ச.சுப்பாராவ்
ஏதேனும் கடினமான ஆங்கிலச் சொல்லைப் படிக்க நேர்ந்தால் உடனடியாக நாம் ஒரு அகராதியை எடுத்து அந்தச் சொல்லைத் தேடி பொருள் அறிந்து கொள்வோம். அகராதியை அப்படித் தான் பயன்படுத்துவோமேயன்றி, அதை முழுமையாக யாரேனும் படித்ததுண்டா? ‘இல்லை’ என்று சொல்ல முடியாது. ஆமன் ஷே இருக்கிறார். அதுவும் அவர் முழுமையாகப் படித்தது நாமெல்லாம் வீட்டில் வைத்திருக்கும் சுருக்கப்பட்ட அகராதி அல்ல.

ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியின் சுருக்கப்படாத விரிவான பதிப்பு. அது மொத்தம் 20 பாகங்கள். அந்த 20 பாகங்களின் எடை சுமார் 137 பவுண்ட் (சுமார் 65 கிலோ). மொத்தம் 21730 பக்கங்கள். ஓராண்டு முழுக்க தினமும் கிட்டத்தட்ட 10 மணி நேரங்கள் குறிப்பெடுத்துக் கொண்டே படித்து முடித்தார். அந்த அனுபவத்தை Reading the Oxford English Dictionary : one man, one year, 21730 pages என்று 173 பக்கங்களுக்கு அழகாக ஒரு புத்தகமாகவும் எழுதிவிட்டார்.
ஆக்ஸ்ஃபோர்ட் பிரிண்டிங் பிரஸ் அவரை தனது ஆசிரியர் குழுவில் சேர்த்துக் கொண்டது. நான் சொற்களைச் சேகரிப்பவன் என்று சொல்லிக் கொள்ளும் இந்த அகராதிக் காதலன் அதற்கு முன் ஏதோ பேராசிரியராக இருந்தவர் என்று நினைக்க வேண்டாம். வெனிசில் கோண்டோலோ என்ற நீள்படகை ஓட்டியிருக்கிறார். சாலையோரம் நடைபாதையில் நின்று இசைக்கருவிகள் வாசித்து, யாசகம் கூட செய்திருக்கிறார்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் அகராதி வாசிப்பு. ஏதோ இந்த ஒரு அகராதி மட்டும் தான் வைத்திருந்தார் என்றில்லை. இந்த 20 பாக அகராதி 1989ல் பதிக்கப்பட்டது. இது போன்ற 7 வேறு பதிப்புகள், 2 பாக ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி, 10 பாக ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி, 2 பாக சுருக்கப்பட்ட பதிப்பு, ஒரு சுருக்கமான ஒரே பாகப் பதிப்பு என்று விதவிதமான அகராதிகள். இவைபோக வேறு பதிப்பகங்களின் அகராதிகள், குறிப்பிட்ட துறைசார்ந்த சொற்களின் அகராதிகள் என அவரது நூலகம் முழுக்கவே அகராதிகள் தான். ஒரு முறை வீடு மாற்றும் போது, 45 பெரிய பெட்டிகளில் புத்தகங்களை எடுத்துச் சென்றார். அதில் 40 பெட்டிகளில் அகராதிகள் மட்டும்தான்.
ஒரு சின்ன அறிமுகம், பிறகு ஒவ்வொரு ஆங்கில எழுத்திற்கும் ஒரு அத்தியாயம் என 27 அத்தியாயங்களில் அந்த அகராதி வாசிப்பு அனுபவத்தைச் சொல்கிறார். உண்மையில் அவர் மிகத் திறமையாக, மிக சுருக்கமாக எழுதியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். காரணம், இந்த அகராதியில் மொத்தம் 59 மில்லியன் சொற்களுக்கு பொருள் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு சொல்லும் ஆங்கிலத்தில் எப்போது பயன்பாட்டிற்கு வந்தது என்ற வரலாறு தரப்பட்டிருக்கிறது.
ஒரு சொல் முதன்முதலில் 13ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது என்றால், 13ஆம் நூற்றாண்டில் அது எந்த நூலில் யாரால் பயன்படுத்தப்பட்டது என்ற குறிப்பு தரப்பட்டிருக்கும். அந்த நூலில் இந்தச் சொல் இருக்கும் வரி மேற்கோள் காட்டப்பட்டிருக்கும். அப்படியாக சுமார் 2.5 மில்லியன் மேற்கோள்கள் உள்ளன. ஷே அகராதியைப் படிக்க ஆரம்பிக்கும் போதே, சாதாரண நோட்டு எல்லாம் வேலைக்கு ஆகாது என்று ஒரு பெரிய குறிப்பேட்டை வாங்க நினைத்தார். 19ஆம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட ஒரு பெரிய குறிப்பேட்டை வாங்கிக் கொண்டார். அது 15க்கு 10 அங்குல அளவில் உள்ள குறிப்பேடு. 500 பக்கங்கள்.

காலத்தின் வாசனையேறிய, லேசாய் மஞ்சளான பக்கங்கள். அந்தக் குறிப்பேட்டில் தன் மனம் கவர்ந்த அபூர்வச் சொற்களைக் குறித்து வைத்துக் கொண்டுதான் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார்.
அகராதியைப் படிக்கப் படிக்க சொற்களைப் பற்றிய வியப்பு அவருக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வாசிப்பை இடையில் நிறுத்தி, அந்தச் சொல் பற்றியே சிறிது நேரம் நினைத்துக் கொண்டே இருப்பார். அவற்றையும் குறித்து வைப்பார். நாம் வாழ்க்கையில் பார்க்கவே முடியாத ஒன்றிற்கான சொல் நமக்கு மிகவும் அறிமுகமானதாக இருக்கும். ஆனால், நாம் அன்றாடம் பார்க்கும் ஒரு விஷயத்திற்கான சொல் தெரியாததாக இருக்கும் என்று உணர்கிறார்.
நாம் பார்க்கவே முடியாத Dinasaur நமக்குத் தெரிந்த சொல். ஆனால், நாம் அன்றாடம் தான் செய்யும் தொழிலின் நுட்பத்தை அறியாத எத்தனையோ நபர்களைச் சந்திக்கிறோம். அவர்களைக் குறிக்கும் atechny என்ற சொல் நம்மில் யாருக்கும் தெரியாது என்கிறார். அப்படித்தான் backfriend என்பதும். போலி நண்பன். நண்பன் போல் நடித்து காலை வாருபவன். சத்தமாகச் சிரிப்பவனுக்கு ஒரு தனிச் சொல் இருக்கிறது. Cachinnator – இதைப் படிக்கும்போது Incubator போல ஏதோ ஒரு கருவி என்றுதான் நமக்குத் தோன்றும். வெறியாக உடற்பயிற்சி செய்யும் குணம் callisthenic.
வெறுப்போடு காறி உமிழ்வதற்கு conspue. காலில் இருந்து ஷுவைக் கழட்டுவதற்கு discalceate. மழையில் நனைந்து வந்ததற்கு impluvious. கூலிக்கு ஒப்பாரி வைக்கும் கிழவிகள் வெள்ளையர் தேசத்திலும் இருக்கிறார்கள். Wailer – professional mourner – one who is paid to weep என்கிறது ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி. எல்லாவற்றிற்கும் தனித்தனியான சொற்கள் இருக்கின்றன. ஷேயுடன் சேர்ந்து நாமும் வியந்து போகிறோம்.
missஐ kiss செய்யலாம். kissஐ miss செய்ய முடியுமா? என்பது மாதிரி நம் ஆட்கள் கவிதை எழுதுவார்கள். Miskiss என்றொரு சொல்லே இருக்கிறது. Kissing that is wrong என்கிறது ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி. சுமார் 25 லட்சம் சொற்களுக்கு விளக்கம் அளித்த அது இந்த சொல்லுக்கு பொருள் மட்டும் தந்துவிட்டு அடுத்த வார்த்தைக்கு நகர்ந்து விட்டது. Kissing that is wrong என்றால் தவறான இடத்தில் தரப்படும் முத்தமா? அல்லது தவறான நபருக்குத் தரப்படும் முத்தமா? என்ற யோசனையில் அன்றைய வாசிப்பே கெட்டுப் போனது ஷேவிற்கு. எனக்கும்தான் தெரியவில்லை. அடுத்த தீபாவளி அல்லது பொங்கலுக்கு சிறப்புப் பட்டிமன்றத்தில் நமது பட்டிமன்றப் பேச்சாளர்கள் இந்தத் தலைப்பை எடுத்துப் பேசலாம். இப்படித்தான் நடுவர் அவர்களே, ஒரு நாள், நமது எதிர்அணியின் தலைவர் பக்கத்து வீட்டு ஆண்ட்டியை… என்று காமெடி செய்யலாம்.
சொற்களின் பொருளும் காலம் தோறும் மாறுகின்றன. Secretary என்றால் ரகசியங்களைச் சொல்வதற்கான பொருத்தமான நபர் என்று தான் பதினான்காம் நூற்றாண்டிலிருந்து பொருள். இருபதாம் நூற்றாண்டில்தான் அது மாறியது. அதுபோலவே சொற்களுக்கான வேர் பற்றிய ஆராய்ச்சியும் மிகவும் சுவையானதாக இருக்கிறது. Curtain lecture என்றொரு சொல். மாமியார், மாமனார், குழந்தைகள் எல்லாம் தூங்கிய பிறகு, மனைவி கணவனைத் திட்டி, உபதேசித்து, லெக்சர் அடிப்பதற்கான சொல் இது.
பதினான்காம் நூற்றாண்டில் கட்டிலைச் சுற்றி, ஒரு திரைச்சீலை போட்டு மறைத்துக் கொண்டு தூங்கும் வழக்கம் இருந்தது. மனைவி, திரைச்சீலையைப் போட்டு விட்டு, கணவனைப் போட்டுத் தாக்குவாள். இந்தச் சொல்லுக்கான வரலாற்றைச் சொல்லும் சாமுவேல் ஜான்சன், தனியாக மாட்டும் போது, கணவனை மனைவி வறுத்து எடுப்பது ஆதாம், ஏவாள் காலத்திலிருந்து நடப்பது தானே? அதற்கு ஏன் 14ஆம் நூற்றாண்டின் ஒரு வழக்கத்தை ஒட்டி ஒரு சொல்லை உருவாக்கினார்கள் என்று தனது வியப்பையும் சேர்த்துத் தெரிவிக்கிறார்.
அகராதி தயாரிப்பின் முன்னோடி சாமுவேல் ஜான்சன் என்பது நாம் அறிந்ததே. ஒவ்வொரு வார்த்தைக்கும் அவர் துடுக்குத்தனமாக ஒரு கமெண்ட் அடிப்பார். அதில் ஏகாதிபத்தியத் திமிரும் சேர்ந்தே இருக்கும். ‘ஓட்ஸ்’ என்ற சொல்லுக்குப் பொருள் சொல்லும் போது, இது ஒரு தானியம். இங்கிலாந்தில் குதிரைகளும், ஸ்காட்லாந்தில் மனிதர்களும் தின்பது என்று எழுதிய திமிர்பிடித்த கிழவர் அவர்.
அகராதிச் சொற்களுக்கு மிக நுட்பமான பொருளைத் தருவது பற்றிய வியப்பு ஷேக்கும், எனக்கும் தீரவேயில்லை. Elucubration என்றால் இரவு வெகு நேரம் விழித்து முக்கியமான வேலை செய்வது. இது லத்தீனின் elubrare என்ற சொல்லில் இருந்து வந்தது. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கவிதை எழுதுதல் என்று பொருள். இந்தச் சொல்லை இரவு கண்விழித்து உருப்படியான காரியம் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிறது அகராதி. இரவு கண்விழித்து நான் இந்தக் கட்டுரையை எழுதுவது elucubration. கே டிவியில் குட்டிப்புலியை 67வது தடவையாகப் பார்ப்பது elucubration கணக்கில் சேராது! லத்தீன் எனும்போது மற்றொரு தகவல் நினைவிற்கு வருகிறது. ஆங்கிலத்தின் 80 சதவிகிதமான சொற்கள் லத்தீன், கிரேக்க மொழிகளில் இருந்து வந்தவைதான். ஆங்கிலத்தில் Wவில் துவங்கும் சொற்கள் குறைவு. காரணம் லத்தீனில் W என்ற எழுத்தே கிடையாது !
Dis என்ற முன்னொட்டு சேர்ந்த வார்த்தைகள் disabilityயில் துவங்கி disyokeல் முடிகின்றன. நடுவில் 143 பக்கங்கள். S என்ற எழுத்தில் துவங்கும் வார்த்தைகளுக்கு இது மாதிரி பக்கக் கணக்கெல்லாம் இல்லை. தனியாக நான்கு பாகங்களை ஒதுக்கிவிட்டார்கள். இந்த நான்கு பாகங்கள் மட்டும் 3000 பக்கங்களுக்கு மேல். அத்தனை லட்சம் சொற்கள்.. இவற்றில் நிறையவே நாம் அன்றாடம் பயன்படுத்துபவை. நமது புழக்கம் காரணமாக பொருள் தெரிந்தவை. எனினும், அகராதி தயாரித்தோர் தெரிந்த வார்த்தை தானே என்று மேலோட்டமாகப் பொருள் சொல்லிவிட்டுப் போய்விடவில்லை. ஒவ்வொரு சொல்லையும் அலசி ஆராய்ந்து, அது எதிலிருந்து வந்தது, என்ன காரணம், எந்தக் காலகட்டத்திலிருந்து புழக்கத்தில் இருக்கிறது என்று நிறுத்தி, நிதானமாக ஆய்வு செய்து சொல்லிவிட்டுத்தான் அடுத்த சொல்லுக்குப் போயிருக்கிறார்கள். அகராதி என்பது கடினமானதற்கு மட்டும் பொருள் சொல்வதல்ல. அனைத்திற்கும் பொருள் சொல்வது.
அகராதியைத் தயாரித்து அச்சடித்து வெளியிடுவதற்குள்ளாகவே பல சொற்களுக்கு பொருள் மாறிவிடுமாம். பல புதிய சொற்கள் வந்துவிடுமாம். பல சொற்கள் வழக்கொழிந்து காணாமல் போய்விடுமாம். கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் ஆக்ஸ்ஃபோர்ட் அகராதியின் முதல் பதிப்பு வந்த காலத்தில் அதில் appendicitis என்ற சொல் இல்லை. இது கூட பரவாயில்லை. Aeroplane என்ற சொல்லே இல்லை ! அகராதி பாதி அச்சாகிக் கொண்டிருக்கும் போதுதான் கண்டுபிடிக்கப்பட்டது போலும்.
சொற்கள், அகராதிகள் பற்றித் தான் புத்தகம் முழுக்க முழுக்கப் பேசுகிறது என்றாலும் நடுநடுவே மொழி பற்றி, வாசிப்பு பற்றி, கணினி பற்றி எல்லாம் அற்புதமான வரிகள் வருகின்றன. இவர் இப்படி தினமும் 10 மணி நேரம் அகராதியை விழுந்து விழுந்து படிக்கும் போது, நண்பர்கள் பலரும் கணினியில் பார்த்தால் தெரிந்து விடுகிறது என்று சொல்கிறார்கள்.
ஷே “கணினி என்றும் புத்தகத்திற்கு மாற்று அல்ல என்கிறார். “என் புத்தக அலமாரியை சட்டென்று நிமிர்ந்து பார்த்தால், அந்தப் புத்தகங்கள் வழியே நான் தெரிந்து கொண்ட எண்ணற்ற விஷயங்கள் என் மனக்கண்ணில் வந்து போகின்றன. ஆனால், என் கணினியை அவ்விதமாக நிமிர்ந்து பார்த்தால் அப்படியான உணர்வு எதுவும் தோன்றுவதில்லை என்கிறார். “ஒரு புத்தகக் கடைக்குச் சென்றால், உலகின் ஒட்டுமொத்த அறிவும் அங்கு குவிந்திருப்பதாக ஒரு எண்ணம் நம் எல்லோருக்குமே தோன்றும். ஆனால் ஒரு கணினி ஷோரூமுக்குச் சென்றால், அப்படித் தோன்றுகிறதா, என்ன? என்று கேட்கிறார்.
மற்றவர்களுக்கு எப்படியோ.. படைப்பாளிகளுக்கு, அதுவும் குறிப்பாக மொழிபெயர்ப்பாளர்களுக்கு சரியான சொற்களைத் தேடுவது, சரியான பொருளை அறிவது பெரிய சவாலாகவே இருக்கிறது. வாழ்நாள் போராட்டமாக இருக்கிறது. சொற்களைத் தேடும் இடையறாத பயணம் என்று அந்தப் போராட்டம் குறித்து எனது கட்டுரை நூல் ஒன்று இருப்பதுகூட நண்பர்களுக்கு நினைவிற்கு வரலாம். சரியான சொல் கிடைக்காத போது ஏற்படும் அந்த வெறுப்பு, அவஸ்தை இருக்கிறதே – அது பெரிய கொடுமை! அதற்கும் ஒரு சொல் இருக்கிறது. Onomatomania – Vexation at having difficulty in finding the right word. என்போன்றே onomatomania வால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஆக்ஸ்ஃபோர்ட் பிரஸில் வேலை பார்த்துக் கொண்டு ஒரு புத்தகமும் எழுதியிருப்பதைப் படிக்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இதை வாசிக்கும் நண்பர்கள் pneumonoultramicroscopicsilicovolcaokoniosis என்ற ஒற்றைச் சொல்லுக்கு பொருள் தேடி சொற்களைத் தேடும் என் இடையறாத பயணத்தில் சகபயணியாக இணைந்து கொள்ளுமாறு அன்போடு வேண்டி விரும்பிக் கேட்டு முடிக்கிறேன்!
