சென்னை புத்தகக் காட்சியை உலகப் புத்தகக் காட்சியாக தமிழக அரசு அறிவித்துள்ளது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. மேலும், கொல்கத்தாவிலும் மும்பையிலும் புதுதில்லியிலும் நடக்கும் தேசிய அளவிலான புத்தகக் காட்சிகளில் தமிழக பதிப்பாளர்கள் பங்கேற்க அரசு உதவ வேண்டும். இத்துறை கார்பரேட் மயமாகிவரும் சூழலில் அயல் வெளியீட்டாளர்களை வரவழைக்கும்போது பொருளாதார ரீதியில் பின்தங்கிய நொடிந்த தமிழ் பதிப்பாளர்களின் தார்மீக உரிமை பேணப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்பதே முதல் கவலையாக உள்ளது.
பல்கலைக்கழக கல்விக்குள் புகுந்து விட்ட அயல் பல்கலைக்கழகங்கள் போல நமது மிகச் சாதாரண மக்களின் வாசிப்புச் செலவினத்தின் மீதும் சுரண்டல் தாக்குதல் நடக்காமல் கடிவாளம் போடப்படவேண்டும். சமீபத்தில் சென்னையில் நடந்த கருத்து பரிமாற்ற கூட்டத்தினை விரிவுபடுத்தி அனைத்து பயனீட்டாளர்… அல்லது வேறு ஊடக இணைய வழிகளிலோ பெரும்பான்மை தமிழ் பதிப்பாளர்களின் கருத்துகளைத் திரட்ட வேண்டும்.
• சார்ஜா சர்வதேச புத்தகக் காட்சி என்பது அதற்கென்று கட்டப்பட்ட நிரந்தர காட்சிக் கூடத்தில் நடக்கிறது. கூடவே ஆண்டுதோறும் சர்வதேச பதிப்பாளர் மாநாடு நடத்தப்படுகிறது.
• லண்டன் சர்வதேச புத்தகக்காட்சி – டிஜிட்டல் அரங்குகளை தனியே அமைக்கிறது. அச்சான நூல்கள் தனியே காட்சிப்படுத்தப்படுகின்றன. 25,000 அரங்குகள் 100 நாடுகள், 150 புத்தக விருதுகள், 90 கருத்தரங்கங்கள், 5,000 புதிய நூல் வெளியீடுகள்.
• பிராங்க்ஃபர்ட் உலகப் புத்தகக்காட்சி, உலகப் புத்தக வெளியீட்டாளர்களின் மெக்கா என்று புகழப்படுகிறது. 7,300 அரங்குகள் 100 நாடுகள். கண்டம் வாரியாக வரிசைப்படுத்தப்படுகிறது. மூன்றாம் உலக நாடுகளுக்கான தனி சிறப்பு கவனம் உண்டு.
• மணிலா சர்வதேச புத்தகக் காட்சி, இதழ்கள், அறிவியல் ஆய்விதழ்களுக்கு தனி அரங்குகள் அமைக்கிறது. உள்ளூரின் 300 பதிப்பாளர்களுக்கான பிரதான இடங்களை மீறி மீதமுள்ள அரங்குகளே சர்வதேச பதிப்பாளர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த சர்வதேச கண்காட்சியின் சிறப்பு என்னவெனில், எந்த மொழியில் நூல்கள் வெளிவந்தாலும் பிலிப்பினோ மொழி (-உரிமம் உட்பட்டு)யிலும் அது வெளியிடப்படுகிறது.
• பிரான்சில் ஆங்கோலிமி சர்வதேச புத்தகக் காட்சியின் சிறப்பு, நூலாசிரியர், திரைப்பட இயக்குநர் உரிமக் கூட்டங்கள் அங்கே சர்வதேச திரைப்பட விழாவும் இணைக்கப்பட்டுள்ளது.
• இத்தாலியின் டுரிங் சர்வதேச புத்தகச் சந்தை (Torino Esporizioni) நாடுகள் வாரியாக உலக மொழி வாரியாக நாள்தோறும் இலக்கிய திருவிழாக்களை நடத்துகிறது.
• குவாடாலரஜா (ஸ்பெயின்) உலகப் புத்தக காட்சி ஒரு பிரமாண்ட பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்படுகிறது. பத்திரிகையாளர்கள் ஊடகவியலாளர்களுக்கும் வெளியீட்டு ஏஜெண்ட்டுகளுக்கும் முன் தேதியிட்டு உலகப் புத்தகக் காட்சியின்போது என்னென்ன செய்ய வேண்டும் எனப் பயிற்சி தரப்படுகிறது.
• மொராக்கோவில் காசா பிளாங்க்கா (Casablanca) சர்வதேச புத்தகத் திருவிழாவில் சிறார் இலக்கியம், பெண்ணிய இலக்கியம் குறித்த பயிற்சி பட்டறைகள் நிரந்தரமாக – ஒரு தொடர் நிகழ்வாக நடத்தப்படுகிறது.
ஒரு சர்வதேச புத்தகக் காட்சி என்பது நம் தமிழின் எழுத்தாளர்களை உலகிற்கே அறிமுகம் செய்யும் நிகழ்வாக மாற்றப்பட வேண்டும். தமிழ் நூல்களை பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்கும் உரிமம் தர போடப்படும் ஒப்பந்தங்களில் வெறும் பதிப்பாளர் மட்டுமே பங்கு பெறாது. படைப்பாளிக்கும் உரிய உரிமையை பெற்றுத் தரும் வகையில் விதிகளை உருவாக்க வேண்டும். இலக்கியத்திற்கான நோபல் பரிசு உட்பட சர்வதேச அங்கீகாரங்களை நோக்கி தமிழை எடுத்துச் செல்வதாக சர்வதேச புத்தகத் திருவிழா அமைய வேண்டும். செம்மொழித் தமிழின் செவ்விலக்கியங்கள் பாரெல்லாம் போகும் வகை செய்தல் வேண்டும். இப்படி நம் தேவைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். திட்டமிடலை பரவலாக்கி, கருத்துக்கேட்பை ஜனநாயகப்படுத்தி சென்னை சர்வதேச புத்தகக்காட்சியில் வரலாறு படைப்போம்.
