ஸ்ரீதர் மணியன்
உலக மக்கள் தொகையில் 6% மக்களே அமெரிக்க நாட்டில் உள்ளனர். 60% மக்கள் ஆசியாவில் வாழ்கின்றனர். எனவே, ஆசியாவை ஆதிக்கம் செலுத்துபவரே உலகை ஆளவியலும். பிறகு ஐரோப்பாவின் பெரிய நாடுகளான ஜெர்மனி, போலந்து, உக்ரைன், பிரான்சு இவற்றை கட்டுக்குள் அடக்கி வைத்துக் கொண்டால் உலக வல்லசுரக் கனவு கைககூடிவிடும். (தி கிராண்ட் செஸ்போர்டு நூலில் அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆவோசகர் பிரெசின்ஸ்கீ)……
மேற்காண் கருத்தின் அடிப்படையில் இ.பா.சிந்தனின் ‘உக்ரைனில் என்ன நடக்கிறது? என்ற புத்தகத்தினை வாசித்தால் இப்போருக்கான உண்மையான காரணத்தினை வாசகன் எளிதில் அறிந்து கொள்ளலாம்.

நமக்கு காட்சி ஊடகங்களும், புலனாய்வு இதழ்களும் வாசகனை அல்லது பார்வையாளர்களை நாற்காலியின் நுனியில் இருத்தக் கைகொள்ளும் செய்திகள் எத்துணை சார்புத்தன்மை கொண்டவை, மெய்யற்றவை எனப்புரியும். சிந்தன் சற்றேறக்குறைய நூறு பக்கங்களில் உலக வரலாற்றின் உண்மையான பக்கங்களை நூலாக வடித்தெடுக்கும் முயற்சியில் முழு வெற்றியடைந்துள்ளார்.
நமது கவனத்தில் கொள்ளாத பல நாடுகளின் அரசியலும் இப்போருக்கான காரணிகள் என நூலினை வாசித்து முடிக்கும் தருணத்தில் உணரலாம் ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கின் அரசியல் என அமெரிக்கா மற்றும் அதன் புலனாய்வு அமைப்புகள் கையாண்டுவரும் பல தந்திரங்களைக் குறித்து இப்புத்தகம் விரிவாக மட்டுமன்றி செறிவாகவும் பேசுகிறது.
உக்ரைன் யுத்தத்தின் பின்புலம் என்ன? இப்போர் உக்ரைன் மற்றும் இரஷ்யா மட்டும் சம்பந்தப்பட்டதா? அல்லது இதில் மற்ற நாடுகளின் பங்கு என்ன? எங்கும் நீக்கமற நிறைந்து தனது கழுகு மூக்கினை நீட்டியவண்ணம் மோப்பம் பிடித்துக் கொண்டு உலகில் ஜனநாயகத்தினை உலக நலனுக்காக, உலக அமைதிக்காக காக்கிறேன் என்று கூறித்திரியும் அமெரிக்காவின் பங்கென்ன? என பன்முகத் தன்மையோடு சார்பேதுமின்றி இந்நூல் விளக்குகிறது. பல நூல்களின் தரவுகளை ஆய்ந்து அவற்றின் சாரத்துடன் தனது புத்தகத்தினை உருவாக்கியுள்ளார் இ.பா.சிந்தன். வாசகனின் தெளிவிற்காக வரைபடத்தினையும் தேவைக்கேற்றாற் போல் இணைத்துள்ளது நூலின் சிறப்பு.
உலகளாவிய பரந்த தளத்தில் மத்திய கிழக்கு நாடான சவூதி, துருக்கி, சிரியா, லிபியா, குறிப்பாக ஏமன் என்னும் பரிதாபத்திற்குரிய நாடு, ஐரோப்பாவின் ஜெர்மனி, போலந்து போன்ற நாடுகளது வரலாறும் இதில் அலசப்படுகிறது. ஜார் ஆட்சியில் துவங்கி லெனின் மற்றும் ருஷ்யாவின் கோர்பசேவ் முதல் இன்றைய புடின் வரை இந்நூல் பேசுகிறது.
உலகிற்கு பொதுவுடைமைத் தத்துவத்தினை அளித்துப் பெருமை சேர்த்த இரஷ்யா என்னும் வல்லரசு நாளடைவில் தேய்ந்து பெரு நிறுவனங்களின், முதலாளி வர்க்கத்தின் கையாளாக மாறிவிட்ட அவலம் குறித்தும் இ.பா.சிந்தன் தெளிவாக எடுத்துக் கூறுகிறார். ஆசியக் கண்டத்தில் வேகமாக பொருளாதாரத்தில் வலுவாகக் காலூன்றி வரும் சீனாவின் வளர்ச்சி அமெரிக்க அண்ணனை எவ்வாறு உறுத்தி பதற்றமடையச் செய்துள்ளது எனவும் இப்புத்தகம் விளக்குகிறது.
நேட்டோ ஒப்பந்தம், அதன் பின்ணனி, அதன் வரம்பு மீறல்கள், படைத்தளங்களை ஏற்படுத்திக் கொள்ள கைகொள்ளும் தந்திரங்கள், நார்த் ஸ்ட்ரீம் திட்டங்கள் அதில் மறைந்துள்ள அரசியல் மற்றும் வியாபாரக் கணக்குகள் இவை குறித்தும் வாசகனுக்கு இந்நூல் கூறுகிறது.
அமெரிக்கா இரஷ்யா மட்டுமல்லாது உலக உழைக்கும் வர்க்கத்தினரின் வரிச் செல்வம் எவ்வாறு சகநாடுகளின் சாமானியர்களை அழித்தொழிக்க விரயம் செய்யப்படுகிறது என்பதனை நூலாசிரியர் சிந்தன் மனவலியுடன் இந்நூலில் கூறுகிறார். ஆளும் வர்க்கமும், அரசு அதிகாரிகளும் எவ்வாறு பாதிப்படையாது காத்துக் கொள்கிறனர்? எளிய மக்கள் தங்கள் சொந்த மண்ணை நீங்கி, அனைத்தையும் இழந்து புலம் பெயரும் அவலத்தினையும் இப்புத்தகத்தில் காணலாம்.
ஏமன் நாட்டின் வரலாறு பள்ளிகள், மருத்துவமனைகளின் மீது குண்டடித்து ஆயிரம் பள்ளிகளைத் தரைமட்டமாக்கிய நேசப்படைகளின் தொண்டு குறித்தும் நூலாசிரியர் கூறுகிறார். உக்ரைனின் அசோவ் படைகளுக்குப் பயிற்சி அளித்தது மட்டுமல்லாது பல தீவிரவாத குழுக்களுக்கு ஆயுதம், நிதி உதவி, முக்கியமாக அதிதீவிர வலதுசாரி இயக்கம் என்ற படைப்பிரிவினை ஏற்படுத்தியது என அமெரிக்க அரசின் பயங்கரவாத முகம் இதில் காட்டப்படுகிறது.
கூடுதலாக நார்த் ஸ்ட்ரீம் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுவிட்டால் ஜெர்மனியும், இரஷ்யாவும் நெருக்கமாகிவிடும் என்ற அச்சத்தில் சிரியா வழிச் செல்லும் அத்திட்டத்திற்காக சிரியாவினைக் குலைக்க இஸ்ரேல் மற்றும் துருக்கியுடன் இணைந்து சிரியாவை நாசப்படுத்தியது என நூல் விரித்துச் சொல்கிறது. இத்திட்டத்தில் துருக்கி இணைவதற்கான காரணம் ஆயத்த ஆடை தயாரிப்பில் அதற்கு பலமிக்க போட்டியாளராக சிரியா இருந்ததே ஆகும். இருப்பினும் இத்திட்டம் மட்டுமல்லாது அதன் இரண்டாம் பகுதியும் வெற்றிகரமாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
மேலும், உக்ரைனின் வலதுசாரிக் கொள்கைகளின் எங்கிருந்து பெறப்பட்டன? அதன் தோற்றம் மற்றும் வரலாறு, நவீன இனவெறி அமைப்புகளின் வரலாறு, கம்யூனிசக் குறியீடுகளை அழிக்கும் சட்டம் பற்றிய பகுதிகள் நூலில் குறிப்பிடத்தக்கவை. இவற்றை வாசிக்கும்போது உக்ரைன் யுத்தமென்பது வெறும் இரு நாடுகளுக்கிடையிலான போர் எனக் கொள்வது எத்துணை தவறான புரிதலென்பது விளங்கும்.

போர் துவங்கிய சில நாட்களிலேயே பல்லாயிரம் கோடி தொகையினை அமெரிக்கா மற்றும் உலக வங்கி மற்றும், சர்வதேச நிதியம் வழங்கியதன் பின்புலம் என்ன? எனவும் நூலில் சிந்தன் பதிவு செய்துள்ளது கவனிக்கத்தக்கது.
நிறைவாக இந்நூலினால் சிந்தன் பெறப்போவது தன் உள்ளக்கிடக்கையினை வடித்தெடுத்தது மட்டுமாகவே இருக்கவியலும். நுகர்வுக் கலாச்சாரமே நடைமுறையாகப் போன இன்றைய அவசர உலகில் பணம் ஈட்டுவது மட்டுமே பிரதானமாக மாறிப்போனது நிதர்சனம். இச்சூழுலில் வாசகர்களுக்கு உண்மை நிலையினை உணர்த்தி சரியாதொரு பார்வையில் இப்பிரச்சினையை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற சிந்தனின் உயர்ந்த நோக்கமும், இதனை வாசகர் பார்வைக்காக பதிப்பித்த பாரதி புத்தகாலயமும் பாராட்டுக்குரியவர்கள்.