“புத்தக வாசிப்பு, பொது வாசிப்பு, அன்றாட வாசிப்பு, நூலக வாசிப்பு இவற்றை மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பவரே உண்மையான ஆசிரியர்
–பிரான்ஸிஸ் பெக்கான்.
அச்சிடப்பட்ட புத்தகம் ஒன்றே நிரந்தர தன்மை கொண்டது. இதனை நோய்க்கால – நீர்த்துப்போன ஆன்-லைன் கல்வி நேரடியாக நிரூபித்து விட்டது. கையகல கைபேசி வாசிப்பு சாத்தியப்படவில்லை. இந்த சமூகத்தை அறிவார்ந்த பகுத்தறிவு சமூகமாக மாற்றும் சக்தி, இளைய தலைமுறையின் வாசிப்பு பழக்கத்தை நம்பி இருக்கிறது.
பிரபலக் கல்வியாளர் தாமஸ் ஜெஃபர்சன், புத்தக வாசிப்பே சமூக விடுதலைக்கான முதல்படி என்பார். ஏனெனில் புத்தக வாசிப்பு என்பது அறியாமை இருளை போக்கி மூட நம்பிக்கைகளில் இருந்து நம்மை விடுவிக்கிறது. வாசிக்கும் ஒருவர் தன்னைச் சுற்றி உள்ள எல்லோரையும் அறியாமை இருளில் இருந்து மீட்டு அறிவார்ந்த பகுத்தறிவு வெளிச்சத்தை நோக்கி இட்டுச் செல்கிறார்.
அச்சிடப்பட்ட சிறந்த அறிவுப் பெட்டகமான ஒரு புத்தகம் வாழ்வை மாற்றி, சிந்தனையை விதைத்து, புரட்சியை தூண்டிவிட முடியும் என்பதற்கு, வரலாற்றில் பல சாட்சிகள் உண்டு.
வாசிப்பிற்கு முதல் தேவை புலனுணர்வு (Perception), இரண்டாம் தேவை புரிந்து கொள்ளும் உணர்வாற்றல் (Comprehension). இவற்றை முறைப்படி மாணவர்க்கு புகட்டி பயிற்சி தருபவரே சிறந்த ஆசிரியர். மாணவர்களின் அறியும் ஆற்றலே சுயமான தேடலை மேம்படுத்துகிறது. அந்தத் தேடலை பாடப்புத்தகத்திற்கு வெளியே நடக்கும் வாசிப்பே மேம்படுத்துகிறது. மாணவர்கள் “புத்தகம் படி” என்று வாய் வார்த்தையால் சொல்லி கேட்பவர்கள் அல்ல.
பெரும்பாலான மாணவர்களின் வீடுகளில் வாசிப்பு சூழல் இல்லை. ஆனால் தனது ஆசிரியர் புத்தக வாசிப்பாளர் என்றால் மாணவர்கள் அந்த விஷயத்தை கண்டு உடனடியாக அதை பின்பற்றுகின்ற அதிசயம் நடக்கிறது. தனது பையில் சிறார் இதழ்கள், சில நூல்கள், தான் வாசிக்கும் புத்தகம் என்று வகுப்பறைக்குள் நுழையும் ஆசிரியர், ஒரு வாழும் புத்தகமாக மாணவர்கள் முன் நிற்கிறார். அவர் தன் கைபேசியை விட, தான் வைத்திருக்கும் புத்தகத்தின் மேல் அதிக கவனம் செலுத்தும்போது சமூகத்திற்கே முன் உதாரணம் ஆகிறார்.
பலவகைப்பட்ட வாசிப்புகளை ஒரு சிறந்த ஆசிரியர் மேற்கொள்கிறார். பரந்துபட்ட விரிவான வாசிப்பு முதல் ரகம்தான் அறிந்த, வாசித்தவற்றை வியப்புடன் வகுப்பில் பகிர்ந்து கொள்வார். இரண்டாவது செறிவான தீவிர வாசிப்பு என்பது சில புத்தகங்களை ஆழமாக வாசிக்கும் ஆசிரியர் அதனை நேரடியாக வகுப்பறையில் வாசித்து காட்டுகிறார். அறிவோடு மொழிவளம், எழுத்து நடை, இவற்றை எடுத்துக்காட்டி பாராட்டி, ரசிப்புத் தன்மையை மாணவர் மனதில் விதைக்கிறார். பிறகு விமர்சனப்பூர்வ வாசிப்பினை அவர் அறிமுகம் செய்வார்.
ஒரு கருத்தை அப்படியே ஏற்காமல் எப்படி விமர்சித்து அலசி ஆராய்வது, ஒரு செய்தி, அதிலும் அச்சிடப்பட்ட செய்தியின் உண்மைத் தன்மையை எப்படி அறிவது, ஒரு புத்தகம் சொல்லும் கருத்தை விமர்சிப்பது எப்படி என்பதை நோக்கிய வாசிப்பிற்கு மாணவரின் வாழ்க்கையை சிறந்த வாசிப்பு ஆசிரியர் தயார் செய்கின்றார். பெருந்தரவு எனும் பிக்-டேட்டா இன்று நம் உலகை தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது.
தகவல்கள் வந்து கொட்டுகின்றன. எது உண்மை, எது பொய், எது தேவை, எது தேவையற்றது, நல்லது எது, தீயது எது என்று துய்த்து உணரும் சந்ததியே இன்றைய தேவை. அதனை திறம்பட உருவாக்கும் வழி – வாசிப்பை வகுப்பறையில் விதைத்து தானும் சிறந்த வாசிப்பாளராக இருந்து, தனது மாணவர்களுக்கு புத்தக வாசிப்பின் வாசலை திறந்து விடுபவரே நல்லாசிரியர்.
பாடம் நடத்தும் ஆசிரியரை விட இன்றையத் தேவை வாசிக்கும் ஆசிரியர். வாசிக்கும் ஆசிரியர்களை போற்றுவோம். அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.