அ. பாக்கியம்

மாநகரத்தின் பேரிரைச்சலில் ஒடுங்கிப்போன குரல்களுக்கு குரல் கொடுக்கிறது தோழர் அ. பாக்கியம் எழுதிய ‘சென்னையின் மறுபக்கம் நிஜங்களின் தரிசனம்’ எனும் இந்நூல். அதிகாரங்களின் சங்கிலியால் பினைக்கப்பட்ட நகரங்கள் எளிய மனிதர்களின் வாழ்க்கையை துச்சமாக கருதும் மனப்போக்கு வரலாற்றின் பக்கங்களில் கரையாக படிந்திருக்கிறது, நிகழ்காலத்திலும் அப்படித்தான். நகரங்கள் உருவாக்கம் விரிவாக்கம் சீரமைப்பு இவையெல்லாம் பெரும் முதலாளிகளின் அசுரத்தனமான வளர்ச்சிக்காகவேத்தான்.
ஆளுவோர்களின் சிந்தனைகளில் ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களின் நினைவுகள்கூட வருவதில்லை. நகரங்களின் வளர்ச்சி என்பது எளிய மனிதர்களின் கனவுகளை கல்லறையாக்கி அதன்மீது எழுப்பப்படும் துயரத்தின் அடையாளம். இந்நூல் சென்னை மாநகரம், உழைக்கும் மக்களுக்கும் விளிம்புநிலையில் வாழ்வோர்க்கும் தனது கோர முகத்தினைக்காட்டுவதை பல நிலைகளில் நின்று விரித்துரைக்கிறது.
இந்நூல் சென்னை: நகரமய தோல்வியின் சின்னம் தொடங்கி, இடிபாடுகளில் புதைந்து… செய்திகளில் மிதந்து எனும் கட்டுரை வரை 12 கட்டுரைகளின் தொகுப்பு.சென்னை நகர மயமாக்கலின் தோல்வியின் சின்னம் கட்டுரை தவிர்த்து மற்றக்கட்டுரைகள் ஏற்கனவே தீக்கதிரில் வெளிவந்தவை.
இந்திய பெரு நகரங்களில் ஒன்றான சென்னை மாநகரின் அடிப்படை கட்டமைப்புகள் முறையான திட்டமிடல் இன்றி உருவாக்கப்பட்டிருப்பது, மழை வெள்ளம் போன்ற பெரும் பாதிப்புகளில் மக்கள் படும் துயரம் ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கு ஆகியவற்றை காத்திரமான சொல்லாடல்களால் எடுத்துரைக்கிறது. சென்னையின் வரலாற்றில் கொடூரங்கள் நிறைந்த 10க்கும் மேற்பட்ட வெள்ள பாதிப்புகள் நிகழ்ந்துள்ளது. ஆனால் சரியாக மறுகட்டமைப்பு செய்யப்படாமல் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கூச்சம்நாச்சமின்றி ஒவ்வொருமுறையும் புதிதாய் அறிக்கை விடுவதும் புதிதாய் நிதி ஒதுக்குவதும் வாடிக்கையாக இருக்கிறது.
அவ்வாறு ஒதுக்கப்படும் நிதியால் மக்களுக்கு எந்த ஒரு பயனும் விளைவதில்லை. நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் உழைக்கும் மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டிருப்பதும் இதே சென்னையில்தான். வாக்காளர் அட்டை, மின்சாரம், குடும்ப அட்டை, எல்லாம் உண்டு ஆனால் ஆக்கிரமிப்பு என்று கூறி நகரத்தின் அடிவயிற்றில் இருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கி எறியப்படும் மக்கள் நிம்மதியிழந்து வாழ்விழந்து இப்படியாக பல்வேறு துயரங்களுக்கு உள்ளாவதை இந்நூல் அடையாளப்படுத்துகிறது.
சென்னையின் மறுபக்கம் என்கிற கட்டுரை சென்னை நகர உருவாக்கம் நகரமயமாதல் ஆலைகள் உருவாக்கும் பெருமுதலாளிகள் உருவாக்கும் பெரும் தொழிலாளர்கள் உருவாக்கும் என பல உருவாக்கங்கள் நிகழ்ந்துள்ளதை விரித்துக் காட்டுகிறது. ஒருபக்கம் பிரமாண்டமான வளர்ச்சி, பல பலக்கும் மாளிகைகள், நவீன தொழில்நுட்ப வளர்ச்சி, மறுபக்கம் நிலமற்றவர்கள், பூர்வீக மக்கள் வெளியேற்றம், வறுமை, பசி போன்றவற்றால் தவிக்கும் எளிய உழைக்கும் மக்கள். சாலையோரம், ஆற்றங்கரையோரம் தங்கி, கூலி வேலை செய்யும் பெரும்பாலான மக்களின் வாழ்வும் வரலாறும் எந்த வகையிலும் மாறவில்லை. உழைப்பாளர்களின் இரத்தம் சிந்தி உருவான மாநகரும் அவர்களை மிதித்தும் எட்டி உதைத்தும் வறுமையில் தள்ளியும் எக்காளமாய்ச் சிரித்து நிற்கிறது.

ஆட்சிகள் மாறும் போதும் ஏற்கனவே கொண்டுவந்த நலத்திட்டங்களை மாற்றுவது, திருத்துவது சிதைப்பது, முடக்குவது, உள்ளிட்ட ‘ஈகோ’ அரசியலை தமிழகத்தில் தான் பார்க்க முடியும் என்கிற அளவிற்கு அரசியல் நடந்து வருகிறது. கடந்த 2011- இல் இப்படியான அடையாளங்களுள் ஒன்றான தி.மு.க ஆட்சியில் சென்னை அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய சட்டமன்ற கட்டிடத்தின் அமைப்பை புதிதாக வந்த அ.தி.மு.க ஆட்சி மருத்துவமனையாக மாற்றி அமைத்ததையும் அதன் பின்னணியையும் ‘அம்மாவின் சட்டமன்ற கட்டிடமும் ‘5 குடிசை’ தாய்மார்களின் கோரிக்கையும்’ எனும் கட்டுரை விவரிக்கிறது.
இடவசதியைக் காரணம் காட்டி புதிய சட்டமன்ற கட்டிடம் உருவாக்குவது ஒருபுறம், அதே இடவசதியைக் காரணங்காட்டி சட்டமன்றத்தை மருத்துவமனையாக மாற்றுவது இன்னொருபுறம். இப்படி இருக்கும் சூழலில் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள ‘ஐந்து குடிசை’ என்னும் பகுதியில் 900 குடிசைகளுக்கு மேல் இருக்கும் மக்களை ஆக்கிரமிப்பு என்று கூறி சென்னையிலிருந்து 30 கிலோ மீட்டருக்கு வெளியே இருக்கக்கூடிய பெரும்பாக்கத்தில் குடியமர்த்துவது எந்த வகையில் நியாயம் என்பதை புள்ளி விவரங்களோடு சொல்லிச் செல்கிறது இந்த கட்டுரை.
சாலை விபத்துகளில் தொடர்ந்து முதலிடம் அல்லது முதல் பத்து இடங்களுக்குள் இருப்பது சென்னையின் வாடிக்கை. மிக மோசமான நிலையில் சாலைகள் அமைப்பு, பாதசாரிகள் நடக்கக்கூட வழியில்லாமல் சாலைகள் ஆக்கிரமிப்பு ஆகியவற்றால் பெரும் விபத்துகள் சென்னை மாநகரில் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. திறமையற்ற ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் பெரும் வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்களுக்குச் சாதகமாக விரிவாக்கம் செய்திருப்பதைத் தோலுரித்துக் காட்டுகிறது.
சாலை விபத்துகளில் 15 வயதிலிருந்து 34 வயதுடையவர்கள் பெரும் எண்ணிக்கையில் மரணித்துள்ளனர். வாகனங்களில் செல்பவர்கள் உயிர் இழப்பதைவிட சாலைகளில் நடந்து செல்வோர், பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்திருப்போர் இவர்களே மிக அதிகப்படியான மரணங்களைச் சந்தித்துள்ளனர்.
சென்னை போன்ற பெருநகரங்களில் வெப்பமயமாதலை தடுப்பதற்காக பசுமை திட்டங்கள் உருவாக்குவது வாடிக்கையான ஒன்று. அந்த வகையில் சென்னை மாநகரில் உள்ள பூங்காக்கள் அரசால் உருவாக்கப்பட்டும் அதற்கு நிதி ஒதுக்கப்பட்டும் பின்பு அது தனியாருக்கு தாரைவார்த்து கொடுக்கப்படுகிறது. தனியார்கள் அதில் லாப நோக்கோடு தனிப்பட்ட முறையில் உடற்பயிற்சி கூடம், விளையாட்டுத்திடல் ஆகியவற்றை அமைத்து, அதிக்கப்படியான கட்டணம் நிர்ணயித்து பொதுமக்களை உள்ளே விடாமல் அதை வணிகம் ஆக்குவதும் தொடர்ந்து நடைபெற்று வருவதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது மற்றொரு கட்டுரை.
தனியார்மயம் என்பது என்றைக்கும் எளிய மக்களுக்கு எதிரானது என்பதை மறைத்தும் மறுத்தும் ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக அவர்களை ஊக்குவிப்பது எவ்வளவு மோசமான விளைவுகளுக்கு இட்டுச்செல்லும் என்பதை இக்கட்டுரைகள் எடுத்துரைக்கின்றன.
சென்னை மாநகரத்தில் போடப்படும் சாலைகள் குண்டும் குழியுமாக சிறிய அளவிலான மழை பெய்தால்கூட மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு இருப்பதையும் அதனால் வாகன ஓட்டிகள், குறிப்பாக இரு சக்கர வாகனங்களிலும் ஆட்டோக்களிலும் பயணிப்போர் மிகுந்த துயரங்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாவதையும் இந்நூல் சுட்டிக்காட்டுகிறது. முதுகுத்தண்டு பிரச்சனை, மூட்டு பிரச்சினை, நரம்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றனர். இப்படியான பெரும் பாதிப்புகளுக்கு மாநகராட்சியின் முறையற்ற நிர்வாகத் தன்மையும் திட்டமிடலும் நிதி ஒதுக்குதலும் கவனம் குறைவான ஆட்சியாளர்களும் காரணமாகின்றனர்.
மழைக்காலம் தொடங்கினால் பரவும் டெங்கு மலேரியா போன்ற நோய்கள் ஒவ்வொரு ஆண்டும் மக்களை அச்சுறுத்துவதும் மரணங்கள் நிகழ்வதும் வாடிக்கையாக இருக்கும் பட்சத்திலும் நெடுங்காலத் திட்டமின்றி அரசு, போதிய அனுபவம் இல்லாத தற்காலிக ஊழியர்களை பணிகளில் ஈடுபடுத்துவதும் போதிய ஊழியர்களை நியமிக்காமலும் இந்நோய்கள் மேலும் பரவ வழிவகை செய்கின்றன இதையும் மிகச் சிறப்பாக இந்நூல் விரித்துரைக்கிறது.
மருத்துவ மரணங்கள் சமீபத்தில் பெருகி வருகின்ற இந்த சூழலில் அமுதா என்கிற பெண் எடை குறைப்புக்காக பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தவறாக செய்யப்பட்ட அறுவை சிகிச்சையினால் பத்துமாத மருத்துவ போராட்டத்திற்கு பிறகு பல லட்சங்களை இழந்து மரணித்தார். இது ஒரு மருத்துவப்படுகொலையாகவே பார்க்க வேண்டும். அமுதாவை பறிகொடுத்துள்ள குடும்பத்தினர் இதற்கு நீதி கேட்டு முறையிட்டபோது மருத்துவ நிர்வாகம் உரிய பதிலை அளிக்காமலும் பணத்தை பிடுங்கிக் கொண்டு அந்த குடும்பத்தை அனுப்பியது. மருத்துவ நிர்வாகமும் அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் இணைந்து கொண்டு மாபெரும் அலட்சிய போக்கை உளவியல் தாக்குதலை அந்த குடும்பத்தின் மீது நடத்தியது. இவற்றையெல்லாம் விரித்துரைத்து மக்களின் பக்கம் நின்று இந்நூல் ஓங்கி குரல் எழுப்புகிறது.
அமுதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் தோழமை இயக்கங்களும் அர்ப்பணிப்போடு போராடியதை இந்நூல் மிக விரிவாக பேசுகிறது.
ஒரு ஏரியும் நூறு ஓநாய்களும் எனும் சுவாரசியமான ஒரு கட்டுரை, தாம்பரம் அருகில் உள்ள மாடம்பாக்கம் ஏரியை அரசு அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்கள் எப்படி தண்ணீர் வணிகத்தின் காரணமாக மெல்ல மெல்ல அந்த ஏரியை பிடுங்கி சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களின் நீர்நிலையைக் குறைத்து நீராதாரத்தைச்சுரண்டி ஏரியைத் தரிசாக்கிய மிக மோசமான செயலை சுட்டிக்காட்டுகிறது. ஆழ்துளை கிணறு, ஏரி ஆக்கிரமிப்பு, நீரை உறிஞ்சுதல் சுற்றி இருக்கும் மக்களை வதைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை இக்கட்டுரையில் விளங்கிக்கொள்ளலாம்.
சென்னை மாநகரத்தின் வணிக மையம் என்று சொல்லப்படும் தி நகரின் பேருந்து நிலையத்திலும் பேருந்து நிலையத்திற்கு வெளியிலும் நிகழும் பேருந்து ஓட்டுனர்களின் கவனமின்மையால் நிகழும் மரணங்கள் குறித்து மிக விரிவாகப் பேசுகிறது. ‘இடிபாடுகளில் புதைந்து செய்திகளில் மிதந்து’ என்கிற இந்த கட்டுரை மிக முக்கியமானது. நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட போரூர் கட்டிட விபத்தை பற்றி விவரிக்கிறது.
ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக பொதுமக்களை வஞ்சித்து பெரு முதலாளிகளுக்கான ஆட்சியாகவும் ஆட்சியாளர்களாகவும் இருக்கிறார்கள். இத்தகைய புறக்கணிப்பின் வரலாற்றை எதிர்க்கும் பெரும் ஓசையை இந்நூல் முழுமையும் பார்க்க முடிகிறது. போராட்டங்களில் இருந்து விளைவிக்கப்பட்ட இந்நூல் வாசிப்பாளரோடு பெரும் உரையாடலை நிகழ்த்தியிருக்கிறது. அதிகாரத்தை எதிர்த்துப் போராடுவதே நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு வழி என்பதை மிக ஆணித்தரமாக விவரித்துச் செல்கிறது இந்த நூல்.
தொடர்ச்சியான போராட்டமே நம் வாழ்க்கையை வென்றெடுக்க உந்து சக்தி சக்தியாக இருக்கும் என்பதை நூல் முழுமையும் பரவலாகப் பார்க்க முடிகிறது. அந்த வகையில் சென்னையில் மறுபக்கம் நிஜங்களின் தரிசனம் என்னும் தோழர் பாக்கியம் அவர்களின் இந்நூல் தனித்துவம் மிக்கக் கட்டுரைத் தொகுப்பாக, குறைவான பக்கங்களைக் கொண்டிருந்தாலும் ஆழமான அகலமான கருத்துகளுடன் நம்மை நூலோடு ஐக்கியப்படுத்திக் கொள்ள எல்லா வகைகளையும் செய்திருப்பதை உணரமுடிகிறது.
