நவனீ கண்ணன்
இந்தியாவில் மிகப்பெரிய அரசியலற்ற கலாச்சார அமைப்பு என்று தன்னை உருவகப்படுத்திக் காட்டும் ஆர்.எஸ்.எஸ் என்ற வலதுசாரி அமைப்பு, தன்னை வெளிக்காட்டிக்கொள்வது போல் அல்லாமல் ஆழமான அரசியல் மற்றும் சித்தாந்தத்தைக் கொண்டுள்ளது அனைவரும் அறிந்ததே. ஆர்.எஸ்.எஸ். குறித்து எத்தனையோ ஆய்வு நூல்கள் வந்திருந்தாலும் இன்னும் பல நூல்கள் எழுதும் அளவிற்கு அதன் செயல்பாடுகளும், அமைப்பு வலைப்பின்னல்களும் உள்ளது. அந்த நூல்கள் வரிசையில் “இந்தியா எதை நோக்கி?” என்ற கட்டுரைத் தொகுப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்தியாவின் தலைசிறந்த அறிவுஜீவிகள், பத்திரிகையாளர்களின் கட்டுரைகளை செ.நடேசன் அவர்கள் மொழிபெயர்த்து, தொகுத்துள்ளார். ஆழமான ஆய்வாக எழுதியுள்ள லீனாகீதா ரெகுநாத், தினேஷ் நாராயண், ராமச்சந்திர குஹா, வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் ஆகியோரது கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
இந்நூலின் முன்னுரையாக தமிழகத்தின் தலைசிறந்த மார்க்சிய அறிஞர்களில் ஒருவரான தோழர் எஸ்.வி.இராஜதுரை அவர்களின் “வாசற்படியில் பாசிசம்” கட்டுரை உள்ளது. “திட்டம் தீட்டுகின்றனர்” என்ற ஜெர்மனிய அறிஞர் வால்டெர் பெஞ்சமினின் வரிகளை மேற்கோள் காட்டி கட்டுரை முழுவதும் இந்திய பாசிஸ்ட்டுகளின் செயல்பாடுகளை நுணுக்கமாக விவரிக்கிறார் ஆசிரியர். வாசற்படியில் பாசிசம் என்பது ஒவ்வொரு தனி மனதில் பாசிச கூறுகளை அல்லது சிந்தனையை வளர்ப்பது குறித்து பொருள் கொள்ளலாம்.
இந்திய பாசிஸ்ட்டுகளான ஆர்.எஸ்.எஸ் வலதுசாரிகள் பெரும்பான்மை மதவாதத்தை தங்கள் கருத்தியல் அடிநாதமாகக் கொண்டுள்ளனர். அப்படி மதவாதக் கருத்துகளை பரப்ப அரசதிகாரம், கல்வி நிறுவனங்கள், பத்திரிகைகள் என பலவற்றை உபயோகப்படுத்துகின்றன. அவர்களின் இந்த செயல்பாடுகள் குறித்து எஸ்.வி.ஆர் விவரித்துள்ளார். இந்தியாவில் தீவிரவாதத்தின் முகமாக தொடர்ந்து இஸ்லாமியர்களையே அரசு நிறுவனங்கள், ஊடகங்கள் வழியாக முன்னிறுத்தப்பட்டுக் கொண்டிருந்த சூழலில், உண்மையான தீவிரவாதிகள் ஆர்.எஸ்.எஸ்-ன் அறியப்படா துணை அமைப்புகள்தான் என்பதை மும்பை தாக்குதலில் மர்மமான முறையில் கொல்லப்பட்ட மகாராஷ்ட்டிர ஐபிஎஸ் அதிகாரி ஹேமந்த் கார்கரே வெளிக்கொணர்ந்தார்.
அவரது அயராத விசாரணையின் பின்னரே மாலேகான், அஜ்மீர் தர்கா, சம்ஜூதா எக்ஸ்பிரஸ் என பல இடங்களில் சங்பரிவார் தீவிரவாதிகள் தங்கள் கைவரிசையைக் காட்டியது வெளிவந்தது. அந்நடவடிக்கைகளின் மூளையாக செயல்பட்டவர் அசீமானந்தா. அவரை ‘தி கேரவன்’ இதழுக்காக லீனாகீதா ரகுநாத் அவர்கள் கண்ட பேட்டி மிக முக்கியத்துவம் வாய்ந்தது. முழுபேட்டியும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.
அசீமானந்தா ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேர்ந்தது முதல் அதன் வனவாசி கல்யாண் ஆசிரம அமைப்பின் கீழ் அவர் செய்த வேலைதிட்டங்கள், குண்டுவெடிப்புகளுக்கு அவர் அளித்த பங்களிப்புகள் என மிக விரிவான நேர்காணலை கேரவன் இதழ் வெளியிட்டது. ஆர்.எஸ்.எஸ்-ன் சர்சங்சாலக் மோகன் பாகவத் வரை இந்த நாசக்கார தீவிரவாத செயல்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது போன்ற முக்கியமான தகவல்கள் இந்த நேர்காணலில் அசீமானந்தா பகிர்ந்து கொண்டுள்ளார். இன்னும் சங்பரிவார் தீவிரவாதம் குறித்த மிக ஆழமான புரிதலுக்கான பல தகவல்கள் அசீமானந்தாவால் விவரிக்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்-ன் அரசியல் பிரிவு பிஜேபி என்பது நாம் அறிந்ததே. ஆனால், அவ்விரு அமைப்புகளின் உறவினை குறித்து ஒரு தெளிவான புரிதலை தினேஷ் நாரயணன் அவர்களது கட்டுரை வேறு ஒரு கோணத்தில் பேசுகிறது. பிஜேபி சங்கின் நேரடி அமைப்பாக இருந்த போதிலும் அவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் முரண்பாடுகள், பொருளாதார அரசியல் நலன் குறித்த விவாதங்கள், அதிகாரப்பகிர்வில் இருக்கும் சச்சரவுகள் என பலதரப்பட்ட விஷயங்களை விரிவாக இப்பத்திரிக்கையாளர் விளக்குகிறார்.
மிகத்தீவிரமான இந்து தேசியவாதத்தை ஆர்.எஸ்.எஸ் முன்னிறுத்தும் போது அரசியலமைப்புக்கு உட்பட்டு இயங்கும் அரசியல் கட்சியான பிஜேபிக்கு அது நெருக்கடிகளை உருவாக்குகிறது. இது இரு அமைப்பின் தத்துவார்த்த அடிப்படைகளில் சிக்கலை ஏற்படுத்தாத அமைப்பு ரீதியான பிரச்சனைகளாக மட்டுமே தீர்த்துகொள்வதில் இருபக்கமும் கவனமாக இருக்கின்றனர். இப்படியான சிக்கல்களை போக்குவதற்குத்தான் மோடி போன்ற அதி தீவிர சங் ஆதரவாளரை தலைமைக்கு கொண்டுவருவதில் சங் முனைப்பு காட்டுகிறது.
சங்கின் அரசியல் செயல்பாடுகளுக்கு ஏற்ப கட்சியை கைக்குள் வைத்துகொள்வது குறித்து ஒரு தெளிவான நிலைப்பாட்டை சங் வரையறுத்துள்ளது. தங்கள் கை மீறி அதிகார மையத்தை நோக்கி கட்சி முன்னேற விரும்பினால் அதனை கலைக்கவும் சங் தயாராக உள்ளது. ஜனசங்கத்தை கலைத்தது போல பிஜேபியை கலைக்கவும் சங் யோசித்திருந்திருக்கிறது போன்ற முக்கியமான தகவல்கள் இக்கட்டுரையில் உள்ளன. பெரும்பான்மை கட்சியாக இன்று இருந்தாலும் அதன் மீது அரசியல் சாரா அமைப்பாக தன்னை காட்டிக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்-ன் பிடி எந்தளவு உள்ளது என்பதை சுரேஷ் நாராயணின் கட்டுரை மூலம் விரிவாக விளங்கிக்கொள்ளலாம்.
இந்திய வலதுசாரி, பழமைவாத அறிவுஜீவிகளின் போதாமை அல்லது காணாமல் போனது குறித்து வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹாவின் கட்டுரை மூன்றாவது கட்டுரையாக நூலில் இடம்பெற்றுள்ளது. ஆர்.எஸ்.எஸ்-ன் அறிவுஜீவிகள் என்று கூறப்படுபவர்கள் யாரும் அறிவுஜீவிகள் அல்ல. அவர்கள் சங்கின் பெரும்பான்மை பாசிச வெறி அல்லது வெறுப்பரசியலை அப்படியே பிரதிபலிப்பவர்கள். அறிவுஜீவித்தனம் என்பது கருத்தியலை மேம்படுத்துபவர்கள் என்ற அடிப்படையில் வரையறுத்து இந்திய பழைமைவாத அறிவுஜீவிகள் குறித்து குஹா இக்கட்டுரையை எழுதியுள்ளார்.
பிரிட்டிஷ் வலதுசாரி தத்துவவியலாளர் ஸ்கர்ட்டனின் கருத்துகளை வைத்து இந்திய வலதுசாரி அறிவுஜீவிகளை மதிப்பிடும் குஹா, அவர்களின் முட்டாள்தனங்களை கேள்விக்குட்படுத்துகிறார். ஸ்கர்ட்டன் போன்று பன்மைத்துவத்தை உள்ளடக்கிய தேசியத்தை இந்திய வலதுசாரிகள் மறுதலிப்பதையும், மதம் சார்ந்த அவர்களின் பார்வை சமூகத்தை பாசிசமயப்படுத்த முனைவதை தெளிவாக விவரிக்கிறார். மேலும் இந்தியாவின் அறிவுஜீவிகளின் களம் எவ்வாறு மார்க்சிஸ்ட்டுகள், சோசலிஸ்ட்டுகள், லிபரல்களின் மேலாதிக்கத்தை கொண்டுள்ளது என்பதை வரலாற்று நோக்கில் விளக்குகிறார்.
நூலின் கடைசிக் கட்டுரையாக பிரண்ட்லைன் இதழில் வெளிவந்த பத்திரிக்கையாளர் வெங்கடேஷ் இராமகிருஷ்ணனின் கட்டுரை இடம்பெற்றுள்ளது. 2014 தேர்தலில் “வளர்ச்சி நாயகனாக” மோடியை முன்னிறுத்திய சங் அமைப்பை அதன் வழி தங்களது சமூக மேலாதிக்கத்தை நோக்கி எப்படி நகர்கிறது என்பதை குறித்து இக்கட்டுரை விவாதிக்கிறது.

ஒருபக்கம் வளர்ச்சி குறித்த பிம்பத்தை கட்டமைத்து அதன் பொருட்டு ஆதரவாளர்களாக அல்லது பிஜேபிக்கு வாக்களித்த சமூகப்பிரிவினரை இந்துத்துவா அரசியல் நிழலின் கீழ் கொண்டு வரும் நீண்ட நெடிய சங்கின் குறிக்கோள்களை கட்டுரையாளர் விவரிக்கிறார். வளர்ச்சி பிம்பத்தின் மறுபக்கம் கட்டவிழ்த்து விடப்படும் சங்கின் வன்முறை வெறியாட்டங்கள் அரசின் ஆதரவோடு செயல்படுத்துவதில் ஆர்.எஸ்.எஸ் முனைப்புடன் செயலாற்றுகிறது. அதை வைத்தே அரசியல் ஆதாயத்தையும் பிஜேபி பெறுகிறது.
2014 தேர்தல் இந்திய வலதுசாரிகளுக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்துள்ளது. சவார்க்கர் வகுத்தளித்த இந்து அரசியல் அடையாளத்தை உருவாக்கி வளர்ப்பது என்ற இலக்கை நோக்கி ஒரு பாய்ச்சலோடு அவர்கள் முன்னேறி வருகின்றனர். மிக ஆபத்தான, இந்திய ஜனநாயகம் சந்திக்க இருக்கும் மிகப்பெரிய பேரழிவுகளை கடந்த எட்டு வருட நிகழ்வுகள் நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.
2014க்கு முன்னர் இக்கட்டுரைகள் எழுதப்பட்டிருந்தாலும் மோடி ஆட்சிக்குப் பின்னான சங்கின் செயல்பாடுகள் அக்கட்டுரைகளின் தொலைநோக்குப் பார்வையின் உண்மைத்தன்மையை உறுதி செய்கிறது. 2014 தேர்தல் நடைபெற்ற பொழுது பாகிஸ்தான் பெண் கவிஞர் ஃபாஹ்மிதா ரியாஸ் எழுதிய கவிதை வரிகள் இன்று நிதர்சனமாகியுள்ளது.
“நீங்களும் எங்களைப் போலவே ஆகிவிட்டீர்கள்!
கடந்தகாலச் சேற்றில் புரளும் அதேபோன்ற முட்டாள்களாக கடைசியில் நீங்களும் அதே வாசலை அடைந்துவிட்டீர்கள் உங்களின் மதமான பேய் கோமாளிக் கூத்தாடுகிறது என்னவெல்லாம் நீங்கள் செய்கிறீர்களோ அவை தலைகீழ் ஆகும்”.
மதம்சார் அரசியலின் வழியே சுதந்திரத்திற்கு பின்னர் தங்களை முஸ்லிம் தேசமாக அறிவித்துக்கொண்ட பாகிஸ்தானின் நிலைக்குத் திரும்ப ஜனநாயக இந்தியா ஆயத்தமாக்கப்படுவது ஆபத்தானது என்ற ஆதங்கத்தில் இக்கவிதை வரிகள் எழுதப்பட்டுள்ளது.