நேர்காணல்:
கவிப்பித்தன்
சந்திப்பு: கமலாலயன்
“தமிழ் நாட்டின் வடமாவட்டங்களில் வற்றாத ஜீவ நதிகள் என இப்போது எவையுமில்லை. பாலாறு, தென்பெண்ணை, நீவாநதி என்கிற பொன்னையாறு, செய்யாறு, கமண்டல நாகநதி உள்ளிட்ட அத்தனை ஆறுகளும் ஒரு காலத்தில் இரு கரைகளையும் நிறைத்துக் கொண்டு பெரு வெள்ளப் பெருக்குகளாய்க் கரை புரண்டோடி வளப்படுத்தின. ஆனால் இன்று, இந்தப் பூமி, இந்த மண்ணில் வாழும் தலை காய்ந்த மனிதர்களைப் போலவே தரை காய்ந்த மணலாறுகளாகவே பரிதாபாமாகக் கிடக்கின்றன.

வெயிலுக்கும், வறட்சிக்கும் பெயர் பெற்ற இந்த மண், தன் அடி மடியில் சுரக்கின்ற ஒற்றை ஊற்றுகளாலேயே எங்களுக்கு உயிரூட்டி வந்திருக்கின்றது. செழிப்பான மண்ணும், வளமான வாழ்வும் வாய்க்கப் பெற்ற மக்களிடையேதான் கலைகளும், இலக்கியங்களும் செழித்திருக்கும் என்பது பெரும்பான்மையினரின் வரலாறு. இப்படியான நீர்வளம், மண்வளமில்லாத இந்த வட மாவட்டங்கள் இலக்கிய வளங்களிலும் கூட வறட்சியானவைதாம் என்று சுமத்தப்படுகிற குற்றச்சாட்டுகளையெல்லாம் இந்தப் பின்புலங்களிலிருந்தே நான் மறுக்கத் தொடங்குகிறேன். வலியும், வேதனைகளும் நிறைந்த மண்ணிலிருந்துதான் அசலான இலக்கியங்களும் பீறிட்டுக் கிளம்பியிருக்கின்றன.
பெரும் பட்டியல் போட்டுப் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாவிட்டாலும், இப்போதும் எங்கள் மண்ணிலிருந்து அசலான படைப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. எமது மண்ணின் வலிகளையும், வலிமைகளையும் அவை உரத்துப் பேசுகின்றன.”கவிப்பித்தன் கதைகளின் முழுத் தொகுப்பையும் ஒரே தொகுதியாக இப்போது பாரதி புத்தகாலயம் வெளியிட உள்ளது. அதன் முன்னுரையில் தனது கால் நூற்றாண்டு கால இலக்கியப் பயணத்தின் நோக்கையும், போக்கையும் குறித்து எழுதியிருக்கிற வரிகள்தாம் இவை. நீர் வளமோ, நில வளமோ இல்லாத, வறண்ட பகுதியாகவே இருந்த போதிலும், இந்த மண்ணில் எத்தனையோ பல நூற்றாண்டுகளாக மனிதர்கள் வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறார்கள். அவர் தம் வாழ்வை, வலிகளை, ஏக்கங்களை, கனவுகளை, பெருமிதங்களை, சிறுமைகளை அனைத்தையும் இந்த வட மாவட்ட மக்களின் அசலான மொழியில் செறிவாகப் பதிவு செய்து கொண்டே வருகிறார் கவிப்பித்தன் அவர்கள்.
இரண்டு கவிதைத் தொகுப்புகளையும், எழுபது சிறுகதைகளையும், நீவா நதி, மடவளி, ஈமம் ஆகிய மூன்று நாவல்களையும் எழுதியிருக்கும் கவிப்பித்தனின் அடுத்த நாவல் சேங்கை. விரைவில் வரவிருக்கிறது. “வட மாவட்டங்கள் இலக்கிய வளமும் அற்றவை…” என நிலவி வரும் வசை மொழியை இல்லாமற் செய்வதற்குப் போராடி வரும் படைப்பாளிகளுள் தானும் ஒருவர்… எனப் பெருமையுடன் சொல்கிறார்.
வெறும் வார்த்தைகளால் மட்டுமின்றி காத்திரமான தனது அனைத்துப் படைப்புகளாலும் மேற்கண்ட கூற்றை நூறு சதவீதம் உண்மையானதே என நிறுவுகிறார் கவிப்பித்தன். பின்வரும் அவரது நேர்காணலில், அவரின் வார்த்தைகளில் இருந்தே கவிப்பித்தனின் படைப்பு மனம் எத்தகையது என்பதைப் புரிந்துகொள்ளலாம்…
பொன்னை ஆறு என இப்போது அழைக்கப்படும் நீவாநதி தீரத்து நிலச் சொந்தக்காரர்களின், விவசாயிகளின் வாழ்க்கையில், அந்த நதியின் நீரும், அதன் வறட்சியும் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் பற்றி நீவாநதி நாவலில் பேசப்பட்டுள்ளது. வெறும் விவரிப்புகளாக அவை இடம் பெறவில்லை. மாறாக நாவல் முழுக்க அவை ரத்தமும் சதையுமாக வாசகர்களின் மனக்கண்களின் முன்னால் சோகச் சித்திரங்களாக உருக்கொள்கின்றன. காவிரியின் கதையும், நீவாநதியின் கதையும் வேறு வேறன்று. இவ்விரு நதிகளுமே முறையே கர்நாடக மாநிலத்தின் குடகு மலைப்பகுதியிலிருந்தும், கோலார் தங்கவயல் அருகே உள்ள பேத்தமங்களா ஏரியிலிருந்தும் உருவாகி, அந்த மாநிலத்தில் பாய்ந்தோடி தமிழகத்தில் வந்துதான் நிறைவடைகின்றன. ஒரு வகையில் இந்த நாவல் இரு நதிகளின் கதையாகவும் அமைந்திருக்கிறது. இதை எழுதுவதற்கான உந்துதல் எப்படி வந்தது…?
நீவா நதிக்கரை கிராமமான வசூர் என்கிற சிற்றூரில் பிறந்து வளர்ந்தவன் நான். அந்த ஆற்றோடும், அதன் வளமையோடும் பின்னிப் பிணைந்தே கழிந்தது எனது பால்யம். ஆற்றில் நாங்கள் மிதிக்காத மணல் இல்லை. குதிக்காத நீருற்றுப் பள்ளங்கள் இல்லை. ஆடாத கரை இல்லை. விடுமுறை நாட்களில் கூட்டாளிகளோடு சேர்ந்து கண்கள் சிவக்க சிவக்க குதித்து குதியாட்டம் போடுவோம். வருடம் தவறாமல் ஐப்பசி, கார்த்திகையில் ஆற்றில் வெள்ளம் வரும். ஏரி நிரம்பும். நஞ்சையில் நெல்லும் கடலையுமாய் விளையும். புஞ்சையில் கம்பும், கேழ்வரகும், மிளகாய்த் தோட்டமும் செழித்துக் கிடக்கும். மானாவாரியில் வேர்க்கடலையும் மொச்சையும், துவரையும் பச்சைக்கட்டி நிற்கும்.
இப்போது எல்லாமே தலைகீழாகிவிட்டது. இடையில் எத்தனையோ வருடங்களாக ஆற்றில் வெள்ளம் வரவில்லை. ஆந்திர அரசு கலவகுண்டா என்ற இடத்தில் சத்தமில்லாமல் ஒரு பெரிய அணையைக் கட்டி தண்ணீரை தேக்கிவிட்டது. அதற்குப் பிறகுதான் எங்கள் ஊர்களில் குடிநீருக்கும் பஞ்சம் வந்தது. விவசாயம் மாண்டு போனது. விவசாயிகளும், அவர்களின் பிள்ளைகளும் சிப்காட் பக்கம் படை எடுக்க வேண்டிய துர்பாக்கியம் வந்தது. பல நூறு ஏக்கர் விளைநிலங்கள் சீமைக்கருவேலம் புதர்கள் மண்டிக் கிடந்தன.
அவற்றைப் பார்க்கிற போதெல்லாம் எனக்குள் ஏற்படுகிற அவஸ்தைகளைத்தான் ‘நீவாநதி’ நாவலாக எழுதினேன். எனக்குள் பதிந்து கிடந்த நீவாநதியின் வளமும், எங்களின் திருவிழாக்களும், கூத்துகளும், கொண்டாட்டங்களும், பின்னாளில் அவை கனவாக மாறிப்போனதையும் மிகுந்த வலியோடு அந்த நாவலில் பதிவு செய்தேன். நில எடுப்பு மூலம் நிலங்களை இழந்த விவசாயிகளின் பதைபதைப்பும், பரிதவிப்பும் இந்த நாவலின் இன்னொரு களம். அதையும் நாவலில் மிக விஸ்தாரமாகவே எழுதினேன்.
இப்போது சில வருடங்களாக நீவாநதியில் தொடர்ந்து வெள்ளம் வருகிறது. ஏரிகளும் நிரம்புகின்றன. ஆனால், பெரும்பாலான நிலங்கள் இப்போதும் தரிசாகத்தான் கிடக்கின்றன.
மீண்டும் விவசாயத்தை நம்பி சேற்றில் இறங்குகிற துணிச்சல் எங்கள் மக்களுக்கு இல்லை. அந்த நம்பிக்கையை எங்கள் மக்களுக்குத் தரவேண்டிய அரசாங்கமும், சமூகமும் அதை வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருக்கிறது.பல மாதங்களாக ஏரிகள் நிரம்பி வழிகின்றன. ஊரெல்லம் தண்ணீரால் சூழ்ந்திருக்கிறது. ஆனாலும் விளை நிலங்கள் அனாதைகளாகிவிட்டன. பாரதி பாடியதைப் போல நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெட பாழாக்கிக் கொண்டிருக்கிறோம்.
நீவா நதி நாவலில், ஒரு சம்பவம் வருகிறது. பொன்னையாற்றில் வெள்ளம் வந்து விடுகிறது. ஆனால், அவ்வளவு வெள்ளம் வந்தும், வசூரில் மேற்புறம் அமைந்திருக்கும் கால்வாயில் தண்ணீர் வரத்து இல்லை. அதில் தண்ணீர் மேலேறி வந்தால்தான் வசூர் ஏரியில் கொஞ்சமாகிலும் தண்ணீர் நிற்கும். அம்மாதிரித் தண்ணீர் மேட்டில் ஏறி வர வேண்டுமெனில், ஆற்றின் குறுக்கே தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். அதை சின்னசாமி ரெட்டியார் தலைமையில் ஊர் இளைஞர்கள் சேர்ந்து உயிரைப் பணயம் வைத்து முன்னெடுத்து செய்கின்றனர். இந்த நிகழ்வு முழுவதும் அப்படியே இன்னொரு சிறுகதையில் உங்கள் சித்தரிப்பில் சிறிய இறுதித் திருப்பத்துடன் வந்திருக்கிறது. ‘மணல்செரா’ என்று நினைக்கிறேன். சரிதானே ?
ஆமாம். இந்தக் கதை சில மாதங்களுக்கு முன்பாக ஆனந்த விகடனில் வெளியானது. முந்தையக் கேள்விக்கு நான் சொன்ன பதிலின் இறுதிப் பகுதி தான் இந்தச் சிறுகதை.
நீவாநதியின் ஆதிகாலத்தையும், கடந்து போன அதன் இளமையையும் பேசியது நாவல். இந்த நதிக்கரை மக்களின் இன்றைய உதாசீனத்தையும், அதிலிருந்து அவர்களை மீட்டெடுக்க தனது ஒரு கண்ணையே இழக்கிற இளைஞனைப் பற்றியும் பேசுகிறது மணல் செரா சிறுகதை.
உங்கள் கதைகளில் மிக அதிகமாக, கணிசமான எண்ணிக்கையில் சாவுகள் இடம் பெற்றிருக்கின்றன. படிக்க ஆரம்பித்தது முதல், முடிக்கும் வரையில், பக்கங்களைப் புரட்டுகிற போதே அடுத்த பக்கத்தில் யார் பிணமாகக் கிடப்பார்களோ என்று அச்சமூட்டும் வகையில்தான் மரணங்கள் நிகழ்கின்றன. சவங்களைப் பற்றிய விதவிதமான, விலாவரியான வர்ணனைகள், அவற்றின் இறுதிச் சடங்குகளுக்கான தயாரிப்புகள், பாடை கட்டுவது முதல் மயானக் குழியில் பிணங்கள் இறக்கப்பட்டு மண்ணள்ளிப் போட்டு மூடுவது வரையில் அந்தச் சடங்குகள் நடைபெறும் விதம் – எல்லாமும் சலிக்காமல் எழுதியிருக்கிறீர்கள். இந்த இளம் வயதில் உங்களுக்கு இப்படி சாவைப் பற்றிய சிந்தனைகள் பெருமளவு இருப்பது அசாதாரணமான ஒன்று. இதற்குச் சிறப்பான காரணமேதும் உண்டா…? உண்டு எனில், அது பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா…?
மரணத்தைப் பற்றியே நிறைய கதைகளை எழுதுகிறேன் என்கிற இந்தக் கேள்வியை ஏற்கெனவே சில நண்பர்கள் மூலம் நான் எதிர்கொண்டிருக்கிறேன்.ஆனால், இதற்கான எவ்வித முன் திட்டமிடலும் இல்லாமலேயே இப்படியான கதைகளை எழுதியிருக்கிறேன் என்பது எனக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.மரணம் தொடர்பாக எனக்குள் அழுத்தமாகப் பதிந்து போயிருக்கிற சில பாதிப்புகள்தான் என்னை இப்படியான கதைகளை எழுதத் தூண்டியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.
எனது பால்யத்திலேயே நான் நிறைய அகால மரணங்களைச் சந்தித்திருக்கிறேன். எங்கள் ஊரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தொடர்ச்சியாக தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார்கள். ஆனால் இவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்டு சாகவில்லை. குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வது என்பது எல்லாப் பகுதிகளிலுமே சாதாரணமாக நடப்பதுதான். ஆனால், இவர்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒவ்வொருவராகத் தற்கொலை செய்து கொண்டவர்கள். அவர்களில் மூன்று பேர் ஒட்டன் தழையை அரைத்துத் தின்றவர்கள். ஒரு பெண் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திக் கொண்டாள். ஒருவர் தூக்கு மாட்டிக்கொண்டார். அவர்கள் எங்களுக்கு நெருங்கிய உறவினர்கள்.
தூக்கு மாட்டிக்கொள்வதும், ஒட்டன் தழையை அரைத்துத் தின்று இறந்து போவதும் எங்கள் பகுதியில் மிகச் சாதாரணம். அதற்கான முதல் காரணம், மிக எளிதாக தற்கொலை செய்து கொள்ள முடியும் என்பதுதான். மரணம் கூட இப்படி கைக்கெட்டுகிற தூரத்தில் இருந்தால் அதுவும் மலிவாகத்தான் மாறிப் போய்விடுகிறது.
ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வின் எத்தனையோ தருணங்களில் தற்கொலை செய்து கொள்கிற எண்ணம் வருகிறது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அவை வெறும் எண்ணங்களாவே முடிந்து போய்விடுகிறது. அதற்கான முக்கிய காரணம், அதை நிறைவேற்றிக் கொள்வதில் இருக்கிற நடைமுறைத் தடைகள் என நான் சொல்வேன்.
ஆனால் கிராமப் புறங்களில் அதற்கான சாத்தியங்கள் மிக அதிகம். ஒரு முழக் கயிறு கையில் இருந்தால் போதும். கிராமங்களைச் சுற்றி ஏராளமான மரங்கள் இருக்கின்றன. அல்லது ஒரு கைப்பிடி ஒட்டன் தழை போதும். ஏற்கெனவே ஊரில் நடந்த பல முன் உதாரணங்கள் இந்த தற்கொலை நடைமுறையை எளிமைப் படுத்திவிடுகின்றன.
இப்படியான இந்த துர் மரணங்கள், பல இரவுகளில் என்னைத் தூங்கவிடாமல் செய்திருக்கின்றன.
இப்போது வாகனங்களின் பெருக்கம் வாழ்க்கையை எளிமைப்பபடுத்தி இருக்கிறது. அதே நேரம் மலினப்படுத்தியும் இருக்கிறது. கிராமம், நகரம் என்கிற வேறுபாடுகள் இல்லாமல் விபத்து மரணங்கள் மலிந்து விட்டன. இந்த அகால மரணங்களை மிக நெருக்கமாக பார்க்கிற நேரங்களில், இந்த வாழ்க்கையின் மீதான நம்பகத்தன்மையும், எதிர்காலம் தொடர்பான ஐயங்களும் என்னை நிலை குலைய வைக்கின்றன.
அவ்விதமான ஊசலாட்ட மனநிலையில்தான்… இப்படியான கதைகளைத் தொடர்ந்து எழுத நேர்ந்திருக்கலாம் என நினைக்கிறேன்.அகாலம், வாத்தியார், பிணங்களின் கதை, கமலாவின் ரகசியங்கள், ஸ்பரிசம், களப்பலி, ஐஸ் பெட்டியில் படுத்திருக்கும் உருவம், குருத்துகள், சாவு பஜனை, வேதாளம்… அண்மையில் நீலம் இதழில் வெளியான தனிப்பிணம், இப்போது ஆனந்தவிகடனில் வெளியாகியிருக்கிற சாமிகுரு உள்ளிட்ட அத்தனை கதைகளுமே நீங்கள் சொன்னதைப் போல மரணத்தைப் பற்றி மிக நெருக்கமாகப் பேசுகின்றன.
இப்போது எனது கண்களுக்கெதிரில் வாழ்ந்துகொண்டிருக்கிற மனிதர்களின் கதைகளை எழுதுவதைவிட, வாழ்நாள் முழுவதும் ரணங்களோடும், வலிகளோடும் வாழ்ந்து, காற்றோடும், மண்ணோடும் கரைந்து போன எனது முன்னோர்களின் கதைகளை முதலில் எழுதிவிட வேண்டும் என்கிற வேகம் எனக்குள் இருக்கிறது. அந்த வேட்கைதான் என்னைத் தொடர்ந்து இவ்விதமான கதைகளை எழுதத் தூண்டியிருக்கலாம்.
“நான் எழுத நினைத்திருக்கிற கதைகளை… நான் மட்டும்தான் எழுத முடியும்…” என எழுத்தாளர் நாஞ்சில்நாடன் சொன்னதுதான் எனது நினைவுக்கு வருகிறது. உண்மைதானே… அவரவர் கதைகளை அவரவர் தானே எழுத முடியும்.
பாலி கதையில் வரும் பாலியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்…? அவன், ஊரார் நினைப்பதைப் போல நிச்சயம் பைத்தியமில்லை. அதே சமயம், முருகன் அவனுக்காகப் பரிந்து பேசுவதைப் போல ஒன்றுமறியா அப்பாவியோ, அல்லது “பிள்ளைப் பூச்சியோ” அல்ல. உங்கள் பார்வையில் அவன் யார்…? நல்லவனா, கெட்டவனா…? மனிதர்களை இப்படி வெள்ளை/கருப்பு என்று தீர்மானகரமாக ஒரு சிமிழுக்குள் மட்டும் அடைக்க முடியாதென்று தெரிந்தேதான் நான் இப்படி கேட்கிறேன்.
பாலியைப் போலவே சிர் மணி கதையில் வருகிற மணியையும் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். இவர்கள் பைத்தியக்காரர்கள் அல்ல. ஆனால், மனநிலையில் சற்றே பிறழ்வு நிலை கொண்டவர்கள். பொதுவாகவே நம் எல்லோருக்குமே மனநிலையில் சிறிது பிறழ்வு நிலை இருக்கும். அந்த நிலை கூடுதலாகிற போது தான் மன நோயாளிகளாக மாறிவிடுகிறார்கள் என மருத்துவ அறிவியல் சொல்கிறது.
பொதுவாகவே புத்தி சுவாதீனமற்ற பெண்களை இந்த உலகம் பார்க்கிற பார்வையும், பயன்படுத்திக் கொள்கிற தன்மையும் உலகம் அறிந்ததுதான். ஆனால் இப்படிச் சற்றே மனப் பிறழ்வு கொண்ட ஒரு ஆணை, பெண்களும் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பது அபூர்வமாக நடப்பது. அல்லது வெளியில் தெரியாமல் நடப்பது.
மனநிலை பாதித்த பெண்களிடம் ஆண்கள் அப்படி நடந்து கொள்வது திமிர்த்தனத்தின் வெளிப்பாடாகவும், பெண்கள் இப்படி நடந்து கொள்வது கலாச்சாரத்தின் புனிதத் தன்மைக்கு இழுக்கானது என்றும் நமக்குள் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அது உடல் சார்ந்த ஒரு வேட்கை. அது இருபாலினத்தவர்க்கும் பொதுவானது என்பதைத்தான் இதில் நான் சொல்ல முனைந்திருக்கிறேன்.வயிற்றுப் பசியைப் போல காமமும் ஒரு பசி, அதுவும் ஓர் உணர்வு என்பதை நமது கலாச்சாரம் ஏற்பதில்லை. அதிலும் பெண்களுக்கான அந்த உணர்வுகளை நாம் பேசவே தயாராக இல்லை. அதைத் தான் அந்தக் கதையில் பேசியிருக்கிறேன்.
ஒரு கவிஞராகத்தான் நீங்கள் படைப்புலகில் அடி எடுத்து வைத்தீர்கள். ஒரு மேகத்தின் தாகம் தொகுப்பிலிருந்து இன்றைக்கும் சில கவிதைகள் என் நினைவில் நிழலாடுகின்றன. உங்கள் இரண்டாவது தொகுப்பும் கவிதைத் தொகுதிதானே…? யாருமற்ற கனவில் என்ற அந்தத் தொகுப்பில் உள்ள ஒரு கவிதை…
எனது பாட்டன் ஆறு நிறைய நீர் பார்த்தான் / என் அப்பன் ஆற்றின் ஊற்றில் பார்த்தான்/ நான் ஆற்றிலிருந்து வந்த குழாயில் பார்த்தேன் / என் மகன் ஒரு ரூபாய் பொட்டலத்தில் பார்க்கிறான் / என் பேரன்…?
இந்தக் கவிதை அப்போதே மிகவும் பாராட்டப்பட்டது. பல பேச்சாளர்களால் மேடைகள் தோறும் அதை மேற்கோள் காட்டியதைக் கூட கேட்டிருக்கிறேன். ஒரு (திருட்டுக்) கவிஞர் சத்தமில்லாமல் அதைத் தனது கவிதையென்று உரிமை கொண்டாடியதையும் பார்த்திருக்கிறோம். மிக ஆழ்ந்த கற்பனை வளமும், சொல்லாட்சியும் அறச்சீற்றமும் மிக்க கவிஞராக மாறுவீர்கள் என்றுதான் பலரும் உங்கள் எழுத்து எதிர்காலத்தை கணித்தோம். ஆனால், சிறுகதைகள், நாவல் தவிர வேறு எந்த வகைமையிலும் இன்று நீங்கள் எழுதுவதில்லை. என்ன ஆச்சு…?
எனக்கான பணிச் சூழலும், நேரமின்மையும்தான் அதற்கு முதன்மையான காரணமாக சொல்ல வேண்டும். வருவாய்த்துறையில் பணியாற்றிக் கொண்டு தொடர்ந்து எழுதுவது என்பது மிகச் சவாலானது. கடுமையான பணி நெருக்கடிகளும், கால நேரம் கடந்த பணி அமைப்பும் எழுதுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. கிடைக்கிற மிக மிகச் சொற்பமான நேரத்தில்தான் எழுத முடிகிறது. அதற்காக நான் இழந்தது அதிகம்.பொதுவாகவே எழுதுவதன் மூலம் ஆதாயம் பெறுபவர்களைவிட, இழந்தவர்கள்தான் அதிகம். அதைப் போல நானும் நிறையவே இழந்திருக்கிறேன்.
நான் முன்னதாகவே சொன்னதைப் போல, எனது முன்னோர்களின் ஏராளமான வாழ்க்கைக் கதைகளை எழுத வேண்டியிருக்கிறது. அதற்கான வடிவமாக சிறுகதையும், நாவலும் தான் வசதியாகவும், எளிமையாகவும் இருக்கிறது. இவற்றைத் தவிர்த்து கவிதைகள் எழுதுவதும், வேறு வடிவங்களை கைக்கொள்வதும் எனது இன்றைய பணிச் சூழலில் அத்தனை எளிதானதாக இல்லை.
பெண்ணியம், தலித்தியம் இரண்டும் இன்று உலகளாவிய பாடுபொருள்களாகி விட்டன. இந்த இரண்டையும் தவிர்க்கவோ, கண்டு கொள்ளாமல் கடந்து போகவோ எழுத்தாளர்களால் முடியாது. ஓர் எழுத்தாளரென்ற முறையில் இவ்விரு அம்சங்களையும் நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள்…?
பெண்ணியமும், தலித்தியமும் பேசத்தொடங்கிய அல்லது எழுதத் தொடங்கிய காலத்திலிருந்தே பல விவாதங்களையும், பல்வேறு அதிர்வுகளையும் உருவாக்கியபடியேதான் இருக்கிறது. அவற்றின் வடிவங்களும், பேசு பொருள்களும் மட்டுமல்ல படைப்பாளிகளின் பின்புலமும் கூட பேசு பொருளாகி இருக்கின்றன. எந்த ஒரு வடிவமும் புதிதாக உருவாகிற போது இப்படியான சலசலப்புகளும் சச்சரவுகளும் எழுவது இயல்புதான். ஆனால் பெண்ணியம், அது தொடர்பான படைப்புகள், பாடுபொருள்கள், அதன் வடிவங்களில் நமக்கு இன்றைக்கும் கூட போதிய தெளிவு இல்லை என்றே தோன்றுகிறது.
பெண்ணியம் என ஒரு ஒற்றை வார்த்தையில் அதை நாம் கடந்து விட நினைக்கிறோம். ஆனால் அது அவ்வளவு எளிதானதோ அவ்வளவு இயல்பானதோ அல்ல. சில பெண்ணியப் படைப்புகளையும், படைப்பாளிகளையும் கண்டு இந்த சமூகம் ஏன் இத்தனை ஆவேசப்பட்டது…? அல்லது ஏன் இவ்வளவு நடுக்கம் கொண்டது…? சில புனிதங்களின் மீது அவை காறி உமிழ்ந்தது. சில புனிதங்களை அவை அம்மணமாக்கியது. அந்த நிர்வாணத்தில் நமது நிர்வாணமும் இருந்ததால் தான் நமக்குள் இத்தனை ஆவேசம் வந்தது. அந்த ஆவேசம் எத்தணையோ போர்வைகளை போர்த்திக்கொண்டு வந்தது. இப்போது அந்த எதிர்ப்பு நீர்த்துப்போனாலும், பெண்ணடிமை என்பதை நாம் இன்னமும் பாலின அடிப்படையில் மட்டுமே பார்க்கிறோம். இங்கே ஆண், பெண் என்ற வேறுபாடின்றி அதை நாம் அணுக வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.
அதைப் போலதான் தலித் படைப்புகளும் எத்தனையோ புனிதங்களின் மீது சிறுநீர் கழித்து, அவற்றை கேள்விக்குள்ளாக்கி, இலக்கியப் புனிதர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தலித் படைப்புகள் வேகம் கொண்ட போதுதான் சமூக கட்டமைப்பின் அசலான முகத்தையும், வலியின் வீரியத்தையும் உணர முடிந்தது. எனவே இரண்டு வடிவங்களுமே அவசியமானவைதான்.
எனது நீவாநதி, மடவளி இரண்டு நாவல்களிலுமே இந்த சமூகத்தின் சமநிலையற்றத் தன்மையை பேசியிருக்கிறேன். வரவிருக்கிற சேங்கை நாவலும் இதை விரிவாக வேறொரு தளத்தில் பேசுகிறது.

கனலி இணைய இதழில் வெளியான உங்களின் வானத்தை வரைந்த சிறகு – கதை தலைப்பிலும், உள்ளடக்கத்திலும் மிக வித்தியாசமான ஒன்று. ரேவதியும் – கிளியும் வரும் இடங்கள் பெரும் மனத்துயரையளிக்கின்றன. கிளி கடைசிவரை ரேவதியின் கேள்வி எதற்கும் பதிலே சொல்லவில்லை. இந்தக் கதையின் மொழி ஒன்று தவிர, மற்ற எல்லா அம்சங்களிலும் பிற கதைகளிலிருந்து தனித்து நிற்கும் கதையிது என நினைக்கிறேன். நீங்கள் இக்கதையை, அதன் கருவை எப்படிப் பார்க்கிறீர்கள்…?
நான் அடிப்படையிலேயே கிராமத்து மனிதன். பிறந்ததிலிருந்தே செடிகளோடும், கொடிகளோடும், மரங்களோடும், பறவைகளோடும், விலங்குகளோடும் இணைந்தே வளர்ந்தவன். ஆனால் பணிச் சூழலும், சில தேவைகளும் என்னையும் நகரத்தில் கொண்டு வந்து சேர்த்துவிட்டது. ஆனாலும் பால்ய காலத்தின் வாழ்க்கைதான் என்னை இன்றைக்கும் செழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதுதான் எனது எழுத்தின் வேராக இருக்கிறது. அதுதான் என்னை பல நேரங்களில் ஏங்க வைக்கிறது. நகர வாழ்வோடு என்னை ஒட்டவிடாமல் விரட்டுகிறது. உடல் அளவில் நகரவாசியாக வாழ நேர்ந்தாலும், மனம் பிறந்த மண்ணில்தான் புரண்டு கொண்டிருக்கிறது.இப்படி நகரத்தில் வாழ நேர்ந்த ஆரம்ப நாட்களில் புதிதாக ஒரு வீட்டைக் கட்டி குடியேறிய போது ஏராளமான அனுபவங்களைச் சந்திக்க நேர்ந்தது. அதில் ஒன்றுதான் வேலியிலிருந்து ஒரு கிளியைப் பிடித்து வந்து வளர்த்த அனுபவம்.இங்கே கிளியும் ரேவதியும் வேறு வேறு அல்ல. கிளியை வேலியிலிருந்து பிடித்து வந்தோம். ரேவதியை இன்னொரு நகரத்திலிருந்து பிடித்து வந்தோம். அவ்வளவுதான் வேறுபாடு.
இந்தக் கதையை நான் வாசிக்கையில் அதை ஒரு பெண்ணியக் கதையாகத்தான் வாசித்தேன். என் வாசிப்பு சரிதான் என்பதை உங்கள் பதிலின் ஒரேயொரு வாக்கியம் தெளிவுபடுத்தி விட்டது:
“கிளியை வேலியிலிருந்து பிடித்து வந்தோம்; ரேவதியை இன்னொரு நகரத்தில் இருந்து பிடித்து வந்தோம். அவ்வளவுதான் வேறுபாடு என்ற பதிலில் அது புரிகிறது. எந்த வகையான வெளிப்படையான விளக்கங்களோ, இதுதான் பெண்ணியம் என்கிற மாதிரியான பிரகடனங்களோ இல்லாமலே அதைப் பதிவு செய்திருக்கிறீர்கள்.. மறக்க முடியாத கதை.அதே சமயம், வெளிப்படையாகக் கோடி காட்டியிருக்கலாமே என்பது மாதிரி, சில கதைகளில் எதுவுமே சொல்லாமல் விட்டு விட்டிருப்பதும் நடந்திருக்கிறது. வாசகரே புரிந்து கொள்ளட்டும் என நீங்கள் நினைத்திருக்க லாம். ஆனால், வெள்ளையம்மா கதையில் கணவனின் அன்பைப் புரிந்து கொண்ட மனைவியை, மற்றவர்கள் அவ்வளவு கொடுமைப்படுத்துவதையெல்லாம் அவன் சகித்துக்கொண்டான் என்று காட்டியிருப்பதன் நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை..
வெள்ளையம்மாவை மற்றவர்கள் துன்புறுத்துவதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் சங்கிலியால் வீட்டுக்குள் கட்டி வைக்கிறான் கண்ணப்பா. அதுவும் தீர்வாகாத போது தான் அவளைக் கொன்றுவிடுவதைப் பற்றி யோசிக்கிறான். நமது மனதுக்குப் பிடித்தவர்கள் வேதனைப்படுவதை பார்த்துக் கொண்டிருப்பதை விட பெரிய வேதனை எதுவுமில்லையே. அதனால்தானே அப்படியான முடிவுக்கு வருகிறான் அவன்.
சாவுக்கு அடுத்தபடி உங்கள் கதைகளில் மிக அதிகமாகப் பேசப்படும் அம்சம் – விபத்துகள். கிணற்றின் ஊற்று நீரைப் பெறுவதற்காகப் வைக்கப்படும் வெடியால் சிதறிப் பறக்கும் பாறைத் துண்டுகளால் ஏற்படும் விபத்துகள், உழவு மாடுகளோ, வேலை மாடுகளோ மிரண்டு ஓடி யாரையாவது கொம்புகளால் முட்டி ஏற்படுத்தும் விபத்துகள், சாலை விபத்துகள் – என எல்லாவற்றிலும் பல மனிதர்கள் கால்களையோ, கைகளையோ, உயிர்களையோ கூட இழக்க நேரிடுகிறது. விபத்தும், சாவும் தவிர்க்க முடியாதவைதான். ஆனாலும் இந்த அளவுக்கா…? இப்படியா…?
நான் ஏற்கெனவே சொன்னதைப் போல, எந்தவித முன் திட்டமிடலும் இல்லாமலேதான் இந்தக் கதைகளை எழுதியிருக்கிறேன். ஒரு காலத்தில்… விபத்துகள் என்றால், மாடு முட்டுவது, மரத்திலிருந்து தவறி விழுவது, கிணற்றில் விழுந்து விடுவது என சொற்பமாகத்தான் நடந்தது. ஆனால் இன்று நாடு முழுவதும் நடக்கிற விபத்துகளின் புள்ளி விவரங்கள் நம்மை பதற வைக்கின்றன. செய்தித் தாள்களும், ஊடகங்களும் விபத்துச் செய்திகளை அறிவித்துக் கொண்டே இருக்கின்றன. கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்ட பிறகு விபத்துக் காட்சிகளை திரைப்படங்களில் பார்ப்பதைவிடவும் தத்ரூபமாக பார்க்கிறோம். அதுவும் வீட்டின் கூடத்தில் அமர்ந்து, உணவை ருசித்து சாப்பிட்டபடி.
ஆனால் விபத்துகள் எத்தனை குடும்பங்களை நிர்மூலமாக்கியிருக்கிறது என்பது அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் தெரியும். எனது உடன்பிறந்த சகோதரன் ஒரு விபத்தில் தன் கால்களை இழந்து இன்றைக்கும் பெரும் போராட்டத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான். அந்த வலியை அனுபவித்தவர்களால் மட்டுமே உணர முடியும். ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் எல்லாவற்றையும் போலவே, விபத்துகளைப் பற்றிய கவலையும் இல்லாமல் உதாசீனத்தோடுதான் இருக்கிறார்கள். அதனால் தான் பல பேர் அகால மரணமடைந்து கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகளில் படமாகிவிடுகிறார்கள்.
உங்கள் கதைகளில் பலவற்றில் திரும்பத் திரும்ப இளம் பெண்களின் உடல் உறுப்புகள் பற்றிய வர்ணனைகள் மிகவும் தூக்கலாக இடம் பெறுகின்றன. இப்படி கதை நாயகியரை அங்கம் அங்கமாக வர்ணிப்பது தமிழிலக்கிய மரபுதான். பாதாதிகேச வர்ணனை என்று இது காவிய அணிகளுள் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது. அதன்படி பார்த்தால், நீங்கள் எழுதுவதில் தவறொன்றும் இல்லை. ஆனால் மனிதர்கள் மகிழ்ச்சியில், காமப் பரவசத்தில் மூழ்கிக் கிடக்கையில் பெண்ணின் ஆடை கலைந்து அலங்கோலமாகக் கிடக்கையில் வெளித் தெரியும் உறுப்புகளைப் பற்றி நிறைய இடங்களில் எழுதுகிறீர்கள். ஆனால் வெள்ளையம்மா போன்ற கதைகளில், பெண்கள் மனநிலை பிறழ்ந்தவர்களாக இருக்கும் போது அவர்களுக்குச் சிகிச்சை அளிக்க அல்லது அவர்களைக் கட்டுப்படுத்தப் பல ஆண்கள் தீவிர முயற்சி செய்யும் போது, பரிதாபத்துக்குரிய அந்தப் பெண்களின் கையறு நிலையைப் பயன்படுத்திக் கொண்டு ஆண்கள் அத்துமீறும் சந்தர்ப்பங்களின் போது பெண்கள் நிலை குலைந்து, தவிக்க நேரிடுகிறது. அம்மாதிரி தருணங்களில் மேல்சட்டைக்குள் திமிறிய இளமை எழுச்சிகள் என்றோ, வாழைத் தண்டைப் போன்ற தொடைகள் என்றோ எழுதும் போது, சற்றே ரசக்குறைவாக தோன்றுகிறது. உங்கள் கருத்து…?
நமது இலக்கிய வகுப்புகளில் ஏற்கெனவே பல முறை நாம் பேசியதுதான். ஒரு ஏழைப் பெண்ணின் ஆடைக் கிழிசலின் வழியே தெரியும் அவளின் இளமையைப் பற்றி எழுதினால் அது பிற்போக்கு; அவளின் வறுமையைப் பற்றி எழுதினால் அது முற்போக்கு என்பதை நானும் உள்வாங்கியிருக்கிறேன்.
இந்த உலகமும், மனிதர்களும் எல்லா நேரங்களிலும் ஒரே நிலையில் இருந்து விட முடிவதில்லை. சபலங்களும், சஞ்சலங்களும் நிறைந்தவர்களாகத்தானே மனிதர்கள் இருக்கிறார்கள். இன்று சாலைகளில் திரிகிற மனப்பிறழ்வு கொண்ட பெண்களில் வயோதிகப் பெண்கள் கூட சில நேரங்களில் வன்புணர்வுக்கு ஆளாகிறார்கள். மனநலம் பாதிக்கப்பட்ட பல இளம் பெண்கள் கருவுற்று, பிரசவிப்பதை பார்த்திருக்கிறோம். நிச்சயம் இவர்கள் குந்திதேவியைப் போல கருவுற்றவர்கள் இல்லை. இப்படியான சில நிகழ்வுகளையும் படைப்புகளில் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.
அதைப் போலவே, இயற்கையை எழுதுகிறபோது பல பக்கங்கள் உருகி உருகி எழுதுகிறோம். மரத்தை, செடியை, இலைகளை, கிளைகளை, பூக்களை, கனிகளை ரசித்து எழுதுகிறோம். அதைப் போலதான் பெண்களின் உடல் வளமையையும், ஆண்களின் வனப்பையும் எழுதுவதில் தவறில்லை என்றே நினைக்கிறேன். ஆனால் நீங்கள் சொல்வதைப் போல அதுவே எல்லை மீறினால் நிச்சயம் ரசக்குறைவு ஏற்படலாம். அதனால் அதிலும் சுய தணிக்கைகள் வேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு.
மனிதர்களுக்கிடையே கரைபுரண்டோடும் காமத்தை வெவ்வேறு விதங்களில் அலுப்பு சலிப்பின்றி எழுதியிருக்கிறீர்கள். சக மனிதர்களைப் பற்றி ஒரு மனிதர் என்ற நிலையில் நீங்கள் எழுதுவது மிக இயல்பானது. ஆனால் பல நாய்கள் விரட்டி விரட்டி பெட்டை நாய்களைத் தேடி, அடங்காத காம உணர்வுடன் திரிவதையும், அதே போல கோழிகளைக் கவர சேவல்கள் விதவிதமாக முயல்வதையும் எப்படி நுணுக்கமாக எழுத முடிகிறது…? இதையெல்லாம் விட, படிக்கையில் எனக்கு அதிர்ச்சியூட்டிய கதை – காமவெறி மேலோங்கிய ஒருவன் பசுமாடு ஒன்றைப் பின்புறத்திலிருந்து புணர்வதையும், அவனுடைய விந்து திட்டுத் திட்டாக மறுநாள் சாணத்தில் கலந்து வெளியே கிடப்பதையும் வாயில்லாதவை கதையில் எழுதியிருக்கிறீர்கள். எப்படி இது…? இது மிக அதிகமாகத் தெரியவில்லையா…?
சில நிஜங்கள் கற்பனையை விட மோசமானவை. ஏற்றுக்கொள்ளவும் முடியாதவை. ஆனால் எதார்த்தத்தில் அவையும் நடந்துவிடுகின்றன. வாயில்லாதவை கதை கற்பனை அல்ல. உண்மையிலேயே நடந்த நிகழ்வுதான்.ஆடி மாதங்களில், தெருத் தெருவாக அலையும் நாய்களின் கண்களில் வழிகிற காமமும், ஒற்றை றெக்கையை சரித்து ஆடுகிற சேவல்களின் மன்மத நடனமும், ஆட்டுக் கிடாய்களின் மோக கர்ஜிப்பும், மனிதர்களின் விதவிதமான சாகசமும் வேறு வேறு அல்ல. அனைத்து உயிர்களுக்கும் காமம் பொதுதானே. அதைத்தான் ரிஷிமூலம் கதையில் மிக விரிவாக எழுதியிருக்கிறேன்.
உங்களைப் போலவே எழுத வந்து, அன்றைய ஒருங்கிணைந்த வடாற்காடு மாவட்டத்தில் பீடி சுற்றும், தோல் பதனிடும் தொழில்களில் ஈடுபட்டிருந்த, வயல்களிலும் காடுகளிலும் உழைத்து உழைத்து உருக்குலையும் விவசாயத் தொழிலாளர்கள் பற்றிய சிறுகதைகள், நாவல்கள் எழுதி வரும் அழகியபெரியவன் அவர்களின் எழுத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்…?
எங்களது மண்ணின் மிக காத்திரமான படைப்பாளி அழகியபெரியவன். எனது நெருங்கிய நண்பர். பல ஆண்டுகளாக தொடர்கிற நட்பு. கவிதைகள் எழுதுகிறபோது நாங்கள் அடிக்கடி சந்தித்து உரையாடுவோம். அப்போதே பல சிறுகதைகளை எழுதி கவனத்தைப் பெற்றவர் அழகியபெரியவன். அவரது தீட்டு குறுநாவலும், தகப்பன் கொடி நாவலும் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியவை. வடாற்காடு மண்ணின் வழமைகளையும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலையும் மிக அசலாக எழுதி வருகிறார்.
அவரைப் போலவே கவிஞர்கள் சுகிர்தராணி, யாழன் ஆதி, கம்பீரன், நாராயணி கண்ணகி, நேசன், ராணிதிலக் போன்றவர்களும் என் நேசத்திற்குரிய இம்மண்ணின் படைப்பாளிகள்.
உங்களுக்கான எழுத்தின் முன்னோடிகள், அல்லது விருப்பத்திற்குரிய படைப்பாளிகள் என யாரைச் சொல்வீர்கள்…?
எல்லோரையும் போல அம்புலிமாமா கதைகள், ராணி காமிக்ஸ் புத்தகங்கள், ராஜேஷ்குமாரின் கிரைம் நாவல்கள் என்று தான் எனது வாசிப்புப் பழக்கமும் தொடங்கியது.கல்லூரிப் படிப்பிற்குப் பிறகுதான் எனது வாசிப்புத் தளம் சோவியத் இலக்கியம், முற்போக்கு இலக்கியம் என விரிவடைந்தது. ஆரம்பத்தில் த.மு.எ.ச. அதற்கான வாசல்களைத் திறந்துவிட்டது.சிறுகதைகளைப் பொறுத்தவரை வண்ணதாசனைத்தான் எனக்கான ஆதர்சமாக நான் நினைக்கிறேன். அவரது கதைகளில் வாழ்கிற எளிமையான மனிதர்களைப் போல… சில கணங்களேனும் வாழ்ந்துவிட முடியாதா என்கிற பேராசை எனக்குள் இருக்கிறது.
புதுமைப்பித்தனின் கதைகளில் இருக்கிற எள்ளலும், அதன் உள்ளார்ந்த கோபமும் எனக்குப் பிடிக்கும். கு.அழகிரிசாமி என்னை பிரமிக்க வைத்த எழுத்துக்காரர்.தி.ஜானகிராமனின் அத்தனை சிறுகதைகளையும் வாசித்திருக்கிறேன். அவரது கதைகளில் சுழித்துச் சுழித்து ஓடுகிற காவிரியும், அதில் குளித்துக் கொண்டே இருக்கிற மனிதர்களும், கதிர் முற்றிய அந்த நெல் வயல்களும்… எனது நகர வாழ்வை அந்நியமாக்கி, மீண்டும் கிராமத்தை நோக்கி என்னை நகர்த்திக் கொண்டே இருக்கின்றன.
எஸ். ராமகிருஷ்ணன், வண்ணநிலவன், பிரபஞ்சன், ஜெயமோகன், கந்தர்வன், மேலாண்மை பொன்னுச்சாமி, நாஞ்சில்நாடன், ச.தமிழ்ச்செல்வன், எஸ்.உதயசங்கர், பாவண்ணன், ஆதவன் தீட்சண்யா, காமுத்துரை என ஒவ்வொரு படைப்பாளியும் அவர்களின் படைப்புகளின் மூலம் எனக்குள் சில விதைகளைத் தூவியிருக்கிறார்கள்.
நான் அடிக்கடி சொல்வதைப் போல, எனது கதைகள் ஒரு போதும் கதைகள் அல்ல. அவை எங்களின் வாழ்க்கை. எங்களின் கனவுகள். எங்களின் காயங்கள்.நாங்கள் வாழ்ந்ததை, வாழ்வதை, வாழ நினைத்ததை, வாழத் தவறியதை எனது எழுத்துகள் தனக்குள் சுமந்து கொண்டு அலையும்.
தனது குட்டிகளை முன் பற்களால் கவ்விக் கொண்டு, ஒரு பாதுகாப்பான இடம் தேடி, இங்கும் அங்குமாய் அலைகிற ஒரு தாய் நாயைப் போல அது அலைந்து கொண்டே இருக்கும்.