அண்டனூர் சுரா
சாதிப்பெருமை பேசுவது போன்றதல்ல ஊர்ப்பெருமை பேசுவது. சாதிப் பெருமை ஊர்க்குடி பெரும் பகுதியினரைப் புறந்தள்ளி தான் சார்ந்த சாதியைப் பீற்றிக்கொள்வது. ஊர்ப் பெருமை பேசுதல் என்பது ஊர்வாழ் மக்கள் அனைவரையும் உள்ளடங்கி பேசுவது. எம் பள்ளியில் இரண்டு மாணவர்கள் ஊர்ப்பெருமை பேசிக்கொண்டு, இருவர் ஊர்களில் எந்த ஊர் முதலில் ஊரானது, என்கிற தீர்வைத் தேடி என்னிடம் வந்தார்கள். இருவரின் ஊர்கள் காட்டுநாவல், துலுக்கன்பட்டி என்பதாக இருந்தது. நான் இருவரையும் வகுப்பறையில் அமர வைத்து மொத்த மாணவர்களுக்கும் தமிழகத்தில் ஊர்கள் தோன்றிய பரிணாமத்தைச் சுருக்கமாகச் சொன்னேன்.
ஊர்ப் பெயர்கள் முதலில் நிலத்தின் பெயரால் தோன்றியது. உதாரணம் மணமடை, கரம்பைக்குடி, செங்கமேடு. இங்கு மணல்மடை என்பதுதான் மணமடை. கரம்பை என்பது ஒரு வகை மண். செங்கம் என்பது ஒரு வகை பாறை. பிறகு மரம், செடி, கொடிகளின் பெயரால் தோன்றியது. விராலிமலை, கிளாங்காடு. விராலி, கிளா இரண்டும் மரங்கள். பிறகு நீர்நிலைகளைக் கொண்டு ஊர் தோன்றியது. மருங்கூரணி, புனல்குளம். இங்கு ஊரணி என்பதும் குளம் என்பதும் நீர்நிலை.
பிறகு கோட்டை ஊர்கள் தோன்றின. கண்டராக்கோட்டை. கண்டராதித்தன் என்பவன் ராஜராஜசோழனின் தாத்தா. இவரது பெயரால் தோன்றிய இவ்வூர் பிறகு கந்தர்வகோட்டை என்றானது. இதன்பிறகு மக்களின் இடம் பெயர்வால் பட்டி, பட்டு ஊர்கள் தோன்றின. கால்நடைகள் அதிகம் வளர்க்கப்படும் ஊர்கள் இவை. பிறகு மன்னர். மன்னரைத் தொடர்ந்து குறுநில மன்னர்கள் தோன்றினார்கள். இவர்கள் தன் ஆட்சிப்பகுதிக்காக எல்லை வகுத்துக்கொண்டார்கள்.
புரம் ஊர்கள் தோன்றின. குறுநில மன்னர்களுக்குப் பிறகு அம்பலக்காரர்கள் தோன்றினார்கள். விடுதி ஊர்கள் தோன்றின. புதுக்கோட்டை மாவட்டத்தில் நிறைய விடுதிகள் உள்ளன. விடுதிகள் அன்றைய ஊரை நிர்வகித்த ஆளுகையின் பெயரால் அழைக்கப்படுகிறது. ஒரே ஒரு விடுதியைத் தவிர. அது ஆத்தாங்கரைவிடுதி. இந்த ஊர் அக்னி ஆற்றின் தென் கரையில் அமையப்பெற்றுள்ள ஊர்.
நான் சொன்னதை மொத்த மாணவர்களும் ஆழ்ந்து கேட்டுக்கொண்டார்கள். அவர்களிடமே கேட்டேன். இப்போது சொல்லுங்கள், முதலில் தோன்றியது காட்டுநாவலா, துலுக்கன்பட்டியா? மொத்த வகுப்பறையும் சொன்னது காட்டுநாவல் என்று.
புதுக்கோட்டையில் நாவல் மரத்தினைக் கொண்டு பல ஊர்கள் உண்டு. நாவலூர், நாவல்பட்டி, நாவற்காடு. காட்டுநாவல் ஊரின் பெருமை என்ன தெரியுமா, ஒரு மரத்தின் பெயரை அப்படியே கொண்ட ஊர் இது. மாணவர்கள் கைக்கொட்டிக் கொண்டார்கள்.
புதுக்கோட்டையின் புத்தம் புதிய ஊர்
ஐம்பது ஆண்டுகளுக்கு ஒரு புது ஊர் தோன்றுகிறது. தற்காலத்தில் தோன்றும் ஊர்கள் சாதி பெயராலும் இனத்தின் பெயராலும் தனி நபர் பெயராலும் தோன்றிவருகிறது. கரம்பக்குடி ஒன்றியத்தில் அம்புக்கோவில் முத்தன் பள்ளம் இவ்விரு ஊர்களுக்கும் இடையில் ஒரு சிறுகுடியிருப்பு உள்ளது. அதன் பெயர் பால் பண்ணை? அந்தத் தெருவுக்குள் சென்று பால்பண்ணை எதுவும் இருக்கிறதா, என விசாரிக்கையில் அப்படியாக எதுவும் இல்லை. இது குறித்து விசாரிக்கையில் ஒரு பெரியவர் சொன்னார். ஒரு காலத்தில் இந்த ஊரைச் சுற்றியுள்ள காடுகளில் எரிசாராயம் எரிக்கப்பட்டு, விற்கப்பட்டன.
ஒவ்வொரு வீட்டின் குடித்தொழில் சாராயம் எரிப்பதும் விற்பதுமாக இருந்தது. சுதந்திர இந்தியாவுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கள்ளுக்கடைகள் மூடப்பட்டதுடன், எரிசாராயம் எரித்து விற்பது தடைக்கு வந்தது. ஆனாலும் சாராயக்குடியிருப்பு என்கிற பெயர் மறைவதாக இல்லை. இதற்காக அன்றைய அரசு, சாராயம் எரித்து விற்பதைக் குடும்ப ஆதார தொழிலாகக் கொண்டிருந்தவர்களுக்கு வங்கி மூலமாக பசு மாடுகள் வழங்கி, பால் பண்ணை எனப் பெயர்ச்சூட்டியது.
நம்மாழ்வார் எனும் இயற்கை வேளாண்
மரம், செடி கொடிகள் பற்றி பேசும் யாரும் நம்மாழ்வாரைத் தவிர்த்துவிட்டு பேசமுடியாது. ஒரு காலத்தில் மாப்பிள்ளை சம்பா புதுக்கோட்டை மாவட்டத்தில் விளையும் முக்கிய நெல் ரகமாக இருந்திருக்கிறது. இந்த நெல்லுக்கு ஏற்ற மண் ரகம் நம்முடையது. இந்த நெல் புதுக்கோட்டையில் அருகி வருவதற்காக கவலைப்பட்டவர். இந்த நெல் எங்கே விளைகிறதென விசாரிக்கலானார்.
கந்தர்வகோட்டையில் மட்டங்கால் எனும் ஊரில் விளைவது அவருக்குத் தெரியவந்தது. அந்த ஊருக்கு வந்தவர் நெல் விளையும் நிலங்களைப் பார்வையிட்டார். இதற்கு ஏன் மாப்பிள்ளை சம்பா என்று பெயர்க்காரணம் கேட்டார். அம்மக்கள் சொன்னார்கள், “ஒரு காலத்தில் கல்யாணமாகாத வாலிபர்கள் இளவட்டக் கல்லைத் தூக்க வேணும். அப்படியாகத் தூக்குவதற்கு முன்பாக இந்த மாப்பாள்ளைச் சம்பா நீராகரத்தைப் பருகியபின் தூக்குவர். உடம்புக்குத் தேவையான சத்தை இந்த அரிசி கொடுக்கும். ஆகையால் இதற்கு மாப்பிள்ளை சம்பா” என்றார்கள். நம்மாழ்வர் அதைக்கேட்டு ரசித்தவர், பிறகு அவரொரு கதை சொன்னார். “ நம் முன்னோர்கள் மானாவாரி பூமியில் மாப்பிள்ளை சம்பா விதைத்திருக்கிறார்கள்.
நன்கு வளர்ந்து கதிர் வைக்கப்போகையில் மழையில்லை. இந்தத் தட்டையை அறுத்து மாட்டுக்கு வைக்கோலாகப் போட்டிருக்கிறார்கள். ஒரு மாதம் கழித்து நல்ல மழை. பயிரின் அடிக்கட்டை முளைத்து கொத்துக்கொத்தாக நெல் வைத்திருக்கிறது, இதுதான் மாப்பிள்ளை சம்பா என்றார்.
தனக்குக் கிடைத்த அரசுப் பணியை உதறிவிட்டு இயற்கை வேளாண்மைக்கு வந்தவர் நம்மாழ்வார். இவர் பிறந்தது திருக்காட்டுப்பள்ளிக்கும் அருகில் இளங்காடு என்றாலும் தமிழ்நாடு முழுவதும் இயற்கை வேளாண்மை பரப்பியவர். பல பண்ணைகளை உருவாக்கியவர். இவர் புதுக்கோட்டையில் ஏழு ஆண்டுகள் தங்கி இயற்கை வேளாண்மையை வளர்த்தெடுத்தார். இவர் உருவாக்கிய பண்ணை இன்னும் பத்து வருடங்களில் ஒரு ஊராகத் திகழ இருக்கிறது, கொழுஞ்சி.
புதுக்கோட்டை காட்டூர்கள்
நம்மாழ்வார் புதுக்கோட்டையைப் பற்றி இவ்வாறு சொல்கிறார். “ஒரு காலத்தில் புதுக்கோட்டை காடுகளாக இருந்தது”. அவர் சொல்வதைப் போல பல காடுகளின் பெயர்களை ஊராகக் கொண்ட மாவட்டம் நமது. கிளாங்காடு, மாங்காடு, மாங்கோட்டை, காட்டூர், கொல்லுக்காடு, அத்திக்காடு, அரிசிக்காடு, ஆழிக்காடு, ஆனாங்காடு, உறவிக்காடு, ஊத்துக்காடு, எரங்காடு, கண்டியன்காடு, கல்லாங்காடு, கல்லுக்காடு, கம்பழங்காடு, களச்சன்காடு, கீழக்காடு, மேலக்காடு, கீழமுத்துக்காடு, செட்டிக்காடு, கும்மன்செட்டிக்காடு, கொட்டடிக்காடு, கோப்பிலிக்காடு, கோரக்காடு, கோவில்காடு, கோனார்காடு, சவுக்குக்காடு, சுக்கான்காடு, சேவியர்குடிகாடு, தாளக்காடு, திருமயத்தான்காடு, தெற்கிக்காடு,தோப்புக்காடு, நத்தக்காடு, நாட்டுரையான்காடு, நாவளிங்கிக்காடு, பனங்காடு, முத்துக்காடு, மேலக்கத்திரிக்காடு, வடகாடு, வறட்டுக்காடு, வீராங்காடு, வெட்டிக்காடு, வேலாங்காடு, காட்டூர்,.. நமது மாவட்டதிலுள்ள சில முக்கிய காட்டூர்கள் இவை. இன்று இதே ஊர்கள்தான் காடுகளைத் தொலைத்துவிட்டு நிற்கின்றன. இதற்காக கவலைப்பட்டவர் நம்மாழ்வார்.
நமது மாவட்டத்தைச் செழிப்பான மாவட்டமாக மாற்ற விரும்பினார். கீரனூர் உலகம்காத்தான்பட்டி கிராமத்திற்கும் அருகில் அம்மன் குறை என்ற இடத்தில் நிறைய பொது நிலம் இருந்துள்ளது. அந்த இடத்தில் நிறைய மரக்கன்றுகள் நட்டு வளர்த்தார். பிறகு ஒடுகம்பட்டியைத் தேர்வு செய்தார். சில ஊர்களில் அவருக்கு போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. ஆகவே அவர் காந்திமதி, ஆஸி இயற்கை நேசிப்பாளர்களுடன் இணைந்து பத்து ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி அதில் மரக்கன்றுகளை நட்டு பெரிய பண்ணையாக்கினார். இந்தப் பண்ணைக்குக் ‘கொழுஞ்சி உயிர்ச்சூழல் பண்ணை’ எனப் பெயர்ச்சூட்டினார். கொழுஞ்சி என்பது ஒரு வகை உரச்செடி.
ஒரு முறை ஊன்றிவிட்டால் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கும். உயிர்ப் பண்ணையாக தோன்றிய இவ்வூர் மெல்ல சிற்றூராகிக் கொண்டிருக்கிறது. நம்மாழ்வார் ஒரு சராசரி மனிதராக இருந்திருந்தால் அந்தப் பண்ணைக்கு அவரது பெயரையே சூட்டியிருப்பார். பிறகு அது நம்மாழ்வார்பட்டி, நம்மாழ்வார்புரம், நம்மாழ்வாரூர் என்று எதாவது பெயரில் அழைக்கப்பட்டிருக்கும். அவர் மண்ணுயிர் மீதான பற்றால் கொழுஞ்சி எனப் பெயர்ச்சூட்டினார். இந்தக் கொழுஞ்சி பண்ணையையொட்டிள்ள ஊரார்கள் அவருக்குக் கொடுத்த பட்டம்தான் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’.
நம்மாழ்வார் ‘பசுமை விகடனில்’ “நான் நம்மாழ்வார் பேசுகிறேன்”, என்கிற தலைப்பில் உயிர்த் தொடர் எழுதினார். அதிலொரு பதிவு, கொழிஞ்சிப் பண்ணையில் பயிற்சி ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் பங்கியவல்லி. அவருக்குத் திருமணம். திருமணப் பரிசாக ஒரு கன்றுக்குட்டியைக் கொடுக்கிறார். பாலைக் கறந்து விற்கலாம். சாணமும் சிறுநீரும் இயற்கை உரமாகும். சாணத்திலுள்ள சத்தைவிடவும் கால்நடைகளின் சிறுநீரில் தாவரத்திற்குத் தேவையான உயிர்ச்சத்துகள் அதிகம் இருக்கிறது என்கிறார் நம்மாழ்வார். அவர் தங்கியிருந்த குடில் இன்று ‘தாடிகுடில்’ என அழைக்கப்படுகிறது.
விதைக்‘கலாம்’ எனும் இளைஞர் குழாம்
நம்மாழ்வாரின் சிந்தனையை நகலெடுத்த அமைப்பாக புதுக்கோட்டையில் விதைக்‘கலாம்’, என்றொரு அமைப்பு இயங்கி வருகிறது. உயிர்ப்பிக்கும் அமைப்பு இது. மேதகு ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்கள், 2015 ஜூலையில் இறந்து போகிறார். மறுவாரம் புதுக்கோட்டையில் கூடிய இளைஞர்கள் ஸ்ரீமலையப்பன், பாலாஜி, கஸ்தூரிரெங்கன் மூவரும் இணைந்து, மறைந்த அப்துல்கலாம் நினைவாக எதையாவது செய்ய வேண்டுமென நினைத்தார்கள். அவர்களுடன் இன்னும் பத்துபேர் சேர்ந்துகொண்டார்கள்.
கலாம் நினைவாக மரங்கள் நடலாம், என முடிவெடுத்தார்கள். இந்த அமைப்பிற்கு என்ன பெயர்ச்சூட்டலாம், என யோசிக்கையில் பிரபாகரன் என்பவர் கலாம் நினைவாக மரக்கன்று நடுவதால் விதைக்‘கலாம்’, எனப் பெயர்ச் சூட்டினார். அன்றைய தினமே மரக்கன்று நடும் வேலையில் இறங்கினார்கள். முதல் மரக்கன்று இலுப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடப்பட்டது. இலுப்பூர் என்பதே மரத்தைப் பெயராகக் கொண்ட ஊர்தானே!
புதுக்கோட்டை தனியரசாக இருந்த காலத்தில் இலுப்பூர் இலுப்பை எண்ணெய்க்கு தனி மதிப்பு இருந்திருக்கிறது. இலுப்பையூர்தான் இன்று இலுப்பூர் என்றாகியிருக்கிறது. அந்த ஊரில் முதல் மரக்கன்று நட்டது, நல்ல பொருத்தப்பாடுதான். அதைத் தொடர்ந்து ஞாயிறுதோறும் மரக்கன்று நட்டு, கூண்டு அமைத்து காடு வளர்த்துவருகிறார்கள்.
இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. ஸ்ரீமலையப்பனிடம் எவ்வகையான மரக்கன்றுகள் நடப்படுகிறது என்று கேட்கையில், “மூன்று விதமான கன்றுகள் நடப்படுகிறது. நிழல் தரும் கன்றுகள், பழம் தரும் கன்றுகள். குறுங்காடு கன்றுகள். இதற்கான மூங்கில்கூண்டு விலைக்கொடுத்து வாங்கிக் கொள்கிறோம். செலவீனத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்”, என்றவரிடம் மரக்கன்றுகள் எங்கே வாங்குகிறீர்கள், என்கிற கேள்விக்கு அரிமத்திற்கும் அருகில் கல்லுக்குடியிருப்பு என்றார்.
கல்லுக்குடியிருப்பு கிராமத்தின் பழைய முகம்
இந்த ஊரின் வரலாறு கல்லுடன் தொடர்பு கொண்டது. இந்த ஊரிலிருந்து மரக்கன்று ஏற்றுமதியாவதைப்போல ஒரு காலத்தில் எரிசாராயம் ஏற்றுமதியாகியிருக்கிறது. அன்றைய மாவட்ட ஆட்சியர் திருமதி ஷீலாராணி சுங்கத் அவர்கள், இந்தத் தொழில்முறையான எரிசாராயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றார். அதற்காக அவ்வூர் மக்களை நேரில் சந்தித்த அவர், அந்தத் தொழிலிலிருந்து வெளியேற வேண்டும், எனக் கேட்டுக்கொண்டார். அத்தொழிலுக்கு மாற்றாக, தோட்டக்கலை மற்றும் வனத்துறையுடன் இணைந்து மரக்கன்று வளர்த்து விற்கும் தொழிலுக்குப் பயிற்சி கொடுத்தார். அதன் விளைவு இவ்வூர் இந்தியா முழுவதும் மரக்கன்று ஏற்றுமதி செய்யுமளவிற்கு வளர்ந்திருக்கிறது.
புதுக்கோட்டையில் காய்கறி வியாபாரியாக இருக்கிறவர் ராஜா. புதுக்கோட்டை நகர வீதிகளில் மரங்களாக வளர்ந்து நிற்கும் பல மரங்களின் தந்தை இவர்தான். மரக்கன்றை இவர் ‘மரக்குழந்தைகள்’ என்கிறார். மரம் அறக்கட்டளை மூலமாக வறட்சியான புதுக்கோட்டையைப் பசுமைக் கோட்டையாக மாற்றி வருவதில் இவரது பங்கு அளப்பரியது. “மரக்குழந்தைகளைப் பூமித்தாயின் மடியமர்த்திக் கொடுப்போம். புதுக்கோட்டையைப் பசுமை கோட்டையாக்குவோம்” என்பது இவரது பசுமை வாசகம். இப்போது இவரது வீட்டுத் தோட்டத்திலிருந்து நாட்டின் பல மூலைகளுக்கு மரக்கன்றுகள் ஏற்றுமதியாகின்றன. இவர் தொடக்கத்தில் மரக்கன்று வாங்கிய இடம் அதே கல்லுக்குடியிருப்புதான்.
கல்லுக்குடியிருப்பு போன்று பல ஊர்கள் புதுக்கோட்டையில் உண்டு. மரக்கன்று ஏற்றுமதியில் கந்தர்வகோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த வேலாடிப்பட்டி முக்கிய கிராமம். இந்தக் கிராமம் ஒரு காலத்தில் எரிசாராயம் எரித்து விற்பதில் முன்னணியில் இருந்த கிராமமே. இன்று மரக்கன்று ஏற்றுமதியில் முன்னணி வகிக்கிறது. குறிப்பாக இந்த ஊரில் விளைவித்து தரும் நிலவேம்பு, நாட்டு வேம்புக்கு நல்ல வரவேற்பு உண்டு.
வேம்பு குறித்து சொல்கையில் முனைவர் இராமன் கருப்பையா பற்றி சொல்லியாக வேண்டும். புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புற கலைகள் எனும் நூல் வெளியிட்டவர். இவருக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் வேம்பு மரக்கன்றுகளை நட்டு வேப்பங்காடுகளை உருவாக்கியிருக்கிறார். அவரோடு தீபம் முத்து என்கிற எழுத்தாளர் எழுதிய ‘வேப்பங்கொட்ட’ என்கிற பரிசு பெற்ற சிறுகதை முக்கியமானது. ஒரு விவசாயி மழைக்காக காத்திருப்பார். நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு மழை பெய்யும். அவரிடமிருக்கும் பத்து குழி நிலத்தை உழுது அதில் வேப்பங்கொட்டையை விதைத்துவிட்டு வருவார். “மழையில்ல மழையில்லனு சொல்லிக்கிட்டிருந்தால் எப்படி? மரங்கள் இருந்தால்தானே மழை பெய்யும்” என்பதுடன் அக்கதை முடியும்.
வேம்பு காப்புரிமை போராட்டம்
பூமியில் தோன்றிய மரங்களில் மருத்துவ பயனுள்ள மரம் வேம்பு. அந்த வேம்பு காப்புரிமை பெற அதிகம் போராட வேண்டியிருந்தது. காப்புரிமை வழக்கு ஜெர்மனியில் நடைபெற்றது. வேம்பு காப்புரிமையை மீட்க நம்மாழ்வார் ஜெர்மனி சென்றார். அங்கு அவரது நடவடிக்கை அன்றாட நடவடிக்கையை ஒத்திருந்தது. கோர்ட்டில் அவர் வேப்பங்குச்சியைப் பற்களால் கடித்துக்கொண்டிருந்தார். “என்ன பண்ணுக்கிட்டிருக்கீங்க”, நீதிபதிகள் கேட்டார்கள். “பிரஷ் பண்றேன், என்றார். “எது பிரஷ்?, “வேப்பங்குச்சி என்று முனையைக் காட்டினார். “பேஸ்ட்?, “இந்தக் குச்சியிலிருந்து வரும் கசப்புதான் பேஸ்ட், என்றார். “அம்மை நோய்க்கு இந்த வேம்புதான் மருந்து.
கொசுவை விரட்டுவது இந்த வேம்புதான். வெற்றியாளருக்கும் மாரியம்மன் சுவாமிக்கும் வேப்பம்பூ மாலை அணிவிக்கிறோம்” என்றவர் சங்கப்பாடல், கும்மிப்பாடல்களை எடுத்து வைத்து வாதாடினார். இன்று வேம்பு இந்தியாவின் சொத்து, என்றேன். மாணவர்கள் உரக்கக் கைக்கொட்டினார்கள். மறுநாள் பள்ளிக்குச் செல்கையில் மாணவர்கள் மண்வெட்டியும் கூண்டும் மரக்கன்றுமாக நின்றார்கள்.