. அப்ப பேராசிரியர் அமுதா அவர்களின் எண் கிடைத்தது. அவர்களை தொடர்பு கொண்டபோது, “இல்ல சார்… எங்கள் கல்லூரியில முடியாது… இப்ப நான் நாட்டு நலப் பணித்திட்டத்திற்காக வேலூர் பெண்கள் சிறையில ஒரு வாரம் ‘கேம்ப்’ல இருக்கேன்…” என்றார். உடனே அவரிடம், “மேடம், நீங்க நாட்டு நலப் பணித் திட்ட அலுவலரா… நானும் பத்து ஆண்டுகளாக எங்கள் பள்ளியில் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலராக இருந்தேன்” அப்படின்னு அதைப் பற்றி கொஞ்சம் பேசிவிட்டு, “நீங்கள் உங்கள் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டத்தோடு வ.உ.சி. இலக்கிய வானமும் இணைந்து இந்தப் போட்டியை நடத்தலாமே” என்றேன். அவர்கள் ஒத்துக்கொண்டு எனக்கு உதவினார்கள்.
தங்களின் வ.உ.சி. பணிக்கு தாங்கள் பணியாற்றும் பள்ளி, தங்கள் மாணவர்கள், தங்கள் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு பற்றி…
வ.உ.சி. 150 பேச்சு நடத்த ஆரம்பித்ததிலிருந்து நான் பணியாற்றும் பள்ளிக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தாதவண்ணம்தான் நடத்தி வந்தேன். முதற்போட்டியை மட்டும் சரியாக நான் திட்டமிடமுடியவில்லை… கிருஷ்ணகிரியில நடத்தின முதல் போட்டி மட்டும் போட்டி நடைபெற்ற கல்லூரியில வேலைநாள்லயே போட்டியை நடத்தணும் என்றார்கள். அதனால் சென்ற ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை. அன்று மட்டும் நான் பள்ளிக்கு விடுப்பு கொடுத்துவிட்டுப் போய் நடத்தினேன்.
அதற்குப் பிறகு எல்லா மாவட்டங்களிலேயும் விடுப்பு நாள்கள் அதாவது ஞாயிற்றுக்கிழமைதான் போட்டி நடைபெற்றது. சென்ற ஆண்டு இன்னொரு சோதனை என்னன்னா கொரோனாவுக்குப் பிறகு பள்ளி திறந்ததால் எல்லா சனிக்கிழமைகளிலும் பள்ளி வேலைநாள். அதனால சனிக்கிழமை பள்ளியை விட்டு வந்து அன்று இரவு எந்த மாவட்டத்தில் போட்டியோ அங்கு கிளம்பிப் போவேன்… ஞாயிறு போட்டியை முடித்துவிட்டு அன்று இரவு அங்கிருந்து கிளம்பி திங்கள் காலை ஊருக்கு வருவேன்… அன்றே பள்ளிக்குப் போய்விடுவேன்.
எந்த ஞாயிறுமே எனக்கு ஓய்வில்லை. அதுபோக வீட்டில் குழந்தைகளோட, மனைவியோட பேசுவதற்கே நேரமில்லை… பயணத்திலயும் சரி, வீட்டிற்கு வந்தபிறகும் சரி அடுத்த போட்டிக்கு யாரைத் தொடர்புகொள்ளலாம், எங்கு நடத்தலாம், சிறப்பு அழைப்பாளர்கள் யார் என்று அதே சிந்தனையில அலைபேசியில் நண்பர்களைத் தொடர்பு கொண்டபடியே இருப்பேன். இந்த நேரத்தில என் மனைவியைப் பற்றி நான் சொல்லியாகணும்…
என்னுடைய மனைவி புற்றுநோயாளி. சிகிச்சையில் தான் இருக்கிறார். அவளுக்குக் கடினமான வேலைகள் செய்ய முடியாது… நான் கூடயிருந்து பணிவிடை செய்யணும்… அந்தச் சூழலிலும் என்னுடைய பணி, பயணம், இந்த வேள்வி தடைபட்டுவிடக்கூடாதென்று அவளுடைய வலியையும் வேதனையையும் பொறுத்துக்கொண்டு, ‘‘நீங்க தைரியமா போங்க… பாத்துக்கலாம்… ஒரு பணியை எடுத்திட்டீங்க.. தொய்வில்லாமல் அதை வெற்றிகரமா முடிச்சுடுங்க…’’ என்று சொல்லி என்னை ஊக்கப்படுத்திக் கொண்டேயிருப்பாள். குழந்தைகள். சின்னக் குழந்தைகள் – இரட்டைக் குழந்தைகள் நீண்டகாலம் கழித்துப் பிறந்த குழந்தைகள். 8 வயதுதான் ஆகிறது – அவர்களுக்கு விவரம் தெரியாது. அவர்கள் ‘‘என்னப்பா இந்த ஞாயிறாவது எங்களோட இருப்பீங்களாப்பா’’ அப்படின்னு கேட்கும்போது எனக்கே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும், இருந்தாலும் எடுத்த பயணத்தை முடிக்க வேண்டும் என்ற எண்ணம், என் மனைவியின் ஊக்கம் ஆகியவை என்னை உந்தித் தள்ளிக்கொண்டு சேர்த்தது.
இந்தப் பயணத்துக்காக நான் பள்ளியில விடுப்பே எடுக்கல… கோயம்புத்தூர் மாவட்டத்தில போட்டி நடத்தும்போது ஒரு சோதனை வந்தது. அங்கு போட்டிக்காக ஒரு ஞாயிறு என் மாணவர்கள் இரண்டு பேரிடமும், என் மாணவியினுடைய அப்பாவிடமும் சொல்லி ஏற்பாடு செய்திட்டேன். அதே ஞாயிறு சரியா எங்க பள்ளியில மூத்த மாணவர்கள் கூட்டம் (நான் முன்னாள் மாணவர்கள் என்று சொல்ல மாட்டேன். நிறைய பள்ளிகளில் முன்னாள் மாணவர்கள் மன்றம் என்பார்கள். இது மிகத் தவறான வார்த்தைப் பயன்பாடு. எந்த மாணவனும் தன்னுடைய ஆசிரியரையோ, பள்ளியையோ என் ‘முன்னாள் ஆசிரியர்’, ‘முன்னாள் பள்ளி’ என்று சொல்ல மாட்டான். அறுபது வயதானபோதும் அந்த மாணவன் ஆசிரியரையோ, படித்த பள்ளியையோ சொல்லும்போது ‘எங்க சார்’, ‘எங்கப் பள்ளிக்கூடம்’ என்றுதான் உரிமையோடு சொல்வான்.
சென்னை மாவட்டத்திற்கான போட்டி நடத்தும்போதும் எனக்கு ஒரு சோதனை ஏற்பட்டது. ஞாயிறு காலையில் சென்னை வந்து இறங்கிய பிறகு எனக்கு அலைபேசியில், ‘‘அண்ணன் இறந்துவிட்டார்’’ அப்படிங்கற செய்தி வந்தது. ஆனால் நான் போட்டியை நடத்தியாக வேண்டிய சூழல். போட்டியை நடத்தி முடித்துவிட்டு மாலைக்குப் பிறகு கிடைத்த பேருந்தில் ஏறிச் சென்றாலும் அடுத்த நாள் காலைதான் நான் ஊர்போய்ச் சேர முடிந்தது. அதற்குள் அடக்கம் முடிந்துவிட்டது. அண்ணனின் முகத்தைப் பார்க்க முடியவில்லை என்பது மிகுந்த வருத்தத்தைத் தந்தது. அப்போதும் வீடா, போட்டியா, வ.உ.சி.யா என்ற ஒரு இக்கட்டான சூழல் எனக்கு ஏற்பட்டது.
என்னுடைய மாணவர்களில் ராகவேந்திரன் அதிக பாராட்டுதலுக்கு உரியவன். நான் முன்பே சொன்னமாதிரி இந்தப் போட்டிகளின் தூண்டுகோல் அவன். ராகவேந்திரன், விஷ்வா, இளவரசு இவர்கள் மூவரையும் இந்த நேரத்தில் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.
கடவுள் மிக இக்கட்டான சூழ்நிலையைக் கொடுத்து இந்த நேரத்தில் நம்மை நினைக்கிறானா என்று சோதிப்பார் அப்படிங்கறாப்ல நிறைய காட்சிகளை நாம் திரைப்படங்களில் பார்த்திருப்போம். அதுமாதிரி எனக்கு வந்த சோதனையிலேயே மிகக் கொடுமையானது, நிறைவுச் சுற்றுப்போட்டி. ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிப் பிரிவிலும், கல்லூரிப் பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இரண்டு வெற்றியாளர்களைக் கொண்டு நிறைவுச் சுற்றுப் போட்டி ஓட்டப்பிடாரத்தில் செப்டம்பர் 3ஆம் தேதி வைத்திருந்தோம்.
செப்டம்பர் 1 ஆம் தேதி என் மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் உடம்பெல்லாம் வலிக்க ஆரம்பித்தது. மருத்துவர்கள் மீண்டும் புற்று நோய்க்கான பரிசோதனைகள் செய்து பார்க்க வேண்டும் என்றார்கள். செப்டம்பர் 3ஆம் தேதி ‘ஸ்கேன்’ எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். இது தான் சோதனையின் உச்சம். நான் போட்டியை நடத்துவதா, மருத்துவமனையில் மனைவியோடு இருப்பதா என்கிற மனப்போராட்டம். என் மனைவியுடைய அக்கா, அவர் மகள் மற்றும் மருமகன் ஆகியோரை அழைத்து அவர்களைப் பார்த்துக்கொள்ளச் செய்துவிட்டு நான் ஓட்டப்பிடாரம் சென்றேன். ‘உடல் அங்கே உயிர் இங்கே’ என்பார்களே அப்படி என் உடல்தான் ஓட்டப்பிடாரத்தில் இருந்தது, ‘ஸ்கேன் ரிசல்ட்’ என்னவோ, மருத்துவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பதைபதைப்பு என் உள்ளத்தில். இதையும் மீறி அன்று போட்டியை நடத்தி பள்ளி, கல்லூரி பரிசுக்கான மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அடுத்த நாள் நிறைவு விழாவையும் மிக சிறப்பாக நடத்தி முடித்தோம்.
ஓட்டப்பிடாரத்தில் நடந்த நிறைவு நாள் நிகழ்ச்சி பற்றிச் சொல்லுங்களேன்…
நிறைவு நாள் நிகழ்வு பற்றிச் சொல்வதற்கு முன் புதுச்சேரியில் நடத்திய போட்டி பற்றி சொல்லவேண்டும். ‘‘நீங்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் வ.உ.சி.க்கு பேச்சுப் போட்டி நடத்துவீர்களா? நாங்களும் வ.உ.சி.க்கு நன்றிக்கடன்பட்டவர்கள்தானே?’’ என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பெயரன் திரு. செல்வம் அவர்கள் என்னிடம் உரிமையாகக் கேட்டார். புதுச்சேரியிலும், காரைக்காலிலும் போட்டி நடத்த வைத்ததற்காக பாவேந்தர் பெயரனுக்கு நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன். மிக அதிக அளவில் இங்கு மாணவர்கள் வந்து கலந்துகொண்டார்கள். தமிழ்நாடு, புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களைக் கொண்டு நிறைவுச் சுற்று ஓட்டப்பிடாரத்தில் செப்டம்பர் 3ஆம் தேதி காலை, மாலை இரு வேளையும் போட்டி நடத்தி பள்ளிப் பிரிவில் முதல் மூன்று பேர், சிறப்பாகப் பேசிய ஒரு பத்துபேர், அதேபோல கல்லூரிப் பிரிவில் முதல் மூன்று பேர், சிறப்பாகப் பேசிய ஒரு பத்துபேர் என்று 26 பேரைத் தேர்ந்தெடுத்துவிட்டோம்.
வ.உ.சி. முகமூடியை ஒருவர் தயார் செய்வதாகக் கேள்விப்பட்டேன். நிறைவு நாளில் வந்திருக்கும் மாணவர்கள் எல்லோரையும் வ.உ.சி. முகமூடியை அணியச் செய்து போட்டி நடக்கும் அரங்குக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றால் ஓட்டப்பிடாரமே வ.உ.சியாக இருக்குமே என்று எண்ணினேன். முகமூடி தயார் செய்பவரிடம் என் எண்ணத்தைச் சொல்லி, ‘‘உங்களுக்குத் தெரிந்த ‘ஸ்பான்சர்’ யாராவது இருந்தால் அவர்களிடம் தொகையை வாங்கிக் கொண்டு எனக்கு 200 முகமூடிகளை அனுப்பி வைக்கமுடியுமா?’’ என்று கேட்டேன் அவரிடம். அவர் பெருந்தன்மையாக, ‘‘நான் ஏன் சார் ‘ஸ்பான்ச’ரைத் தேடணும்… நானே வ.உ.சி.க்காக ‘ஸ்பான்ச’ராகி 200 முகமூடிகளை உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன்’’ என்று அனுப்பி வைத்தார். ஓட்டப்பிடாரத்தில் செப்டம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆர்வலர்கள் என்று எல்லோருமே வ.உ.சி. முகமூடியை அணிந்துகொண்டு முக்கியத் தெருக்கள் வழியே ஊர்வலமாக போட்டி நடக்கிற அரங்கம் வரை சென்றோம். தெருக்கள் முழுவதும் வ.உ.சி.க்களாகவே வலம் வந்து இரண்டு நாளும் நிகழ்ச்சியை ஆரம்பித்தோம்.
நிறைவு விழாவில் அதாவது செப்டம்பர் 4ஆம் தேதி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கொடுத்தது மட்டுமல்லாமல் பலருக்கு விருதுகள் கொடுத்தோம். தமிழ்நாடு, புதுச்சேரிகளில் வ.உ.சி. 150 பேச்சுப் போட்டி நடத்த உதவிய பள்ளி, கல்லூரி, நிறுவனங்களுக்கு ‘வ.உ.சி. போற்றும் நிறுவனம்’ விருது, தமிழ்நாடு முழுக்க பல்வேறு துறைகளில் சாதித்த இளைஞர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு, ‘வ.உ.சி. போற்றும் இளைஞர்’ விருது, தமிழகம் முழுக்க வ.உ.சி.க்காக சேவை புரிந்து வருபவர்கள் – என் அறிவுக்கு எட்டிய எனக்குத் தெரிந்தவர்கள்; ஏனென்றால் இன்னும் எனக்குத் தெரியாமல் பலர் இருக்கிறார்கள் – ஈரோடு மாவட்டம் சித்தோடு என்கிற இடத்தில் சுமார் 40 ஆண்டுகளாக வ.உ.சி. மன்றம் வைத்து நடத்துகிற பெரியவர் ஆறுமுகம் ஐயா, தோழர்கள் ரெங்கையா முருகன், குருசாமி மயில்வாகனன், ஆ. அறிவழகன் போன்றவர்களுக்கு ‘வ.உ.சி. போற்றும் அறிஞர்’ விருது, வ.உ.சி., பாரதிதாசன், வாஞ்சிநாதன், மாடசாமிப் பிள்ளை, கட்டபொம்மன், கட்டபொம்மனின் அமைச்சர் தானாபதிப் பிள்ளை, கட்டபொம்மனின் படைத் தளபதி சுந்தரலிங்கம் இதபோன்ற தியாகிகளின் வழித்தோன்றல்களுக்கு ‘வரலாறு போற்றுபவர்களின் வாரிசுகள்’ விருது ஆகியவற்றைக் கொடுத்தோம்.
இந்த விழாவில் வ.உ.சி. தொடர்பாக ஒரு பட்டிமன்றம் நடத்தினோம். இந்த விழாவுக்கு நான் கேட்டுக்கொண்டவுடன் சரியென்று ஒப்புக்கொண்டு சிறப்பு அழைப்பாளர்கள் வந்து கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்துத் தந்தார்கள். வெள்ளிக்கிழமை அதாவது செப்டம்பர் 2ஆம் தேதி மதியத்திலிருந்தே பல்வேறு மாவட்டத்திலிருந்தும் மாணவர்கள், பெற்றோர்கள் ஓட்டப்பிடாரம் வந்தார்கள். மாணவ, மாணவிகளைத் தனித்தனியாக வெவ்வேறு இடத்தில் தங்கவைத்து அவர்களுக்கு எட்டு வேளை நல்ல உணவையும் கொடுத்து மகிழ்ந்தோம். இரண்டு நாட்களும் எங்களோடு ஒன்றிப்போன மாணவர்கள் பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றார்கள். இந்த இதழ் வழியாக வ.உ.சி. 150 பேச்சுப் போட்டிக்கும், நிறைவு நாள் விழாவுக்கும் ஒத்துழைப்பும், உதவியும் அளித்த அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
தங்களுக்கு ‘வ.உ.சி. தொண்டர் விருது’ யாரால் எப்போது வழங்கப்பட்டது?
நிறைவு நாள் விழாவுக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலப் பொதுச்செயலாளர் மருத்துவர் அறம் அவர்களை அழைத்திருந்தோம். அவர் நிறைவுநாள் நிகழ்வைப் பார்த்து அசந்து போனார். அப்போது அவர், ‘‘எட்டயபுரத்தில் பாரதி விழா நடக்கும், அதில் தாங்கள் கலந்து கொள்ள வேண்டும்’’ என்று எனக்கு ஒரு கோரிக்கை வைத்தார். அவரின் கோரிக்கையை ஏற்று அவ்விழாவுக்குச் சென்றேன். அவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள், அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள், சங்கரன்கோயில் சட்டமன்ற உறுப்பினர், கோவில்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தூத்துக்குடி நகர்மன்றத் தலைவர் நாடறிந்த நல்ல எழுத்தாளர் கிருங்கை சேதுபதி அவர்கள் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நடத்துகிற பாரதி விழாவில் மருத்துவர் அறம் அவர்கள் எனக்கு ‘வ.உ.சி. தொண்டர்’ என்கிற விருதைக் கொடுத்தார்கள். எனக்கு ஆச்சரியமும், அதிர்ச்சியுமாக இருந்தது. அன்றிலிருந்து இன்று வரை பல பேரும் என்னைத் தொடர்பு கொண்டு பாராட்டி வந்தவண்ணமிருக்கிறார்கள். எல்லாம் பெரியவர் வ.உ.சி.யின் ஆசிர்வாதம். அவர் என்னுடனேயே இருக்கிறார். அவர் என்னை வழிநடத்துகிறார்; அதன்படி நான் நடக்கிறேன்.
நல்லாசிரியர் விருது பற்றி உங்கள் கருத்து?
இப்போ அரசாங்கம் பல திட்டங்களுக்கு குழு அமைத்து செயல்படுவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே போல நல்லாசிரியர் விருதுக்கும் ஒரு குழுவை மாவட்ட அளவில் அமைத்து அங்கிருக்கும் பள்ளி ஆசிரியர்களில் நல்லாசிரியரை இனங்கண்டு அப்பள்ளியில் பயிலும் மாணவர்களிடம், உடன் பணியாற்றும் ஆசிரியர்களிடம், பள்ளி நிர்வாகிகளிடம், பெற்றோர்களிடம் – இப்படி பல ஆசிரியர்களைப் பற்றி கேட்டு அவர்களில் எவர் சிறந்தவர் என்பதை இனங்கண்டு அரசே அறிவித்தால் கலப்படமில்லாத விருதாக அது இருக்கும்.
இப்போது நல்லாசிரியர் விருது வாங்கியவர்களெல்லாம் நல்லாசிரியர் இல்லை என்று நான் சொல்ல வரவில்லை, இப்படி அரசு தேர்ந்தெடுப்பதுதான் சரியான முறையாக இருக்கும் நமக்கு நேரடி நீதிபதிகள் மாணவர்கள்தான். அரசு அங்கீகாரமான சான்றிதழா கொடுக்கணும்னா, ஆசிரியர்களே விருதுக்காக தரவுகளை சேர்த்துவைத்துக் கொண்டு விண்ணப்பிக்கும் முறையைத் தவிர்த்து, மேற்சொன்னது போன்ற குழுக்களை அமைத்து ஆசிரியர்களை இனங்கண்டு விருதளிக்க வேண்டும்.
அரசையோ, விருது வாங்கிய ஆசிரியர்களையோ நான் குறைகூறுவதாக நினைக்கவேண்டாம். மாணவர்களுக்கு அஸ்திவாரமாக இருக்கும் பல நல்ல ஆசிரியர்கள் வெளித்தெரியாமலே இருக்கிறார்கள். அரசு இனங்கண்டு தேர்வு செய்தால் மண்ணுக்குள் புதைந்துகிடக்கும் நிறைய ஆசிரிய வைரங்கள் வெளித்தெரிய வாய்ப்படையும். என்னைப் பொறுத்தவரை மாணவர்கள் நல்லாசிரியர் என்று சொல்வதுதான் மிகச் சிறந்த விருது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.