ஜி.ராமகிருஷ்ணன்
“ வ.உ.சி-யின் மேடைச் சொற்பொழிவு முழக்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம்கூட உயிர்பெற்று எழும், புரட்சி ஓங்கும்” என்ற வார்த்தைகள் வ.உ.சிக்குச் சூட்டப்பட்ட புகழாரம் அல்ல.

வெள்ளையர் அரசாங்கம் அவர் மீது தொடுத்த வழக்கினை விசாரித்த நெல்லை மாவட்ட நீதிபதி பின்னி, வ.உ.சி.க்கு இரட்டை ஆயுள் தண்டனையளித்து வழங்கிய தனது தீர்ப்பில் பதிவு செய்தவை. (இரண்டு ஆயுள் தண்டனை என்பது 40 ஆண்டுகள் சிறை ஆகும்)
இந்தத் தண்டனை வழங்கப்பட்டபிறகு கோவை சிறைச்சாலைக்கு அவரை ரயில் வண்டியில் அழைத்துச் சென்றார்கள். அவருக்கு தண்டனை வழங்கப்பட்ட செய்தி காட்டுத் தீப்போல பரவி, ரயில் வண்டியில் சென்ற வ.உ.சிதம்பரனாரை, மணியாச்சி ரயில் நிலையம், மதுரை சந்திப்பு, திருச்சி சந்திப்பு என பல ரயில் நிலையங்களில் திரளாகக் கூடிய மக்கள் முழக்கமிட்டதுடன், கண் கலங்கியபடி வழியனுப்பினார்கள்.
ரயில் நிலையங்களில் தம்மைச் சந்தித்த மக்களிடம் “விரைவில் திரும்பி வருவேன், சுதேசி இயக்கத்தை விட்டுவிடாதீர்கள். அதுவே நமக்கு எல்லாம் தரும்” என்று கூறினார் வ.உ.சி.,
“சுதேசியமென்பது வெறும் பொருள்களோடு நிற்பதன்று. வாணிபத்தில் சுதேசியம், கல்வியில் சுதேசியம், ஆட்சியில் சுதேசியம் இப்படி நமது வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் சுதேசிமணம் கமழ வேண்டுமென்பதே எனது உள்ளக் கிடக்கை” என்றார் அவர்.
சிறையில் வ.உ.சி-யை செக்கிழுக்க வைத்தார்கள். சித்ரவதை செய்தார்கள். இவைகளைப் பற்றியெல்லாம் கிஞ்சிற்றும் கவலை கொள்ளவில்லை. ஒருநாள், சிறையில் உறங்கிக் கொண்டிருந்த அவரை, நள்ளிரவில் எழுப்பிய சிறைக் காவலர் ஒருவர், ஆட்சியர் ஆஷ் துரையை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றார் என்ற செய்தியைச் சொல்லியுள்ளார். அதைக் கேட்டு நல்ல செய்தியைச் சொன்னாய் என்று வ.உ.சி மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.
அவருக்கு அளிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் செய்த மேல்முறையீட்டில் 6 ஆண்டுகள் நாடு கடத்தல் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. தண்டனை குறைக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் மற்றும் ஒன்பது மாதங்களுக்கும் பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார்.
படித்து முடித்து வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்ட வ.உ.சிச் சென்னை நகரத்திற்குச் சென்றபோது ராமகிருஷ்ணா மடத்தைச் சார்ந்த ஒருவர் ஆற்றிய உரை கேட்டபிறகு, சுதேசி சிந்தனைக்கு ஆட்பட்டார். பின் நாட்களில், சுதேசியாக கப்பலை இயக்கியதோடு அந்தக் கோட்பாட்டினை மேலும் வளர்த்து சரியான விளக்கத்தையும் அளித்தார், பிரச்சாரமும் செய்தார்.
சுதேசியம் பற்றி பல கூட்டங்களில் பேசிய வ.உ.சி, காங்கிரஸ் கட்சியின் சென்னை கிளைச் செயலாளராக பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். வங்கத்தில் சிறையிலிருந்து விடுதலையான சுதந்திரப் போராட்ட வீரர் விபின சந்திர பாலர் அவர்களுக்கு திருநெல்வேலியில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். ஆனால், இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வெள்ளையர் அரசு நிர்வாகம் தடை விதித்து அவர்மீது வழக்கு தொடுத்தது. வ.உ.சி கொடுத்த பிணைக்கான மனுவை நிர்வாகம் தள்ளுபடி செய்து அவரை சிறையில் அடைத்தது. சுதந்திரப் போராட்ட வீரரான வ.உ.சி கைது செய்யப்பட்டதை அறிந்து திருநெல்வேலி நகரமே போர்க்களமானது. மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தை மக்கள் தீக்கிரையாக்கினர். வெள்ளையர் அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

வ.உ.சிதம்பரனார் அவர்களின் வாழ்க்கையைப் பற்றியும், சுதந்திரப் போராட்டத்தில் அவருடைய பங்களிப்பு பற்றியும் ஏராளமான நூல்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியாகி உள்ளன. இருப்பினும், வ.உ.சி அவர்களே எழுதிய சுயசரிதையைப் படிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. 1946லும், பிறகு 2019லும் அவருடைய சுயசரிதை நூலாக வெளியாகியுள்ளது. வ.உ.சி அவர்கள் அகவற் பாக்களால் எழுதிய அவருடைய வரலாற்றை நா.மு.தமிழ்மணி அவர்கள் எளிமைப்படுத்தி “வ.உ.சிதம்பரனார் தன் வரலாறு” என்ற நூலைப் படைத்திருக்கிறார். பாரதி புத்தகாலயம் அந்த நூலை வெளியிட்டுள்ளது. 159 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் வ.உ.சி அவர்களுடைய போராட்ட வரலாறு பற்றி இந்நூலில் அரிய தகவல்கள் உள்ளன.
“தற்காலம் நம்முடைய நாடு உள்ள நிலைமையில் மத வேற்றுமைகளையும், சாதி வேற்றுமைகளையும் காண்பவர்களும், பேசுபவர்களும் நாட்டிற்குத் தீங்கு இழைப்பவர்களே என்று நான் கருதுகிறேன்” இன்றைய, மோடி தலைமையிலான பாஜக/ஆர்.எஸ்.எஸ் அரசு, இந்தியக் குடியரசின் மதச்சார்பின்மை உள்ளிட்ட அடிப்படைகளை மாற்றி, இந்து ராஷ்ட்டிரமாக ஆக்கிடத் துடிக்கிறது. மத அடிப்படையில் மக்களைத் துண்டாடுகிறது. இன்றைய சூழலில், வ.உ.சிதம்பரனார் நமக்கு மிகவும் அதிகமாக தேவைப்படுகிறார்.