ஜமாலன்
“பிராமணர்” என்ற சொல்லே அவர்களை உயர்ந்தவர்கள் என்ற பொருளையும், மற்றவரை தாழ்ந்தவர்கள் என்ற பொருளையும் தருகிறது. பிராமணர்கள் பிரம்மனின் வாயில் பிறந்தவர்கள் என்பதால் உயர்ந்த குடிபிறப்பைக் கொண்டு உலகை ஆளப் பிறந்தவர்கள்; பிறர் அனைவரும் அவருக்கு அடிமைகள் என்ற பொருளைத்தரும் சொல் என்பதால், இயல்பில் அது மற்றவர்களை தாழ்ந்தவர்கள் என்பதை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது என்று தனது நூலில் ‘பெரியார் முன்வைத்த பார்ப்பனியம் என்ற சொல்லே சரியானது’ என்று துவங்குகிறது சமீபத்தில் வாசிக்கக் கிடைத்த பத்திரிகையாளர் ஜெயராணி அவர்களின் “இதற்குப் பெயர்தான் பார்ப்பனியம்” என்ற நூல்.

“பார்ப்பனியம்”, “பார்ப்பனர்கள்” என்ற சொல்லை பிராமணர்கள் ஒரு வசைச்சொல்லாக பாவிக்கிறார்கள். அது பிராமணர் என்ற வருணம் சார்ந்த சொல்லிற்கு இணையாக தமிழில் பயன்படுத்தும் சொல் என்பதுடன், தமிழ்ப் பண்பாட்டிற்குள் பிராமணியம் தகவமைந்த வரலாற்றையும் குறிப்பிடும் சொல். தமிழ் மரபில் பன்னெடுங்காலமாக பயன்பாட்டில் இருந்த சொல். அதனை பெரியார் தற்காலப் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தபின், தமிழகத்தில் உள்ள பெருவாரியான பிராமணர்கள் அல்லது அந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் அதனை ஒரு வசைச் சொல்லாக பாவிப்பது பரவலாகிவிட்டது. அச்சொல் பிராமணர்கள் மற்றும் பிராமணியம் என்பதைக் குறிக்கும் தமிழ்ச் சொல்லே என்றாலும் தங்களை உயர்ந்தவர்களாகக் கருதிக் கொள்ளும் பிராமணர்கள் அதனை தங்களை குறிக்கும் வசைச் சொல்லாகவே கருதி வருகின்றனர்.
பிராமணர்கள் இந்தியச் சமூகத்தில் தங்களது சனாதன வருணக் கோட்பாட்டால் பிறர்மீது உருவாக்கியுள்ள இழிவினைவிட அச்சொல் பெரும் வசையை உருவாக்கிவிடாது. ஆனாலும், பெரும்பாலானவர்கள் அச்சொல்லைப் பயன்படுத்துவதில் ஒரு மனத்தடையை உணருகிறார்கள் என்பதே யதார்த்தம். ஒரு பண்பாட்டுச் சமத்துவத்தை உருவாக்க அச்சொல்லைத் தவிர்த்து பார்ப்பனர், பார்ப்பனியம் என்ற சொற்களை பயன்படுத்துவதே சரியான பண்பாட்டு அரசியலாக இருக்க முடியம். “மாமுது பார்ப்பான் மறைவழிகாட்டிட” என்று சிலப்பதிகாரத்தில் வரும்போது வராத இழிநிலை பெரியார் கூறியபின் வருகிறது என்றால் ஏன்? என்ற கேள்வி முக்கியமானது.
தலைப்பு பார்ப்பனியம் குறித்த வரையறை சார்ந்தது என்ற எண்ணத்தை உருவாக்குவதாக இருந்தது. ஆனால், இந்நூல் இந்தியச் சமூகத்தில் நிகழ்ந்த பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்த பத்திரிகைகளில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு என்பதால், பார்ப்பனியம் என்ற வரையறை குறித்ததாக இல்லாமல், ஒவ்வொரு நிகழ்விலும் பார்ப்பனியம் என்பது சாதியம், சமத்துவமின்மை என்ற வடிவில் எப்படி உள்ளார்ந்து செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது. அதாவது சாதியம், இந்துமதம், இந்திய பண்பாடு, சமத்துவமின்மை, மனித இழிவு, தீண்டாமை, இந்திய தேசியம், அதிகாரத்தை சுவைத்தல், மற்றவர்களை அடிமையாக்கல், அனைத்து துறைகளிலும் அதிகாரமிக்க பதவி, வெறுப்பரசியல், சிறுபான்மையினரை ஒழித்தல், தனது நலனுக்காக சந்தர்ப்பவாதமாக பேசுதல் ஆகியவற்றின் பெயர்தான் பார்ப்பனியம் என்பதை விளக்கமாகப் பேசுகிறது இந்நூலில் உள்ள கட்டுரைகள். அவ்வகையில் இத் தலைப்பு பொருத்தமானதே. ஒரே நாடு, ஒரே தேசம் என்று துவங்கி ஒரே உரம் என்று அறிவிக்கும் நகைச்சுவைகளை அரங்கேற்றும் இந்திய அரசும் அதன் பின்னுள்ள பார்ப்பனியம் உண்மையில் விரும்புவது பல்வேறு பல சாதிகள் இருப்பதையுமே.
பல ஆங்கில இதழ்கள், இணைய இதழ்கள், தமிழ் தினசரிகளில், மாற்று இதழ்களில் எழுதிய 22 கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. நல்லதொரு கருத்துரையை வழங்கியுள்ளார் தமிழின் குறிப்பிடத் தகுந்த அம்பேத்கரியச் சிந்தனையாளரான மரு. தாயப்பன் அழகிரிசாமி. தனது நூலுக்கான முன்னுரையில் பார்ப்பனியம் சாதிகளின் வடிவில் செயல்படுகிறது என்றும், இந்தியாவின் அனைத்து நிகழ்வுகளிலும் வெளிப்படும் சாதியத்தின் ஆணிவேராக இருப்பது பார்ப்பனியமே என்பதை விளக்கியுள்ளார் ஜெயராணி. ‘பார்ப்பனர்கள் நல்லவர்கள்; பார்ப்பனியம் தீமையானது’ என்ற வாதத்தை மறுத்து ‘திருட்டு தவறு; திருடன் நல்லவன்’ என்பதைப் போலத்தான் என்று தனது முதல் தாக்குதலைத் தொடுக்கிறார்.
ஒவ்வொரு தனிமனிதர்களின் ஆழ்மனதில் உள்ள சாதி என்ற உணர்வு பார்ப்பனியத்தின் வழி கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதே. சாதி ஒரு மனநோய் மற்றும் சமூகநோய் என்பதை இந்நூல் கட்டுரைகளின் வழியாக பல்வேறு நிகழ்வுகள் வழி வாசிப்பவர்களுக்கு புரியக்கூடிய எளிமையான பத்திரிகை மொழியில் பல புள்ளிவிவரங்கள், ஆதாரங்களுடன் மிகவும் அளவையியல் (தர்க்கவியல்) பொருந்திய வாதத்துடன் வெளிப்படுத்தி உள்ளார்.
சிக்கலான கோட்பாட்டு விளக்கங்கள், புரியாத தத்துவ, வரலாறு, சமூகவியல் மொழிகளைப் பயன்படுத்தாமல் நேரடியாக பத்திரிகைகளின் பத்திக் கட்டுரைகளாக இந்தச் சிக்கலின் நுட்பத்தை வாசிப்பவரிடம் சேர்க்கிறது இந்நூல். ‘பார்ப்பனியம் சாதிகளால் உயிர்வாழ்கிறது. சாதியம் இந்துமதத்தின் அடிப்படையாக உள்ளது. ஆக, பார்ப்பனியம் என்பது இந்துமதம் என்பதே தவிர வேறொன்றுமில்லை’ என்பதை ஒவ்வொரு கட்டுரையிலும் பல்வேறு கோணங்களில் பேசுகிறது இந்நூல். இதன்பொருள் ஒருவர் தன்னை ‘இந்து’ என்று சொல்வதும் ‘பார்ப்பனர்’ என்று சொல்வதும் அடிப்படையில் ஒன்றே. காரணம் இரண்டையும் பிரிக்கமுடியாது என்பதே. இந்துமதம் என்பதே வருண அடிப்படையில் அமைந்த சாதியமே தவிர வேறொன்றுமில்லை.
தற்காலத்தில் பார்ப்பனியம் பல்வேறு வடிவங்களில் செயல்படுகிறது. பார்ப்பனியம் (பார்ப்பனர்களிடம்), நவபார்ப்பனியம் (சாதி இந்துக்களிடம்), தலித் பார்ப்பனியம் (தலித்துகளிடம்), முற்போக்கு பார்ப்பனியம் (அறிவுஜீவிகளிடம்) என சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும், அனைத்து வடிவங்களிலும் அது செயல்படுகிறது. அதனால் பிரஞ்சு புரட்சியில் வைக்கப்பட்ட முழுக்கமான “ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு போலீஸ்காரன் உள்ளான், அவனை வெளியேற்றாமல் புரட்சி சாத்தியமில்லை” என்பதைப்போல இந்தியாவில் “ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு பார்ப்பனன் உள்ளான், அவனை வெளியேற்றாமல் புரட்சி சாத்தியமில்லை” என்பதை முன்வைக்க வேண்டும். அதற்கான ஒரு முன்முயற்சியாக இன்றைய பல நிகழ்வுகளின் உள்ளார்ந்து இயங்கும் சாதியத்திற்குள் ஒளிந்திருப்பது பார்ப்பனியமே என்பதை அம்பலப்படுத்துகிறது இந்நூல்.
‘பண்பாடு’ என்ற பெயரில் உருவான பெரும்பான்மை வாதத்தை மறுதலிப்பதுடன், அதன் உள்ளார்ந்த தன்மையை வெளிப்படுத்திக் காட்டுகிறது. இந்தியச் சமூகத்தில் பொதுவானது என்பதும், நடுநிலையானது என்பதும் பார்ப்பனிய இந்துமத வடிவில் வெளிப்படும் சொல்லாடல்களே. அடிப்படையில் பார்ப்பனியம் மற்றமையை உருவாக்கி, எதிர்மையாக கட்டமைத்து, தன்னை உயர்த்தி மற்றமையைத் தாழ்த்தும் ஒருவகை, லக்கானிய வார்த்தைகளில் சொன்னால், பாரிய-மற்றமை (capital Other). லக்கான் பாரிய-மற்றமையை மாற்றத்திற்கான மற்றமை என்றார். ஆனால், இந்தியச் சமூகத்தில் இது எதிர் புரட்சிக்கான மற்றமையாக உள்ளது. அதனால்தான், அது அனைத்தும் தீர்மானிக்கும் மறைவியக்கமாகச் செயல்படுகிறது. தன்னை கடவுளுக்கு நிகரானதாக முன்வைத்துக் கொள்கிறது. இந்தியச் சிந்தனையின் மூளையாக, தனியர்கள் மூளையின் செல் பதிவாக அமைந்துள்ளது.
பார்ப்பனியம் இந்துமதத்தை தனது ஆயுதமாகப் பயன்படுத்தவில்லை, மாறாக இந்துமதம் என்பதே பார்ப்பனியம்தான். அதனால், பார்ப்பனியத்தை தவிர மற்றவர்கள் அனைத்தும் அதன் பொருளில் தனித்தன்மை வாய்ந்தவர்கள் அல்ல. தனக்கான அடிமைகள் அல்லது தன்னைக் காப்பதற்காக கடவுளால் படைக்கப்பட்டவர்கள் என்பதே. பார்ப்பனியம் என்பது ஒரு பேருடல்; அதன் அங்கங்களே மற்ற அனைத்து சாதிகளும், தலித் உட்பட. அதனால்தான் அம்பேத்கர் இந்துமதத்தைவிட்டு வெளியேறாமல் பார்ப்பனியத்தைவிட்டு வெளியேற முடியாது என்பதை அறிவித்து புத்தமத ஏற்பை தீர்வாக முன்வைத்தார். இதனைத்தான் ஜெயராணி ‘மூடுண்ட பண்பாடு’ என்கிறார். இந்தப் பண்பாடே ‘இந்துப்பண்பாடு இந்தியப்பண்பாடு’ என்ற பெயரில் அனைத்திற்கான பொதுப்பண்பாடாக மூடுதிரை போட்டுக் கொண்டுள்ளது. பெண்களின் மீதான வதை, தலித்துகள் மீதான வதை, சாதியத்தைக் காக்கும் அகமணமுறை, தீண்டாமை, குடிசைவாசிகளை வெளியேற்றும் நகர்ப்புற வளர்ச்சி, துப்புரவுத்தொழில், ஊடகங்களின் பணிகள், திராவிட எதிர்ப்பு, தமிழ் வெறுப்பு என அனைத்து துறையிலும் அது வெளிப்படுகிறது.
அம்பேத்கர் பார்ப்பனியம் என்பது சமத்துவமின்மைதான் என்றார். இந்த சமத்துவமின்மையை படிநிலையாக மாற்றி பாதுகாக்கும் வடிவமே சாதி. இந்த சாதிகளை உருவாக்கியதே பார்ப்பனிய மனுதருமம் முன்வைக்கும் சனாதன வருணதருமம். இந்த வருணதருமத்தை தோன்றிய நாள்முதல் பாதுகாத்து வருவதுடன், தங்கள் வருணத்தை மாற்றாமல் பாதுகாத்து தலைமை தாங்கிவருவதும் பார்ப்பனியமே. ஆக, இந்திய சமூகத்தின் கேடான, சமத்துவமற்ற, சமதர்மமற்ற, மனிதத்தன்மையற்ற பல இழிவுகளுக்கு காரணம் பர்ப்பனியமே என்பதை அறைந்து சொல்லும் ஒரு நூலே ஜெயராணியின் இந்நூல். அதற்காக அவர் தனது 20 ஆண்டுகால பத்திரிகைப் பணியில் கிடைத்த அனைத்து தரவுகளையும் பயன்படுத்தி நிறுவுகிறார் இந்நூலில்.
அரசு பயங்கரவாதம் குறித்து பேசும் முதல் கட்டுரை முதல் குடிசைகளை அகற்றும் மாநகர வளர்ச்சித் திட்டங்கள் வரை வெவ்வேறு சமகாலப் பிரச்சனைகளை எடுத்துக்கொண்டு ‘இதற்கு பெயர்தான் பார்ப்பனியம்’ என்பதை விளக்குகிறார். அரசு பயங்கரவாதம் என்பது எப்படி திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது அதன் பின்னுள்ள அரசியல் என்ன? குறிப்பாக அப்பயங்கரவாதம் தலித் மக்கள் போராட்டங்களிலும், இடைநிலைச் சாதிகளின் அல்லது பொதுமக்களின் (ஸ்டெர்லைட் போராட்டத் துப்பாக்கிச் சூடு) போராட்டங்களில் பயன்படுத்தப்பட்டு போராட்டக்காரர்களான அப்பாவி மக்களைக் கொன்று குவித்தாலும், அதற்கான நீதி விசாரணைகளிலும், தண்டனை வழங்கப்படுவதிலும் எப்படி சாதியம் பங்கு வகிக்கிறது என்பதை விவரிக்கிறார்.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டிற்கு நீதி வழங்கும் அரசு வாச்சாத்தி, கீழ்வெண்மணி தலித் படுகொலைகளுக்கு மௌனம் காக்கிறது அல்லது உயர்சாதிகளைப் பாதுகாக்கிறது என்பதை தனது பல கட்டுரைகளிலும் சான்றாக சுட்டிக்காட்டுகிறார். பார்ப்பனர்கள் செய்யும் பல ஊழல்கள் (சமீபத்திய சான்று: மிகப்பெரும் பங்குச்சந்தை ஊழல் செய்த சித்ரா ராமகிருஷ்ணா போன்றவர்கள்) குறித்து மௌனம் காக்கும் ஊடகங்கள், ஊழலே செய்யாத ஆ. ராசா அவர்களை மாபெரும் ஊழல் குற்றவாளியாக கட்டமைத்ததன் பின்னணியில் இருப்பது பார்ப்பனியமே. சுப்ரமண்ய சாமி என்ற பார்ப்பனர் திட்டமிட்டு இதனை வழக்காக்கி ஒன்னரை ஆண்டுகள் ஆ. ராசா அவர்களை சிறையில் வைத்ததை அறிவோம்.
இங்கு ஊழல், நீதி அனைத்தும் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு எதிராகவும் உயர்சாதி பார்ப்பனருக்குச் சாதகமாகவும் இருக்கிறது. உற்றுக்கவனித்தால், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக அரசுத் திட்டங்கள் வரும்போது எல்லாம் யாரோ ஒரு பார்ப்பனர் வழக்குத் தொடுப்பதைக் காணலாம். காரணம் நீதி, அரசு, சட்டம் அனைத்தும் அவர்கள் நினைத்ததை நடத்துவதற்கான ஒன்றாகவே உள்ளது. அதனால் அவர்கள் அதன்மீது நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். தவறி ஏதேனும் வந்துவிட்டால் அதைத் தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவது அல்லது அரசு எந்திரத்தைப் பயன்படுத்தி அதை சரியாக நிறைவேற்றமுடியாமல் செய்வது.
அரசு எந்திரத்தின் அனைத்து துறைகளிலும் பார்ப்பனியம் அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு அதனை எந்த அரசாங்கம் மாறினாலும் இயக்குவதாக அமைந்துள்ளது. இதன் பெயர்தான் பார்ப்பனியம் என்பதை விளக்குகிறார். இப்படி பல ஊழல் உதாரணங்களை இந்நூலில் முன்வைத்து பார்ப்பனிய ஊடகங்களின் சாதிய வன்மத்தை வெளிப்படுத்திக் காட்டியுள்ளார். பெண்கள்மீதான பாலியல் வன்முறையில் தலித்துகளுக்கு நீதியே வழங்கப்படுவதில்லை. ஆனால் நிர்பயா, சுவாதி போன்ற உயர்சாதி மற்றும் பார்ப்பனர்களுக்காக நாடே அழும்படி ஊடகங்கள் பரபரப்புச் செய்திகளாக மாற்றுவது ஏன்? என்ற கேள்வியை எழுப்பி ‘அதற்கு பெயர்தான் பார்ப்பனியம்’ என்பதை விளக்குகிறார். ஊடகங்கள் மக்களிடம் பேசவேண்டிய பிரச்சனைகளை பேசவிடாமல் மடைமாற்றும் பணிகளைச் செய்வதை சுட்டிக்காட்டுகிறார்.
அரசு பயங்கரவாதம் என்றாலும், அதன்பின் பார்ப்பனியம் சாதியவடிவில் செயலாற்றி தலித் மக்களுக்கு ஒரு நீதியும், மற்றவருக்கு ஒரு நீதியும் வழங்குகிறது என்பதை பல கட்டுரைகளில் சுட்டிக்காட்டுகிறார். “அரசு பயங்கரவாதம் என்பது திறம்பட எழுதப்பட்ட ஒரு நாடகம் என அதற்கென அரசுகள் ஒரு திரைக்கதைப் புத்தகத்தைப் பராமரிக்கின்றன” (பக்.38) என்ற அரசின் நாடகத்தை அம்பலப்படுத்துகிறார். தலித்துகள் மீதான துப்பாக்கிச் சூடுகள் மௌனமாகவும், மற்றவர்கள் மீதான துப்பாக்கிச் சூடுகள் பேசப்படுவதாகவும் இருப்பதை சுட்டுகிறார்.
பொதுமக்கள் என்ற குடிமைச் சமூகத்தின் உறுப்புகள் இங்கு பொதுவாக இல்லை.மாறாக, பார்ப்பனியம் உருவாக்கிய சாதிய சமத்துவமின்மை அடிப்படையில் சாதிகளாக பிளவுண்டு இருக்கிறார்கள். காரணம், இங்கு குடிமைச் சமூகம் என்பதே வருணசாதிய சமூகமாக உள்ளது. (இதுகுறித்து விரிவாக எனது பாரதி புத்தாகாலயம் வெளியிட்ட “குடியாண்மைச் சமூகமும் நுண்பாசிசமும்” என்ற நூலில் எழுதியுள்ளேன்.) இங்கு பாசிசம் என்பது ஜெர்மன், இத்தாலி போல அரசு வடிவில் மட்டும் நிலவவில்லை; பண்பாடு, வாழ்வியல் என்ற வடிவில் நுண்பாசிசமாக ஆழ்மனதில் அமர்ந்துகொண்டு உள்ளது சாதியமாக. இந்திய நுண்பாசிசத்தின் வடிவம் பார்ப்பனியமே என்பதை உணர்வது அவசியம்.
ஊடகவியலாளராக, இவரது பார்வையில் ஊடகங்கள் எப்படி அறமற்றதாக இயங்குகின்றன என்பதை விளக்கும் கட்டுரை மிக முக்கியமான ஒன்று (பக். 191-209). ஊடகங்கள் எப்படி மக்களின் கூட்டு மனசாட்சியை உருவாக்குகின்றன என்பதை சொல்கிறார். இஸ்லாமியர்கள் சிறுபான்மை சமூகம் என்பதால் எப்படி பாரபட்சமாக நீதியும், தண்டனையும் வழங்கப்படுகிறது என்பதை கோவை குண்டுவெடிப்பு உட்பட இந்தியச் சிறைகளில் வாடும் எண்ணற்ற இஸ்லாமியர்கள் விடுவிக்கப்படாமல் விசாரணை எனும் பெயரில் அடைக்கப்பட்டும், அவர்களுக்கு பிணையும் இன்றி மரணிப்பதையும் விரிவாக பேசுகிறார். ஊடகங்கள் ‘கவர் ஜார்னலிசம்‘ (கவரில் தரப்படும் அன்பளிப்பு கையூட்டுகள்), கட்டணச் செய்திகள், பெருமுதலாளிகளின் முதலீடு என ஊடகங்களின் செயல்பாடுகளை ‘நிறுவனக் குற்றங்கள்’ என்று முன்வைப்பது முக்கியமான அவதானிப்பு.
பெரும்பாலான ஊடகங்கள் 90 சதவீதம் உயர்சாதி பார்ப்பனர்களினை தலைமைப் பொறுப்பில் கொண்டு நடத்தப்படுகிறது. இன்றைய இந்துத்துவ பிரச்சாரப் பீரங்கிகளாக மாறி மக்களிடம் உள்ள ஊடகங்கள் மீதான நம்பிக்கையைப் பயன்படுத்தி பாஜகவின் பொய்களை, புளுகுகளை மக்களிடம் உண்மைபோல கொண்டு சேர்க்கிறது என்பதை விரிவாக பல நிகழ்வுகளை சுட்டிக்காட்டி விவரித்துள்ளார். ‘அறச்சிதைவு’ அடைந்த ஊடகங்களின் இந்த இழிநிலைக்கு காரணம் அதன் பார்ப்பனிய சாதிய உள்ளடக்கமே. புல்வாமா, பால்கோட் தாக்குதலை எப்படி திட்டமிட்டுப் பரப்பி இந்திய ஊடகங்கள் பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சாரகர்களாக மாறின என்பதை சுட்டிக் காட்டுகிறார்.
பல கட்டுரைகள் ஒரு பத்திரிகையாளராக கள ஆய்வுகள் வழியாகவும், பாதிக்கப்பட்டவர்களின் நேர்காணல்கள், அவர்களது குடும்பத்தினரின் கருத்துகள் என தொகுத்து பிரச்சனையின் உணர்ச்சிகரமான பகுதிகளை முன்வைப்பது வாசிப்பில் உணர்வுத் தாக்கத்தை உருவாக்கக் கூடியதாக உள்ளது. பேரறிவாளன் மற்றும் எழுவர் விடுதலை குறித்தும் அதன் பின்னுள்ள அரசியலையும் மூன்று வெவ்வேறு தலைப்புகளில் விவரித்துள்ளார். அதன் பின்னுள்ள அதிகார அரசியல் ராஜி்வ் கொலை வழக்கில் உண்மைகளைக் கண்டறியத் தவறியதையும், இதுவரை தனுவின் ‘பெல்ட் பாம்’ தயாரித்தவர் யார் அதன் பின்னணி என்ன? என்பது குறித்து சி.பி.ஐ. விசாரிக்கத் தவறியதைச் சுட்டிக்காட்டியுள்ளார். ஜெயின் கமிஷன் விசாரிக்கப் பரிந்துரைத்த சந்திரா சுவாமிகள், சுப்ரமண்ய சாமி ஆகியோரை விசாரிக்கவும் இல்லை ஏன்? என்ற கேள்வியை எழுப்புகிறார்.
ராஜிவ் கொலைக்குப் பின்னுள்ள அந்நிய சதி குறித்தும், இதுபோன்ற அரசுடன் உறவு கொண்ட உயர்சாதியினர் குறித்தும் விசாரிக்கப்படவேயில்லை. அதனால், அந்தக் கொலை இன்னும் மர்மமாகவே உள்ளது. எளிமையான சில பதில்கள், எளிமையான சில மனிதர்கள் மட்டுமே அதற்குப் பலியாக்கப்பட்டார்கள். இப்படியான ஊடகங்கள் பரப்பும் அல்லது அரசு உருவாக்கும் பல நிகழ்வுகளின் பின்னுள்ள உண்மைகளை வெளிப்படுத்துகிறது இக்கட்டுரைகள். அடிப்படையில் ராஜிவ் கொலை என்பது இந்தியா மதச்சார்பின்மையை முழுமையாக கைவிட்டு பா.ஜ.க. என்கிற மதவெறி அமைப்பின் அதிகாரத்திற்கு வழியமைத்த ஒரு திருப்புமுனை என்பதை மறுத்துவிட முடியாது. வளர்ந்துவரும் ஒரு வலிமையான காங்கிரஸ் தலைமை அழிக்கப்பட்டது என்பதன் பின்னுள்ள அரசியல் இலாபம் குறித்து பெரும் மௌனமே நிலவுகிறது. காங்கிரஸின் வீழ்ச்சிக்குப்பின் உள்ள மூன்று காந்திகள் (மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி) படுகொலைகள் முக்கியமானவை.
இந்திய சாதியத்தின் அகக்கட்டுமானமாக இருந்து அதனைப் பாதுகாப்பது அகமணமுறையே என்பதை முகத்தில் அறைவதைப்போல எடுத்து வைக்கிறது “இந்தியாவை அழிப்பது அகமணம்” (பக்.166-179) என்ற கட்டுரை. அம்பேத்கர் முன்வைத்த அகமணமுறை குறித்த பார்வையை இன்றைய ஆணவ, கௌரவக் கொலைச் சூழலின் பின்னணியில் வைத்து விவரிக்கிறது இக்கட்டுரை. தலித் என்ற சொல் இழிசாதி பெயர்களுக்கு எதிராக எப்படி ஒரு வலுவான அரசியல் சொல்லாடலாக அமைந்துள்ளது என்பதை ஒரு கட்டுரையில் விவரிக்கிறார் (பக். 63-75). அதோடு விவசாயம் என்பதும் எப்படி ஒரு சாதித்தொழிலாக உள்ளது என்பதைப் பேசுகிறது ஒரு கட்டுரை (181-189). ஆனால், விவசாயம் நிலவுடமை சார்ந்த ஒரு உற்பத்திமுறை என்பதால் அதில் சாதிய கட்டுமானம் இறுகிப்போய் அமைந்திருக்கும்.
விவசாயத்தை நவீனப்படுத்துவதால் மற்றும் கம்யூனிசம் முன்வைக்கும் கூட்டுப்பண்ணை உற்பத்திமுறை மட்டுமே அதனை ஜனநாயகப்படுத்தும். காரணம் விவசாயம் என்பது சந்தை பொருளுற்பத்தி முறையைச் சார்ந்து அமையாமல் குடும்ப, கிராமிய அமைப்பை அடிப்படையாகக் கொண்ட பழைய நிலவுடமை உறவில்தான் அமைந்துள்ளது. நிலவுடமை உற்பத்தி முறை புரியாமல் விவசாயத்தின் சாதியக் கட்டுமானத்தைப் புரிவது கடினம்.
சாதி வர்க்கத்தின் உறையாக உள்ளது என்கிற அம்பேத்கரியப் பார்வை, இந்தியச் சூழலில் மார்க்சியம் சாதியைப் புரிந்துகொள்வதற்கான அடிப்படையைத் தரக்கூடியது. பொதுவாக, தன்னை ஒரு அம்பேத்கரிய, பெரியாரிய, புத்த சிந்தனை மற்றும் அரசியல் அடிப்படையில் முன்வைக்கும் ஜெயராணி மார்க்சியம் குறித்தோ, அதன் பார்வைகள் குறித்தோ எப் பதிவுகளையும் செய்யவில்லை என்பது ஆச்சர்யமே. காரணம் அவர் மார்க்சியப் பார்வையை கைக்கொள்ளவில்லை என்பதுடன் அதன் அடிப்படைகள் குறித்தும்கூட கவனம் அற்றவராக உள்ளார். காரணம், மார்க்சியப் பார்வை இவரது இவ்வெழுத்துகளின் அடிப்படைகளை இன்னமும் ஆழமாகப் புரிய உதவும். அது இக்கட்டுரைகளின் தளத்தை விரிவுபடுத்துவதாகவும், செழுமைப் படுத்துவதாகவும் அமைந்திருக்கும்.
அம்பேத்கரியர்கள், பெரியாரியர்கள் மார்க்சியத்தின் மீதும், மார்க்சியர்கள் அம்பேத்கரியம், பெரியாரித்தின் மீதும் தீண்டாமை பாராட்டுவதும் ஒருவகை பார்ப்பனியமே. காரணம் பார்ப்பனியம் சனாதனம் (பழமை என்ற) ஒற்றை சிந்தனைமுறை என்கிற இறுக்கத்தைக் கொண்டது. பிறவற்றை தனக்குள் உண்டு செரித்துவிட்டு தனது சனாதனத்தை நிலைநாட்டுவது. அது ஒருவகை ஒருமைவாதமே. அதன் ஒரு வெளிப்பாடே ஒற்றை தேசம் என்கிற பெருந்தேசிய வெறியாக வெளிப்படுவது.
இந்நூலில் வெளிப்படும் மார்க்சிய பார்வையின்மை அவரது அரசு எந்திரம் குறித்த புரிதலில் சிக்கலை உருவாக்குவதாக அமைந்துள்ளது. அதாவது இன்றைய அரசாங்கம் தலித் தலைமையில் அமைந்துவிட்டால் விடுதலை கிடைத்துவிடும் என்பதான ஒரு பார்வை அவரது அடியோட்டமாக அமைந்துள்ளது. உண்மையில் அரசு எந்திரம் வர்க்கத்தன்மைக் கொண்டது. அது தனக்கான அரசாங்கத்தை மட்டுமே அமைக்க அனுமதிக்கும். அது எக்காலத்திலும் தலித் தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்காது. காரணம், தலித் அதிகார வர்க்கமாக உருவாகுவதற்கான வாய்ப்பை சுய தொழில்துறை துவங்கி அனைத்திலும் தடைசெய்வதாக, மறுப்பதாக அமைந்திருப்பது பார்ப்பனியத்தின் சாதியமும், அதன் அடிநாதமாக உள்ள தீண்டாமையும். அப்படி உருவாக்காமல் இருக்கவே சாதியம் என்ற அமைப்பை அது காத்துவருகிறது. எனவே, அரசின் வர்க்கத்தன்மைக்கும், சாதியத்திற்குமான உறவு இக்கட்டுரைகளில் முற்றிலுமாக விடுபட்டுள்ளது. அது பார்ப்பனியம் என்ற வடிவத்தில் செயல்படுவதை நுட்பமாக எடுத்துரைக்கும் ஜெயராணி, அதன் அடுத்த தளத்திலான சாதிய மூலதன ஆதிக்கம் என்ற தளத்திற்கு நகரவில்லை.
சாதிக்கும் மூலதனத்திற்குமான உறவுதான் இன்றைய மார்க்சிய அம்பேத்கரிய பெரியாரிய பார்வைகள் முகங்கொடுக்கும் சிக்கல். இந்தச் சிக்கலை கோட்பாட்டுரீதியில் தீர்ப்பது முக்கியம். அதற்கான நுண்வடிவமாக உள்ளியங்கும் பார்ப்பனியத்தை தோலுரிக்கிறது இந்நூல் என்ற வகையில் முக்கியமான ஒன்று. ஏனோ இவர் மாரக்சியத்தை தீண்டத்தகாத பார்வையில் அணுகுவதைப் போன்ற ஒரு தோற்றம் இக்கட்டுரைகளில் வெளிப்படுகிறது. பார்ப்பனியம் என்பது இந்திய ஆளும் வர்க்கத்தின் பண்பாட்டு மூலதனம் என்பதை அறிவது அதனை புரிந்துகொள்வதற்கான அடிப்படை.
அம்பேத்கர், பெரியார், புத்தம் என்பதை தனது பார்வைநிலையாக முன்வைக்கிறார். ஆனால், புத்த தம்மத்தில் ஆரிய எதிர்ப்புநிலை குறித்து இதில் அதிகம் பேசப்படவில்லை.
சமீபத்தில் நான் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் பேசிய தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு அரசு ஊழியர் (ஐ.ஏ.எஸ். ரேங்கில் உள்ளவர், எழுத்தாளர், ஆய்வாளர்) தலித் என்ற சொல்லை சமீபத்தில்தான் கேள்விப்படுகிறேன், இவ்வளவு ஒடுக்குமுறைக் கொடுமைகளை தான் அனுபவித்ததில்லை, காரணம் அவரது தந்தையாரும் ஆசிரியராக பணியாற்றிய அரசு ஊழியர் என்றார். அவர் தலித் சிந்தனையே தனக்கு புதிதாக உள்ளது என்றார். ஆனால், அவரது ஊரில் உள்ளவர்கள் மற்றும் அவரது உறவினர்கள் இன்னும்கூட ஏழ்மை நிலையில் இருப்பதாகச் சொன்னார். ஆக, தலித் சமூகத்தில் ஒரு உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் தங்களை ஒரு தலித்தாக உணர்வதில்லை என்கிற யதார்த்தத்தைப் புரிந்து கொள்வது அவசியம். காரணம் வர்க்க நிலைப்பாடற்ற வர்க்க உணர்வு அவர்களை அப்படி எண்ண வைக்கிறது. வர்க்க நிலைப்பாட்டையும், வர்க்க உணர்வையும் பிரித்தறிவது அவசியம்.

தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் சமூகத்தை முன்னேற்றுவதற்காக மற்றவர்களைவிட அதிகம் கடப்பாடு உடையவர்கள். ஆனால் பெரும்பாலும் அப்படி இருப்பதில்லை. இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தி மேன்மை அடைந்த தலித்துகள் தங்களை பார்ப்பனர்களாக உணர்கிறார்கள் என்பது ஒரு அவல யதார்த்தம். ஆனாலும், ஜெயராணி ஒரு முக்கியமான வேண்டுகோளை இதில் முன்வைக்கிறார். தலித்துகள் பத்திரிகைத்துறையில் நடைபெறும் பாகுபாடுகள், சாதிய ஒதுக்குதல்கள் ஆகியவற்றைமீறி, மனத் துணிவுடன் தொடர்ந்து அதில் இயங்க வேண்டும். அத்துறையைவிட்டு வெளியேறக்கூடாது என்கிறார். இது ஒரு முக்கியமான வேண்டுகோள். அவர் அத்துறையில் பட்டபாடுகளையும் அனுபவங்களையும் விவரிக்கிறார். பொதுச்சமூகம் என்ற பெயரில் உள்ள அனைவரும் இத்தகைய கொடுமைகளை இந்நூலில் வாசித்து குற்ற உணர்வு கொள்வது அவசியம். எந்த அளவிற்கு சமூகப் பொறுப்புள்ள அறிவுச் சமூகமான பத்திரிகை துறையே சாதிய வன்மம் கொண்டிருக்கிறது என்பதை அம்பலப்படுத்துவதாக உள்ளது.
குடிசைவாசிகள் நகர்ப்புற வளர்ச்சி, ‘ஸ்மார்ட் சிட்டி’ என்ற பெயரில் நகர மையத்தைவிட்டு அப்புறப்படுத்தப்பட்டு அவர்களை உள்நாட்டில் அகதிகளைப் போல அடைத்து வைப்பது பற்றிய கட்டுரைகள் பரவலான கவனத்தைப் பெறும் பொருட்டு எழுதப்பட்டுள்ளது. அத்தகையவர்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் தலித்துகள். அவர்களது பிரச்சனையை யாரும் கவனிப்பதில்லை. அவர்களது வாழ்வாதாரமே நகர மையம்தான். அதனைச் சிதைப்பதாக உள்ளது இத்தகைய திட்டங்கள் என்பதைச் சொல்கிறது கட்டுரை. அவர்களுக்கு நிவாரணங்கள் வாழ்வாதார அடிப்படையில் அமைக்கப்படுவதில்லை.
வெறும் இடமாற்றம் அவர்களது வாழ்வைச் சிதைப்பதாக உள்ளது. தவிரவும் அதில் நகர ஓரங்களில் வளர்ந்துவரும் பணக்கார, நடுத்தரவர்க்க குடியிருப்புகள் அவர்களது இடப்பெயர்விற்கு அடிப்படையாக அமைகிறது என்பது மற்றொரு யதார்த்தம். ஆனாலும், அவர்களுக்கான மருத்துவ வசதி, பள்ளி என எந்த ஒரு வசதியும் அரசால் செய்யப்படுவதில்லை. நகர் மையம் நோக்கி வேலைக்காக செல்லும் அவர்களின் போக்குவரத்துச் செலவுகள் குறித்தும் அரசு கவலைப்படுவதில்லை என்று சமகால இடப்பெயர்வுச் சிக்கலைப் பேசுகிறது அக்கட்டுரைகள்.தொகுப்பு உள்ளடக்க அடிப்படையில் அமைக்கப்பட்டிருந்தால் வாசிப்பில் ஒரு குறிப்பிட்ட கருத்தை ஆழமாக பதிவு செய்வதாக அமைந்திருக்கும்.
வாசிப்பில் ஒரே பொருள் அங்கும் இங்குமாக கலைந்து கிடப்பது ஒரு இடறலாக உள்ளது. இதனை சரியாகத் தொகுத்து பகுதிகளாகப் பிரித்து வெளியிட்டிருந்தால் இன்னமும் ஒரு சிறப்பான கருத்துருவாக்கத்தை தந்திருக்கும். எல்லாவிதப் பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக சாதியம் மற்றும் அதன் உள்ளார்ந்துள்ள பார்ப்பனியம் ஆகியவற்றை கூர்மையுடன் அம்பலப்படுத்தும் இந்நூல் வழக்கமாக தலித்தியப் பார்வையில் முன்வைக்கப்படும் ‘இடைநிலைச் சாதியே எதிரிகள்’ என்கிற பார்ப்பனியக் கருத்தை வலியுறுத்தாமல், சனாதன வருண தருமத்தை விமர்சிக்கும் ஒன்றாக அமைந்துள்ளதே இதன் முக்கியத்துவம்.
வளர்ந்துவரும் இந்துத்துவ பாசிசம் திராவிட நாடு என்பதை அழிக்கும் கருத்தியலை சில கட்டுரைகளில் அம்பலப்படுத்துவது இவரது விரிந்த பார்வையை முன்வைக்கிறது. பொதுவாக, இங்கு உருவாகிவரும் தலித்தியத்தை அந்நியப்படுத்திக் கொள்ளும் பார்ப்பனிய இடைநிலை சாதி எதிர்ப்புத் தந்திரத்தை இவர் கைக்கொள்ளாத ஒரு விரிந்த தலித்திய அரசியலைக் கைக்கொண்டு இக்கட்டுரைகளை எழுதியுள்ளார். அது பாராட்டிற்குரிய ஒன்று. பொதுவாக திராவிட எதிர்ப்பு, பெரியாரிய எதிர்ப்பு, மார்க்சிய எதிர்ப்பு அம்பேத்கரிய சிந்தனை என்பதை கட்டமைக்க முயலும் பார்ப்பனியத்தை சரியாக இவர் புரிந்துகொண்டு அதனை அம்பலப்படுத்தும் வண்ணம் இக்கட்டுரைகளை எழுதியுள்ளார்.
வளர்ந்துவரும் இந்துத்துவ எதிர்ப்பு என்பதையும், பாசிசமாகிவரும் இந்திய சமூகத்தின் பல பரிமாணங்களை இக்கட்டுரைத் தொகுப்பு முன்வைக்கிறது. பாஜகவின் தலித் பாச அரசியலைக் கிழித்து அதனுள் உள்ள சாதிய சனாதன பாசிச அரசியலை மிகச்சரியாகத் தோலுரித்துக் காட்டுகிறார். குறிப்பாக “பாஜக தலைவராக தலித் நியமனம் இதற்குப் பெயர்தான் பார்ப்பனியம்” (பக்.210-221) என்ற கட்டுரை தமிழகத்தில் தலித்துகள் மத்தியில் பணியாற்றி புற்றுநோயாக பரவும் பா.ஜ.க. இந்துத்துவ பார்ப்பனிய வருண சாதிய சிந்தனையை, அது உருவாக்கும் பாசிச உளவியலை அம்பலப்படுத்தும் முக்கியமான ஒன்று. பார்ப்பனியத்தை ஒழிக்காமல் சாதியை ஒழிக்க முடியாது.
சாதியை ஒழிக்காமல் இந்துத்துவ பாசிசத்தை வேரறுக்க முடியாது என்பதே இந்நூல் நமக்கு உணர்த்த முயலும் செய்தி. இதுவே இன்றைய பாசிச எதிர்ப்பரசியலுக்கான சரியான அரசியலும்.