நிகழ் அய்க்கண்
இந்நூலின் ஆசிரியரான தோழர் எஸ். நூர்முகமது பத்மநாபபுரம் நகர்மன்றத்தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி வருகின்றார். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக மக்கள்சேவையில் ஈடுபட்டு வருபவராவார். தற்போது, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினராக உள்ளார்.
இந்நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான தோழர் ஜி. இராமகிருஷ்ணன் கூறும்போது, “முஸ்லீம் சிறுபான்மை மக்களுடைய கல்வி, வேலைவாய்ப்பு போன்ற வளர்ச்சிக்கான வாய்ப்புக்கள் அவர்களுடைய விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்படவில்லை என்பது குறித்தும், இம்மக்கள்மீது பாஜக அரசும் சங்பரிவாரங்களும் வன்முறைத் தாக்குதல்களை நடத்திவருவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை நூலாசிரியர் விளக்கியுள்ளார். மதச்சார்பின்மைக்காக, இம்மக்களின் நலன்களைப்பாதுகாத்திட, மக்கள் ஒற்றுமையை உருவாக்கிட, செயல்பாட்டாளர்களுக்கு இந்நூல் கையேடாகப் பயன்படும்” என்கிறார்.

இந்தியாவிலுள்ள சிறுபான்மையின மக்கள் இன்றையநிலையில் சந்தித்துவரும் எதார்த்தம் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து நூலாசிரியர் கூறியுள்ளவற்றினை சுருக்கமாகக் கீழே காணலாம்.
இந்தியா, பலவகை மதங்கள்- இனங்கள்- மொழிகள்- கலாச்சாரங்கள் கொண்ட ஒரு நாடாகும். நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலுமுள்ள அனைத்துப்பகுதிகளிலும் வாழ்கின்ற மக்கள் ஒரேமதத்தை சார்ந்தவர்களாகவோ, ஒரே மொழியைப் பேசுபவர்களாகவோ, ஒரே பண்பாட்டைக் கொண்டவர்களோ இல்லை. ஒவ்வொரு பகுதியிலும் பல்வேறுபட்ட மதங்களைப் பின்பற்றுபவர்களாகவும், பல்வேறு மொழிகளைப்பேசுபவர்களாகவும், பலவித பண்பாடுகளைக்கொண்டவர்களாகவும் உள்ளனர்.
இந்தியாவில், மத அடிப்படையில் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜைனர்கள் ஆகியோர் மதவழிச் சிறுபான்மையினர்களாக கருதப்படுகின்றனர். இவர்களில் சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜைனர்கள் இந்துக்களின் பிரிவாகவே கட்டமைக்கப்படுகின்றனர். ஆனால், அம்மதங்களைச் சார்ந்த மக்கள் இதனை ஏற்க மறுக்கின்றனர்..
இந்தியாவில் வாழும் சிறுபான்மையோரில் முஸ்லீம்களே அதிக மக்கள் தொகையுள்ளவர்களாக உள்ளனர். அதுவும், உத்திரப்பிரதேசத்தில்தான் அதிகம். இதனையடுத்து, மேற்குவங்கம், பீஹார், மகாராஷ்ட்ரா, கேரளா, அஸ்ஸாம், ஜம்மு-காஷ்மீரில் குறிப்பிட்ட அளவுக்குமேல் வாழ்கின்றனர். உலகிலுள்ள பல நாடுகளின் மக்கள்தொகையைவிட, இந்தியாவில் முஸ்லீம் சிறுபான்மையினரின் எண்ணிக்கை அதிகம். உலகில் இந்தோனேஷியாவிற்கு அடுத்தபடியாக முஸ்லீம்கள் அதிகம் வாழும் நாடாக இந்தியா உள்ளது.
இந்திய விடுதலைப்போராட்டத்தில் இந்துக்களும், முஸ்லீம்களும் ஒன்றுபட்டே ஈடுபட்டனர். ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சியினால் இந்திய மக்களிடையே இரு தரப்பிலும் வகுப்புவாத சக்திகள் உருவாக்கப்பட்டு, மத துவேஷம் விதைக்கப்பட்டது. இதன்விளைவாக மதக்கலவரங்கள் உருவாக்கப்பட்டன. நாடு பிளவுபட்டது. மக்கள் ஒற்றுமைக்காக குரல் கொடுத்தும், களத்தில் நின்றும் போராடிய மகாத்மா காந்தி இந்துத்துவ வகுப்புவாதிகளின் குண்டுக்கு பலியானார்.
விடுதலைக்குப்பின்னர், முஸ்லிம் மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார நிலைபற்றி ஆய்வு செய்யவும், அவர்களது வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவும் வேண்டி, ஒன்றியக் காங்கிரஸ் அரசானது 1963ல், டாக்டர் கோபால்சிங் தலைமையில் ஒரு கமிஷனை நியமித்தது. அக்கமிஷனும் தனது அறிக்கையினை அதேஆண்டில் சமர்ப் பித்தபோதிலும், அவ்வறிக்கையானது இதுவரை வெளிச்சத்திற்கு வரவேயில்லை. இது, சங்பரிவாரங்கள் தங்களது விஷமமிக்க பிரச்சாரங்களை முன்னெடுத்துச்செல்லவும், பிளவுவாத வெறுப்பு அரசியலைத் தொடரவும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.
அதன்பின்னர், 2004 ல், இடதுசாரிகளின் ஆதரவுடன் குறைந்தபட்ச செயல் திட்டத்தினடிப்படையில், ஐக்கிய முற்போக்குக்கூட்டணி ஆட்சிக்கு வந்தது. இச்சமயத்தில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டம், தகவல் உரிமைச்சட்டம், வனவாசிகள் உரிமைச்சட்டம் ஆகியன நிறைவேற்றப்பட்டன.
இதுதவிர, சிறுபான்மையின மக்களின் வாழ்நிலை குறித்து ஆய்வு செய்யவும், அவற்றிலிருந்து முன்னேற்றத்தினைக் கொண்டுவர பரிந்துரைகள் செய்யவும் நீதிபதி ராஜேந்திர சச்சார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவானது, முஸ்லீம்கள் மத்தியில் நிலவும் அச்சங்கள் பற்றியும், முஸ்லிம்களைபற்றிய சங்பரிவாரங்களின் பொய்ப் பிரச்சாரங்களைப் பற்றியும் நாடுமுழுக்க பலதரப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியது. அதனடிப்படையில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்டு வந்த கட்டுக்கதைகளை ஒவ்வொன்றாகத் தகர்த்தது.
முஸ்லிம்கள் பெரும்பாலும் கிராமங்களில் வாழ்பவர்கள். இருந்தபோதிலும் நகர்ப்புறங்களில் வாழும் பிற சமூகத்தினரைவிட இஸ்லாமியர்கள் ஐம்பது சதவீதத்தினருக்கு மேலாக வாழ்கின்றனர். இவர்களிடையே கல்வி பெற்றவர்களின் வீதமானது 59.1 சதவீதமாகும். இது தேசிய சராசரியைவிடவும், பட்டியலினத்தவரின் கல்வியறிவையும்விட குறைவானதாகும். இதேபோன்று, பள்ளி, கல்லூரிகளில் பயின்றுவரும் இஸ்லாமிய மாணவர்கள், பிற மதத்தினரைவிட குறைவாகவே கல்வி பயின்று வருகின்றனர்.
முஸ்லிம்களின் பொருளாதாரநிலை எவ்வாறுள்ளது என ஆராயும்போது, கிராமங்களில் முஸ்லிம் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவாகவும், நகர்ப்பகுதிகளில் அதைவிடக்குறைவாகவும் இருக்கின்றது.. பொதுவாக, முஸ்லிம்கள் மத்தியில் வேலையின்மை என்பது மற்றவர்களைவிட அதிகமாகவே உள்ளது. சுய வேலைவாய்ப்பில் முஸ்லிம் உழைப்பாளர்கள் 61 சதவீதம் பேர் ஈடுபடுபவர்களாக இருக்கின்றனர். வேலை கிடைத்தவர்களும் கூட பொதுவாக தற்செயலான தொழிலாளர்களாகவே உள்ளனர். இதுமட்டுமல்லாது, பொதுத்துறை,, பாதுகாப்புத்துறை, நிர்வாகம், தொழில்நுட்பம், மேலாண்மைப்பணிகளில் முஸ்லிம் ஊழியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.
இதேபோல், அரசுடைமை வங்கிளில் முஸ்லிம்கள் அதிகளவுக்கு சேமிப்புக்கணக்கு வைத்திருந்தாலும், அவர்களுக்கு மிகக்குறைவாகவே வங்கிக்கடன் வழங்கப்படுகின்றது. முஸ்லிம்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதிகளில் கூட கல்வி, மருத்துவ வசதி குறைவாகவே ஏற்படுத்தித் தரப்படுகின்றது. தேசிய சராசரியைவிட மின்வசதியும் குறைவாகவே அம்மக்களுக்கு வினியோகிக்கின்றது. இதுபோல், குடிநீர் வசதியும் பெரும்பாலான இடங்களில் செய்து தரப்படுவதில்லை. இந்திய மக்களில் 22.7 சதவிகிதம் மக்கள் வறியவர்களாக உள்ளனர். அவர்களிலும்பார்க்க முஸ்லிம்களில் 31 சதவீதத்தினர் வறியவர்களாக இருக்கின்றனர்.
ஆட்சியாளர்களிடம், சச்சார் குழு அளித்த பரிந்துரையானது, பல்வேறு திட்டங்கள் மூலம் செயல்படுத்தப்படும் வளர்ச்சிக்கான பலன்கள் அப்பகுதியினரைச் சென்றடைந்திருக்கின்றதா என்பதனை ஆய்வு செய்வது; சமவாய்ப்பினை உத்திரவாதப்படுத்தும் வகையிலான சட்டரீதியிலான தீர்வு; முஸ்லிம்களின் வாய்ப்பு மறுக்கப்படும்போது, சட்டரீதியாக அணுகும் வகையிலான சட்டபூர்வ அமைப்பை உருவாக்குவது; நாடாளுமன்றம், சட்டமன்றம், ஆகியவற்றில் சிறுபான்மையினர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் தொகுதி மறுசீரமைப்பு; உள்ளாட்சிகளில் சிறுபான்மையினர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம்; உருது மொழிக் கல்வியை, அம்மக்கள் வாழும் பகுதிகளில் கிடைக்க உறுதிசெய்வது; மதராசாக்களில் பயிலும் மாணவர்களின் கல்வியினை, உயர்கல்விக்கு தகுதியுடையதாக ஆக்கும் வகையிலும், கல்வித்தரமானது பொதுப்பாடத்திட்டத்திற்கு நிகராக அமைந்திடவும் வேண்டும்; வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் மூலமாக கடன்கள் கிடைக்கவும்; அரசின் நலத்திட்டங்கள் முறையாக சிறுபான்மையினர்களுக்குக் கிடைப்பதையும் உறுதி செய்திட வேண்டும் என்கிறது.

சச்சார் குழுவின் அறிக்கையானது ஒன்றிய அரசிடம் சமர்பிக்கப்பட்டதும், இதுகுறித்து விவாதிக்க 2007 மார்ச்சில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், புதுதில்லியில் மாநாடு நடத்தப்பட்டது. அம்மாநாட்டில் 11 அம்சங்கள் கொண்ட ஒரு கோரிக்கை சாசனம் உருவாக்கப்பட்டு, அப்போதைய பிரதமரிடம் அளிக்கப்பட்டது. அக்கோரிக்கைகளானது, மலைசாதி மக்களுக்கு இருப்பதுபோன்று, உப திட்டம் ஒன்றினை முஸ்லிம் மக்களின் முனேனற்றத்திற்காக உருவாக்குவது;
சிறுபான்மை மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை அதிகாரிப்பது; முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சுகாதார வசதி மேம்பாடு; வக்பு வாரியச்சொத்துக்களை பாதுகாப்பது; முஸ்லீம்களுக்கு வீட்டுவசதி; வேலைவாய்ப்பு, வருமானம் அதிகரிக்க மேம்பாட்டுத்திட்டங்கள்; இடஒதுக்கீடு – தேர்வாணையக்குழுக்களில் முஸ்லீம்களுக்கு உரிய பங்கு; சுயதொழிலுக்கு நிதியுதவி அளிக்க உத்திரவாதம்; கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பது மட்டுமின்றி உதவித்தொகை, திறன் வளர்ப்புப்பயிற்சி அளிக்கப்படவேண்டும் என கோரிக்கை வைத்தது.
சிறுபான்மை மக்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய முன்னேற்றம் ஏற்படவும் இடஒதுக்கீடு குறித்து பரிந்துரை வழங்கவும் வேண்டி, ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசானது நீதிபதி ரெங்கனாத் மிஸ்ரா தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழுவும் ஆய்வு நடத்தி, இந்தியாவிலுள்ள சிறுபான்மையினர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவும், அதில் முஸ்லிம்களுக்கு 10 சதவிகிதமும், இதர சிறுபான்மையினர்களுக்கு 5 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்தது. இதனை அமலாக்குவதில் சட்டப்படியான இடையூறு இருக்குமெனில், இதர பிற்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டில் சிறுபான்மையினர்களுக்கு 8.4 சதவீதமும், அதில், முஸ்லிம்களுக்கு 6 சதவீதத்தினை உள் இடஒதுக்கீடாக வழங்க வேண்டுமெனவும் பரிந்துரைத்தது. இதுதவிர, இந்து தலித்துகளுக்கு இட ஒதுக்கீட்டுச்சலுகை வழங்குவதுபோல, மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களுக்கும் வழங்க வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டது.
அப்போது, மேற்குவங்கத்தில் ஆண்டுவந்த இடதுசாரி அரசானது, ரங்கநாத் மிஸ்ராவின் சிபாரிசுகளை ஏற்று, அதன்படி, முஸ்லிம்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 10 சதவிகித இடஓதுக்கீட்டுச்சலுகையை வழங்கியது.
2014 க்குப்பிறகான காலத்தில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சதியால், நாட்டில் வகுப்புக்கலவரங்களும், மதவெறித் தாக்குதல்களும் அதிகரித்துவருகின்றது. சட்டத்தின் அடிப்படையில் நீதிவழங்காமல், நம்பிக்கையின் அடிப்படையில் நீதிமன்றங்கள் நீதி வழங்குகின்றன. பசு வதை என்கிற பெயரில் தலித் மற்றும் சிறுபான்மையினர் தாக்கப்படுவதும், கொலை செய்யப்பவடுவதுமாக இருக்கின்றனர். பிற மதவழிபாடுகளுக்கு எதிராக, குறிப்பாக, இஸ்லாமியரின் வழிபாட்டுத்தலங்கள் இடிக்கப்படுவது ; காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவுகளை நீக்குவது; குடியுரிமைத்திருத்தச்சட்டம் ; பள்ளி-கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வரத் தடைவிதிப்பு போன்ற சட்டங்களை விவாதிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பது ; அநீதிக்கு எதிராகப் போராடும் முஸ்லிம் இளைஞர்களின் வீடுகளை புல்டோஸர்கள் கொண்டு தாக்குவது என்பது நீடித்துவருகின்றது. முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் இவ்வளவு கொடுங்கோன்மைகளையும் தடுத்து நிறுத்த மனமில்லாத நீதிமன்றம் மூலம், இனி நியாயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை தகர்ந்து கொண்டிருக்கிறது.
மார்க்சியம்-பெரியாரியம்- அம்பேத்கரியம் ஆழமாக வேரூன்றியிருக்கும் தமிழக மண்ணிலும் சங்பரிவாரங்களின் வெறுப்பு அரசியலானது அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தேறுவதைக் காணமுடிகிறது. மதச்சார்பற்ற சக்திகள் விழிப்புடன் இருந்து, தமிழகத்தில் வகுப்புவாதம் வளரவிடாமல் தடுக்க முயற்சிக்க வேண்டியது அவசியம்
