சா.ஸ்மைலின் ஷீபா
“எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண்”
என்பதை உட்பொருளாக பெற்றுள்ளது. 21 ஆம் நூற்றாண்டு என்று வீண் பெருமைகளைப் பேசும் இக்காலத்திலும் பெண்களை, இரண்டாம் பாலினராகவும், பலவீனமானவர்களாகவும், வீட்டில் உள்ள ஆண்களுக்கு தாய், தமக்கை, தங்கை, தாரம், மகள், மருமகள் என அவர்களின் பணிகளையும், தேவைகளையும் நிறைவேற்றுபவராகவும், குடும்பத்தைப் பேணிப் பாதுகாப்பவராகவுமே பெண்கள் உள்ளனர்.
இதனையும் மீறி ஒரு சில பெண்கள் பள்ளி, கல்லூரி, அலுவலகம் போன்ற இடங்களில் பணிக்குச் செல்ல வேண்டும் என்றால் அவர்கள் 24 மணி நேரமும் செயலிழக்காமல் பணியாற்றும் ஒரு மனித இயந்திரமாக இருக்க வேண்டும். வீட்டில் உள்ள வேலைகளையும் செய்ய வேண்டும், குழந்தைகளையும் பராமரிக்க வேண்டும், பணிக்குச் சென்று பொருளும் ஈட்ட வேண்டும்.

இவை ஒருபுறம் இருக்க மற்றொரு புறம். அதி தீவிர பெண்ணியம் பேசிக்கொண்டு, கிடைக்கும் சுதந்திரத்தைத் தவறாக பயன்படுத்தும் பெண்களும் உண்டு. இவற்றை எல்லாம் கடந்தே ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய கனவையும் இலட்சியத்தையும் நிறைவேற்றுகிறாள்.
இந்த நவீன காலத்திலேயே, பல போராட்டங்களைக் கடந்தே ஒவ்வொரு பெண் சாதனை படைக்க முடியும் என்றால், கி.பி. 18,19 ஆம் நூற்றாண்டுகளில் பெண்கள் எவ்வாறு தங்கள் கனவுகளை நிறைவேற்றி இருப்பர்? முதலில் அவர்களுக்கு கனவு, இலட்சியம், குறிக்கோள் என்று ஏதாவது இருந்திருக்குமா? அவ்வாறு இருந்தாலும் ஆண்களை விட, ஆண்கள் செய்யாதவற்றை செய்துவிட முடியுமா? போன்ற பல கேள்விகள் தோன்றலாம். இதுபோன்ற எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கும் விதமாகவே இந்நூல் விளங்குகிறது.
உலக அளவில் தற்போது பெரும்பாலும் அறியப்படாத, சாதனைகளைப் புரிந்த பெண்களைப் பற்றியதே இந்நூல்,
“வரலாற்றில் பெயரில்லாதவர்கள் பெரும்பாலும் பெண்களே” – வெர்ஜினியா வுல்ஃப்.
வரலாறுகள் பெரும்பாலும் ஆண்களால் எழுதப்பட்டவையே. அதனாலோ என்னவோ காலம் காலமாக பெண்கள் வரலாற்றின் பக்கங்களில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். பெண்களுக்கு அதிலும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு என்று வரலாறு, ஒரு சில மதிப்பீடுகளைக் கொண்டுள்ளது. அந்த வரையறைக்குள் அடங்குபவர்கள் வரலாற்றில் இடம்பெறுவர். அடங்க மறுத்து தன்னுடைய இயல்பில் வாழ்கிற பெண்களை வரலாறு அதன் பக்கங்களில் இருந்து வெளியேற்றிவிடுகிறது. அவர்கள் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, மறைந்தும் போய்விடுகின்றனர். இதற்கு ஔவையே சிறந்த சான்று. கடையேழு வள்ளல்களுள் ஒருவரான அதியனின் நெருங்கிய நண்பரும், அவரின் அவைப் புலவர்களில் ஒருவருமான ஒளவையார், உலகிற்கு அரிய பல கருத்துகளைக் கூறியுள்ளார்.
வயது முதிரும் போது, அறிவும் முதிர்ச்சி பெறும், அவ்வறிவு முதிர்ச்சியின் வெளிப்பாடே ஔவையின் சங்க இலக்கிய பாடல்கள் என்று கூறுவர். மேலும் குழந்தைகளுக்கு ஒளவையாரை, அறிமுகப்படுத்தும் போது ஒளவை பாட்டி என்றே கூறுவர். ஏனெனில் ஒரு இளம் பெண் ஆண்களைவிட சிறந்த பாடல்களை இயற்றியுள்ளார் என்பதை ஏற்க இயலாத ஆணாதிக்க சிந்தனையுடையவர்கள் ஔவையின் பாடல்களுக்கு வரலாற்றில் இடம்கொடுத்து அவரை முதிர்ந்தவராக காட்சிப்படுத்திவிட்டனர்.
இன்றைய காலகட்டத்தில் வாழும் நாம், நம்முடன் ஒத்த வயதையுடைய நண்பர்களிடம் மட்டுமே நம்முடைய தனிப்பட்ட செய்திகளைப் பகிர்ந்துகொள்வோம். அவர்களோடு மட்டுமே ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது என்பது சங்க காலம் முதல் இன்று வரையிலும் நிலையாக உள்ளது. அதுபோல, ஒளவையும் அதியனும் ஒத்த வயதுடையவர்களாகவே இருக்க வேண்டும். ஏனெனில் ஔவையின் பாடல்களுள் ஒன்றான புறநானூறு 235 பாடலில்
“சிறியகட் பெறினே, எமக்கீயும்; மன்னே!
பெரிய கட் பெறினே!
யாம் பாடத், தான் மகிழ்ந்து உண்ணும், மன்னே!”
என்று பகிர்ந்து கள்ளுண்டதைக் குறிப்பிடுகிறார். மேலும் தலைவியைப் பிரிந்து சென்றத் தலைவனை நினைத்து தலைவி இவ்வாறாக வருந்துகிறாள்,
“மூட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்” (குறுந் 28)
என்று தன்னுடைய துயரத்தில் தோன்றும் கோபத்தை தலைவி கூறுவதாக ஒளவை பாடியுள்ளார். இதனை இங்கு குறிப்பிடக் காரணம் ஔவை வயது முதிர்ந்தவர் அல்ல என்பதற்காகவே.
வரலாற்றில் பெண்களின் சாதனைகள் மற்றும் வாழ்க்கை வரலாறு மறைக்கவும் திரிக்கவும்படுகின்றன என்பதற்கு இது ஒரு சான்றாகும். இத்தகு சூழலில் வாழும், பெண்கள் உட்பட நம் அனைவருக்குள்ளும், நம்மையே அறியாமல் நம்முள் ஒரு ஆணாதிக்கச் சிந்தனை பொதிந்துக்கிடக்கிறது. இந்நூலின் ஆசிரியரான அறிவுக்கடல் ஒரு ஆணாக இருப்பினும், அதிகம் அறியப்படாத பெண் சாதனையாளர்களைப் பற்றி தேடி, அவர்களின் சாதனைகளை அனைவரும் அறிய வேண்டும் என எழுதியிருப்பது தனிச் சிறப்பு.
சந்தையில் கால்நடைகளை விற்பதைப்போல பெண்களை அடிமைகளாக விற்ற, அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட காலகட்டத்தில் தனியாளாய் நின்று சாதனை புரிந்த சில பெண்களின் வாழ்வை, கல்லும் முள்ளும் நிறைந்த கரடு முரடான பாதையை, வெற்றிப் பாதையாக மாற்றிய வரலாற்றைத் தொகுத்து, பிற பெண்களை ஊக்குவிக்கும் விதமாக இந்நூல் திகழ்கிறது.
நெல்லி ப்ளி, பெர்த்தா பென்சு, ல்யூட்மிலா மிக்கைலோனா பவ்லிச்சென்க்கோ, அமேலியா ஏர் ஹார்ட், எலெனா கோர்னாரோ பிஸ்கோப்பியா, அலெக்சாண்ட்ரா குதாஷேவா, வாலண்டினா தெரஸ்கோவா, ஜூன்கோ டபே, ஜெர்டா ஹெட்விக் க்ரோன்ஸ்டீன் முதலிய சாதனைப் பெண்மணிகளைப் பற்றியும், அவர்களிள் சாதனைப் பற்றியும் கூறியுள்ளார்.

உலகப் பயணத்தின் முன்னோடியான பெண்ணாக திகழ்பவள் நெல்லி ப்ளி. இவரின் இயற்பெயர் எலிசபெத் கொக்ரன். ஒரு பெண் தனியாக அருகில் உள்ள ஊருக்கு கூட தனியாக பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று கருதும் இச்சமூகத்தில் தனி ஒரு பெண்ணாக 1889 இல் அதுவும் ஒற்றைக்காலில் வெறும் 72 நாட்களில் முழு உலகையும் சுற்றிவந்துள்ளார் என்பது பலரும் அறியாத வியப்பிற்குரிய ஒரு செய்தி ஆகும்.
கொலம்பஸ், டார்வின், மெகல்லன், வாஸ்கோடகாமா, என்று பல நாடுகளைச் சுற்றி வந்த ஆண்களைப் பற்றிய பெருமைகளை ஏந்தி நிற்கும் வரலாறு. நெல்லி ப்ளி போன்ற பெண்களின் சாதனைகளை தனக்குள் மறைத்து வைத்துள்ளது.இவர் ஒரு கடற்பயணி மட்டுமல்ல, டிடெக்டிவ் ஜர்னலிசம் என்பது தோன்றுவதற்கு முன்பே இவர் ஒரு மனநலக் காப்பகத்தில், நோயாளியாக நடித்து அங்கு நோயாளிகளை நடத்தும் முறையை வெளி உலகிற்கு காட்ட முற்பட்ட முதல் துப்பறிவாளர் ஆவார் இதனை, “10 டேஸ் இன் எ மேட் ஹவுஸ்” என்ற நூலாக வெளியிட்டார்.
“தி டெய்லி டெலிகிராஃப்” என்ற இதழில் 80 நாட்களில் உலகைச் சுற்றி வருபவருக்கு 20 ஆயிரம் பவுண்டு அளிப்பதாக அறிவி்த்தது. அதில் பங்கேற்று 72 நாட்களில் உலகைச் சுற்றி வந்து வெற்றியும் பெற்றார், நெல்லி ப்ளி.
ஆட்டோ மொபைல் துறையின் தாயாக திகழ்பவர் பெர்ந்தா பென்சு. இவர் கார்ல் பென்சுவின் மனைவியாவார். சொகுசு கார்களில் பட்டியல் என்று சிந்திக்கும் போது, முதலில் தோன்றுவது பென்சு கார். அந்த காரை உருவாக்கியவர் இவரின் கணவரே. அதுவே உலகின் முதல் கார் ஆகும். அந்தக் காரை முழுமையாக உருவாக்கவில்லை, எனவே அதனை ஓட்டிப்பார்க்க முடியாது என்று கூறியதை கேட்டும், அதனை நம்பாமல் பெர்த்தா காரை ஓட்டிப் பார்த்தார். அவரே உலகில் கார் ஓட்டிய முதல் நபர் ஆவார்.
பெட்ரோல் தீர்ந்த போது பெட்ரோலியம் சார்ந்த திரவிய எரிபொருளான லிக்ரோன் என்பதை ஒரு மருந்துக் கடையில் பெற்றார். உலகின் முதல் பிரேக்கை கண்டுபிடித்தவரும் இவரே. அறிவியலின் தந்தை, வணிகவியலின் தந்தை, புதுக்கவிதையின் தந்தை என அனைத்திலும் முன்னோடியாக ஆண்கள் வரலாற்றில் இடம்பெறும் போது ஆட்டோ மொபைல் துறையின் தாயாக முன்னோடியாக ஒரு பெண் திகழ்வது, பெருமைக்குரிய ஒன்றாகும்.
அச்சம், மடம், நாணம் ஆகியவையே பெண்களுக்குரிய பண்புகள் என்று கூறப்படுகிறது. ஆண்களைப் போல அவர்கள் போர்க்களத்தில் ஆயுதம் ஏந்தி போரிட அனுமதி கிடைக்கவில்லை. எனவே, ஆண் போன்று வேடமிட்டுச் சென்று போரிட்டனர்.சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த ஸ்னைப்பரான ல்யூட்மிலா மிக்கைலோனா பவ்லிச்சென்க்கோ என்பவர், இரண்டாம் உலகப்போரில் 309 நாஸிகளைச் சுட்டுக் கொன்றவர். இவரைக் கண்டு அஞ்சிய ஜெர்மானிய வீரர்கள் பயத்தில் அவருக்கு வைத்த பெயரே “லேடி டெத்”.முதல் விமானி என்ற பெருமைக்குரியவர், அமேலியா ஏர் ஹார்ட். விமானத்தில் ஒரு பெண் பணிப்பெண்ணாக பணியாற்றுகிறாள் என்பதை இயல்பாக ஏற்கும் அளவிற்கு, ஒரு பெண் விமானியாக பணியாற்றுகிறாள் என்பதை ஏற்க முடியவில்லை.
அமேலியா தன்னுடைய 10 வயதில் பறப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தும் மறுத்துவிட்டார். ஆனால், தன்னுடைய 23 வயதில் அவரின் தந்தை 10டாலர் செலவில் உருவாக்கிய விமானத்தில் 10 நிமிடம் பயணம் செய்தார். அந்த அனுபவமே அவருக்கு விமானத்தை தானே இயக்க வேண்டும் என்று முடிவு செய்ய வைத்தது. விமானியாகவும் மாற்றி, பறக்கும் சிலுவை என்ற விருதையும் பெற வைத்தது அந்த முடிவே ஆகும். பறக்கும் சிலுவை என்ற விருதைப் பெற்ற முதல் நபர் அமேலியா ஆவார்.
“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்.”
என்ற பாரதியின் கனவினை, 17ஆம் நூற்றாண்டிலேயே நிறைவேற்றிய முதல் முனைவர் எலெனா கோர்னாரோ பிஸ்கோப்பியா. வெனிசில் ஒரு செல்வந்தரின் குடும்பத்தில் பிறந்த இவர், தன்னுடைய இளமைக் காலத்தில் பல இன்னல்களைக் கடந்து, பின்னர் கிறித்தவத் துறவியாக மாறினார். கி.பி. 1150களில் முதல் முனைவர் பட்டம், பாரிசில் உருவானதாக ஒரு குறிப்பு உள்ளது. அதிலிருந்து பல நூற்றாண்டுகளுக்கு பின்னரே ஒரு பெண் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அவருடைய குடும்பப் பின்னணியும், கிறித்தவத் துறவி என்பதும் அவருக்கு அந்த உச்சத்தை எட்ட உதவியாக இருந்தது. தன் அறிவு, திறமை, வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்திக்கொண்டு பிற பெண்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை தொடங்கி வைத்தார், எலெனா.
உலகின் முதல் பெண் கமாண்டராக ரஷ்ய நாட்டின் அலெக்சாண்ட்ரா குதாஷேவா என்ற பெண் ஒரு பெரிய படைக்குத் தலைமையேற்று நடத்தினார். ஒட்டுமொத்த பெண்களின் வீரத்திற்கும் அடையாளமாக விளங்குகிறார் அலெக்சாண்ட்ரா. இமயம் ஏறிய முதல் பெண், ஜூன்கோ டாபே. 1920களில் தொடங்கியது, எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைய வேண்டும் என்ற பயணம். 1953இல் எட்மண்ட் ஹிலாரி என்பவர் முதன்முதலாக எவரெஸ்ட் மலைச் சிகரம் ஏறிய நபர் ஆவார். நேப்பாளத்தில் உள்ள அன்னபூர்ணா 3 மலையில் ஏறிய முதல் பெண், முதல் ஜப்பானியர் என்ற பெருமைக்குரியவர். அதனைத் தொடர்ந்து 12 நாட்கள் பயணம் மேற்கொண்டு, 1975 மே 16 இல் எவரெஸ்ட் உச்சியை அடைந்த முதல் பெண் என்ற சாதனையைப் படைத்தார், ஜூன்கோ டாபே.
“சிங்கங்கள் தங்களுக்கென்று தனியாக வரலாற்றாசிரியர்களை வைத்துக்கொள்ளாதவரை, வேட்டையைப் பற்றிய வரலாறுகள் அனைத்தும் வேட்டைக்காரர்களின் பெருமைகளையே பேசும்”ஆஃப்ரிக்கப் பழமொழி.
வரலாறு என்பது எளிய மனிதர்களைப் பற்றியெல்லாம் பேசாமல், அரசர்களைப் பற்றி மட்டுமே பேசுவதாகப் பெரும்பாலும் இருக்கிறது. சமூகத்தின் அதிகாரம் அரசரிடம் இருப்பதைப் போலவே, மனிதர்களிடையே அதிகாரம் ஆண்களிடம் இருக்கிறது. அதனால்தான், சமூக வளர்ச்சிக்கு ஆண்கள் மட்டுமே பங்களிப்புச் செய்திருப்பதைப் போன்ற தோற்றத்தை நம் வரலாறுகள் ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருப்பார் என்ற சொற்றொடர்கூட, பெண் பின்னணியில்தான் இருக்க வேண்டும். முன்னால் வரக்கூடாது என்று வலியுறுத்துவதுதான்!
மனிதகுலத்தின் வளர்ச்சிப் பாதையில், பெண்களின் பங்களிப்புகளை ஆவணப்படுத்தி, ‘மகளிர் வரலாறு’ என்ற துறையையே உருவாக்கியவர் ஜெர்டா லெனர்.1980களில் அவர் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது, “தந்தை வழிச் சமூகத்தின் தோற்றம்”, “பெண்ணிய உணர்வின் உருவாக்கம்”, “பெண்களும் வரலாறும் – வரலாறு ஏன் முக்கியம்?” போன்ற நூல்களை எழுதியுள்ளார். சிங்கங்களின் வரலாற்றைச் சொல்ல வந்த சிங்கம் – ஜெர்டா.
இதுவரை சாதனைப் படைத்த பெண்களைப் பற்றி கூறியுள்ள இந்நூலின் ஆசிரியர், இதனைத் தொடர்ந்து “ஆண்மை” என்று ஒரு தலைப்பு வைத்து, அதில் நபுஞ்சகன் பற்றி கூறியுள்ளார். நபுஞ்சகன் என்றால் ஆண் தன்மை நீக்கப்பட்ட ஆண் (மூன்றாம் பாலினத்தார்). தமிழில் பால் ஆண், பெண் என இருவகைப்படும். அதுவே சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் ஆண்பாலை புல்லிங்கம் எனவும், பெண்பாலை ஸ்திரீலிங்கம் எனவும், இடைப்பட்டவர்களை நபுசகலிங்கம் என குறிப்பிடப்படுகிறது.
நபுஞ்சகன் என்பது இதனோடு தொடர்புடையதாகவும் இருக்கக்கூடும். அரசருக்கு நெருக்கமான பணிகளைச் செய்ய, நம்பகமான ஆட்கள் தேவை. அவர்கள் ஆசைகளை எல்லாம் துறந்தவர்களாக இருக்க வேண்டும். எனவே, அவர்களின் ஆண்மையை நீக்கிவிட்டால், அவர்கள் ஏதாவது தவறு செய்தால் உடனே கொன்றுவிடலாம், கேட்க உறவினர் என யாரும் இருக்கமாட்டார்கள் என்பதே ஆட்சி செய்த அரசர்களின் சிந்தனையாக இருந்தது.
கி.மு.2000த்திலேயே இதுபோன்ற நபுஞ்சகன் இருந்ததற்கான சான்று சுமேரியாவில் கிடைத்துள்ளது. மாலிக் கபூர், ஸெங் ஹி, பாகோவாஸ், பாட்டில், ஜூதர் பாஷா என பல மன்னர்களின் பலமாக திகழ்வது இந்த நபுஞ்சகர்களே. அதாவது ஆண்மை நீக்கப்பட்டவர்களே. வீரம் என்பது ஆண்களுக்கு மட்டுமே உரியது என்று மார்பைத் தட்டிக்கொள்கின்றனர். ஆனால் உண்மையில் ஆண்மைக்கும் வீரத்திற்கும் தொடர்பே இல்லை என்று நூலின் கடைசிப் பகுதியை நிறைவு செய்கிறார்.
