ஆயிஷா இரா நடராசன்

வாழ்வியலாகும் கல்வி (பள்ளிக் கல்வியில் புதுமைகள்) – சாலை செல்வம்
கல்வியாளர், பெண்விடுதலை, செயற்பாட்டாளர் தமிழகம் அறிந்த கதைச்சொல்லி என பல பரிமாணங்கள் கொண்டவர் தோழர் சாலை செல்வம். புதுச்சேரிக்காரர். அவரது “யாரேனும் இந்த மவுனத்தை தகர்த்திருந்தால்” எனும் மொழி பெயர்ப்பு நூலை நான் விரும்பி வாசித்து வியந்திருக்கிறேன். அவர் எழுதி சமீபத்தில் வெளிவந்துள்ள கல்வி நூல் இது.
இந்த நூலில் மாற்றுக் கல்விப் பாதையில் பயணிக்கும் மொத்தம் 17 பள்ளிகளை அவர் தேடித் தேடி அறிமுகம் செய்துள்ளார். நம் கல்வியின் மிகப்பெரிய பலவீனம் போலச் செய்தல் ஆகும். ஒரே போல பிள்ளைகளை பிடித்து இறுக்கி நகலெடுக்கும் போலச் செய்தல், அதற்கு மாற்றாக இந்த நூலில் இடம் பிடித்துள்ள ஒவ்வொரு பள்ளியும் ஒவ்வொரு ரகமாக உள்ளது. ஏதோ அயல்நாட்டில் இருப்பது அல்ல. நம் தமிழக மண்ணில் உள்ள மாற்றுக்கல்வி சாலைகள் அவை.
திண்டிவனம் தாய்த் தமிழ் பள்ளியில் மதியம் அந்த ஏழைக் குழந்தைகளுக்கு உணவு எப்படி சாத்தியமாகிறது என்பதை வாசித்து நெகிழ்ந்தேன். இந்து தமிழ்த்திசை நாளிதழில் தொடராக வெளிவந்தபோதே நம்மனம் கவர்ந்த புவிதம், மருதம், வானவில், சோலைப்பள்ளி, பயிர்ப்பள்ளி, ஐக்கியப்பள்ளி, கட்டைக் கூத்துப்பள்ளி என மீண்டும் வாசிக்க வாசிக்க பிரமிப்பே ஏற்படுகிறது. இந்த நூலில் அவற்றை சமூக மேம்பாட்டுப் பள்ளிகள் தாய்மொழி (தமிழ்) பள்ளிகள், சூழலியல் பள்ளிகள், கிராமப்புறப் பள்ளிகள் என்றெல்லாம் பிரித்து சுவைபட அவர் தொகுத்திருக்கிறார். அவர் காட்டும் பள்ளிகள் புதுமையானவை.
பிடிவாதமான சுதந்திர ஜனநாயகப் பள்ளிகள் தமக்கான கல்விக் கொள்கைகளை வகுத்துக்கொண்டு அரசின் பாடத் திட்டத்தையும் கைவிடாது – குழந்தைகளின் வாழ்வாதாரக் கல்வியை அவை போதிக்கின்றன. பாடப்புத்தகத்தை மையப்படுத்தாத, மதிப்பெண்ணை மட்டுமே துரத்தாத, அதே சமயம், சமூக விடுதலை தனிமனித திறன்களைப் பாதுகாத்து வளர்ப்பது சாத்தியமே என்பதை இன்று நிரூபித்து நிற்கும் இப்பள்ளிகள் வாழ்க. அவற்றை நம் கண்முன் நிறுத்திய இந்த நூலின் ஆசிரியர் சாலை செல்வத்திற்கு என் வாழ்த்துக்கள். கல்விச் சூழலில் செயல்படும் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.

உரையாடும் வகுப்பறைகள்– சு. உமாமகேஸ்வரி
அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர் எனும் அமைப்பை நடத்தி வருபவர்.
சு.உமாமகேஸ்வரி. கைபேசியில், வாட்ஸ்-அப்பில் தத்துவம் பகிர்ந்து சங்கப்பணி முடிந்தது என்று ஒதுங்குபவர் அல்ல. கல்விப் போராளியாக களத்தில் நிற்பவர். கற்றல் – கற்பித்தல் எனும் எல்லையைத் தாண்டி ஒரு சமூக சிந்தனையாளராக பொறி பறக்க செய்பவர். அவரது கல்வி சிக்கல்கள், நூல் சிக்கல்களோடு, அவருக்கு தெரிந்த தீர்வுகளையும் முன்வைத்தது. இந்த அவரது புதிய நூல், மாணவர்களின் இதயத்தை திறந்து காட்டி, நம்மை திகைக்க வைக்கிறது. பணிமுடிப்பு கையேடு என்பதில், அவர் தன் வகுப்பு குழந்தைகளோடு நடத்தும் உரையாடல்களையும் தொகுத்தால் அது இந்த நூலாகவே மலரும்.
ஒவ்வொரு மாணவர் பின்னும் ஒரு உலகம் இருக்கிறது. ஆசிரியர் தனது குரல் மட்டுமே வகுப்பில் ஒலிக்க வேண்டும் என்று நினைக்காமல், செவிமடுக்கும் – தோழமையாகி மாணவர்களது உலகை, அவர்களது சொந்த உரையாடலில் ஒலிக்கச் செய்தால், அதுவே உண்மை மிளிரும் வகுப்பறை. உமாமகேஸ்வரி எனும் ஆசிரியையின் வகுப்பறையில் அவ்விதம் ஒலித்த நூறு பதிவுகள் இந்த நூலில் உள்ளன. குடிகார அப்பாக்கள், டிபன் கடை நடத்தும் அம்மாக்கள், நோய் பாட்டி என விரியும் சிக்கல்கள் பாடப் புத்தக கணக்குகளை விட கடினமானவை. இந்த கதைகளை சமூக பொருளாதார அரசியல், ஆண் பெண் அதிகார அரசியல் வாய்ப்பு மறுப்பு அரசியல் என பரந்து விரிந்து தாக்குகின்றன.
பாடம் நடத்தி, தேர்வு வைத்து, மதிப்பெண் சிலுவை சுமக்க வைக்கும் டீச்சராக இல்லாமல், பதின்பருவ சிக்கல்களை மனம் விட்டுபேசி, வகுப்பறையை வாசிக்கும் நூலகமாக மாற்றி, திரைப்பட விமர்சன அரங்கம் நடத்தி, பாட்டும், கதையுமாக அறிவியல் பாடத்தை முன்வைத்து, அதிசயங்களை நடத்தும் வகுப்பறையாக தன் தேடலை பிடிவாதமாக நகர்த்தி வருபவர் இந்த நூலாசிரியர். இவ்விதம் சிந்திக்கும் பல ஆசிரியர்களுக்கு இந்தநூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நூலின் இறுதியில் புதியக் கல்விக் கொள்கை பற்றி மாணவர் உரையாடலை படித்தேன். எல்லாவற்றையும் பேசும் சிறுசுகளில் ஒன்று “அய்யோ… இந்தி… டியூசன் படிக்கணுமா” என்று சொல்வதை வாசித்து, சிரிப்போடு வேதனையும் ஏற்பட்டது.
வகுப்பறை மொழி -மாலினி சீதா
மாணவர்களோடு தோழமை கொண்ட கற்றல் – கற்பித்தல் நடவடிக்கையில் ஜனநாயக சுதந்திர வகுப்பறைகளை போராடி நடத்தி வருபவர்களுக்கு மூன்று அம்சங்கள் இயல்பாகவே இருக்கும். ஒன்று, அவர்கள் கற்றலை நிறுத்துவது இல்லை. இரண்டாவது, தன்னிடம் கற்க வரும் மாணவர்களின் உரிமைகளை மதித்தல். மூன்றாவது, கற்றல் கற்பித்தல் என்பது நான்கு சுவர்களுக்குள் வகுப்பறையில் மட்டுமே நடக்கிறது என்பதை மறுத்து, மாணவரின் கற்றல் ஆர்வத்தை வாழ்வின் அங்கமாக்கும் கலையை பேணுதல். இவை வாய்க்கப் பெற்ற ஆசிரியர்கள் தங்களது கற்றல்-கற்பித்தல் அனுபவங்களை நூலாக பதிவு செய்ய வேண்டும். அது ஏனைய ஆசிரியர்களுக்கு வழிகாட்ட முடியும். அந்த அடிப்படையில் தமிழ் ஆசிரியை மாலினி சீதாவின் இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது.
ஆசிரியர் – மாணவர் கலந்துரையாடலே வகுப்பறை மொழி என்று புரிதலோடு அவர் இந்தநூலை தொடங்குகிறார். ஒரு மாணவர் தாம் நடத்தப் போகும் பாடத் தலைப்பைப் பற்றி ஏதும் அறியாதவர் என்று முரட்டுத்தனமாக, தனக்கு தெரிந்ததை ஒரு ஆசிரியர் பாடம் எனும் பெயரில் இரைந்து பேசுதல் பெரும்பாலும் நடக்கிறது.
நிலாவைப் பற்றியோ திருக்குறள் பற்றியோ பாடம் நடத்துகிறார் எனில் அது குறித்து ஏற்கனவே குழந்தைக்கு என்ன தெரிந்துள்ளது என்பதை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு வழங்குபவரே உரையாடும் ஆசிரியர். மாலினிசீதா அப்படியான அபூர்வ ஆசிரியர்களில் ஒருவர். விளையாட்டு மைதானம், மரத்தடி என்று தனது வகுப்புகளை நான்கு சுவர்களுக்கு வெளியே எடுத்துச் சென்றதை பதிவு செய்கிறார்.
இந்த நூலில் “ஆசிரியர் மொழி” எனும் நான்காம் அத்தியாயம் அவரிடம் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று. சலிப்பூட்டும் அன்றாட ஆசிரியர் மொழி கடந்து, வகுப்பறை மவுனத்தை உடைத்து, அனைவரும் பங்கேற்கும் ஒரு வகுப்பறையை இந்த அத்தியாயம் முன்மொழிகிறது. சர்வாதிகார ஆசிரியர் எனும் நிலையில் இருந்து விலகி அன்பாசிரியர் எனும் நிலையை அடைய 14 வழிமுறைகளை இந்த அத்தியாயம் பேசுகிறது.
நூலின் சுவையைக் கூட்ட வாசிப்பவரின் கவனத்தை கட்டிப்போட பாக்யராஜ் சினிமா காட்சி முதல் சுகிசிவம் பேச்சு, பெரியார்தாசன் எனப் பல்வேறு விஷயங்களை துணைக்கு அழைத்து, இவரது வகுப்பறை எத்தனை சுவையாக இருக்கும் என்று நூலாசிரியர் வியக்க வைக்கிறார்.
“எது விடுதலை அளிக்கிறதோ… அதுதான் கல்வி” எனும் இவரது உறுதிப்பாடு பாராட்டி ஏற்கத்தக்கது. கற்பிக்கும் கறார் ஆசிரியர் கனவு ஆசிரியராக இருப்பது எப்படி என்பதை தன் சொந்த அனுபவங்களின் வழியே விவரிக்கும் சுய-அனுபவ நூல்கள் பல இதுபோல வெளிவரவேண்டும்.

தேசிய உயர்கல்வித் தகுதி கட்டமைப்பு எதேச்சதிகார தேசியவாதத்தின் குறியீடு – பேரா.வெ.ஜவஹர் நேசன்
நம் கல்வியின் நோக்கம் என்ன? இக்கேள்வி நமது இந்திய நாட்டின் வரலாறு எங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது மத அடிப்படைவாத சடங்குகளை மேற்கொண்ட மனுதர்ம குலக் கல்வியை போதிப்பது குருகுலக்கல்வி. இசுலாமிய மதரஸா கல்வியும் மத சம்பிரதாய – கற்றல் என்பதை நோக்கமாகக் கொண்டது. தங்களது ஆட்சியின் பணி செய்யும் வேலை அடிப்படை கல்வி என்றாலும் ஆங்கிலேயர் ஆட்சியின் கல்வி, மெக்காலே வழியில் சமத்துவ கல்வியாகவும் இருந்தது.
கோத்தாரி கமிஷன் கல்வியின் நோக்கம் நம் இந்திய சட்டப்படியான மதசார்பற்ற பிரஜையை உருவாக்குதல் என்பதை நம் கல்வியின் நோக்கமாக அறிவித்து அதுவே தொடர்கிறது. என்றாலும், மத்தியில் ஆளும் பஜகவின் ஆர்.எஸ்.எஸ் ஆதார கல்வி இன்று தனது நோக்கமாக கொண்டிருப்பது எதை என்கிற கருத்தோடு பேராசிரியர் ஜவஹர்நேசனின் இந்த முக்கிய நூல் தொடங்குகிறது. உயர் பிராமணீய காவி அடிப்படைவாத சமூகங்கள் மற்றும் தனது கூட்டாளிகளான சந்தை சக்திகளை உருவாக்குவதே புதியக் கல்விக் கொள்கையின் நோக்கம்.
ஜனநாயக விரோத, பேரினவாத, மாநில உரிமைகளுக்கு எதிரான உயர்கல்வித் தகுதிக் கட்டமைப்பை இந்த நூல் தோலுரிக்கிறது. பள்ளிக்கல்விப் பற்றி கூட தமிழில் பல நூல்கள் உண்டு. பல்கலைக்கழக உயர்கல்வியின் ஆட்சி அதிகார காவித் தலையீடுகளைப் பற்றி இன்று மிக சிறப்பாக எழுதியும் செயல்பட்டும் வருபவர் பேராசிரியர் ஜவஹர்நேசன். உலகளாவிய நடைமுறைக்கு மாறாக நம் ஒன்றிய அரசாங்கம் எத்தகைய மக்கள் விரோத கட்டமைப்பை உருவாக்கி உள்ளது என்பதை வாசிக்கும்போது மனம் பதறுகிறது.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய கிராமப்புற மாணவர்களை கை கழுவும் கொடிய நடைமுறைகளை மேலும் சிக்கலானதாய் சிதைத்து தேசிய அளவில் ஒரு பிரமாண்ட சதியை தேசிய உயர்கல்வி தகுதிக் கட்டமைப்பு பின்னுகிறது. பாதியில் படிப்பை கைவிட்டால் ஒரு கிரேடு – திரும்ப இணைந்தால் ஒரு கிரேடு எனும் – மதிப்பெண் வங்கிமுறை உலகில் எங்குமே இல்லாத பாதாள படுகுழி ஆகும். தரம் என்கிற பெயரில் இந்த நாட்டின் ஏழை பாழைகளது கல்விக் கனவுகளை சிதைத்தெறியும் சதியை நாம் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்.
பத்து அத்தியாயங்களாக எழுதப்பட்டிருக்கும் இந்தநூலை கல்வி ஆர்வலர்கள் போராளிகள் கல்லூரி மாணவர்கள் பேராசிரியர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டும்.
பாடத்திட்டத்தை அரசியலாக்குதல் எனும் ஒன்பதாவது அத்தியாயம் வாசித்த பின் என்னால் உறங்க முடியவில்லை. காவி-கார்ப்பரேட் கலைதிட்டம் எனும் புதிய அபாயம் விமர்சனபூர்வ சிந்தனை, மனிதநேயம், பன்முகத்தன்மை சுதந்திரமான கட்டற்ற கருத்து பரிமாற்றம் யாவற்றையும் புதைகுழிக்கு தள்ளப்போவதை இந்த நூல் நமக்கு உணர்த்திச் செல்கிறது.
தனது எதேச்சதிகார அரசியல் லாபங்களுக்காக உயர்கல்வி நிறுவனங்களின் சுயாட்சியை பிடுங்கி கடுமையான இடையூறுகளை விளைவிக்கிறார்கள். தங்களுக்கு தனித்துவமான கலைத்திட்டத்தை உருவாக்குவதற்கு உயர்கல்வி சாதனை நிறுவனங்களுக்கு இதுவரை இருந்து வந்த கொஞ்சநஞ்ச சுதந்திரத்தையும் மொத்தமாக பறித்து ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்திடம் அவற்றை ஒப்படைக்கும் பேரபாயத்தை பேரா.ஜவஹர்நேசன் நமக்கு படம் பிடித்து காட்டுகிறார்.
“போலி நாட்டுப் பற்று” என்பது பாசிசத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துத் தருகிற அணுகுமுறையின் பழமையான வடிவம் பொதுக் கல்வியை சிதைத்து வரலாற்றை திரித்து தேசியவாதமாக மாற்றும் ஒற்றைத் தன்மை அரசியலை நோக்கி நம் கல்வியை சுருக்குவது என்பது ஜனநாயகத்தை வேரோடு பிடுங்கி விட்டு எதேச்சதிகார சர்வாதிகார கட்டமைப்பாக இந்தியாவை உருமாற்றும் போக்காகும்.
இதை புரிந்து கொண்ட அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகள் உயர்கல்வியில் ஏகபோக எதேச்சதிகார சட்டமைப்பை உருவாக்கும் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. உலகமய சந்தைப் பொருளாதாரத்திற்கு அயல் பல்கலைக் கழகங்களின் சந்தையாக நம் சந்ததிகளின் கல்வியை அடகு வைத்ததோடு மண்ணின் வேர்கள், தேச பக்தி எனும் பெயரில் மீண்டும் குருகுலக்கால வர்ணாசிரம நோக்கங்களை தரம் என்று திணிப்பதும் இன்றைய கல்வி அரசியல் என்பதையும் உண்மையான மனிதநேய சமூக நீதி சிந்தினையாளர்கள் எத்தகைய பெரும் போர்க்களத்தை எதிர்நோக்கி உள்ளனர் என்பதையும் இந்த ஒரு புத்தகம் படம் பிடித்துக் காட்டுகிறது.
இந்த நூலை உயர் கல்வி நிறுவன தொழிற்சங்கங்களும் கல்வி சார்ந்த சமூக அமைப்புகளும் பரவலாக கொண்டு செல்ல வேண்டியதன் அவசயத்தை நினைத்து என் மனம் பதறுகிறது.