ஸ்ரீதர் மணியன்
மனிதகுல வரலாற்றில் ஆண்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் பெண்களுக்கு மறுக்கப்படுவதும், அவர்களது செயல்களும், சாதனைகளும் காழ்ப்புணர்சி, பொறாமையுடன் பார்க்கப்படுவதும் இயல்பாக நடந்து வருகின்ற நிகழ்வாகும். நடைமுறை இவ்வாறிருப்பினும் பெண்கள் சமூக இயக்கங்களுக்கு தங்களது பங்கேற்பினை அளிக்கத் தயங்கியதில்லை. இத்தகைய எள்ளல்களையும், ஏளனங்களையும் பொருட்படுத்தாது புறந்தள்ளி தங்களது தொண்டுகளின் வாயிலாக தங்கள் இருப்பினை உறுதி செய்து கொள்கின்றனர்.

இத்தகைய வரிசையில் மகளிரது பங்கேற்புகள், சாதனைகள் குறித்த நூல்களும், தரவுகளும் திட்டமிட்டு மறைக்கப்படுவதும், மறக்கப்படுதலும் உண்டு. எனினும் பல படைப்பாளிகள் தங்களுக்கேயுரிய உந்துதலால் இத்தகைய சாதனை மகளிர் குறித்துப் பல புத்தகங்களை உருவாக்கி வாசகர்களுக்கு அளிக்கின்றனர். இவ்வாறான வரிசையில் தன்னினப் போராளிகள் குறித்து உமா மோகன் தனது நூலான ‘விடுதலைக் களத்தில் வீரமகளிர்‘ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
தனது புத்தகத்தில் பல பெண்மணிகளை அவர் வாசகனுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். சில பிரபலமானோர் தவிர ஏனையோர் நமக்கு பரிச்சமற்றோர். காலனி ஆதிக்கம் தொடங்கிய காலத்திலிருந்து நாடு விடுதலை பெறும் வரை அவர்கள் குறித்தும், அவர்களது பங்கு குறித்தும் தேசமெங்கும் பங்கேற்ற மகளிர் இதில் பேசப்படுகின்றனர்.
இத்தகைய ஐம்பது பெண்மணிகளின் வாழ்க்கை பற்றிய குறிப்புகளும், போராட்ட செயல்பாடுகளும், சமூகத்திற்கு அவர்கள் செய்த சேவைகள் பற்றியும் தனது நூலில் உமா மோகன் தொகுத்துக் கூறுகிறார். இந்நூலில் கஸ்தூர்பா காந்தி, கமலா நேரு, கவிக்குயில் என பல பிரபலங்கள் குறித்த கட்டுரைகள் இருப்பினும் வாசகனும், சமூகமும் அறியா பல பெண்மணிகள் குறித்த பகுதிகள் குறிப்பிடத்தக்கவை. இவர்களது அரும்பணிகள் மற்றெவருக்கும் குறைந்தவை அல்ல. புத்தகத்தில் பேசப்படும் அத்தகையோர் சிலர் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
தென்னிந்தியாவிலேயே பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் பெண் என்னும் பெருமை கொண்ட தோழர். கே.பி.ஜானகி அம்மாள் குறித்த கட்டுரையில் அவரது அரும்பணிகளைக் காணலாம்.
இறுதிவரை பொதுவுடமைக் கட்சி அலுவலகத்திலேயே தங்கி சேவை புரிந்திட்ட அம்மையார் குறித்த தகவல்கள் மனம் நெகிழ வைப்பவை. ‘ஹார்வி மில் தொழிலாளர்களுக்கான போராட்டம், பழங்குடி இன மக்களுக்காகவும், குழந்தைத் தொழிலாளர்களுக்காவும் பல போராட்டங்களை முன்னெடுத்துச் சென்று வெற்றி பெற்றவர் ஜானகி அம்மாள். அது போன்றே அம்மு சுவாமிநாதன் குறித்த கட்டுரை பல சுவைமிகு செய்திகளைத் தருகிறது.
அன்னி பெசன்ட், முத்துலட்சுமி ரெட்டி மற்றும் மார்க்ரெட் சகோதரிகள் ஆகியோருடன் இணைந்து இந்திய மகளிர் சங்கத்தைத் தொடங்கியவர். குழந்தைத் திருமணம், பெண்கள் வாக்குரிமைக்கான போராட்டங்களை முன்னெடுத்தவர் அம்மு என்பதும் நேதாஜியின் சேனையில் பணியாற்றிச் சேவை புரிந்த கேப்டன் இலட்சுமியின் தாயார் இவரே என்பதும் கூடுதல் தரவுகள்.
காந்தி அடிகளின் தத்தெடுக்கப்பட்ட புதல்வி என்று கூறுமளவிற்கு இருந்த அம்புஜத்தம்மாள் பெண்கள் சுதேசி இயக்கத்தின் பொருளாளராக இருந்தவர். தேவதாசி முறை ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, பலதார மணத்தடை, பெண்களுக்கான கல்வி வேலை வாய்ப்பு என பல தளங்களில் செயல்பட்டவர். பூமிதான இயக்கத்திலும் இவரது பங்கேற்பு இருந்தது. மற்றுமொரு வீரப்பெண்மணியான மதுரை சொர்ணத்தம்மாள் காலனியாதிக்கத்தின் கையாளாகச் செயல்பட்ட காவலதிகாரியான தீச்சட்டி கோவிந்தன் என்பவனால் ஆடை களையப்பட்டு அவமானப்படுத்தப்பட்டபோதும் துணிந்து தனது சேவையைத் தொடர்ந்திட்ட கட்டுரையும் இப்புத்தகத்தில் உண்டு. தீச்சட்டி கோவிந்தன் என்னும் இந்த அதிகாரி குறித்து இந்நூலில் இரண்டு இடங்களில் காணப்படுவது பெண்களைக் குறிவைத்துத் தாக்கும் அவனது நோக்கத்தினைக் காட்டுகிறது.
இன்னும் காலனியாதிக்கத்தின் தொடக்கக் காலங்களில் தங்களது ஆட்சியுரிமையினை விட்டுக் கொடுக்காது தக்கவைத்துக் கொள்ளப் போராடிய ஜல்காரி பாய், ராணி அவந்தி பாய், கிட்டூர் ராணி சென்னம்மா, பேஹம் ஹரஸத் மஹால் போன்ற வீரப் பெண்மணிகள் பற்றியும் உமா மோகன் எழுதுகிறார். மேற்கண்டோர் நமக்குப் பரிச்சயப்பட்டவர்கள் அல்லர். அவ்வகையில் இவர்களை வாசகருக்கு அறிமுகம் செய்திட்ட உமா மோகன் பாராட்டுக்குரியவர்.
மேலும், இந்தியப் பட்டயக் கணக்காளர் தென் இந்தியக் கவுன்சிலின் முதல் பெண் தலைவரான சிவபோகம், கடலூர் அஞ்சலை அம்மாள், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெபமணி மாசிலாமணி, சரஸ்வதி பாண்டுரங்கம் போன்ற மகளிர் குறித்தும் உமா மோகன் கட்டுரைகளைத் தனது நூலில் எழுதியுள்ளார். மகளிரது தொண்டுகள், தியாகங்கள் குறித்த நூல்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையிலேயே உள்ளது கவனிக்கத்தக்கது. நிவேதா லூயிசின் முதல் பெண்கள், நிலமடந்தைக்கு என்னும் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் குறித்த நரோலாவின் நூல், முதல் பெண் இதழாசிரியரான பாலாம்மாள் குறித்த கோ.ரகுபதியின் புத்தகம் என சொற்ப நூல்களையே காண முடிகிறது.
விடுதலைக்களத்தில் வீரமகளிர் என்னும் உமா மோகனின் புடைப்பும் இவ்வரிசையில் தற்போது இணைகிறது. கவிதை, கட்டுரைகள் என இலக்கிய தளத்தில் செயல்பட்டு வரும் இவர் புதுச்சேரி அகில இந்திய வானொலியில் பணி புரிந்து வருகிறார். இப்புத்தகத்திற்கான முன்னுரையினை தோழர். தமிழ்ச்செல்வன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ளது.