அண்டனூர் சுரா
SAVE NEDUVASAL, இது உலகக் கண்களை ஒற்றைப் புள்ளியில் குவித்த சொற்றொடர். வெளிமாநிலத்தில், வெளிநாட்டில் புதுக்கோட்டை என்று சொன்னால் முன்பெல்லாம் காட்டிக்கொடுத்த ஊரா, எனக் கேட்பார்கள். நெடுவாசல் ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டத்திற்குப் பிறகு புதுக்கோட்டை என்றால் நெடுவாசல் புதுக்கோட்டையா, எனக் கேட்குமளவிற்கு அவ்வூர் பிரபலமும் பரபரப்பும் கொண்ட ஊரானது. இன்றைக்கும் அந்தப் பரபரப்பு இருக்கிறது. நாளைக்கும் இருக்கும்.

நெடுவாசல் குறித்துப் பேசுகையில் அணு உலை குறித்து ஓர் அணு விஞ்ஞானி சொன்ன ஒரு வாசகம் நினைவுக்கு வருகிறது. “எப்பொழுதேனும் வெடிக்கலாம் எனும் படியான ஓர் அணுகுண்டு உண்மையில் எப்பொழுதும் வெடிக்கும் குண்டுதான்”. நெடுவாசலில் நடந்தேறிய நீண்ட நெடிய மக்கள் போராட்டத்திற்குப் பிறகு ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்து செய்யப்படுகிறது, என அரசு அறிவித்துவிட்டது. ஆனாலும் அவ்வூரில் நிறுத்தப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகள் இன்னும் அகற்றப்படவில்லை.
புதுக்கோட்டை மாவட்டத்தின் செழிப்பான பகுதி ஆலங்குடி. அதற்குள்தான் இருக்கிறது நெடுவாசல். ஒரு நிலம் செழிப்பாக இருப்பதற்குப் பூமியின் மேற்பரப்பு மண்திரள் மட்டும் காரணி அல்ல. வண்டல் பாறை, சுக்கான் பாறை, கால்சியம் பாறை,களிமண் பாறை, கருங்கல் பாறை, கிரானைட் பாறை, ஷேல் பாறை என்று பூமி பல்வேறு பாறை அடுக்குகளாலானது. இந்தப் பாறை அடுக்குகளில் ஷேல் மிக மிகக் குறைந்த ஊடுருவல் திறன் கொண்ட பாறை. இது அதிக கரிம உள்ளடக்கத்துடன் ஒருங்கிணைந்த களிமண் அளவிலான துகள்களைக் கொண்டது. இதன் அதிகப்படி அடர்த்தி காரணமாக இதற்கு மேலும் கீழும் உள்ள அடுக்குகளுக்குத் தடுப்புச் சுவர் போல் செயல்படுகிறது. இது மட்டும் ஆங்காங்கே இல்லாவிட்டால் நிலத்தடி நீர் தானாகவே கீழே போய்விடும்.
ஆயிரக்கணக்கான அடிகளுக்குக் கீழ் அழுத்தத்துடன் இருக்கும் எண்ணெயும் எரிவாயும் சுய அழுத்தம் காரணமாக தானாகப் பூமி மேற்பரப்புக்கு வந்து விடும். சில செயல் பாறை அடுக்குகள் மிக அதிக அளவில் எண்ணெய் எரிவாயு வளத்தை தன்னகத்தைக் கொண்டவை. அவற்றை உற்பத்தி செய்யக் கிடைமட்டக் கிணறுகள் தோண்ட வேண்டும். பல அடுக்கு நீர்விரிசல் முறையில்தான் ஷேல் பாறைகளிலிருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படுகிறது.
காவிரிப் படுகையில் 1985 லிருந்து ONGC செயல்பட்டு வருகிறது. 1500 – 2800 மீட்டர் அளவிலான ஆழத்துக்குச் சுமார் 750 இடங்களில் உற்பத்திக் கிணறுகளில் கச்சா எண்ணையும் இயற்கை வாயும் எடுத்து வருகிறது. ஆனால் நெடுவாசல் நெற்றியில் ஆழ்குழாய் குறியிட்டது ஜெம் நிறுவனம். இதன் தலைமையிடம் கர்நாடகம். இந்தியா முழுவதும் முப்பத்தொரு இடங்களில் நீர்ம கரிம எரிவாயு அதாவது ஹைட்ரோ கார்பன் இருப்பதாக கண்டறியப்பட்டது. அதிலொன்று நெடுவாசல். இங்கே எரிவாயு எடுத்துக்கொள்ள இந்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி அனுமதி அளித்தது.
மறுநாள் நெடுவாசல் வயிற்றில் நெருப்பு பற்றிக் கொண்டது. இத்திட்டத்தை ரத்து செய்யக்கோரி நெடுவாசல் கிராம மக்கள், விவசாயிகள், பெண்கள்,..எனப் பலரும் போராட்டத்தில் குதித்தனர். அப்பகுதி பெரியவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைக் கொண்டு போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது.
நெடுவாசல் மட்டுமின்றி ஏற்கனவே ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எண்ணெய் கிணறு அமைக்கப்பட்டிருந்த, வடகாடு, நல்லாண்டார் கொல்லை, வானக்கன்காடு, கோட்டைக்காடு உள்ளிட்ட கிராமத்தினரும் அவரவர் ஊர்களில் போராட்டம் நடத்தினர். இப்போராட்டம் நெடுவாசலில் மையம் கொண்டது. டெல்டா மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி, அரசியல் கட்சியினர், திரைத்துறையினர், நாட்டுப்புறக் கலைஞர்கள், கல்லூரி மாணவர்கள், விவசாயிகள்,..என பல்வேறு தரப்பினர் நெடுவாசலில் குவிந்தார்கள். தன்னெழுச்சி போராட்டமாக உருவெடுத்தது.
மொய் விருந்துக்குப் பெயர்போன பகுதி இது. அந்நிகழ்ச்சிக்கு வரவேற்பது போலப் போராட்டக் களத்திற்கு வந்தவர்களை இக்கிராம மக்கள் வெற்றிலை பாக்கு, பழங்கள், சந்தனம் கொடுத்து வரவேற்றார்கள். போராட்டக் களத்தில் உணவு சமைத்துப் பரிமாறப்பட்டது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டம். போராட்டத்தின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருந்தது.
மாவட்ட ஆட்சியர், 2017 டிசம்பருக்குள் நெடுவாசல் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஓ.என்.ஜி.சி அமைத்துள்ள ஆழ்துளைக் கிணறுகள் அகற்றப்படும். விவசாயிகளிடம் நிலம் திரும்ப ஒப்படைக்கப்படும், என உறுதி அளித்தார்.’ அதையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
காவிரி டெல்டா மாவட்டங்களைப் போல நெடுவாசல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். அனைத்து எண்ணெய் எடுப்பு பணிகளையும் ரத்து செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் போராட்டக் குழுவினரால் நிறைவேற்றப்பட்டன. ஆனாலும், ஹைட்ரோ கார்பன் எடுப்பு திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகி ஓராண்டிற்கு மேலாகியும் திட்டம் ரத்து செய்யப்படவில்லை. தமிழ்நாடு அரசு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கிடைத்ததும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியதால், நெடுவாசலைச் சுற்றியுள்ள விவசாயிகள், கிராம மக்கள் மீண்டும் போராட்டத்திற்குத் தயாரானார்கள்.
மக்களின் தொடர் எதிர்ப்பால், நெடுவாசல் திட்டத்தைக் கைவிடுவதாக ஜெம் நிறுவனம் அறிவித்தது. நெடுவாசலில் ”ஹைட்ரோ கார்பன் எடுப்புத் திட்டம் கைவிடப்பட்டாலும், அச்சம் தொடர்கிறது. அரசு அறிவித்தபடி, நெடுவாசலைச் சுற்றியுள்ள எண்ணெய் கிணறுகளை மூடவில்லை’.
இப்போராட்டம் முதல் கட்டமாக இருபத்திரண்டு நாட்களும் (16.02.2017 முதல் 09.03.2017) இரண்டாவது கட்டமாக நூற்று எழுபத்து நான்கு நாட்களும் (12.04.2017 முதல் 02.10.2017) ஆக மொத்தம் நூற்றுத் தொண்ணூற்று ஆறு நாட்கள் நடைபெற்றது.

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டத்தில் விவசாயி சுப்பிரமணியம் என்கிறவரின் தனி நபர் பாத்திரம் முக முக்கியமானது. இவரது நிலத்தில்தான் அந்த ஷேல் ஆழ்குழாய் நிறுத்தப்பட்டிருந்தது. அவரது நிலத்தைக் கையகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதற்காக பெரியளவு விலை நிர்ணயிக்கப்பட்டது. அந்நிலத்தைக் கொடுக்க அவரும் மற்றும் அவரது குடும்பத்தினரும் மறுத்து விட்டார்கள். விவசாயி சுப்பிரமணியன் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். அவரது மகன் இளையராஜா, ஹைட்ரோ கார்பன் எடுப்பு பணிக்காக எங்களது அனுமதி இல்லாமல் நிலத்தை அளந்து, குறியீட்டனர். தொடர்ந்து நிலத்தைக் கொடுக்கச் சொல்லி அழுத்தம் கொடுத்தனர். ‘இந்த மண்ணையும் மக்களையும் பாதிக்கும் திட்டத்தை நிறைவேற்ற நிலத்தைத் தர மாட்டோம்.
எங்களது குடும்பத்தில் உள்ள பதினொரு பேரையும் கொன்றுவிட்டு, நிலத்தை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று அப்பா உறுதியாக இருந்து விட்டார். நெடுவாசலில் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்று, திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்ட பிறகுதான் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டோம். ஆனாலும், ஏற்கனவே கையகப்படுத்திய மற்றவர்களின் நிலங்கள் திரும்ப வழங்கப்படாமல் இருக்கின்றன.” என ஒரு தனியார் தொலைக்காட்சிக்குக் கொடுத்த பேட்டியில் இவ்வாறு சொன்னார்.
நெடுவாசலைச் சுற்றி, வடகாடு, நல்லாண்டார்கொல்லை, கருக்காக்குறிச்சி, வானக்கன்காடு, கோட்டைக்காடு, கரம்பக்குடி, முள்ளங்குறிச்சி ஆகிய 7 இடங்களில் இப்போதும் ஓ.என்.சி.ஜி நிறுவனத்தின் எண்ணெய் கிணறுகள் உள்ளன. நெடுவாசல் போராட்டத்தைத் தொடர்ந்து, காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நெடுவாசல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அதற்குள் வரவில்லை.
நெடுவாசல் என்றால் போராட்டக்களம் எனும் சொல்லுமளவிற்குத் தொண்டைமான் ஆட்சிக்காலத்தில் மன்னர் மற்றும் மன்னர் குடும்பத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்துள்ளன. ராஜா ராமச்சந்திர தொண்டைமான் பகதூர், 1839 – 1886 இடைப்பட்ட கால மன்னராக இருந்தார். இவர் ஒன்பது வயதில் மன்னராக மகுடம் சூடிக்கொண்டவர். இவரது நிர்வாகத்தை வழிநடத்த மூவர் குழு அமைக்கப்பட்டது. சிர்க்கிள் (the Sirkeel)), பவுஸ்தார் (the Fouzdar), சாகிபா என்று மூன்று பதவிகள். சிர்க்கிளாக சைரோப் நாயக். பவுஸ்தாராக அப்பா அய்யர். சாகிபாக கமலாம்பாள் ராணி. இவர்களில் சாகிபு மன்னர் குடும்பத்தவர். இவர் ராணி கட்டக்குறிச்சி ஆயி என அழைக்கப்பட்டவர். மற்ற இருவரும் ஆங்கிலேய அரசால் நியமிக்கப்பட்டவர்கள்.
இவரது ஆட்சிக் காலத்தில்தான் பெயிலி (Bayley) என்கிற ரெசிடெண்ட் புதுக்கோட்டை நிர்வாகத்தைக் கவனிக்கும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் அரசுக் கோப்புகளைக் கையாண்ட முறையை இன்றைக்குத் தமிழ்நாடு அரசு அரசு கோப்புகளைக் கையாண்டு வருகிறது. இவர் ரெசிடெண்டாக பதவி ஏற்றதும் சில விதிமுறைகளை நடைமுறைப்படுத்தினார். அதில் முக்கியமான ஒன்று, நிலம் தொடர்பானது. மன்னர் நினைத்தால் யாரும் யாருக்கும் நிலங்களை இனாமாக வழங்கலாம். இனி அப்படியாக வழங்கக் கூடாது, என்கிற விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
ராஜா ராமச்சந்திர தொண்டைமானுக்கு ஜுன் 13, 1845 அன்று திருமணம் நடைபெற்றது. இவர் கல்லாக்கோட்டை ஜமீன் குடும்பப் பெண்ணை மணம் முடித்தார். அப்போது கல்லாக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்தது. மன்னர் திருமணம் செய்வதாக இருந்தால் ஆங்கிலேய அரசிடம் அனுமதி பெற வேண்டும். ஆங்கிலேய அரசால் அனுப்பிவைக்கப்படும் பொலிட்டிக்கல் ஏஜெண்ட் ஒருவர் புதுக்கோட்டை வருகைத் தந்து திருமணத்தை நடத்தி, வெண் சாமரை என்று சொல்லக்கூடிய வெண்காட்டெருமையின் வாலை நினைவு பரிசாக வழங்கிச் சென்றார். இது அதிகாரப்பூர்வத் திருமணம். இதுதவிர மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மன்னர் நெடுவாசல் ஜமீன்தாரின் மூத்த மகளைத் திருமணம் செய்துகொண்டார்.
இ
இத்திருமணத்திற்குப் பிறகு, சமஸ்தானம் நிர்வாகத்தில் நெடுவாசல் ஜமீன்களின் நுழைவு தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகியது. கல்லாக்கோட்டை ஜமீன், நெடுவாசல் ஜமீன் இரு தரப்புகளுக்குமிடையில் நிர்வாகப் போட்டி எழுந்தது. இதனால் நிர்வாகத்தில் குழப்பம் ஏற்பட்டது. இந்தக் குழப்பம் கிளர்ச்சியாக வெடித்தது. இந்தக் கிளர்ச்சி என்பது நிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சி. ஆங்கிலேய ரெசிடெண்ட் பெயிலி, அவர் வகுத்த இனாமாக நிலம் கொடுக்கும் விதியில் உறுதிபட நின்றார். மன்னருக்கு எதிரான கிளர்ச்சியை மன்னரால் ஒரு கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. மன்னர் வேறு வழியில்லாமல் ஆங்கிலேய அரசின் உதவியை நாடினார்.
ஆங்கிலேய அரசு, ‘ரெசிடெண்ட்’ என்கிற பதவியைத் தூக்கிவிட்டு, அதற்குப் பதிலாக அதைவிடவும் அதிகாரமிக்க ‘பொலிட்டிக்கல் ஏஜெண்ட்’ என்கிற பதவியை உருவாக்கி, அந்த இடத்திற்கு மதுரை கலெக்டர் ‘ஜான் பிளாக்பர்ன் ( John Blackburne) ’ என்பவரை நியமித்தது. இவர் பதவி ஏற்றதும் புதுக்கோட்டையில் எழுந்த கிளர்ச்சியைக் கட்டுக்குள் கொண்டுவர ஒரு சிறைச்சாலையைத் திறந்தார். இன்றைய புதுக்கோட்டை மருத்துவமனையைத் திறந்தவரும் இவர்தான். இந்த மருத்துவமனை அக்டோபர் 14, 1851 அன்று திறக்கப்பட்டது.
மன்னர் நிர்வாகத்திற்கு எதிரான கிளர்ச்சிக்கான காரணத்தை ஆராய்கையில் வெங்கண்ண சேர்வைக்காரர் என்பவர் பின்புலமாக இருப்பது தெரியவந்தது. இவர் இரண்டாவது ராணியான நெடுவாசல் ஜமீன்தாரரின் உறவினர். இதைத் தெரிந்துகொண்ட ஆங்கிலேய பொலிட்டிக்கல் ஏஜெண்ட் வெங்கண்ணா மற்றும் அவருடன் தொடர்புடைய குடும்பத்தவர்களை புதுக்கோட்டைக்குள் நுழையக்கூடாதென தடை விதித்தது.
MANUAL OF THE PUDUKOTTAI SATE, EDITED BY K.R. VENKATARAMA AYYAR தொகுத்த ஆவணம் மற்றும் ராஜா முகமது எழுதிய புதுக்கோட்டை மாவட்ட வரலாறு என்கிற நூலில் இப்படியான பதிவு உள்ளது. இந்தப் பதிவுகளை வைத்துக்கொண்டு நெடுவாசல் கிராமத்தில் விசாரிக்கையில் அங்கு ஜமீன் குடும்பம் வாழ்ந்ததற்கான சுவடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. இதுகுறித்து ஆழமாக விசாரிக்கையில், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை வட்டாரத்திற்குட்பட்ட நெடுவாசல் என்று தெரியவந்தது.
இந்நிலையில் நெடுவாசல் கிராம சமுதாய வரலாறு, என்கிற நூல் வாசிக்கக் கிடைத்தது. ஆசிரியர் சி. வேலு எழுதியிருக்கும் நெடுவாசல் கிராமத்தின் மண், மக்கள், சமுதாயம், வரலாறு, கிராம மேலாண்மை, கல்வி நிலை, கிராம வழக்குகள், திருவிழா மற்றும் வழிபாட்டு முறைகளைச் சொல்லும் நூல். இவர் கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களுடன் நெருங்கிய உறவு கொண்டவர் என்பதால் இக்கிராமத்தின் பல பிரச்சினைகளைக் கார்ல் மார்க்ஸ் தத்துவங்களைக் கொண்டு தீர்வு தந்துள்ளார்.
ஓய்வு பெற்ற தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரான இவர், பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகம் அமைப்புகளில் உறுப்பினர். வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் ஈடுபாடு உடையவர்.
இந்த நூல் எழுத அவசியம் ஏற்பட்டதை, நூலாசிரியர் இவ்வாறாகக் குறிப்பிடுகிறார். “என்னை விட சிறந்த முறையில் எழுதத்தக்கவர்கள் இம்முயற்சியை மேற்கொள்ளாமையால் எனது குறைவுபட்ட தமிழ் அறிவுக்கு எட்டிய வரை இவ்வரலாற்றினை எழுதத் துணிந்தேன்”. ஆனால் இந்நூலை வாசிக்கையில் அவரது கற்றல் அறிவுடன் அனுபவ அறிவு சேர்ந்துகொண்டதில் நூலின் கணம் கனம் கொண்டு, அவரது தன்னடக்கத்தைக் காட்டுகிறது.
நெடுவாசல் ஊர் குறித்து பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய தமிழகம் ஊரும் பேரும் எனும் நூல் என்ன சொல்கிறது எனத் தேடுகையில், பண்டைய காலத்தில் வாயில் என்கிற பின்னொற்று கொண்டே ஊர்ப் பெயர்கள் இருந்திருக்கின்றன. உதாரணமாக அண்ணல்வாயில், நெய்தல் வாயில், திருமுல்லை வாயில், திருஆல வாயில், புனல் வாயில், குடவாயில், குணவாயில், திருவிடை வாயில், திருவேங்கை வாயில், திருவள்ளை வாயில், திருப்பில வாயில், நெடுவாயில் இப்படியாக. நெடுவாயில் என்னும் பெயருடைய பதிவுகள் தமிழ்நாட்டிற் பலவாகும். எனினும் சாலப் பழமை வாய்ந்ததும், சிவாலயம் சிறப்புடையதும் ஆகிய ஊர் தஞ்சை நாட்டில் பட்டுக்கோட்டை வட்டத்திலுள்ள நெடுவாசலே என்று சாசனம் கூறும். அச்சிவாலயம் பழுதுற்றிருப்பதாகச் சொல்கிறது, அந்நூல்.
இச்செய்தியைக் கொண்டு சி.வேலு, எழுதிய நெடுவாசல் கிராம சமுதாய வரலாறு என்கிற நூலை வாசிக்கையில் நெடுவாசலில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோர் பாடியுள்ள தேவாரப் பாடல்களில் இடம் பெற்றுள்ள சிவாலயம் ஒன்று இருந்திருப்பதும்; கி.பி ஏழாம் நூற்றாண்டில் பாடப்பட்ட சிவன் கோவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு முன்னோர்களால் கட்டப்பட்டு இருந்ததைக் குறிப்பதும் தெரியவந்தது. அந்தக் காலத்தில் மண், செங்கல், சுண்ணாம்பு, மரம் ஆகியவற்றைக் கொண்டே ஆலயங்கள் கட்டப்பட்டன. பிறகு குந்தவை நாச்சியார் அளித்த கொடையால் கி.பி 10-11 ஆம் நூற்றாண்டில் கற்றளியாகக் கட்டப்பட்டது. இதற்கான கல்வெட்டு குறிப்புகள் உள்ளன.
இக்கற்றளி கோவில் 1972 ஆம் ஆண்டு வரையிலும் இருந்தது. அதன்பிறகு சிவன் கோவிலிலிருந்த எல்லாக் கற்களையும் பெயர்த்தெடுத்துவந்து போதாக்குறைக்கு மேலும் கற்கள் வாங்கி, ஊருக்குள் செங்கல் கோவிலாக நாடியம்மன் கோவிலைக் கற்றளியாகக் கட்டிருக்கிறார்கள். இந்தக் கோவிலுக்கும் அருகில் நெடுவாக்குளம் எனும் ஏரி உள்ளது. நீண்ட எல்லைகளைக் கொண்ட ஊராக இருந்ததால் நெடுவாயில் என்றும் பிறகு அது நெடுவாசல் எனத் திரிந்திருக்கிறது, என்கிறார். வாயில் வாசலாகத் திரிந்த காலத்தை வைணவச் சமயத்துடன் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம். தெற்கு வாசல், வடக்கு வாசல் போன்ற குறிப்புப் பெயர்கள் வைணவ திருத்தலங்களில் நடைமுறையில் உள்ளது.
தேவாரப் பாடல்களால் பாடப்பட்ட நெடுவாசல் சிவாலயம் பாலாண்ட ஈஸ்வரன் என்கிற பெயரால் குறிக்கப்படுகிறது. இந்தக் கோவிலையொட்டி அமையப்பெற்றுள்ள ஊர் இன்றைக்குப் பாலாண்ட கிருஷ்ணபுரம் என்கிற பெயரால் அழைக்கப்படுகிறது. புதுக்கோட்டையில் இரண்டு வாயில் ஊர்கள் உள்ளன. இரண்டும் வாசல் என்றே திரிந்துள்ளது. அண்ணல் வாயில் அண்ணவாசல் என்றும், நெடுவாயில் நெடுவாசல் என்றும் திரிந்துள்ளன. இதுதவிர புனல்வாயில் என்றொரு சிற்றூர் புனல்வாசல் என்று திரிந்துள்ளது. இந்தப் பெயர் மாற்றத்தைக் காலத்தோடும் பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது.
பௌத்தக் காலத்திலும், பௌத்தம் குன்றி சைவம் தலையெடுத்த காலத்திலும் அண்ணல்வாயில் என்றே இருந்திருக்கிறது. திருப்பாசுரம் இவ்வாறு அண்ணல் வாயிலைப் பாடுகிறது. “மலர்ந்ததார் வாள் மாறன் மன்அண்ணல் வாயில்” என்று. இதைக் கொண்டு பார்க்கையில் சைவ சமயம் நன்கு வளர்ந்த காலத்தில் வாயில் என்றே இருந்திருக்கிறது. அதன்பிறகே வாசல் என்றாகியிருக்கிறது.
நெடுவாக்குளத்தில் முதுமக்கள் தாழி கண்டறியப்பட்டுள்ளது. இங்கு இத்தாழிகள் முதுமக்கட்டாழிகள் மதமக்கச்சாடி, மதமக்கத்தாழி என்று வேறொரு பெயர்கொண்டு அழைக்கப்படுவதாக இந்நூல் தருகிறது. அம்பலப்புளி என்றொரு இடம் குறித்த பதிவு முக்கியமானது. ஒரு பெரிய புளியமரத்தின் கீழ் அமர்ந்து அம்பலம் செய்யப்பட்ட இடம் பிறகு அந்த புளியமரம் இல்லாத நிலையிலும் அம்பலப்புளி என்று அழைக்கப்பட்டிருக்கிறது. சின்னமனை, பானாந்தோண்டி, அரண்மனைத்தோப்பு போன்ற குடியிருப்பு பகுதிகள் முக்கியமானவை. எல்லா கிராமங்களிலும் ஊடும் இழையுமாக இருக்கின்ற சாதிய ஏற்றத்தாழ்வுகள் இந்தக் கிராமங்களிலும் உண்டு. சாதியம் மற்றும் பொருளாதார தோற்றுவாயை மார்க்ஸ் தத்துவங்களைக் கொண்டு விளக்குகிறது.

அரண்மனைத்தோப்பு, சின்னமனை என இரண்டு வாழிடப் பகுதி நெடுவாசலில் உண்டு. அரண்மனைத் தோப்பு என்பது அரண்மனையாகவும் சின்னமனை என்பது அரண்மனைவாசியின் சின்னவீடாக இருந்திருக்கலாம், என கருத இடம் உண்டு.
பசுமந்தை – பசுக்கள் அடைபடும் இடம். மேய்கால் புறம்போக்கு – ஆடு மாடுகள் மேயும் இடம். பசுவாடுதுறை – பசுக்கள் மேய்ந்து தண்ணீர் பருகும் இடம். தண்டோரா ஒழுங்கை – ஊரார்களுக்குத் தண்டோரா போட்டு ஊர்ச்செய்திகள் சொல்லும் ஒழுங்கை. அம்மைத்துறை – அம்மை நோய் கண்டு இறந்தவர்களைப் புதைக்கும் இடம். இப்படியான பெயர்க்காரணங்களையும் இந்நூல் பதிவு செய்கிறது. மேலும் அரிக்கஞ்சட்டி, அறமுடி, கொட்டாப்பெட்டி, தொங்காங்கட்டை, மடிச்சிலைப்பை, பாலிஓடு, வேடு, வாமடை, பிணையல்கிட்டி, உழவாரம், தீத்திக்கல், ஓட்டாங்குச்சி, குடலை,…என வழக்கொழிந்து வரும் கிராமச் சொல்லாடல் மற்றும் பொருட்கள் குறித்து இந்நூல் பதிவு செய்கிறது.
எல்லாவற்றையும் விடவும் முத்தாய்ப்பாக இந்நூல் தரும் செய்தி, 2000 ஆம் ஆண்டில் நெடுவாசல் கிராமம் தீண்டாமை ஒழிப்புக் கிராமம் என மாநில அரசால் தேர்வு செய்யப்பட்டு அதற்கான சான்றிதழும், ரூபாய் ஒரு இலட்சம் பரிசுத் தொகை பெற்றதும்தான். இதே நெடுவாசல் கிராமத்திற்கும் அருகில் மாஞ்சான்விடுதியில் ஒரு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஓர் ஊராட்சி மன்றத் தலைவர் அவரது பதவிக்காலத்தில் தேசியக் கொடி ஏற்ற முடியாத நிலை இருந்ததும், எழுபத்து ஐந்தாவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் இறையன்பு இ.ஆ.ப அவர்களின் சுற்றறிக்கை மூலமாக அவர் தேசியக் கொடியை ஏற்ற முடிந்ததும் இந்நேரத்தில் நாம் நினைவுகூரத்தக்க ஒன்று.
